இரவு விழித்திருக்கும் வீடு

 
எம்.ரிஷான் ஷெரீப்,
 
 

நீ கதிரறுக்கும்
வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய

அம் மாலை நேரம்
எவ்வளவு அழகாயிருந்தது

இறுதியாக செஞ்சாயத்
தேனீரும் கறுப்பட்டித் துண்டும்

சுமந்து வந்து
அருந்த வைத்த உன் மனைவியின்

காலடித் தடத்தில்
முழுவதுமாக இருள் உறைந்த

உனது தற்கொலைக்கு
முன்னதான அக் கணம் வரை

 

பயிர்களை விதைக்கையில்
நீயெழுப்பிய இனிய கீதம்

அம் மலைச்சரிவுகளில்
இன்னும் அலைகிறது

மேய்ப்புக்காக
நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்

ரோமம் மினுங்க
வந்து காத்துக் கிடந்தன

களைகளகற்றுமுன்
வலிய கைகளை

நெடுங்காலமாய்க்
காணா பூமி வரண்டிருந்தது

மூதாதையர் தோண்டிய
கிணற்றில்

ஒரு துளி நீரிருக்கவில்லை

 

நிலம் வெடித்துப்
புழுதி கிளம்பும் காலங்களில்

அயல்கிராமங்களுக்கு
கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்

அனல்காற்றில் வெந்துருகிச்
சில காசு பார்க்கும்

விவசாயம்தான் மூச்சென
வீராப்பாய் நீயிருந்தாய்

 

தந்தையைத் தேடியழும்
பாலகிக்கு எதுவும் தெரியவில்லை

நச்சுச் செடிகளுக்கென
தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை

உன் குடிசைக்கு
எடுத்து வருகையில்

மனைவிக்கும் தவறாயெண்ணத்
தோன்றவில்லை

விதைக்கும் காலத்தில்
சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்

கடன்களாய் முளைத்திருந்தன

உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம்
வெள்ளத்தில் சுமந்துசென்று

ஆற்றில் சேர்த்தது
பருவம் கடந்து வந்த மழை

 

வெயிலின் முதல்
கிரணம் முற்றத்தில் வீழ்ந்த

அன்றினது விடிகாலையில்
உன்னோடு ஓய்ந்த பாடல்

எழவேயில்லை உன்
வீட்டில்

எல்லோரையும் உறங்க
வைத்த அன்றைய இரவு

விழித்திருந்தது
என்றென்றும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *