ஐராவதம் பக்கங்கள்….

தானும் அதுவாகப் பாவித்து – சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் – சொல்லாங்கடி – சென்னை 19- முதல் பதிப்பு 2012- பக்கம் 207 விலை ரூ.120 
கேட்கிறபோது பத்திரிகைகளுக்கு எழுதினாலும் வெளியிடும் உத்வேகத்துடன் நான் கதைகளை உருவாக்குவதோ, பிரசுர அவசரம் காட்டுவதோ இல்லை.  வாய்ப்புகள் வரும்போது அவை அச்சுவாகம் ஏறும்.  கதைப் புனைவு ஒரு மனநிலை.  தியானம் போன்றதொரு மனநிலை அது.  அகக்கண் திறக்கும் கணங்கள்.  உள்ளே தெரிகிற, விரிகிற காட்சிகளில் திளைக்கிறதில் உள்ள தினவு தனி அனுபவம்.  அதை ருசி கண்டபின் அடிக்கடி பசியும் கண்டாகிறது.  உறங்கி அடியில் சில சமயம் அது பதுங்கினாலும், குபீரென்று கதவு திறந்துகொண்டு வீட்டுள் நுழையும் பள்ளிக் குழந்தைகள் போல…அப்பாவை அவை முகம் மலரச் செய்துவிடும்.
இப்படி எழுதும் ஆசிரியர் பின்வரும் வரிகளில் தன் உடல் உபாதைகளை வர்ணிக்கிறார்.  தைராய்டு பிரச்னை என்னை தினசரி ஒழுங்குகளில் சிரமப்படுத்துகிறது.  கண்ணின் வீரியமும் அத்தனைக்குப் பாராட்டும் வசத்தில் இல்லைதான்.  உடல்சோர்கை வாழ்க்கைச் சார்ந்த அலுப்பாக நினைக்க வேண்டாம்.  நினைக்கவும் கூடாது.
வாழ்வின் சாறை, உறவுகளின் அழகை ஆளுமையை மிகுந்த உற்சாகத்துடன் புனைவு மனநிலையில் நான் ஆராதிக்கிறேன்.  தனிமையும், உடலர் அலுப்புமான கணங்களை நான் இவைகளில் கடந்திருக்கிறேன்.  வாழ்வில் யாருக்கும் தனிமை மாத்திரமே சாத்தியம்.  சிலர் சீக்கிரமேயோ சிலர் சற்று தாமதமாகவோ இதைப் புரிந்து கொள்வதாக ஆகிவிடுகிறது.  இலக்கிய சிருஷ்டிகளின் தாத்பர்யத்தை இப்படி அனுபவித்துக் கொள்ள எஸ்.ஷங்கரநாராயணன் ஆண்டன் செகவ்வின் குதிரை வண்டிக்காரன் கதையை நமக்கு நினைவூட்டுகிறார்.  அவன் குதிரையுடன் பேசுவான்.  எந்தச் சிறுகதையுமே அடிப்படையில் தனிமனிதனின் தமனிமையைப் பேசுவதுதான்
.
இப்போது நாம் கதைகளுக்குள் கவனம் செலுத்துவோம்.  
முதல் கதை கண்ணகி.
ஸ்டூல்களும் நாற்காலிகளும் என்பதே இந்தக் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கலாமோ (பக்கம் 11).  கதை சொல்லி வாசகனைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது.  கதையில் நம் கவனத்தை கலைக்கிறது இந்த வரிகள்.  பிறகு எபௌ டர்ன் என்ற பிரயோகம் பக்கம் 13லும். 14லும் வருகிறது.  இது ஆங்கிலக் கதையா? தமிழ் கதையா? நமக்கு விளங்கவில்லை. 
=உறவுப்பாலம்+ என்ற கதை.  தனக்குள் நிர்ப்பந்தித்துக் கொண்ட நியதிகள் என்று பக்கம் 17ல் துலங்கும் பத்தி சுயமாக நீக்கியிருக்க வேண்டும்.  திருப்பதி வரிசையாய் ஜரகண்டி, ஜரகண்டி என காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும் (பக்கம் 18) திரும்பவும் பக்கம் 28ல் திருப்பதி வரிசையாய் ஜரகண்டி, ஜரகண்டி என காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும் என்று வருகிறது.  இது ஆசிரியர் தெரிந்து கையாண்ட உத்தியா? அல்லது அவரை அறியாமல் மறு ஒலிபரப்பு பகுதியா? விளங்கவில்லை.
ஒரு பாட்டிலின் தொடமுடியாத உட் பக்கமாய் அவள் இருந்தாள் (பக்கம் 24) அருமையான சொல்லாட்சி.
‘ஊர் மாப்பிள்ளை’ என்ற கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.  இப்படி சிற்றூர்களில் திரியும் பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என்ற விளிம்பு மனிதர்களை ஆசிரியர் நன்கு படம் பிடித்துள்ளார்.  காதோடுதான் நான் பேசுவேன் பாட்டையே சத்தமாய் வைத்தார்கள் (பக்கம் 38) ரசிக்கத் தக்க வரிகள்.
‘பெண்ணிடம் ரகசியம்’ கதையில் இரா முருகனும், வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும் பிடிக்கும் (பக்கம் 67) என்ற வரிகள் ஆசிரியரின் ரசனையை உயர்த்திக் காட்டுகின்றன.  ஆங்கில எழுத்தாளர்கள் ஷெல்டன், லுட்லும், ஆர்ச்சர் (பக்கம் 71) இந்தக் கதையில் வருகிறார்கள்.
‘இடமாற்றம்’ கதையில் சின்னஞ்சிறுசுகள் கல்பதிகா, பிருந்தா மாணிக்கவாசகம், மாளவிகா, அபிஷேக், கீபோர்ட் சத்யநாராயணன், கணேஷ் கார்த்திக் என்று பொலிந்து வரும் இளம் கலைஞர்கள் கச்சேரி கேட்கலாம்.  (பக்ம் 77).  தொலைக்காட்சியில் பெண்ணே பெண்ணை பழிவாங்கும் ஏதாவது தொடர் ஓடிக்கொண்டிருக்கும். (பக்கம் 77) சரித்திரப் படங்களில் இப்படி சாக்கு மூட்டையில் போட்ட ஆளைக் கடத்திக்கொண்டு வந்து விடுவார்கள்….திறந்து பார்த்தால் ‘அத்தான்.’ ‘அப்படிச் சொல் பெண்ணே. இந்தச் சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்.’ (Over Writing)
மிகைக் கதையில் (பக்ம் 93)ல் வரும் விளம்பரங்களிலும், சினமாவிலும் அந்தக் கட்டத்தில் உடனே இசைக் கூச்சல் கேட்கும்.  அல்லது யாராவது ஹம்மிங் தருவார்கள்.  அல்லது சுற்றிலும் பன்னிக் குட்டிகள் போல வதவதவென்று தேவதைச் சனியன்கள் சூழ்ந்துகொண்டு ஆடிப்பாடி கும்மாளமிடுவார்கள்.  இயக்குநர் பாரதிராஜா இந்த வரிகளைப் படிக்க நேர்ந்தால் வருத்தப்படுவார்.  
பக்கம் 94, 95, 96 காதலர்கள் இப்படி எல்லாம் பேசிக்கொள்வாரகளா? யதார்த்த உலகம் உறைக்கிறது.  ஆனாலும் கனவுலகின் மாயாஜாலம் காதலர்கள் கண்களை மறைக்கும் அல்லவா?  ùôல் விளையாட்டு விளையாடுகிறார் ஆசிரியர்.  நமக்கு ரசிக்கவே செய்கிறது.
மூக்குத்திப்புல் அருமையான கதை. லா.சா.ராவை நினைவூட்டுகிறது.  ஜப்பானில் ஹைகூ வரிகளை அற்புதமாய் கையாள்கிறார் ஆசிரியர்.
ஆஸ்பத்திரி வாசல் பிள்ளையாருக்கு நேர்த்தி வேண்டுதல்கள் ஆரம்பித்திருக்கும்.  சந்தனக்காப்பு கொழுக்கட்டை என் உத்திரவாதங்கள்.  திருமாங்கல்யப்பிச்சை. இந்தத் தாலி சென்டிமென்ட் நம்மூர்ப் பெண்களை என்னமாய்ப் படுத்துகிறது (பக்கம் 126).  கதையின் மொத்த ற்ர்ய்ங் உடன் ஒத்துப் போகாத வரிகள்.
இந்த ஜப்பானியக் குள்ளப் பயல்கள் நவீன யுகத்தோடு கட்டிப் புரண்டு முட்டு மோதுகிறார்கள்.  போட்டி என்று அமெரிக்காவரை வியாபாரத்தில் கை கலக்கிறார்கள் (பக்ம் 130).  இந்த வரிகளும் கதையில் மொத்த  ற்ர்ய்ங் உடன் ஒட்டவில்லை.  
ஒளிந்திருப்பவனின் நிழல் (பக்கம் 137) பிரதான கதாபாத்திரம் பெயர் மாதங்கி.  அடுத்தக் கதை உறைவு. (பக்கம் 146) பிரதான கதாபாத்திரம் மாதங்கி.  இயக்குநர் விசு படங்களில் ஒரு பெண் கதாபாத்திரம் உமா என்ற பெயரில் வரும்.  இது அவருடைய இறந்து போன முதல் மனைவியின்  பெயர் என்பார்கள்.  அதுபோல் ஆசிரியருக்கும் மாதங்கி என்ற பெயரில் என்ன ஈர்ப்போ?
அவரது கடைசி சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம் (பக்கம் 138).  கம்ப்யூட்டர் துறையில் கலக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் தகப்பனாரை விட அதிகம் சம்பாதிப்பதை சுட்டுக்காட்டும் வரிகள்.
இளமைப் பருவத்தின் வாழ்க்கை முட்டி மோதி நுரைத்துப் பெருகுவதைப் பார்க்கிறதே பெரியவர்களுக்குத் தெம்புதான் (பக்கம் 139).  நயமான வரிகள்.
வேதவிலாஸ் விளையாட கிளையாட என்ற வரிகள் ஆசிரியரின் Offhand approach  ஐ சுட்டிக்காட்டுகின்றன.  
நாளடைவில் நகரத்துக் கன்னுக்குட்டிகளே ம்மி என்று ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது (பக்கம் 140).  ஆசிரியருக்குக் கிண்டலும் வருகிறது.
கறந்த பால் போல் என்ற பிரயோகம் பேரனைப் பற்றி இரண்டு இடங்களில் வருகிறது.  (பக்கம் 140 142). இதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.  இதே பிரயோகம் 144ல் மூன்றாவது முறையாக. too much.
புள்ளியில்விரியும் வானம் (பக்கம் 165) கதையில் சில வரிகள்.  இன்றைய திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை.  இளைஞர்கள் வெறும் காதல் கேளிக்கை போன்ற அல்பமான உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு அவை இட்டுச் செல்கின்றன.  இவை தேவை அல்ல என்பது விஷயம்.  இவை மாத்திரமே உலகம் என்கிற பிரம்மாண்ட போலித் தோற்றத்தை இளைஞர்களிடையே விதைப்பது நல்லது அல்ல (பக்கம் 169).  இயக்குநர் சேரன், சசிகுமார் போன்றவர்களை வருத்தப்படுத்தகூடிய வரிகள்.  இப்படி எழுதும் ஆசிரியர் பக்கம் 17ல் பௌர்ணமி இரவில் சிலசமயம் எப் எம் கூட மெல்லிசையான அழகான பாடல்கள் ஒலிபரப்பும்.  பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா என அற்புதமான மனசை வீணை நரம்பெனச் சுண்டும் பாடல்க்ள ஒலி பரப்புவார்கள்.  இந்தக் கவிஞர்கள் வாழச் சொல்லி தருகிறார்கள் எனதிகட்டிய கணம் அது என்றும் எழுதுகிறார்.  வாலியும் வைரமுத்துவும், பா விஜய்யும் பாலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் (பக்கம் 178), அபத்தமான தலைப்பு.  அவனுக்கு கோமணத்துக்குள்ள கூட ஒண்ணும் பெரிசா இல்லை.  வெள்ளரிப்பிஞ்சு.  வயித்தெரிச்சல் போன்ற விரசமான வரிகளைக் கொண்ட இந்தக் கதைக்கு நானாயிருந்தால் 13வது ஆர்வார் என்றோ 64வது நாயன்மார் என்றோ கிண்டலான தலைப்பு வைத்திருப்பேன்.  
தாய் மடி என்ற கடைசிக் கதையில் ஜனனம் உலகத்தில் ஏதோ அர்த்தத்தைக் கொண்டு வருகிறது.  அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது.  மரணமோ அதை அழித்துவிடுகிறது.  வாழக்கை என்பதன் அபத்தத்தை மரணம் எடுத்துக்கொண்டு விடுகிறது.  அந்த அனர்த்தக் குழப்பதிலேயே பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்து விடவும் செய்கிறது என்ற தத்துவ வரிகள் ஆசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
யாமார்க்கும் குடியல்லேம் என்பார் அப்பர்.  இந்த லோயரும் அவ்வண்ணமே (பக்கம் 205).  Cheap Joke.

புத்தக மதிப்புரையும், புத்தக வாசிப்பும்…….

அழகியசிங்கர்
சமீபத்தில் ஒரு சிற்றிதழை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  அச்சிற்றிதழில் பெரும்பாலான பக்கங்களில் புத்தக மதிப்புரைகள் வெளிவந்திருந்தன.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  என் வெளியீடாகக் கொண்டு வந்துள்ள நான்கு கவிதைப் புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியிருந்தார்கள்.  என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை.  உண்மைதானா என்று யோசித்தேன். ஆமாம் உண்மைதான்.  ஏனென்றால், அப் புத்தகங்களை நான் பல பத்திரிகைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்.  அவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை.  ஒரு சேர எல்லாக் கவிதைப் புத்தகங்களுக்கும் விமர்சனம் வந்தால் நீங்கள் சந்தோஷம் அடைவீர்களா மாட்டீர்களா?  ஆனால் எனக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை.  ஏன்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும்.  அதற்குமுன் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது என் நண்பர் ஒருவர் புத்தக விமர்சனம் அதில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  அவரே ஒரு புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிக்கொடுத்தார்.  பின் வேறு எழுத்தாள நண்பர்களும் எழுத ஆரம்பித்தார்கள்.  நானும் எழுத ஆரம்பித்தேன்.  ஒருமுறை நானும் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு மதிப்புரையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருந்தேன்.   அப் புத்தகத்தை எழுதிய சிறுகதை ஆசிரியர் வங்கியில் பணி புரிபவர்.  அவரை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் தற்செயலாகச் சந்தித்தேன்.  அவர் என்னை டீ சாப்பிடக் கூப்பிட்டார்.  ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்.  
“யாரது அந்த ஹரிஹரன்?” என்று கேட்டார் அந்த ஆசிரியர்.  விருட்சத்தில் நான் அந்தப் பெயரில்தான் எழுதியிருந்தேன்.  
“யாரோ?  என்ன விஷயம் சொல்லுங்கள்?” என்று கேட்டேன்.
திடீரென்று அந்தக் கதை ஆசிரியர் குரலை உயர்த்தி, “அவனை செருப்பால அடிப்பேன்,” என்று கத்தினார்.  கேட்கும்போது எனக்குத் திகைப்பாக இருந்தது.
உடனே அவர் வைத்திருந்த சூட்கேûஸத் திறந்து, சில கடிதங்களை எடுத்துக் காட்டினார்.  அக் கடிதங்கள் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் வந்திருந்தன. 
“விருட்சத்தை எத்தனைப் பேர் படிப்பாங்க? இதப் பாருங்க இந்தக் கடிதங்களை.  என்னிடம் கதை கேட்டு கடிதங்கள் எழுதியிருக்காங்க…. என் மதிப்பு தெரியுமா உங்களுக்கு… நூறு பேர் கூட படிக்காத பத்திரிகையில் விமர்சனமா எழுதியிருக்கீங்க..” என்று சத்தம் போட்டார்.  இப்படி அவர் கத்தும்போது அவருடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.  மெதுவாக அவரை சமாதானப்படுத்தினேன்.  ரயிலில் நானும் அவரும் வந்து கொண்டிருக்கும்போது, அவர் அசோகமித்திரனை விட சிறந்த எழுத்தாளர் என்ற ரீதியில் பேசிக்கொண்டு வந்தார்.  நான் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்த அனுபவத்தை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 4 கவிதைத் தொகுதிகளுக்கு மதிப்புரை வழங்கிய சிறுபத்திரிகையைப் பார்த்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை என்பதற்காகத்தான்.  மேலே குறிப்பிட்டபடி அந்த நாலு புத்தகங்களும் கவிதைப் புத்தகங்கள்.  அப் புத்தகங்களில் என் கவிதைப் புத்தகத்தைத் தவிர எல்லா புத்தகங்களுக்கும் மதிப்புரை எழுதப்பட்டிருந்தது.  என் கவிதைப் புத்தகத்திற்கு ஏன் மதிப்புரை எழுதவில்லை என்றால், நான் பத்திரிகை ஆசிரியர் அதனால் மனசு புண்படுத்த வேண்டாமென்று விட்டிருப்பார்கள்.  அல்லது என் பத்திரிகையில் விமர்சனம் பார்த்துவிட்டு எதாவது எழுதிவிடுவேனென்று பயந்திருக்கலாம்.  அல்லது என் தயவு தேவைப்படலாமென்று நினைத்திருக்கலாம்.  அப் புத்தகங்களுக்கெல்லாம் மதிப்புரை வழங்கியவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்.  விருட்சத்தில் கவிதைகள் எழுதியவர்கள்தான் அவர்கள்.  
அதில் எழுதிய ஒவ்வொருவரும் இரண்டு மூன்று புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள்.  விருட்சம் வெளியீடு தவிர வேறு புத்தகங்களுக்கும் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்.  அப்படி வேறு புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கும்போது அப்புத்தகங்களை பாராட்டி எழுதியிருக்கிறார்.  உதாராணமாக ஒரு வரியை இங்கு படிக்கிறேன்.
‘பல மலைகள் கடந்து பயண முடியில் எனக்குள் பாயும் ஆறு’ என்ற வரிகளின் வழியான உணர்வு வெளிப்பாடு என்னைப் பிரமிக்க வைத்தது..  இன்னொரு வரி.
         ‘தொடர்ந்து கவிதைகளை வாசிக்க þ சுகிக்கத் தொடங்கியது.’
அதே என்னுடைய வெளியீடுகளைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
‘இன்றைய நவீன கவிதையானது, இன்றைய வாழ்க்கையின் துயரத்தையும், சலிப்பையும் அப்படியே பதிவு செய்யாமல், சுயப்பச்சாதாபத்தையும் உருவாக்காமல், கலையை ஓவியத்தை உருவாக்கும் மனோபாவத்தைக் கொண்டதாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது…
‘கவிதை எந்திரத்ó தன்மை சிறுபத்திரிகைகளிடம் இருப்பதில்லை.  சிறுபத்திரிகையில் கவிதை எழுத பயின்றுவரும் கவிஞர்கள் (?) பலர் பொழுதுபோக்கு இதழ்களில் எந்திரர்களாகி வருகின்றனர்.  ஆக லாவண்யாவின் கவிதைகள் மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கின்றன.
ஞானக்கூத்தன் கவிதைகளைக் குறித்துக் குறிப்பிடும்போது, ஞாகூ மேற்புறத்தில் நிற்க, விஷயத்ததை அகவயமாய் புரிந்துகொள்கிற ஆத்மாநாம் அடுத்தத் தளத்திற்கு நகர்கிறார்.
இவர் இன்னொரு புத்தகத்திற்கு எழுதிய மதிப்புரையைப் பாருங்கள்.  அவர் விருட்சம்  புத்தகங்களுக்கு எழுதுவதுபோல் எழுதினால் தொலைத்துக்கட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் எழுதியது போல் தோன்றுகிறது.
 அக்காலத்தில் நான் போர்ஹேயின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். தீராக் காதல் என்ற தலைப்பிலான இவரின் கவிதைகளின் வரிகளாக கண்ணாடி நீலச் சொரூபமாய்த் தளும்ப ஆரம்பித்தது என்ற வரி போர்ஹேயின் பட்ங் ஸ்ண்ர்ப்ண்ய் ங்ழ்ழ்ங்ஸ்ரீற் ண்ய்ற்ர் ற்ட்ங் க்ஷப்ன்ங் என்ற வரியை நினைவுப் படுத்தியது.  இவ்வரியை போர்ஹேயின் வரிக்கு இணையானதாகவே கருதுகிறேன்.  இதுபோன்று நம் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்து விட்டன, ஒரு பறவையின் முணுமுணுப்புக்கும் நான் உதிர்க்கும் சாம்பலும் விழுந்து கொண்டிருக்கிறது.  ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேக்குள்  என்ற வரிகள் என்னை உற்சாகப்படுத்தின..
  
பாருங்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.  இன்னும் அவர் எழுதியதை இங்கு தருகிறேன்.
இவருடைய தொகுப்பை வாசித்தபோது சில விஷயங்கள் தெரியவந்தன.  தனக்கான பிரத்யோக மொழியையும், வடிவத்தையும், ஆளுமையையும், சொல்லல் முறையையும் அவர் பெற்றிருப்பதை  – அவரின் கவிதைகள் வழியாக வெளிப்படுகின்றன.  இவர் கவிதைகளை வாசிக்கும்போது போதைத் தன்மையும், வசீகரமும் தொடர்ந்து இயங்குவதை உணருகிறேன்.  
மேலே குறிப்பிட்டவைகளை அவர் விருட்சம் வழங்கிய நான்கு கவிதைத் தொகுதிகளுக்கு எழுதவில்லை.  ஆனால் விருட்சம் அல்லாத வேறுபுத்தகங்களுக்கு அவர் எழுதி உள்ளார்.
இப்படி அவர் சொன்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு மகுடேசுவரனின் சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதியைக் குறித்து இப்படி எழுதலாம்.
==இக் கவிதைகளில் நிலவும் மொழித் தளத்தையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.  அவருடைய பிரத்யேக மனோ நிலைபடியே கவிதையின் மொழி þ இன்று இருக்கிறது.  கவிதையின் ஊடாகச் சலனத்தை உருவாக்குபவை என பலவரிகளைக் கோடிட்டுக் காட்டலாம்.
மேலே குறிப்பிட்ட வரிகளை நான்சொன்ன மதிப்புரையாளர் எழுதியவை.  இது பொதுவான வரிகள்.  இந்த வரிகளை நான் மகுடேசுவரன் கவிதைகளுக்கு எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  மகுடேசுவரன் மகிழ்ந்து விடுவார்.  நான் வேறுமாதிரியாகவும் எழுத முடியும்? மகுடேசுவரன் தொகுதியைக் கவிழ்க்க.  
இதிலிருந்து என்ன தெரிகிறது?  கவிதையைக் குறித்து எழுதப்படுகிற பெரும்பாலான மதிப்புரைகள், மதிப்புரையாளர்களின் விருப்பு வெறுப்புகளுடன், அரசியல்தனத்துடன்தான் செயல்படுகின்றன.  
இந்த மதிப்புரைகளைக் குறித்து அடிப்படையான சில கேள்விகளை எழுப்பலாமென்று நினைக்கிறேன்.  கவிதையைக் குறித்தோ, சிறுகதைத் தொகுதியைக் குறித்தோ, நாவலைக் குறித்தோ எழுதுகிற மதிப்புரையாளர்களுக்கு எந்த விதமான அருகதை அதை எழுத இருக்கிறது.  உதாரணமாக கவிதை, கதை எழுதத்தெரியாத ஒருவர் ஒரு படைப்பாக்கத்திற்கு மதிப்புரை வழங்க முடியுமா? வழங்க முடியும் என்று தோன்றுகிறது.  கவிதை, சிறுகதை எழுத வராதவர்கள்கூட விமர்சனம் செய்யலாம்.  ஆனால், ஆழ்ந்த படிப்பு அவசியம் வேண்டும்.  கவிதைகள் குறித்தும், சிறுகதைகள் குறித்தும் தீர்மான அபிப்பிராயங்கள் இருக்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலோருக்கு அந்த மாதிரியான திறமையே இல்லாமல் புத்தகங்களை மேலோட்டமாகப் பார்த்து மதிப்புரை எழுதுவதாகத் தோன்றுகிறது. 

***பசித்த பாம்பும், பிடரனும் மற்றும் பார்வையாளர்களும்



ரவிஉதயன்



சேமித்தக் காற்றையெல்லாம்
இசையோடு ஊதி
பாம்பிடம் கேட்கிறான்
சீறலை.
மீதம் வைத்திருந்த
வலுவைஎல்லாம் திரட்டி
படமெடுத்துப் பாம்பு
கேட்கிறது சீறலோடு
பிடரனிடம்.
தன் இரையை.
சுற்றிலும்
பசியின்விழிகளோடு
பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
அவ்வளவு பயந்திருந்தார்கள்
பசியைக் கண்ணுற்று.

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

 
அழகியசிங்கர்
 

13
 
பந்தநல்லூர் என்ற கிராமத்திற்குச் செல்லும்போது எனக்கு அசிக்காடுதான் ஞாபகத்திற்கு வரும்.  அசிக்காடு போகும் வழியில் உள்ள பாதை குறுகலானது  மறையூர் அல்லது மல்லியம் வழியாக அசிக்காடு போகலாம்.  அந்தக் காலத்தில் ரோடு சரியாக இருக்காது.  மாட்டு வண்டியில்தான் போக வேண்டும்.  பலமுறை நான அசிக்காடு கிராமத்திற்குச் சென்றிருக்கிறோம்.  ஆனால் ஒருமுறை நான், என் தம்பி, என் பெரியப்பா பிள்ளைகளுடன் போனதை மறக்க முடியாது.  அந்த முறை என் நெருங்கிய உறவினர் இறந்துவிட அசிக்காட்டில் உள்ள என் பெரிய பெரியப்பா குடும்பம் அசிக்காடு கிராமத்தை விட்டே சென்றுவிட்டார்கள்.  அந்த இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கே நாங்கள் சிரமப் பட்டோம்.  ஒரு வீட்டில் திவசம் நடந்துகொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.  நாங்கள் மதியம் 2 மணிவரை ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தோம். 

ஆனால் பந்தநல்லூர் இன்னும் பெரிய கிராமம்.  அடிக்கடி பஸ்கள் போய்க்கொண்டிருக்கும்.  நான் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதால், அசிக்காடு என்ற கிராமத்திற்கும், பந்தநல்லூர் கிராமத்திற்கும் அடிக்கடி சென்று கொண்டிருப்பேன். 

அகலமான பாதையில் பந்தநல்லூர் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம்.  இருபக்ககம் வழியில் தென்படும் பசுமை நிறைந்த வயல்கள்.  உயரம் உயரமான பனை மரங்கள். பறவைகளின் கீச் கீச் சப்தம். டூவீலரில் வந்து கொண்டிருக்கும்போது நடு நடுவே பாம்புகள் ஓடும்.  சில சமயம் பாம்பை மிதித்துவிட்டு பரக்க பரக்க ஓடுவேன்.  வண்டியில் பாம்பு சுருண்டு விடுமா என்று பயந்திருக்கிறேன்.  ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 
நெருக்கடியான சென்னை வாழ்க்கையை விட்டு விட்டு இப்படி வந்ததுதான் பெரிய மாற்றம் என்று தோன்றுகிறது. 

 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உன் அனுபவம்தான் என் அனுபவம்,’ என்றார். 
 
 ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன்.
 ‘பொதுவாக அனுபவம் என்பதை எப்படிச் சொல்கிறோம்?’
 ‘நமக்கு ஒன்று ஏற்படுவதை அனுபவமாகக் கொள்கிறோம்.’
 ‘அனுபவம் என்ற ஒன்று தனியாக நிகழ்வதில்லை.  24மணி நேரமும் நம்மிடம் நிகழும் எதுவும் ஒரு அனுபவம்தான்.’
 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று ஞாபகம் வந்தது.  ஒருமுறை அசிக்காட்டில் நான் இருந்தபோது, வாசல் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டேன்.  வெறுமே சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ளவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.  காலை பொழுது மெதுவாக மதியம் பொழுதாக மாறியது.  பின் மாலைப் பொழுது இருட்டு என்று முடியத் தொடங்கியது.  நான் இருந்த பகுதி.  அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. நான் அதை உணர்ந்தேன்.  என்னால் அப்படிப்பட்ட ஒரு அமைதியைக் கலைக்க முடியாது.  எனக்கு பொழுது போவது ஒரு பொருட்டாக தோன்றவில்லை.
 ‘அந்தப் பேரமைதிகூட ஒரு அனுபவம்,’ என்றால் அழகியசிங்கர்.
 ‘ஆனால் அந்த அனுபவத்தை எப்படி கதையாகக் கொண்டு வருவது?’
 ‘நாம் பார்ப்பது, படிப்பது, நமக்கு ஏதோ ஒன்று நிகழ்வது எல்லாம் அனுபவம்தான். இந்த அனுபம் நம் மனதில் குவியும்போது கதையாக மாறுகிறது.’
 ‘நமக்கு நிகழாத ஒன்று கதையாகக் கொண்டு வர முடியுமா?’
 ‘எதை வேண்டுமானாலும் கதையாக எழுதலாம்.  முழுக்க முழுக்க கற்பனையைக் கூட கதையாக எழுதலாம்.  ஆனால் கதையில் நம்பகத்தன்மை வேண்டும்.’
 ‘ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் வாழ்க்கையில் நடப்பதையே கதையாக எழுதுவது இல்லையாம்.’
 ‘நாம் அப்படி நினைப்பது இல்லை.  நம் வாழ்க்கையில் நடப்பது, இன்னொருவர் வாழ்க்கையில் நடப்பது என்று. பொதுவாக அனுபவம் என்ற ஒன்று எல்லோருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  எதை நம்பும்படியாகச் சொல்கிறோமோ அதுதான் கதையாக நிற்கிறது.’
                                                                                                                               (இன்னும் வரும்)

நான், பிரமிள், விசிறி சாமியார்…..18

அழகியசிங்கர் 
எங்கள் தெருவில் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  என் வீட்டிற்கு எதிர் வீட்டல்தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.  ஒரு நடுத்தர வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  முதலில் அந்தப் பெண்ணின் கணவன்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று நாங்கள் தவறாக எண்ணியிருந்தோம்.  ஆனால் அவன் இல்லை.  அவன் மனைவி.  
அவள் கணவன் ஒரு குடிகாரன்.  எப்போதும் அவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.  அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் வளரவில்லை.  ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவள்  மகள் கே கே நகரில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள்.  அவளுடைய பையன் வேறு ஊரில் படித்துக்கொண்டிருக்கிறான்.  அந்த வீட்டில் அவர்கள் குடும்பம் தவிர ஏழு எட்டு குடும்பங்கள் உண்டு. எல்லோரும் அவள் கணவனின் சகோதரர்களின் குடும்பங்கள்.  அந்த சிறிய இடத்தில் எல்லோரும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்.  
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்பதை அந்த வீடு கொஞ்சங்கூட வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.  துக்கத்தின் சாயல் அந்த வீட்டில் கொஞ்சங்கூட தெரியவில்லை.  ஏன் தெருவில்கூட அந்தத் துக்கம் தெரியவில்லை?  யாரும் அதைப் பற்றி பேசக்கூட இல்லை.  ஏதோ சாதாரண நிகழ்ச்சி நடந்ததுபோல் அந்த வீடுஇருந்தது.
ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி என்னை சுற்றிய வண்ணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பெண் அவர்கள வளர்க்கும் முரட்டுத்தனமான நாயை எடுத்துக்கொண்டு தெருவிற்கு வருவாள்.  அதன் காலைக்கடனை முடிக்க எங்கள் தெருதான் கிடைத்தது.  என் வீட்டிற்கு வாசலில் வந்து நிற்கும்போது கொஞ்சம் தள்ளி போகச் சொல்வேன்.   தள்ளிப் போவாள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும்போது அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை.  நல்ல உயரமாகவும், குண்டாகவும் இருப்பாள்.  அவள் கணவனுடன் அவளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு அவள் பொருத்தமானவள் இல்லை.  ஆனால் அவ்வளவு திடமான தோற்றத்தில் இருந்த அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்.  அவன்தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். 
தற்கொலை செய்துகொண்ட பெண்ணிற்காக தெரு எந்த மரியாதையும் செய்யவில்லை.  அவள் கணவனின் மற்ற சகோதரர்களின் குடும்பங்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.  ஏன் இப்படி?
பல ஆண்டுகளுக்கு முன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவருடைய நண்பர்களின் வட்டாரத்தில் அது பெரிய அதிர்ச்சியாக மாறி இருந்தது.  முதன்முதலாக சிறு பத்திரிகை சூழலில் பிரபலமான தமிழ் கவிஞர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  திருவல்லிக்கேணியில் ஆத்மாநாமிற்காக இரங்கல் கூட்டம் நடந்தது.  எல்லோரும் வந்திருந்தார்கள்.  ஹால் முழுவதும் துக்கம் வழிந்து கொண்டிருந்தது.  ஆதிமூலம் அருமையாக ஆத்மாநாமை வரைந்திருந்தார்.  அவருடைய ஓவியத்தைப் பார்க்கும்போது மனதை என்னவோ செய்தது.  
அக் கூட்டம் ஞானக்கூத்தன் தலைமையில் நடந்தது. என் அருகில் ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கண்கலங்கி அழுததை பார்த்தேன்.  அக் கூட்டத்திற்கு பிரமிள் வந்திருந்தார்.  அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.  
என்னமோ தெரியவில்லை அன்று பிரமிள் ஆத்மாநாமைப் பற்றி பேசியதுதான் என் மனதில் இன்னும் கூட ஞாபகத்தில் இருக்கிறது.  ஆத்மாநாம் பங்களூரில் உள்ள ஒரு கிணற்றில்தான் தற்கொலை செய்து கொண்டார்.  கிணற்றின் ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிப் படியில் தன் உடைகளைக் களைத்துப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரமிள் குறிப்பிட்டார் : ஆத்மாநாம் நினைத்திருந்தால் அந்தக் கடைசித் தருணத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கலாம்.  தற்கொலை செய்துகொள்பவருக்கு அந்தக் கடைசி தருணம் மிக முக்கியமானது.  அந்தக் கடைசித் தருணத்தைத் தாண்டிவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மாறிப் போயிருக்கும்.  
ஆத்மாநாம் எழுதிய கவிதைகளிலிருந்து ஒரு கவிதையைப் படித்து பிரமிள் விம்மி விம்மி அழுதார்.  உண்மையிலேயே பிரமிள் கண்கலங்கிய காட்சியை அன்று ஒருநாள்தான் பார்த்தேன். கூட்டம் முடிந்தவுடன் நான் பிரமிளை அழைத்துக்கொண்டு போய்விட்டேன்.  ஆத்மாநாம் தற்கொலையை அவருடைய நெருங்கிய நண்பர்களால் தடுத்திருக்க முடியும் என்று பிரமிள் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று அந்தத் தற்கொலையைப் போல் பரபரப்பான தற்கொலையை என்னால் அறிந்திருக்க முடியவில்லை.
ஆனால் இப்போதெல்லாம் தற்கொலைகள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை.  நான் வசிக்கும் தெருவே அதற்கு சாட்சி.  
காலம் மாறி விட்டது.  தினம் தினம் தற்கொலைகள் எளிதாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேனியில் வசிக்கும் என் இலக்கிய நண்பர் ஒருவர், ‘எங்கள் மருத்துவமனையில் தினமும் யாராவது தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள்,’ என்று சொன்னதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. 
சமீபத்தில் என் வங்கிக் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த  மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு விட்டான்.  இது சாதாரண செய்தியாக என் காதிற்குள் நுழைந்தது.  
‘என் நண்பன் ஆத்மாநாம்,’ என்று ஆத்மாநாமைப் பற்றி கட்டுரை எழுதிய ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று  சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவர் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்.  வீட்டிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தெரிந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.  பின் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் பிரார்தனையாக செலுத்திவிட்டார்.  அவரால் தனிமையைச் சந்திக்க முடியவில்லை.  ‘அவரை யாராவது  பார்த்துக் கொள்ள வேண்டும்.  தற்கொலை செய்து கொண்டு விடுவார்,’ என்று மனோதத்துவ மருத்துவர் ருத்திரன் குறிப்பிட்டபோது அதை முதலில் நான் நம்பவில்லை. 
பிரபல பத்திரிகைகளில் எழுதும் படைப்பாளி.  தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியிடம் நம்பிக்கை உள்ளவர்.  வாழ்க்கையை தைரியமாகச் சந்திக்கக் கூடியவர் என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  மேலும் வயதானவர்கள் தற்கொலை செய்து கொள்வதை விரும்ப மாட்டார்களென்றும் எண்ணியிருந்தேன். எல்லாம் தப்பாகப் போய்விட்டது.  
  
எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்த அடுத்த நாள்தான் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். விரல்விட்டு எண்ணக்கூடிய மிகக் குறைவான வர்கள்தான் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு இரங்கல் கூட்டம் எதுவும் நடக்கவில்லை.  ஆனால் =அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் துணிச்சல் யாருக்கும் வராது,+ என்று எனக்குத் தெரிந்த பெண் படைப்பாளி குறிப்பிடுவார். 
ஸ்டெல்லா புரூஸ÷ன் தற்கொலையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய சூழ்நிலையில் தற்கொலை அடைந்தவர்களுக்காக யாரும் இரங்குவதில்லை என்றும் தோன்றுகிறது.
(அம்ருதா மார்ச்சு 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

நிறைவு

 



மட்பாண்டம் செய்யும் குயவனுக்கு

அதில் தண்ணீர் குடித்தவனின் இன்சொல் நிறைவு,

பலவேடங்கள் கட்டி நடிக்கும் நடிகனுக்கு

திரை நோக்கி வீசப்படும் காசுகள் நிறைவு

பாடங்களைத்திறம்பட நடத்தும் ஆசிரியருக்கு

கற்றுத்தேர்ந்த மாணவனின் உயரம் நிறைவு

வெகுநேரமாகக் காத்திருக்கும் காதலிக்கு

காதலனின் கெஞ்சல் நிறைவு

தோல்வியால் கீறிக்கிழிந்த இதயத்துக்கு

நல்ல இசை நிறைவு

பிளந்து கிடக்கும் பாலைநிலத்துக்கு

அவற்றை நிரப்ப வரும் மழை நிறைவு

நல்ல வரிகள் தேடி வந்த வாசகனுக்கு

இந்தக்கவிதை நிறைவு.

சின்னப்பயல்

அவரசர கோலம்…

அழகியசிங்கர்

அவரசர கோலம்...

  கிடுகிடுவென்று
கீழே இறங்கி அவர்
வேகமாக ஓடி விட்டார்
இன்று காரோ
டூ வீலரோ
நானும் அவரும் பக்கத்தில்
பக்கத்தில் குடியிருந்தாலும்
சந்திப்பது இல்லை.
இதுதான் வாழ்க்கையின் அவசரம்
என்று நினைக்கிறேன்
தெருவில் உள்ள எல்லோரும்
அவசரம் அவசரமாகக்
கிளம்புகிறார்கள்
யாரையாவது பார்த்து
புன்னகைப் புரியலாமென்றால்
ஓட்டமாக ஓடி விடுகிறார்கள்..
பேச நேரம்கூட இல்லை
சரி திரும்பி வரும்போது
சந்திக்கலாமென்றால்
மௌனமாக வீட்டிற்குள்
நுழைந்து கதவைச் சாத்திக்
கொண்டு போய் விடுகிறார்கள்.
வழக்கமாக வரும் வாரவிடுமுறையில்
யாரும் படுக்கையை விட்டு
எழுந்து கொள்வதில்லை….
வாரம் முழுவதும் சுற்றிய
அலுப்பை அன்றுதான்
தீர்த்துக் கொள்கிறார்களா…..
ஓஹோ……

அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல




என் படுக்கையறைச்சன்னலோரம்
புறா ஒன்று அமர்ந்திருக்கிறது
நெடு நேரமாய்
அது
இருப்பது இல்லாதது போல்
இருக்கிறது.
ஒரு அந்தரங்கத்தை அறிந்த
ரகசியம் போல
அவ்வளவு அமைதி
அவ்வளவு சாந்தம்
எப்பொழுதாவது
தன் இணைக்கு மட்டும்
அனுப்புகிறது. தனது  தனிமையை
குறுஞ்செய்தியாக்கி
க்கும்…  க்கும்…




ரவிஉதயன்.

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


அழகியசிங்கர்                        

                                                             


தூரத்தில் வண்டி வருகிறது
  வேகமாகவும்
மெதுவாகவும
சுற்றி சுற்றி பல வண்டிகள்
வந்தவண்ணம் உள்ளன.
ஹாரன் அடித்தபடி
வண்டிகள் கிடுகிடுக்க                வைக்கின்றன                                 பீட்டர்ஸ் சாலை
காலை நேரத்தில் அதிர்கிறது
ஸ்கூட்டரில் பள்ளிச் சிறார்கள்
அலுவலகம் போக
அவசரம் அவசரமாக
வண்டி பறக்கிறது.
மெதுவாக பீட்டர்ஸ் சாலை
பெசன்ட் சாலையாக மாறுகிறது.
பல்லவன் பஸ்கள் நிற்க
கூட்டம் எல்லா இடத்திலும்
நானும் நிற்கிறேன் மேலே நகராமல்
                       அழுக்கு வண்டிகளும் அழுக்கில்லாத
வண்டிகளும் பொறுமை இல்லாமல்
கதற கதற ஹாரன் அடிக்கின்றன
காலையில் அலுவலகத்தில்
                        கூடும் கூட்டத்தை
மனம் எண்ணி எண்ணி  படபடக்கிறது…..

சீரியல் மகத்துவம்…

சீரியல் மகத்துவம்…

அழகியசிங்கர்

                அலுக்காமல்
சலிக்காமல்
தினமும்
சீரியல் பார்க்கும்
குடும்பம்
எங்கள் குடும்பம்

நானும்

அதில் ஒருவனாக
மாறிவிடுவேனோ
என்று பயமாக இருக்கிறது

சீரியலே வாழ்க்.