வெயிலிலிருந்து மற்றொன்றாக

பகலின் சுவர்களில்
பட்டுத்  தெறிக்கும்
வெயில்
வாலாட்டுகிறது
ஒரு நாயின்
நிழலில்

சித்திரக்கோடுகளை  தீட்டி
நெளிகிறது
ஒரு சாளரத்தின்
 நிழலில்

மரத்தில் இருந்து
ஒரு துண்டாய்  உடைந்து
ஊர்ந்து பறக்கிறது
ஒரு பறவையின்
நிழலில்

அன்பொழுக
தன் குட்டியை நக்கி
கொஞ்சி மகிழ்கிறது
ஒரு பூனையின்
நிழலில்

கருவை சுமந்தபடி
பெருமூச்செடுத்து நடக்கிறது
ஒரு கர்பிணியோடு

ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறி மாறி
பயணித்த வெயில்
கடலில்  விழுந்து
பிரசவிக்கிறது
எண்ணிக்கையற்ற விண்மீனை

ழ 6 வது இதழ்

வருகை

கலையாத மேகங்களின் முன்னால்
காற்றுக்கு மிகவும் காத்திருந்து
அசைகின்ற மரஇலைகள் லேசாக
சோகம் காட்டும்.
முகம் வெளுப்பாய் கருமையில் சிவந்து
கன்றிப்போய் கன்னங்கள் வாடி கண் சோர்ந்து
தலைமுடி கலைய பார்வை உலர்ந்து அதுவும் முடியாமல் கைகளை
பின்னால் கோர்த்து நடந்து நடந்து களைத்துப் போய்
வானம் பார்த்து எப்போதோ ஒருமுறை கேட்கும்
மனது உறுத்தும் பறவைக்குரல் கேட்டு நனையும்
அவசரத்தின் அழைப்பாய் அடிக்கடி எழும்பும்
மணியோசை கவனத்தைக் கலைக்க வாடிய முகமும்
கூடியவயிறும் கைத்தாங்கி அணைத்துக்கொண்டே
உள்ளேசெல்ல வெண்சீறுடை செவிலியர் கண்டிப்பு
சாந்தம் கலந்த பார்வைக்கு ஓசையுடன் கூடிய சிறு
நடை கொண்டு வரும் செய்திக்காய் துடித்துப்போகும்
உள்ளே தாங்கமுடியாமல் அவதிப்படும் வலி
நீண்ட இரக்கமாய் கவலையுடனே கூட
எதிர்பார்பாய் மற்றெதுவும் மறிக்காமல்
அன்பே முதன்மையாய் மனது பொங்கி வழிந்தோடும்
நீ பெறப்போகும் இன்பத்தையும்
துன்பத்தையும் மற்றெல்லாவற்றையும்
விதியாய்க் கொண்டு வரும் அந்த
முதல் அழுகையை தயவுசெய்து பரவவிடு.

ஆர். ராஜகோபாலன்

பனிநிலா

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

ஆடையின் நூலிழைகளைக்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய் திணறும்

ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று

செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்

சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை

கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

2.
என் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் நான் பதவி உயர்வு என்ற பெயரில் ஊரைவிட்டு, வீட்டைவிட்டுப் போவதை விரும்பவில்லை.  நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பாவிற்கு பெரிய வருத்தம்.  மனைவிக்கு கவலை.  உண்மையில் நான் பதவி உயர்வு பெறுவதால் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது.  பெண் புலம்ப ஆரம்பித்தாள்.  ”ஏன்ப்பா என் திருமணம் நிச்சயம் ஆன நேரத்தில், நீ வீட்டில் இல்லாமல் இருக்கியே?” என்று. 
உண்மைதான்.  ஸ்ரீதேவி கல்யாணம் நிச்சயமான சமயத்தில்தான் எனக்குப் பதவி உயர்வு வாய்த்தது.  கல்யாணம் மே மாதம் நடக்கப் போகிறது.  எனக்கு பிப்ரவரி மாதம் இந்தப் பதவி உயர்வு கிடைத்து விட்டது.  ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஜனவரிமாதம் நிச்சயமாகிவிட்டது.  ஒருவிதத்தில் கல்யாணம் நிச்சயம் செய்தபிறகுதான் நான் கிளம்புகிறேன். 
அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழகியசிங்கர் ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்ய நானும் அலுவலகம் போகாமல் மட்டம் போட்டிருந்தேன்.  அழகியசிங்கரின் புதிய கதைத் தொகுதி வெளியாகியிருந்தது.  புத்தகம் பெயர் ராம் காலனி.  அழகியசிங்கர் பரபரப்பாகக் காட்சி அளித்தார். 
நானும், அவரும் ஒரே வங்கியில் பணிபுரிபவர்கள்.  ஒரே வயதுக்காரர்கள்.  எங்கள் இருவரையும் யாராவது பார்த்தார்கள் என்றால் ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என்பார்கள்.  நாங்கள் இருவரும் பீச்ஸ்டேஷன் எதிரிலுள்ள தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர்களாக வேறு வேறு துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தோம்.  இன்னும் சில ஒற்றுமைகளும் எங்களுக்குள் உண்டு.  நாங்கள் இருவரும் மேற்கு மாம்பல வாசிகள்.  இருவரும் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் இருப்பவர்கள்.  இருவருடைய மனைவிகளும் வேற வேற வங்கிகளில் பணிபுரிபவர்கள்.  எங்கள் இருவருக்கும் சொல்லி வைத்ததுபோல இரண்டு குழந்தைகள்.  என் பெண்ணிற்கு நான் திருமணம் ஏற்பாடு செய்வது போல் அவர் பெண்ணிற்கும் அவர் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். 
என் பையனும் அவர் பையனும் கோயம்புத்தூரில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் பல ஒற்றுமைகளும் பல வேடிக்கைகளும் எங்களுக்குள் உண்டு.  அதைப் பற்றி இன்னும் சொல்கிறேன்.
                                                                                                                           (இன்னும் வரும்)

வீழ்வது

 


குடை இல்லாமல் வெளியே
செல்வது
சரியல்ல-
வெயிலானாலும் சரி
மழையானாலும் சரி
அட் லீஸ்ட் ஒரு குல்லாயாவது தேவை
சிலருக்குக் கறுப்புக் கண்ணாடி
சிலருக்குக் குறுந்தாடி
எழுதும் வர்கமெனில் ஜோல்னாப்பை
கருப்புச்சட்டை
சிவப்புச் சட்டை
அல்லது
டிசைனர் துணிமணிகள்…
 
இப்போதெல்லாம்
மற்றபடியிருப்பது
டன் தின்ங் இல்லை-
ஓபனாக இருந்து
அதன் இயல்பான
உள்ளுரை முரண்பாடுகள்
மருத்துவரிடம் செல்லும்
கட்டாயத்தை ஏற்படுத்தி
ஏன் இந்த வீண் வம்பு?
 
இந்த ஞானம்
நமது கனவுக் கன்னிகளும் உண்டென்பது
உண்மைதானே
 
 
மெல்லச் சாகும் என்பது
ஒருவகை சாஸ்வதமே
ஏனெனில்
செத்துக் கொண்டிருக்குமே தவிர
சாவதில்லை
கலிபுருஷனல்லாவா
ஆள்கிறான்!
 
எல்லாமே ஒருவகை
சாலென்ஜ்/
மானேஜ் செய்யப்பட
வேண்டியது
எல்லாமே
ரிலேடிவ் மதிப்பு உள்ளவையே
கண்ணகிக்கும் சீதைக்கும்
ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்
 
துகில் உரிந்தால்
உள்ளது தெரியுமென்று
கடவுளரே எண்ணுவதாக
கதைத்தவர் பெரியோர்
சொல்லாமல் சொல்லிச் சென்றனர்-
 
நாமெல்லாம் எந்தமட்டு-
வண்டியிலேயே ப்ரெட் சாப்பிட்டு
விரைந்து
சிவப்பு சிக்னலில்
காத்திருக்கச்
செல்வோம்
நேரம் இல்லை
யாருக்கும்
நமக்கேயும் கூட
 
வீழ்வது நாமாயினும்
வாழ்வது நேரமே-
மெல்லச் செத்தாலும்…

 

பாஞ்சாலி சபதம்

 
 
தொலைபேசியில்
உன் முகம்
வாரந்தோறும் நிழலாடும்-
இது தவிர வேறென்ன
உன் நினைவு
பாலைவனத்து எண்ணைக் கிணறுகள்
டாலரின் முகம் காட்டி
உன் முகத்தைப் பறித்தது பழங்கதை
மறந்து போன கதை
 
நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ்
யாருடைய தாகத்தை
தணிக்காதே பெருக்கியதென்பதை
நீ அறியாதிருப்பதே நலம்-
 
காலையின் உதயம்
கலைந்ததைச் சரிசெய்யும்
உன் நினைவுகள்
அடுத்த வாரம் வரை
காத்தேயிருக்கும்-
 
ஒன்றில் மட்டும்
உறுதியுண்டு
சபதமென-
குழந்தையொன்று
பேறானால்
அது உன்னுடையதாகத்தான்
இருக்கும்
பிறக்கும்
இது
சத்தியமே
 

விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீட்டுச் சுவரை இடித்துவிட்டு
கதவுகளை மூடிக் கொள்பவர்கள்,
தெருவில் விளக்கிட்டுவிட்டு
வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்;

வாசலில் கோலம்போட்டு  உள்ளே
கோழி  வெட்டும் வீரர்கள்,
பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு
தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்;

பட்டுப் புடவைக் கட்டி
அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள்,
பட்டுப்பூச்சி வாழ்க்கையதை
விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்;

நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம்
பணம் கொடுத்தால் அகன்றாப் போகும்?
சற்றும் யோசனை இல்லா ஓட்டம்
இடையேக் கரண்ட்டுப் போனால் கத்துமாட்டம்;

மனிதம் வற்றிப் போன மனமே
மலைக்கப் பெரிதாய் தெரிவது இருட்டோ?
முழுக்க  முழுக்க விதிகளை தகர்த்து
சுயநல அரசியல் புரிதல் தகுமோ?

போய்; வீணாய் எரியும் விளக்கினை யணைத்து
இருண்டவீட்டில் வெளிச்சமூட்டு, அல்லது
வெட்டும் மின்களம் செய்து செய்து
முண்டத்தின் தலையில் விளக்கை ஏற்று;

அணுவை உடைத்து உயிரை குடிக்கும்
விளையாட்டொன்றில் விளக்கைப் பூட்டி,
எறியும் வெளிச்சத்தில் எம் எதிர்வரும் நாளில்
பிறக்கும் தலைமுறைக்கு ஆபத்தைக் கூட்டு;

மின்வெட்டு செய்யுமிடம்
வெள்ளைச் சட்டையின் கல்லாப்பெட்டி,
அதை உடைக்கும் அரசியல் படித்துமுடித்தால்
முடிவுக்கு  ஆகும் மின்களப் போட்டி;

செய்யவேண்டியதை  விட்டுவிட்டு நீ
பகலெல்லாம் லைட்டுப் போடு
யாருமில்லா அறையில் கூட ஃபேன் ஓட ஏசி போடு
பிரிட்ஜ் திறந்து மூடாமல் மூணாம் வீட்டு கதையைப் பேசு

மேடைகளில் யாரோ பேச
வீடுநெடுக வாசலில் டியூப் லைட்டு கட்டு
வேணும்னா குடிசைகளின் கரண்ட்டை நிறுத்தி
கோடிகளுக்கு லைன மாத்து

நடிகருக்கு கட்டவுட்டில் கலர் கலரா பல்ப் மாட்டி
அரசியல்வாதிக்கு டாய்லட் வரை நிற்காத ஏ.சி. யூட்டி
மேடைகளில் மின்னும் பல சீரியல் செட்டுப் போட்டு
கடைகளை, கடவுளை விளம்பரப்படுத்த –

போட்டிபோட்டு மின்செலவு கூட்டு
பகலில் கூட இனி இருண்டு போகும்
இரவில் கூட வியர்த்துக் கொட்டும்
அதை வழித்து வழித்து நெற்றியெல்லாம் கோமாளின்னு எழுதி ஒட்டு!

தனிமைக்குள் கடவுள் இருக்கலாகாது !

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

எனக்கு தோன்றவில்லை

கடவுள் எப்போதும்

இனிமையானவன்

தனிமை

சில நேரம் இனிமை

சில நேரம் துயரம்

கடவுள் எப்போதும்

பலம் வாய்ந்தவன்

தனிமை

சில நேரம் பலம்

சில நேரம் பலவீனம்

மிக நெருக்கத்தில்

தனிமையை தரிசித்தல்

சில நேரம் பரவசம்

சில நேரம் பெருவலி

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

என்னால் நம்பமுடியவில்லை

தனிமையில் அழுவதும்

கடவுள் முன் அழுவதும்

ஒரு வகை திருப்தி

என்பது உங்கள் வாதமா?

சமனற்றிருப்பதே

தனிமைக்கு  அழகு

ஒருவேளை கடவுள்

தனிமைக்குள் இருந்தால்

உடனடியாக

அவரின் வெளியேற்றத்தை

நான் விரும்புகிறேன்

அதோ என் அந்த

நாற்காலியில் அமர்ந்திருக்கும்

தனிமை

தனிமையில் கிடக்கட்டும்

உங்கள் வாதப்படி

கடவுள் அங்கிருந்தால்

உடனே அவரை

வெளியேற்றுங்கள் .

சொல்

 
குதூகலம்.
மகிழ்ச்சி.
சந்தோஷம்.
உவகை.
சொற்கள்
உணர்வின் அடையாளமாக
பரிமாறப்பட்டன.
திகட்டிவிட்டதென்று
எழுந்து கொள்ள முடியாமல்
முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.
அலுப்பு
சலிப்பு
வெறுப்பு
இயலாமை
சொற்களில்லாமல்
சொன்னது
உடல் மொழி.
சொற்கள்
முற்றுப்புள்ளியை
அழைத்து வந்து
பொருத்திக்கொண்டு
அமைதியாயின.
புன்னகை
புன்முறுவல்
குறும்புப்பார்வை
வெடுக்கென எழுதல்
உடல்மொழி
கட்டைவிரலை
உயர்த்திக்காட்டி
வெளியேறியது…
சொற்கள்
அமைதியாய்
காகிதத்தில் வந்தமர்ந்தன
கவிதையாக.
இறுமாப்புடன்
திரும்பிய
உடல்மொழி
கவிதையாக
உருக்கொண்ட
சொற்களைக்கண்டு
மோனமாகி
நெற்றி அகன்று
சிந்தனை வயப்பட்டது.
”வாய் வார்த்தையாகும் சொற்கள்
எழுத்துருவாகியும் பேசுகின்றன.”
சிந்தனையும்
சொற்களாகவே வெளிப்படுவதை
உணர்ந்த
உடல் மொழி
மரியாதையாய்
தலை குனிந்தது. 
சொற்கள் நிரம்பிய
கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் காற்றில் புரண்டன.