சூடாப் பூ …

பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள்  அம்மு.
எல்லோரும் வீட்டிற்குப் போக 
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.
ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை 
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து 
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.
மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.

எதையாவது சொல்லட்டுமா……….53

அடுத்த நாளும் நாங்கள் விடுதியிலிருந்து கிளம்பி நியுயார்க் சென்றோம். அதே, NFTA-METRO Trolley-ல் கிளம்பினோம். இந்த வண்டியின் கூரையில்தான் அனைவரும் உட்கார வேண்டும்.  அப்படியே வண்டி நகர்ந்து நகர்ந்து செல்லும்.  பின் ஒவ்வொரு இடமாக நின்று நின்று செல்லும்.  அந்த வண்டியில் வரும் கெய்ட் அந்த இடத்தின் பெருமையைச் சொல்வார். யாராவது விரும்பினால் அந்த இடத்தில் இறங்கலாம்.  பின் இன்னொரு NFTA-METRO Trolley வரும் அதில் ஏறி இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம்.  பெரும்பாலும் நாங்கள் வண்டியிலிருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சுற்றிக்கொண்டிருந்தோம். 
அன்று இரவு பஸ்ஸில் நியுயார்க்கிலிருந்து நயக்கரா அருவி இருக்குமிடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம்.  பஸ் கிளம்பும் இடத்தில் நாங்கள் சுமந்து வந்த பைகளை பத்திரப்படுத்திவிட்டுத்தான் நியுயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தோம்.  உயரமான கட்டிடங்களையும், கூட்டமான ஜனத்திரள்களையும் பார்த்தபடி சென்று கொண்டிருந்தோம். 
American Museum of Natural History என்ற இடத்தில் இறங்கினோம்.  10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றதால், எதிரில் உள்ள பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்தோம்.  பூங்காவா அது. நடக்க நடக்க அது பூங்கா நினைத்துப் பார்க்காத தூரத்திற்கு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது.அதிலிருந்து மீண்டு நாங்கள் திரும்பவும் Museum த்திற்குள் நுழைந்தோம்.  வெளியிலிருந்து பார்க்கும்போது சாதாரண கட்டிடமாக இருப்பது விஸ்தாரமாகப் போய்க் கொண்டிருக்கும். பாதி நேரம் அங்கயே போய்விட்டது.  அப்படியும் முழுமையாகப் பார்த்த திருப்தி இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மினி தியேட்டர் இருக்கும்.  அதில் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பற்றி ஒரு படம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  எப்படி நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை சின்ன சின்ன டிவிக்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
எங்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.  சைவ உணவைத் தேடி ஓடினோம்.  நியுயார்க்கில் சரவணபவன் ஓட்டல் திறந்திருப்பதால், அது எங்கே என்று தேடி ஓடினோம்.  நான் ஒரு இடம் சென்றால், அந்த இடத்தின் புள்ளிவிபரங்களைச் சொல்லும் நிபுணன் இல்லை. முன்பெல்லாம் உலகச் சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன்.  அதை விபரமாகச் சொல்லும் சாமர்த்தியம் எனக்கில்லை. ஆனால் என் எழுத்தாள நண்பர்கள் பலர் பலவிதமாக அவற்றைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
இதோ அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்கும் நான், அதை எப்படி விபரிப்பது.  புள்ளி விபரங்களை அள்ளி வீசும் நிபுணன் இல்லை.  ஆனால் இப்போதுள்ள Internet உலகத்தில் எல்லாதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.  உலகம் அப்படி மாறிவிட்டது.  அமெரிக்கா போவது என்பது நம் வீட்டு கொல்லைப் பக்கம் போவது போல் அவ்வளவு சுலபமாகப் போய்விட முடியும். நியுயார்க்கில் Time Square என்ற இடத்தில் மாலை வேளையில் சுற்றிக் கொண்டிருந்தோம். பிரம்மாண்டமான விளம்பரங்கள் பெரிய டிவி ஸ்கிரினில் ஓடிக்கொண்டிருந்தது.  மக்கள் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.  ஒரு பெரிய Toy கடைக்குச் சென்றோம்.  உள்ளேயே சிறுவர்களுக்கான உலகம் ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் எல்லாம் விலை அதிகம்.  கூட்டமான கூட்டம்.  கடைக்குள்ளேயே குடைராட்டினம் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் பல இடங்களை வண்டியின் மேற்பரப்பில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.  நயக்கரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க பஸ்ஸில் பயணம் செய்ய உத்தேசத்துடன் இருந்தோம். 

நிலா

வெள்ளை நிறம்
பெரிய முகம்
சுருங்கிக் கிடப்பது
ஏன்?……
அட,
உனக்கும் வயதாகிவிட்டதா?
(எப்பவோ எழுதிய கவிதை.  ஒரு நோட்டிலிருந்து எடுத்தது)

வருகை

பழுத்த இலைகள்
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா –
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.

நிலவும் தவளையும்

 

அலையற்ற நீர்

படுக்கையில் அயர்ந்த

தூக்கத்தில் நிலா.
நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.
இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்

துள்ளலில் வளைந்து

நெளிந்தது நிலா. 

தொடரும் பயணம்

 
ஒரு தேவதையைப் போலதான் 
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக 
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தலின் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள் 
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும் 
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று 
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க 
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு 
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.
மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில் 
அதன் வெண்மையை வாங்கி 
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்தைத்
தவற விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.
ஓரிரு மணித்துளிகளில்
ஒட்டி வந்து நின்றது
அன்றைக்குத் தாமதமாகப் 
புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு அழைத்த 
ஓட்டுநரின் அன்பும் கனிவும்..
மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.
கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

வரும்போகும்

முற்றத்தில் அடிக்கும்
வெயிலும்
பெய்யும் மழையும்
இப்போது இல்லை
ஓட்டிலிருந்து
தேள் வந்து விழும் என்ற
பயமுமில்லை
குளியலறையை
வசிப்பிடமாக்கிக் கொண்ட
கரப்பான்பூச்சியைக்
காணவில்லை
வாங்கி வைத்த
மாம்பழங்களை
குதறிச் செல்லும்
பெருச்சாளிகளின்
தொல்லை இல்லை
மழை பெய்தால்
ஆங்காங்கே ஒழுகும் என்ற
சிரமமில்லை
வெளவாலுக்கு
அடைக்கலம் தரும்
இடமாக இல்லம்
இனி இருக்கப்போவதில்லை
இனி நெஞ்சை நிமிர்த்தி
நடக்கலாம்
எங்கள் வீடு
ஓட்டு வீடு இல்லை
மாடி வீடென்று.

கதிரொளி

மழையில் நனைந்த பறவை
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.

குட்டி குட்டி அழகு

குட்டி குட்டி பற்களை 
பிரசில் தேய்த்துவிட்டு 
சாக்கடையில் வந்து 
நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது
சாக்கடையில் வழிந்தோடுகிறது 
அழகு…
குட்டித் தலையை 
அப்பாவின் கைக்குள் 
நுழைத்து தூங்கும்பொழுது 
காற்றில் பரவுகிறது 
அழகின் மணம்…
 குறு குறு பார்வையில் 
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 
குட்டிச் சிரிப்பொன்று வந்து 
வெட்கம் கொள்கிறது…
குட்டிக் கண்களில் 
மாட்டிய கறுப்புக் கண்ணாடி 
எதிர்வரும் வாகனங்களை 
மமதைக் கொள்ளச் செய்கிறது…
பாசை புரியா பாடலில் 
செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது…
அளப்பரிய அர்த்தத்தை 
குட்டிக் கணத்தில் 
கொட்டிச் செல்வது 
அழகு… ம்ம் அழகு…
                             

அன்புடையீர்,

வணக்கம்.
Navinavirutcham blogspot.com படைப்புகள் சில வேறு வலைத்தளங்களிலும் பிரசுரமாகின்றன. தயவுசெய்து, ஒரே படைப்பை எல்லா வலைத்தளங்களிலும் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் படைப்பு நவீன விருட்சம் இதழிலிலும் வெளி வர வாய்ப்பு உள்ளது. 
கவிதை அனுப்புவோர், ஒரு கவிதை மட்டும் ஒரே சமயத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அழகியசிங்கர்