கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

பனி எதிர் பருவம்


ஆங்கிலத்தில் : எட்வர்டு லீய்டர்ஸ்




 தமிழில் : மகாகணபதி




என்னுள் ஒரு                குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியை விரும்பும்

என்னுள் ஒரு குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியிடம் அஞ்சும்

என்னுள் ஒரு குழந்தை
வெளியில் இருட்டில்
விழும் பனியைக் காணமுடியும்

அக் குழந்தை
என்னுள்ளே

நான் உள்ளே

இருள் வெளியில் விழும் பனியை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது குழந்தையாக மாறி விடுகிறது மனம். என்னுள்ளேயே குழந்தையும் இருக்கிறது.  

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

என்னுடைய 30வது வயதில்

                              சீனம் : ச்சி ஸ÷யென் 


   ஆங்கிலம் வழி தமிழில் : ப கங்கை கொண்டான்


“சிகரெட் சாம்பல்கள்
சிதறிப் படிகின்றன –
எனது
வாழ்க்கை மலரின்
உதிர்ந்த இதழ்கள்
அவை.
தொடுவானத்தின்
சங்கமத்திற்கும்
அப்பால் –
மிகவும் அப்பால்
எனது ஒற்றை
நிழல் வளர்கிறது
நீளமாக –
மிகவும் நீளமாக! “

ஒரு கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதி விடுகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்பவர்கள் தன் மனநிலை, அறிவு நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறார்கள்.  எழுதுகிறவர்களிடமிருந்து கவிதை நழுவிப் போய்விடுகிறது. படிப்பவர் ஒவ்வொருவரும் இந்தக் கவிதையை எப்படிப் புரிந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இந்தக் கவிதை தோற்றம் தரும்.

புத்தக விமர்சனம் 8

அழகியசிங்கர்
 
இமையம் அவர்களின் ‘எங்கதெ’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது.  சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.  தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.  அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள்.  மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.  
ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது.  உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும்.  நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும்.  சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர் குறைவு.  சினிமா பார்ப்பவர்கள் அதிகம். 
இமையம் இதுவரை 4 நாவல்கள், 4 சிறுகதைகள் கொண்டு வந்துள்ளார்.  இதைத் தவிர தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகிறார்.   அவருடைய எல்லாப் புத்தகங்களையும் க்ரியாதான் வெளியிட்டுள்ளன.  இமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள் என்ற நாவல். வெளிவந்த ஆண்டு 1994. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2001ல் வெளிவந்துள்ளது.  இது குறிப்பிடப்பட வேண்டிய படைப்பு.  
இமையத்திற்கு இதுவரை சாகித்திய அக்காதெமியின் பரிசு கிடைக்கவில்லை.  அவருக்கு அந்தப் பரிசு கிடைக்க நான் பரிந்துரை செய்கிறேன்.
மே 2015ல் வெளிவந்த அவருடைய எங்கதெ பலருடைய கவனத்தைக் கவர்ந்துள்ளது.  ஒரு விதத்தில் இப் புத்தகம் பற்றி விமர்சனம் செய்யும்போது அவருடைய நாவலின் முழுக் கதையையும் எல்லோரும் எழுதி விட்டார்கள்.  ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பாக நாவலைப் பற்றி எழுதும்போது, முழுக் கதையும் எல்லோரும் எழுதும்படி நேரிடுகிறது.  முழுக்கதையும் சொல்லாமல் ஒரு நாவலை விமர்சனம் செய்வது முடியாத காரியமாக எனக்குத் தோன்றுகிறது.  மேலும் புத்தக விமர்சனத்தை மட்டும் படிப்பவர்கள், அதுதான் நாவலைப் பற்றி எழுதியதைப் படித்தாயிற்றே என்று நாவலை வாங்கிப் படிக்காமல் விட்டுவிடுவார்கள் என்ற எண்ணமும் தோன்றியது.  
எங்கதெ என்ற நாவல் கள்ள தொடர்பைப் பற்றி பேசுகிற நாவல்.   தன்னைப் பற்றி பேசுகிற மாதிரி இந் நாவல் ஆரம்பமாகிறது.  அதில் கமலா என்கிற பெண் வருகிறாள்.  பத்து வருடம் அவளுடன் வாழ்ந்த வாழ்வைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.  இமையம் இதைப் பேசுகிறமாதிரி எழுதிக் கொண்டு போகிறார்.  முப்பத்தி மூணு வயதாகிறவனுக்கு கமலா என்கிற இருபத்தெட்டு வயதாகிற விதவையுடன் ஏற்படுகிற கள்ளத் தொடர்புதான் கதை.  ஏற்கனவே விதவையான கமலாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.
பத்து வருடத் தொடர்பில், தன்னைப் பற்றிய நினைவு இல்லாதவன் கதை.   இக் கதையைச் சொல்றவன், படித்திருந்தும் வேலைக்குப் போகாதவன், வெட்டியாய் சுத்தறவன்.  வீட்டில் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், கல்யாணம் எதுவும் செய்ய விருப்பமில்லாமல் கமலாவை  சுற்றி சுற்றி வருகிறான்.
கமலா இளம் வயசுக்காரி.  புருஷன் இல்லாதவள்.  இரண்டு பொட்டைப் பசங்களுடன் வசிக்க வருகிறாள்.  அவள் புருஷன் அடிப்பட்டு இறந்ததால, கருணை அடிப்படையில் டிகிரி படிச்சதால அவளுக்கு கிளார்க்கு வேலை அரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் கிடைக்கிறது.  
அவள் அழகைப் பார்த்து, எல்லோரும் அவளுக்கு சலுகைத் தருகிறார்கள்.  சிதம்பரம் புள்ளையோட வீட்டுல தங்கறதுக்கு இடம் கொடுக்கிறார்.  அவ கொடுக்கிற வாடகையை வாங்கிக்கிறார். பேரம் பேசவில்லை.  அவ வந்து இரண்டு நாள்ல ஊருக்குத் தெரிஞ்ச ஆளா, ஊரே பேசற ஆளா மாறி விடுகிறாள்.  
இந் நாவல் கமலாவைச் சுற்றி இருந்தாலும், கமலாவே தானே பேசற மாதிரி கதை இல்லை.  பொதுவா பார்க்கப் போனால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகிற கூடா ஒழுக்கம் பற்றிய கதைதான் இது.
இருவரும் விரும்பித்தான் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்.  கமலாவைப் பற்றி கதையை கதா நாயகன் சொல்லும்போது, நல்ல பாம்பு மாதிரி சரசரவென்று வந்தாள் என்று விவரிக்கிறான்.  அப்போதே கமலாவைப்பற்றிய விபரம் வெளிவரத் தொடங்கி விடுகிறது.  
அவளுடன் பழகும்போது மகுடி முன்னால் பாம்பு மயங்குவதுபோல இவன் மயங்கி விடுகிறான்.  அவள் சொல்றதையெல்லாம் கேட்கிறான்.  நில்லுன்னா நிக்கறான்.  உட்காருன்னா  உட்காறான்.  அவளோட வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கான்.  இது இவன் குடும்பத்துக்கு எரிச்சலாக இருக்கிறது.  ஒரு கல்யாணம் கூட பண்ணாம இருக்கானே என்று அவன் அப்பா அம்மா வருத்தப்படறாங்க.  அவன் தங்கைகள் எல்லாம் எவ்வளவு எடுததுச் சொன்னாலும் அவன் கேட்கறதில்லை.  வேலைக்குப் போவதில்லை.  இப்படி ஒரு வெட்டியா சுத்தறவன் கதைதான் இது.
கமலாவுக்கு இரண்டு பெட்டை குழந்தைகள் இருக்குன்னு தெரிஞ்சும், அவளையே சுத்தி சுத்தி வர்றான்.  ஒரு பார்வையில, ஒரு சிரிப்பில அவனை ஒரு நாய் குட்டியா மாத்தி விடறா.  அந்த ஊர்ல இருக்கும்போது, கமலாவை வேற யாரும் நெருங்கலை.  ஏன்னா அவன்தான் எல்லாம்.  அவன் அவளை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கலை.  அவளுக்கும் தோணலை.  இந்தக் கூடா நட்பில், அவ வீட்டுக்கு அவளுடைய பெற்றோர்கள், மாமனார் மாமியார் வரும்போதெல்லாம் அவன் இருக்க மாட்டான்.  
கமலா அந்த ஊரிலிருந்து வேற ஊருக்குப் போகும்போது பெரிய மாற்றம் ஏற்படுகிறது.  கமலாவுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.  அவள் கடலூர் மாற்றப்படுகிறாள்.  இவன்தான் அவளை அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தகிறான்.  
இங்குதான் பிரச்சினை ஏற்படுகிறது.  ஒரு பெரிய ஆபிஸில் வேலை பார்க்கும்போது, அவளுக்கு பல பேருடன் தொடர்பு ஏற்படுகிறது.   சி இ ஓன்னு ஒருத்தன் கமலா வாழ்வில் நுழைகிறான்.  இன்னும் இரண்டு மூன்று வருஷத்துல ரிட்டையர்ட் ஆகப் போகிறவனுக்கு கமலா மீது மோகம்.  கமலா வீட்டுக்கு வந்து அவன் அவ்வளவு வசதியும் செய்து கொடுக்கிறான்.  அவன் அவளுக்கு மேல் உள்ள அதிகாரி. 
இக்கதையில் கூடா ஒழுக்கம்  ஷிப்ட் ஆகிறது.  இதை கமலா அவனிடம் மறைக்கிறாள்.  அவனுக்குத் தெரிந்தவுடன்,  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவனுக்கு இந்த சி இ ஓ வர்றது பிடிக்கலை.  அவ முன்னாடி ஒரு கட்டத்தில சி இ ஓ அவனை அலட்சியப் படுத்துகிறான்.
கமலா எப்போதும் போல் இருக்கிறாள்.  அவனும், சி இ ஒவும் அவளைப் பொறுத்தவரை ஒன்றுதான்.  பள்ளிக்கூடம் படித்த அவள் பசங்க கல்லூரிக்குப் போகிறார்கள்.  அம்மாவை அவர்கள் அப்படியேதான் பார்க்கிறார்கள். அம்மாவுடைய நடத்தையைத் தெரிந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சி இ ஓ குடும்பத்தினர்கள் அவள் வீட்டுக்கு வந்து அவமானம் செய்தும், அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை.  வீட்டை மட்டும் மாற்றிக் கொள்கிறாள்.  அவளைப் பொறுத்தவரை அவளை விரும்புகிற ஆண்களை ஏற்றுக்கொள்கிறாள்.
தமிழில் கூடா ஒழுக்கம் பற்றிய கதை இதுதான் என்பதில்லை.  ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்.  ஜானகிராமனின் பெரும்பாலான கதைகள் கூடா ஒழுக்கம் பற்றியதுதான்.  நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், நாவல்கள் பெரும்பாலும் காந்தியுகத்தைப் பற்றி வெளிவந்து கொண்டிருந்தன.  சி சு செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் போன்றவர்கள் காந்தியுக நாவல்களை எழுதி இருக்கிறார்கள்.  அதன்பின் உன்னதமான கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கல்கி, நா பார்த்தசாரதி போன்றவர்களின் பங்கு இதில் முக்கியமானது.  அரசியல் ஒழுக்கமின்மையைப் பற்றிய நாவலை இந்திரா பார்த்தசாரதி எழுதி உள்ளார்.  நடுத்தர வர்க்க மாந்தர்களைப் பற்றியும், விளிம்பு நிலை மாந்தர்களைப் பற்றியும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. 
கூடா ஒழுக்கம் பற்றிய இந்த நாவலில் கதை சொல்றவனுக்கு (அவன் பெயர் இதில் சொல்லப்பட வில்லை), பத்து வருஷம் ஏற்படுத்திய பாதிப்பை விட்டு அவ்வளவு சுலபமாக வெளிவர முடியவில்லை.  அந்த வலியைத் தாங்க முடியவில்லை.  இறுதியில் கமலாவை கொலை செய்யவே முடிவு செய்கிறான். 
அவள் வீட்டிற்கு வந்து எப்போதும்போல் பழகுகிறான்.  அவள் கழுத்தை நெரித்து கொலை செய்ய நினைக்கும்போது, அவன் மனம் மாறி விடுகிறது.  அந்தப் பெண் பிள்ளைகள் அவள் இல்லை என்றால் அனாதை ஆகிவிடும் என்ற நினைப்பு வருகிறது.  பத்து வருடம் அவளுடன் இருந்தாகி விட்டது.  அதுவே போதும்,  அவள் அந்தப் பெண் பிள்ளைகளுக்காக இருக்க வேண்டும் என்று நினைத்து 
üüநீ யார் கூட வேணுமின்னாலும் இரு.  எப்பிடின்னாலும் இரு.  ஆனா உசுரோட இரு.  இதான் என் ஆச,ýý என்று ரகசியமா அவள் காதுல சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறான்.  ஆனா அப்படி சொலலிவிட்டு வருவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.  இமையம் இந்த நாவலை சிறப்பாக இப்படி முடித்து இருக்கிறார்.
எங்கதெ – நாவல் – இமையம் – பக்கம் : 110 – வெளியீடு : 
             Cre-A, New No.2, Old No.25, 17th East Street, Kamarajar Nagar,
             Thiruvanmiyur, Chennai 600 041, Phone  : 72999 05950
  
 

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

ஹரி : ஓம் : தத் : ஸத்
           
                                                                                                 ஐராவதம்




நெடுஞ்சாலை நடுவினிலே
நான்
நீண்ட நேரம் படுத்திருக்க
நினைத்ததுண்டு

பச்சை விளக்கு எரிகையிலே
பாய்ந்து வரும் கார்கள்
பஸ்கள்,  லாரிகள், டாக்ஸிகள்
ஸ்கூட்டர்கள், சைகிள்கள்
அத்தனையும் என் பொருட்டு
நின்றுவிடும் எனக் கற்பனை
செய்ததுண்டு.

கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய
துடித்ததுண்டு
ஒளிச்சர விளக்குகள்
ஒலித்துச் சிதற
பலி ஆடு மந்தையென
பார்த்திருப்போர் கூட்டம்
ம்மே ம்மே என அலறிச் சிதற
மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ
களேபரச் சந்தடியில்
காற்றாய் மறைய நினைத்ததுண்டு

பாட்டுக் கச்சேரியில்
பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள்
நவரத்தினக் கழுத்தணிகள்
நாற்புறமும் சிதற
கீர்த்தனை கிறீச்சிட
முத்தாய்பபு விழிதெறிக்க
சங்கதிகள் அந்தரத்தில்
சதிராட
வெடிகுண்டு வீசிடவும்
என் கைகள் துடித்ததுண்டு.

நகரத்தின் தெருக்களில்
நான் இன்னமும் நடக்கிறேன்…..
நடக்கிறேன்…..நடக்கிறேன்…..

ஐராவதத்தின் இந்தக் கவிதை விபரீதத்தை விளக்கும் கவிதை.  நெடுங்சாலையில் யாராவது படுத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா? படிப்பவரை அதிர்ச்சி அளிக்கும்.  ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இதெல்லாம் அதிர்ச்சி இல்லை.  மனப்பிறழ்வை உண்டாக்கும் ஒன்றாக நினைக்கலாம்.
கடற்கரையில் கூட்டம் நடக்கிறது.  ஏன் கல்லெறிய வேண்டும்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளை எள்ளல் தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்.  பாட்டுக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஏன் வெடிகுண்டு வீச நினைக்கிறார்.  
புரியவில்லை.

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

அழைப்பு 




நீலமணி

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்

இயற்கை

நா ஜெயராமன்

நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்
நோட்டீசாக் படிந்திருந்தது

1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை.  இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது.   காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன.  நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது.
அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது.  2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது.  கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும்.
ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.

புத்தக விமர்சனம் 7

 
அழகியசிங்கர்





நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன்.  பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.  எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன்.  படிக்க முடிந்தால் படிப்பேன்.  ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது.
நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் ‘இந்தியா 1948’ என்ற புத்தகம்.  அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல்.  நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்.  என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன்.  எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன்.
தாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன்.  எனக்கு இது ஆச்சரியம்.  இது மாதிரி இரண்டு முறை நான் தாம்பரம் வரை போய் வந்த நாட்களில் இப் புத்தகம் முழுவதும் படித்து முடித்து விட்டேன்.
அசோகமித்திரனிடம் எனக்குப் பிடித்த விஷயம்.  அவர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் நாவல் எழுத மாட்டார்.  அவர் எழுத்தில் சொற் சிக்னம் மிக முக்கிய விஷயம்.  ஒரு பெரிய விஷயத்தை இரண்டு மூன்று வரிகளில் சொல்லி முடித்து விடுவார்.  இந்த நாவலையும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.    
1948-ல் ஒரு ஆண் ஏற்கனவே மணமானவனாக இருந்தாலும், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் குற்றம் இல்லை.  ஆனால் 1955ல் ஹிந்து திருமணச் சட்டப்படி அது குற்றம்.   சட்ட விரோதம்.  
1948 ஆம் ஆண்டாக இருந்தால் என்ன, 2015 ஆம் ஆண்டாக  இருந்தால் என்ன?  ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் சலசலப்பு எப்போதும் ஒன்றாக இருக்கும்.
இரண்டு பெண்களுடன் தொடரும் வாழ்க்கையைப் பற்றி இந்த நாவல் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போகிறது.  இரண்டு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஒரு நபர், எப்படி சிக்கல் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்று நினைக்கிறார் என்பதுதான் கதை.
அலுவல் பொருட்டு அமெரிக்கா செல்லும் ஒருவர், அங்கு கார் சம்பந்தமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.  அவர் கம்பெனி பொருட்டு அங்கு இரண்டு வருடங்கள் தங்க நேர்கிறது.  அங்கு லட்சுமி என்ற விதவைப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்.26 வயது நிரம்பிய அவரைப் பார்த்து, லட்சுமிதான் சுயவரம் போல் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள்.  சிறிய வயதில் விதவை ஆன லட்சுமி, தன் அம்மாவிடம் இவரை திருமணம் செய்து கொள்ளப் போவதைத் தெரிவிக்கிறாள்.  இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதோடல்லாமல், ஒரு குழந்தை வேறு இருக்கிறது என்பதை அறிந்தும் லட்சுமி இவர் மீது உள்ள ஈடுபாட்டால் திருமணம் செய்து கொள்கிறாள்.
கொஞ்சம் வசதிபடைத்த லட்சுமி எல்லோரும் சேர்ந்து வாழலாம் என்கிறாள்.  இதை அவர் மனைவியிடமும், அம்மாவிடமும் எப்படி சொல்வது இதுதான் கதை.  அவர்தான் அதைச் சொல்ல வேண்டும், லட்சுமியோ அவள் அம்மாவோ இதைச் சொல்லப் போவதிலலை.
அவர் மனைவி பார்வதியிடமும், அம்மாவிடமும் சொல்வதற்குள் அவர் படுகிற பாட்டை நாவல்  முழுவதும் விவரிக்கிறார்.  ஒரு ஆண் தன் அந்தரகத்தை வெளிப்படையாகச் சொல்ல பெரிதும் விரும்புவதில்லை. 
 அவன் அப்படிச் சொல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே சிந்திக்கிறான்.  
அவர் அமெரிக்காவில் இருந்தபோது, அவர் மனைவி பார்வதிக்கு கடிதம் எழுதியதில்லை.  அம்மாவுக்குத்தான் எழுதுவார்.  அப்படி எழுதுவதும் போகப்போக குறைந்தும் விடுகிறது. லட்சுமிவை அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட பிறகு இந்த நிலையை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.  
42 அத்தியாயங்கள் இந்த நாவல் எழுதப் பட்டாலும் சுருக்கம் சுருக்கமாக நாவலில் அத்தியாயங்கள் எழுதப் பட்டிருக்கிறது.  இப் புத்தகத்தில் 4வது அத்தியாயம் அரைப் பக்கம்தான்.
அமெரிக்காவிலிருந்து வந்த அவரை அவர் வீட்டிற்கு காரில் அனுப்ப, லட்சுமியின் அம்மா  எடுத்துக்கொள்ளும் அக்கறையை இந்த அத்தியாயம் காட்டுகிறது.
நாவலைப் படிக்க படிக்க ஒவ்வொரு முறையும் இவர் எப்போது தான் செய்துவிட்ட ஒரு தவறை அவர் முதல் மனைவிடமும், அம்மாவிடமும் சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருக்கிறது. அப்படிச் சொல்வதால் ஏற்படும் கலவரத்தை எண்ணியும்  படிப்பவரை யோசிக்க வைக்கிறது.   
லட்சுமி அமெரிக்காவிலிருந்து பாம்பாய் வரப் போவதை அவரிடம் தெரிவிக்கிறாள்.  அவள் வருவதற்குள் வீட்டில் உள்ளவர்களுக்கு தன்னுடைய இரண்டாவது திருமணத்தைச்  சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.  அதற்கான சரியான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்க வில்லை.  அவர்  எப்போது சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை லட்சுமி, அவள் அம்மாவும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர் இருப்பது கூட்டுக் குடும்பம்.  கூடவே தம்பியும் அவருடன் இருக்கிறான்.  அவனுக்கு திருமணம் ஆகிறது.  சென்னையில் இருந்து வந்தப் பெண்ணும் அவர்களுடன் இருக்கிறார்கள்.  தன்னுடைய தவறை சொல்வதன் மூலம் ஒருவித கலக்கம் அவருள் ஏற்படாமல் இல்லை.
ஒருமுறை அவர் குடும்பத்தின் உறுப்பினர்களுடன் லட்சுமி அம்மா வீட்டிற்கு அவர் அழைத்துச் செல்கிறார். உரிமையுடன் அவர் அங்கு நடமாடுவதைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.  ஆனால் அப்போதுகூட அவர் லட்சுமிவை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சொல்வதில்லை.
அவர் மனைவி பார்வதியிடம் மட்டும் எப்படியாவது சொல்ல வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.  அந்த முடிவுடன் அவர் மாமாவைக் கண்டுபிடிககிறார். அவர் மாமாதான் சின்ன வயதில் தன் பெண்ணை யாருடைய சம்மதமும் கேட்காமல் அவருக்குத் திருமணம் செய்து  வைத்தது. பின் அவர் சந்நியாசம் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்.  அவர் அம்மாவிற்கு இப்படி சொல்லாமல் திரும்ணம் செய்து விட்டாரே என்ற  வருத்தம் இருந்தாலும், சகோதரனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவை இழந்த குடும்பத்திற்கு மாமாதான் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்,   மாமாவின் விருப்பத்திறகு மீறி எதுவும் செய்ய முடியவில்லை. 
ரிஷிகேஷில் பார்வதி அப்பாவை அதாவது அவருடைய மாமாவாகிய மாமனாரைச் சந்திக்கிறார்.  அவரிடம் அவர் லட்சுமியைப் பற்றி சொல்கிறார்.   பார்வதி தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  இந்த நாவலில் இப்படித்தான் மனைவியிடம் தன் இரண்டாவது மனைவியைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரியப் படுத்தவில்லை.
லட்சுமி இந்தியா வந்தபிறகு, அவருடைய இரண்டாவது குழந்தை இறந்த துக்கத்தை விஜாரிக்க அவள் அம்மாவுடன் வருகிறாள்.  அவர் அம்மாவைப் பார்த்து லட்சுமி நமஸ்கரித்துச் சொல்கிறாள் :  “இனிமேல் உங்கள் சுகதுக்கங்கள், என் சுகதுக்கங்கள்,” என்று.
அவர் அம்மா அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள்.  நாவல் இத்துடன் முடிந்து விடுகிறது.
ரொம்பவும் நுணுக்கமாக இந்த நாவலை அசோகமித்திரன் எழுதிக்கொண்டு போகிறார்.  பெரிய களேபரம், கலாட்டா எதுவும் இந்த நாவலில் ஏற்படவில்லை.  
இந்த நாவலின் கதாநாயகன் பெயர் என்ன, அவன் எப்படி இருப்பான் என்ற விபரம் எல்லாம் தெரியவில்லை.  அவன் எல்லோரிடமும்ட மிக சொற்பமாகத்தான் பேசுவதாக காணப்படுகிறான்.  படிக்க சுவாரசியமாக இந்த நாவலை சிறப்பாகவே அசோகமித்திரன் எழுதி உள்ளார்
இந்தியா 1948 – அசோகமித்திரன் – நாவல் – 144 பக்கங்கள் – விலை  ரூ.120 – வெளியீடு : நற்றிணை பதிப்பகம், 6/84 மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005 -தொலைபேசி : 044 28482818 – மொபைல் : 94861 77208
 
  

கசடதபற மே 1971 – 8வது இதழ்

நானுமென்னெழுத்தும்

                                                                                       நகுலன்


    


நின் கைவசம்
என் கைப்பிரதி

“இதனையெழுது”என்றாய்
எழுதினேன்.

“இதனையழி” என்றாய்
“அழித்தேன்”
“இதனையிவ் வண்ணமெழுது” என்றாய்
சொன்னவண்ணமே செய்தேன்.

இதுவென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
“ஆ என்ன வெழுத்து,” என்றாரொருவர்
“ஆ இதுவன்றோ வெழுத்து” என்றாரொருவர்.

என்எனழுத்தில் நானில்லை
என்றாலுமென் பெயருண்டு
எழுதியெழுதி அழித்தேன்
அழித்து அழித்து ஆளானேன்.
விமர்சகரும் சொல்லி விட்டார்
இல்லா ததையெல்லாம்
உண்டென்று
சொல்லி விட்டார்.

மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
“மாயை யென்பது
மன்பதையனுபவம்”
மாயையென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இது வென்பெயர்
இது வென்னெழுத்து.

கவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன்   எழுத்து எளிதாக புரிந்து விடாது.  இக் கவிதையில் நகுலன் என்ன சொல்ல வருகிறார். அவருடைய கவிதையை எழுதிவிட்டு யாரிடமோ கொடுக்கிறார்.  பின் அவர் சொல்வதுபோல், வேறு மாதிரியாக கவிதையை மாற்றி மாற்றி எழுதுகிறார்.  அவர் எழுத்தில் அவர் இல்லை என்கிறார்.  ஆனால் அவர் எழுதியதாக கவிதை அடையாளப் படுத்தப் படுகிறது.  அப்படி வெளிப்படுகிற கவிதையை விமர்சகர் இல்லாததையெல்லாம் சொல்லி புகழ்கிறார்.

இறுதியில் அவர் எழுத்தை மாயை என்கிறார். இந்த மாயையில் அவர் வாழ்வு, அவர் எழுத்து எல்லாம் ஒன்று என்கிறார்.

கசடதபற மே 1971 – 8வது இதழ்



விதி

     கலாப்ரியா




அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை,
தன் குஞ்சுக் காய்,
தன் கூட்டுக்காய்,
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்,
குஞ்சும் தெரியும்,
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை.

புத்தக விமர்சனம் 6

  அழகியசிங்கர்

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர்.  எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன்.  ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.  
இன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள்.  அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை.  பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.  
அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.  1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது.  1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது.  தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.  
அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்னுப் பல விஷயங்களைப் பற்றி  பேசிக் கொண்டிருப்பார். அவருடன் பேசுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.  பேச வேண்டுமென்று நண்பர்கள் சிலர் எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள்.
48 கவிதைகள் கொண்ட இத் தொகுதியில் தேவதச்சன் எப்போதெல்லாம் கவிதை எழுதினார் என்பதைக் குறிப்பிடவில்லை.  
எப்போதும் ஒரு கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது, யாராவது கேட்டால் உடனே கொடுத்துவிடத் தோன்றும்.  அப்படி கொடுத்துவிட்டப் பின் அந்தத் தொகுதி வேண்டும் என்று கேட்கக் கூடத் தோன்றாது.   நம்மை விட்டுப் போனால் போகட்டும் என்று கூடத் தோன்றும். கவிதைத் தொகுதி விற்கவும்விற்காது.  அதுபோல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக மாறிவிடக் கூடியதும் கவிதை. நூல்தான்.  ஆனால் தேவதச்சனின் இந்தத் தொகுதியை அப்படி கொடுத்துவிட மனம் வராது.  
அதேபோல் இன்னொரு விதி.  எந்தக் கவிதைத் தொகுதியும் அதிக எண்ணிக்கை விற்காது.  ஆனால் ஒரு பெண்மணி அவர் கவிûத்தொகுதிக்கு ராயல்டி கிடைத்தது என்று சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது. 
கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா?  கவிதை புரியவும் வேண்டும் அதேசமயத்தில் ரொம்பவும் புரிந்து விடக். கூடியதாக இருக்கக் கூடாது.  நான் முன்பெல்லாம் தேவதச்சன் கவிதைகளைப் படிக்கும்போது, அவர் கவிதை மூலம் புதிர் போடும் தன்மையைக் கொண்டு வருகிறாரா என்று நினைப்பேன்.  அவர் எளிமையாக கவிதைகளை எழுதுகிறார்.  வித்தியாசமாக சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது.
இத் தொகுதியில் 18 ஆம் பக்கம் நிர்வாணம் என்ற கவிதை.
யாருமில்லை என்பதால்
வீட்டில் சில நேரம் 
நிர்வாணமாக இருந்தாள்
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை.
ஒருவிதத்தில் இக் கவிதையைப் படிக்கும்போது புதிர் தன்மை உடையதாக இருந்தாலும், நிர்வாணம் என்பது என்ன என்று கேள்வி கேட்டே இக் கவிதை முடிந்து விடுகிறது.  தேவதச்சன் இப்படித்தான் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக யோசிக்க வைக்கிறார்.
இவர் கவிதைகளின் இன்னொரு விசேஷம் எப்போதும் இவர் கவிதைகளை எடுத்து வாசிக்கும்போது, இன்னொரு முறை வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துவது.  ஒவ்வொரு முறையும் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமாய் தோன்றும்.     
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது, வரிகளை வைத்து கவிதை எழுதுவதன் மூலம் ஒரு விளையாட்டை விளையாடுகிறார் தேவதச்சன் என்று தோன்றுகிறது.
பக்கம் 34ல் உள்ள ன்மீ என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருபோதும்
மீன்கள் திரும்புவதில்லை
திரும்பக் கூடுவதுமில்லை
கடல்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றன
மீன் திரும்பினால்
ன்மீ ஆகிவிடுமே
யாராவது
ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா
வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா
மேலும் 
ன்மீயை எப்படித்தான்
சமைப்பது
ஆனால், திரும்பி
திரும்பிக் கொண்டிருக்கும்
ன்மீயை எப்போதும் விரும்பி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் தேவதச்சன் ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு விதமான விளையாட்டாக விளையாடத் தொடங்குகிறார். அவர் கவிதைகள் படிப்வர்களை பரவசமூட்ட தவறுவதில்லை.  அவருக்கு கவிதை மூலம் சொல்வதில் எந்தக் குழப்பமும் இல்லை.  படிப்பவர்களுக்குத்தான் குழப்பம் இருக்கும்.
தேவதச்சனின் எந்தத் தொகுதியையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் –  பக்கம் : 62 – விலை ரூ.40 – உயிர்மைப் பதிப்பகம் – 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
 

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்….


அழகியசிங்கர்





பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன்.  ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.  குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை.  ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ்.  அவருடைய பிறந்த நாள் இன்று.  அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும்.  உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.  அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை.  அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர்.  ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை.  
அவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு.  அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால்  அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார்.
ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உள்ளார்.  அவர் கவிதைகள் ழ என்ற பத்திரிகையிலும், விருட்சத்திலும் பிரசுரமாயிருக்கின்றன.  
மையம் வெளியீடாக வெளிவந்த நானும்  நானும் என்ற கவிதைத் தொகுப்பு 1996ஆம் ஆண்டு வந்துள்ளது.  அதைத் திரும்பவும் விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன்.  அந்தப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.   அந்தப் புத்தகம் விரும்புவோர்.  அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33ல் என்னிடம் தொடர்பு கொள்ளலாம்.  தொலைபேசி எண்.9444113205
நானும் நானும் என்ற தொகுப்பிலிருந்து, ஸ்டெல்லா புரூஸ் நினைவாக ஒரு கவிதையை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.
ஆட்டம்
கற்றுக் கொள்ள முடியாது இனி
காலம் கழியும்
ஆட வேண்டும் எனக்கு உடனே
நிமிஷங்களுக்கு மேடையில இல்லை
வாழ்க்கை பூரா
நிறுத்தாமல்
களைத்து விடாமல்
நினைத்துப் பார்க்கத் தெரியாமல்
ஆட்டமே மிஞ்ச
ஆட்டமாக நிறைய
ஆடி விட வேண்டும் – ஒரே ஆட்டம்
முடிவு இல்லாத ஆட்டமாகத் துவங்குகிறேன்
இப்போது ஆடிக் கொண்டிருப்பது
ஆட்டம் மட்டும்தான்