நான், பிரமிள், விசிறி சாமியார்………….16

அழகியசிங்கர்
இந்தத் தொடரை எழுதவே தோன்றாமல் நிறுத்திவிட்டேன்.  பிரமிளைப் பற்றி இன்னும் என்ன எழுதுவது என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். பிரமிளின் கடைசித் தினங்களைப்பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பாரதியார் பற்றி புத்தகம் தூரன் எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பேன்.  பாரதியாரின் மரணம் எனக்குப் படித்தபிறகு பெரிய துக்கமாக இருக்கும்.  அவர் வாழ்ந்த இடத்தையும், பார்த்தசாரதிக்கோயிலையும் இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 
நோபல் பரிசு பெற பாரதியார் தாகூருடன் போட்டிப்போடுகிறார்.  அந்தத் திறமை பாரதியாருக்கு உண்டு.  ஆனால் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை மிகக் கொடூரமானது.  அதிக ஆயுளுடன் அவர் இருந்திருந்தால், அவர் நோபல் பரிசுகூட வாங்கியிருப்பார். 
பிரமிளை எடுத்துக்கொள்ளுங்கள்.  56வயது சாகக்கூடிய வயதே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.  வறுமை அவரைப் பற்றிக்கொண்டு விடவில்லை என்பது உண்மை.  ஆனால் அவரிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் கஞ்சா புகைப்பார் என்று எனக்கு சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அவர் குடிப்பாரா என்பதுகூட எனக்குத் தெரியாது.  என் எதிரில் அவர் குடித்தது இல்லை.
அவருக்கு எப்போதும் இருப்பது.  பசி.  பசி.  அந்தப் பசி ஒரு ஏழையின் பசி.  தீவிரமான பசி.  அவர் சாப்பிடும்போது ரசித்து சாப்பிடுவார். சாப்பிட்டப்பிறகு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்.  ஒரு சாப்பபாடு சாப்பிட்டதற்கே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மனிதர் பிரமிள்.  எனக்கு இன்னும்கூட அவருக்கு சாப்பாடு வாங்கித் தரவேண்டும் என்று தோன்றும். 
நான் இன்னும் குறிப்பிட வேண்டியது அவருடைய நடை.  எந்த இடத்திற்கும் அவர் நடந்தே சென்றுவிடுவார்.  வேகமாக நடப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவருக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் வர வாய்ப்பே இல்லை. 
ஆனால் வயிற்றில் வந்துவிட்டது.  மஞ்சள்காமாலை நோய் அவரை வாட்டி எடுத்துவிட்டது.  இதுகூட அவர் கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் தொற்றிக்கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.  ஆரோக்கியமற்ற இடங்களில்தான் அவர் குடியிருந்தார். இன்னும்கூட எத்தனையோ பேர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  பிரமிள் உழைக்க விரும்பவில்லை.  என் நண்பர் ஒருவர் அவரைப் பற்றி குறிப்பிடும்போது, பிரமிளுக்கு ஒரு இடம் கொடுத்து, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தால், அவர் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருப்பார் என்று. ஆனால் அவர் குறைந்த அளவுகூட உழைக்கத் தயாராய் இல்லை. 
நான் பலபேர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பவர் ஒரு டூவீலருடன் வந்து உழைத்துவிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.  கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர்கள், டூவீலரில் எல்லா இடங்களுக்கும் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.  தினசரி தாள்களைப் போடுபவர்கள் கூட ஒரு வண்டியைப் பயன்படுத்தி வாழக்கைக்குத் தேவையானதைச் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். 
ஆனால் பிரமிள் சம்பாதிக்கவே இல்லை. மிக நெருங்கிய நண்பர்கள் அவருக்கு பலவிதங்களில் உதவி செய்தார்கள்.  டேவிட் சந்திரசேகர் என்ற நண்பர்.  சிண்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.  பிரமிளுக்கு உதவி செய்திருக்கிறார்.  அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார்.  அவர் இறந்தது இருக்கட்டும்.  பிரமிள் என்ன சொல்வாரென்றால், அவர் இதுவரை இருந்ததே எனக்கு உதவி செய்வதற்காகத்தான் என்று.  பிரமிள் இப்படிச் சொல்வதை நான் ரசிக்க மாட்டேன்.
ராமானுஜம் என்ற நண்பர் பிரமிள் பணம் கேட்காமலயே அவர் பாக்கெட்டில் பணம் வைப்பார்.  அந்த ராமானுஜத்தை ஓவராக கஞ்சா அடிப்பதிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று பிரமிள் என்னிடம் கூறுவார்.  ஜே கிருஷ்ணமூர்த்திதான் ராமானுஜத்தைக் காப்பாற்றியதாகவும் மேலும் பிரமிள் குறிப்பிடுவார்.  வங்கியில் சம்பாதித்துக்கொண்டிருந்த ராமானுஜம் இருக்கிற வேலையும் விட்டுவிட்டு எல்லாரிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.  என்ன சோகம் என்று எனக்குத் தோன்றும்.
                                                                                                                              (இன்னும் வரும்)
a

One Reply to “நான், பிரமிள், விசிறி சாமியார்………….16”

  1. அன்புள்ள…

    பிரமிளின் கவிதைகளை எண்பதுகளில் நான் வாசித்திருக்கிறேன். அவரைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரது கவிதைகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள் அறிய ஆவலாக இருக்கிறேன்.

    ஒரு வேண்டுகோள் மாயவரத்தில் ரயில் நிலையத்தில் நவீன விருட்சம் வாங்குவேன். இப்போது அங்குஇதழ் தருகிறீர்களா?

    சந்தா விவரம் தெரிவித்தால் உடன் அனுப்பிவைப்பேன்.

    மாயவரத்தைக் கடக்கும்போதெல்லாம் உங்களைச் சந்திக்கவேண்டும் என்கிற ஆவல் இன்னும் குறையாதிருக்கிறது. எப்படியும் சந்திப்பேன் அதற்கான வாய்ப்பை விரைவில் ஒதுக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *