அன்பின் பிரார்த்தனை

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
அன்பையும்
சந்தேகித்தபடியே சில இதயங்கள்
அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணைகொண்டுக்
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன 
பேதமையின் உச்சத்தில்.
யார் யார் வாயிலாகவோ
சுற்றிச் சுற்றி முயன்றும்
தாம் தாமாகத்
தங்க முடியாத இடத்தில்
சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
விலகத் தொடங்குகிறது 
வேதனையுடன் அன்பு
அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
நச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்தித்தபடி.
***
 
 

புதிர் விளையாட்டு!

கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும் 
மிகுந்த வேட்கையிலிருந்தன

முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்

சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!
       
          

பிழை

நதி வெள்ளம்
கடல் நோக்கி
என்னவளின்
வீட்டின் கதவு
திறக்காது
தாமதமாய்ப் போனால்
மேகங்கள் தூது போகும்
என்னவளின்
செளக்கியத்தைச் சொல்லாது
மழை நீர் பேதம் பார்த்தா
மனிதனைத் தொடும்
பயணம் இரவுகளைத்
தொலைக்கும்
பிரிவு வரத்தை
யார் தான் வேண்டுவார்கள்
வெண்மேகம் கரைந்தோடும்
நினைவுப் போரலைகள்
விண்ணைத் தொடும்
நெஞ்சம் நிழலாடுகிறது
நிழல்கள் கூட
உன்னைப் போலவே
தெரிகிறது
எழுதுகோலில் மை
இருக்கிறது
கவிதை எதிரில்
உட்கார்ந்திருக்கிறது.

பூனைகள் உலகம்

1 –  நினைவுப் பூனை
____________________

அன்றொரு பூனை பார்த்தேன்
முதுகு தடவி கொடுக்க ஆளின்றி
கண்ணில் மென்சோகம் கவிழ்ந்து
மெதுவாய் நடந்து சென்றது
.
பூனையின் சொந்தக்காரன்
இழுத்த இழுப்பில்
கழுத்தில் பட்டையொடு
விரைந்ததப் பூனை
.
பின்னொருநாளில்
அந்த பூனையைப் பார்க்கையில்
சோகம் கழிக்க என்று
கையேந்த  யோசித்த நேரம்
கையில் கீறி
ரத்தம் சொட்டச் செய்தது
வீட்டுப் பூனையின் நினைவு

****

2 – பூனையின் குரல்
_________________

நாயும் பூனையும்
நித்தம்  சண்டையிடும் வீட்டில்
நாயின் குரல் ஓங்கி இருந்தது
இருவரையும் நிறுத்தச் சொல்லிக்
கத்தி சென்றான்
வீட்டுக் காரன்

பூனையின் குரல் அவனிடமும்
வழக்கம் போலவே
தாழ்ந்திருந்தது.

உன் நியாயத்தை
எஜமானனிடமாவது
 எடுத்து சொல்
என்றேன் பூனையிடம்

என் அடிமைகளிடம் நான்
அதிகம் பேசுவதில்லை
என்றது அந்த பூனை.
******

3  –  இளிச்சவாய் பூனை.
___________________

மகளின் கதைப் புத்தகத்தில்
அறிமுகமானது அந்த பூனை
காதளவு நீளும் புன்னகையுடன்

உனக்கும்  சிரிப்புக்கும்
சம்பந்தம் இல்லை என்றேன்
சிரிப்பை எனக்களித்து
ஓடிப் போய்விட்டது.

இப்போதெல்லாம் நிறையபேர் 
ஏளனம் செய்கிறார்கள் என்னை
இளிச்சவாய் பூனையென்று.

உருவம் காட்டாமலேயே
தோளமர்ந்து சிரிக்கிறது
ஆலிஸின் பூனை

மிதக்கும் பல்லி

 

அந்த பல்லி
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ஒப்பனையில்
பறந்து சென்றது
செயற்கைகோளின் துணையுடன்.

அதை
மரப்பல்லி , காட்டுப்பல்லி,பறக்கும்பல்லி
என்றனர் சிலர்
அது பெண் பல்லி என்பது
மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

பல்லிக்கு இறக்கை கட்டினால்
பறவையாகிவிடுமா?
பல்லி வளருமா? யாராவது வளர்ப்பார்களா?
பல்லி இழந்த வால் என்னவாகும்?
என விவாதித்தனர் சிலர்.

பல்லி எதிர்காலத்தில் வளர்ந்து
டைனோசர் ஆகி விடுமா என்றஞ்சியோர்
‘நீ பல்லியே அல்ல – கொசுதான்’
என போதித்தனர் அதன் காதில்.

பல்லி இனம் அழிந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே
எனக்கூறிக் கொண்டே அதன் தலையை
நசுக்க வந்தோரிடம்
தன் தலையை கழற்றிவிட்டு விட்டு

பிரபஞ்சபத்தில் மிதக்கத் தொடங்கியது பல்லி
•••

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

ஒரு கவிதை

 இந்தக் காலத்தில்
 பிரும்மத்தை
 கள்ளச் சந்தையில்
 விடீயில்
 மந்திரிகளின் பொய்களில்
 எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
  அவசரத்தில்
 தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்தான்
 காணமுடியும் போலிருக்கிறது.
   -மீண்டும்-
 இந்தக் காலங்களில்
 தெய்வத்திற்கும் (கூட) ஊர்
 சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
 என நினைத்தேன்-
 சினிமாவெறும் கோவிலில்
 நேற்று இரவு அவள் வந்தாள்
 சிரித்தாள்
 சொல்லறுற்றாள்
 ”எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை”
   

    S SAMPATH

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

பாகங்களாக உடைந்திருக்கிறது

அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு
தென்படும் முழு நிலவு
விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன
வனத்தின் எல்லை மர வேர்களை
தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்
இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்
காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை
ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்
வலையினில் சிக்கிக் கொள்கிறது
தண்ணீரில் முளைத்த பௌர்ணமி
வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று
ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ
எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்
சலசலத்து எழுப்பும் இசை
தேனீக்களுக்குத் தாலாட்டோ
எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,
சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு
தூய மலர்களோடு அணிவகுக்கும்
வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு
வழிகாட்டும் நிலவின் விம்பம்
அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது
நீரின் மேல் மிதந்த நிலவு
அசைந்து அசைந்து மூழ்கும் காலை
தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்
தொலைதூரச் செல்லும் பறவைகள்
தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு
தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

புத்தரின் நிழல்


 
வீட்டு வரவேற்பறையில்
புத்தர் சிலை முன்
ஏற்றப்படும் தீபத்தின் கைங்கரியம்.
அறையிருட்டில்
புத்தர்
உயிர் பெற்று
விஸ்வரூபமெடுக்கிறார்.
இலேசான காற்றில்
தீபச்சுடர் ஆடுகையில்
புத்தரின் நிழல்
தலையசைத்து
மௌனப்பிரவசனம்
செய்வதாக தோன்றும் எனக்கு.
மின்வெட்டு முடிந்து
வெளிச்சம் திரும்பினால்
அசையும் நிழல் புத்தர் மறைந்து விடுகிறார்.
புத்தர் சிலை மட்டும் வீற்றிருக்கும்.
புத்தர் மீண்டும் உயிர் பெற
இருட்டுக்காக காத்திருக்க வேண்டும்



Thanks and Regards
Ganesh
Tel : +91 9910120872

 
Buddha's shadow.jpg Buddha’s shadow.jpg
1643K  

சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..


ஜன்னல் திரை விலகிய
நுண்ணிய கணத்தில்
கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை
என்ன செய்ய
சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின்
கீழ் இடுக்கு வழியே
எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக
இழுத்துப் போகும் அந்த எறும்புகளை
எப்படி அதட்ட
பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும்
கார்ப்பரேஷன் மரத்தின்
அடர்த்திக் கிளையிலிருந்து
சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும்
அணில்களை எப்படி புரிய வைக்க
உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி
நுழைந்துவிட்டவன் நானென்று
******

மராத்திய மொழியில் ஹைக்கூ கவிதைகள் – ஓர் அறிமுகம்*

மராத்தியம் என்றவுடன் நினைவிற்கு வருவது சிவாஜியும் தஞ்சாவூர் பக்கம் (இப்போது எங்கும்) வாழும் மராத்தி பேசும் தமிழ் நண்பர்களுமே. பம்பாய் செல்லும் வரை எனக்கும் அப்படியே.
2008-இல் பெங்களூரில் ஒரு அகில உலக ஹைக்கூ திருவிழா (சம்மேளனம் போன்ற ஒன்று ) இருந்த போது அதற்காக மராத்திய மொழியில் ஹைக்கூ என்பது பற்றி பேச ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஏகமனதாக மராத்திய நண்பர்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஷிரிஷ் பை. மிகவும் வயதுமுதிர்ந்த அம்மையார் தன்னுடைய வயதின் காரணமாக வர முடியாதென்று பூஜாவை அறிமுகம் செய்தார்.
மராத்திய மொழி பேசும் மக்கள் ஒன்பது கோடிக்கும் மேல் என்பதும் 1300 வருஷங்களுக்கும் மேற்பட்ட பழமை உடையது என்பதும் சிலர் அறிந்ததே.
  
மராத்திய மொழியில் நான்கு வரி கவிதைகள் உண்டு- அவை சரொளி, கனிகா. வத்ரடிகா மற்றும் பல.  ஹைக்கூ என்பது இவற்றில் ஒன்றாக இல்லாமல் தனி வடிவமாகவே பேசப்படுகிறது.
சில முக்கியமான வித்தியாசங்களை மராத்திய ஹைக்கூ உலகில் வெகு சுலபமாக யாராலும் கண்டுவிட முடியும்.
5-7-5 என்ற சிலபள் முறை இங்கு காணப்படுவதில்லை. இந்தி ஹைக்கூ எழுத்தாளர்களிடையே இந்த வரிசை முறை பெரும்பாலும் காணப்படுகிறது. மற்ற எந்த இந்திய அல்லது ஆங்கில மற்றும் பிரென்ச் மொழியில் உள்ள ஹைக்கூ கவிதைகளில் 5-7-5 என்பது அவ்வளவு கறாராக கடைபிடிக்கப் படுவதில்லை. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படும் முக்கிய காரணம் ; ஜப்பானிய மொழியின் எழுத்துக்களும் இலக்கண அமைப்பும் வேறெந்த மொழிகளிலும் காணப்படாததால், இந்த
5-7-5 அமைப்பின் கட்டாயம் மற்ற மொழிகளில் ஹைகூவின் அழகையும் கவித்வத்தையும் சொல்லாட்சி பாங்கையும் அழிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று பெரும்பான்மை அபிப்ராயம் பரவாலக உண்டு. மராத்தியமும் இதற்கு விலக்காக இல்லை.
மற்ற மொழி ஹைகூக்களைப் போல மராத்திய ஹைகூக்களும் கீழ்க்காணும் அம்சங்களைக் கொண்டே உள்ளன.
ஹைகூவின் நொடித்துளி ( மொமென்ட்)
ஹைக்கூ அனுபவம்
காட்டுதல் – ( சொல்லுதல் அல்ல; விளக்குதல் அல்ல)
தன் சிந்தனையை ஏற்றாமல் உள்ளது உள்ளபடி காட்டல்
மிகச் சொற்பமான சொற்கள் ( இதற்கும் மேலே சொற்களைக் குறைத்தால் ஹைகூவில் குறை ஏற்படும் என்ற அளவில்) -tight expression
திடீரென மின்னல் பளிச்சிடுவது போன்ற ஒரு வெளிச்சம் அல்லது அறிதல் – ஆங்கிலத்தில் ஆஹா மொமென்ட் என்பது போல.
ஆனால், பெரும்பாலும் எங்கும் காணப்படாது, மராத்தியத்தில் மட்டும் காணப்படுவது என்பது மோனை ( rhyme).  பெருமளவில் எல்லா மராத்திய ஹைக்கூ கவிகளும் மூன்றாம் வரியை இரண்டாம் வரியுடனோ அல்லது முதல் வரியுடனோ ரைம் செய்யும்படியே எழுதுகிறார்கள்.
ஹைகூக்களை இவர்கள் இரண்டு பகுதிகளாகக் காண்கிறார்கள்.  ஒரு பகுதி மற்றொன்றின் பொருளை மேம்படுத்தும். ஒரு பகுதி மற்றொன்றுக்கு ஒரு முறுக்கு அல்லது புரட்டு என்ற வகையில் அமையும் – அதாவது ஒரு ட்விஸ்ட் கொடுக்கும்.
மற்றொரு முக்கிய அம்சம்- ஹைகூக்கள் அன்றாட நடைமுறை உரையாடல் அமையும் சொற்பிரயோகம் கொண்டே எழுதப் படுகின்றன.
மற்ற மொழிகளைப்போலவே இங்கும் இயற்கையை  அல்லது சூழலை 
கூர்ந்து – ஆழ் நிலை தியான பாங்கிலே- பார்க்கும் (intense awareness) தன்மை  ஹைகூ எழுதுவோரிடை காணலாம். இந்த பார்த்தலில் முன்னொன்றில்லாத திறந்த (ஓபன்) தன்மை அடிப்படையாய் காணப்படும். ஐம்புலன்களின் ஊடே – பார்வை, கேட்டல், சுவை, ஸ்பரிசம், வாசம்- அறியப்படும் விஷயங்கள் மட்டுமே இருக்கும். இதில் மனம் என்ற ஒன்று குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 
பருவ காலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு சொல் , நேரடியாகவோ அல்லது அந்த பருவ காலம் சம்பந்தப் பட்ட ஏதாவது ஒரு குறியீட்டுச் சொல்லாலோ ஹைகூவில் காணப்படுகிறது. இம்மாதிரி சொற்கள் இல்லாத ஹைகூக்கள் இல்லவே இல்லையென்று சொல்ல முடியாது.
பருவம் சம்பந்தப் படாத மனித வாழ்வு – நடைமுறை, அன்றாட வேலைகள், மனித முரண்பாடுகள் காணும் செய்கைகள் – இவைபற்றிய ஹைகூக்களை மராத்திய மொழியில்- ஹைகூசாட்ருஷ் ரச்சனா –   “haikusadrush rachana” ( ஹைக்கூவைப் போன்ற கவிதை என்ற பொருளில்)  என்று சொல்கின்றனர்.
ஹைக்கூ கவிதை என்று சொல்லும் வழக்கம் இல்லை. ஹைக்கூ என்றாலே ஹைக்கூ கவிதை என்றே பொருள். ஹைக்கூ எழுதுபவர்களை ஹைஜீன் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று. சிலர் ஹைகூஇஸ்ட் (haikuist) ( similar to novelist) என்றும் சொல்லுவது உண்டு.
1975 முதல் ஹைக்கூ எழுதிவரும் ஷிரிஷ் பை மராத்திய இலக்கிய உலகில் ஒரு பிரபல எழுத்தாளரும் ஹைஜீனும் ஆவார். மராத்திய ஹைக்கூ பற்றிய எந்த ஒரு நூலும் கட்டுரையும் ஷிரிஷ் பை பற்றிய குறிப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவர் ஒரு பிரபலமான பொது வாழ்வு புள்ளி மட்டுமன்று. மராத்திய ஹைக்கூ மூவ்மென்ட் என்று சொன்னால் அதன் முன்னோடி ஷிரிஷ் பை ஆகும். ஐந்துக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்களும் , கட்டுரைகளும், ஜப்பானிய மொழியிலிருந்து மராத்தியமொழியில் மொழி பெயர்ப்புகளும் இவரது படைப்புகளாகும். இவரது படைப்புகளும், மற்ற ஹைஜீன்களின் மராத்திய நூல்களுக்கு இவர் எழுதிய முகவுரைகளும் பல ஹைஜீன்களுக்கு வழிகாட்டிகளாய் உள்ளதென்று மராத்திய ஆர்வலர்கள் சொல்கின்றனர். உலக அளவில் மராத்திய ஹைக்கூ பிரபலமானதிற்கு ஷிரிஷ் பை மட்டுமே காரணம் என்றும் பலர் கருதுகின்றனர்.
அடுத்தும் வரும் வரும் சில கட்டுரைகளில்
1 ஷிரிஷ் பை, மற்றும் பூஜா மலுஷ்டே, ஷாந்தா ஷேலகே, சுரேஷ் மாதுரே,  மனோகர் தொடாங்கர் மற்றும் சிலரது ஹைகூக்களைக் காண்போம்.
2 . ஷிரிஷ் பை பற்றும் பூஜா மலுஷ்டே இருவரையும் நான் கேட்ட சில கேள்விகளையும் அவர்கள் அளித்த பதில்களையும் காண்போம்.
** இந்த கட்டுரை எழுதுவதில் பெரிதும் உதவியது பூஜா மலுஷ்டே. மராத்தி தெரியாத நானும் தமிழ் தெரியாத பூஜாவும் செய்த அவியல் இது. ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 .