திரும்பவும் ஆத்மாநாம் வந்து விட்டார்.திரும்பவும் ஆத்மாநாம் உயிர்தெழுந்து விட்டாரா என்று தோன்றுகிறது. சமீபத்தில் பெருந்தேவி கவிதையைப் படிக்கும்போது அப்படித்தான் தோன்றியது. முத்தம் என்று ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து பெருந்தேவி அக்கவிதையுடன் தன்னுடைய கூற்றையும் சேர்த்து எழுதியிருந்தார். 30 ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாம் இப்படி அவர் கவிதையைத் தொடர்ந்து எழுதியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒரு பெண்ணுடன் அன்புடன் இருந்தார். உடவே பெண் வீட்டில் அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டார்கள். ஆத்மாநாமிற்கு நிறைவேறாத காதல். அவருடைய வியாபாரம் படுத்துவிட்டது. அவர் லாகீரி வஸ்துகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மனப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது.
அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 3 முறைகளுக்குமேல் சந்தித்திருப்பேன். முதல் முறை இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில். ஞாநி தங்கியிருந்த பீட்டர்ஸ் ரோடு அடுக்ககத்தில் சந்தித்தேன். நானும் போயிருந்தேன். ‘இவர்தான் ஆத்மாநாம்’ என்று யாரோ சொன்னார்கள். ஆத்மாநாமை விட ஞானக்கூத்தன் பெயர்தான் பிரபலம். ழ என்ற பத்திரிகை பிரதிகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். எனக்கு ஏனோ அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அடர்த்தியான தலைமுடியுடன் பார்க்க பர்சனாலடியாக இருந்தார். அவர் உருவம் முரட்டுத்தனமதாக இருந்தாலும், மென்மையான உணர்வு கொண்டவர். ழ பத்திரிகையை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் விருட்சம் பத்திரிகை வைத்திருந்தால் அப்படித்தான் கொடுத்திருப்பேன். அன்று ஆத்மாநாமைப் பார்த்தேனே தவிர பேசவில்லை. ஆனால் அவரைப் பார்க்கும்போது ஏதேவிதமான சோகம் கப்பிக்கொண்டிருந்தது.
இரண்டாவது முறை ஞாநி திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். ஞாநி மியூசியம் தியேட்டரில் எல்லோருக்கும் முன்னால் பத்மாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பு செய்தார். எல்லோருக்கும் டீ வழங்கினார். பின் நாடகம் அரங்கேறியது. எனக்கு அப்படிச் சொல்லி திருமணம் செய்து கொண்டதே ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் ஆத்மாநாம் இருந்த இடத்திற்கு நான் வந்து உட்கார்ந்தேன். நகுலனைப் பற்றி நான் ஏதோ கேட்டேன். ஆத்மாநாம் ஏதோ பதில் சொன்னார். அதன் பின் விமலாதித்த மாமல்லனைப் பார்த்தவுடன் எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் அவர் கொடுத்தப் புத்தகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மூன்றாவது முறை ஆத்மாநாமை நண்பர் வைத்தியநாதனுடன் பார்த்தேன். அப்போது நான், வைத்தி, ஆத்மாநாம் மூவரும் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆத்மாநாமிடம் அவருடைய நிஜமே நிஜமா கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். ஆத்மாநாம் ஆனந்த்தை வீட்டிற்குக் கூப்பிட்டார். மனைவியை அழைத்துக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அப்போதுதான் ஆத்மாநாமின் காகித்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரயனுக்குப் பின்பக்கம், நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். ஆத்மாநாம் புத்தகத்தில் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனந்த்தும் எழுதிக் கொடுத்தார். நான் கேட்டேன் ஆனந்தை ”இந்த வீட்டிற்கு என்ன வாடகை என்று.” வைத்தியநாதன் உடனே, ”இதுமாதிரி லெளகீக விஷயங்களைப் பேசாதீர்கள்,”என்று சொல்ல எப்படிப் பேசுவது என்று திகைத்தேன். ஆனந்தின் கவிதை ஒன்றில் சற்றே பறந்து கொண்டிருந்த பறவையைப் பற்றி கேட்டேன். பின் அங்கிருந்து நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் மூவரும் அண்ணாசாலையில் உள்ள உடைகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம். ஒன்றும் வாங்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து வைத்தியநாதன் பேசும்போது ஆத்மாநாம் அன்று சரியாய் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆத்மாநாமின் பிரச்சினை. உடனடி புகழ். கவிதை எழுதி புகழ் எங்கு கிடைக்கும். அதுவும் உடனடியாக. இகழ் வேண்டுமானால் உடனடியாகக் கிடைக்கலாம். வாழ்க்கையின் நிராசையுடன் வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவர் ஆத்மாநாம். எதற்கு இதெல்லாம் சொல்கிறேனென்றால் பெருந்தேவியின் முத்தம் கவிதைக்கான தொடர்ச்சியைப் பார்த்திருந்தால் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.ஆனால் அவர் ஆதரவு அற்று, அன்பு காட்ட யாருமில்லாமலும் தற்கொலை செய்து கொண்டார். பெருந்தேவி திரும்பவும் ஆத்மாநாமை நம்மிடம் கொண்டு வந்து விட்டார். இன்றெல்லாம் ஆத்மாநாம் இருந்திருந்தால் 60 வயது இளைஞராக இருந்திருப்பார்.
இதோ பெருந்தேவியின் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.
முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்(ஆத்மாநாம் பெருந்தேவி)
பரபரத்து இலக்கை நோக்கி
நீங்கள் மற்றவர்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்
உங்கள் நண்பி வந்தால் உங்கள் அன்பனைக் கண்டால்
எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர
இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி
இதமாக பின்னர் ஞாபகமும்
தொடர்ந்து முக்குளிக்க
நீண்டதாக பால்வீதியினும் நீளமுத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்உங்களைப் பார்த்து பொறாது
மற்றவர்களும் பார்த்தும் பாராது
அவரவர் வழிசெல்பவரும்
நண்பிகளுக்கு முத்தம் அன்பர்களுக்கு அமுதம்
கொடுக்கட்டும் கொடுப்பர் அதேபோல்
விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்
மறந்துவிட்டு பிறவாநிலையின்
சங்கமமாகிவிடுவீர்கள் ஒரே புள்ளியில்
பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக
ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க
நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்
நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்
விற்பனை அங்காடிகளில் கோயில்களில்
வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்
நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்
சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்
கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்
உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர
ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண
இருக்கும் சில நொடிகளில் தனதற்ற
உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான
முத்தத்தைவிட முத்தம்போலும்
சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு
கிடைப்பதரிது அரிது அரிது
ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே
முத்த அலுவலை உதட்டின் கடமையை
இன்றே நந்நாள்
இப்பொழுதே நற்பொழுது
இக்கணமே பொற்கணம்
உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்
உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து
காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்
முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு
கிறிஸ்து பிறந்து ம்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்
இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்
நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து
சுத்தமாக வரமாக
முத்தம் பரமாக
முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்
என்று இப்போதே
முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்
துவங்குங்கள் துவங்கியாயிற்று.
Category: Uncategorized
Two poems
தலைமுறைகள் தாண்டிய பாட்டு பூவுடன் இணைந்த மணம் போல் அழகுடன் கமழ்ந்த திறனால் களபலியான தங்கம்மையே தாயம்மையே அந்தப்புரம் அழைத்து அறநெறி தவறிய கொற்றவனின் கொடும் நீதியில் குமுறிக் கொந்தளித்து பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை உயிருடன் கரைத்துவிட்டு மலையும் மடுவும் தாண்டி நதியும் கரையும் கடந்து தெற்குத் தெற்கொரு தேசமாம் பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை இரணியல் வந்து எங்களுடன் பயணித்த சிங்க விநாயகரையும் அவர் பார்வையிலேயே ஒடுப்பறையில் நாகரம்மனையும் நாகரம்மன் சன்னிதியில் தங்கம்மை தாயம்மை உம்மிருவரையும் குடிவைத்தோம் கும்பிட்டோம தலைமுறை தலைமுறைதாண்டிவந்து பகைமறந்து மன்னித்து பாரிடமெங்கணும் மாதர்குல நீதிகள் செழித்தோங்கிட பொங்கலிட்டோம் குரவையிட்டோம் வாழ்த்துறோம் வணங்குறோம
காமிரா கண்
முதுமையிலும் இனிமை காண உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும் வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல் இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு வாழ முயன்றுகொண்டிருக்கையில் குறிப்பிட்ட கோணங்களில் அடிக்கடி படமெடுத்து பத்திரிகைகளில் போட்டு படுகிழமென்று பகிரங்கப்படுத்தும் காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது நன்றியா எதிர்ச்சொல்லா
இரண்டு கவிதைகள்
01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக்கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் ‘பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.’ o
எதையாவது சொல்லட்டுமா / 21
சீர்காழி வந்து 6 மாதம் ஓடிவிட்டது. நேற்று நாகூர் விரைவு ரயில் வண்டியில் படுத்துக்கொண்டிருந்தபோது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படித்தான். பஸ்ஸில் பயணம் செய்வது மோசமாக உள்ளது. கால் வீங்கி விடுகிறது. அப்புறம் சரியாகி விடுகிறது. ரயிலில் பயணிப்பது அப்படி அல்ல. எப்போது ரயில் விடப்போகிறார்கள் என்று காத்திருந்து மே மாதத்திலிருந்து விட ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அனுகூலம் இது. என்னைப்போல் எத்தனைப் பேர்கள். எத்தனைக் குடும்பங்கள்.
ஆனால் ரயிலில் எப்போதும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இடம் கிடைக்கிறது. பின் படுப்பதற்கான இடமாக மாறி விடுகிறது. கலகலவென்று இருக்கிறது ரயில். விதவிதமான பயணங்கள். விதவிதமான மனிதர்கள். நான் ஒவ்வொரு வாரமும் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வரத் தவறுவதே இல்லை.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஜீ எஸ் டி ரோடில் ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் முதியோரை யாரோ போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர் மயக்க நிலையில் ரோடில் இருந்தாராம். பின் அவருக்கு உரிய கவனம் கொடுத்தபிறகு யார் அவருடைய உறவினர்கள் என்பதை அவர் சொல்ல விரும்பவில்லையாம். அவர்களைப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லையாம்.
சரி நான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேனே எதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லையா? வேற எதைச் சொல்வேன். முதியோர் இல்லத் தலைவி என் மனைவிதான். என் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேன். என் தந்தைக்கு 89 வயதாகிறது. மாமியாருக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு வந்து உதவி செய்கிற பணியாளருக்கு 75 வயதாகிறது. இவர்கள் மூவரையும் என் மனைவிதான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள். நான் வாரம் ஒருமுறை முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு சீர்காழி வந்து விடுகிறேன்.
89 வயதாகிறது என்று அப்பா சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டிற்கு வரும் எல்லோரிடமும் ஹோமியோபதி மருந்தைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறார். எல்லாருக்கும் என்ன வியாதி என்று கேட்டு அதற்கு ஏற்ற மாதிரி மருந்தை வாங்கியே கொடுத்து விடுகிறார். முன்புபோல் வெளியே நடக்க முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்குமுன் அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு போவார். அவர் பயன்படுத்தியது made in england சைக்கிள். சைக்கிள் இவரை ஓட்டுகிறதா? அல்லது இவர்தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போகிறாரா என்று தோன்றும். ஒருமுறை ஏற்பட்ட விபத்தால் சைக்கிள் பக்கம் போவதில்லை. ஒருமுறை உறவினர்கள் என்ற பெயரில் என் அப்பாவை மையமாக வைத்து ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். கணையாழியில் வந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் எழுதும் எதையும் அவர் படிப்பதில்லை.
84 வயதாகிற என் மாமியார் வீட்டிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார். சமையலறைச் சென்று எதுவும் செய்ய முடியவில்லை. யார் உதவியுமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியாது. பாதங்கள் கோணல் மாணலாக வீங்கி விட்டன. சாப்பிடுவது மிகக் குறைவு.
டிவியில் சீரியல் பார்ப்பதுதான் ஒரே பொழுது போக்கு.
எதையாவது சொல்லட்டுமா / 20
குற்றமும் தண்டனையும்
சமீபத்தில் தி நகரில் உள்ள போதீஸ் கடையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடித்தச் செய்தியை பேப்பரில் படித்தேன். போதீஸ் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள். இந்தத் திருடர்களைப் பிடிக்க நல்ல அனுபவமுள்ள பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செயல்பட வேண்டும். கிட்டத்தட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலவிதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஒரு விதத்தில் யார் குற்றவாளிகள் என்று யோசித்தால் எல்லோரும் குற்றவாளிகவே இருக்க நேரிடுமோ என்று தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்தான். லஞ்சம் வாங்குவதும் மற்றும் குற்றமல்ல. லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி. அதுமாதிரி நிலைக்கு ஆளாகிற அரசாங்கமும் குற்றவாளிதான். பணத்தின் மீது பலருக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. இப்படிப் பித்துப் பிடிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. பித்து என்கிற விஷயமே ஆபத்தானதுதான்.30 ஆண்டுகளுக்குமேலாக நான் வங்கியில் பணிபுரிகிறேன். அங்கு நடக்கும் பல குற்றங்களைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் கள்ள நோட்டுக்களை அதிசயமாகத்தான் பார்ப்பேன். இப்போது எல்லா நோட்டுக்களையும் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ATM, Internet மூலம் நடக்கும் குற்றங்களை என்ன சொல்வது. இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது. முன்பெல்லாம் வங்கிக் கிளை மிக எளிதாக லட்ஜர்களை வைத்துக்கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு பணத்தைக் கொடுப்பார்கள். அல்லது போடும் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். அதன்பின் ராஜீவ் காந்தி காலத்தில் கணினிகள் உள்ளே நுழைந்தன. வேலைப் பளு குறையாவிட்டாலும், கணினிகள் சில பணிகளை எளிதாக்கி விட்டன. ஆனால் கணினிகள் பயன்கள் ஒரே கிளையில் மட்டும் சுற்றி சுற்றி வந்தன. பிரச்சினை என்று எதுவந்தாலும் அந்தக் கிளையுடன் நின்று விடும். அதாவது குற்றம் நடந்தால் அந்தக் கிளையை மட்டும் சார்ந்துவிடும்.வங்கியில் அதற்கு அடுத்த முன்னேற்றமாக சிபிஎஸ் வந்தது. யார் வேண்டுமானாலும் வங்கியில் உள்ள எந்தக் கிளையிலும் பணம் எடுக்கலாம், பணம் போடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரொம்ப அற்புதமான மாற்றம். கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்த என் பையனுக்கு தி நகரில் உள்ள ஒரு வங்கியில் பணம் கட்டுவேன், அவன் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு. ஆனால் சிபிஎஸ்ஸில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மிடம் இருந்துகொண்டிருக்கிறதா என்ற பயம். யாராவது நினைத்தால் எந்த வங்கிக் கிளையிலிருந்தும் நம் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். இப்போது குற்றத்தைப் பற்றி சொல்கிறேன். பணத்தின் மீது அதீதப் பித்துக் கொண்ட என் வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, வேறு வேறு கிளைகளில் பணத்தைச் சுருட்டும் வழக்கம். அவர் எப்போது இந்தக் குற்றத்தைச் செய்ய ஆரம்பித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திரும்ப திரும்ப அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது வகையாக மாட்டிக்கொண்டு விட்டார். நான் சொல்ல விரும்புவது அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றத்தை எளிதில் செய்யும்படி இந்த சிபிஎஸ் சிஸ்டத்தில் இது இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.குற்றம் என்பது ஒரே கிளையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பல வழிகிளிலிருந்தும் இன்னும் எளிதாக பல கிளைகளிலும் தொடருகிறதா என்றெல்லாம் அச்சம் ஏற்படுகிறது. சக ஊழியரே சக ஊழியரை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோமா? ஒருவர் குற்றத்தை வேண்டுமென்று செய்கிறார். இன்னொருவரோ அந்தக் குற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அங்கீகாரம் கொடுத்து விடுகிறார். சக ஊழியர் என்ற நம்பிக்கைப் பேரில். இந்தக் குற்றத்தைச் செய்த பெண்மணி தெய்வ நம்பிக்கை உள்ளவர். சந்தனம், குங்குமம் பொட்டெல்லாம் இட்டுக் கொண்டு வருபவர். ஒரு குடும்பம் இரு குழந்தைகள் உள்ளவர். ஏன் அவருக்கு பண ஆசை அதிகமாகப் போனது. இதில் அந்தப் பெண்மணி மட்டும் குற்றவாளி இல்லை. அந்தப் பெண்ணை நம்பி தெரியாமல் செய்த செய்கையால் மற்ற அதிகாரிகளும் குற்றவாளிகளாக மாறி விடுகிறார்கள். நான் என்ன சொல்ல விரும்பிகிறேன் என்றால் இது மாதிரி குற்றத்தைத் தூண்டும்படியான வசதியை அளிக்கும் வங்கியும் குற்றவாளியாக இருக்குமோ? திருடர்கள் எப்படி குற்றவாளிகளோ? அவர்களைப் பிடிக்கிற காவல் துறையைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகளா?
புத்தக விமர்சனம்
கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் ஆசிரியர். 176 பக்கங்களில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஐம்பது பக்கங்கள் இலக்கியம், 25 பக்கங்கள் நாடகம், 100 பக்கங்கள் சினிமா பற்றி கணையாழியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அதமப்பொது மடங்கு ரசனை (Lowest Common Denominator) பற்றி பொரிந்து தள்ளியுள்ளார். புத்தகமாக எடிட் பண்ணும்போது அந்த சாடுதல் பகுதிகளைக் கத்திரித்திருக்கலாம்.முதல் கட்டுரை கு.ப.ரா பற்றி. கு ப ரா பற்றி ல.ரா சொன்னது, ந பிச்சமூர்த்தி சொன்னது, சி சு செல்லப்பா சொன்னது, தி ஜானகிராமன் சொன்னது என்று மேற்கோள்களிலேயே பாதி கட்டுரையை ஓட்டி விடுகிறார்.நுருன்னிஸா, தாய், விடியுமா, பெண்மனம் ஆகிய நான்கு கதைகளை கு.ப.ரா எழுதிய கிட்டத்தட்ட எண்பது கதைகளில் சிறந்ததாக சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.அடுத்தக் கட்டுரை சுந்தர ராமசாமி பற்றியது. வாழ்க்கை முழுவதும் சு.ரா என்ன தேடினார் என்று தெரியவில்லை. அந்தத் தேடலின் சக பங்குதாரர்களாகத்தான் இலக்கியவாதிகளை அவர் கருதினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. விருந்தினரை அவர் அனிச்ச மலர்களாக கருதினார் என்று சு.ராவின் நற்பண்புகளைப் பாராட்டுகிற எஸ்.சுவாமிநாதன் அவருடைய எழுத்தில் நேர்மை இருந்ததற்கு அவர் சில ஆண்டுகள் எழுதாமல் இருந்ததை உதாரணமாய்க் காட்டுகிறார். அவரது வாழ்க்கைக்கான முத்தாய்ப்பான எழுத்தை அவர் எழுதவில்லையோ என்று தோன்றுகிறது என்று எஸ்.சுவாமிநாதன் அங்கலாய்க்கிறார். சு.ராவின் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அவர் தமிழில் மொழிபெயர்த்த சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகள், இவற்றைப் பாராட்டும் கட்டுரை ஆசிரியர் அவரது நூல்கள்பற்றி பிறர் வைத்த எதிர்மறை விமர்சனங்களை பட்டியல் போடுவது நம்மை மருள வைக்கிறது.ரேவதி வர்மா என்பவரின் சிறுகதைத் தொகுப்பு நூலை விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ரேவதி வர்மாவா? ரேவதி சர்மாவா? அச்சுப்பிழை நம் கண்ணை உறுத்துகிறது.மணிக்கொடி சீனிவாசன் 1930களில் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளைத் தொகுத்து, அவர் மகள் தொகுத்து நூலக வெளியிட்டிருக்கிறார். இதைப்பற்றி ஆசிரியர் பாராட்டி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். பத்திரிகை எழுத்து என்பது Ephemeral தற்காலிகமானது. கால வெள்ளத்தில் கரைந்து போகக்கூடியது. படைப்பு இலக்கியமோ காலம் கடந்து நிற்பது. யாராலும் படிக்கப் படாதது என்ற ஆஸ்கர் வைல்டின் cynical வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.நாடகம் பகுதியில் நடனக் கலைஞர் அனிதா ரத்னத்தின் நாச்சியா கனவுகள் நாட்டிய நாடகம் பற்றி ரசித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் ஆசிரியர்.இன்னொரு கட்டுரை சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பற்றிய பாராட்டுக் கட்டுரை. உலக மயமாதல், அதனுடைய வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பலவற்றில் சொந்த மண்ணில் கலாச்சார வேர்களும் சேர்கிறது என்கிற வாதத்தை வேறொரு இடத்தில் பதிவு செய்யும் ஆசிரியர், இசை நாடக மரபை புதுப்பிக்க வேண்டுமென்று வாதிடுவது பொருந்தாத ஒன்றாக எனக்குப் படுகிறது.நூறு பக்கங்கள் சினிமா பற்றி ஆசிரியர் எழுதி உள்ளது மிகுந்த சுவாரஸ்யமான பகுதி. Randor Guy போன்ற வெற்று வரலாற்றுப் பதிவாக இல்லாமல் தீர்க்கமான நுணுக்கமான அலசலுக்கு தமிழ் இலக்காக்கி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.கமலஹாசனின் விருமாண்டி, சேரனின் தவமாய் தவமிருந்து, சஞ்சய் லீலா பன்ஸாலியின் ஹிந்தி சினிமாவான Black பற்றிய அலசல்களை என்னைக் கவர்ந்தன.கண்ணகி, பராசக்தி, ஒளைவையார், எதிர்பாராதது, அந்த நாள், அமரதீபம், நாடோ டி மன்னன், பதிபக்தி, மாலையிட்ட மங்கை, கல்யாணப் பரிசு, பாகப்பிரிவினை, வீரப்பாண்டிய கட்டப்பொம்மன், படிக்காத மேதை மீண்ட சொர்க்கம் போன்ற படங்களை தமிழ் சினிமாவைப் பற்றிய பேச வைக்கிற படங்களாக இரண்டு இடங்களில் பட்டியிலிடும் ஆசிரியர், அவற்றின் நிறைகுறைகளை விரிவாக தனது வரப்போவதாக அறிவித்துள்ளார். நம்முடைய சினிமாவும், உலக சினிமாவும் என்ற நூலில் எடுத்துரைப்பார் என்று நம்புகிறேன்.நானும் நாடகங்களும் என்று மறுவாசிப்பில் நவீன தமிழ் இலக்கியம் என்றும் வேறு இரு நூல்களை எழுதத் திட்டமிட்டுள்ள ஆசிரியரின் இந்த முயற்சி வாசகர்களை ஈர்க்க வேண்டும், ஆசிரியரின் பிற நூல்களை அவர்கள் வாசிக்க தயாராக வேண்டும்.
இலா கவிதைகள் 6
1.
தாலாட்டு
கீழிருந்து மேல் செல்லும் மழையில்கண்ணாடி அறைக்குள் கண் சுருக்கிஎறும்பின் சிறுநடையில்சிலபொழுது செலிடாகிவினாடிகளைக் கோபித்துவேனிலை விரட்டும்படி செய்துபனிப்பாறை மீதேறி அமர்கையில்பவளங்கள் முத்துக்கள்முக்கனிகள் முன்வைத்துபால் பொங்கப் பசி நிறைக்கதாலாட்டில் சாய்ந்துமீளாமல் போனேன்
2.
கண்ணாடிச் சாலை
கண்ணாடிச் சாலையில்நடக்க வேண்டியதாயிற்று
தவிர்த்து தள்ளிவைத்து காற்றாக மட்டுமேபயண முடிவுஓரடி வைத்தேன்காலடியில் கும்மிருட்டு
3.
பயணம்
குழந்தைகள் ஆரவாரம்புதியவர்களின் வரவுகண்ணசைவில் கவனிப்புவேளைக்கு உணவுஉயிர் காக்கும் தவிப்பின்றிநீரலையில் பயணம்
கண்ணாடியில் மோதிக்கொண்டேஇருக்கிறேன்கடல் சென்று சேர்வதற்கு
4.
மானும் புலியும்
வரிக்குதிரையின் கோடுகளில்வரிசையாய்க் குருவிகள்சுவற்றில் சாய்த்து வைத்திருந்தவீணையின் கம்பிகள் மீதேறிபரணைக்குச் செல்லும் எறும்புகள்மூடாமல் இருந்த கிணற்றுக்குள்எட்டிப் பார்த்தபடி கொக்குகரையேறும் யானைக் கூட்டம்கால் நீட்டிக் கதை பேசினஅங்கு வந்த மானும் புலியும்
5.பூஜ்ஜிய வட்டம்
ஒளிவட்டத்தின் உட்குழியில்நின்று கொண்டிருக்கநேற்று நடக்கப் போவதையும்நாளை நடந்ததையும்ஒத்துப் பார்க்கும்நாழிகை கடந்த போதும்கணக்குப் புத்தகத்தைகைவிட முடியாமல்திரும்பவும் பூஜ்ஜிய வட்டத்திற்குள்வந்து விழுந்தேன்
6.
மேற்குச் சூரியன்
உத்திரத்திலிருந்து தொங்கும்பொம்மை விமானமேறிஉலகெங்கிலும் பவனிவரஆழ்கடலின் மீன்குரல்கேட்டு பனிமலை மீதிறங்கிகழுகிடம் இறக்கைகள்இரவல் வாங்கிவிடியாத இரவிடம்கோபித்து கொள்கையில்மேற்குச் சூரியன்தெரியத் தொடங்கியது.
மொழிபெயர்ப்புக் கவிதை
மொழிபெயர்ப்புக் கவிதை
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக
கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே
மூலம் – மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
60+இன் புலம்பல்
2010ல்
ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து ‘நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்… ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!
X—X—X
1985ல்
மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது? பயல்களை கண்டிக்க முடிவதில்லை. ‘ஓரம்போ!!’ என்று கத்துகிறான். என்னடா என்றால், அருமையான சினிமாப் பாட்டு என்கிறான். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இப்போல்லாம் சினிமாவா எடுக்கிறான்? படம் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுகிறான். ஒரே டைரக்டர் 2 படம் எடுக்கிறான். ஒரு படத்தில் கதாநாயகியை தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் போகும்படி செய்கிறான். இன்னொரு படத்தில், தாலியைக் கழற்றும் தைரியம் உனக்கு இருக்கிறதா? கணவன்தான் முக்கியம்; காதலன் அல்ல, என்று அட்வைஸ் செய்கிறான். ஒரே கூத்து! எங்கள் காலத்தில் இப்படியா? ஒரு பாசமலர் போதுமே. காலகாலத்துக்கு பதில் சொல்லுமே! எவ்வளவு அருமையான சினிமா! எவ்வளவு அருமையான பாட்டு. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!
X—X—X
1965ல்
முதலாளி எவ்வளவோ நல்லவர். மாதம் 150 சுளையாகத் தருகிறார். இருந்தும் என்ன பிரயோஜனம். மனைவிக்கும் சிக்கனத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்தப் பணம் போதவில்லையாம். அரிசி படி 2 ரூபாய் ஆகிவிட்டதாம். கிலோ 10 பைசா விற்ற காய்கறி எல்லாம் 60 பைசா, 70 பைசாவாக விற்கிறதாம். தங்கம் பவுண் ரூ.100 ஆகிவிட்டதாம். எப்படி கட்டுபடியாகும் என்கிறாள். பிள்ளைகளோ, MGR, சிவாஜி படம் என்று வாரம் தவறாமல் படம் பார்க்கிறார்கள். தலைக்கு 40 பைசா சினிமா செலவு எவ்வளவு ஆகிறது? கேட்டால் ‘இலந்தப் பழம்’ என்கிறார்கள். சீசன் இல்லாத நேரத்தில் இலந்தப் பழம் ஏது என்று கேட்டால், அப்பா, அது சினிமாப் பாட்டு என்கிறான். எல்லாமே இரவல் பாட்டு. ஒருவன் வாயசைக்கிறான். ஒருவன் பாடுகிறான். கேட்டால் பின்னனிப் பாடல் என்கிறான். இந்தப் பயல் சொல்கிறான் என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். சகிக்கவில்லை. அண்ணன், தங்கை பாசமாம். தங்கைக்கு திருமணம் ஆனபின்னும் கணவன் வீட்டுக்கு அனுப்ப மாட்டானாம். வீட்டோடு மாப்பிள்ளையாம். சரி, அப்படி மாப்பிள்ளை மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒரு கும்பலே வருகிறது. பகை வருகிறது. கதாநாயகன் தங்கையை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினால், தன்னுடைய மானம் போய்விடும் என்று கூப்பாடு போடுகிறான். அவர்களோ, அப்படியானால் நீ வெளியே போ என்று சொல்கிறார்கள். சரி என்று உடனே வெளியே போய் விடுகிறான். இப்போது மட்டும் மானம் போகவில்லையா? கேட்டால் அவன் கதாநாயகன், தியாகி என்கிறார்கள். எங்கள் காலத்திலெல்லாம் இப்படியா? அந்த காலத்தில் கேட்ட பாகவதர் குரல் எவ்வளவு இனிமையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் நாட்டில் பாலும் தேனும் ஓடியது. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!
X—X—X
1945ல்
ம். என்ன செய்வது? இந்த பஞ்ச காலத்தில் இந்தப் பிள்ளைகள் பிறந்து இருக்கிறது. எங்கள் காலத்தில் 1ரூபாய்க்கு 16படி அரிசி விற்றது. ஆனால் இப்போது வெறும் இரண்டரைப் படி அரிசிதான். மாதத்தில் 10 நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் 25 பைசா மிச்சம் பிடிப்போம். இப்போது மாதம் 10 ரூபாய் கிடைத்தும் கஷ்டம்தான். தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூலி சும்மாவா கிடைக்கிறது; பவுண் 13 ரூபாய் சொல்கிறான். முன்பெல்லாம் 1 அணா கொடுத்து நாலு நாள் விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் பார்ப்போம். சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்து 4 நாள் விடிய விடிய நடக்கும். ராஜா வேடம் போடுபவர், ராஜ நடை போட்டு, வந்தேனேனன மகராஜன் வந்தேனேனன என்று எட்டுக் கட்டையில் பாடுவது எவ்வளவு கம்பீரம்! இப்போது 4 மணி நேரம் மட்டும் வெள்ளை வேட்டியில் நிழல் படம் காட்டி 2 அணா வசூல் செய்து ஊரை ஏமாத்துகிறார்கள். இதுவும் ஏமாறுதுகள்! என்ன கொடுமையப்பா?! ம்.. அந்தக் காலம் ஒரு பொற்காலம் சார்!!!
X—X—X
2045ல்
TV, கம்ப்யூட்டர், சினிமா புரஜக்டர் எல்லாம் வீட்டில் இருந்தாலும், பிள்ளைகள் தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என அடம்பிக்கிறதுகள். குடும்பத்தோட 1 படம் பார்த்து வர 20000 ரூபாய் செலவாகிறது. ஒரு பாக்கெட் பாப்கார்ன் ரூ.500, ஒரு டீ ரூ.500 என்கிறான். பணத்தோட அருமை பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? சம்பளம் என்ன அள்ளியா கொடுக்கிறான்? பிச்சக்காசு அஞ்சு லட்சம் கொடுக்கிறான். இது எந்த மூலைக்குப் போதும்! அரிசி கிலோ 500, காய்கறி 800, தங்கம் 1 பவுண் ஒன்னரை லட்சமாக விற்கிறது. ஆசைக்கு ஒரு வீடு கட்டலாம் என்றால், ஒரு ப்ளாட் காலி இடம் 2 கோடி ரூபாய் சொல்றான். இது எல்லாம் பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவர்கள். 30 வருடத்துக்கு முன் என் அப்பா காலத்தில் விலைவாசியெல்லாம் கொள்ளை மலிவு. ம்.. அது எல்லாம் ஒரு பொற்காலம் சார்!!!
- பின்குறிப்பு 1 :- இந்தக் க(ட்டுரை)தைக்கு ஆதாரம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் தத்துவமேதை சாக்ரடிஸ் சொன்ன வார்த்தைகள்தான்.
- “இந்தக் காலத்துப் பிள்ளைகள் பொறுப்பில்லாதவர்கள்; பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள்.”
பிகு 2 :- 2045ம் ஆண்டு தவிர, மற்ற வருட விலைவாசிகள் முழு உண்மை. கற்பனை அல்ல.
பிகு 2a :- அது சரி. 2045ம் ஆண்டு விலைவாசி மட்டும் கற்பனை என்று யார் சொன்னது?
நானும் என் எழுத்தும்
நான் நான்காம் வகுப்பு முடிய திருச்சி ஜில்லாவில் லால்குடி தாலுகா ஆங்கரை என்னும் சிற்றூரில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஐந்து வகுப்பு வரையே உண்டு. கிட்டத்தட்ட 200 மாணவர்கள் படித்தார்கள். அருள் புரிவாய் கருணைக் கடலே என்ற சுத்தானந்த பாரதியின் பாடல்தான் பிரார்த்தனைக்குரிய பாட்டு.ஊரில் 100 வீடுகள் போல உண்டு. நாங்கள் தெற்கு கோடியில் வசித்து வந்தோம். கர்ணம் மாமா (கணக்குப் பிள்ளை) வீட்டில்தான் தினமணி நாளிதழ் வாங்குவார்கள். அவர் யாருக்கும் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் படிக்க பேப்பர் தர மாட்டார். படிக்க ஆர்வமுள்ள பெரியவர்கள் அவர் வீட்டு கூடத்தில் கூடுவார்கள். ஒருவர் உரத்த குரலெடுத்து செய்திகளைப் படிப்பார். அப்பொழுது ஆளவந்தார் கொலை வழக்கு விசாரணையில் இருந்தது. தினமணி இரண்டாம் பக்கத்தில் வழக்கு விசாரணை விலாவரியாக அச்சிடப்பட்டிருக்கும். நான் அதைக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. இதுதான் பத்திரிகை உலகத்துடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு.
எங்கள் குடும்பம் வசதி குறைந்தது. ஆனால் சிறுதையூர் டூரிங் கொட்டகையில் சக்ரதாரி பார்த்தது, லால்குடி சினிமா தியேட்டரில் அந்தமான் கைதி (எம் ஜீ ஆர் நடித்தது), ஜெமினியின் வள்ளியின் செல்வன், ஏழை படும் பாடு பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
பிற்பாடு என் மேல் படிப்புக்காக (சும்மா ஜோக்) பொருளாதார மேம்பாட்டுக்கு சென்னை வந்துவிட்டோ ம். நான் என் சித்தி வீட்டில் விடப்பட்டேன். சித்தி என்றால் அம்மாவின் தங்கை. சூளை மேட்டில் அவர்கள் வீடு இருந்தது. பக்கத்திலேயே மாநாகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பகல் இரண்டு மணியிலிருந்து ஐந்துமணிவரைதான் எனக்கு வகுப்புகள். காலைநேரம் வீட்டு வேலையில் ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் கிடையாது. கோடம்பாக்கம் விட்டால் சேத்துப்பட்டுதான். வெள்ளிக்கிழமை காலை என் கையில் இரண்டனாவோ நான்கனாவோ கொடுத்து என் சித்தி விகடன் வாங்கி வர பணிப்பாள். கோடம்பாக்கத்திலிருந்து சூளை மேடு என் சித்தி வீடுவரை பொடி நடைதான். அரை மணி நேரம் பிடிக்கும். நான் வரும் வழியில் விகடன் முழுவதும் படித்து விடுவேன்.
விகடன் படித்ததில் எனக்கு இன்னும் நினைவில் இருப்பது அதில் வந்த தொடர்கதைகள்தான். லட்சுமி தேவன் த நா குமாரஸ்வாமி போன்றோரின் தொடர்கதைகள் அப்பொழுது வெளியாகிருந்தன. லட்சுமி, தேவன், கதைகளில் சுவாரஸ்யமான கதை சொல்லல் இருக்கும். த.நா குமாரசுவாமியிடம் நயம், நாசுக்கு இருக்கும். அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா போன்றவை மேன்மையான எழுத்து என்று எனக்குப் படி ஆரம்பித்தது. தேவனின் லட்சுமி கடாட்சம் என்ற தொடர்கதையை சமீபத்தில் படித்தேன். நெடுந்தொடருக்கு ஏற்ற சரக்கு. அக் கதைகளைத்தான் உல்டா செய்கிறார்களோ என்னவோ மெகா தொடர் கதாசிரியர்கள்?
நான் உயர்நிலைப் பள்ளி படிக்கும்போது தியாகராயநகருக்கு வந்துவிட்டேன். அப்பொழுது ஆக்கூர் அனந்தாச்சாரியன் என்ற தேசபக்தர் வருடம் தோறும் பாரதிவிழா வாணிமகாலில் கொண்டாடுவார். ம.பொ.சிதான் நட்சத்திரப் பேச்சாளர். மற்ற அறிஞர்களும் பேசுவார்கள். அந்தக் கூட்டத்தில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூறிய கருத்து என் மனதில் ஆழப்பதிந்தது. ‘தமிழ்நாட்டில் எழுத்தாளராக மட்டும் விளங்கி பெயர் வாங்க முடியாது, மேடைப் பேச்சாளராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுலபமாக மக்களை சென்றடைய முடியும்.’
இப்படிப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற நபர்களில் நா பார்த்தசாரதி அவர்களும், கலைமகள் ஆசிரியர் கி வா ஜகந்நாதனும் முக்கியமானவர்கள். இருவரும் முறையாக தமிழ் பயின்றவர்கள். நா.பார்த்தசாரதி பொன் விலங்கு, குறிஞ்சி மலர் முதலிய நாவல்களை எழுதி மக்கள் மனதில் இடம் பெற்றவர். கி வா ஜவும் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். நா.பா பேச்சில் விறுவிறுப்பு இருக்கும். கி வா ஜ பேச்சில் நகைச்சுவை இருக்கும். இன்னும் மு வரதராசன், அ.சீனிவாச ராகவன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், அ சா ஞானசம்பந்தம், மே வீ வேணுகோபால பிள்ளை இவர்கள் பேச்சுக்களை கேட்கவும் தென் சென்னை பூராவும் வட்டமிட்டிருக்கிறேன் என் பள்ளி நாட்களிலேயே. அரசியல், மருத்துவம், கர்நாடக இசை போன்ற துறை விற்பன்னர்கள் தங்கள் பெண்கள், பிள்ளைகளை தங்கள் தொழிலேயே ஈடுபடுத்த துடிதுடிப்பதை பார்க்கிறோம். ஆனால் நான் மேற் குறிப்பிட்ட தமிழ் ஆசான்கள் யாரும் தங்கள் மக்களை தங்கள் துறைகளில் ஈடுபடுத்த இயன்றதாக தெரியவில்லை.
நான் மயிலை கல்லூரி ஒன்றில் பி காம் சேர்ந்தபோதுதான் கிட்டத்தட்ட முப்பதாயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தை முதலில் பார்த்தேன். அந்த நூலகத்தில் நீங்கள் உள்ளே நுழைந்து நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியாது. வாயிற் காப்போனாக நூலகர் அமர்ந்திருப்பார். நூலகப் பட்டியலைத் துழாவி நீங்கள் விரும்பும் நூல்களின் பெயரை எழுதி அவரிடம் தர வேண்டும். அவர் உள்ளே சென்று நூல்களை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுப்பார். வாரம் இருமுறை நூல் எடுக்க அங்கு செல்வேன் நான். நான் தேர்ந்தெடுத்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கில நாவல்கள், கவிதைகள், தத்துவம் சார்ந்தவை. நூலகர் தன் வேலைப் பளு அதிகமாய்விட்டதாய் உணர்ந்து ஒருநாள் என்னிடமும் சத்தம் போட்டார்.
”நீ படிப்பதோ பி.காம். உனக்கு எதற்கு ஆங்கில நாவல்கள்..உங்கள் இலாகா பேராசிரியரிடம் உன்னைப் பற்றி புகார் செய்யப்போகிறேன்.” எனக்குப் படபடவென்று வந்தது. என்னுடன் வந்த நண்பர் என்னை சமாதானப்படுத்தி, ‘நண்பா நீ வருத்தப்படாதே. இந்த மாதிரி நூல்களை நீ படிக்க விரும்புகிறாய். நான் உனக்கு வேறு நூலகங்களை அறிமுகப்படுத்துகிறேன்..’ என்று சொல்லி என்னை அமெரிக்க நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் அழைத்துச் சென்று அங்கத்தினர் ஆக்கினார். அமெரிக்க நூலகம் நுழைவுக் கட்டணம் கூட வாங்கவில்லை. ஒரு சமயம் நாலு புத்தகங்கள் எடுத்து வரலாம். கல்லூரியில் படிப்பதற்கான அத்தாட்சி கடிதத்தைக் காட்டியதும் உறுப்பினராகி விட்டார்கள். பிரிட்டிஷ் கவுன்ஸிலில் ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் என்ற நினைவு. அதன்பிறகு எங்கள் கல்லூரி நூலகத்திற்குள் நான் நுழையவே இல்லை.
எங்கள் சித்தப்பா அப்பொழுது தண்டையார் பேட்டையில் குடியிருந்தார். அவர் வீட்டிற்கு நான் விடுமுறை நாட்களில் போவேன். அவர் தம்பி முப்பது வயதான நபர் அகால மரணமடைந்து விட்டார். அவர் ஒரு வெள்ளைக்கார கம்பெனியில் ஸ்டெனோவாக இருந்தார். அவர் நினைவாக அவர் சேர்த்து வைத்திருந்த கிட்டத்தட்ட நூறு புத்தகங்களை சித்தப்பா தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்.
எல்லாமே ஆங்கில நூல்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், முதலிய ஆங்கில ஆசிரியர்களின் அத்தனை நாவல்களையும் அங்குதான் நான் படித்தேன்.
பி.காம் முடித்ததும் மவுண்ட்ரோட் ஒட்டிய ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பொழுதுதான் மத்திய நூலகம் மவுண்ட்ரோடில் திறந்திருந்தார்கள். அங்கு உறுப்பினர் ஆகி தமிழ் நூல்கள் படிக்கத் துவங்கினேன். கன்னிமாரா நூலகத்திலும் உறுப்பினரானேன். ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னிமாரா நூலகத்தில் நேரத்தைக் கழிப்பேன். க.நா.சு எழுதிய அசுரகணம் அங்குதான் படிக்கக் கிடைத்தது. அது என்னை உலுக்கியது. பழைய கன்னிமாரா நூலகத்தில் பழைய பத்திரிகைகளை பைண்ட் செய்து கீழ் தளத்தில் வைத்திருப்பார்கள். கும்பகோணத்திலிருந்து ஐம்பதுகளில் வந்த காவேரி, க.நா.சு வின் இலக்கிய வட்டம் ஆகிய பத்திரிகைகளைப் படித்தேன். தீவிர இலக்கியத்தின் மீது ஆறாக் காதல் உண்டாகியது.
மத்திய நூலகத்தில் இலக்கியச் சங்கம் என்ற பெயரில் சில இளைஞர்கள் ஒன்று கூடி மாதந்தோறும் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் கூட்டங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. ஆரோக்கியமான விவாத மேடையாக அந்தச் சங்கம் செயல்பட்டது. அந்தச் சங்கம் நடத்திய நால்வரில் ஒருவர் தரமான நூல்களை வெளியிடும் கெளரவமான பதிப்பாளராகிவிட்டார். மற்றொருவர் சாகித்திய அகாடமி பரிசு வாங்கிவிட்டு ஞானபீட பரிசுக்கு காத்துக்கொண்டிருக்கிறார். (தஞ்சை பல்கலை வழங்கும் ராஜ ராஜ சோழன் பரிசு இன்னும் இருக்கிறதா? இருந்தால் அதையும் வாங்கிவிடுவார் இவர்). மற்ற இருவா இலக்கிய உலகிலிருந்து தொலைந்து போய்விட்டார்கள்.
சேலத்திலிருந்து நடை என்றொரு பத்திரிகை வெளி வந்தது. கட்டம் போட்ட சட்டை போட்ட சாமியார் என்ற தலைப்பிட்டு ஒரு சிறுகதையை அவர்களுக்கு அனுப்பினேன். ‘ஒரு வேளை’ என்ற தலைப்பில் அந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வெளிவந்தது. சிறுகதை ஆசிரியரும் பிற்பாடு நாடக ஆசிரியராகவும் அறியப்பட்ட ந. முத்துசாமி அந்தக் கதையை பாராட்டி சில சிறிய குறைகளையும் சுட்டிக்காட்டி எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டார். தொடர்ந்து சிறுகதைகளை எழுதுகிற உத்வேகத்தை எனக்கு அந்தக் கடிதம் உண்டாக்கியது.
நடை சில இதழ்களுடன் நின்று போயிற்று. அதைத் தொடர்ந்து இலக்கியச் சங்க நண்பர்கள். கசடதபற என்று ஒரு பத்திரிகையை துவங்கினார்கள். இதில் நான் பங்கேற்று புதுக் கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், நிலம், நீர், ஆகாயம் என்ற குறிப்பிடப்பட்ட சிறுகதை இவற்றை அச்சில் கொணர முடிந்தது.
டெல்லியிருந்து இதே கால கட்டத்தில் கணையாழி என்ற பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகைக்கு மூன்று ஆசிரியர்கள். முதலாளி ஆசிரியர் டெல்லிவாசி. சிறுகதை தேர்ந்தெடுக்க ஒரு டெல்லி பேராசிரியர். சென்னையில் ஒரு பொறுப்பாசிரியர். கடைசி நேரத்தில் பக்கங்களை இட்டு நிரப்புவது இவர் பணி. இதில் நான் வெகுஜன சினிமா, சபா நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள் பற்றி விமர்சித்து எழுதிய கண்ணோட்டத்தை அந்தப் பத்திரிகையின் த்வனியுடன் ஒத்துப் போனது. என்னுடைய சில நல்ல சிறுகதைகளையும் இந்தப் பத்திரிகை வெளியிட்டது.
அறுபதுகளின் மத்தியில் நா பார்த்தசாரதியின் தீபம் சென்னையிலிருந்து வந்தது. இதற்கு ஆரம்பத்தில் சில சிறுகதைகளை தபாலில் அனுப்பி வைத்தேன். அவர்களும் வெளியிட்டார்கள். இந்த மண்ணும் இன்னொரு மண்ணும் என்ற தலைப்பில் உள்ளூர் புத்திசாலிகள் என்று வெளி நாடுகளில் வேலைக்குப் போவதை கட்சி கட்டாமல் சிறுகதையாக எழுதி தீபத்திற்கு அனுப்பினேன். பிறகு நா.பாவை ஒரு பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்துகொண்டு பேசினபோது, அவர் சொன்னார். ‘நீங்கள் இந்தக் கதையை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்,’ என்று. ‘போன அவள் நின்ற அவள்’ என்ற என் சிறுகதையை வெளியிட்ட அவர் அதை விவாதத்திற்கு உரியதாக அறிவித்திருந்தார். பத்திரிகை வெளியாகி பத்திருபது நாட்களுக்குப் பின்னர் என்னை அவர் அலுவலகத்திற்கு வரவழைத்து என் கதையை விவாதித்து வந்திருந்த ஐம்பது அறுபது கடிதங்களைப் படிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார். உண்மையில் மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது அந்த நிகழ்ச்சி. ஆஜானுபாகுவான அவர் தோற்றமும், மிடுக்கான நடையும், தலை நிமிர்ந்த பார்வையும் அவருடன் பழகுவது கடினம் என்ற நினைப்பை என்னுள் உண்டாக்கியிருந்தேன். அவர் எவ்வளவு மென்மையான மனம் படைத்தவர். தான் ஒரு படைப்பாளியாக இருந்த போதிலும் சக எழுத்தாளர்களை பாராட்டுகிற பண்பு கொண்ட உத்தமமான மனிதர் என்பது அன்றுதான் எனக்குப் புலனாகியது.
ஒரு திடமான கட்டுப்பாடு, ஒரு எட்டாத தன்மை என்ற சிறுகதையை மட்டும் நா.பா பிரசுரிக்க மறுத்தார். அப்பொழுது அக் கதையைத் திருப்பி அனுப்பியபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்தக் கதையை கணையாழியில் பிரசுரிப்பார்கள். அதன்படியே கணையாழியில் அனுப்பியதும் அடுத்த இதழிலேயே பிரசுரித்தார்கள்.
தீபத்தில் நான் மொத்தம் இருபது முப்பது கதைகள் எழுதியிருப்பேன். அந்த ஆபிஸில் வைத்துதான் நான் டெல்லி எழுத்தாளர் ஆதவனைச் சந்தித்தேன். அவர் எழுத்தை நான் அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ் ஜெரால்ட் எழுத்துடன் ஒப்பிட்டுப் பேசினேன். அவர் என் மீது பிரியம் கொண்டார். டெல்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்திக்க தவற மாட்டார். அவர் சொன்ன ஒரு கருத்து இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. ‘நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள். குறைவாக எழுதுகிறீர்கள். படிப்பதை அடியோடு நிறுத்தி விடுங்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுத நேரம் ஒதுக்குங்கள்.’
இன்னொரு டெல்லி எழுத்தாளரான சம்பத் இதற்கு மாறுபட்ட கருத்தை சொல்வார். நாம் எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமென்றால் அங்கு என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் புதிதாக வெளிவரும் படைப்புகளை காசு கொடுத்து வாங்கி நம்மை upto date ஆக வைத்துக்கொள்ள வேண்டும்.
அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஒரு அற்புதமான மனிதர். கிரியா ஊக்கி. என்னை எழுதத் தூண்டி அமுதசுரபி தீபாவளி மலர் இரண்டொன்றில் என் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார்.
சுதேசமித்திரன் தீபாவளி மலர் நான்கு வருடங்கள் என்னுடைய சிறுகதைகளை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார் அதன் பொறுப்பாசிரியா ஸ்ரீனிவாசன். கண்ணதாசன் பத்திரிகை நிர்வாக ஆசிரியர் இராம கண்ணப்பன் என் எழுத்தினை ரசிப்பவர். அவர் எனக்கு தந்த ஆலோசனை. ‘ஏன் இவ்வளவு இறுக்கப் பிடிக்கிறீர்கள்? தளர்வாக எழுதுங்கள். விஸ்தாரமாக விவரமாக எழுதுங்கள்.’
எழுபதுகளின் மத்தியில் பிரக்ஞை என்ற ஒரு பத்திரிகை தியாகராய நகரிலிருந்து வந்தது. அதை நடத்தி வந்த இளைஞர்கள் என்னை விட ஐந்து, பத்து வயது குறைந்தவர்கள். அவர்கள் என்னை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்கள். அது எனக்கு ஒரு மிதப்பை தந்தது. பாம்புகள் பற்றிய பயம் என்ற ஒரு செக் மொழிக் கதையை அதில்தான் வெளியிட்டேன். நிறைய புது கவிதைகள், மொழிபெயர்ப்பும் அவர்களுக்காக செய்து தந்தேன்.
சித்ராலயா பத்திரிகையில் நண்பர் கோபாலி தூண்டுதலின் பேரில் உலக சினிமா வரலாறு பதினைந்து வாரம் எழுதினேன். ஐம்பது வாரம் எழுத உத்தேசித்திருந்தேன். அலுவலக நெருக்கடியால் தொடர முடியாமல் போயிற்று.
நா.பா அவர்கள் தினமணி கதிரில் பொறுப்பாசிரியராக இருந்தபோதும் அவருடன் என் பிணைப்பு தொடர்ந்தது. என்னுடைய நல்ல பல சிறுகதைகளை அவர் தினமணி கதிரில் பிரசுரித்திருக்கிறார். அவர் கதைக் கதிர் என்ற மாத நாவலுக்கும் பொறுப்பாசிரியர். மாத நாவல் எழுதிக் கொடுத்திருந்தாலும் அவர் வெளியிட்டிருப்பார். நான் ஏன் இயல்பான சோம்பேறித்தனத்தால் எழுதித் தரவில்லை. தவறு என்னுடையதுதான்.
கல்கி பத்திரிகையில் என் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. வெவ்வேறு புனைபெயர்களில். சாவி பத்திரிகையில் சிறுகதை வந்திருக்கிறது. சாவி அவர்கள் தினமணிகதிரில் பணியாற்றியபோது துணை ஆசிரியர் ஜெயபாரதி தூண்டுதலில் பேரில் இரண்டொரு கதைகள் எழுதியிருக்கிறேன்.
சுபமங்களாவில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது ஒரு சிறுகதை வந்திருக்கிறது. ஞானரதம் பத்திரிகையில் தேவ சித்ர பாரதி வற்புறுத்தலின் பேரில் ஒரு இலக்கியப் பத்தி எழுதி வந்தேன். அவர் ஒரு உத்தமமான பத்திரிகை ஆசிரியர்.
மணியன் அவர்கள சிறுகதைக்கென்றே ஆரம்பித்த இதழில் என் சிறுகதை கேட்டு வாங்கிப் போட்டார்கள். இந்த முயற்சி சில இதழ்கள் வெளியீட்டுடன் நின்று போனது தமிழின் துரதிருஷ்டம்.
பாவைச்சந்திரன் அவர்கள் ஆசிரிய பொறுப்பு வகித்தபோது குங்குமத்தில் ஒரு கதை எழுதினேன். பிறகு அவர்கள் புதிய பார்வையில் ஆசிரியப் பதவி வகித்தபோது சில மொழிபெயர்ப்பு கதைகளும், சுயமான கதைகளும் பிரசுரம் செய்தார்.
தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் நான் மாஜி எழுத்தாளனாக ஆக வேண்டியது. நவீன விருட்சம் ஆசிரியர் என்னை தூசித்தட்டி தொடர்ந்து என் இலக்கிய முயற்சிகளை வெளியிட்டு வருகிறார். இன்றைக்கும் உயிருள்ள எழுத்தாளனாக நான் இருப்பதற்கு அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
என்னுடைய நாலைந்து சிறுகதைகளை என்னுடைய அலுவலக நண்பர் சிரஞ்சிவி அவர்கள் மொழிபெயர்த்து தெலுங்குப் பத்திரிகைகளில் அவற்றை வெளியிட்டுள்ளார். காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி ராம்நாத் அவர்கள் என்னுடைய ‘போன அவள் நின்ற அவள்’ என்ற சிறுகதையை ஹிந்தியில் மொழிபெயர்த்து ஹிந்தி பத்திரிகை ஒன்றில் பிரசுரித்துள்ளார்.
என்னுடைய சிறுகதை ஒன்றை காலஞ்சென்ற எம் எஸ் ராமஸ்வாமி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் வெளியிட்டுள்ளார். தற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer’s Workshop (கல்கத்தா பிரசுரகர்த்தார்கள்) வெளியிட்டுள்ள தொகுப்பு நூலிலும் இந்த சிறுகதை இடம் பெற்றுள்ளது.
கிரேக்க தத்துவ ஞானி ஒருவன் சொன்னான். உலகம் ஒரு கண்காட்சி மைதானம். பத்து சதவிதம் பேர் இதில் வித்தைக் காட்ட, வேடிக்கைகள் செய்ய, வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார்கள். தொன்னூறு சதவிகிதம் பேர் பார்வையாளர்கள். அந்தப் பார்வையாளர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
நான் ஒரு dabblar in literature. ஆங்கில இலக்கியத்தில் Max Beerbohm என்று ஒரு எழுத்தாளர் பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தில் Max Beerbohm ஆக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்.
பின் குறிப்பு :
ஐராவதம் கதைகளைத் தொகுத்து ஒரு சிறிய கதைத் தொகுதி ‘கெட்டவன் கேட்டது’ என்ற பெயரில் விருட்சம் வெளியிடாக வர உள்ளது. ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த ‘கவனம்’ என்ற பத்திரிகையில் இக் கதை பிரசுரமானது. ஐராவத்திடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது நகைச்சுவை உணர்வு. கெட்டவன் கேட்டது என்ற பெயரில் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னபோது, ஐராவதம் வேறு தலைப்பில் கொண்டு வரச் சொல்கிறார். தமிழைப் பொறுத்தவரை எந்தக் கதைப்புத்தகமாக இருந்தாலும் 100 பிரதிகள் விற்பது சிரமம். லைப்ரரி ஆர்டரை நம்பித்தான் புத்தகம் போட வேண்டும். அதுவும் கட்டாயம் கிடைக்குமென்று சொல்ல முடியாது. தலைப்பு எதுவாக இருந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
– அழகியசிங்கர் 23.06.2010 at 9.51pm


