Category: Uncategorized
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
செருப்புகள்
தி க கலாப்ரியா
நாங்கள் பிறந்த
உடனே
இணைந்து விட்டோம்
அந்தப் பாவத்திற்காகக்
காதலிக்கத் தொடங்கும்போது
அடிமைகளாகி விட்டோம்.
மனிதர்கள் உறங்கும்போதுதான்
எங்களால் – சிரித்துப் பேசிச் சேர முடிகிறது.
மீதி நேரங்களில்
ஒரே பாதையில்
ஒரே திசையில்
அருகருகே போனாலும்
அணைத்துக் கொள்ள
முடிவதில்லை
எங்கள் வாலிபத்தை
மனிதர்கள் மிதித்தே
சிதைத்து விடுகிறார்கள்.
வீதிகளே சொந்தமான
விபச்சாரிகள் – நாங்கள்
வீடுகளுக்குள் புகவே
முடியாது
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி
ஐராவதம்
என் இடம், உன் இடம், நோக்ஷல்பாரி
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா
இன்னும் ஒருநாள் என் வசமில்லை
சோறும் குழம்பும் ஆக்குவதற்குப்
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா
வேலையற்று வெறித்து நோக்கு.
நகரத் தெருக்களில் பிரமாதங்கள்
விரைந்து போகும் ; விரைந்து வரும்
உன்னுடைய பட்டினி
குழிந்த
உன் தலையினுள் இன்னும் தொடரும்.
உன்னுடைய இதயத்தின்
இடையறா ஓசை
ஓயத் தொடங்கும்.
உன்னுடைய சாமான்
சலித்துத் தொங்கும்
அசைவற்று, பசியுடன்
அழுக்காய் இருக்கும் நீ
பிறப்பு என்ற, சாவு என்ற
இரு பெரும் எல்லைகளை
மீறத் துணிந்தாய்.
உன்னுடைய சட்டைப் பையில்
காகிதத் துண்டுகள்,
ஆணிகள்,
தீப் பெட்டி.
சிலுவையில் அறையவோ?
சிதையில் வைக்கவோ?
ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
மூன்றாவது வகை
இந்தி மூலம் : டாக்டர் பச்சன்
தமிழில் : கோ.ராஜாராம்
ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
துளிர்த்த விழிகளுடன்
நான் சொன்னேன்:
என் கையைப் பற்றிக்கொள்
ஏனெனில்,
என் வாழ்க்கைப் பாதையின் துன்பத்தைத்
தனியாய் சகிக்க இயலாது
நீயுந்தான் யாரிடமேனும்
இதையே சொல்ல நினைத்திருப்பாய்;
தனிமைப் பாதை
உன்னையும் உறுத்தியிருக்கும்.
ஆனால், என்னைப்போல் நீ
பயந்த வார்த்தை பகர்ந்திடவில்லை;
சரி, வாழ்க்கையில்
ஏற்ற, இறக்கம் நாமும்
ஏராளம் கடந்துவந்தோம்
இருட்டு, வெளிச்சம்
புயல், மழை, வெளிச்சம்
சேர்ந்தே சகித்தோம்.
காலத்தின் நெடும் பயணத்தில்
ஒருவர் மற்றவர்க்கு
உதவியாய், துணையாய் இருந்தோம்.
ஆனால்,
தள்ளாடும் கால்களுடன்,
நானும், நீயும்
ஒருவருக்கொருவர் போதுமாயில்லை,
வேறொரு மூன்றாவது கை
எனதையும் உன்னதையும் தாங்கிட வேண்டுமென
ஒப்புக்கொள்வதில்
நாணமென்ன நமக்கு?
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
– நீலமணி
கண்ணகி
பாதச் சிலம்பால்
பதியை இழந்தவள்
பருவச் சிலம்பைத்
திருகி எறிந்தனள்
பர்ட்ஸ் வ்யு
இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு
புதிய லெட்ரீன்கள்.
கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்
ஸ்டெல்லா புரூஸ்
மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.
“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.
எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம். ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது. என்னால் அதை தாங்க முடியவில்லை. தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்.”
அவர் மரணம் அடைந்து 7 வருடங்கள் ஓடி விட்டன.
புத்தக விமர்சனம் 2
அழகியசிங்கர்
மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. (காதல் கவிதை)
வித்யாசாகர்
1
மாடி மேலேறி
ஆண்டெனா திருப்ப வருவாய்
நான் கூரை மேலேறி
கோழி தேடுவேன்
கோழியும் கிடைத்ததில்லை
ஆண்டெனாவும் திரும்பியதில்லை
கூரைக்கும் மாடிக்கும் தெரியும்
நாம் யாரை தேட வந்தோமென்று..
——————————————————-
2
மொட்டைமாடியில்
பூ பூத்திருக்கும்
நான் எட்டிப் பார்ப்பேன்
மழை வரும்
மழையில் நீ நனைந்து ஓடி
கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய்
உன்னம்மா மேலேறி வந்து
நீ என்ன செய்கிறாய் என்பாள்
நான் பூ பார்க்க
வந்தேனென்பேன்
அவளுக்கு தெரியும் அது
எந்தப் பூவென்று
அசடு நீ தான்
தெரிந்திருக்கமாட்டாய்; நான்
உன்னைப் பார்க்க வந்ததை..
——————————————————
3
ஒளியும் ஒலியும் பார்க்க
ஓடிப்போய் அமர்வோம்..
முதல் பாட்டு
வரும் நீ என்னையேப் பார்ப்பாய்
இரண்டாவது பாடல் வரும்
நான் உன்னையேப் பார்ப்பேன்
விளம்பரம் மாற மாற
எல்லோரும் மாறி மாறி அமர்வார்கள்
நீயும் நானும் அதே இடத்தில்
அமர்ந்திருப்போம்
நமக்குள் ஒரு பாடல்
ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்..
——————————————————
4
எல்லோரும் கடற்கரைக்குப்
போகையில் அலைமிதித்து
வருவார்கள்
நான் கரையிலமர்ந்து
உனது பேரெழுதி எழுதி அழிப்பேன்
மீண்டும் மீண்டும்
உன் பேரெழுதுவதில்
அவ்வளவு சந்தோஷம் வரும்..
அலைகள் வந்து வந்து
போவதைப்போல
நீயும் போய் போய் வருவாய்..
எனக்குள்
இருந்துக்கொண்டே இருப்பாய்..
——————————————————
5
மதிய உணவு
கட்டிப்போனால்
திறக்கையில் உன் முகம் தெரியும்
மேலே வானத்தைப்
பார்த்துவிட்டு திரும்பி
காற்றை தொடுவேன்
காற்றில் உன் வாசம்
மணக்கும்
உணவை
மூடிவைத்து விட்டு
ஓடிவந்து
உன் வகுப்பறை ஓரம் நிற்பேன்
நீ சாப்பிட்ட உணவை
பாதியில் மூடி பையில் வைத்துவிட்டு
கைகளை நீட்டி
காற்றை தொடுவாய்
எனக்கு
பசியெல்லாம் பறந்துபோகும்
மனசெல்லாம் நீயே நீயே நிறைவாய்..
——————————————————
6
எப்போதும் எஸ்எம்எஸ் வரும்
ஏர்டெல் விளம்பரமென்றெண்ணி
விட்டுவிடுவேன்
இப்போது
ஏர்செல் விளம்பரம் செய்தால்கூட
நீயா இருக்குமோ
என்று திறந்துப் பார்க்கிறேன்