எதையாவது சொல்லட்டுமா….12

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார்.

இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பாலகுமாரன் ஆரம்ப எழுத்தாளர். சுஜாதா தடுமாறி தடுமாறிப் பேசியதாக ஞாபகம். ஏன் இதெல்லாம் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் இப்போதெல்லாம் தொடர் கதைகள், சிறுகதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. இன்று இது பெரிய ஆபத்து என்று தோன்றுகிறது. வெறும் செய்திகளை மட்டும் தீனியாக இப் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பிரபல பத்திரிகைகள் மூலம்தான் தீவிர இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்க வாசகர்கள் தயாராவார்கள். தமிழில் படிப்பது என்பதை முதலில் இப் பத்திரிகைகள் மூலம்தான் உருவாக்க முடியும். அதனால் அன்றைய வாசகர்களுக்கு கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றில் அறிமுகம் கிட்டின. ஆனால் இன்றைய வாசகர்கள் இப்பத்திரிகைகளில் வெளிவரும் மேம்போக்கான செய்திகளை மட்டும் அறிகின்றனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும். கதை என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பத்திரிகை மூலம் படிப்பது வேறு, நேரிடையாக ஒரு நாவலைப் படிப்பது என்பது வேறு. இந்தப் பெரிய பத்திரிகைகள் தப்பான அறிமுகமாக ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. அக் கதைகள் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.

மேலும் இப் பத்திரிகைகள் செய்திகளை, குறிப்பாக சினிமா செய்திகளை வாரி வழங்குகின்றன. நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுப்புகள் அதிகம். அரசியல் எல்லாம்.

தினசரிகளான தினமணி, தினமலர் எல்லாம் செய்திகளை வாரிவழங்குகின்றன. இச் செய்திகள் மூலம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அறிவுபூர்வமாக தினமணி தலையங்கங்களை எழுதுகின்றன. உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை எப்படி கிளுகிளுப்பாக மாற்றுவது என்ற கலையை தினமலர் செய்து காட்டுகிறது. இன்னும் பல செய்தித் தாள்கள் இப் பணியை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் கதைகளேளா, கவிதைகளோ, தொடர் கதைகளோ நடைபெறவில்லை. வாசகர்கள் இச் செய்திகளைப் படித்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. கதை எழுதுபவர்கள் செய்தி மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம் என்றாலும், கதை என்பது வேறு, செய்தி என்பது வேறு. செய்தி நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கொடுக்கும். ஆனால் கதைகள் வாழ்க்கையின் கூறுகளை யதார்த்தங்களை மனதை உலுக்கும்படி வெளிப்படுத்தும்.

செய்திகள் ஒரு கட்டத்தில் நின்று விடும். ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி விட்டு அடுத்த அதிர்ச்சியான செய்திக்குத் தாவிவிடும். கதையோ அப்படி அல்ல. எழுதப்பட்டவுடன் பலமுறை படிக்க படிக்க வாழ்க்கையை வேறுவிதமாகப் புரிய உதவி செய்யும்.

இப்பத்திரிகைகள் செய்திகளை கதைமாதிரி சுவாரசியமாக எழுதினால், கதையில் நிற்கக் கூடிய உணர்வை, புத்திக்கூர்மையை அவை வெளிப்படுத்த முடியாது. செய்தி அப்படியே நின்று விடும். கதை நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தக் கதைத் தன்மையே முழுவதும் அழிந்துவிடும் நிலையில் செய்திகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளன. வாசகர்களும் செய்திகளுடன் நின்று விடுகின்றனர்.

இன்று சிறுபத்திரிகைகள் மட்டும் கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் அதிகம் வாசகர் இல்லாத சிறுபத்திரிகைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை





மொழிபெயர்ப்புக் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு
செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை
கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும்
சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்
மூலம்திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது.
சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங்கள் என்னை விட்டு நகரவே இல்லை.
இன்னும்கூட புத்தகம் கொண்டுவருவதில் ஒருவித சந்தோஷம் என்னை விட்டு அகலவில்லை. ஆனால் புத்தகம் எப்படி விற்பது? அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப் படுகிறார்கள். என் தந்தை என்னிடம் புத்தகம் கொண்டு வருகிறாயே, எவ்வளவு செலவு செய்கிறாய் என்று கேட்காமல் இருப்பதில்லை. ரொம்பவும் குறைவான எண்ணிக்கையில் புத்தகம் கொண்டு வந்தாலும் என்னைவிட கவலை அவருக்கு அதிகமாகவே உள்ளது. ஏன்? அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார்..நீ செலவு செய்கிறாயே? எவ்வளவு பணம் உனக்குத் திரும்பவும் கிடைக்கிறது? இதற்கு பதிலே சொல்ல வரவில்லை. நான் ஒரு இடத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். என் மனைவி அந்த இடத்திற்கு வருவதற்கே பயப்படுகிறாள். நியாயம்தான் அவள் பயப்படுவது. கொஞ்சம் யோசித்தால் நானும் பயப்படத்தான் செய்வேன்.
முன்பெல்லாம் நான் புத்தகங்களை சில இடங்களுக்கெல்லாம் அனுப்புவேன். கொஞ்சமாவது பணம் வரும். இப்போதெல்லாம் பணமும் வருவதில்லை..புத்தகமும் கேட்பதில்லை..
வெங்கடேஷ் சொல்வதுபோல் யாராவது புத்தகம் விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். 50% கொடுத்து விடுகிறேன். இதை யாரும் செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புத்தகம் போடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி இறங்குவதில் எனக்கு முழுக்க நம்பிக்கை இல்லை. உண்மையில் என்னுடைய வேலைதான் புத்தகம் போடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். நான் போடும் புத்தகங்கள் எல்லாம் Non Performing Asset என்று.
குறைந்த எண்ணிக்கையில் போடும் புத்தகமே ஆயிரக்கணக்கில் என்னிடம் குவிந்து கிடக்கிறது. வைக்க இடம் இல்லாமல் காலடியில் கவிதைப் புத்தகங்கள் இடறிக் கிடக்கின்றன. இதோ கடலின் மீது ஒரு கையெழுத்து என்ற பெயரில் லாவண்யாவின் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். காலடியில் இன்னொரு கவிதைத் தொகுதி.

குழிவண்டுகளின் அரண்மனை

பக்கம் 80
ரூ.40
புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்

சுகுமாரன் முன்னுரை:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.

(அட்டைப் படம் இணைத்துள்ளேன்)

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…

பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட
விட்டுவந்த துணையை
குமிழிகள் செல்லும்
பரப்பெங்கிலும் தேடியது
எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க
காணும் யாரும் உணராவண்ணம்
மூடா விழிகளில் நீர் உகுத்து
அழகுக் கூரை கொண்ட
கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்
-,

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

நண்பர்களே,

எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி
“இன்ன பிறவும்” கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது.

நூல் விபரம்:

நூல் பெயர்: இன்ன பிறவும்
பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர்

கிடைக்குமிடம்:

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ்.

அன்புடன்,
செல்வராஜ் ஜெகதீசன்.

விரிசல்

ஒரு சாயங்கால வேளையில்
கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப்படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் சற்று ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர். பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். ‘இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்ட் வந்துவிடுவார்’, என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள்.
அவள், இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்ட், குழந்தைகள், சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன் முறையாக. ‘என் வாழ்க்கை இவ்வளவுதானா?’ என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
எட்வர்ட் தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அவனால் அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவைச் சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்ட் சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை அன்றே அவளிடம் கூறிவிட்டான், உடன் தன் நிலைமையையும் எடுத்துரைத்தான்.
ஆனால் லூசியாவோ, “உங்கள் குழந்தைகள் விருப்பமும் எனக்கு மிக முக்கியம்.” என்று கூறிவிட்டாள். மறுநாளே சந்தித்தான், குழந்தைகளுடன். அவள் அன்பாகப் பேசிய சில நிமிஷங்களிலேயே அவளிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் வயது அப்படி.
வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே எட்வர்ட் மனதிலும், குழந்தைகள் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் லூசியா. வீட்டை அவ்வப்போது மாற்றங்கள் செய்வது, புதிய வகை உணவுகள் தயார் செய்வது என முழுமையாகத் தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்து விட்டாள். முக்கியமாக குழந்தைகள் கவனிப்பில் அவளை மிஞ்ச அவளேதான். குழந்தைகள் தன்னை ‘லூசியா’ என்றே அழைக்க பழக்கப்படுத்தியிருந்தாள். இதனால் ‘குழந்தைகளுக்கும் தனக்குமுள்ள இடைவெளி குறையும்’ என்பது அவள் எண்ணம். தினமும் கதை கூறுவாள். அடிக்க மாட்டாள். ஆனால் கண்டிப்புடன் இருப்பாள். மொத்தத்தில் தங்கள் அம்மாவையே மறக்கச் செய்து விட்டாள். அவர்கள் வளர்ந்து தன் வழியே சென்றபின், எட்வர்ட் மட்டுமே அவளின் உலகமானான்.
‘டிங் டாங்’. அழைப்பு மணி ஓசை அவளை இக்காலத்திற்கு மீட்டது. சுயநினைவு வந்தவளாய், உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்தது எட்வர்ட்தான் வந்தான்.
அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே கேட்டாள், “எட்வர்ட், நான் உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?”
“இது என்ன புதுக் கேள்வி! எப்போதும் நீதான் பேசுவாய். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைக்கு என்ன ஆச்சு?”
அவன் ஹாஸ்யத்தை அவள் ரசிக்கவில்லை.
“இல்லை, என்னைப் பற்றி பேச வேண்டும்.”
அவன், அவளை விநோதமாகப் பார்த்தான். ‘இன்று இவளுக்கு என்ன ஆச்சு’ என்ற விநோதப் பார்வை.
“சரி, சொல்லு.” என்றான் எட்வர்ட், மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.
“எட்வர்ட், நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டதாக உணர்கிறேன்.”
அவளை ஆழமாகப் பார்த்தான். இன்று லூசியா, அவளாகவே இல்லை என்பது போலப் பார்த்தான்.
“எனக்கு நீங்கள், குழந்தைகள், சமையலறைத் தவிர வேறு ஒன்றுமே என் வாழ்கையில் இல்லை. இத்தனை நாள் இப்படி, எப்படி இருந்தேன் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களோடு 20 வருடம் வாழ்ந்து விட்டேன். ஆனால் அதனால் நான் சாதித்தது என்ன?………” அவள் பேசிக் கொண்டே போனாள்.
அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. லூசியா எப்படி இப்படி மாறினாள் என அதிசயித்தான். இத்தனை நாள் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இப்போதாவது சிந்தித்தாளே என்று மகிழ்ந்தான். ஆனால் அடுத்த நொடி சற்றே நிதானித்து விழித்துக் கொண்டான்.
அவர்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் ஞாபகமாக ஞாபகத்திற்கு வந்தது.
“உன் பெயர் என்ன?”
“லூசியா, உங்கள் பெயர்?”
“எட்வர்ட். உன் வயது?”
“ஆறு.”
‘அப்படியானால் இவள் வயது இப்போது இருபத்தி ஆறு. எப்படி மறந்தேன் இதை. அவளின் அன்பின் பிடியில் மறந்து விட்டேன் போலும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏற்கெனவே ஒரு வருடம் தாமதமாகிவிட்டது. இது ஆபத்தின் அறிகுறி.’
சட்டென்று தன் லேசர் பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பது போல் கீழே குனிந்தான்.
அவளின் கெண்டைக் காலில் மச்சம் போன்ற ஒன்று இருந்தது. சட்டென அதை அழுத்தினான்.
“எட்வர்ட், என்ன செய்கிறாய்?” பதட்டமானாள். அவன் பிடியை விடவில்லை.
“விடு என்….” பேச்சிழந்தாள்.
அதன் பிறகும் ஒரு நிமிடம் கழித்தே தன் பிடியை விட்டான். ‘அப்பாடா’ என்றிருந்தது அவனுக்கு.
அவன் அவளை, இல்லை, அதைத் தூக்கி ஓரமாக நிறுத்திவிட்டு அவளை வாங்கிய இடத்திற்கு போன் போட்டு ‘Switch Off’ செய்து விட்டதை கூறினான்.
சோபாவில் கண்மூடி சாய்ந்தான். ‘லூசியாவை பிரியணும்’ என்ற எண்ணம் அவனை வதைத்தது. ‘ஆனாலும் லூசியா இல்லாவிட்டால் என்ன, வேறு ஒரு ஃபெல்சியாவோ, ஆசியாவோ வரப் போகுது. செய்யும் வேலைகள் ஒன்றுதானே’, என்று சமாதானமானான்.
ஆனாலும் ஒரு ரோபோ எப்படி இருபத்தைந்து வருடங்களில் சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இன்னும் அது புரியாத புதிராகவே இருக்கிறது, இந்த 24ஆம் நூற்றாண்டிலும் கூட.


விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில்
வந்து போகின்றன
விளம்பரதாரர் வழங்கும்
நிகழ்ச்சிகள்

நல்லது பயக்குமெனில்
நல்லது கறையென்கின்றன

இன்னுமதிக வெளுப்புக்கு
இவையிவை என்ற
அறிவிப்புகளோடு

இலவசங்களுக்கான
சீசன்களை
எப்போதும்
நினைவுறுத்திக்கொண்டு

விளம்பரங்களில்
வகுபட்டு
பின்னமாகிக் கொண்டிருக்கிறது
பொழுதுகள்

எதையாவது சொல்லட்டுமா 10

ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார்.
அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல் தனியாரிடம் வாங்கிவிட்டார். பையன் தலை தூக்கினால் எல்லாம் பொடி பொடியாகிவிடும். அதுதான் தாமதம் ஆகிறது. மகாலிங்கம் என்னுடன் பேசிக்கொண்டே வரும்போது சோகமான பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வந்தார்.
”என்னயாயிற்று?” என்று கேட்டேன். அப்போதுதான் கடன்காரர்களின் நச்சரிப்பைப் பற்றி குறிப்பிட்டார். ”முதலில் இந்தச் சோகமான பாட்டுக்களையெல்லாம் பாடாதீர்கள்,” என்றேன்.
இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேனென்றால், சினிமா பாட்டுகள் மனிதன் மனதுள் புகுந்துகொண்டு பிறாண்டும் ரகளையைப் பற்றிதான். நான் அலுவலகம் கிளம்பும்போது பஸ் பாடாமல் இருக்காது.. எரிச்சலாக இருக்கும். சத்தமாகக் கேட்டுக்கொண்டே போக வேண்டும். எனக்கும் சினிமாப் பாடல்கள் பல நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும். பொதுவாக சோகமான நிகழ்ச்சிகளை அதிகமாக ஞாபகப்படுத்தும். குர்பானி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்களைக் கேட்டால் அது என் திருமணத்தை ஞாபகப்படுத்தும். பாக்கியராஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பாரதிராஜா படத்தின் பாடல்களைக் கேட்கும்போது என் நண்பன் இறந்த ஞாபகம் வரும். ஒரு சினிமா பாடல் ஒளிமயமான எதிர்காலம் பற்றி குரலெழுப்பிக் கொண்டிருக்கும். உண்மையில் சினிமாப் பாடல்களுடன் நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்வதைப் போல் ஒரு முட்டாள்தனத்தை குறித்து என்ன சொல்வது?
நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் நடந்தே தீரும். அதற்கும் இந்தச் சினிமாப் பாடல்களுடன் முடிச்சுப் போடக்கூடாது. சினிமாப் பாடல்களைக் கேட்டு அதன் மூலம் தீர்வு காணக்கூடாது. சினிமாப் பாடல்களுடன் நம் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டத்துடன் முடிச்சுப் போடக் கூடாது.
நான் ஒவ்வொரு நாளும் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சினிமாப் பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியாது.