நர்மதா ராமலிங்கம் சில நினைவுகள்

 துளி : 168 


அழகியசிங்கர்

தி.நகர் செல்லும்போதெல்லாம் நான் மூன்று பதிப்பகங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன்.  1. கலைஞன் பதிப்பகம் 2. நர்மதா பதிப்பகம் 3. கவிதா பதிப்பகம்.
நர்மதா பதிப்பகம் தி.நகரில்  ராஜபாதர்  தெரு ஆரம்பத்தில் மாடியிலிருந்தது.  விஸ்தாரமாகக் கடை காட்சி அளிக்கும்.
ராமலிங்கம் அவர்களைச் சந்திப்பேன்.  சிரித்த முகத்துடன் அவர் விருப்பமுடன் பேசுவதற்கு ஆர்வமாய் இருப்பார்.  
நான் அப்போதுதான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்திருந்தேன்.  அவரிடம் என் பத்திரிகையைக் கொடுப்பேன்.உடனே அந்தப் பத்திரிகைக்கான விலையைக் கொடுத்து விடுவார்.  இலவசமாக வாங்கிக் கொள்ள மாட்டார்.  அப் பத்திரிகையில் கவிதை எழுதும் என் நண்பரைப் பற்றி விசாரிப்பார். 
” அப்போதுதான் பத்திரிகையும் புத்தகம் போடும் முயற்சியிலும் இருந்தேன்.  ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தேன்.  அந்தப் புத்தகத்தை என்னால் விற்க முடியவில்லை. அப்போது அவர்தான் ஆறுதல் படுத்துவார்.
விற்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் புத்தகங்களைத் தேவையில்லாமல் இலவசமாகவோ பேப்பர் கடையிலோ  கொடுத்து  விடாதீர்கள் என்பார்.அந்த அறிவுரையை முக்கியமாக நான் நினைத்துக்கொண்டேன்.    ஒரு முறை விருட்சத்திற்கு விளம்பரமும் கொடுத்திருந்தார்.  
அவர் கலைஞர் பதிப்பகத்தின் உரிமையாளர் மாசிலாமணி அவர்களின் உறவினர். அவர் பதிப்பகம் தொடங்கியபோது வண்ண நிலவன் புத்தகத்தைத் தான் வெளியிட்டிருந்தார் முதல் புத்தகமாக.
ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களையெல்லாம் படிப்பார்.  அவர் நேரிடையாக மேடையில் பேசி நான் கேட்டதில்லை. ஒதுங்கி இருக்கும் சுபாவம் உடையவர்.   அவர் தமிழ்ப்பற்று அதிகம் உள்ளவர்.  நியூ புக்லேண்ட்ஸ் என்று புத்தக விற்பனை நிலையத்தை தி.நகரில் ஆரம்பித்தபோது தமிழ்ப் புத்தகங்களை விற்கும் கடையாகத்தான் அதைச் செயல் படுத்தினார்.
சிறுபத்திரிக்கைகள், இலக்கியப் புத்தகங்கள் என்றெல்லாம் நியூ புத்தக நிலையத்தில் விற்பனைக்கிருக்கும்.  அது ஆரம்பிக்கப்பட்டபோது தமிழில் அப்படியொரு கடை சென்னையில் முதன் முறை என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் விருட்சம் இதழ்களை விற்பனைக்குக் கொடுக்கும்போது ராமலிங்கம் அவர்களுக்குத் தனியாக ஒரு இதழ் பிரதியைக் கொடுப்பேன். ராமலிங்கம் அவர்களையும் விசாரிப்பேன்.  
எப்போதுமே விலை அதிகம் போகாதபடி நல்ல தாளில் அச்சிட்டு நர்மாதா புத்தகங்களைக் கொண்டு வருவார்.  
அவர் வீட்டுத் திருமண வைபவத்திற்கு ஞாபகமாய் என்னைக் கூப்பிடாமலிருக்க மாட்டார்.
‘ஒரே ஒரு புரட்சி’ என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை (2001ல் வெளியிட்டிருந்தார்) விருட்சம் இதழ் விமர்சனத்திற்கு அனுப்பியிருந்தார்.   நான் அந்தப் புத்தகம் விமர்சனத்தையும் வெளியிட்டிருந்தேன்.  அதை இன்னும் என் வசம் வைத்திருக்கிறேன். 
அவரை இழந்து நிற்கும் நர்மதா ஊழியர்களுக்கும், நியூ புக் லேண்ட்ஸ் ஊழியர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன