THREE POEMS

யாத்ரிகன்

இக்கரைக்கு அக்கரை பச்சை
எப்ப பார்த்தாலும்
எதிர் வீட்டு கனவானிடம்
என்னை ஒப்பிட்டுப் பார்த்தால்…
கதவைத் திறந்ததும்
இருட்டு கடை அல்வாவை
எதிர்பார்த்து
கைகளைத் துழாவும்
குழந்தைகளின் கண்கள்
மனோவேகத்திற்கு
உடல் ஒத்துழைக்கவில்லை
நீந்தத் தெரியாதவன்
கடலில் மீன் பிடிக்க போன
கதை
கவரிங் நகை வாங்கக்கூட
யோசிக்க வேண்டியிருக்கிறது
இதில் தங்கத்திற்கு
எங்கே செல்வது
படியளக்கிறவன்
பரிதாபம் பார்ப்பதால்
மூன்று வேளையும்
வயிற்றை நிரப்ப முடிகிறது
பிள்ளைங்க என்ன கிளாஸ்
படிக்கிறாங்க என்று கேட்டால்
யோசிக்க வேண்டியிருக்கிறது
சர்க்கஸ் கலைஞன்
சிங்கத்தின் வாயில்
தன் தலையை
கொடுப்பது போல்
வாழ்க்கை எங்களை
வேட்டையாடத் துடிக்கிறது
நோஞ்சான்
நாய் துரத்தினால்
எப்படி இவ்வளவு வேகமாக
ஓடுகிறான் என வியந்ததுண்டு
ஓடிக்களைத்து ஓரிடத்தில்
நின்று பார்த்தால் தான்
தெரிகிறது
துரத்தியது நாயல்ல நிழலென்று
பிச்சைக்காரர்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் திருவோடு ஏந்துவது
போலுள்ளது.

வடு

படுக்கையிலிருந்து எழுந்திருக்க
மனம் வரவில்லை
வங்கிக் கணக்கை வைத்து
எடைபோடும்
மனிதர்கள் மத்தியில்
வாழ வேண்டியிருக்கிறது
தோணி முன்னேறிச் செல்ல
துடுப்பை வலிக்க வேண்டுமென
யாருக்குத்தான் தெரியாது
எல்லாக் கதவுகளையும்
தட்டிப் பார்த்துவிட்டேன்
திறக்காது என்று
எனக்குத் தெரியாது
வக்கத்துப் போனவனுக்கு
வாழ தகுதியில்லை
என்று சமூகம்
கைகொட்டிச் சிரிக்கிறது
அமுதத்தையே சாப்பிட
கொடுத்தாலும்
நாய் நரகலைத் தான்
தின்னும்
எது எப்படியோ
இன்னொரு காயப்படுத்த
காத்திருப்பவனை நோக்கி
இந்தக் காலையில்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

விகாரம்

இந்த பாதை
எங்கு போய் முடிகிறது
விதி சகதியில் அமிழ்த்தி
வெளியே தூக்கி எறிந்த போது
பேரண்ட சக்தி
தலைவிரி கோலமாய்
தாண்டவம் ஆடியது
மனிதர்கள்
அருவருப்பு அடையும்
போது தான் தெரிந்தது
எனது கோர ரூபமும்
விகாரமான
என் ஜடாமுடியும்
காலணி இல்லாமல்
கத்திரி வெயிலில்
நடந்தாலும்
பாதங்கள் சூடு பொறுத்தது
ஆனால் அன்றைக்கு
மனம்
சொல் பொறுக்கவில்லை
ஏற்கனவே இறந்தவன்
நடந்து செல்கிறேன்
ஆழ்ந்த உறக்கத்தில் லயிப்பவன்
பாடையில் போகிறான்
வழிநெடுகிலும் எத்தனை
கோயில்கள்
அடியவர்களுக்கு
சிவனாக மட்டுமே
இருந்திருக்கலாம்
சைவ நெறியை
மீறாமல் நடந்திருக்கலாம்
பிட்டுக்கு மண்
சுமந்தவனிடமா
பிச்சை கேட்பது
பித்தனிடமா
சகலத்தையும் ஒப்படைத்து
சரணடைவது.

ப.மதியழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *