இறுதிப் பாடல் (கொங்கினி)

(தமிழில் – விஜயராகவன்) என்னுடைய இந்தப் பாடல்இறுதிப் பாடலாக இருக்கலாம் சொல்லிப் பெருமூச்சு விட்டது பறவை।
அடுத்த வசந்தத்தை வரவேற்க யாரிருப்பர், யாருக்குத் தெரியும்?
மூடத்தனமாய் அமங்கலச் சொல் பேசாதே அச்சானியமாய்ப் பிதற்றாதே என்றது பூக்கத் தொடங்கியிருந்த விருட்சம்.போன வருடமும் இப்படித்தான் பேசினாய் ஆனால் இன்று வந்துதான் இருக்கிறாய், இல்லையா? பல வசந்தங்கள் வந்து விட்டன ஒன்றன் பின் ஒன்றாய், நானும் அலுக்காது பூத்துக் குலுங்கியுள்ளேன் பல முறை। இதயத்தில் தீவிர வேட்டை இருந்தால் வளர்ந்து நீள்கிறது வாழும் காலமும்

ஒரு வழிப் பாதை

சிறுகதை

அண்ணாசாலை விபத்து ஒன்றில் தாயார் இறந்துபடவும், மகன் அடுத்தாற்போல், செஞ்சிக்கோட்டை உச்சியில் நின்று கைகளை உயர்த்திப் பாடுவதாக வருகிறது காட்சி. இயக்குநர் அதை விவரித்துக் உதவி இயக்குநர்களில் ஒருவனாகப் பணியில் சேர்ந்திருப்பவன் அவன். சில சமயங்களில் இயக்குநருக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தும் பணியாற்றுவதுண்டு. ஆனாலும் அந்தத் துணை இயக்குநர் கூட்டத்தில் அவனே அதிகம் படித்து பட்டங்கள் வாங்கியவனாக அறியப்பட்டிருந்தான். எப்போதும் எதிலோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சொல்கிறார்கள். கறுப்பன் என்ற இயற்பெயரை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளான். மேற்படி உதவி இயக்குநரான அவன் பின் வருமாறு எண்ணிக்கொண்டிருக்கிறான். “செஞ்சிக்கோட்டை உச்சியில் சாவு பற்றிய தத்துவ கருத்துகளை உதிர்த்துவிட்டு கீழே இறங்கி வருவதற்குள் தாயார் இறந்த துக்கம் போய்விட, அங்கே ஆற்றங்கரையில், பெண்ணிடம் வம்பு செய்ய முயன்ற மூன்றுபேரை கொரிய நாட்டு அகி ஹிடோ பாணி சண்டையிட்டு வெற்றிகொள்கிறான். அநேகமாக அந்த இடத்திலும் ஒரு பாட்டு இருக்கும்.

இந்தப் படத்தில் பணியாற்ற நான் இத்தனை மைல் கடந்து இங்கே வந்திருக்கிறேன்………. ஆகா। முருகா. ” இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தவன், அன்று மாலை தன்னுடன் அறையில் வசிப்பவரும் தன்னைவிட மூத்தவருமான முத்து என்ற நண்பரிடம் இதைப் பற்றியெல்லாம் கூறுகிறான். அவர் ஆதுரத்துடன் கேட்டுக்கொள்கிறார். இவன் எம்.ஏ ஆங்கிலம் என்றால், அவர் எம்.ஏ தமிழ். அத்துடன் சோதிடம்வரை எல்லாப் புத்தகங்களையும் ஒரு கை பார்த்தவர். திருமணங்கள் பலவற்றை சாதகம் பார்த்து பரிந்துரைத்தவர். சில திருமணங்கள் பெற்றோரால் வாழ்த்தப்பட்டன. பல தம்பதிகள் பிரிந்து விட்டனர். சோதிடம் பற்றி எளிய முறையில் நூல் எழுதலாமா என்ற யோசனை உண்டு. ‘எம்மே’ தமிழ் சோறு போடவில்லை : சோதிடம் உதவிற்று. அன்றிரவு உணவு உட்கொள்ளு முன்னரே அந்த விவாதம் தொடங்கியிருந்தது. அன்றிரவே முற்றுப் பெற்றும் விட்டது. ஒரு பயணத்தின் தோற்றுவாய் அது. பின்னர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உடுத்தியிருந்த துணி தவிர வேட்டி ஒன்றை கூடுதலாக எடுத்துக்கொண்டனர். அறைக் கதவை பூட்டாது சென்றனர். அண்ணாசாலையில் ஒரு பிச்சைக்காரனிடம் கைவசமிருந்த ஒன்றிரண்டு நோட்டுகளையும் சில்லறையையும் கொடுத்தனர். அங்கிருந்து நடந்தது திருவான்மியூர் நோக்கி.
** ***** ***** ***** ***

அன்றிரவு

வான்மீகநாதர் கோவில் அருகேயே சாலை செல்கிறது. மறுபுறம் ஒரு வெளியிடம். கல்ஒன்றில் இருவரும் உட்கார்ந்திருக்க, பின்வருமாறு உரையாடல் இருந்தது.
“இந்த சாலை எங்கே சென்று முடிகிறது. “
“எங்கே செல்லும் என்று தெரிந்து விட்டால், அது பயணமாகாது।”
“ஆமாம்.”
“நட்சத்திரங்களைக் கொண்டே வருட, மாத, நாளைக் கணித்து விட முடியுமா?” “பொதுவா இந்தப் பக்கத்திலே அதாவது தென் பகுதியிலே கையாண்ட சோதிடத்திலே ஒரு விசேஷம் : பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திரங்களை மாத்திரம் கையாண்டே எல்லாவற்றையும் : நேரம் உட்பட : சொல்லிவிடலாம்.”
“அதிசயம்தான். இது எந்த சோதிட சாத்திரங்களிலும் உலக அளவில் இல்லை.”
“பசிகூட ஒரு நினைவுதானோ?”
முத்து தலையசைத்தார். கையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டைக் காண்பித்தார்.
“பசி ஒரு நிகழ்காலம்,” என்றார்।
“உனக்குத் தெரியுமா இந்தப் பத்து ரூபாயைத் தந்தது பூச நட்சத்திரம். அந்தப் புத்தக் கடையிலே பேசிக்கிட்டிருந்தான் பாரு : அவனுக்குப் பலன் சொன்னேன். காலில் விழாத குறைதான். பலன் சொன்னால் ஏதாவது தட்சிணை தந்துதான் ஆகணுமாம் : தந்தான். இது போதும்। ராத்திரி ஆளுக்கு அஞ்சு இட்டிலி.”
“நாளைக்கு.”
“திட்டம் நாளைக்கும் சேர்த்துப் போட்டால், அது பயணமாகாது।தெரிந்தவற்றை பரிமாறிக்கொள்ளலாம்। மாமல்லபுரத்திற்கு நாளை மாலை போய் விடுவோம் என்று வைத்துக்கொள். நான் அங்கே மூட்டைத் தூக்குவேன். சோதிடமும் : வெளிநாட்டவர்க்கும் சேர்த்து சொல்லலாம். வெளிநாட்டவர்க்கு என்றால் நீ மொழி பெயர்ப்பு வேலை : சரி :வா.”
***** ***** ***** **
சாப்பிடுதல் என்ற செய்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால் அது, அந்த செய்கை மட்டுமே முழுதாக நின்று நிலவ வேண்டும். நான் நினைக்கிறேன் என்பதுகூட தவறாம். நான் நினைக்கப்படுகிறேன் என்பதுதான் சரியாம். கறுப்பன் ஏதோ பேச முற்பட்டபோது, முத்து சொன்னது இது.
***** ***** ***** *** *****
“தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்,” என்பது வான்மீகச் சித்தர் வாக்கு। அவர் பெயரில் இந்த ஊரா என்று தெரியவில்லை। “அவர் நிச்சயமா ராமாயண வான்மீகி இல்லை.” திருவான்மீயூர் எல்லையைக் கடந்தபோது அவர்களது பேச்சு ஊரைப் பற்றியிருந்தது.
மாமல்லபுரம் சேர்வதற்கு முன்னரே

தலையிலே ஒரு கட்டு சுள்ளி விறகு. இடுப்பிலே கைக்குழந்தை மீதமிருந்த ஒரு கையில் சாமான்கள் அடங்கிய பை. வேகத்தோடு லாகவமாகவும் அந்தச் சாலையைக் கடந்து கடையருகே வந்து நின்றாள், அந்தப் பெண். கைகளின் உதவியில்லாமலேயே, கழுத்தைப் பின்னால் லேசாகச் சாய்த்து தலைப் பாரத்தைக் கீழே தள்ளினாள். தடை என்று சொல்லப்பட்டாலும், அந்தப் பிரதேசம் இருபது குடில்களையும் இரண்டு ஓட்டு வீடுகளையும் கொண்ட இடமே. சாலையின் பக்கமாகவே கட்டப்பட்டிருந்தது குடிசை. சில பேருந்துகள் அங்கே நிற்கும் போலும். பக்கத்திலே கடல். இரவில் அலைகளின் சப்தம். பூட்டப்பட வேண்டிய அவசியமே இல்லாத கடை. உள்ளே மண்அடுப்பு ஒன்றுதான். ஆனாலும் திறந்திருந்தால் இதோ இப்போது உட்கார்ந்திருக்கானே, இவனைப் போன்ற வழிப்போக்கன் உள்ளே வந்து ஆக்ரமித்துக் கொள்ளக்கூடும். கடையைத் திறந்தவள் குழந்தையை முதலில் கீழே படுக்க வைத்தாள். ஏற்கனவே தூக்கக் கலக்கத்திலிருந்தது அது. துடைப்பம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். “யாரு : தள்ளிக்குந்து.” அவன் தள்ளி உட்கார, அவள், “பாண்டி பஸ் போயாச்சா,” என்று கேட்டவாறே பெருக்கத் தொடங்கினாள். கறுப்பன் பதில் சொல்லவில்லை. அந்தக் குடிசையின் பின்புறம் சிறிது தூரத்தில் தெரிந்த கடலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாகச் சென்ற முத்து இன்னும் திரும்பவில்லை.
“டீ ஏதாச்சியும் வேணுமா?”
“டீயும் வேணும்।ஏதாவது வேலையும் வேணும்।”
“என்னா வேலை। இதுதான் இருக்குது,” என்று துடைப்பத்தைக் காட்டினாள், அந்தப் பெண் . சிரிப்பும் வந்தது.
“எதுவாயிருந்தாலும், சரி,” என்று எழுந்தான் கறுப்பன்.
கடற்கரைப் பக்கமிருந்து முத்துவும் வர, அந்தப் பெண் அதிசயித்தாள்.’
‘ஒரு துடைப்பம்தானே இருக்கிறது,’ என்றாள். மீதமுள்ள வேலைகளையும் செய்தால் டீயும், மசால் வடையும் தரமுடியும் என்று உறுதி கூறினாள். பக்கத்து ஓட்டு வீட்டிற்குச் சென்று தண்ணீர் மொண்டு வரச்செய்தாள். பேருந்துகள் நின்றால், டிப்பன்-காப்பி என்று கூவ வேண்டும், டீ என்று சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாள். தன் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லையென்றும், இதெல்லாம் அவர்தான் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் வரும்வரை இம் மாதிரி பிறர் உதவி தேவை என்றும் விளக்கமளித்தாள்.
இரண்டு திசைகளிலும் இருந்து வந்து போய்க்கொண்டிருந்த பேருந்துகளில் மூன்று அங்கே நின்று சென்றன. அது ஒரு நல்ல மாலைநேரம் என்று சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் வியாபாரம். அந்தப் பெண்ணிற்கு மிக மகிழ்ச்சி. கைமுறுக்கும் கூடுதலாக இருக்குமானால் இன்னும் இருபது ரூபாய் அதிகம் விற்றிருக்கும் என்று முத்து சொன்னது அவளை யோசிக்க வைத்தது. இடையே குழந்தை விழித்துக்கொண்டு அழுதபோது, முத்து அதைத் தூக்கிக்கொண்டு உலாவினார்.கறுப்பன் திரும்பவும் அந்தக் கடை முன்பக்கம் முழுவதும் பெருக்கித் தள்ளினான். அந்தப் பெண்ணிற்கு கூடுதல் மகிழ்ச்சி. மீதமிருந்த பலகாரம் தேனீர் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன. சாமான்கள் அனைத்தையும் பையில் திணித்துக்கொண்டு அவள் புறப்பட தயாரானாள். அடுத்தநாள் காலை பத்துமணிக்குத்தான் திரும்பவும் கடை திறக்க வேண்டுமாம். தாத்தாவின் உடல் நிலை காரணமாயிருக்கும். புறப்பட்டவள் சிறிது நின்று கையிலிருந்த ஓர் ஐந்து ரூபாய் நோட்டை அவர்களிடம் தந்தாள். “ஒங்களாலேதான் இவ்வளவு முடிஞ்சுது. : நான் வாரேன்.” சாலையைக் கடந்து அவள் நடந்தாள்.
****** ****** ****** ******
இருட்டுவதற்குள் மாமல்லபுரம் போய்விட முடியும் என்றார் முத்து.வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தயாரானார். சாலை நன்றாகவே இருக்கிறது.நடப்பது சௌகர்யம்.குரலெடுத்து பாடிக்கொண்டே நடக்கலாம் என்றும் சொன்னார்.ஆனால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது அவர் மட்டுமே. கறுப்பன் அவருடன் செல்லவில்லை. அப்போது நடந்த உரையாடல் வருமாறு. கறுப்பன் சொன்னது:
“சாயந்திரம் நீங்க குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிகிட்டிருந்தீங்க இல்லையா : அப்போது நான் அந்தக் கடையைச் சுத்திப் பெருக்கி கொண்டிருந்தேன்.பாருங்க திரும்பத் திரும்ப அலையோட சப்தம் : தெளிவாக கேட்டது.நிம்மதியாயிருந்து.அதைப்பற்றி கொஞ்சம் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.ஏனோ சொல்லணும்னு தோணிச்சு. அதுக்கு அவ சொன்ன பதில். “ஆமா : சத்தம் ரொம்ப நல்லாயிருக்கும் : ஒரு சத்தம் மாதிரி இன்னொண்ணு இருக்காது : அலையைப் பாத்தாலும் அப்படித்தான் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு”- பரமார்த்தமா இதைச் சொன்னா. அப்ப தோணிச்சு எனக்கு : இந்தக் கடலும் அலையும் இந்த மண்ணும் மரமும் ஏற்பட்ட காரணமும் பயணத்திற்காகத்தானே : இல்லே நமக்காகவா இதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்திலே பயணத்தை ஆரம்பிச்சிருக்கு : நிச்சயமா இல்லே : அந்தப் பயணத்தைப் பார்க்க முடியாத வரை : எல்லாவற்றின் பயணத்தையும் பார்க்க முடியாதவரை : நாம் பயணிகளாகி விட முடியுமா : சொல்லிக் கொள்ளத்தான் முடியுமா : யாரோ சொன்னதை நீங்க அடிக்கடி குறிப்பிடுவீங்க : “சென்று அடைவதற்காக பயணம் இல்லை : அது பயணத்திற்காகவே.” அது உண்மை : சரியாகத்தான் சொல்லியிருக்கு : யாரு சொன்னது அது : ஆனாலும் அந்தப் பயணம் நம்ம காலாலோ அல்லது இந்த உடம்பாலோதான் நடத்தி ஆகணும். அப்படின்னு யாராவது சொல்ல முடியுமா : அம் மாதிரிப்பட்ட பயணம்கூட ஓர் இறந்த காலம்தான். வேறு எப்படி இதைக்கொண்டு செல்ல வேண்டும் எனக்குத் தெரியவில்லை. நான் இங்கேயே இருக்கிறேன். ஒருவேளை ஸ்டியோவிற்கே திரும்பிப் போகவும் தோன்றலாம் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு.”
முத்து சொன்னது: “தம்பி , உனக்கு இப்படித் தோன்றியதில் சந்தோஷம்। தானாகத் தோன்றுவதில் ஒரு சௌகர்யம். அதிலே பொய் எதுவும் இருக்காது. எனக்கும் தோன்றலாம். நான் அதுவரை பயணிக்கிறேன். உனது முடிவை சரியென்றோ தவறு என்றோ எண்ணாது போகிறேன். நாம எப்பவாவது சந்திக்கலாம்.” முத்து ஏக, கறுப்பன் நிலை கொள்கிறான்.

சந்தி

70-களில் சில தீவிர வாசகர்கள், அவரது எழுத்துக்களை மனனம் செய்ததுபோல் ஒப்புவித்து மகிழ்ந்தார்கள், சக்தியையும், அதன் ஆதாரமாகப் பெண்மையையும், அது ஒளிவீசும் தாய்மையையும் தன் வாழ்க்கையின் அடிநாதமாக உபாசித்து, எழுத்தை ஒரு தவமாகக் கொண்டவர். அண்மையில் மறைந்த லா.ச.ர அவருக்கு நமது அஞ்சலி. **********தமிழில் கவிதை நாளுக்குநாள், பெருகி, உயர்ந்து வருகின்றது வார, மாத இதழ்கள், கவிதைக்கு இடத்தை உற்சாகமாகவே தருகின்றன। சில இதழ்கள், இலக்கிய தீபாவளி கொண்டாடின. ‘குமுதம்’ இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் வேகமாக எழுதுவதையும், திரைப்படங்களை அவர் ஊன்றி பார்பதில்லையென்றும், இயக்குனர் சேரன் சிகரெட் அதிகமாகப் பிடிப்பதையும் கூறி தன் இலக்கியப் பணியை முடித்துக் கொண்டது. ஆனந்தவிகடனில், கவிஞர் விக்கிரமாதித்யன், பீடி சுற்றும் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட வியாசத்தை கவிதையாக எழுதியிருந்தார், சுவைபட, ஆனால் கவிதைக்கு இறுக்கமும், சுருக்கமும்தானே அழகு. என்னை மிகவும் ஈர்த்தது, கவிதையின் மொழி, பேச்சு மொழியாக மாறும்போது கிடைக்கும் மழலையின் அழகு. அது கு. உமாதேவியின் ‘அன்னாடங்காச்சி’ என்ற கவிதையில் ‘ஆனா। சின்ன கொடிகுத்திஎங்கொழந்த கிட்ட ஆரஞ்சுமிட்டாய் கொடுக்கும்போது வுழுந்து வுழுந்து சிரிப்போம்’என்கிறபோது உண்மையை நேரில் காணும் ஒரு வெள்ளந்திப் பார்வையின் ஏகத்தாளம் வெளியிடப்பட்டாலும், மழலைச் சொல்லாகவே இருப்பதால், இதன் கனமும் குறைந்து விடுகின்றதே। நேரில் காணும் உண்மையை, உள்ளபடி, ஒரு பயமும் இல்லாது கூறும் நேர்மைக்கு அருகாமையில் வருகின்றது தமிழ்க்கவிதை. ஆனால் இன்னும் நீண்டதூரம் நாம் போக வேண்டும்।. தமிழர்கள் நல்ல கற்பனையுள்ளவர்கள், ஆகவே தீக்குள் விரலை விட்டாலும், பெரும்பான்மையானபோது உண்மை இதமாக தண்ணித்துப் போகின்றது. உர்து மொழி இதற்கு சற்று மாறான நிலையை எடுக்கின்றது. குர்ஷித் அஃப்சார் பிஸ்ரானி, தான் எழுதும் உர்தூமொழி பற்றி,”அப் உர்தூ க்யா ஹை ஏக் கோத்தே கீதவாய்ஃப் ஹை மஜா ஹர்ஏக் லேத்தாஹை மொகயத் கோன்கர்த்தாஹை”
மொழி பெயர்த்தால் (ஆங்கிலம் வழியாக) இப்போது ஊர்தூ என்ன, விபாசர விடுதியில் ஒரு வேசியாக யார் வேண்டுமானாலும் அவளுடன் உல்லாசம் காணலாம், யாரோ அவளை காதலிக்கின்றார்।’ ********** பேச்சில், எழுத்தில் வரும் பிழைகள், பேசுபவரின், எழுதுபவரின் ஆழ்ந்த உள்ளக்கிடைக்கைகளென்றும், அவையே உண்மையான எண்ணங்கள் என்றும் ஒரு உளவியல் கோட்பாடு உண்டு. எழுதியவை அச்சில் வரும்போது ஏற்படும் பிழைகளுக்கு யார் பொறுப்பு? என்னைக் கேட்டால் எழுதியவர்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எழுதுபவர் சற்று கூடிய கவனத்துடன் தான் எழுதுவது, எழுதியது அச்சில் வெளிவரும்போது பிழைகள் நேரக்கூடும் என்ற பொறுப்புடன் எழுத வேண்டும். சென்ற ‘சந்தி’யில் நேர்ந்த பிழைகளுக்கு கொம்பன் பொறுப்பேற்று வாசகர்களின் மன்னிப்பை யாசிக்கிறான் புத்தி. புத்தி. புத்தி.
சிரிக்க : பள்ளிப் பிள்ளைகளாக நாம் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் சர்கஸ் வருவதுபோல குத்துச் சண்டை, மற்போர்கள் வரும்। முன் மாலைகளில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு, வண்ண வண்ண மலிவான காகிதத்தில் கருப்புப் பையில் அச்சிட்டுப் புகைப் படங்களுடன், அன்றைய ”ரோஃமான்” குத்துச் சண்டையை பற்றி விளம்பரம் செய்துகொண்டு போவார்கள். எந்தச் சண்டையிலும் தோற்காத இந்தியத் தாராசிங், உச்சக்கட்ட போராக, கிங்காங்வுடன் முகமூடி அணிந்த ‘வாங் பக்லி’ மோதுவதாக இருக்கும். ஒவ்வொருநாள், தனித்தனி ஊர்திகளில் ‘கிங்காங்’ ஒரு வண்டியிலும், பின்னோ முன்னோ இன்னொரு வண்டியில் கருப்பு முகமூடியணிந்து வாங் பக்லியும் வீதி உலா வருவார்கள். வாரம் ஒரு தடவையாவது கிங் காங் வாங் பக்லியின் முகமூடியை கிழிக்கப் போவதாக சவால் விடுவார். ஆனால் போட்டி அமைப்பாளர்கள் தவிர வேறு யாராலும் ‘வாங் பக்லி’ யார் என்று அறிய முடியாது. சென்ற இதழ் நவீன விருட்சம் படித்தபோது திரு தி.க.சி யின் கடிதம் என்னைக் கவர்ந்தது. ‘வாங் பக்லி’யின் முகமூடியை திரு.தி.க.சி கிழிக்கப் போவதில்லை போலும். (நவீன விருட்சம் 2008ல் பிரசுரமான சந்தி)

ஒன்ஸ் மோர்

அவனுக்கு மட்டும் எப்படிதபால்பெட்டியில் கார்டு மாதிரிதன் உடம்பைக் கிணற்றுக்குள்போட்டுவிட முடிகிறது?
தன் வாழ்வைக்குப்பைக் கடுதாசி போல்எட்டாம் மாடியிலிருந்துவிட்டெறிந்து விட முடிகிறது?
தற்கொலை செய்து கொள்வது,தண்ணீரில் குளிப்பதைப் போல்மனசில் ஒட்டாத விஷயமா?
உயிர் வெறும் எச்சிலா’பச்’ சென்று துப்பிவிட?
பிறவியில்உயிரை உடம்புக்கு வெளியில்ஒட்டிக்கொண்டு வந்தானாஆறாவது விரலாக?வேண்டியபோது வெட்டி விட।
பட்டப் பகலில்,முன் கூட்டியே பாலைஎதிர்த்த வீட்டில்வாங்கி வைத்துக்கொள்ளஏற்பாடு செய்து விட்டு,பின்கதவை பூனை வராமல்இழுத்து மூடி,அடுப்பில் கொதிக்கும் கிழங்குகளைஇறக்கி வைத்து மூடிவிட்டு”எதற்கும் கவலைப் படாதே,குழந்தையைப் பார்த்துக்கொள்போகிறேன்,”என்று முத்தமுடன்காகிதம் எழுதிப் பார்வைக்குத்தப்பாத இடத்தில் பத்திரப் படுத்திவிட்டு,வாசலில் சோறு வைத்துவிட்டுபொருத்தமான கறுப்பு உடுப்புகளைஇறுக்கமாகப் போட்டுக்கொண்டு,தூளிக் கயிறு, காலைவாரி விடாதவாறுஒருமுறைக்கு இருமுறைஇழுத்துப் பார்த்துவிட்டு,உத்தரக் கம்பியின்உயரத்தை அளந்து கட்டிகழுத்து முடிச்சுகளைகச்சிதமாகப் போட்டுக்கொண்டுநாற்காலியை தள்ளி விட்டுநாசூக்காய் உயிர்விட முடிகிறதுஅவனால் எவ்விதம்?
நிஜமாக இது அவனுக்குஒரே காட்சி।கடைசி காட்சி, என்றாலும்நான் அவனே போல்அடிக்கடி இக் காட்சியைஒத்திகை பார்த்துக்கொள்கிறேன் எனக்குள்மிக இயல்பானதன் முயற்சியற்ற தோற்றமாக,உலகம் என்னிழப்பால்உருகி ஓலமிட வேண்டுமென்றபேராசையால்அல்லும் பகலும் அக்கறையாய்நான் காட்சிகளின் கோர்வைகளைமனனப் படுத்துகிறேன்। திரும்பத் திரும்ப,இருந்தாலும்,வேளைகளில் விளக்கணைந்துகாட்சி மாறும் கண்ணிமைப்புநேரத்தில,நான் தப்பி ஓடிப்போய்பார்வையாளர் முதுகுக்குள்பதுங்கிக்கொண்டு விடுகிறேன்।என்னையும் மீறி।என் மறைவால்எவனுக்கும் கவலை தோன்றவில்லை।
ஓரத்தில் தயாராய் காத்திருக்கும்கறுப்பான ‘டூப்’ நடிகன்,நாற்காலியை உருட்டிவிட்டுநாக்கு நீண்டு தொங்குகிறான்।மேடையில்।உச்ச வியப்பால்உருக்கமான காட்சியால்உலகத்தில் பார்த்தவர்கள்”ஒன்ஸ் மோர்” என்று கத்துகிறார்கள்எனக்கு விதித்திருந்தஅனுதாபத்தை அபகரித்துவிட்டநடிகனை கோபத்தால் ஓயாமல்கொலை செய்கிறேன்।நாற்காலியை உலகத்திற்கு எதிரேநிமிர்த்தி வைத்து,காட்சிக்கு என்னைமீண்டும் தயார் செய்து கொள்கிறேன்’ஒன்ஸ் மோர்।’ (சமீபத்தில் விருட்சம் கவிதைகள் தொகுதி 2 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 1993-1997 வரை உள்ள காலகட்டத்தில் விருட்சத்தில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி இது. 93 கவிஞர்களின் கவிதைத் தொகுதி இது. இத் தொகுதியில் உள்ள வைதீஸ்வரின் கவிதை இது.)
1

ஆட்டிப்படைக்கும் உடல்

தமிழில் : அழகியசிங்கர்
கேள்வி : மஹாராஜ், நீங்கள் என் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்॥ நான் உங்கள் அருகில் காலடியில் அமர்ந்திருக்கிறேன்। நம் இருவருக்குமிடையில் என்ன அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது?
மஹாராஜ் : எந்த அடிப்படையான வித்தியாசமும் இல்லை।
கேள்வி : உண்மையில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன। நான் உங்களைத் தேடி வருகிறேன்॥ நீங்கள் என்னைப் பார்க்க வருவதில்லை।
மஹாராஜ் : ஏனெனில் நீங்கள் வித்தியாசமாக இருப்பதாகக் கற்பனை செய்கிறீர்கள்। மிகச் சிறந்த மனிதர்களைத் தேடி நீங்கள் இங்கேயும் அங்கேயும் செல்கிறீர்கள்।
கேள்வி : நீங்கள் கூட ஒரு சிறந்த மனிதர்। உண்மையை அறிவதற்குத் தகுதி உடையவர்। நான் அதுமாதிரி இல்லை।
மஹாராஜ் : உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும் அதனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவரென்றும் எப்பவாவது சொல்லியிருக்கிறேனா? அப்படி வித்தியாசத்தைக் கண்டிபிடிப்பவர்கள் அதை நிரூபிக்கட்டும்। உங்களுக்கு என்ன தெரியாதென்பதை நான் சொல்வதில்லை। பார்க்கப்போனால், உங்களுக்குத் தெரிந்ததைவிட குறைவாக எனக்குத் தெரியும்।
கேள்வி : உங்கள் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை। உங்கள் நடத்தை போற்றுதற்குரியது। உங்கள் கருணை மிகச் சக்தி வாய்ந்தது।
மஹாராஜ் : எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது। உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை। என்னுடைய வாழ்க்கை பல சம்பவங்களின் கோர்வை, உங்களைப் போல। ஆனால், நான் எல்லாவற்றையும் துண்டித்துவிட்டு ஒரு பார்வையாளனைப் போல பார்க்கிறேன்। ஆனால் நீங்களோ அதனுடன் ஒன்றி உள்ளீர்கள்। அதனுடன் உழன்று கொண்டிருக்கிறீர்கள்।
கேள்வி : எது உங்களை இப்படி ஒரு பார்வையாளனாக மாற்றியது?
மஹாராஜ் : குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை। அது தானாகவே நிகழ்ந்துள்ளது। நான் என் குருவை நம்பினேன்। அவர் என்னிடம் கூறினார்: ‘நீ ஒன்றுமில்லை। உன்னுடைய ஆத்மா’ என்று। நானும் அவரை நம்பினேன்। என்னுடையது எது, என்னுடையது எது இல்லை என்பதைப் பற்றிய அக்கறையை விட்டுவிட்டேன்।
கேள்வி : உங்கள் குருவை நீங்கள் முழுமையாக நம்பிய அதிர்ஷ்டக்காரர், நீங்கள்। ஆனால் எங்கள் நம்பிக்கை வெறும் வார்த்தைகள்। பெயரளவானது
மஹாராஜ் : யார் அதைச் சொல்வது? இது தானாகவே நிகழ்வது। எந்தவிதமான செயல் நோக்கம் இல்லாமல் நடக்கிறது। யாருக்கு யார் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை। என்னைப் பற்றிய உயர்ந்த கருத்து உங்கள் கருத்து மட்டுமே? எந்தத் தருணத்திலும் நீóங்கள் அதை மாற்றிக்கொண்டு விடலாம்। எதற்காக கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்। உங்களுடையதாக இருந்தாலும் கூட।
கேள்வி : இன்னும்கூட நீங்கள் வித்தியாசமானவர்। உங்கள் மனது எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கக் கூடியது। எப்போதும் அதிசயங்கள் உங்களைச் சுற்றி நடந்தவண்ணம் உள்ளன।
மஹாராஜ் : எனக்கும் அதிசயங்கள் பற்றி ஒன்றும் தெரியாது। நான் ஆச்சரியப்படுவேன்। இயற்கை தன் விதிகளில் சில சலுகைகளைத் அளிக்குமாவென்பதைப் பற்றி। நாம் இதை ஒப்புக்கொள்ளும்வரை, ஒவ்வொன்றும் அதிசயமாகத்தான் இருக்கிறது। மனதின் விழிப்பு நிலையில் எல்லாம் நிகழந்தவண்ணம் உள்ளது। இது சாதாரணமானது। எல்லோருடைய அனுபவத்திலும் நிகழக்கூடியது। நீங்கள் அதை ஜாக்கிரதையாகப் பார்க்க தவற விடுகிறீர்கள்। நன்றாக உற்றுப் பாருங்கள், நான் பார்ப்பதை நீங்களும் பார்க்கலாம்।
கேள்வி : நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?
மஹாராஜ் : நீங்கள் இங்கே இப்போது என்ன பார்க்க முடியுமோ அதையே நானும் பார்க்கிறேன்। ஆனால் நீங்கள் தவறாகப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டத்தில் அல்லாமல்। நீங்கள் உங்களைப் பார்ப்பதில்லை. உங்கள் மனம் எப்போதும் பொருள்களைக் குறித்தும், உங்களைச் சுற்றி உள்ளவர்களைக் குறித்தும், கருத்துக்களைக் குறித்தும் உள்ளது. உங்களைக் குறித்து எந்தக் கவனமும் இருப்பதில்லை. உங்களைக் குறித்து கவனத்தைக் கொண்டுவாருங்கள். உங்கள் இருப்பை குறித்து புரிந்து கொள்வீர்கள். பாருங்கள் எப்படி நீங்கள் செயல் படுகிறீர்கள் என்பதை. கவனியுங்கள் உங்களுடைய செயல்களுக்கு எந்த அர்த்ததின் அடிப்படையில் உள்ளது என்பதை. உங்களை அறியாமல் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட சிறையை உற்று கவனியுங்கள். நீங்கள் எப்படி இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும்போது, நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களை நோக்கிச் செல்வதற்கு, உங்களை மறுத்தும், விலக்கியும் நீங்கள் பார்க்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். உண்மை கற்பனையானதல்ல. அது மனதின் கற்பிதமும் இல்லை. அது சிலவற்றை குறிப்பதாக இருந்தாலும், ‘நான்தான்’ என்கிற உணர்வு தொடர்ச்சியானதல்ல. அது எங்கே பார்க்க வேண்டுமென்பதை மட்டும் சொல்லக் கூடும். எதைப் பார்க்க வேண்டுமென்பதைச் சொல்லாது. அதனால் நல்ல பார்வையை அதனிடம் செலுத்துங்கள். உங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், நீங்களே உங்களை உணர்வீர்கள். அப்போது ‘நான்தான்’ என்பதற்கான தேவை எதுவும் ஏற்படாது. அதனால் நீங்கள் உங்களைப் பற்றிய எதுவும் வார்த்தைகளால் சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் உடனடியாகக் கருத்தில் கொள்ளவேண்டியதென்னவென்றால், உங்களைப் பற்றிய எண்ணத்தை அகற்றுவதுதான். எல்லாவிதமான விவரணைகளும் உங்களை உடலைப் பற்றியதுதான், அது குறித்த கருத்துக்களுக்குத்தான். உடலைக்குறித்த உங்கள் தீவிரம் போய்விட்டால், தானாகவே நீங்கள் இயல்பான நிலைக்கு வந்து விடுவீர்கள். உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் என்னுடைய இயல்பான நிலையை உணருகிறேன். நீங்கள் உணருவதில்லை. தங்கத்திலிருந்து உருவாக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்போது, தங்கத் துகிளால் எந்தப் பலனுமில்லை, என்பதை மனம் ஏற்றுக்கொள்வதைப் பொருத்தது. அதேபோல் நாமெல்லாம் ஒன்று -தோற்றத்தைத் தவிர. நாம் இதைக் கண்டுபிடிக்க வேண்டும், ஆராய வேண்டும், தினமும் ஒவ்வொரு நிமிடமும் கேள்விக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுவதும் செலுத்திய வண்ணம்.

நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம்

ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜெகனும், மோகினியும் ‘ஹாப்பி டிராவல்ஸ்’ பஸ் பிடித்து மயிலாடுதுறையில் உள்ள வள்ளலார் கோயில் சன்னதித் தெருவில் காலை 5 மணிக்கு இறங்குகிறார்கள்। அவர்களை ஆவலுடன் வரவேற்று தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார் அழகியசிங்கர்।
அழகியசிங்கர் : நீங்கள் இருவரும் என்னைத் தேடி வந்ததற்கு நன்றி.
ஜெகன் : உங்களைப் பார்க்க வேண்டுமென்று மோகினிதான் சொன்னார்.
மோகினி : ஜெகனுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்து சற்று வருத்தமாக இருந்தது. அதனால் உங்களைப் பார்க்க ஆவல்.
அழகியசிங்கர் (வீட்டிற்குள் நுழைவதற்கு முன்) : பார்த்து வாருங்கள். இந்த இடத்தில் குறுகலான படிகள். தலை இடித்துவிடும். (ஜெகனும், மோகினியும் குனிந்துகொண்டு வருகிறார்கள்)
அழகியசிங்கர் (சிரித்துக்கொண்டே) : வலது காலை எடுத்துவைத்து வாருங்கள். இங்கே நான் உங்களுக்கு எதுவும் தரமுடியாது. ஆனால் பக்கத்தில் ‘மயூரா லாட்ஜ்’ என்ற ஓட்டல் இருக்கிறது. அங்கே போய் டிபன் சாப்பிடலாம்.
மோகினி : ஏன் ‘மயூரா லாட்ஜில்’ டிபன் நன்றாக இருக்குமா?
அழகியசிங்கர் : இங்கே ‘மயூரா லாட்ஜ்’தான் புகழ்பெற்றது. நான் இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொருமுறையும் இந்த ஓட்டலில் ஒரு ஊத்தப்பத்தை ஆர்டர் செய்து முழுதாக சாப்பிட நினைப்பதுண்டு. இதுவரை முடிந்ததில்லை.
ஜெகனும், மோகினியும் சிரிக்கிறார்கள்.
ஜெகன் : இத்தனைப் பெரிய இடத்தில் நீங்கள் தனியாக இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.
அழகியசிங்கர் : தனிமை சிலசமயங்களில் மோசமான எண்ணங்களையும் உருவாக்கும்
மோகினி : அலுவகத்திற்கு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : ‘தமிழ்’ பஸ்ஸில் செல்வதில்லை. சென்னையிலிருந்து பஜாஜ் வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதில்தான் தினமும் பயணம். காலை 9.10 – க்குக் கிளம்பினால், 9.45 – க்கெல்லாம் போய்விடலாம். பசுமையான ‘வாணாதிராஜபுரம்‘ என்ற ஊர். அதன் வழியாக வண்டியில் போனால் ஊட்டியில் உள்ள ஒரு சாலையில் போவது போல் இருக்கிறது. தெருவின் இருபுறங்களிலும் அடர்த்தியாக நீண்ட நீண்ட மரங்கள். அதேபோல் வேலூர் என்ற ஊர் வழியாகப் போகும்போது, பாதைகளின் இருபக்கங்களிலும் வயல்கள் சூழ ஆட்கள் நடமாட்டமில்லாத பிரதேசத்தில் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சென்னையில் கூட்ட நெரிசலில் மின்சார வண்டியில் சென்று கொண்டிருந்த என் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அலுவலகம் முடிந்து திரும்பி வர இரவு ஆனால், நான் காலையில் பார்த்த காட்சி முற்றிலும் மாறி விடுகிறது. கிராமம் வழியாக வரும்போது, நீண்ட நீண்ட பனை மரங்கள், பிசாசுக்களைப் போல் காட்சி அளித்து என்னைத் துரத்துவதுபோல் இருக்கும்.
ஜெகன் : சரி, இங்கே வந்து என்ன செய்தீர்கள்?
அழகியசிங்கர் : அலுவலகம் போய்விட்டு வந்தாலே நேரம் முழுவதும் போய்விடும். படிப்பதற்கும் எதாவது எழுதுவதற்கும் நேரம் கிடைக்காது. இருந்தாலும் Milan Kundera வின் The Unbearable Lightness of Being என்ற அற்புதமான நாவலைப் படித்து முடித்தேன். மற்றபடி தி லைப் ஆப் பை என்ற நாவலில் 70 பக்கம் வரைப் படித்திருப்பேன்। அந்தப் புத்தகத்தின் மீது என் மனம் ஒன்றவில்லை. 4 அல்லது 5 கவிதைகள் எழுதியிருப்பேன்.
மோகினி : சென்னையில் நீங்கள் இருந்திருந்தால், இதையெல்லாம் செய்திருக்க முடியுமா?
அழகியசிங்கர் : சென்னையில் வேறுமாதிரி இருந்திருப்பேன். படிப்பதும், எழுதுவதும் இயல்பாக நிகழும் நிலையிலிருந்து மாறிவிட்டதாகத்தான் நினைக்கிறேன். எழுதுகிறவர்களுக்குப் பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டுமென்ற ஆர்வம் குறைந்துகொண்டு வருவதாகத்தான் தோன்றுகிறது.
ஜெகன்: ஆனால் ஏகப்பட்ட பத்திரிகைகள் வந்து கொண்டி ருக்கின்றன॥எல்லோரும் எழுதாமலில்லை.
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு சிலரே எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதுகிறார்கள்। இலக்கியப் பத்திரிகைக்கு தீனி போடுபவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். இவர்களிடம் கேட்டு வாங்கிப் போட்டால் ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு உருவம் வந்துவிடும். ஒரு பத்திரிகையைப் பார்த்து இன்னொரு பத்திரிகை வந்து விட்டது. கணையாழி மாதிரி இன்னொரு பத்திரிகை. ‘காலச்சுவடு’ மாதிரி ஒன்று வந்து விட்டது. இன்னும் எத்தனை பத்திரிகைகள் வருமோ தெரியாது.
மோகினி : பத்திரிகைகள் அதிகரிக்க அதிகரிக்க வாசகர் எண்ணிக்கைக் குறைகிறது என்று சொல்ல வருகிறீர்களா?
அழகியசிங்கர் : வாசகர் எண்ணிக்கைப் பற்றி சொல்ல வரவில்லை। குமுதம் எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டு ஜனத்தொகையுடன் ஒப்பிடும்போது அதனுடைய வாசக எண்ணிக்கைக் குறைவு என்று என் நண்பர் ஒருவர் குறிப்பிடுவார்.
ஜெகன் : சிறு பத்திரிகைகள் வாசக எண்ணிக்கையைப் பற்றியெல்லாம் கவலைப் படாதவை.
மோகினி : ஆனால் குமுதம், ‘இலக்கியம்’, ‘பக்தி’, ‘ஜோசியம்’, ‘பெண்களுக்கான பத்திரிகை’ என்றெல்லாம் தொடங்கிவிட்டது।
ஜெகன் : அதற்கு போட்டி ஆனந்தவிகடன்.
மோகினி : குமுதம் ‘தீரா நதி’ என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகை கொண்டு வருகிறதே, அது சிறுபத்திரிகைகளுக்குப் போட்டியா?
அழகியசிங்கர் : நிச்சயமாக இல்லை। எந்தந்த மூலைகளிலிருந்தும் சிறுபத்திரிகைகள் உற்பத்தி ஆனவண்ணம் இருக்கும்। நிற்கும். திரும்பவும் வரும். குறிப்பிட்ட காலத்திற்குள் கொண்டு வரவேண்டுமென்ற நோக்கமும் இல்லை. வாசக எண்ணிக்கை பற்றி கவலைப்படவும் படாது. எப்படி ஒரு பத்திரிகை இருக்க வேண்டுமென்ற வரைமுறையும் கிடையாது.
ஜெகன் : விருட்சம் 17வது ஆண்டாக வர உள்ளது। வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் : நான் வாசகர் என்று சொல்வதில்லை। வாசிப்பவர் என்று சொல்வேன்। வாசிப்பவரே, நவீன விருட்சம் என்ற இப் பத்திரிகை தொடர்ந்து 16 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அடுத்த இதழிலிருந்து 17 வது ஆண்டு துவங்குகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்குள் விருட்சத்தை நடத்துவது சாத்தியமில்லை. அதனால் விருட்சம் இதழ் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு, உதாரணமாக 17வது ஆண்டு என்றால் இதழ் 65 முதல் 68 வரைக்கான சந்தாவாக ரூ.40.00 அனுப்புங்கள்.
ஜெகன், மோகினி : ‘முதலில் நாங்கள் எங்கள் நன்கொடையை உங்கள் பத்திரிகைக்கு அளிக்கிறோம்,’ என்று நன்கொடை செக் அளிக்கிறார்கள்।
(செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் வெளிவந்த தலையங்கக் கட்டுரை)

இடம் ஒதுக்கப் படுகிறது

சில செருப்புகளுக்கும்
ஒதுக்கப் பட்ட பொருட்களுக்கும்
நடுவே ஒதுக்கப் பட்டிருந்தது
அந்த இடம்!

காண்பாரற்றுக் கிடந்தது
ஆங்கே ஓர் ஓவியம்
சற்றே சாயம் போன ஓவியம்
ஆங்காங்கே கொஞ்சம்
கிழிந்து போனதும் கூட
பல வெயிலுக்கும்
சில மழைக்கும்
வாடை காற்றுக்கும்
கிடந்து கிடந்து
நொந்து நொந்து
அந்த ஓவியம் பெரிதும்
பாதிக்கப் பட்டிருந்தது!

அந்த ஓவியத்திற்கு எதிரே
அழகிய புகைப் படமாய்
ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது
அதில் சில நிஜங்களின்
நிழல்கள் குடும்பமாய்
நின்று கொண்டிருந்தன
அதிலிந்த ஓவியத்தின்
நிழலும் பிரதிபலித்தது!

“செல்லம், சாப்பிடுடா கண்ணா,
இல்லேன்னா அப்பா வந்ததும்
என்னைத் திட்டுவாங்க” என்று
உள்ளே இருந்து வந்தகுரல்
வெளியே உள்ள ஓவியத்தின்
பழைய வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க வைத்தது!

ஓவியத்தின் அருகே
செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு
உள்ளே நுழைந்த காலடிச்
சத்தத்தில் விசும்பியது
சற்றே இப்பொழுது
பசிக்கும் அந்த சுமந்த வயிறு

“டேய், என்ன சாப்பிட மாட்டேங்குற
நல்லா சாப்பிட்டாதான்
அப்பா மாதிரி ஆகலாம்!”

அந்த ஓவியத்தின்
அருகே இந்தப் பெற்றோர்களுக்காகவும்
ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது!

இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை?காலையில் ஜாகிங்க் செல்லஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்-என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன்எதை எனக்குக் காண்பிப்பதென்றும்கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறுநான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன… எங்கள் வீட்டு ஜோச்யர்எட்டில் சனியென்றுஎன் சனி காலைகளை மற்றும் மாலைகளையும்முடிவு செய்தார்.. இந்த வாரம் எப்படிநான் வணங்க வேண்டிய கடவுளரையும்சொல்ல வேண்டிய தோத்திரங்களையும்முடிவு செய்தது.. என் காலைகளைதண்ணீர் வரும் நேரமும்பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும்சபர்பன் ரயிலின் டைம்டேபிளும்என் எதிர் வீட்டு நண்பனும்மனைவியின் வேகமும்இன்னம் எத்தனையோ-பல உதவாவிட்டாலும்உபத்திரவம் பண்ணமுடியுமே- என் நாளைஎன் மானேஜர் உட்பட பலர்.. யாருக்கு என்ன-எல்லோரும் இதே பாடானால்இது ஒன்றும் புதிய பாடல் அல்லவேஆனாலும் புதுப்புது ராகங்கள்விதவித தாளங்கள்வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன! என் ஷூ சரியாகவே யிருந்ததுப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன-என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில்எனக்கு மட்டுமின்றிதாய் மற்றும் மனைவி மக்களுக்குஇதமாகவே யிருந்தது…. எல்லோருக்கும் நான்என் மனோ வாக்கு காயங்களையும்ஒப்படைத்து விட்டுஅதன் சௌகரியங்களிலேயேமுணுமுணுத்துக் கொண்டே…..ஏன் வீண் பரிக்ஷை?- பகல் மயக்கம்உன்னிடம் அது இல்லைஇனியும்.எங்கிருந்தாலும் பரவாயில்லைமயிலையானாலும்சிங்கபூரானாலும்சாண்டியாகோவானாலும்-உண்மையாகத்தான்இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல- பல வருடங்கள் முன்புநான் சொல்வதுண்டுகோவில் வாசற்படிகளில்வெளியேவரும்போதுஉட்கார்ந்து கொண்டு-என் அன்னை பார்வதிஅப்பா பரமேச்வரன்சிவபக்தர்கள் என் பந்துக்கள்மூவுலகமும் என் சொந்ததேசமேஎன்று- என் அப்பா இருந்தார்அம்மா இருந்தாள்மாமாக்கள், மாமிகள்,அத்தைகள்,சித்தப்பாக்கள், சித்திகள்,பாட்டன்மார்கள்,கொள்ளு சொந்தங்கள்,பலர், பலர்…… தெரு முனையில்பெரியார், அண்ணா, சிவப்பு கொடிஎன்றுபல கூட்டங்கள் உண்டுஅம்மன் கோவிலில் உத்சவங்கள்உண்டுபுலவர் கீரன் சொற்பொழிவுகள்அந்தந்த சீசன் களில்உண்டு..நெட்டுமில்லை, சர்ப் செய்வதுமில்லைகூகிள், யாகூ தேடல்கள் யாரறிவார்? ஏதோ பெயர்களும், கதைகளும்எல்லாமே எப்படியோ வந்தனச்லோகங்களும், கீர்த்தனைகளும்ப்ராணாயாமமும்ஒரு தெரபியாகவோஆல்டெர்னேட் மருத்துவமென்றோபெயர்புனைந்து வாராதுவந்தன- கோவிலைச்சுற்றிதெருக்கள்திசைபெயருடன் ரதம் கொண்டு-கடவுள் புறப்பட்டுவீதிகளில் என் கொள்ளுப் பாட்டி காணயென்றேஉலா வருவார்- அந்த வீதிகளில்அந்த புழுதியிலும் மண்ணிலும்நான் புரண்டுஉடன் கொண்டுஅத்தனை செக்யுரிடி செகிங்க்எல்லாவற்றையும் தாண்டிஉலகம் முழுவதும்மூன்று லோகமும்சென்றது- இப்போதுகலிபோர்னியாவும்கோயம்புத்தூரும்ஒன்றேஎங்கு வாழ்ந்தாலும்யாவரும் ஒரு விருந்தினர் போன்றே எந்த ஊரின் ரதத்தெருக்களிலும்பழய புழுதிகள் மண் என்றுசுத்தம் செய்து அப்புறப்படுத்தவையெல்லாம்மணல் மூட்டைகளாகசேண்ட் எம்பாங்க்மெண்ட்ச் என்று வடிவுகொண்டு… கோவில்கள் அதீத செக்யுரிடி வட்டங்களானது..யாவாருமே இங்கு சந்தேகப்படவேண்டியவர்களே-சுற்றும் முற்றும் நம் பார்வைகள்சந்தேகப் பார்வைகளாகவே ஆனது… இங்கு தூக்கங்களின் ஆட்சிபயங்கரக் கனவுகள் மீது போயேபோனது-பகலில் விழித்து இருப்பதேதன்னைத் தானேசந்தேகப்படவே யென்றானது

அண்ணாவின் உருக்கம்

அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன்.
மாப்படுகை வழியாகச் செல்லும் பாதையில் பெரும்பாலும் அபூர்வமாகவே வாகனங்கள் வரும் போகும் நடமாட்டம் இரவென்றால் குறைவு பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில் சிறு சிறு மாணவ மாணவிகள் அவர்களுக்குள்ளே தென்படுகிற கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்….வண்டியில் செல்லும் நான்ஜாக்கிரதையாகப் பயணிப்பேன் ஒவ்வொருமுறையும் பார்த்துக் கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து அண்ணா உயிரோடு தோன்றினால் சொல்லியிருக்கலாம் கம்பீரமான அச்சிலையில் ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி நடந்து செல்வதுபோல் தோற்றம்….சிலை வடித்தவன் அண்ணாவைப் பார்த்திருக்கலாம் சிலையின் பக்கத்திலேயே கழக கண்மணிகளின் கூடாரம் ஆனால் சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா சொன்ன மந்திரம் என்று இவர்கள் சொல்லித்தான் தெரியும் ஒவ்வொருமுறையும் நான் போகும்போது சிலையை ஒருமுறையாவது பார்த்துவிட்டுச் செல்வேன் அண்ணா முணுமுணுப்பது காதில் விழுகிறது நான் என்ன பாவம் செய்தேன் எனனை இங்கே நிறுத்தி விட்டார்களே என்று புராதான அழுக்கென்றால் அப்படியொரு அழுக்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது பறவைகளின் களிப்பூட்டும் சம்பவம் எல்லாம் அண்ணாசிலையின் மீது எப்பவோ கழுத்தில் இட்ட நீண்ட மாலையொன்று உதிர்ந்து போகாமல் தெரு தூசிகளுடன் கருத்துக் கிடக்கும் அண்ணா என்னசெய்வார் பாவம் முகத்தில் திட்டுத்திட்டாய்த் தெரியும் வெண்மை அழுக்குப் போக எத்தனை ஆண்டுகள் இன்னும் ஆகுமோ? தினமும் பார்ப்பதால் எனக்குத் தெரிகிறது அண்ணா கடுகடுவென்று நிற்கிறாரென்று.

‘எழுத்து’ பேட்டி

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு. தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார். வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார். 1933-ல் ‘கலைமகள்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான ந.பி. அதற்கு முன் ‘சயன்ஸூக்கு பலி’ என்ற கதையை ‘கலைமகள்’ லேயே எழுதி இருக்கிறார். அதுதான் அவர் எழுதிய முதல் கதையாகும். 1923 லேயே இங்கிலீஷில் ‘மோஹனி’ யையும் ‘ஆராய்ச்சி’ யையும் எழுதியிருக்கிறார். 1938 பிற்பகுதியில் ஹனுமான் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்து சுமார் ஏழுமாத காலத்திற்குப் பின் அதனின்று விலகி, அறநிலையப் பாதுகாப்பு இலாகா நிர்வாக அதிகாரியாக உத்யோகம் பெற்று பல கோயில்களில் 1956 வரை வேலை பார்த்து ரிட்யராகி சில வருடங்களாக சென்னையில் ‘நவ இந்தியா’ தினசரிப் பத்திரிகையில் உதவியாசிரியராக வேலை பார்த்து வருகிறார். ‘கலைமகள்’ல் பரிசு பெற்றாலும் பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர் ஆனார். கு ப ராவுடன் சேர்ந்து இரட்டையராக, ‘கலைமகள்’க்கும் இன்றுவரை அபிமானத்தொடர்பு இருந்து வருகிறது. பிச்சமூர்த்தி புதுக் கவிதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறார். கோர்டில் பலர் முன்னிலையில் வாதாடி பழக்கம் உள்ள பிச்சமூர்த்திக்கு மேடை ஏறிப் பிரசங்கம் செய்வது அவ்வளவாக பிடிப்பதில்லை. குறிபிட்ட கூட்டங்களில் தவிர அவர் அதிகமாக கலந்து கொள்வதும் இல்லை. பேசுவதும் இல்லை. பேசினாலும் ரத்னச் சுருக்கமாகத்தான். பிச்சமூர்த்தி நடுத்தர உயரமும் பாங்கான உடல் அமைப்பும் வாய்ந்தவர். நல்ல சிவப்பு நிறம். நரைத்த தலைமயிரும், தலைமயிரை விட வெளுப்பான தாடியும் உள்ளவர். கண்களுக்கு மேல் சற்று அதிகமாக தொங்குவது போன்ற புருவங்கள். சற்று சிவப்பேறிய ஒரு உக்ரத்தோற்றக் கண்கள். ஆளைச் சுடுவதுபோன்ற தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பேச்சில் கொச்சையின் செல்வாக்கு. அவரை நாங்கள் பேட்டி காணச் சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். அவரது அறையைச் சுற்றி நோட்டம் விட்டோம். சுற்றி புஸ்தகம். காகித மயம். ஒழுங்கில்லாமல் அடுக்கப்பட்டவை. அங்கங்கே தெரியும் காகிதங்கள் அவர் எழுதி வைத்திருக்கும், எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளைக் காட்டின. பல மேல்நாட்டு பிரபல எழுத்தாளர்களைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தபோது, பிச்சமூர்த்தி இந்த இடத்திலிருந்து கதை எழுதுகிறார், கவிதையும் எழுதுகிறர் என்று பட்டது. முன்கூட்டியே பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பிச்சமூர்த்தி வெளியே இருந்து வந்ததும் வராததுமாக காரியத்தில் முனைந்துவிட்டோம். இந்த மாதிரி பேட்டி எங்களுக்கு புதிசு. தமிழில் முதல் வரிசையைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு எழுத்தாளரை பேட்டி காண்கிறோம். இலக்கியத் தரமாக பேட்டி இருக்க வேண்டும் என்ற ஆசை, கவலை, எப்படி அது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பேட்டி ஆரம்பித்ததுமே ஒரு சில கேள்விகளுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏறிவிட்டது. அதற்குக் காரணம் பிச்சமூர்த்தியேதான். எங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சுருக்கமாக, அழுத்தமாக, விவகாரமாகச் சொல்லி வந்தது மட்டுமல்ல, அடுத்த கேள்வி நாங்கள் கேட்பதற்கு தூண்டக்கூடிய வகையில், நாங்கள் என்னெல்லாம் உத்தேசித்திருந்தோமோ, அதை பொருத்தமான இடத்தில் கேட்கச் செய்ய ஏதுவாக எங்களுக்கு வழிகாட்டி இழுத்த மாதிரி இருந்தது அவரது பதில்கள். அவர் அதிகம் பொதுப்படையாக இலக்கிய விஷயங்களை விவாதிப்பதில் கவனமாக இருந்தார். குறித்த ஒன்றிரு விஷயங்களுக்கு அவர் பதிலைப் பெற முடியவில்லை. பேட்டி சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்றது. பிச்சமூர்த்தியின் பதில்கள் திட்டவட்டமாக முன்கூட்டியே அலோசித்து வைக்கப்பட்டு இருந்ததுபோல் தக்க வார்த்தைகளில் வந்து கொண்டிருந்ததால் அவைகளைத் தொடர்ந்து குறித்துக் கொள்வதும் எளிதாக இருந்தது. அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக பிச்சமூர்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டு போகிற உணர்ச்சியுடன் திரும்பினோம். சி சு செல்லப்பா – சு சங்கரசுப்ரமண்யன் (வாழ்க்கைக் குறிப்புகள் சம்பந்தமான விசராணைக்குப் பிறகு பேட்டி ஆரம்பமாகியது.) பேட்டியாளர் : நீங்கள் பி.ஏ யில் பிலாசிபி எடுத்துக்கொண்டதாக சொன்னீர்களே, அதனால்தான் உங்கள் எழுத்திலும் அதன் சாயை அதிகம் காணப்படுகிறதோ? ந.பிச்சமூர்த்தி : அது காரணமில்லை. எங்கள் குடும்பத்தில் பரம்பரையாகவே இந்தப் போக்கு இருந்து வந்திருக்கிறது. தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக இருந்திருக்கிறார். பேட்டியாளர் : நீங்கள் தாடி வைத்துக் கொண்டதற்கு இதுதான் காரணமா? ந.:(கொஞ்சம் நீண்ட மௌனம்) : 1933þல் உள் நெறியை மேற்கொண்டேன். அதன் சின்னமாக ஏற்பட்டதுதான் தாடி. உள்நெறிதான் எந்த மனிதர்க்கும் இயற்கையான வாழ்வு என்றே நினைக்கிறேன். பேட்டியாளர் : ஆமாம், வக்கீல் தொழில் பொருந்தாததால் தொழிலை மாற்றிக் கொண்டேன் என்றீர்களே. அப்படியானால் எழுத்தாளராக ஆனது இந்த மாற்றத்துக்கு தூண்டுதலாக இருந்ததா? ந.பிச்சமூர்த்தி : எழுத்தினால் அதை விட்டுவிட்டேன் என்பது காரணமல்ல. எழுத்து நினைப்பு என்னைப் பற்றிய மட்டில் பால்ய முதலே இருந்தது. காலேஜில் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருந்ததுக்கு என் பரம்பரை காரணமாக இருக்கலாம். பரம்பரை என்ற உயிரியல் தத்துவம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை ஆட்கொண்டு தீரும். இந்த நியதியை தப்பமுடியாது. என் தந்தை சகலகலா வல்லவர். ஒரு மேதை. அவருக்குள்ள மற்ற திறமைகளுடன் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் ஆகிய பாஷைகளில் சாகித்யம் இயற்ற வல்லவர். எனக்கு ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியாது. துரதிருஷ்டவசமாக அவர் வித்தை எதுவும் எனக்கு வரவில்லை. பேட்டியாளர் : ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா? ந.பிச்சமூர்த்தி : இன்றும் கோவிலுக்குப் போவதைவிட பெரியோர்களை அண்டுவதே மேல் என்று நான் நினைக்கிறேன். இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால் என்னையும் மீறியே அவர்களுடன் கலந்து விடுவேன். பேட்டியாளர் : இதனால்தான் அவர்கள் சம்பந்தப்பட்டதாக உங்கள் கதைகள் அதிகம் இருக்கின்றனவோ? ந.பிச்சமூர்த்தி : இருக்கலாம். அதுவே காரணமாக இருக்கலாம். இத் தொடர்புகளால் உள்ளொளியையும் நல்ல பயனையும் அடைந்திருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்லுவேன். அவர்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆற்றில் செல்லும் கிளை போல குறிப்பின்றி புரண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன். பேட்டியாளர் : இந்தக் குறிப்பு வாழ்க்கையில் ஏற்பட்டதுபோலவேதான் உங்கள் இலக்கியப் படைப்புகளிலும் பிரதிபலிக்கிறதா?ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் வாழ்வின் ஒரு துறையிலான இயக்கம் ஆனபடியால் இலக்கியம் பாதிக்கப்பட்டேதான் தீர வேண்டும். வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பேசுவதை நான் ஏற்கமாட்டேன். வாழும் வகை காணும் முயற்சியைவிட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்ப மாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம். மேதை இருந்து அந்த இன்பத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமானால் அதுவும் நல்லதுதான், முடியாவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை. பேட்டியாளர் : நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் கலை இன்பம் என்று தனியாக பிரிப்பதாகத் தெரிகிறது. வாழ்க்கை இன்பம் வேறு… ந.பிச்சமூர்த்தி : இந்து நாகரீகம் இலக்கியத்துக்கு இரண்டாவது ஸ்தானம் தான் கொடுத்திருக்கிறது. முதல் ஸ்தானம் ஆன்ம வேட்கைக்கு. நான் ஒரு இந்து. இந்த அடிப்படை நோக்கில் ஏற்படுகிற விளைவுகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும். பேட்டியாளர் : ஆனாலும் தங்கள் படைப்புகளில் ‘கலை இன்பம்’ எடுப்பாக கிடைக்கிறதே.ந.பிச்சமூர்த்தி : உள்ளபடியே நான் கருதும் கலை இன்பத்திற்கும் ஆன்ம இன்பத்திற்கும் தரத்தில் வித்தியாசம் இராது. பேட்டியாளர் : (குறுக்கிட்டு) நானும் புலனின்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை. ந.பிச்சமூர்த்தி : அது சரி…சொல்லை மந்திரம் என்பார்கள். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயலுவதுதான் இலக்கியம். அந்த இடத்தில் உலகின் சிகரமும் ஆன்ம உலகின் சிகரமும் இணைகின்றன. பேட்டியாளர் : அப்படியானால் மேல் நாட்டு இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இந்த இணைப்பு இல்லையா? ந.பிச்சமூர்த்தி : மேல்நாட்டு இலக்கியத்தில் இந்த நோக்கு இல்லை என்று சொல்லமாட்டேன். பேட்டியாளர் : அறிவு நிலை அளவுக்குத்தான் உண்டு. ஆன்மிக நிலையளவுக்குக் கிடையாது என்று கூறப்படுகிறதே. ந.பிச்சமூர்த்தி : மேல் நாட்டில் ஒரு பகுதி இலக்கியம்தான் உலகியல் இன்ப துன்பங்களே முடிவானது என்று கருதி இயங்குகிறது. டால்ஸ்டாய், மாரிஸ் மெடர்லிங், பிளேக், ஷெல்லி, யீட்ஸ், ஏ.ஈ.இ எமர்ஸன், விட்மன், எட்வர்ட் கார்ப்பெண்டர் ஆகியோர் போல், சொல்லப்போல், காஃப்கா தாமஸ் மான் போன்றவர்கள்கூட இதே ஆன்ம வேட்கையைத்தான் இலக்கிய முறையில் அமைத்திருக்கிறார்கள். பேட்டியாளர் : ‘அன்னா கரீனினா’ எழுதிய டால்ஸ்டாயையும் சேர்த்தா சொல்லுகிறீர்கள் . முழுக்க முழுக்க நடப்பியல் சம்பந்தப்பட்டதல்லவா அன்னா கரீனினா? ந.பிச்சமூர்த்தி : ஒரு ஆசிரியரின் ஒரு படைப்பில் இந்த தொனி இல்லாமல் போனதைக் கொண்டு அடிப்படைத் தன்மையே தகர்ந்து விட்டது என்று கருதக்கூடாது. டால்ஸ்டாயைப் பற்றிய வரையில் மேல் நாட்டு முறையில் இலக்கியத்தை அணுகுவது தவறு என்று அவர் மனமாற்றம் பெற்ற பிறகு உணர்ந்தார் என்பது தெரிந்த விஷயம். பேட்டியாளர் : ஆகவே மேல் நாட்டு முறையில் இலக்கியம் படைப்பது சம்பந்தமாக நாமும் அதேமாதிரி முடிவுக்குத்தான் வரவேண்டுமா? ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் சம்பந்தப்பட்ட மட்டில் தர்க்க பூர்வமான விவாதங்கள் செய்வதால் புத்தகங்கள் பெருகலாமே தவிர அதிக உண்மைகள் தெரிந்து விடுவதில்லை. ஏனென்றால் இலக்கியமும் வாழ்வைப்போல நம்மை யறியாமலே, ஒரு வேளை – நம்மையும் மீறி உந்தித் தள்ளும் ஒரு சக்தி…அல்லது எதுவோ… பேட்டியாளர் : இதுவரை பொதுப்படையாக பேசிவிட்டோம். தமிழ் இலக்கியத்துக்கு வருமுன் ஒரு கேள்வி. தாகூருக்கும், உங்களுக்கும் ஒப்பிடுதல் செய்கிறார்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?ந.பிச்சமூர்த்தி : தாகூருக்கு எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ படிக்காதஅளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில்தான். ஆனால் காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி தாகூர் ஒருவரே என்று சொல்வேன். பேட்டியாளர் : தாகூர் சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்திருப்பது போல் நீங்களும் கொடுத்திருப்பதாக விமர்சகர் க நா சுப்ரமணியம் கூறியிருக்கிறார். இந்திய உருவம் என்று தனியாகக் கூறுவதற்கு இருக்கிறதா? நமது உருவ முயற்சி பற்றியும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால்….ந.பிச்சமூர்த்தி : நாமரூபங்களுக்கு இந்துக்கள் பெருமை தரக்கூடாது. உடம்பைப் போற்றுதல் உயர்ந்த பண்பாகாது. ‘ஊனுடம்பு ஆலயம். உள்ளம் திருக்கோவில்’ என்றார் திருமூலர். உருவத்திற்கு உள்ள பெருமை எல்லாம் உயிருக்குள்ள சக்தி தான். உருவத்திற்கு அழகு ஏற்படுவதே உயிரின் இயக்கத்தினால்தான். நோய்ப்பட்ட உயிரில் உருவ அழகைக் காண முயல்வது குதிரைக் கொம்புக்காக புறப்படும் வேட்டையாகும். ஆகவே உருவம் என்று இலக்கியத்தில் எந்தத் துறையில் விவாதத்தை எழுப்பினாலும் பேசினாலும் அதை நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்திய நோக்கு என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதற்குத் தகுந்த இலக்கிய அமைப்புதான் ஏற்படும். தமிழ் இலக்கியத்துக்கும் இந்தக் கருத்து பொருந்தும். பேட்டியாளர் : இன்றையத் தமிழ் இலக்கியத்தில் உள்ள உருவங்கள் மேல் நாட்டு முறையைப் பின்பற்றியதா? நம் மரபு உருவங்கள் எந்த அளவுக்கு இருந்திருக்கின்றன? சோதனை என்று பேசப்படுவது எந்த அளவுக்குச் சரி? ந.பிச்சமூர்த்தி : உயிரானது தன்னைத்தானே தின்று வாழ முடியாது. தனக்குப் புறம்பாக உள்ள பொருள்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம்தான் அது வளர முடியும். அதாவது பழயதில் புதுமை கலப்பதுதான் உயிரியக்கம். பழந்தமிழ் மரபுகள் வளரும்போது அல்லது வளர விரும்பும்போது இந்த இயற்கை நியதிகளுக்கு ஒப்ப பிறநாட்டு இலக்கிய மரபுகளையும் ஜீரணம் செய்து கொள்ளப் பார்க்கிறது. தமிழ் நாட்டு சிறுகதை உருவம் என்று சொல்ல எதுவும் இல்லை. அமெரிக்க உருவம், இங்கிலீஷ் உருவம், என்றெல்லாம் சொல்வது பயனில்லாத பாகுபாடுகள். தெளிந்த ரசனையைக் காட்டினால் உருவம் நன்றாக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். குழம்பிய ஜலத்தில் முகம் தெரியாது. அப்போது இலக்கியம் கண்ணாடி ஆகாது.பேட்டியாளர் : இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். ந.பிச்சமூர்த்தி : உங்கள் கேள்வியிலேயே தவறு இருக்கிறது. நீங்கள் சொல்லுவதிலே ஒரு முக்கிய விஷயம் இருப்பதை உணர்ந்தீர்களோ கண்ணாடி மனிதனை அப்படியே காட்டக் காணோம். இடது புறமாக இருப்பது கண்ணாடியில் வலதுபுறமாகவும், வலது புறமாக இருப்பது இடது புறமாகவும் தெரியும். ஆகவே கண்ணாடிகூட மாற்றத்தான் செய்கிறது. இலக்கியம் கண்ணாடியை விட அதிக மாற்றத்தைத் தருகிறது. இன்னொரு விஷயத்தைக்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துக்கொள்ளலாம். கருப்பையிலிருந்து பிறக்கும் குழந்தை தலைகீழாகத்தான் பிறக்கிறது. பூமியில் வந்தவுடன் நிமிர்கிறது. இலக்கியத்தில் ஆசிரியர் கருப்போல குறுகி அணுவாகி வியாபித்து விடுகிறான் ஆசிரியன் அகண்டாகாரம் அடையும் சாதனையில் எந்த இலக்கியமும் ஒரு அறிகுறி அல்லது ஒரு மைல்கல். பேட்டியாளர் : சமீபத்தில் உங்கள் மணிவிழா பாராட்டுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பாம்பு அடிக்கடி சட்டை உரித்துக் கொள்வதுபோல் எழுத்தாளன் தன்னை புதுசுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றீர்களே.. தமிழ் எழுத்து உலகில் அந்தச் சட்டை உரிப்பு எந்த அளவுக்கு இன்று நடைபெறுகிறது? பாரதி, ராமையா மணிக்கொடி காலத்தில் நடந்த சட்டை உரிப்பு மாதிரி? இன்று பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தில்…ந.பிச்சமூர்த்தி : தமிழ் நாட்டில் இலக்கிய முயற்சிகள் எல்லாவற்றையுமே நான் வரவேற்கிறேன். சைக்கிள் சவாரி செய்பவன் பயிற்சி காலத்தில் தவறி விழுந்தால் அவனை ஏளனம் செய்வது தவறு. அவனுக்கு ஊக்கம் ஊட்டத்தான் வேண்டும். அவன் சொல்லும்வழி தவறாக இருந்தால், அதை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமை. எத்தனையோ லட்சக் கணக்கான முயற்சிக்குப் பிறகுதான் இயற்கை, மனிதன் என்ற ஒன்றை சாதித்தது. புதிய தமிழ் இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு ஆகட்டுமே. எல்லோரும் சரியான நோக்கோடு முயலுட்டுமே. அவற்றின் தரத்தைப் பற்றி முன்கூட்டி முடிவுகட்ட வேலை யாருடையதும் அல்ல. அதை அனுபவிக்கும் சந்ததியார் அந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள். எப்பேற்பட்ட விமர்சனமும் ஒருவருடைய அபிப்பிராயம்தான் – அதாவது அடிப்படையான கொள்கையுடன் பிணைக்கப்படாத வரையில். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேனா? பேட்டியாளர் : நாங்கள் பின்னர் கேட்க இருந்த கேள்விக்கு பதில் இப்போதே கிடைத்து விட்டது. அதாவது விமர்சனம் பற்றி. தமிழ் எழுத்துலகில் படைப்பாளி சம்பந்தப்பட்ட மட்டில் சட்டை உரிப்பு. ந.பிச்சமூர்த்தி : என்னைப் பற்றியே பேசலாம் என்று நினைக்கிறேன். காத்தாலும் அழித்தாலும் இலக்கியமே சரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். பல காரணங்களால் நான் இக் காரியத்தை செய்யாமல் இருந்து விட்டேன். இலக்கிய ஆசிரியன் எவனும் தன்னை இலக்கியத்துக்கு என்று ஒதுக்கி வைப்பானானால் அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய வழியை அவன் காண்பான். சட்டை அப்போது தானாகவே உரியும். இந்த சமர்ப்பணம் என்பது ஆன்மத்துறையில் எவ்வளவு அவசியமோ அதைவிட இன்னும் அத்யாவச்யம் இலக்கியத்திலும். எழுதிப் பிழைப்பது என்பதைப் பற்றி நான் பேசவே இல்லை. மதத்திற்கு என்ன பெருமை கொடுப்பார்களோ அதற்குக் குறையாதபெருமை உண்மையான இலக்கியத்துக்கும் உண்டு. பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டியினர் இந்த சட்டை உரிப்பு செய்து வந்திருக்கிறார்களா? ந.பிச்சமூர்த்தி : கோஷ்டிகளைப் பற்றிப் பேசுவது என் உடன்பாடு அல்ல. சட்டை உரிப்பது என்றால் புதிய முயற்சிகள் என்றுதான் பொருள். லட்சியத்தைக் குறைத்துக் கொண்டால் பிழைப்பு நிலைக்கு இறங்கி விடுகிறோம். பிழைப்பு நிலைக்கான சாதனம் இலக்கியம் என்று நினைப்பு ஓரளவு தமிழ்நாட்டில் இன்று பரவி இருக்கிறது. எதை நம்பி வாழ்கிறோமோ அது சோறு போட வேண்டும் என்பது நியாயம்தான். சோறு போடவில்லை என்பதற்காக விட்டுச் செல்ல முடியாது. அதற்காக தரத்தையும் இறக்கிவிடக் கூடாது. பேட்டியாளர் : குழுக்களாக இருந்து இலக்கியம் சாதிக்க முடியுமா? வட்டத்தொட்டி, வெள்ளி வட்டம்….ந.பிச்சமூர்த்தி : நான் அதை நம்பவில்லை. உலகத்தைப் பார்ப்பது என்றால் என் சொந்தக் கண் பார்த்தாலொழிய எனக்குத் தெரிவதில்லை. நான் உண்ட உணவை பிறர் ஜீரணம் செய்ய முடியாது. இலக்கியம் கலை, உருவம் பெறும் வரையில் அது தனி மனிதனின் வேதனையோ ஆவேசமோ அல்லது இன்பமோ ஆகும். அதற்குப் பிறகு இலக்கியாசிரியனுக்கும் அந்தப் படைப்புக்கும் சம்பந்தம் இல்லை. பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டி என்று ஒன்று… ந.பிச்சமூர்த்தி : கிடையாது. பேட்டியாளர் : பின் ஏன் அப் பெயரை அடிக்கடி பிரஸ்தாபிக்கிறார்கள்? ந.பிச்சமூர்த்தி : பொதுவான போக்கு இருந்ததைக் கொண்டு ஏதோ கோஷ்டியாக இருந்தது போல தவறுதலாய் பேசி வருகிறார்கள். புதுமைப்பித்தனுக்கும் கு ப ரா வுக்கும், எனக்கும் எந்தவிதத்தில் ஒற்றுமை இருக்கிறது. பேட்டியாளர் : கு.ப.ரா பெயரை பிரஸ்தாபித்தீர்கள். உங்களை ‘இரட்டையர்’ என்கிறார்களே எப்படி? ந.பிச்சமூர்த்தி :கும்பகோணத்தில் 3, பிள்ளையார் கோயில் தெரு, எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். நான் காற்றாடி கட்டிவிட்ட நாள் முதல், அவன் தவளைக் குஞ்சுகளை நெருப்புப் பெட்டியில் போட்டு விளையாடின நாட்கள் முதல் இணைபிரியாத தோழர்கள்.பேட்டியாளர் : (குறுக்கிட்டு) அதுதான் கு.ப.ராவின் ‘பாட்டியின் ஆதங்கம்’ என்ற கதையில் அந்தக் குழந்தைகள் தவளை விளையாட்டு பிரஸ்தாபம் இருக்கிறதோ? ந.பிச்சமூர்த்தி :(சிரித்து) அப்படியா? இருக்கா? அதற்குப் பின் படிப்புக்காக வெளியூர் போனபோதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்யோகம் பார்த்த காலத்திலும்கூட கும்பகோணம் வரும்போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம். வ.ரா.தான் எங்களை இரட்டையர் என்றார். பேட்டியாளர் : பாரதிக்குப் பின் வ ரா ஒரு இலக்கிய சக்தியாக விளங்கினாரே. அதைப்பற்றி அதிகம் இப்போது பிரஸ்தாபிக்கப்படுவதில்லையே. வ ராவின் இலக்கிய சாதனை பற்றி உங்கள் கருத்து? ந.பிச்சமூர்த்தி : வ ரா சில புதிய துறைகளைக் கையாண்டார். வாழ்வில் பாமர மக்கள் என்று கூறப்படுவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் இடம் சம்பாதித்துத் தர முயன்றவர்களில் முதல்வர் என்றே அவரைப் பற்றிச் சொல்லலாம். அவருடைய நடைச் சித்திரத் தொகுப்பு இதற்கு சிறந்த சான்று. இங்கிலிஷ் ஆசிரியர் ஏ ஜி ஜி செய்த காரியத்தை வ ரா தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் அவர் ஜான்சனைப் போன்றவர். அவருடைய எழுத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்தது வரா, என்னும் ஜீவன். அந்தச் சக்தியின் கவர்ச்சி முழுவதும் அவருடைய இலக்கியத்தில் காணப்படுவதாகச் சொல்லமுடியாது. ஒரு விதத்தில் வசனத்திற்கு புதிய நியதிகளை உண்டாக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றே சொல்லலாம். தனித்துச் சுருங்குவதைவிட விரிந்து பரவுவதே அவரது எல்லாவிதத்திற்குமான கொள்கை. பேட்டியாளர் : பாரதி, வ.ரா வுக்குப் பிறகு அத்தகைய சக்தி இன்று தமிழ் நாட்டில் இல்லாதது இன்றைய மந்தத்திற்கு காரணமா? சாதனைக் குறைவுக்குக் காரணமா? ந.பிச்சமூர்த்தி : தனி ஜீவன் அரசியலில் எதையும் சாதிக்கலாம். ஆனால் இலக்கயத்தில் எந்த ஜீவனின் புது முயற்சியைப் பார்த்தாலும் அந்த முயற்சிக்கு இட்டுச் செல்லும்பாதை அதற்கு முந்திய இலக்கியத்தில் இருப்பது காணப்படும். ஏற்கனவே இலக்கியம் தனி ஜீவனின் முயற்சி என்று சொல்லி இருக்கிறேன். பாரதி புதிய தமிழ் இலக்கியத்தை உண்டாக்கினார் என்று சொல்வதைவிட புத்துயிர் பெற்ற தமிழ் நெஞ்சம் பாரதியாக குரல் கொடுத்தது என்று கூற வேண்டும். அதேபோலத்தான் வ.ராவும். பேட்டியாளர் : இப்போது அந்த மாதிரி தொனிக்கும் குரல்?ந.பிச்சமூர்த்தி : இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக் கருத்துக் குழப்பங்கள் காரணமாக விரிந்து உயர்ந்து தலமை தாங்க வேண்டியவர்கள் சுருங்கி நின்று விடுகிறார்கள். பேட்டியாளர் : இதனால் இலக்கிய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை….? ந.பிச்சமூர்த்தி : அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழன்னை ஓயாத இளமை பெற்றவள். அவள் பொலிவை பல விதத்தில் காண்கிறோம். எல்லாவிதப் பொலிவையும் ஒருவர் அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்ல இயலாது. அவரவர் போக்குப்படி தமிழன்னையை வணங்குவதை யாராலும் தடுக்க முடியாது.பேட்டியாளர் : கு.ப.ரா வைப்பற்றி ஒரு கேள்வி. அவர் ஒரு மாதிரியான ‘செக்ஸ்’ கதைகள் மாப்பஸன் மாதிரி எழுதினதாக அபிப்பிராயம் கூறப்படுகிறதே. இந்த ‘செக்ஸ்’ விஷயத்தை ஒரு இலக்கிய பிரச்னையாக அவர் கையாண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ந.பிச்சமூர்த்தி : எனக்குத் தெரிந்தவரையில் ராஜகோபாலன் மாப்பஸன் அதிகம் படித்திருந்தான் என்று சொல்வதிற்கில்லை. அவன் கதைகள் பச்சையாக இருக்கின்றன என்று கூறுவதுபற்றி நான் ஒன்று சொல்வேன். வாழ்வு பச்சையாக இருந்தால் இலக்கிய ஆசிரியன் என்ன செய்வான்? அவைகளை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைக் கையாளக் கூடாதா என்று கேட்டால் அது அந்தந்த ஆசிரியரைப் பொறுத்த விஷயம். வேதனையைத் தாங்கும் சக்தி ராஜகோபாலனுக்கு கிடையாது. அவன் உடம்பு மிகவும் நோஞ்சல். பெண்கள் படும் வேதனை அவனால் தாங்க முடியாது. ஆகவே பெண்ணின் வேதனையே அவனுடைய இலக்கிய விஷயமாயிற்று. பேட்டியாளர் : உங்கள் கதைகளுக்கு எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் ஆதாரமா? ந.பிச்சமூர்த்தி :எல்லாக் கதைகளுக்கும் சொல்லமுடியாது. சில கதைகளுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்வு இலக்கியத்தில் வரும்பொழுது திரிந்து வேறு உரு கொண்டுவிடுகிறது. பேட்டியாளர் :ஏதாவது உதாரணங்கள் ?ந.பிச்சமூர்த்தி : கும்பகோணம் கடைத் தெருவில் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு பையன் இருந்தான். அவனைப் பார்த்தால் அரைப் பைத்தியம் போலதான் இருக்கும். அவன் அனாதை. அவன் என் மனதில் விட்ட வடுத்தான் ‘அரைப் பைத்தியம்’ என்ற கதையாக உருவெடுத்தது. ‘மோஹினி’ என்ற என் கதைக்கு ரவிவர்மாவின் படம் தூண்டுகோல். பேட்டியாளர் : கேட்கப்போகிற கேள்வி பற்றி வித்தியாசமாக நினைத்துவிடாதீர்கள். ‘பதினெட்டாம் பெருக்கு’க்கு எதாவது அம்மாதிரி அநுபவம்…..? ந.பிச்சமூர்த்தி : கிடையவே கிடையாது. பேட்டியாளர் : நீங்கள் கதை எப்படி எழுதுகிறீர்கள்?ந.பிச்சமூர்த்தி : எனக்கே தெரியாத விஷயம். ஒரு காரணம் சொல்கிறேன். சாலிவாஹனன் ‘கலாமோஹினி’ பத்திரிகை நடத்தியபோது நெருக்கி கதை கேட்டார். முடியாது என்று சொல்லிவிட்டு திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றுவிட்டேன். பஸ்க்காக ஒரு திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். ஏதோ ஒரு லயிப்பில் ஒரு புதுக்கவிதை எழுதினேன். முடித்துவிட்டுப் பார்க்கும்போது பஸ் போய்விட்டது. சாலிவாஹனன் வீட்டுக்குத் திரும்பி கவிதையைக் கொடுத்தேன். அதற்குப் பெயர் ‘காட்டு ராஜா’. அடுத்த இரண்டொரு தினங்களில் ‘கவி’ என்ற கதை எழுதினேன். அதை ‘கலைமகள்’ பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆகையால் எப்படி எழுதுகிறேன், எப்பொழுது எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. பேட்டியாளர் :புதுக்கவிதை முயற்சி நீங்களும், கு.ப ராவும் ஆரம்பித்தீர்களே, இன்று அதற்குள்ள இடம் என்ன என்று நிதானிக்க முடிகிறதா? ந.பிச்சமூர்த்தி : புதுக்கவிதை முயற்சி பற்றியவரை அதற்கு இன்று போதிய வரவேற்பு இருக்கிறதென்று சொல்லமாட்டேன். இந்த புதுக்கவிதை முயற்சி வலுத்தால் யாப்புக்கு இணங்கிய கவிதை முயற்சியிலே புதிய வலிமையும் ரசனையும் தோன்றும் என்று நினைக்கிறேன். பேட்டியாளர் : புதுக்கவிதை, வசன கவிதை என்ற பெயர்கள் பற்றி உங்கள் கருத்து? ந.பிச்சமூர்த்தி : பெயரைப்பற்றி எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஒரு குழந்தைக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதை உலக அநுபவத்தில் பார்க்கிறீர்களே. பேட்டியாளர் : உங்கள் கவிதைகளில் கலீல் கிப்ரான் பாதிப்பு (இன்ஃப்ளுயன்ஸ்) இருப்பதாகச் சொல்லலாமா? ந.பிச்சமூர்த்தி : கலீல் கிப்ரான் என்ற ஒருவர் இருந்ததே எனக்கு இரண்டு வருஷங்களாகத்தான் தெரியும். தவிரவும் கிப்ரான் புதுக்கவிதைப் பேர்வழியும் அல்லவே. அராபியில் அவர் எழுதியுள்ளது எல்லாம் யாப்புக்கு இணங்கியவையே. பேட்டியாளர் : நாவல் எழுதும் முயற்சி நீங்கள் செய்யவில்லையா? ந.பிச்சமூர்த்தி :இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.பேட்டியாளர் : சிறுகதைகள் எழுதிப் பழகிய கைக்கு நாவல் எழுதுவது எப்படிப் படுகிறது? ந.பிச்சமூர்த்தி : நாவல் எழுதுவது சிறுகதை எழுதுவதைப்போல் அல்ல என்று தோன்றிகிறது. பேட்டியாளர் : உங்கள் எழுத்தில் ஆரம்ப காலத்தில் ரொமாண்டிக், பிற்காலத்தில் ‘பிலசாபிக்’ என்று காலகட்டம் பிரித்துச் சொல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்? ந.பிச்சமூர்த்தி : அப்படிச் சொல்வது தவறு என்று நினைக்கிறேன். என் கதைகளை ஒரு லேபிளுக்குள் வகைப்படுத்த விரும்புகிறவர்கள் தோல்விதான் அடைவார்கள். இந்தச் சொற்றோடர்களுக்கே பொருள் கிடையாது என்னைப் பொறுத்தவரை. பேட்டியாளர் :‘காஷ÷வல் மானர்’ல பல நல்ல கதைகள் எழுதி இருப்பதாக க.நா சுப்பிரமண்யம் உங்கள் சமீபத்திய கதைத் தொகுதி மதிப்புரையில் கூறி இருக்கிறாரே. அப்படி என்றால் என்ன? ந.பிச்சமூர்த்தி : விமர்சகர் என்ன கருத்தில் சொல்லி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் ‘பதினெட்டாம் பெருக்கு’ கதைகளில் காணும் சிந்தனை வேகத்தைவிட கடுமையாகவே அதில் காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். பேட்டியாளர் : உங்கள் எழுத்து சம்பந்தமாக இடையில் ஏற்பட்ட பதினெட்டு ஆண்டு இடைநிறுத்தம் இதைப் பாதிக்கிறதா? ந.பிச்சமூர்த்தி : ஒருவேளை என்னுடைய வளர்ச்சியை இது காட்டுவதாக இருக்கலாம். பேட்டியாளர் :தற்போதைய பத்திரிகை உத்தியோகம் உங்கள் படைப்புச் செயலை பாதிக்கிறதா? ந.பிச்சமூர்த்தி : ஒன்றும் பாதிக்கப்படவேயில்லை பேட்டியாளர் : இப்போதெல்லாம் நீங்கள் ஓரங்க நாடகம் எழுதுகிறதே இல்லையே. ந.பிச்சமூர்த்தி : இப்போதுகூட ஒன்று எழுத முயன்று கொண்டிருக்கிறேன். எழுதாதற்கு காரணம் எதுவும் இல்லை. நடுவில் பதினெட்டு வருஷ காலம் நான் எதுவுமே எழுதவே இல்லையே. எழுதுவதை மறந்தே விட்டேனே. பேட்டியாளர் : வேண்டுமென்றேயா? ந.பிச்சமூர்த்தி : இல்லை. கவனம் எல்லாம் உத்தியோக விஷயத்தில் சென்றதால் படைப்புக்கான மனநிலை ஏற்பட்டதே கிடையாது. பேட்டியாளர் : அதேபோல பத்திரிகை வேலையும் மன நிலையை பாதிக்காதா?ந.பிச்சமூர்த்தி : பாதிக்காது. அன்று வேலை அன்றோடு நின்று விடுகிறது. சட்டையை கழற்றி வைப்பதைப் போல. மறுநாள் காலை வரையில் மனத்திற்கு சுதந்திரம் தானே? பேட்டியாளர் : கோயிலைவிட பெரியோர்களை அண்டுவதையே விரும்பிய நீங்கள் பதினெட்டு வருஷம் கோவிலுக்குள்ளேயே இருக்க ஏற்பட்டதேங? ந.பிச்சமூர்த்தி : அதுதான் அதில் உள்ள விசேஷம். கோயிலில் கூட அதனுடைய நிர்வாகத்தை கவனிப்பதுதான் என் கடமையாக இருந்திருக்கிறது. கோயிலில் எனக்கு வெறுப்பு என்று எண்ணிவிட வேண்டாம். தமிழ்நாட்டு கலாசாரம் முழுவதும் இன்றும் கோயிலில்தான் காணப்படுகிறது. கடவுளை விட குருவையே மேலானவர்களாக பாவிப்பது நம்முடைய வழக்கம்.பேட்டியாளர் : கவியாகவும் இருந்து, பதினெட்டு வருஷம் கோயிலுக்குள்ளேயே இருந்த நீங்கள் மாணிக்க வாசகர், தாயுமானவர் போல் ஆகிவிடாமல் தப்பிப் பிழைத்து இலக்கியத்துக்குத்திரும்பினீர்களே நல்லவேளை (பிச்சமூர்த்தி வாய்விட்டுச் சிரித்து விட்டார்) பேட்டியாளர் :உங்கள் ‘முள்ளும் ரோஜாவும்’ போட்டியில்பரிசு பெற்றதே. போட்டி பற்றி உங்கள் அபிப்பிராயம்என்ன?ந.பிச்சமூர்த்தி : போட்டிகள் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.பேட்டியாளர் :பிரதேச இலக்கியம் மேல் நாட்டில் வளர்ந்திருக்கிறதே. அம்மாதிரி தமிழ் நாட்டில்? ந.பிச்சமூர்த்தி :ஏன், புதுமைப்பித்தன் தமிழ் வசனத்தில் திருநெல்வேலி வாசனையும், ஆர் ஷண்முகசுந்தரம் நாவல்களில் கோவை மண் மணமும் வீசுகிறதே.பேட்டியாளர் : அம்மாதிரி இலக்கிய வளர்ச்சி அதிகம் இருப்பது விரும்பத்தக்கது இல்லையா? ந.பிச்சமூர்த்தி : நவநாகரீகச் சூழ்நிலையில் தமிழ் வசனம் இன்ன உருவத்தை அடையும் என்று கூறமுடியாது. சம்பாஷணை என்று இலக்கியத்தில் வரும்போதெல்லாம் பிரதேச வாசனை வீசாவிட்டால் அதில் இலக்கிய ரசனை, உண்மை இருக்காது. பேட்டியாளர் :‘பிக்ஷ÷’ என்ற புனை பெயரை வைத்துக் கொள்ள காரணம்? ந.பிச்சமூர்த்தி :கவிதைகள் அந்தப் பெயரில் ஆரம்பத்தில் எழுதினேன்.பேட்டியாளர் : மனநிழல் கூட எழுதி இருக்கிறீர்களே. ந.பிச்சமூர்த்தி : ஆமாம். ஒரு காலத்தில் துறவில் எனக்கு மோகம் இருந்தது உண்மை. அந்த மோகம் விடுபட்ட பிறகு அந்த மாதிரியான தொனியுள்ள பெயரையாவது வைத்துக்கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டேன். என் பெயரின் சரியான உருவம் பிக்ஷôடனமூர்த்திதானே. பேட்டியாளர் : முடிவாக ஒரு வேண்டுகோள். அறுபது ஆண்டுகள் நிறைந்த முதிர்ச்சியில், முதிர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில் இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன் படுகிற வகையில் நீங்கள் அளிக்கும் செய்தி?ந.பிச்சமூர்த்தி : சொந்த வாழ்வை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு என்று சமர்ப்பணம் செய்து வாழ வேண்டியதுதான் எந்த தமிழனுடைய கடமையும் ஆகும் என்று நினைக்கிறேன். எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் இன்றியமையாதது. (நன்றி : எழுத்து ஏடு 21 – செப்டம்பர் 1960)