Category: கவிதை
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
நாம் பறவை மரம்
கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை
கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு
இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு
ரவிஉதயன்
சுத்தம் சோறு போடும்
வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு
கரடி
பொம்மைகளை வெறுக்கும்
பெண்ணொருத்தி பாண்டிபஜாரில்,
தன் தோழிக்குப் பரிசளிக்க
பெரிய கரடி பொம்மை வாங்கினாள்.
அதன் தலையைப் பிடித்துத்
தூக்கிக் கொண்டு நடந்தவள்
வாகாக இல்லாததால்
வேறு வழியின்றி
அதைக் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்.
ரங்கநாதன் தெருவைக் கடக்கையில்
கரடி அவள் தோள் மேல் சாய்ந்து கொண்டது.
மின்வண்டியில்
பக்கத்தில் இடமிருந்தும்
தன் மேலேயே வைத்துக்கொண்டாள்.
குளிர்காற்று வீசியபோது
கரடி அவளைக் கட்டிக்கொண்டது.
“டேய் விடுடா என்னை”
என்று அதட்டினாள்.
முகுந்த் நாகராஜன்.
THREE POEMS
இக்கரைக்கு அக்கரை பச்சை
எப்ப பார்த்தாலும்
எதிர் வீட்டு கனவானிடம்
என்னை ஒப்பிட்டுப் பார்த்தால்…
கதவைத் திறந்ததும்
இருட்டு கடை அல்வாவை
எதிர்பார்த்து
கைகளைத் துழாவும்
குழந்தைகளின் கண்கள்
மனோவேகத்திற்கு
உடல் ஒத்துழைக்கவில்லை
நீந்தத் தெரியாதவன்
கடலில் மீன் பிடிக்க போன
கதை
கவரிங் நகை வாங்கக்கூட
யோசிக்க வேண்டியிருக்கிறது
இதில் தங்கத்திற்கு
எங்கே செல்வது
படியளக்கிறவன்
பரிதாபம் பார்ப்பதால்
மூன்று வேளையும்
வயிற்றை நிரப்ப முடிகிறது
பிள்ளைங்க என்ன கிளாஸ்
படிக்கிறாங்க என்று கேட்டால்
யோசிக்க வேண்டியிருக்கிறது
சர்க்கஸ் கலைஞன்
சிங்கத்தின் வாயில்
தன் தலையை
கொடுப்பது போல்
வாழ்க்கை எங்களை
வேட்டையாடத் துடிக்கிறது
நோஞ்சான்
நாய் துரத்தினால்
எப்படி இவ்வளவு வேகமாக
ஓடுகிறான் என வியந்ததுண்டு
ஓடிக்களைத்து ஓரிடத்தில்
நின்று பார்த்தால் தான்
தெரிகிறது
துரத்தியது நாயல்ல நிழலென்று
பிச்சைக்காரர்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் திருவோடு ஏந்துவது
போலுள்ளது.
வடு
படுக்கையிலிருந்து எழுந்திருக்க
மனம் வரவில்லை
வங்கிக் கணக்கை வைத்து
எடைபோடும்
மனிதர்கள் மத்தியில்
வாழ வேண்டியிருக்கிறது
தோணி முன்னேறிச் செல்ல
துடுப்பை வலிக்க வேண்டுமென
யாருக்குத்தான் தெரியாது
எல்லாக் கதவுகளையும்
தட்டிப் பார்த்துவிட்டேன்
திறக்காது என்று
எனக்குத் தெரியாது
வக்கத்துப் போனவனுக்கு
வாழ தகுதியில்லை
என்று சமூகம்
கைகொட்டிச் சிரிக்கிறது
அமுதத்தையே சாப்பிட
கொடுத்தாலும்
நாய் நரகலைத் தான்
தின்னும்
எது எப்படியோ
இன்னொரு காயப்படுத்த
காத்திருப்பவனை நோக்கி
இந்தக் காலையில்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.
விகாரம்
இந்த பாதை
எங்கு போய் முடிகிறது
விதி சகதியில் அமிழ்த்தி
வெளியே தூக்கி எறிந்த போது
பேரண்ட சக்தி
தலைவிரி கோலமாய்
தாண்டவம் ஆடியது
மனிதர்கள்
அருவருப்பு அடையும்
போது தான் தெரிந்தது
எனது கோர ரூபமும்
விகாரமான
என் ஜடாமுடியும்
காலணி இல்லாமல்
கத்திரி வெயிலில்
நடந்தாலும்
பாதங்கள் சூடு பொறுத்தது
ஆனால் அன்றைக்கு
மனம்
சொல் பொறுக்கவில்லை
ஏற்கனவே இறந்தவன்
நடந்து செல்கிறேன்
ஆழ்ந்த உறக்கத்தில் லயிப்பவன்
பாடையில் போகிறான்
வழிநெடுகிலும் எத்தனை
கோயில்கள்
அடியவர்களுக்கு
சிவனாக மட்டுமே
இருந்திருக்கலாம்
சைவ நெறியை
மீறாமல் நடந்திருக்கலாம்
பிட்டுக்கு மண்
சுமந்தவனிடமா
பிச்சை கேட்பது
பித்தனிடமா
சகலத்தையும் ஒப்படைத்து
சரணடைவது.
ப.மதியழகன்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
Two poems
கவி
சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல
எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல
புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்
ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..
வீடு
சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்
வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .
தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன
கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல
எப்போதாவது தான்
பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.
நான், பிரமிள், விசிறி சாமியார்………….17
சரி, பிரமிள் என்னமாதிரியான உடை உடுத்திக்கொள்வார். எத்தனை எண்ணிக்கை உள்ள சட்டைகள் வைத்திருந்தார். எத்தனை பாண்ட் அவர் வைத்திருந்தார். அதெல்லாம் அவருடன் பழகும்போது நான் கவனித்ததே இல்லை. அவருடன் விசிறி சாமியாரைப் பாரக்கச் சென்றபோது, அழுக்கான உடையுடன் விசிறி சாமியார் காட்சி அளித்தார். அழுக்கான உடையில் இருந்தாலும் அவர் முகத்தில் காணப்படும் தேஜஸ் ஆச்சரியமாக இருக்கும்.
முழுமையாக மூன்று வேளை சாப்பாடு அவருக்குக் கிடைத்ததில்லை. இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். ஒரு நல்ல புத்தகம் படித்தாலும் சரி, ஒரு நல்ல சினிமா பார்த்தாலும் அதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் இருக்க மாட்டார். இதோ அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்ல முயற்சி செய்கிறேன்.