துளி – 218
அழகியசிங்கர்
வைதீஸ்வரனைப் போய்ப் பார்க்க என்னையும் அழைத்தார் கிருபானந்தன். மூன்று மணிக்குப் போவதாக இருந்தோம். ஆனால் இன்று ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா போய் பிபிஎப் என்ற கணக்கை முடிக்கச் சென்றேன். ஆனால் மேற்கு மாம்பலம் கிளையில் முடிக்க முடியவில்லை.
வீட்டிற்கு வரும்போது இரண்டு மணி ஆகிவிட்டது. எனக்குத் தூக்கம் வந்தது. தூங்கி விட்டேன். 4 மணிக்குத்தான் முழிப்பு வந்தது.
கிருபானந்தன் 3 மணிக்குப் போன்செய்திருந்தார். என்னடா இது. அவசரம் அவசரமாகப் போன் செய்தேன். வைதீஸ்வரன் வீட்டிற்கு வரச் சொன்னார்.
கிட்டத்தட்ட 2 வருடம் ஆகப் போகிறது வைதீஸ்வரன் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்து.
வைதீஸ்வரனை வாழ்த்தினேன். கூட டாக்டர், ஆர்க்கே ராஜேஷ் நண்பர்களையும் பார்த்தேன். சொல்ல நினைத்தேன் என்ற வைதீஸ்வரன் புத்தகத்தை அவர் பிறந்தநாள் முன்னிட்டு குவிகம் தயாரித்திருந்தது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் புத்தகம். எனக்கு சில ஆண்டுகளுக்குமுன் தயாரித்த சில கதைகள், சில கவிதைகள், சில கட்டுரைகள் என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.இந்த மூன்று கலவை கொண்ட புத்தகம் படிக்க நன்றாகத்தான் இருக்கும். அதன் பிரதியைக் கையெழுத்துப் போட்டு வைதீஸ்வரன் கொடுத்தார். என்னுரையில் அவர் எழுதிய வாசகங்கள்.
‘இந்த நெகிழ்வான தருணத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பைப் பிரசுரித்த நெடுநாளைய இளைய நண்பர் அழகியசிங்கரை நினைத்துக் கொள்கிறேன். அவர் மூலம் வாய்க்கும் நட்பு வட்டம் எல்லாமே மிக நேசமும் செயலூக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் சங்கமாக இருக்கிறது. இது அழகியசிங்கரின் பிறவிக் கொடை..’
‘என்னடா இது இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரே’ என்று தோன்றியது.
இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கும் போய்ப் பார்க்க வேண்டும். அவருக்குச் ‘சாகித்திய அகாதெமி ஃபெல்லா’ அந்தஸ்து வழங்கியிருக்கிறது. நேரிடையாகப் போய் வாழ்த்தினால் நன்றாக இருக்கும்.
மாலை 5.30 மணிக்கு சூமில் அசோகமித்திரன் கூட்டம். நிஜந்தன், அம்ஷன்குமார், விட்டல்ராவ் பேசினார்கள். அசோகமித்திரன் புதல்வர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். கலந்து கொண்டேன்.
அசோகமித்திரன் எழுதிய மதிப்புரைகள் பற்றி அம்ஷன் குமார் பேசினார். மதிப்புரை எழுதுவதுதான் கடினம் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு முறை அவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, நாடகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.
“எந்தப் பத்திரிகைக்கு?” என்று கேட்டேன்.
“விருட்சத்திற்குத்தான்” என்றார்.
அந்த நாடகத்தை நான் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
அம்ஷன்குமார் பேசும்போது சொன்னார். அசோகமித்திரனுக்கு நாடகம் எழுதுவதுதான் பிடிக்கும் என்று. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
விருட்சம் இதழில் எதாவது இரங்கல் குறிப்பு எழுதவேண்டுமென்றால் நான் அசோகமித்திரனைத்தான் நாடுவேன். எனக்கு இன்னும் கூட ஞாபகமிருக்கிறது. பிரஞ்ஞை ரவீந்திரனைப் பற்றி அரைப் பக்கம் விருட்சம் பத்திரிகைக்கு ஏற்ற மாதிரி எழுதிக் கொடுத்தார்.
ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து கொடுத்த கூட்டத்தில் எனக்கும் பேசச் சந்தர்ப்பம் கொடுத்தார். இதெல்லாம் நான் பேசியிருக்க வேண்டும். இதை எழுதும்போது இப்போதுதான் தோன்றுகிறது.