எதையாவது சொல்லட்டுமா….79


அழகியசிங்கர்
 

 
என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நான் போன் செய்தேன்.  அவர் வருத்தத்துடன் ஒரு தகவலைக் குறிப்பிட்டார. அவர் வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டாராம். எனக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.  =வேற வழியில்லையா? + என்று கேட்டேன்.  =வழியில்லை.  அவர்களுடன் இருக்க வேண்டுமென்றால், புத்தகம் இருக்கக்கூடாது..+

இத்தனைக்கும் நண்பர் ஏற்கனவே இருந்த இடத்தைவிட இன்னும் அதிகம் இடம் உள்ள இடத்திற்கு மாற உள்ளார்.  ஆனால் அவருடைய மனைவியும், புதல்வனும் கட்டாயம் புத்தகத்திற்கு இடம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

 ==என்ன சார், புத்தகம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள்..இதிலிருந்து ஒன்று தெரிகிறது..வீட்டைத் தவிர தனியாய் ஒரு ஆபீஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.++

 வீடைத் தவிர தனியாய் புத்தகம் வைத்துக்கொள்ள ஒரு இடமா? முடியுமா?  சாதாரணமானவர்கள் எங்கே போவார்கள். 

 என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் இருக்கிறார்.  இவர் பழுத்த இலக்கியவாதி.  உலக இலக்கியம்  முழுவதும் அவருக்கு அத்துப்படி.  ஆனால் அவர் சேகரித்து வைத்திருந்த மிக முக்கியமான புத்தகங்கள் எல்லாம் பரண்மீது தூங்கிக் கொண்டிருக்கின்றன.  என்ன நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை.  அங்கிருந்து எடுக்க வழியே இல்லை.  அதை எடுத்தால் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிடும் போல் தோன்றுகிறது.  மேலும் நண்பர் வீட்டிற்குப் போய் புத்தகம் பற்றி பேசவே பயம்.  பெரிய கலவரமே நடந்துவிடும்.

 அவரால் இப்போது ஒரு இடத்திற்குப்போய் புத்தகம் கூட வாங்க முடியாது.  அந்த அளவிற்கு வயதின் முதிர்ச்சி.

அதனால் அவரை யாராவது பார்க்க வந்தார்களென்றால் அவரே அவர் கையில் படும் புத்தகங்களை எடுத்துக்கொடுத்து விடுவார்.  அல்லது அவருடைய நண்பர்கள் உரிமையுடன் அவர் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.  எடுத்துக்கொண்டு செல்பவர்கள் புத்தகங்களைத் திரும்பவே தரமாட்டார்கள்.  அவருடைய அபூர்வமான புத்தகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவர் பிளாட்பாரத்தில் புத்தக வியாபாரியிடம் பேரம் பேசி சேர்த்தப் புத்தகங்கள்.

 நான் அந்த நண்பரைப் பார்க்கச் சென்றால் அவர் அலமாரியிலிருந்து எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கக் கூட மாட்டேன்.  டேபிளில் மீது புத்தகம் இருந்தாலும் எடுக்க மாட்டேன்.  ஏன்என்றால் எனக்கு அது தேவையும் இல்லை.

அதனால் என்னைப் பார்க்கும்போது அவருக்கு என் மீது நம்பிக்கை வரும்.
 நானும் அவரைப்போல் புத்தகம் சேகரிப்பவன்.  புத்தகம் சேகரிப்பவன் என்பது வேறு, புத்தகம் படிப்பவன் என்பது வேறு.  எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளும் நான் புத்தகத்தை எடுத்து எளிதில் படித்துவிட மாட்டேன்.  பிறகு படிக்கலாம்.  நம்மிடம்தானே அந்தப் புத்தகம் இருக்கிறது என்ற நினைப்பில் இருப்பவன். சிலசமயம் நான் வாங்கிய புத்தகத்தையே திரும்பவும் வாங்கி  விடுவேன் ஞாபகமறதியில். என் வீட்டிலுள்ளவர்கள் நான் எதாவது புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால் போதும்.  பார்க்கிறவர்களுக்கு ரத்தக்கொதிப்பு நோய் வந்துவிடும்.  வீட்டில் பெரிய ரகளையே நடக்கும். 

 கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் அலுவலகத்தையும் வீட்டையும் தனியாகப் பிரித்து வைத்துவிடுவார். 

 மேலை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நூல்நிலையம் உண்டு.  வீட்டு உபயோகத்திற்கு பாத்திரங்கள் வைத்திருப்பதுபோல் நபுத்தகங்களை வைத்திருப்பார்கள். 

 குடும்பத்தலைவர் ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார். குடும்பத் தலைவி ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார்.  புதல்வன் வைத்திருப்பான். புதல்வி வைத்திருப்பாள். ஆனால் இங்கோ புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதே ஒரு பெரிய தப்பான காரியம் செய்வதுபோல்.  தமிழ்நாட்டில் ரொம்ப மோசம்.  எழுத்தாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.

 புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் நண்பர் ஒருவர், பத்தாண்டுகளுக்கு முன்பே எல்லாப் புத்தகங்களையும் நூல்நிலையத்திற்கு தானே செலவு செய்து கொடுத்துவிட்டார்.

அவர் முடிவு ஆச்சரியத்தைத் தந்தது.  அவர் புத்தகங்களைப் பாதுகாக்க குடும்ப வாரிசு தயாராக இல்லை 

 நான் முன்பு இருந்த வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் வைத்திருப்பேன்.  அதை சரியாகக் கூட வைத்திருக்க மாட்டேன.  ஒவ்வொரு தருணத்திலும் நான் புத்தகம் வாங்கி சேகரித்தப் புத்தகங்கள்.  பல புத்தகங்களை படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்திருக்கும் புத்தகங்கள். 

 நான் புத்தகம் இப்படி வாங்கிக் குவிப்பதைப் பார்த்து என் அப்பாவிற்கு என் மீது கடும் கோபம் வரும்.  ஒருமுறை அப்பா கேட்டார் : ==எத்தனை ஜன்மங்கள் ஆகும்டா நீ இத்தனைப் புத்தகங்களைப் படிக்க..?++ அப்பா இப்படிக் கேட்டுவிட்டாரே என்று அப்பா மீது எனக்கு கோபம் கோபமாக வரும்.  அவருக்கு 90வயது.  எனக்கு 60வயது.  அவர் என்னைப் பார்த்து ஒரு எல்.கே.ஜி படிக்கும் மாணவனைப் பார்த்துக் கேட்பதுபோல் கேட்பார்.  என் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  மேலும் இன்னொன்றும் சொல்வார்.  நான் புத்தகம் வாங்கி என் சேமிப்பையெல்லாம் அழித்துவிட்டதாக.  புத்தகம் வாங்குவதால் யாராவது சேமிப்பை அழிக்க முடியுமா? 

 நான் புத்தகம் வைத்துக்கொள்ளும் அறைக்கு அவரும் என் மனைவியும் வந்தால்போதும், தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான். 

 என் மனைவிக்கு ஹிஸ்டிரீயா நோய் வந்துவிடும்.  அன்று முழுவதும் மனைவியின் வசவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.  பொதுவாக புத்தகங்கள் மட்டுமல்ல எதையும் வாங்கி சேகரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.  புத்தகம் பார்த்தால் புத்தகம், சீடி பார்த்தால் சீடி என்று பலவற்றை சேகரிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் ஆடியோ காசெட்டுகளை அடுக்கடுக்காக வைத்திருப்பேன். வெறுமனே சேகரிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இது ஒரு வியாதி.  சேகரித்து வைத்துக்கொள்ளும் வியாதி.

 என்னைப்போல் புத்தகம் சேகரிக்கும் எண்ணம் என் பல நண்பர்களிடம் உண்டு.  யாரிடமாவது எதாவது புத்தகம் இருந்தால் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.  பின் அதைத் திருப்பித் தரும் எண்ணம் இல்லாமல் இருப்பார்கள்.

அப்படித்தான் ஒரு நண்பர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  நான் அலுவலகம் சென்று விடுவதால் ஞாயிற்றுக்கிழமை வருவதாகக் குறிப்பிட்டார்.  அவர் வந்தால் கட்டாயம் புத்தகம்தென்பட்டால் எடுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் புத்தகம் வைத்திருந்த அறையைப் பூட்டி வைத்துவிட்டேன்.
 வந்த நண்பர், =என்ன புத்தகம் வைத்திருக்கிறீர்கள்?++ என்று கேட்டபடி வந்தார். 

 ==புத்தகம் வைத்திருக்கும் அறை சாவி எங்கயோ வைத்துவிட்டேன்,++என்று கூறியபடி இன்னொரு அறையில் அவரை உட்கார்த்திவைத்து பேசிக்கொண்டிருந்தேன்.   அந்த அறையில் ஜே கிருஷ்ணமூர்த்தி ஆடியோ காசெட்டுகளை வைத்திருந்தேன்.  போகும்போது அதிலிருந்து சில காசெட்டுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 காலம் மாறிவிட்டது.இப்போதெல்லாம் புத்தகம் வாங்கிக்கொள்ளகூட யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கிடையாது.

                              (டிசம்பர் 2012 அம்ருதா இதழில பிரசுரமானது)

“” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன