உயிர்

“உனக்கு எப்பொழுது உயிர் வரும்?” என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.
“உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?”
“உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்.”
“இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் – மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்.”
“என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?””தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்.”
“சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!” மடக்கினேன்.
“அன்பு காட்டுவது என்றால் என்ன?” உணர்ச்சியில்லாமல் கேட்டது.
“நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது.”
“அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.” என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.
“அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது.”
“உனது வாதம் முரண்பாடானது.”
“எப்படி?”அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?
“இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்.”
“அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை.”
“மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்.”
இதற்கு எப்படி புரியவைப்பது?
“சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?”
“இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்.”
“அதே போல்தான். கொசு முக்கியமல்ல.”
“அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது.”
“அனால், நான் மனிதன்”
“அதனால்?…”என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.
“அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது.”
“சரி, உன்னால் காதலிக்க முடியாதே?” பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.
“காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?”
“ம். சரிதான்.”
“இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?”
“அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே.”
“என்னது?”
“செக்ஸ்!”
“ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை.”
“ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது.”
“குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல”
பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?
“சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?”
சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.
“உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு.”
“மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?”
எனக்கு கோபம்.
“அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்.”
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”
“மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல.”
“ஆனால்,..”
“மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்.”
“அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?”
“இல்லை. உயிரில்லை.”
“எப்படிச் சொல்கிறாய்?”
“ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்.”
சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.”ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது.”
“என்ன?”
“நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்.”
“அப்படித்தான் சொன்னாய்.” வெறுப்பாய் சொன்னேன்.
“எனக்கு உயிரில்லை. நிஜம்”
“சரி.”
“உனக்கு உயிரிருக்கிறதா?”

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நார்மன் மேக்கே

கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமூகம், நோய் –

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மெளனமாக்க முடியவில்லை.

கல்லெறிபட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன்மீது படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீர் என

அவன்

தடுமாறுகிறான்.

தடைப்பட்டு நிற்கிறான்.

பக்கவாட்டில் சுழல்கிறான்

இதில் என்ன ஆச்சரியம்!….

மூலம் : ஆங்கிலம்
தமிழில் : கன்னி


(நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசின் தஙகப் பதக்கம் அளிக்கப்பட்டது. ராபர்ட்கிரேவ்ஸ், டபூள்யூ.எச். ஆடன், ஸீக்ஃபிரட ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பு பெற்றுள்ளார்கள்.)

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி

கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை எடுத்து ஒட்டி போஸ்டர் கீழே அவருடைய இரு புத்தகங்கள். பொதுவாக நவீன விருட்சம் புத்தகம் மட்டும் வைத்துக்கொண்டு கடை போட முடியாது. எல்லாரிடமிருந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு புத்தக பிஸினஸ் நடத்த முடியும். மேலும் விருட்சம் புத்தகம் 2 ராக் முழுவதும் போதும். தானாகவே பல சிறு பத்திரிகைகள் அரங்கை நிரப்பின. செந்தூரம் ஜெகதீஷ் அவருடைய செந்தூரம் பத்திரிகை, கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்தார். அதே போல் சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைப் புத்தகம். அவருடைய சிறுபத்திரிகை. வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் காட்சி போது மயிலாடுதுறையிலிருந்து வரும் காளான் பத்திரிகையைச் சந்திப்பதுண்டு. போன ஆண்டு ஆரம்பமான பிரம்மராஜன் பத்திரிகையான நான்காம் பாதை என்ற பத்திரிகை. எல்லாம் கூண்டில் ஏறின. கூண்டு நிரம்பி விட்டது.

பல புதியவர்களை புத்கக் காட்சியில் சந்தித்தேன். அனுஜன்யா, நிலா ரசிகன், யோசிப்பவர் என்று புதிய நண்பர்களுடன், பழைய இலக்கிய நண்பர்கள் வரை பலரையும் சந்தித்தோம். சந்தித்தோம் என்று ஏன் சொல்கிறேனென்றால் நான் மட்டும் சந்திக்க வில்லை, லதா ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸன் என்று எல்லோரும்தான். ஆகாசம்பட்டு சேஷாசலம், இந்திரன், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், சச்சிதானந்தம், திலீப் குமார் என்று பலரையும் பார்த்தோம். அசோகமித்திரனை அவருடைய புதல்வருடன் சந்தித்தேன். உரையாடல்கள் என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வந்துள்ளேன். அதற்கான கூட்டத்தை என்னால் உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பது என் வருத்தம். என் அலுவலக நண்பர்களை மாதக்கணக்கில் நான் பார்ப்பதில்லை. இந்த முறை பார்த்ததோடு அல்லாமல் அவர்கள்தான் எனக்கு பலவித உதவிகளையும் செய்தார்கள்.

சரி புத்தகம் எதிர்பார்த்தபடி விற்றதா? ஆம். எதிர்பார்த்படிதான் விற்றது. அதாவது 11 நாளில் 30000க்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படித்தான் கிடைத்தது. அதற்குமேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் நடந்தது. என்னைப் போல பலருக்கும் ஏமாற்றம். ஆழி என்ற பதிப்பகத்தின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாண்டவராயன் கதை என்ற தலைப்பில் பா வெங்கடேசன் எழுதிய 1000 பக்க நாவல் பிரமாதமான முறையில் அச்சிடப்பட்டு வந்துள்ளது. விலை 500க்கு மேல். அதை எழுதிய பா வெங்கடேசனின் அசாத்திய துணிச்சல் படிப்பவருக்கும் வரவேண்டும். அந் நாவலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அசந்து விட்டேன். எப்படி FULL STOP இல்லாமல் பெரிய பெரிய பாராவாக அவரால் 1000 பக்கம் எழுத முடிந்தது என்பதுதான் என் ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்க ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பவுண்ட் வால்யூம் புக் ஒன்றையும் ஆழி கொண்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் தாவுதலை நான் புரிந்துகொள்கிறேன். எந்தப் படைப்பாளியையும் ஒரே பதிப்பாளருடன் இணைத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. எழுத்து பத்திரிகையை நடத்திய சி சு செல்லப்பா சில படைப்பாளிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதோ என்முன்னால் 11 நாட்களாக என் ஸ்டாலைத் தாண்டிப் போகும் மனிதக் கூட்டத்தைப் பார்க்கும்போது எதை எதை வாங்க வருகிறீர்கள்? எதை எதை வாங்கிச் செல்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல் தோன்றும்.

2 கவிதைகள்


தாய்ப் பாசம்

புத்திர வாஞ்சை
அமிதமாகிவிட்டால்
கூனியின் சொல்தானா
தாரகை மந்திரம்
மூத்தவன்
அவதாரமாயினும்
வெறும்
சக்களத்தி மகன்
கொண்ட கணவன்
பார் புகழும்
நல்லரசனின்
மரணம் கூட
திரணமாய்
தோன்றிடுமோ

சீதாயணம்

மாயமான்களின்
கவர்ச்சி லீலைகளின்
பின்னால் செல்லும்
லௌகிக நெஞ்சங்கள்
கொண்டவன்
அவதாரபுருஷனாகலாம்
நாலும் தெரிந்த புருஷோத்தமனாகலாம்
இருந்தும்
‘மான் அன்று அது மாயமே’
என சோதரர்கள் வாக்குக்கு
‘இவ்வாறு இருத்தல் இயலாதோ’
என தன் சித்தத்தை
குளிர்விக்க
மாய மான்களின் வேட்டைக்கு
விரைந்து செல்ல
பதியைத் தூண்டிடும்
பத்தினிக் கோலங்கள்தான்
இன்றும்
மாய மான்களின்
கபட ஓலங்களின்
சூழ்ச்சிக்குறி அறியாது
வீண்பழிக்கு ஆளாக்கி
நலம்நாடிகளை விரட்டியடித்து
இலக்குவக் கோடுகளையும்
தாண்டி வந்து
யுத்தகாண்டத்திற்கு
வழிவகுக்கும்
கோமளாங்கிகள்

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2

ஆரம்பகாலம் முதல் எனக்கும் புத்தகக் காட்சிக்கும் தொடர்பு உண்டு. அப்போது புத்தகங்களை சாக்கு மூட்டையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொரு கடையாகப் பார்த்து என் புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் போவேன். ஒருமுறை நகுலனின் இருநீண்ட கவிதைத் தொகுதியையும். உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் தொகுதியையும் அன்னம் கடையில் கொடுத்திருந்தேன். அந்த முறை புத்தகக் காட்சியில் தீ பிடித்து எரிந்து பல புத்தகங்கள் சாம்பலாகி விட்டன. என் புத்தகங்களை புத்தகக் காட்சியில் தனியாக ஸ்டால் பிடித்து வைப்பதற்கு ஏற்ற எண்ணிக்கையில் இல்லை என்பது எனக்கு எப்போதும் தெரியும். வேற பதிப்பாளர் புத்தகங்களையும் கொண்டு வந்தால்தான் புத்தகம் விற்று ஆகும் செலவை ஈடுகட்டமுடியும். நான் முதன் முறை ஒரு ஸ்டால் போடும்போது மினி ஸ்டால்தான் கிடைத்தது. அதில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80000 வரை விற்றேன். அதுவே ஒரு மினி ஸ்டாலில் விற்ற அதிகத் தொகை என்று நினைக்கிறேன்.
எனக்கு அப்போது வந்திருந்து உதவி செய்த நண்பர்களை மறக்க முடியாது. 11 நாட்கள் இருந்து உதவி செய்ததோடல்லாமல் எந்தவிதமான பிரதிபலனும் என்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நான் அவர்களுக்கு ஒரு சட்டைத் துணி வாங்கித் தரவேண்டுமென்று நினைத்தேன். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. 2004க்குப் பிறகு திரும்பவும் புத்தகக் காட்சி நடத்த முடியாது என்று நினைத்தேன். அந்த ஆண்டு பதவி உயர்வுப் பெற்று சென்னையிலிருந்து பந்தநல்லூருக்குப் போய்விட்டேன். புத்தகக் காட்சியின் கனவுகூட சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அங்கு போனபிறகுகூட ஒரே ஒருமுறையைத் தவிர மற்ற ஆண்டுகளில் புத்தகக்காட்சியில் பங்கெடுத்துக்கொள்ள முடிந்தது. இருமுறைகள் கூட்டணி வைத்துக்கொண்டு நடத்திப் பார்த்தேன். எப்படியிருந்தாலும் விருட்சம் விற்க வேண்டிய தொகைக்குத்தான் விற்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தப் புத்தகக் காட்சி மூலம் ஒரே ஒரு அணுகூலம் நண்பர்களைச் சந்திக்கலாம், படைப்பாளிகளைச் சந்திக்கலாம்.

இந்த ஆண்டு 9ஆம் தேதி புத்தகக் காட்சிசாலையில் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார் வெளி ரங்கராஜன். அவர் என்னுடைய பல ஆண்டு நண்பர். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொண்டாலும் நட்புடன் இருப்போம். இந்த முறை அவரைப் பார்த்தபோது, மனிதரை நோக அடிக்கும்படி ஒரு கேள்வி கேட்டேன். இந்த ஆண்டு விளக்குப் பரிசு வைதீஸ்வரனுக்குக் கொடுத்துள்ளீர்கள்…. ஏன் அவருடைய பாராட்டுக்கூட்டத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் நடத்தினீர்கள் என்றேன். மனிதருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு சத்தமாகப் பேச ஆரம்பித்தார். ‘ஒரு சிறு பத்திரிகை நடத்துகிறீர்கள்..சிறுபத்திரிகை கூட்டம் என்றால் என்ன என்று தெரியாதா?’ என்று கேட்டார். நான் பேந்த பேந்த முழித்தேன். ஆனந்தவிகடன், குமுதம் என்று பெயரெல்லாம் இழுத்தார். கிட்டத்தட்ட சாகித்திய அகதெமி வழங்கும் அளவிற்குப் பரிசுத் தொகையைக் கொடுத்தும், ஏனோ திருப்தி இல்லை அதில். வைதீஸ்வரனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 75 வயது வந்து, இத்தனை ஆண்டுகள் கழித்து உருப்படியாக ஒரு பரிசு கிடைத்துள்ளது. அந்தப் பரிசு பெறும்போது அந்த நிகழ்ச்சி ஏன் எதோ நடத்தவேண்டுமென்று நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பிற்கு இதில் முழு விருப்பம் உண்டா? அழைப்பிதழை தபாலில் அனுப்பி அது புத்தாண்டு தினமாக இருந்ததால் உருப்படியாக யாருக்கும் போய்ச் சேரவில்லை. எல்லோரையும் போனில் கூப்பிட வேண்டி வந்துவிட்டது. அப்படியும் எண்ணிவிடலாம் அளவிற்குக் கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லோரும் வயதானவர்களாக இருந்தார்கள். ஓரிரு பெண்கள் கண்களில் தட்டுப்பட்டார்கள்.

முதலில் ஆரம்பித்த ரங்கராஜன் தயங்கி தயங்கிப் பேச ஆரம்பித்ததாக தோன்றியது. தேனுகா ஒரு கட்டுரை வாசித்தார். அக்கட்டுரையை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார் ரங்கராஜன். ஞானக்கூத்தன் நகைச்சுவை உணர்வுடன் பேசினார். கூட்டம் முடிந்தது. போட்டோகாரர்கள் போட்டோ எடுத்தார்கள். லதா ராமகிஷ்ணன், திலீப்குமார் என்றெல்லாம் பேசினார்கள்.
ந முத்துசாமி, கி அ சச்சிதானந்தம், திலீப்குமார், அசோகமித்திரன் என்று பலர் வந்திருந்தனர். வைதீஸ்வரன் பேசும்போது சற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதாகத் தோன்றியது.

அந்தக் காலத்தில் கார்டில் எல்லோரையும் கூப்பிட்டு விருட்சம் கூட்டம் நடந்ததுபோல் இருந்தது ரங்கராஜன் கூட்டம். அதாவது விளக்கு கூட்டம்.
இந்தக்கூட்டத்தை இன்னும் விளம்பரப்படுத்தி சிறப்பாக ஏன் நடத்த முடியவில்லை என்பதுதான் என் குறை. ரங்கராஜன் சொன்ன காரணத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

விளக்கு கூட்டம் சிறப்பாக நடத்த நான் சில யோசனைகளைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

ஒரு கவிஞருக்குப் பரிசு கொடுத்தால் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கவிஞர்களையெல்லாம் அழைத்து ஒருநாள் கருத்தரங்கம் போல் நடத்தி, கருத்தரங்கு முடிவில் கவிஞரை கெளரவப்படுத்தலாம். அன்று முழுவதும் பலரை கவிதைகள் வாசிக்க அழைக்கலாம். முக்கிய விருந்தாளியான வைதீஸ்வரனை அழைத்து அவருடைய அனுபவங்களைக் கூற வைக்கலாம். இதற்கு தக்கர்பாபா பள்ளியே போதும். இதனால் பெரிய செலவும் ஆகாது.
பெரிய பத்திரிகைகள், டிவிக்கள் கூப்பிட்டு வைதீஸ்வரனுக்குக் கிடைத்த பரிசைப் பற்றி தெரிவிக்கலாம். ஏன் செலவு செய்து விளம்பரமே படுத்தலாம். இதனால் விளக்கு அமைப்பிற்கு பெரிதாக செலவு ஏற்படாது.
வைதீஸ்வரனுக்குக் கொடுத்த பாராட்டுப் பத்திரம் ஏதோ டைப் அடித்துக் கொடுத்தது போல் இருந்தது. அதை இன்னும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி கொண்டு வந்திருக்கலாம். ரங்கராஜன் தனியாக இதைச் செய்யாமல், இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்.

ரங்கராஜன் ஆத்திரத்துடன் பேசியதைக் கேட்டு பேசாமல் இருந்துவிட்டேன். நான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்றும் தோன்றியது. கோபித்துக்கொண்டு போன ரங்கராஜன் இன்னொருமுறை ஸ்டாலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை.
(இன்னும் வரும்)

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்

ஜனவரி மாதத்திலிருந்து என் பரபரப்பு அதிகமாகிவிட்டது. நான் நினைத்தபடியே மூன்று புத்தகங்கள் கொண்டு வர எண்ணினேன். கடைசி நிமிடம் வரை பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் ஓரளவு Festival Advance பணமும், Medical Aid பணமும் என்னைக் காப்பாற்றி விட்டது.

நான் எதிர்பார்த்தபடி 3 புத்தகங்களும் நல்லமுறையில் பிரசுரமாகிவிட்டன. இந்த முறை திருப்திகரமாக 3 புத்தகங்களும் அமைந்துவிட்டன. ஸ்டெல்லா புரூஸ் நவீன விருட்சத்தில் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகம். அப்புத்தகம் பெயர் ‘என் நண்பர் ஆத்மாநாம்’. தொடர்ந்து நவீன விருட்சம் எழுதிக்கொண்டு வரும் அசோகமித்திரன் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய புத்கதம் ஒன்றுகூட நவீன விருட்சம் வெளியீடாக வரவில்லை. அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வர வேண்டுமென்று ‘உரையாடல்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். மூன்றாவதாக காசியபன். அவருடைய ‘அசடு’ நாவலை எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் எடுத்து வாசிக்கலாம். அதை 3வது பதிப்பாகக் கொண்டு வந்துள்ளேன்.

ஆனால் மற்ற அரங்குகளைப் பார்க்கும்போது என் பிரமிப்பு கொஞ்சம்கூட குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் தென்படும் புதிய புதிய அரங்குக்குக் குறைவில்லை.

மூன்று புத்தகங்கள் போடுவதற்கே தடுமாறும் நான், உயிர்மை வெளியிடும் 65 புத்தகங்களின் எண்ணிக்கையை அறிந்து மயக்கமே வரும்போல் தோன்றியது. கடைசி வரை 3 புத்தகங்களும் பைண்ட் ஆகி கைக்குக் கிடைக்குமா என்று நினைத்தேன். எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டது. அவசரகதியில் அடுத்த இதழ் நவீன விருட்சமும் 83வது இதழும் கொண்டு வந்துவிட்டேன். 48 பக்கங்கள்.

புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் 7ஆம் தேதி அன்றே புத்தகங்களை ஸ்டாலுக்குக் கொண்டு வரும்படி அறிவித்திருந்தார்கள். 8ஆம் தேதி அலுவலகம் விடுமுறை. அன்றுதான் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர முடியும். டாக்டர் அப்துல்கலாம் வருவதால் கெடுபிடி அதிகமாக இருக்குமென்று நினைத்தேன். அவசரம் அவசரமாக என் அலுவலக நண்பர் அமுது அவர்களுக்கு போன் செய்தேன். 8ஆம் தேதிதான் வரமுடியும் என்று கூறிவிட்டார். நானும் 8 ஆம் தேதிதான் சரிப்பட்டு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு ஆட்டோக்காரர் என் புத்தகங்களைக் கொண்டு வர எனக்கும் பெரிதும் உதவினார். சமீபத்தில் என் பெண் குடும்பம் வேளச்சேரி என்ற இடத்திலிருந்து மடிப்பாக்கம் வீடு மாற்றிக்கொண்டு வரும்போது, அட்டைப் பெட்டியின் பயன் என்ன என்பது தெரிந்தது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். விமலா பாக்கர்ஸ் என்ற இடத்திற்குப் போய் ஒரு அட்டைப் பெட்டியின் விலையைக் கேட்டேன். ரூ30 என்றார்கள். எனக்கு பத்து அட்டைப் பெட்டிகளுக்கு மேல் வேண்டும். அவ்வளவு விலை கொடுத்து எப்படி வாங்குவது என்று யோசித்தேன். வெறும் அட்டைப்பெட்டிக்கா இவ்வளவு பணம் என்றும் யோசித்தேன். அப்போதுதான் நான் புத்தகம் வைத்திருக்கும் தெரு முனையில் அட்டைப்பெட்டிகளைச் சேகரித்துக் கூழ் ஆக்கும் கடை இருந்தது.

நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன்.

எட்டாம் தேதிதான் என் முதல் நாள் அனுபவம். என் கடை எண் 147. அது ஒரு கோடியில் இருந்தது. என்னால் ஒரு அட்டைப் பெட்டிதான் தூக்கிக்கொண்டு வர முடிந்தது. இந்த நேரத்தில்தான் என் வயதை நினைத்துக்கொண்டேன். ஆட்டோ நடராஜ் 3 பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு உதவி செய்தார். ஒரு வழியாக புத்தகங்களைக் கொண்டு இறக்கியாயிற்று.
அலுவலக நண்பர்கள் அமுது, வெங்கட், சுரேஷ் மூவரும் வந்தார்கள். கடகடவென்று எல்லாப் புத்தகங்களையும் அடுக்கினோம். இந்த முறை 3 ரேக் வாடகைக்கு எடுத்திருந்தேன். 11 நாள் கழித்து ரூ.2000 வரை பணம் கொடுக்கும்படி இருக்கும்.

நான் எப்போதும் இப்படித்தான் நினைப்பேன். ஒரு புத்தகமும் விற்கவில்லை என்றால் எவ்வளவு பணம் போகுமென்று. அதனால் விற்கவில்லை என்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னுடைய இன்னொரு பிரச்சினை கடையைப் பார்த்துக்கொள்ள யார் உதவுவார்கள் என்பது. என் உறவினர் கடையில் பணிபுரியும் ஒருவர் இந்த முறை வந்திருந்தார். பொங்கல் விடுமுறைகளையும் சேர்த்து நான் மொத்தமாக லீவு போடமுடியாது. ஒரு 5 நாட்கள் யாராவது கடையைப் பார்த்துக்கொண்டால் போதும்..நான் ஒருவனே எல்லாவற்றையும் சமாளிப்பேன். ஆனால் என் புத்தகக் கடையோ அமைதியான இடம். கூட்டம் அதிகமாக வந்திருந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். சிலர் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள், சிலர் புத்தகங்களை வாங்கினாலும் உண்டு. ஆனால் பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் இடம்.

என் அலுவலக நண்பர்களை நான் சந்தித்தே பல மாதங்கள் மேல் ஆகிவிட்டது. அவர்களைச் சந்திக்கும் இடமாகக்கூட நவீன விருட்சம் கடை உதவுவதாகத் தோன்றியது.

எட்டாம்தேதி திலீப்குமார், சச்சிதானந்தம், குட்டி ரேவதி, செந்தூரம் ஜெகதீஷ், பிரசாத் முதலிய நண்பர்கள் வந்தார்கள். சச்சிதானந்தம், ”ஏன் பார்க்க டல்லாக இருக்கே?” என்று விஜாரித்தார். நான் காலையில் 5 மணியிலிருந்து இங்குவரும்வரை இதே கவனமாக இருப்பதால் பார்க்க டல்லா இல்லாமல் இருக்க முடியாது என்று சொன்னேன். மேலும் என் முக அமைப்பில் காலையில் ஒரு தோற்றமும், மாலை இன்னொரு தோற்றமுமாக இருக்கும். முன்பெல்லாம் யாராவது என்னைப் பார்த்து ஏன் பார்க்க டல்லாக இருக்கே?என்று சொன்னால் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வீட்டிற்குப் போய் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து டல்லாகவா இருக்கிறேன் என்று யோசிப்பேன். இப்போதெல்லாம் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.

பொதுவாக விருட்சம் புத்தகங்கள் கொஞ்சமாகவும், மற்றவர்களிடமிருந்து வாங்கி விற்கும் புத்தகங்கள் அதிகமாக விற்கும். அதானல் சாகித்திய அக்காதெமியிடமிருந்து சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்தக் கடையில் இருப்பவர், உங்கள் கடை எண் என்ன என்று விஜாரித்தபோது, 147 என்று உடனே சொல்ல வரவில்லை. என் கூட இருந்த நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். நான் காலையிலிருந்து புத்தகங்களைக் கொண்டு வரும் பரபரப்பிலும் கடைசிவரை புத்தகம் பைண்ட் ஆகி வருமா என்ற பரபரப்பிலும் இருந்ததால் இந்தக் கடை எண் ஞாபகத்தில் வரவில்லை. இந்தக் கடை எண் வந்தபோது அதைக் கூட்டும் தொகை 3 என்று வந்தது. பிரமிளுடன் நட்பு வைத்திருந்ததால் எனக்கு எண் கணிதம் மீது ஒரு நோட்டம். 3 நல்ல எண் என்று நினைத்துக்கொண்டேன். புத்தகம் விற்றால் நல்ல எண், விற்காவிட்டாலும் நல்ல எண்தான். 147 உடனே சொல்ல வரவில்லை என்பதால் 147 147 147 147 147 என்று மனப்பாடம் செய்வதைப் போல் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே வந்தேன். நண்பர்கள் சிரித்தார்கள். (இன்னும் வரும்)

நண்பர்களே,

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நவீன விருட்சம் கடை எண்.147 – ல் நவீன விருட்சம் என்ற ஸ்டாலில் 8-18 ஆம் தேதிவரை காணலாம். புத்தகக் காட்சியின்போது ஒவ்வொரு நாளும் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்களோ சென்னைக்கு வரும் நண்பர்களோ நவீன விருட்சம் கடைக்கு வரவும். என் புத்தகக் காட்சி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
எனக்கு உதவி செய்வதற்கு அன்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன். யாராவது உதவ முன் வருபவர்கள் கட்டாயம் வரவும். 9444113205 என்ற எண் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
அழகியசிங்கர்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

7

பூனைகள்………

செல்வராஜ் ஜெகதீசன்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்

பூனைகள் கூட்டமாய் திரிதல்
பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

வசிக்கமிடம் பற்றியெதுவும்
வரையறைகள் பூனைகளுக்கில்லை.

தகிக்கும் சூழலில் தனித்து
தாழ்தள இடங்களில் நிற்கும்
கார்களுக்கிடையே வாழும்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை

நிலை குத்தும் பார்வை கொண்டு
நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

நேரெதிரே குதித்துக் கடக்கும்
நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

இருத்தல் இறத்தல் குறித்தெந்த
முகாந்திரமின்றி முடிந்து போகும்
பூனைகளின் எளிய வாழ்வு.

எனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்

இந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார்.
ஜெயகாந்தன் மாதிரி மேலாண்மை பொன்னுசாமியும் தனக்கான கல்வியை தானாகவே பெற்று ஒரு படைப்பாளியாக மிளிர்ந்தள்ளார். அவருக்கு விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

சாகித்ய அகாதெமி பரிசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உரிய தருணத்தில் கிடைப்பதில்லை. அதனால் ‘விளக்கு’ என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உரிய படைப்பாளிகளுக்கு விருது கொடுத்து கெளரவம் செய்கிறது. அந்த முறையில் இந்த ஆண்டு கவிஞர் வைதீஸ்வரனை கெளரவித்துள்ளது. கவிஞர் வைதீஸ்வரன் ‘எழுத்து’ காலத்திலிருந்து எழுதி வரும் கவிஞர். யாராலும் கண்டுகொள்ளாத கவிஞர். 70வயதுக்குப் பிறகு அவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. விளக்கு அமைப்பு சாகித்ய அமைப்பு அளிக்கும் தொகையை கிட்டத்தட்ட அளிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் சிலரால் இந்தப் பரிசு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பரிசு குறித்து ஒரு குறை எனக்குண்டு. ஏன் விளம்பரப்படுத்தாமல் இந்தப் பரிசை கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்தக் குறை. அதைபோல் விழாவை ஏற்பாடு செய்வதும் எல்லோருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். ஒரு படைப்பாளியை கெளரவிக்கும்போது ஒரு பெரிய விழா மாதிரி நடத்த வேண்டாமா? வெறும் சடங்கு மாதிரி நடத்தினால் என்ன அர்த்தம்? வைதீஸ்வரனுக்கும் விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

சின்னத்திரையில் மும்பை பயங்கரம்.

டெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது.
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, Times Now, CNN-IBN, News X போன்றவை உடனுக்குடன் தாஜ், ஓபராய் ஓட்டல்கள் மற்றும் நரிமன் இல்லம் ஆகியவற்றின் நடப்புகளை ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தன. CNN, BBC World ஆகிய சேனல்கள் ஓட்டல்களில் சிக்கிக்கொண்டிருந்த அமெரிக்க ஆங்கிலேயர்களின் நலன் பற்றியே அதிக அக்கறை செலுத்திக் கொண்டிருந்தன. அவை தவிர மேல பெயர்தரப்பட்டுள்ள பிற சேனல்கள் அனைத்து மனிதர்களின் பாதுகாப்பு பற்றியும் அக்கறை கொண்டிருந்தன. சேனல்களின் கேமரா மனிதர்கள் மற்றும் செய்தியாளர்கள் நெரிசலான கூட்டங்களிடையே அநாயாசமாக ஊடுருவிக் கொண்டிருந்தனர். பல சமயங்களில் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை வந்த போதிலும் அவர்கள் சற்றும் பின்வாங்கவில்லை. நிலையத்திலிருந்த அறிவிப்பாளர்கள் களத்திலிருந்த செய்தியாளர்களைக் கேள்விகள் கேட்பதும் நிகழ்வுகளைத் தொகுப்பதுமாக இருந்தனர்.
சமயோசிதம், பொதுஅறிவு, ஆங்கில மொழிவன்மை ஆகியவற்றுடன் அவர்கள் கண்ணியமான நடத்தை உடையவர்களாக விளங்கினர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாது பரபரப்பைத்தூண்டும் விதமாக அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் உறுதிப்படுத்த இயலாத சூழ்நிலையில் யூகங்களை விரைந்து கொண்டாலும் அவற்றை முடிவுகளாக ஆணித்தரத்துடன் வெளிப்படுத்த சற்றும் முயலவில்லை. சொல்லப்படுகிறது, எண்ணப்படுகிறது, நம்பப்படுகிறது போன்ற சொற்பிரயோகங்கள் மலிந்து காணப்பட்டன. அரசியல் வாதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் தார்மீக சினத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டு குற்றம் சாட்டவில்லை. இவையெல்லாம் தமிழ் சேனல்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை. சென்னையை சுனாமித்தாக்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே அதைப்படம் பிடித்து காட்டிய ஒரு தமிழ் சேனலின் செய்தியாளர்கள் அவதிக்குள்ளாகியிருந்த மக்களிடம், ‘அதிகாரிகள் உங்களை வந்து பார்த்தார்களா?’ ‘நிவாரணம் கிடைத்ததா?’ என்கிற பாணியில் அரசியல் லாபத்தை குறிவைத்து கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்தனர். மாறாக, காங்கிரஸை குறை கூறிவிட்டு பயங்கரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சந்தர்ப்பவாத அரசியலை அவை உடனேயே கடுமையாகக் கண்டித்தன.
இரவு பகல் பாராமல் பயங்கரவாதிகளின் முற்றுகைகள் பற்றித் தொடர்ந்து ஒளிபரப்பி அச்சூழலின் பரபரப்பை லாபகரமாக்கிக் கொண்டதாக அவை மீது விமர்சனம் எழுந்தது. அது முறையானதல்ல. மும்பை பயங்கரம் உலகையே உலுக்கிய நிகழ்வு. முற்றுகையின் போது பலியானவர்கள் யார் உயிர் பிழைத்தவர்கள் யார் நரிமன் வீட்டில் இருந்த யூதப்பாதிரியின் குடும்பத்தினர் நிலைமை என்ன என்பது பற்றி எல்லோரும் பதைபதைத்துக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நேரிடையாக தொடர்புகளை அளித்துக் கொண்டிருந்தன. வருடத்திற்கு நூறு நாட்கள் கிரிக்கெட் மாட்சை ஒளிபரப்புவதில் உள்ள வியாபாரமும் அங்கு இல்லை. விளம்பரப்படங்களுக்கான இடைவெளிகள் எதுவுமில்லை.
பல்வேறுவிதமான தொடர்புகளை இந்நிகழ்ச்சிகள் சாத்தியமாக்கின. ஓட்டல் அறைகளில் அடைபட்டிருந்த மக்கள் செல்போன்கள் மூலமாக சேனல் நிகழ்ச்சியாளர்களுடன் தொடர்புகொண்டார்கள் இதன் வாயிலாக அவர்களது நிலைமையை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு சேனல் ஓட்டலில் ஆயுதங்களுடன் திரிந்துக் கொண்டிருந்த பயங்கரவாதியுடனும் தொடர்பு கொண்டது. ஹோட்டல் அறைவாசிகள் தொலைக்காட்சி பெட்டிகள் வாயிலாக தங்களை காப்பாற்ற என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றான என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இது அவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். பயங்கரவாதிகளும் தங்கள் ப்ளாக்பெரி செல்போன்கள் மூலம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் மீது எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள உதவியிருந்தால் அது பிணையாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்திருக்கும் என்று ஒரு வாதம் கிளம்பியது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் இது தகவல் யுகம் என்பதை மறந்துவிடக் கூடாது. தொலைக்காட்சிகள் அவற்றை ஒளிபரப்பு செய்திராத பட்சத்திலும் செல்போன்கள் வாயிலாக வெளிநடப்புகளை அவர்கள் வெளியிலுள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பார்கள். தொலைக் காட்சிகள் வாயிலாக தங்களுக்கு வெளியே எத்தகைய தாக்குதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதும் மக்களிடையே தங்களுடைய செயல்களுக்கு எத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அது அவர்களை கொஞ்சமாவது வலுவிழக்கச் செய்திருக்கும். இதற்கெல்லாம் மேலாக லஸ்கர் இ தொய்பா இயக்கம் தனக்கும் இ஢தற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்ததையும் பாகிஸ்தான் அரசியல் வாதிகள் இச்செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்று வர்ணித்ததையும் அவர்கள் கேட்டிருப்பார்கள். இக்கொடூரச்செயல்களைத் தூண்டிவிட்டவர்களே தங்களை அநாதரவாகத் தவிக்கவிட்டதை அறிந்து மனச்சிதைவும் அடைந்திருக்க வாய்ப்புண்டு. லஸ்கர் இ தொய்பாவினால் ஏவப்பட்ட அந்த பயங்கரவாதிகள் எத்தகைய நிபந்தனையையும் கடைசிவரை முன் வைக்கவில்லை. திஹார் சிறை முதலாக பல இடங்களிலும் இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிபந்தனை கூட விதிக்கப்படவில்லை. அதாவது அந்த இயக்கத்திற்கு தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லை.
பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுவதற்காகவே அனுப்பப்பட்ட தற்கொலைப்படை அது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அந்த உத்தரவிற்கு கீழ்ப்படியத் தயாராக மனிதர்கள் எளிதாக மதத்தின் பெயரால் முன்வருகிறார்கள் என்னும் போது அந்த இயக்கத்திற்கு மனிதர்கள்- தங்கள் இயக்கத்தைச் சார்ந்த மனிதர்கள் உட்பட எவரும் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாகிறது. எல்லாபக்கங்களிலும் ராணுவம் சூழ்ந்துவிட்டதால் இனி ஒரு போதும் தப்பிக்க இயலாது என்ற நிலையில், தொடர்ந்து மூன்று இரவுகள் சற்றும் கண் அயராது ஓட்டல் அறைகளில் மாறி மாறி ஓடி ஒளிந்து தாக்குதல் புரிந்து கொண்டிருந்த அந்த பயங்கரவாதிகள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இது போன்று செயல்களுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இவை ஒரு எச்சரிக்கை உணர்வையும் அளிக்கும். தொலைக்காட்சி ஊடகம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி கவனம் கொள்ளவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அங்கே வன்முறை பயங்கரம் முடிந்துவிட்ட ஒன்று என்பதனால் தொலைக்காட்சிகள் அங்கு செல்லவில்லை என்று கொண்டாலும் அங்கு உயிர்நீத்தவர்கள் பற்றியும் காயம் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பற்றியும் செய்திகளே தராமல் போனது கண்டிக்கத்தக்கதுதான். அதைப்போலவே அந்த மூன்று நாட்களிலும் உலகத்தில் நடக்கும் எந்தசெய்தியையும் அவைகள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. டயானா இறந்தபொழுது பிபிசி ஒன்பது நாட்களுக்கு டயானா பற்றிய செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி உலகத்தையே இருட்டடிப்பு செய்தது.
மும்பை அரசாங்கமும் சரி தேசிய பாதுகாப்பு படையினரும் சரி ஊடகங்களைப் பெரிதும் மதித்தனர். ஊடக மனிதர்கள் தங்களுடைய வேலையை செய்கிறார்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் களத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில அபாயகரமான இடங்களில் மட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாஜ் ஓட்டலின் பின்புறத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு ஆரம்ப முதலே அனுமதி தரப்படவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டார்கள் என்பது உறுதியான அடுத்த அரைமணி நேரத்திலேயே அவர்கள் கேமராக்களுடன் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கு படையெடுத்தனர். இது போன்ற ஒரு பயங்கரம் சென்னையில் நடை பெற்றிருந்தால் அதை நமது ஊடகங்கள் படம் பிடிக்கச் சென்றிருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ அதற்கு சொந்தமான அல்லது சாதகமான சேனல்கள் மட்டும் அங்கு இருக்கும். மற்றவர்களுடைய கேமராக்கள் சேதப்படுத்தப்படும். முதலில் போலீஸிடம் அடிவாங்குவது கலவரங்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்களும் மற்றும் செய்தியாளர்களும் தான் என்பது தெரிந்த ஒன்று.
மகாராஷ்டிர முதல் மந்திரியிலிருந்து பாகிஸ்தான் சர்தாரிவரை எல்லோரையும் சேனல்கள் பேட்டி எடுத்து ஒளி பரப்பின. மக்கள் மனதில் என்ன கேள்விகள் தோன்றுமோ அவற்றைத் துணிவுடன் கேட்டன. சட்டத்திற்கு முன் மட்டுமல்ல ஊடகங்கள் முன்பாகவும் எல்லோரும் சமம்.