பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

….
அழகியசிங்கர்
முன்கதைச் சுருக்கம்
அழகியசிங்கரின் கதாபாத்திரமான பத்மநாபன் 50வது வயதில் பதவி உயர்வு பெற்று கும்பகோணம் செல்வதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பத்மநாபனை விட்டுப் பிரிவது என்பதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
4.
கும்பகோணத்தில் வட்டார மேலாளரை பத்மநாபனுக்குத் தெரியும்.  நேரிடையாக அவரிடம் பேசினார்.  ”சார், நான் கும்பகோணத்திற்கு வருகிறேன்.  மயிலாடுதுறையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்.  அஙகுள்ள பிராஞ்சில் எனக்கு போஸ்டிங் தரமுடியுமா?”
”அது முடியாது.  எதாவது நல்ல பிராஞ்சா பாத்துப்போடறேன்.”
”அப்படி இல்லாவிட்டால், மயிலாடுதுறையிலிருந்து போகும்படி எதாவது பிராஞ்ச் தர முடியுமா?”
”பார்க்கிறேன்.”
அவர் பார்க்கிறேன் என்று சொன்னது.  பந்தநல்லூர் என்ற கிளையை.  மயிலாடுதுறை கும்பகோணம் இடையில் உள்ள இடம் இந்த பந்தநல்லூர்.  மயிலாடுதுறையிலிருந்து 28கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர்.
என்னடா இது ஏதோ ஒரு கிராமத்தில் போய் மாட்டிக்கொள்கிறோம் என்று தோன்றியது.  கிராமத்திற்குப் போய் பணிபுரியும்   வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை.  அதுவும் 50வயதிற்குப் பிறகு. மடமடவென்று சேரும்படி உத்தரவு வந்தது. 
நான் டாக்டர் செல்வாவைப் போய்ப் பார்த்தேன்.  ”என்ன டாக்டர், பதவி உயர்வு என்ற பெயரில் பந்தநல்லூர் போகலாமா?” என்று கேட்டேன். 
”தாராளமாகப் போகலாம்..”
”நான் பிராப்பர்டிஸ் வச்சிருக்கிறேனே?”
”எல்லோருக்கும் அதெல்லாம் உண்டு.  மருந்து சாப்பிட்டி சரி பண்ணலாம்…” என்றார்.  பின் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டேன்.
இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  உடம்பு நினைத்து நான் பயப்படுவேன்.  அபிராமன் குறித்து நான் சொன்ன நிகழ்ச்சியைத்தான் அழகியசிங்கர் ஒரு கதையாக எழுதியிருந்தார்.  நேற்றிருந்தவன் என்பது அந்தக் கதையின் பெயர். 
முதல்நாள் என்னைப் பார்க்க வந்த அபிராமன், அடுத்தநாள் இறந்து கிடக்கிறான். இது என் 20 வயதில் நடந்த கதை.  அபிராமன் படித்தும் வேலை கிடைக்கவில்லை.  அவனுடைய இதயத்தில் ஒரு ஓட்டை.  அதைச் சரிசெய்ய அறுவைசச் சிகிச்சைச் செய்ய வேண்டும்.  பணம் தர யாரும் தயாராய் இல்லை.  அபிராமன் ஒரு சனிக்கிழமை கக்ககூஸில் மார்பில் ஏற்பட்ட எதிர்பாராத வலியுடன் இறந்து கிடந்தான்.  முதல் நாள் காலையில் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான்.  அவனிடமிருந்து பேனா வாங்கிக்கொண்டேன்.  பேனா வியாபாரம் செய்வதாகச் சொன்னான்.  அவனுக்காக இரக்கப்பட்டு பேனா வாங்கிக்கொண்டேன்.  பாட்டி போட்டுக்கொடுத்த கசப்பான காப்பியைக் குடித்தான். என்னுடன் அலுவலகம் போகும் வழி வரை வந்துகொண்டிருந்தான்.  நானும் அவனும் தெரு முக்கில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்.  அந்த இடம் வரை வெள்ளிக்கிழமை அவனைப் பார்த்தேன். 
சனிக்கிழமை அவன் வீட்டு வழியாக மாலை வந்துகொண்டிருந்தபோதுதான் தெரிந்தது அவன் இறந்தது.  வீடு முழுக்க தண்ணீரால் அலம்பி விட்டிருந்தார்கள்.  அவன் சாப்பிட வேண்டுமென்று நினைத்த காப்பி சாப்பிடாமல் கருத்த நிறத்தில் அப்படியே இருந்தது.  அன்று அவன் சடலத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.  இதுதான் கதை. நிஜ நிகழ்ச்சி எப்படி பிரமையாக மாறி பயத்திற்குத் தாவி விடுகிறது என்பதுதான் கதை.  அழகியசிங்கர் அந்தக் கதையைச் சிறப்பாக எழுதியிருந்தார்.  வழக்கம்போல் ஒரு சிறுபத்திரிகையில்தான் அந்தக் கதை பிரசுரமானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *