ஒரு பனித் துளி ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப்

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்
வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்
பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன
தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்
– 

கமலாவும் நீலாவும்….

 

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது.  அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள்.  அது பெண்ணாக இருந்ததினால் ஒவ்வொரு வருடமும் குட்டிகள் போடும் என்று நிடனைத்து அவ்வாறு செய்தனர்  ஆனாலும் குட்டி கமலா அவர்கள்  திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் இருந்து விட்டது.  இறுதியில் ஆச்ரமவாசிகள் அவளுடைய உறுதிக்கு மதிப்புக் கொடுத்தனர்.  கமலா ஆச்ரமத்திலேயே வளர்ந்து ஒவ்வொரு வருடமும் குட்டிகளை ஈன்றது.  அவளுடைய குட்டடிகளே சந்தாச்ரமத்தில் ஒரு பெரிய குடும்பமாக விளங்கியது.
மனிதர்களுக்குக் குழந்தை பிறந்தால் எவ்வாறு பத்தாம்நாள்தொட்டிலிடும் சடங்கு நடக்குமோ, அதுபோல கமலா முதன்முறையாக குட்டிகள் ஈன்றபின் அக்குட்டிகளுக்கும் கமலாவுக்கும் பொட்டிட்டு, மாலை சூட்டி அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தனர்  அன்று பாயசம் மற்றும் இனிப்புகளுடன் ஒரு பெரிய விருந்து நடந்தது.
புதிய அன்பர்கள் முதல் முறையாக கிரிபிரதடசிணம் செய்ய விரும்பினால் பகவான் கமலாவை அழைத்து “அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வா” என்று ஆணையிட அதுவும் அவ்வாறே செய்யும்.
நீலா என்ற பெண் நாய் ஒன்று பகவானுக்கு அருகில் எப்போதும் இருந்து அவர் மடியில் அவ்வப்போது அமர்வது வழக்கம்.  வேறு எந்த நாயும் கந்தாச்ரமத்திற்குள் வர அவள் அனுமதிக்க மாட்டாள்.  ஏன், தன் தாயைக் கூட கந்தாச்ரமத்திற்குள் நுழைய விடாமல் விரட்டிவிடுவாள்.  அது நாயாக தப்பிப் பிறந்திருக்கிறது என்று நாயனா கூறுவது வழக்கம்.
நாய்கள் பகவானுடன் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உயிர்தரிக்காது.  மேலும் பகவானுக்கருகில் எந்தப் பிராணி வந்தாலும் அதற்கு மறு பிறப்பில்லை என்று நாயனா கூறுவதுண்டு  எனவே அவர்
அவைகளை விரட்டிவிடுவார்.
பகவான் அருணாசல மலையில் வசிக்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து நாய்கள் அவர்களுடைய உற்ற தோழனாக இருந்து அவருடைய ஆச்ரம் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன.  ஒவ்வொரு நாயின் வம்சாவளியைப் பற்றி அவர் நன்கு அறிவார்.  புதிதாக யாராவது வந்தால் அவரிடம், “இந்தக் கமலாதான் முதலில் வந்த பெண்மணி.  அந்த நீலாவும் ஜாக்கியும் அவளுடைய குழந்தைகள்.  ரோசும் மற்ற இந்தப் பயல்களும் அவளுடைய பேரப்பிள்ளைகள்,” என்பார்.  கந்தாச்ரமத்தில் கமலா இறக்கப் போகும் தறுவாயில்,  “ஏண்டா பசங்களா…உங்கள் பாட்டியைப் போய்ப் பாருங்கள்.  உங்களை விட்டு சீக்கிரம் அவள் போகப்போறிளர்” என்றார்.  பின்னர் கமலா இறந்தபிறகு எப்படி மனிதர்களைத் துக்கம் விசார்பாரோ அதுபோலவே குட்டிகளிடத்தில் சென்று, “ரோஸ், பாவம். நீ உன்னுடைய பாடடி கமலாவை இழந்து விட்டாயா” என்பார
 (சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து எடுத்தது)

அக்டோபர் மாதக் கதை…….

அக்டோபர் மாதம் சிறந்த கதையாக பெருமாள் முருகனின் ஆசை முகம் என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் கூடவே சில சிறப்பான கதைகளை தள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அக்டோபர் மாதம் பெருமாள் முருகனின் கதையைத் தேர்ந்தெடுக்கும் முன் சிறந்த கதைகளை இரண்டை பாவண்ணனும், அகஸ்தியம் என்ற ஒரு கதையை வண்ணதாசனும், அதேபோல் அபிமானியும் எழுதி இருந்தார்கள். ஆனால் எங்கள் முடிவு பெருமாள் முருகனின் ஆசை முகம் கதையுடன் நின்று விட்டது. 
மாதெரரு பாகன் என்ற நாவல் பிரச்சினையால் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை விலக்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் மேலே குறிப்பிட்ட ஆசைமுகம் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், பெருமாள் முருகன் முடிவால் நாங்களும் அந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அக் கதைக்குப் பதிலாக 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் வெளியான பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பாவண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்



ஒரு தாஒ கவிதை



சோளைக் கொல்லைப் பொம்மையிடம்
இரவல் பெற்ற தொப்பியின் மேல்
மழை வலுத்துப் பெய்கிறது.

தமிழில் : ஞானக்கூத்தன்

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

சிலை

வீனஸ்

முலையின் செழுமையை அர
சிலைக்குக் கொடுத்தால்
கலைப் பொருளாகாமல்,
குலைந்து  போய் விடும்டü
விலைமகள் போலென, து
கிலைச் சுற்றினானோ

சிலையை வடித்த சிற்பி?

காதல்

குமரித்துறைவன்

மந்தையில்
ஈரத்திட்டை முகர்ந்த இளங்காளை
சிலிர்த்து கனைத்து தலை உயர்த்தி
சிரித்தது.

எதையாவது சொல்லட்டுமா……98

   


அழகியசிங்கர்

    புத்தகக் காட்சி என்பது நண்பர்களை, உறவினர்களை, எழுத்தாளர்களை சந்திப்பதற்காக அமைந்த இடம்.  இந்த முறை கூட்டம் அதிகம்.  கடைசி நாள் கூட கூட்டம் வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியின் போது, கால சுப்பிரமணியமை சந்திப்பது வழக்கம்.  என் கடையில் அவர் சிறிது நேரம் இல்லாமல் இருக்க மாட்டார்.  அவர் முகத்தைப் பார்க்கும்போது ஒரு நீண்ட மௌனம் தொங்கிக் கொண்டிருப்பதாக தோன்றும்.  சத்தமாகவே பேச மாட்டார்.  யாருடனும் அவர் சண்டைப் போட்டு நான் பார்த்ததில்லை.  ஆனால் தன்னுடைய அபிப்பிராயத்தில் அவர் உறுதியாக இருப்பார்.  பிரமிளைத் தவிர வேற யாரையாவது அவர் எழுத்தாளராகக் கருதுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும்.  ஆனால் நானோ வேற மாதிரி.  அவரை மாதிரி எழுத்தாளர்களை உதற மாட்டேன். 


    ஒரு எழுத்து சரியில்லாத எழுத்து என்று சொல்வதை நான் கொஞ்சம் விட்டுவிட்டேன்.  அதனால் கையில் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  கவிதைகள் எழுதும் கவிஞர்கள் மீது எனக்கு அலாதியான பிரியம் உண்டு.  ஏன் என்றால் கவிதைப் புத்தகத்தைதான் நான் விற்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பேன்.

    லயம் சுப்பிரமணியம் ஒன்று சொன்னார்.  அவர் ஒரு தமிழ் புத்தகத்தைப் படிப்பதற்கு எடுத்தால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படித்து முடித்து விடுவாராம்.  என்ன கதை விடுகிறாரா என்று தோன்றியது.  ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன், இன்னொரு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவாராம்.  புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத மாட்டாராம்.  என் விஷயம் வேறு, நான் எதாவது எழுத வேண்டுமென்று நினைப்பவன்.  அப்படி எழுத மறந்து விட்டால், திரும்பவும் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது, என்ன படித்தோம் என்று எனக்கு மறந்து விடும்.  அதனால் சரியோ தப்போ எதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்தாலோ, அல்லது ஒரு சினிமாவைப் பார்த்தாலோ எழுத வேண்டுமென்று தோன்றும். 

    எனக்கு அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.  தமிழ் புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படிப்பதா?  நானும் எவ்வளவு பக்கங்கள் படிக்க முடியும் இன்று முயற்சி செய்து பார்த்தேன். 50 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. 

    ஆங்கிலப் புத்தகங்கள் 80 பக்கம் வரை படிக்க முடியுமாம்.  நான் 30 பக்கம் படிப்பேனா என்பது சந்தேகம்.  இதைப் பற்றி அவர் சொன்னதைக் கேட்டு, ஒவ்வொருவரிடமும் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் புத்தகக் கண்காட்சியின்போது.

    சுப்பிரமணியம் இன்னொன்றும் சொல்கிறார்.  படிக்க படிக்க பக்கங்கள் அதிகமாக படிக்க முடியும் என்று.  ஒரு தடியான நாவலைப் பார்த்தால் எனக்கு அயர்ச்சியாக இருக்கும்.  ஆனால் அவரோ எளிதாக ஒரு சில தினங்களில் முடித்து விடுவாராம். 

    என் புத்தக ஸ்டாலுக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் வாங்கும் புத்தகங்களைப் படிப்பீர்காள?’

என்று கேட்க நினைத்தேன்.  அப்புறம் விட்டுவிட்டேன்.  ஏன் என்றால் புத்தகம் வாங்குபவர்களை அப்படி ஒரு கேள்வி கேட்டால், புத்தகம் வாங்காமரல் போய்விட்டால் என்ன செய்வது?’

தெரு

    

1978 ஆம் வாக்கில் எங்கள் தெருவிற்கு வந்துவிட்டோம.  தெருவின் இரு பக்கங்களிலும் சாக்கடைகள் இருக்கும்.  அவ்வப்போது சாக்கடை அடைத்துக் கொள்ளும்.  என் அப்பாதான் தெருவிற்கு தலைவர்.  அவர்தான் வேறு வழியின்றி அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடை சகதியை அப்புறப்படுத்துவார். 

    அதிமுக சார்பில் நின்ற ஒரு எம்எல்ஏ தெருவிற்கு தேர்தலுக்கு முன் வந்திருந்து ஒவ்வொருவரிடமும் தெருவைப் பற்றிய குறைகளை கேட்டார்.  எல்லோரும் சாக்கடையைப் பற்றியும், முனையில் கட்டியிருக்கும் மாடுகளைப் பற்றியும் சொன்னோம். 

    ரொம்ப நாளைக்குப் பிறகு சாக்கடைப் பிரச்சினை தீர்ந்தது.  ஆனால் மாடுகள் பிரச்சினை தீரவில்லை.  தெருவின் இன்னொரு முனை வழியாக வேறு ஒரு பிரதான சாலைக்குச் சென்று விடலாம்.  ஒரு சந்து வழியாக போக வேண்டும்.  அந்தச் சந்தின் பெயர் மொட்டையம்மாள் சந்து என்று பெயர்.  அங்கு திருட்டுத்தனமாக சாராயம் விற்பார்கள்.  அங்கு சாராயம் விற்பவர் பெயர்தான் மொட்டையம்மாள்.  கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்.  என் அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்வார். 

    இந்தத் தெருவைப் பார்த்து, கேவலமாக என் நண்பர் ஒரு முறை சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 

    இந்தத் தெரு முழுவதும் மாறிவிட்டது.  சாராயம் விற்கும் இடம் இப்போது இல்லை.  சாக்கடைகள் இல்லை.  ஆனால் தெரு முழுவதும் வண்டிகள்.  டூ வீலர் பார்க்கிங் மாதிரி தெரு காட்சி அளிக்கிறது.

    எங்கள் தெருவில் மாட்டுப் பொங்கல் அன்று ஒவ்வொரு வீட்டிலும் கோலம் போட்டிருந்தார்கள்.  அப்போது எடுத்தப் புகைப்படங்களை இங்கே கொடுக்கிறேன். 

மாதொருபாகன் சில சிந்தனைகள்

அழகியசிங்கர்
இந்து நாளிதழ் 14 01 2015ல் ‘எழுத்தாளன் செத்துவிட்டான்’ என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதி கையெழுத்திட்ட அறிவிப்பைப் படிக்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.  பெருமாள் முருகன் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது.  பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர்.  மிகச் சிறிய வயதிலேயே அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்.  முதன் முதலாக அவர் ஏறு வெயில் என்ற நாவலை எடுத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் விற்பதற்கு வந்தார்.   அவரே அதைப் புத்தகமாக கொண்டு வந்ததைக் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.  அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால்தான் அப்படி ஒரு செயலை அவர் செய்ய முடியும்.
இப்படி ஒரு திறமையான எழுத்தாளர், பத்திரிகைகளை நம்பாமல் தானே எழுதத் துவங்கியவர், இன்று மாதொருபாகன் என்ற நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று எழுதிவிட்டார்.  படிக்கும் பலருக்கு ஏன் இப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்தார் என்றுதான் தோன்றுகிறது.  
அந்த நாவலில் அவர் தேவையில்லாதவற்றை எழுதியதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக தோன்றுகிறது.  எப்போதும் ஒரு எழுத்தை எழுதியவன், எழுதி முடித்தவுடன் எழுத்தில் இறந்து விடுகிறான்.  அதன் பின் அதை எழுதியவன் வேறு, எழுத்து வேறு.  எழுத்து தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், அது வாசகர் கையில்தான் இருக்கிறது.  எந்த எழுத்தையும் வாசகன் ஒருவன்தான் உயிர் கொடுக்கிறான்.  எழுத்தாளனுக்கு திறமை இருக்கலாம், ஆனால் வாசகன் மனசு வைக்காவிட்டால், எந்த எழுத்தும் நிற்க முடியாது.  இது எல்லா எழுத்துக்கும் பொருந்தும்.
பெருமாள் முருகன் அவர் நாவலை எழுதி முடித்தவுடன் நாவல் மூலம் காணாமல் போகிறார்.  பின் வாசகன்தான் அந்த நாவலைக் குறித்து தீர்மானம் செய்ய வேண்டும்.  
சர்ச்சைக்குரிய மாதொருபாகன் என்ற நாவலை நான் படித்ததில்லை.  ஆனால் அவருடைய முதல் நாவலான ஏறுவெயில் படித்திருக்கிறேன்.  முதலில் எழுத்தில் ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  யார் முன்னிலையில் இருக்கிறார்கள்.  எழுத்தாளனா வாசிப்பவனா?  என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பவனின் பங்கு முக்கியமானது.  ஒரு எழுத்தாளன் அதை உணர மாட்டான்.  நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நான் 26 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேன்.  பிரமிள் ஒருமுறை பிரசுரத்திற்கு ஒரு கவிதையைக் கொடுத்தார்.  நான் அதைப் பிரசுரம் செய்யவிலலை.  பிரமிளுக்கு என் மீது கோபம். “ஏன் அதை நீங்கள் பிரசுரம் செய்யவில்லை?” என்று கேட்டார்.  “அது படிப்பவரை டிஸ்டர்ப் செய்யும், அதனால் போடவில்லை,  மேலும் அதைப் படித்து விட்டு ராத்திரி முழுவதும் தூக்கம் வரவில்லை,” என்றேன்.  பிரமிள் பிடித்துக்கொண்டார்.  ஒரு பத்திரிகையில் அவர் கவிதையைப் படித்துவிட்டு நான் தூக்கமில்லாமல் தவித்ததாக எழுதி விட்டார்.  எம் வி வெங்கட்ராமின் ‘காதுகள்’ என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் ஒரு நாவலையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தேன்.  பழுத்த அனுபவமுள்ள ஒரு இலக்கிய நண்பரிடம் படிக்கப் போவதாக கூறினேன்.  üüபடிக்காதீர்கள், அப்புத்தகங்கள் மனதைத் தொந்தரவு செய்யும்,ýý என்றார்.  ஏன் இப்படி சொல்கிறார் என்று நான் படிக்கத்தான் செய்தேன்.  ஆனால் அந்த இலக்கிய நண்பர் கூறிய கருத்து உண்மைதான்.    மனதைத் தொந்தரவு செய்யும் எழுத்து ஏன் என்று தோன்றியது.  
பெருமாள் முருகனின் நாவல் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மக்களை பெரிதும் துன்பப்படுத்துகிறது.  அதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள்.  அந்த நாவலின் சில பகுதிகளை அவர் மாற்றி வேறு விதமாக எழுதிக் கொடுக்கலாம்.  யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு எழுத்து இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.  பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர்.  இதை சுலபமாக அவரால் செய்ய முடியும்.  ஆனால் அவர் ஒரேடியாக பயந்துபோய் எழுதுவதையே விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  ஒவ்வொரு முறையும் எழுதியபிறகு எழுத்தாளன் செத்து விடுகிறான்.  வாசகன்தான் அவனுக்கு உயிர் கொடுக்கிறான்.
எழுத்தாளனைவிட வாசகன்தான் முக்கியமானவன்.  வாசகன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  இன்றும் கூட புத்தகக் காட்சியில் கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை எல்லாப் பதிப்பாளர்களும் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.   ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.  கல்கி உயிருடன் நம் முன் இருக்கிறார். 

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்


காலத்துக்கு வணக்கம்



கி அ சச்சிதானந்தம்

மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.

மழையாலும் காற்றாலும்
சிற்பங்கள் சிதையவில்லை
எப்போதோவரும்
ஆராய்ச்சியாளனுக்கு
பிழைப்புத் தர
நிலத்தினுள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நிழல்தரும் தூண் ஒன்று
அதன் இடையில்
ஆண்பெண் இருவர் புணரும்
உருவங்கள்.
சிற்பி
இலக்கியத்தின் இலட்சணங்களையும்
வாத்சாயனாவின் காமத்தையும்
இரண்டறக் கலந்திருக்கிறான்.

முலைகளில்
முதிர்ச்சி அடைய
இடப்பையன்கள்
கசங்கிய கறையும்
அல்குலில்
தாரைத் தடவிய
முக்கோடும்.

அன்றொருநாள்
அந்தத் தூணின் கீழ்
துணி நீங்கிய இருவர் புணர்ந்திருந்தனர்
திரும்பிப் பார்த்தேன்
தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள்

சிற்பம் உயிரானதைக் கண்டு
காலத்திற்கு வணக்கம் செலுத்தினேன்.

கே பாலசந்ததர் சில நினைவுகள்

அழகியசிங்கர்

சமீபத்தில் கே பாலசந்தரின் மரணம் திரைப்பட உலகத்தை ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.  நான் மதிப்புக் கொடுத்துப் பார்க்கும் டைரக்டரில் கே பாலசந்தர் ஒருவர்.  அவருடன் ஸ்ரீதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கருப்பு வெள்ளைப் படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கே பாலசந்தர்.  அவருடைய முதல் படமான ‘நீர்க்குமிழி’ ரொம்ப அற்புதமான படம்.  அதில் நாகேஷ் நடிப்பு அபாரமாக இருக்கும்.  எந்த நடிகரையும் பாலசந்தர் அவருடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவார்.  
அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் பொருந்தாத உறவு முறைகளைக் கொண்டுவந்து கதையை சிக்கலாக்கி பின் சாத்தியமில்லை என்பதுபோல் கொண்டு போய்விடுவார்.  அவருடைய படங்களில் சில கதாபாத்திரங்கள் சில சமிஞ்ஞைகள் செய்வார்கள்.  படம் முழுவதும் அது மாதிரியான சமிஞ்ஞைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு போவார்கள்.  
என்னுடைய பால்ய காலத்தில் பாலசந்திரனின் எந்தப் படத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  
பாலசந்திரன் இதுமாதிரி அதிகமாகப் படங்கள் எடுத்தாலும், அவருடைய மதிப்பு வேறு சில புதுமுக டைரக்டர்கள் வரவர குறைந்துகொண்டே போயிற்று.  ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாரதிராஜாவும், பாக்கியராஜ÷வும் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.  பாரதிராஜாவின் 16வது வயதினில் படம் வெளிவந்தபோது, சினிமா உலகம் வேறு பாதைக்குத் திரும்பத் தொடங்கி விட்டது.  பாரதிராஜாவின் புதுத்தன்மை பாலசந்திரன் படங்களை வேறு பாதைக்குத் திருப்பி விட்டன.
பாலசந்திரன் படங்களின் ஒரு குறை அவருடைய படங்களில் காணப்படும் நாடகத் தன்மையை அவரால் விலக்க முடியவில்லை.  அதேபோல் அவர் சில படங்களில் வெளிப்படுத்திய தைரியத் தன்மையை யாரும் அப்போது கையாளவில்லை.  உதாரணமாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் கமல்ஹாசன் தேவடியாப் பசங்களா என்று சேரை அடித்துவிட்டு குடித்து கும்மாளமிடும் கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிடுவார்.   அந்தச் சமயத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, என்ன இவ்வளவு தைரியத்துடன் இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இருக்கிறாரே என்றும் தோன்றியது.   
  
அதே சமயத்தில், ‘அவள் அப்படித்தான்’ படத்தில் சுஜாதா என்ற நடிகை ஒரு வசனம் பேசுவார்.  கர்வமாக இருக்கலாம், ஆனால் கர்ப்பமாக இருக்கக் கூடாது.  அந்த வசனம் அந்த இடத்தில் தேவையில்லாத வசனம்.  நானும் என் நண்பரும் அந்தப் படத்தில் அந்த வசனத்தைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.  பாலசந்திரனுக்கு என்ன ஆயிற்று?  என்று சொல்லிக் கொள்வோம்.
பாலசந்திரனின் நான் ரசித்த இன்னொரு படம் புன்னகை.   நான் அவனில்லை, சிந்து பைரவி, மன்மத லீலை, அரங்கேற்றம் போன்ற படங்களும் வித்தியாசமானவை.  தொடர்ந்து தமிழ் திரை உலகில் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் கே பாலசந்தர்தான். 
என்னதான் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் படங்கû நம்மால் மறக்க முடியாது.