ஒரு பனித் துளி ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப்

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்
வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்
பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன
தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்
– 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன