இரு பத்திரிகைகள்

முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார்.
‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, ‘ஆனந்தவிடனி‘ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான்.
அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை ‘வாப்பா’ என்று அழைப்பாள்.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ‘ஆனந்தவிகட’னில் இன்னொரு முஸ்லிம் கதை. அதை எழுதியவருக்குச் சிறுகதைப் போட்டியில் அது முதல் பரிசு பெற்றுத் தந்தது. கதையின் பெயர் ‘கல்லறை மோகினி’. எழுதியவர் மீ ப சோமு. இதிலும் ‘வாப்பா’, ‘மவுத்’, ‘நிக்கா’ எல்லாம் உண்டு. இந்தக் கதைக்குக் கதைச் சுருக்கம் தருவது நியாயமல்ல. பரிசுதான் தரலாம்.
நான் முதலில் சொன்ன கதையை எழுதியவர் ம ஆலி சாஹிப். ‘மணிக்கொடி’ பத்திரிகையிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார் (அவர் இன்னும் பல கதைகள் எழுதியிருக்கக் கூடும்). அதிலும் முடிவு சாவில்தான். இன்றைக்குச் சரியாக 63 ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தாலும் அது வடிவத்தில் ஒரு நவீனக் கதை. ‘ஆனந்தவிகடன்’ கதையும் நவீனக் கதையே.
இவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்று புதிராக இருந்ததாலேயே அவருடைய பெயரை எளிதில் மறக்க முடியவில்லை. அவரை நான் சந்திக்க நேரும் என்று அப்போது நான் நினைத்திருக்க முடியாது.
ஆனால் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சோந்தவுடன் முதல் நாளிலேயே சந்தித்த நபர்களில் அவரும் ஒருவர். எனக்கு மேஜையிருந்த ‘கோஹினூர்’ கட்டிடத்தில் அவருக்கும் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தக் ‘கோஹினூர்’ கட்டிடத்திலேயே இன்னொரு முஸ்லிமும் இருந்தார். அவர் சையத் அகமத். ம ஆலி சாஹிப் கதை எழுதுபவர். சையத் அகமத் ஆர்ட் டைரக்டர். அவர் விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருப்பார். ஜெமினிகதை இலாகாவில் ம ஆலி சாஹிப்பும் இருந்தார்.
வாரத்திற்கு நான்கு ஐந்து முறை ஜெமினி முதலாளி கதை இலாகாவினருடன் சேர்ந்து பேசுவார். அந்த அறை சாதாரணமான கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இரண்டு பெரிய ஜன்னல்கள். யார் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று வெளியில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சகஜமாக உரத்துப் பேசுவார்கள். வெற்றிலைப் பாக்குப் புகையிலை போடுவார்கள். எல்லோருமாகச் சேர்ந்து டிபன் சாப்பிடுவார்கள். ஏதோ சில நண்பர்கள் கூடி விவாதம் நடத்துவது போல் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வந்தபோது இந்த இலாகா கலைந்து போயிற்று.
ம ஆலி சாஹிப் தன் மேஜையைக் காலி செய்யும்போது அந்த அறையில் நான் இருந்தேன். மாதாமாதம் சம்பளம் என்பது போய் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை அவரிடம் இருந்தது.
அவரை எந்த உத்தியோகத்திலும் பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. கதை இலாகாவில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். ‘மணிக்கொடி’யில் அவர் பிரசுரமான எழுத்தாளரல்லவா? இந்தி சினிமாவில் பல முஸ்லிம் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இது நிறையாவே நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பும், முஸ்லிம் கதைகள், முஸ்லிம் பாத்திரங்களுக்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவில் ஓரளவு முஸ்லிம் கதைகள், பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத் துறையில் சிலர் இருந்திருக்கிறார்கள. ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ ம ஆலி சாஹிப் பெயரைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
ஜெமினி ஸ்டுடியோவில் அடுத்த கட்ட சிக்கன நடவடிக்கையில் சையத் அகமதும் விலக வேண்டியிருந்தது. ‘கோஹினூர்’ கட்டிடத்தில் சில மாதங்கள் நான் தன்னந்தனியனாக இருந்தேன். சையத் அகமதுக்குத் தனி அறை. அது பூட்டியிருந்தது. ஆனால் ம ஆலி சாஹிபுடைய மேஜை நான் உட்கார்ந்த அறையில்தான் இருந்தது. எனக்கு இப்போதும் சிறிது சந்தேகம்தான். அவர் பெயரை எப்படி உச்சரிப்பது? ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ என் பெயர் இருந்தாலும் என் பங்கு மிகவும் குறைவு. முதலில் ‘மணிக்கொடி’ இதழ்களே கிடைக்கவில்லை. ஒருவரைக் கேட்டால் இன்னொருவரைக் காட்டுவார். அவரைக் கேட்டால் வேறின்னொருவரைக் காட்டுவார். ஆதலால் கிடைத்த சில இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அதிகம் இல்லை. நல்ல வேளையாக சிட்டி, முத்துகுமாரசுவாமி ஆகியோர் முயற்சியில் நூல் இப்போது சிறப்பான, கணிசமான தொகுப்பாக அமைந்திருக்கிறது.
‘சரஸ்வதி களஞ்சியம்’ சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரனாலேயே தொகுக்கப் பட்டிருக்கிறது. புதிய தமிழ் இலக்கிய வரலாறில் ‘சரஸ்வதி’ இதழின் பங்கு ‘மணிக்கொடி’க்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை. ‘மணிக்கொடியில்’ ஆசிரியர் பங்கு என்ன என்று நிர்ணயித்துக் கூறுவது கடினம். ஆனால் ‘சரஸ்வதி’ யில் ஆசிரியர்தான் பிரதான சக்தி. விஜய பாஸ்கரன் மகத்தான பத்திரிகையாசிரியராக இருந்திருக்கிறார்.
தமிழகத்தின் வரலாறுடன் அரசியல் போக்கும் மிகச் சூசமாக ‘சரஸ்வதி களஞ்சிய’த்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வீரர்களாக வலம் வந்தவர்கள், இந்தத் தொகுப்பு மூலம் சரியான அளவை எய்திருக்கிறார்கள். நாளெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்து வரும் அரசியல் கட்சி மறைமுகமாக எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய வரும்போது வருத்தமாகயிருக்கிறது.
ஐம்பதுகளில் உருவான இரண்டே இரண்டு நல்ல எழுத்தாளர்கள் என்று சுந்தர ராமசாமியையும், ஜெயகாந்தனையும் கநாசு பலமுறை தன் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் வளர்ச்சியில் ‘சரஸ்வதி’ பத்திரிகைக்கு முக்கிய பங்கிருந்திருக்கிறது. ஜனநாயக முறையில் நிறைய விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. ஒரு விவாதம் புதுமைப்பித்தன் பற்றி.
இதையெல்லாம் மிகுந்த பக்குவத்துடனும் விரிவான மனதுடனும் விஜயபாஸ்கரன் தொகுப்பில் சேர்த்திருக்கிறார். சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் புதுமைப்பித்தன் பற்றி மிகத் தீவிரமாகவும் பகிரங்கமாகவும் பரிமாறிக் கொண்டவர்கள் ‘சரஸ்வதி களஞ்சிய’த்தைப் படித்தால் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனிதர்கள் எப்படி மாறிக் (மாற்றிக்) கொணடிருக்கிறார்கள் என்று புலனாகும்.
எனக்கு மிகவும் ஒளியூட்டியது 1959 ம் ஆண்டில் தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தல் பற்றிய சர்ச்சை. தமிழக அரசியல்வாதிகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நாணயத்துக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த மூவாயிரம் ஆண்டில் முதல் மகத்தான செய்தி நிருபராக ‘மகாபாரத’ சஞ்சயனைக் கூறலாம். பாரபட்சமின்றி பதினெட்டு நாள் யுத்தத்தின் முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருதிராஷ்டிரனுக்குச் சொன்னவர் சஞ்சயன்.
விஜயபாஸ்கரனின் ‘என்னுரை’யிலுள்ள தகவல்களை அவர் ஒரு முறை என்னிடம் நேராகவே கூறினார். அது 1969 அல்லது 1970ம் ஆண்டாக இருக்கும். எனக்கு அப்போது அவர் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒரே காரணம், அவர் சொன்ன விஷயங்கள் குறித்து என்னுடையப் பரிச்சயமின்மை. இன்று அவருடைய எழுத்தில் அவை பற்றிப் படிக்கும்போது பெரிய புதிர் தீர்க்கப்பட்ட உணர்வே கிடைத்தது.
மகத்தான பத்திரிகையாசிரியராக இயங்கிய விஜயபாஸ்கரன் மகத்தான தொகுப்பாசிரியராகவும் கூட என்று ‘சரஸ்வதி களஞ்சியம்’ நிரூபிக்கிறது. ‘சரஸ்வதி’ பத்திரிகைதான் முதன் முதலில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மற்றவரோடு சம இடம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. விஜயபாஸ்கரன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தபடியால் ‘முற்போக்கினர்’ நிறையவே பத்திரிகையில் இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கை கைலாசபதி உட்பட. இவர்களுக்கெல்லாம் க நா சுவின் இலக்கியத்திடம் பெரிதும் தொந்தரவுபடுத்தியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம், க நா சு வெறும் எழுத்தாளர் மட்டுமே. அவரே ஒரு பல்கலைப் பேராசிரியராகவோ அரசு அதிகாரியாகவோ இருந்திருந்தால் இவர்கள் இவ்வளவு வீராவேசம் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே.
கநாசு கட்டுரை இத் தொகுப்பில் இருக்கிறது. டைப்ரைட்டர் சகிதமாகச் சென்னையில் ஓர் அறையில் அவர் குடியேறினார் என்பதற்குத்தான் எவ்வளவு கட்டுடைத்தல்? ஆனால் ‘சரஸ்வதி’யில் க நா சுவின் எல்லாக் கட்டுரைகளுமே முக்கியத்துவம் உள்ளதோடு தொடர்ச்சியும் கொண்டதாக உள்ளன. உதாரணத்துக்கு, ‘திருக்குறள்’ பற்றிய விவாதம். ‘சாமர்சட் மாம்’ சமீபத்தில் இன்னொரு சந்தர்ப்பத்திலும் நினைக்கப்பட்டிருப்பார். வி எஸ் நைப்பால் எழுதிய புதிய நாவல் ‘அரை வாழ்க்கை’ நாயகனுக்கு அவனுடைய தகப்பனார் சாமர்சட் என்ற சொல்லைப் பெயருடன் சேர்த்திருக்கிறார். காரணம், அந்த எழுத்தாளர் மீதுள்ள அன்பு. இது அவருடைய கதைகளுக்காக அல்ல.
சாமர்சட் மாம் ஆன்மிகப் புதிருக்கு விளக்கம் கிடைக்குமாவென இந்தியாவுக்கு வந்தவர்களில் ஒருவர். அவருடைய ஒரு நாவலில் இந்தியா இடம் பெறும். அவர் எந்தத் துறவிகளைப் பார்த்தார் என்று தெரியாது. ரமணரைப் பார்த்தார் என்று நினைக்கிறேன். நைப்பாலுக்கு ஆர் கே நாராயணனைப் பிடிக்காது என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் கூறியிருக்கிறார்.
ஆனால் ‘அரை வாழக்கையில்’ பல இடங்கள் அதுவும் ஆரம்ப அத்தியாயம் நாராயணனைத்தான் நினைவுப்படுத்தும். நாராயணன் அவருடைய ‘வேர்’களைத் தாண்டி எழுத முற்பட்டதில்லை. நைப்பால் நாடுநாடாகச் சென்று எழுதியிருக்கிறார். சில பௌதிகப் பார்வைகள் ஓர் அயலானுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு புனைகதை முயற்சி செய்வது ஆபத்தானது. இந்த ‘அரை வாழ்க்கை’யில் ஆசிரியரின் வேரற்ற நிலை நன்கு தெரிகிறது.
நைப்பாலின் ஆங்கில நடை பற்றி பல விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகவும் எளிமையான நடை. நாராயணனின் நடையும் மிகவும் எளிமையானதுதான். இந்த எளிமை கைவருவதற்கு நிறையப் பயிற்சி தேவை.
(இறுதியாக ஒரு தகவல். அறுவை சிகிச்சை முடிந்து நான் வீட்டினுள் நடமாடக்கூடிய அளவு நலமுற்றிருக்கிறேன். ஜூலை – செப்டம்பர் 2001 ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)

ஒரு கதை இரு முடிவுகள்

பூர்வாங்கம் :
சுந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு அந்த ஆசை விடவில்லை. ஒரு நிமிடம் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவள் சந்தோஷமாக என்றாவது இருந்திருக்கிறாளா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் பலருடைய வீட்டு வேலைகளைச் செய்து அவள் கை ஒடிந்து போய்விட்டது. இன்னும் அவளுக்கான ஒரு வாழ்க்கை வரவில்லை என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருப்பாள். எல்லோரும்போல் அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டுமென்று நினைக்கிறாள். வறுமையான அவள் குடும்பத்தை நினைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய மூத்த அக்காள்கள்போல் தன் வாழ்க்கையும் போய்விடுமென்று அவளுக்குத் தோன்றியது. இச் சமயத்தில் பத்மநாபன்தான் அவள் மீது இரக்கப்பட்டு தினசரி ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்தத் தினசரியைப் பார்த்துவிட்டு, ஒரு வரன் அவளுக்குக் கிட்டும்போல் தோன்றியது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் முட்டி நின்றது. அவளைப் பார்த்த பையனுக்கு பைக் வேண்டுமாம். முதலில் அவளுடைய அண்ணன் யோசனை செய்தான். பிறகு சரியென்று சொல்லிவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் பையன் இன்னும் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து என் முடிவைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். பையன் இருப்பது திருவலங்காடு. அங்கு ரைஸ் மில் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். சுந்தரிக்கு ஒவ்வொரு நாளும் கடத்துவது நரகவேதனையாக இருந்தது. பத்மநாபன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். எப்படியாவது இந்தக் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று தைரியமும் சொல்லிக்கொண்டிருப்பார். எதற்கும் காலம் கணிந்து வரவேண்டுமென்பதில் அவருக்கு அலாதியான நம்பிக்கை உண்டு. ஆச்சு. பத்துநாள் ஓடிவிட்டது. பையனிடமிருந்து பதில் வரவில்லை. அதனால்தான் மேலே கூறிய தற்கொலை முடிவுக்கு சுந்தரி வந்துவிட்டாள். இந்தத் தற்கொலையை அரங்கேற்ற வசதியாக அவள் பணிபுரிகின்ற வீடொன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அந்த வீட்டில் உள்ளவர்கள் இவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டு சென்னைக்கு அவசரமாகச் சென்றுவிட்டார்கள். வர சில வாரங்கள் ஆகும். ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். பிறகு வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு, தன் உடம்பில் உள்ள துணியெல்லாம் உருவினாள். கழுத்தில் புடவையை மாட்டிக்கொள்ள வேண்டியதுதான. தன் தற்கொலையால் யாருக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ஒரு பேப்பரில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்துவிட்டாள். தூக்கில் தொங்க வேண்டியதுதான். அதற்கு முன், தன் உருவத்தை ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். இனி இந்த உடல் மண்ணுக்குப் போகப் போகிறது. பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. முடிவு ஒன்று : சுந்தரி தன் கழுத்தில் புடவையை மாட்டிக்கொண்டாள். புடவை இறுகிக்கொண்டது. இனி அவ்வளவுதான். அவள் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உதறி விட வேண்டியதுதான். உதறினால், கழுத்தில் புடவை இறுகி சில நிமிடங்களில் இறக்க நேரிடலாம். கடைசி முறையாக கண்களை மூடிக்கொண்டு, அடுத்த ஜென்மத்திலாவது நல்ல பிறவியாக எனக்குக் கொடு என்று கடவுளை வேண்டிக்கொண்டாள். இதோ சுந்தரி தூக்கில் தொங்கிவிட்டாள். உதறி எறிந்த ஸ்டூல் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்தது. கைக் கால்களை உதறி, கண்கள் சொருக, சொருக… தூரத்திலிருந்து யாரோ அவள் பெயரைச் சொல்லி உரத்துக் கூப்பிடுவது காதில் விழுந்…….சுந்தரி போய்விட்டாள். எல்லோரையும் விட்டு…. மேலே குறிப்பிட்ட முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் முடிவை மாற்ற வேண்டுமென்று தோன்றியது. சுந்தரியை எதற்காக சாகடிக்க வேண்டும். அதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது. சுபமான முடிவு என்றால், படிப்பவர்களுக்கும் நிஇருக்கும். வாழ்க்கையில் சோகமான முடிவுகள்தான் அதிகம். அதனால் இன்னொரு முடிவை இங்கே எழுதி உள்ளேன்: முடிவு இரண்டு :
சுந்தரி தான் கட்டியிருந்த உடைகளை வீசி எறிந்தாள். ஒரு நிமிடம் தன்னைக் கண்ணாடியில் போய்ப் பார்த்துக்கொண்டாள். அவள் முகத்தைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் உருவமாக அது தெரியவில்லை. சரி, இன்றோடு இந்த உருவத்தை யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டாள். ஐயோ, நாம் இறந்துவிட்டால், இக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் போலீஸ் எதாவது தொந்தரவு செய்யப் போகிறதென்று எண்ணி, உடனே ஸ்டூலை விட்டு கீழே இறங்கி, அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்திலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள். =என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் நல்ல மனிதர்கள். என் சுய உணர்வோடுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.+ அவ்வளவுதான் சுந்தரி எழுதினாள். பின் கையெழுத்துப் போட்டாள். மறக்காமல் தேதி, நேரம் எல்லாம் குறித்துக்கொண்டாள். இதோ தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான். திரும்பவும் ஸ்டூலில் ஏறிநின்று, புடவையை கழுத்தில் இறுக்கிக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதோ முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் முறுக்கியும் கொண்டாள். ஸ்டூலை தள்ள வேண்டியதுதான் பாக்கி. ஆயிற்று அதுவும் இன்னும் சில நிமிடங்களில்..ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து……சுந்தரீ…..சுந்தரீ….யாரோ கூப்பிடுவது கேட்கிறது… ஆறு, ஏழு, எட்டு, யே…சுந்தரீ…என்ன பண்றே… ஒன்பது, ப….த்… சுந்தரீரீரீ…..ஏது அண்ணன் குரல் மாதிரி கேட்கிறதே..அண்ணாவா…. என்ன? என்றாள் சுந்தரி பதிலுக்கு… “அவர்கள் சம்மதித்துவிட்டார்கள்,” என்றான் அண்ணன். சுந்தரி போக வேண்டிய உயிரைத் திரும்பவும் பாதுகாக்க வேண்டும்போல் தோன்றியது. தூக்குப் புடவையை உதறித் தள்ளிவிட்டு, கீழே குதித்தாள். அவசரம் அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டாள். வாசல் கதவைத் திறந்தாள். அவள் அண்ணன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். “அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அடுத்த மாதம் கல்யாணம்..” என்றான் அவன்.சுந்தரி கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

இரண்டு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்கவிதைகளை துறந்துவிட்டுசில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.கற்பனைகள் தூர்ந்து,கனவுகள் தகர்ந்து,பாதாளத்தின் வாய்பிளந்துஎன்னை உள்ளிழுத்துக்கொண்டது.இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்தொலைந்த பேனாக்களைதேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல்மிகுந்த வெம்மையாயிருந்ததுஒரு சொல்.வெம்மையின் கதிர்கள் முதலில்நுழைந்தது செவியில்.செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்ததுவலியின் நீட்சியில்.இதயம் கருகி கண்ணீராய்வெளியேறுகையில்மறுசொல்லுக்காய் காத்திருக்கஆரம்பித்தது சுயம்

சியாட்டல் விற்ற நிலம்

மெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா, கனெக்டிகட், ஐயோவா, சியாட்டல் போன்ற ஏற்கனவே இருந்த பூர்விக அமெரிக்க இந்தியப் பெயர்களும் அவற்றிற்கு இடப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களில் சியாட்டல் ஒரு தனி மனிதனின் பெயர்.சியாட்டல் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். ஒரு பூர்விகக் குடித் தலைவரின் பெயர்தான் சியாட்டல். அவரது இனத்தவர்கள் வசமிருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பை அமிரிக்க அரசாங்கம் தந்துவிடுமாறு கேட்டது. தானமாக இல்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அதற்கு விலையாகத் தர முன்வந்தது. சியாட்டலால் முடியாது என்று கூற இயலவில்லை. ஒரு பூர்விகக் குடியால் ஒரு நாட்டை எதிர்க்க முடியாது என்று அவருக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும். ஆனால் மக்கள் நேசித்து வாழும் ஒரு பூமியை விற்பதென்பது மெய்யாகவே அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.அது சாத்தியம் என்றே தோன்றவில்லை. தனது மக்களின் நிலைப் பாட்டினை அவர் ஒரு உரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். அது புகழ் பெற்ற, மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த, குடிகளுக்கு சொந்த மண்ணின் மீதுள்ள ஈர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் ஈடு இணையற்ற உரை.“வானத்தையோ பூமியையோ விற்கவோ வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது.“ “நமக்கு சொந்தமில்லாத பொழுது அதை உங்களால் எவ்வாறு வாங்க இயலும்? “ இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்கு புனிதமானது. ஒவ்வொரு பளபளக்கும் பைன் மர இலையும், ஒவ்வொரு கரையும், கானகத்தினுள்ள ஒவ்வொரு பனித்துளியும், ஹம்மென்று இரையும் ஒவ்வொரு ஜந்துவும் எங்கள் நினைவிற்கும் அனுபவத்திற்கும் புனிதமானது. மரங்களில் பாய்கின்ற தாவரப்பால் எங்கள் செவ்விந்தியர்களின் நினைவுகளை ஏந்திச் செல்கின்றன.“ வெள்ளையர்களை நோக்கிய உரை அது என்பதை மனதில் கொண்டால் அதன் விமர்சனங்கள் எவ்வளவு துணிவானவை என்பதையும் உணரமுடியும். “ வெள்ளையர்களால் எங்கள் வாழ்வு முறைகளப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு நிலத்தின் ஒரு பகுதி அதன் மற்றொரு பகுதியைப் போன்றே வித்தியாசமற்றதாக உள்ளபடியால் ஒரு அந்நியனாக இரவில் வந்து நிலத்தில் அவன் தனக்கு வேண்டியதை எடுத்துச் சென்றுவிடுகிறான். பூமி அவனது சகோதரன் அல்லன். அது அவனது பகைவன். அதை வசப்படுத்திய பிறகு அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அவன் தனது தந்தையின் கல்லறையைவிட்டு ஓடுகிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. அவனது தந்தைமார்களின் கல்லறைகள், குழந்தைகளின் பிறப்புரிமைகள் யாவையும் அவன் மறந்து விடுகிறான். “அவனது தாய், நிலம், சகோதரன், வானம் ஆகிய அனைத்தையும் வாங்கவும், கடத்திச் செல்லவும், அவற்றை ஏதோ ஆடுகளைப் போலும் பிரகாசமான பாசிமணிகளைப் போலும் விற்கும் பண்டங்களாக அவன் பாவிக்கிறான். அகோரப் பசி கொண்டு பூமியை விழுங்கிவிட்டு பின்னர் அதை ஒரு பாலையாக விட்டுச் செல்வான்.“ இந்த உரையை சியாட்டல் தனது சுகுவாமிஷ் மொழியில் 1854ல் நிகழ்த்தினார். அச்சமயத்தில் அதை டாக்டர் ஹென்றி ஸ்மித் ஆங்கிலத்தில் படியெடுத்துக் கொண்டார். எனவே அப்பொழுதே உரையின் சாராம்சம் ஆங்கில நடைக்கு ஏற்றாற்போல் மாற்றம் கொண்டு விட்டது. அது சியாட்டல் சன்டே ஸ்டார் பத்திரிகையில் வெளியானது. அதன் புகழ் மெல்ல பரவத் தொடங்கியது.தங்களுக்கு மிகவும் அந்நியமான சுற்றுப்புற சூழல் அக்கறை அந்த உரையில் இருப்பதை மேற்கத்தியர்கள் சுவாரஸ்யத்துடன் பார்க்கத் துவங்கினர். எழுத்தாளர்கள் அதில் கை வைக்கத் தொடங்கினார்கள். சொற்கள் மாற்றப்பட்டன.செவ்விந்தியர்களின் இயற்கை பற்றிய உணர்வுகள் மேலும் சுவாரஸ்யமாக அதில் புனைந்து சொருகப் பட்டன. கூடவே வெள்ளையர்களைப் பற்றிய வாசகங்களில் செமையாகக் காரம் தூவப்பட்டது. இவையெல்லாம் போதாது என்று டெட் பெரி என்னும் சினிமா வசனகர்த்தா அதற்கு மேலும் முலாம் பூசினார். அமெரிக்க அதிபர் பிராங்ளின் பியர்ஸீக்கு சியாட்டல் கடிதம் எழுதியதாக காட்சி அமைக்கப்பட்டது. அது உரை என்பது மறைக்கப்பட்டது. டெட் பெரியினால் வடிவமைக்ப்பட்ட சியாட்டலின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. சுற்றுப்புற சூழல் பற்றிய ஒரு அரிய பிரகடனமாக அது அதிபர் புஷ் உட்பட பலராலும் எடுத்தாளப்பட்டது. இந்தக் கட்டுரையில் நான் மொழிபெயர்த்திருக்கும் பகுதிகளும் டெட் பெரி அளித்துள்ள வடிவத்திலிருந்துதான் எடுக்கப்பட்டவைதான். எல்லோருக்கும் அந்த உரை என்ன விளைவுகளை உருவாக்குகிறதோ அதே விளைவுகளை இக்கட்டுரை படிப்பவர்களுக்கும் முதலில் ஏற்படுத்த வேண்டி அவ்வாறு செய்தேன். சியாட்டலின் உரை வேறானது. முதலாவதாக சியாட்டல் நிலத்தை வாங்குவது விற்பது பற்றி தன்னால் எண்ணிப் பார்க்க வியலாது என்று தனது உரையில் சொல்லவில்லை. பேரத்தை அவர் ஏற்பதில்லையேயொழிய வியாபாரம் அறிந்திராதவர் அல்லர் அவர். வெள்ளைக்காரன் கடவுள் வேறு தங்களது கடவுள் வேறு என்றும் சியாட்டில் சொல்கிறார். இருவருக்கும் ஒரே கடவுள்தான் என்று அவர் சொன்னதாக ஹாலிவுட் வசனகர்த்தா மாற்றிவிடுகிறார். தங்களால் சண்டை செய்ய இயலாது என்றும் சியாட்டல் தெரிவிக்கிறார். உண்மை நிகழ்வுக்கும் புனைவுக்குமான முரண்பாடுகள் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டவை. சியாட்டலின் ஆளுமையை உண்மைக்கு புறம்பாக மாற்றிவிட்டதன் மூலம் அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக்க முடிந்திருக்கிறது. அதாவது அது விற்பனைக்குரியதாக க்கப்பட்டுவிட்டது. மேற்கத்தியர்கள் விரும்புவது ஒன்றைத்தான். அது வர்த்தகம். அது இயலாதபொழுது போருக்கு ஆயத்தமாகிறார்கள். சியாட்டலிடம் நிலத்தை அவர்கள் போரிட்டு அடைய விரும்பவில்லை. அதில் உயிரிழப்பு ஏற்படும். உயிரிழப்பிற்கு அவர்கள் பயப்படுவதன் காரணம் தங்களுடைய மக்களையும் அதில் இழக்க வேண்டி வருமே என்பதால்.தவிர போரினால் ஏற்பட்ட தோல்வியை எதிரிகள் பரம்பரை பரம்பரையாக நினைவில் கொண்டிருப்பார்கள். மாறாக விலை கொடுத்து வாங்கிவிட்டால் இரண்டையும் தவிர்த்துவிடலாம். வர்த்தகம் செய்ய வேண்டி ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு இங்கே கிடைத்த வரவேற்பு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. மேற்கத்தியர்கள் தலையீட்டை இங்குள்ள குறு நில மன்னர்கள் தாமாகவே வேண்டினர். அவர்களுக்கு கோட்டை கொத்தளங்களை அமைத்துகொள்ள சுலபமாக அனுமதி அளித்தனர். தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களுக்கு கோட்டை கட்ட தரப்பட்ட அனுமதி ஒரு உதாரணம். ஆங்கிலேயர்கள் வாங்கமுடிந்தவற்றையெல்லாம் வாங்கினர். மூன்று மைல் நீள மீனவக்குப்பமான மதராசப்பட்டினம் இரண்டு வருடக் குத்தகைக்கு ஆங்கிலேயர்க்கு முதலில் தரப்பட்டது. கல்கத்தா மூவாயிரம் ரூபாய்க்கு ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டது. உரிமை பாராட்டி போர்க்குணம் பூண்டு வரி செலுத்தவும் இயைந்து போகவும் மறுத்தவர்களுடன் சண்டையிட்டனர். இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆளத் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது புரிந்து கொள்ளக்கூடியதுதான். சில படிகள் மேலே சென்று இந்தியர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் எனவே தங்களால் கல்வி புகட்டப்பட வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்றும் அவர்கள் அதிகார மமதையுடன் எண்ணத் தொடங்கினர். இந்தியாவிலிருந்து செல்வத்தையெல்லாம் பெயர்த்து எடுத்துக்கொண்ட பின்னர் அதை ஆள்வதின் சிரமத்தை அவர்கள் உணரத்தொடங்கினர். தங்களது பொறுப்புகள் குறித்து ரொம்பவே அங்கலாய்த்தனர். மெக்காலே போலன்றி இந்தியாவின் மீது ஓரளவு நேசம் பூண்டிருந்த ருட்யார்ட் கிப்ளிங் இதை வெள்ளையனின் சுமை என்று தலைப்பிட்டு கவிதை எழுதினார். பிலிப்பைன்ஸ்மீது அதிகாரம் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு அறிவுறுத்தும் வகையில் அக்கவிதை எழுதப்பட்டது. மார்க் ட்வைன் பழுப்பு நிறத்தவனின் சுமை பற்றி யார் எழுதுவது என்று தனக்கேயுரிய கிண்டலுடன் அதை விமர்சித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைவிட்டு வெளியேறிய பொழுது நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக பல சரித்திர சிரியர்கள் எண்ணம் கொள்கின்றனர். ஆனால் இந்தியா அதை தனக்கு கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்த்தது. மனமுவந்தும் காசுக்கும் இங்குள்ள நிலங்களை ஈந்துவிட்டு பின்னர் அவற்றை மீட்டெடுக்க வந்தே மாதரம் என்று குரல் கொடுத்து தியாகிகளை உருவாக்கிய வேதனை / வேடிக்கை வரலாறு நம்முடையது. மேற்கத்தியர்களுக்கு எத்தகைய அனுபவம் வாய்க்கிறது என்பதைப் பார்த்தால் அது வேறு மாதிரியாக உள்ளது. முதலில் ஆக்ரமிப்பு/ படையெடுப்பு என்றெல்லாம் நிகழ்த்தி நாட்டைக் கைப்பற்றி நாசம் விளைவித்துவிட்டு பின்னர் வருந்தி அந்நாட்டின் சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு உதவிகள் செய்ய வருகிறார்கள். ரத்தக்கறை படிந்த தங்கள் வரலாற்றைக் கண்டு வெட்கித் தலைகுனிவதுபோல் அவர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். அவற்றிலும் லாபம்தான். சியாட்டலிடமிருந்து முதலில் நிலம். அது முடிந்த பிறகு அந்த உரையை இலக்கியமாக ஜோடனை செய்து போற்றுவது. நாம் முதலில் விற்கிறோம் / பறிகொடுக்கிறோம். பின்னர் வருந்துகிறோம். அவர்கள் முதலில் வாங்குகிறார்கள் / அபகரிக்கிறார்கள். பின்னர் வருந்துகிறார்கள். வருந்துவது போல் பாசாங்கு செய்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

இரண்டு கவிதைகள்

1.
சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த பறவை எங்கே?
அது
சற்றைக்குமுன்
பறந்து கொண்
டிருக்கிறது.

2.
பறந்து செல்லும்
பறவையை
நிறுத்திக் கேட்டான் :
பறப்பதெப்படி?
அமர்ந்திருக்கையில்
சொல்லத் தெரியாது கூடப்
பறந்து வா
சொல்கிறேன் என்றது.
கூடப்பறந்து கேட்டான் :
எப்படி?
சிரித்து உன்போலத்தான்
என்றது.
சிரித்து உன்போலத்தான்
என்றது.
அட ஆமாம்
ஆனால் எப்படி
எனக் கீழே கிடந்தான்
பறவை
மேலே பறந்து
சென்றது.

(பிப்ரவரி – மே 1979 ழ இதழில் வெளிவந்த கவிதை)

ஜன்னல் வழியே

சம்பவம் 1 னக்கு வயிற்றுப்போக்கு கண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் மருந்துக்கடைக்கு, என் பிரச்சினைத் தீர மாத்திரைகள் வாங்கச் சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் நிவாரண மாத்திரைகளைத் தந்துவிட்டு, மிகவும் மென்மையாகவும், பொறுமையாகவும், “ஒரு முறை அவசரத்தில் ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள மாத்திரைகளை நீங்கள் வாங்கிச் சென்றது நினைவில் இருக்கிறதா?” என்று கேட்டார். அவர் பேசிய தொனி நலன் விசாரிப்புத் தொனி. எனக்கும் நினைவுக்கு வந்து நான் காசு கொடுத்தேன். பேருந்து நிறுத்தத்துக்குப் போக வேண்டுமானால் அந்தக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். எத்தனையோ முறை கடையைக் கடந்து சென்றிருந்தும் என்னை அழைக்காமல் கடைக்கு மீண்டும் சென்றபோதுதான் பாக்கி கேட்ட கடைக்காரரின் இங்கிதமும், பெருந்தன்மையும் என்னைத் தொட்டன.
சம்பவம் 2
நான் தேனீர் அருந்தும் கடையில் பீடி சிகரெட்டும் விற்கிறார்கள். ஒரு முறை ஒரு ரூபாய்க்குக் காஜா பீடி கேட்டபோது, கடையை நடத்திவரும் பெரியவர் ஐந்து பீடிகளைக் கொடுத்தார். ஒரு ரூபாய்க்கு நான்கு பீடிகள்தான். கூடுதலாகப் பெற்ற ஒரு பீடியைத் திருப்பித் தந்தேன். பெரியவர் மிகுந்த நன்றியுணர்வுடன் அதைப் பெற்றுக்கொண்டார். அடிப்படை நம்பிக்கைதான் உறவுகளின் அஸ்திவாரம் என்று நினைக்கத் தோன்றிற்று. சம்பவம் 3 ங்கோ வெளியே சென்று இரவு ஒன்பது மணி வாக்கில், கிடைத்த கட் சர்வீஸ் பேருந்தில் ஏறி அண்ணாநகர் மேற்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கு என் வீட்டுக்குப் போகும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். நெரிசல் இருந்தால் நான் பேருந்தில் பயணம் செய்ய மாட்டேன். தோள்பையைச் சுலபத்தில் பிளேடு போட்டு அறுத்து விடுகிறார்கள். எனக்கு அந்த மாதிரி மூன்று முறை நடந்திருக்கிறது. மனம் இறுக்கத்துக்கு உள்ளாகியிருந்தது. பக்கத்தில் ஓர் ஆட்டோ வந்தது. “சாருக்கு எங்கே போகணும்?” என்று கேட்டார் ஓட்டுநர். நானும் சொன்னேன். “ஐந்து ரூபாய் கொடுங்கள், போதும்,” என்றார் அவர். அதே மாதிரி ஒரு பிராமணப் பெண்மணியையும் ஐந்து ரூபாயில் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். பொதுவாக என் வீட்டருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு ரூ.15க்குக் கீழ் வர மாட்டார்கள். அதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை என்றால் ரூ.35 க்குக் கீழ் வர மாட்டார்கள். ஓட்டுநர் பேசிக்கொண்டு வந்தார். தான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும் வழியில் ஓரிருவருக்கு ஓர் உதவியாகக் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதாகவும் சொன்னார் அவர். இதனால் அவரைச் சக ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டுவதாகவும் அதை அவர் பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார். அந்த ஆட்டோ ஓட்டுநரின் உபகாரம் என் மனதைத் தொட்டது.
சம்பவம் 422.12.2002 (ஞாயிறு) நவீன விருட்சம் ஏற்பாடு செய்த ஆத்மாநாம் இலக்கியக் கூட்டம். ஆத்மாநாம் கவிதைகள் குறித்துக் கலந்துரையாடல். உடல்நலம் பாதிப்படைந்ததால், கலந்து கொள்ள முடியாமல் போனது. கூட்டம் மாலை 4 மணிக்கு. இரண்டு மணி வாக்கில் மூச்சிரைப்பு அதிகரித்து விட்டது. அதையும் மீறிக் கூட்டத்தில் கலந்து கொண்டால், ஒருகால் நான் பிற நண்பர்களுக்கு ஒரு சுமையாக ஆகியிருப்பேன். ஆத்மாநாம் மீது நான் பெரும் மதிப்பு கொண்டவன். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனது அவருடைய நட்புக்கு நான் செய்த துரோகம் என்று நினைக்கத் தோன்றிற்று. இந்த உணர்வு எனக்குள் ஏற்கனவே இருக்கும் மனச்சோர்வை அதிகப்படுத்தியது. என்னையே நான் சபித்துக்கொண்டேன்.

சில குறிப்புகள் / 8

ழ கவிதைகள்
மே மாதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த என்ற பத்திரிகைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ழ பத்திரிகையைப் பார்த்துதான் நான் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்தேன். ழ பத்திரிகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. அப் பத்திரிகையைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது அம்மணப் பத்திரிகை என்பார். பத்திரிகைக்கு என்று தனியாகப் பளபள அட்டை இருக்காது. நியூஸ் பிரிண்டில் 16 பக்கம்தான் இருக்கும். இந்த எளிமையெல்லாம் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து கொண்டு வந்தபோது. ழ பத்திரிகையில் ஈடுபட்ட பலர் எதாவது ஒரு பணியில் இருந்துகொண்டு, ஒழிந்த நேரத்தில் இலக்கியம் பேசிக்கொண்டு பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளைப் பற்றி பேசுவது, கவிதையை இயற்றுவது என்று ஒரு சிறிய கூட்டமே இருந்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலை பக்கத்தில் அமர்ந்து இலக்கிய உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு பல விஷயங்களைக் குறித்து இருக்கும். அங்கு ஆத்மாநாமை நான் பார்க்கவில்லை. ஆத்மாநாமின் தற்கொலை அந்த எளிமையான கூட்டத்திற்குப் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சாத்வீகமான கவிஞர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும், ழ கூட்டத்தில் இருக்கும் மற்ற கவிஞர்களுக்கு இருந்த மனத்துணிவு ஏன் ஆத்மாநாமிற்கு இல்லாமல் போய்விட்டது என்பது தெரியவில்லை. நான் ஆத்மாநாமை மூன்றுமுறை சந்தித்து இருக்கிறேன். ஒருமுறை ஞாநி இருந்த பீட்டர்ஸ் சாலையில் உள்ள காலனி வீட்டில் நடந்த கூட்டத்தில். அப்போது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகளை வைத்துக்கொண்டிருந்தார். ழ பத்திரிகையுடன் அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
இன்னொரு முறை நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் சந்தித்துக் கொண்டபோது. கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு நாங்கள் பயணம் செய்தோம். அப்போது வெளியீடாக வந்திருந்த நகுலனின் ‘கோட் ஸ்டாண்ட் கவிதைகள்’ ஆத்மாநாமின், ‘காகிதத்தில் ஒரு கோடு’ ஆனந்த் – தேவதச்சனின் ‘அவரவர் கை மணல்’ ஞானக்கூத்தனின், ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கினேன். ஆத்மாநாம் அவர் புத்தகத்தில் என் பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தார்.
மூன்றாவது முறையாக நான் ஆத்மாநாமைச் சந்தித்தது. ஞாநியின் திருமண அறிவிப்புப் போது. ஞாநி பத்மாவுடன் சேர்ந்து வாழப்போவதாக அறிவிப்பு செய்து, நாடகம் ஒன்றை சென்னை மியூசியம் தியேட்டரில் நடத்தினார். எல்லோருக்கும் டீ வரவழைத்துக் கொடுத்தார். நான் ஆத்மாநாமைப் பார்த்து அவர் சீட் பக்கத்தில் போய் அமர்ந்தேன். நகுலனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று விமலாதித்த மாமல்லனைப் பார்த்து ஆத்மாநாம் எழுந்து போய்விட்டார். அப்புறம் ஆத்மாநாம் வரவேயில்லை.
ஆத்மாநாமின் முடிவு சோகமானது. யாரும் எதிர்பார்க்காதது. குறைந்த வயதே வாழ்ந்தாலும், ஆத்மாநாம் தமிழ் கவிதையில் பல புதிய முயற்சிகளை உருவாக்கத் தவறவில்லை. ழ வின் முதல் இதழில் ஆத்மாநாமின் கவிதை எதுவும் பிரசுரமாகவில்லை. ஆனால் ஜூன் 1978 ஆம் ஆண்டு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.
தூரத் தெருவிளக்குகள் இரவில் இரும்பு மனிதர்கள் ஆகின்றன கையில் நிழற்சுமையுடன் இரவைக் காவல் காக்கின்றன பகலிடமிருந்து
காலை மெல்லப் புலர்கிறது கொஞ்சம் கொஞ்சமாய் தெரு விளக்குகள் இறந்து விடுகின்றன கண்ணுக்கே தெரியாத் தொலைவு சென்றுவிடுகின்றன மீண்டும் இரவு மெல்ல மெல்ல வருகிறது வெளிச்சத்தை விரட்டிக்கொண்டு மீண்டும் எங்கிருந்தோ வந்து குதிக்கின்றன தெரு விளக்குகள் இரவைப் பாதுகாக்ககவிதை இரண்டு
ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளிய மரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய் அப்பொழுது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு
இங்கு தொடர்ந்து ழ பத்திரிகையிலிருந்து சில கவிதைகளை உங்களுக்கு வாசிக்க அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ழ வந்த சமயம் கவிதைக்குப் பொற்காலம் என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதைக்கு மரியாதையை ஏற்படுத்தித் தந்த சமயமும் அதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னும் என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

பிரிவு

ரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் ‘ராஜதானி’ எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. ‘இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் ‘ஹவ்ரா’ பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,’ என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. “தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?’ என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார். அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். ‘எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?’ அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் – மானசீகமாகத்தான் – அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் – இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது. ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை. “மிஸ் கல்பனா!””எஸ். மிஸ்டர் தினகரன்!””வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?””விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?” அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள். அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், “யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்,” அவளுடைய சிரிப்பு !!! “கல்பனா, ப்ளீஸ்…” “அக்ஹான் ….அக்ஹான்..அக்ஹான்..””வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்…” என்பார் அவர். அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை. அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். ‘மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்,” என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது. அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது. ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன. “டிக்கட் கிடைத்ததா?” என்றாள் கல்பனா. இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.”இது ஸ்டேஷன்,” என்றாள் கல்பனா. அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. “இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன,” என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை. “கிவ் மி எ லிட்டில் வாட்டர்,” என்றாள் கல்பனா. தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார். அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது ‘டிட் யூ வீப்,’ என்றாள் அவள். “நோ நாட் எக்ஸ்ôட்லி,” என்றார் அவர். தயங்கியவாறே, “எப்போது திரும்பி வருவே,” என்றார். “ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்,” என்றாள் அவள்.”எனக்குத் தெரியும்,” என்றார் அவர் சிரித்துக்கொண்டே. “எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,”என்றாள் அவள். கொஞ்சநேரம் கழித்து, ‘டூ யூ ஃபீல் ஸôட்?” என்றாள் அவள். அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது. பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
‘மை லவ்’ வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், ‘அன் அடல்டரேடட் பக்வாஸ்,’ என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட – உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?’மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது. ‘மை லவ்,உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, ‘அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..’ (‘ஏப்ரல் 1974’ – சதங்கை இதழில் வெளிவந்தது)

அரண்மனைக்குச் சென்ற துறவி



ஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. தங்களுக்குமேல் ஒன்றுமே இல்லை என்னும் போக்கில் உள்ளங் களித்திருந்தார்கள். ‘அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்’ என்பது பெரியோர்களின் உரையல்லவா? அந்த அரசனுடைய ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்த மக்களும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை. உலகம் நிலையாமை முதலியவைகளை அறவே மறந்துவிட்டுச் செருக்கியிருந்தார்கள். அரசனுக்கோ குடிகளுக்கோ அறிவுரை கூறுவார் எவருமிலராயினர்.
இவர்கள் இவ்வாறிருக்கையில் உலகவாழ்வின் மெய்மையை உள்ளவாறுணர்ந்த துறவியொருவர் ஒருநாள் அவ்வூர் வழியே சென்றார். அவ்வூர் அரசனும் குடிமக்களும் அடைந்திருக்கும் அறிவுமயக்கம் அத்துறவிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. அவர் அவ்வூரார்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அன்றிரவில் அரசனுடைய அரண்மனைக்குள் ஒருவரும் அறியாவாறு நுழைந்து ஓரிடத்தில் ஒரு புலித் தோலை விரித்துக் கொண்டு படுத்தார். தமக்குப் பக்கத்தில் இடுகாட்டில் இருந்து எடுத்த மண்டையோடு ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்தார்.
துறவியார் வந்து படுத்திருத்தலை அரண்மனைக் காவலர் கண்டனர். அவர்கள் துறவியிடம் வந்து, “ஓய் துறவியாரே! நீவிர் யாவர்? இங்கு ஏன் வந்து படுத்தீர்? இந்த இடத்தை என்ன என்று எண்ணிக்கொண்டீர். இஃதோர் அறச்சாலை யென்பது உம்முடைய எண்ணமா? உடனே இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியே போய்விடுவீராக?” என்று சொல்லி அதட்டினார்கள்.
காவலர்கள் கழறியதைக் கேட்ட துறவி மிகுந்த பொறுமையோடு அவர்களைப் பார்த்து, “இஃதோர் பொதுவான அறச்சாலை. இச் செய்தி எனக்கு நன்றாகத் தெரியுமாகையால் நான் இங்கே வந்து படுத்துக் கொண்டேன்,” என்றார். இதனைக் கேட்ட காவலர்கள் “ஓய் துறவியாரே! நீர் அறிவில்லாதவராக இருக்கிறீர். இஃது அரசனுடைய அரண்மனையாயிற்றே, இச் செய்தி உமக்குத் தெரியாதா? விரைவாக இந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியே ஓடிப் போவீராக,” என்றார்கள்.
இவ்வாறு அரண்மனைக் காவலரும் துறவியாரும் உரையாடிக் கொண்டிருக்கையில் அரசியானவள் தன்னுடைய படுக்கையறைக்குப் போவதற்காக அவ்வழியே வந்தாள். அவள் அங்கு நடக்கும் போராட்டத்தைப் பார்த்துவிட்டு எல்லாச் செய்திகளையும் உசாவித் தெரிந்து கொண்டாள். பிறகு துறவியைப் பார்த்து, “ஓய் துறவியாரே! நீர் இவ்வரண்மனையை அறச்சாலையென்று எண்ணிக்கொண்டது எந்த அறிவினால்?” என்று கேட்டாள். அதைக் கேட்ட துறவி, “அம்மே! இந்த அரண்மனை யாருடையது?” என்று அரசியைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அரசி, “இது மன்னாதி மன்னனாகிய என்னுடைய தலைவனுக்குரியது,” என்று கூறினாள்.
பிறகு துறவிக்கும் அரசிக்கும் பின்வருமாறு உரையாடல் நடைபெற்றது.
துறவி : உன்னுடைய தலைவனுக்குமுன் இதில் வாழ்ந்திருந்தவர்கள் யார்? அரசி : என் தலைவருக்கு முன்பு அவருடைய தந்தை வாழ்ந்திருந்தார். துறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்?அரசி : அவருடைய தந்தை துறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்? அரசி : அவருக்கு முன்பு இது வேற்றரசன் ஒருவனுக்கு உரியதாக இருந்தது. அவ்வேற்றரசனோடு போரிட்டு இந்நாட்டையும் அரண்மனையும் அவர் கைப்பற்றிக்கொண்டார்.துறவி : அவ்வேற்றரசனுக்கு முன்பு இருந்தவர் யார்? அரசி : அவனுடைய அப்பன். துறவி : அந்த அப்பனுக்கு முன்பு இருந்தவர் யார்? அரசி : (சினத்தோடு) அதற்குமுன்பு அவன் அப்பன், அவனுக்குமுன் அவன் அப்பன், அவனுக்கு முன்பு அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன். துறவி : ஓ அரசியே! சினங்கொள்ளாதே. உன் கணவனுக்குப்பின் இதில் இருக்கப் போகிறவர்கள் யார்? அரசி : என்னுடைய மகன், பேரன் முதலானவர்கள் இருப்பார்கள். இதனைக் கேட்ட துறவி, “அம்மா ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாய்ப் பலபேர் இம்மாளிகையில் குடியிருக்கிறார்கள். இன்னும் இதில் எத்தனையோ பேர்கள் குடியிருக்கப் போகிறார்கள். இவ்வளவு பேர்களுக்கும் பொதுவான இருக்கும் இந்த இடத்தை ஓர் அறச்சாலை என்று உரைத்தால் அதில் தவறு என்ன இருக்கிறது?”என்று கேட்டார். இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருத்தலை அடுத்த அறையில் இருந்த அரசன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்விடத்திற்குப் புறப்பட்டு வந்து துறவியைப் பார்த்தான். அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் மண்டையோட்டைச் சுட்டிக் காட்டி, “இவ்வோட்டை எதற்காக வைத்துக்கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான். துறவிக்கு வேந்தன், துரும்பாகையால் துறவி அரசனை ஒருபொருளாக மதிக்கவில்லை. அவனைப் பார்த்து, “நான் இடுகாட்டு வழியாக வரும்போது இவ்வோடு அங்கே கிடைத்தது. இதைக் கண்டதும் இஃது உன்னைப் போன்ற ஒரு பெரிய அரசனுடைய மண்டையோடா? அல்லது என்னைப் போன்ற ஓர் எளிய துறவியின் மண்டையோடா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகியது. மெதுவாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்,”என்று கூறினார்.
அரசனும் அரசியும் ஆணவம் அகன்று சீர்பெற வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினார். அருட்கண் கொண்டு அவர்களை நோக்கினார். “உயிர் நீங்கிய பிறகு அரசனும் ஏழை எளியவர்களும் ஒரே நிலைமையை அடைந்து விடுகின்றனரேயன்றி எவ்வளவும் ஏற்றத் தாழ்வு காணப்படுகின்றதில்லை. நல்லறஞ் செய்தவர்கள் நல்லுலகு நண்ணுவார்கள். தீமை செய்தவர்கள் வருந்துதற்கிடமாகிய நரகத்தினை அடைவார்கள். நீங்கள் இருவரும் இனிமேல் நல்லியல்பு அமைந்தவர்களாய்த் தெய்வ எண்ணத்தோடு வாழ்ந்துவரல் வேண்டும். நீங்கள் எவ்வாறு வாழ்ந்து வருகிறீர்களோ அவ்வாறுதான் உங்களுடைய நாட்டு மக்களும் நடப்பார்கள்,” என்று அறிவுரைகள் பல கூறினார். அரசனும் அரசியும் அவருடைய அறிவுரையை ஏற்றனர். அவரைப் பணிந்தபோற்றிச் செய்யத்தக்க சிறப்புகளைச் செய்து அனுப்பினர். அன்று முதல் அந்நாடும் சீர் பெறலாயிற்கு.
(தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற நூலிலிருந்து எடுத்தக் கதை. இப் புத்தகத்தைத் திருத்தி அமைத்தவர் : இராமசாமிப் புலவர்)

என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்

முதல் நிலவை எப்போதும் எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன இரண்டாவது நிலவு குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக் காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம் நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்றுஐந்தாவது நிலவு மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறதுஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக்கொண்டிருக்கிறாள்ஏழாவது நிலவு எனக்குப் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் ஒரு சொல்.