அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது?

அழகியசிங்கர்
சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன்.  அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.  அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டவர், ஒரு அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியைக் கூறினார்.  நான் இப்போதெல்லாம் படிப்பதில்லை என்பதுதான் அது.
ஒரு காலத்தில் அவர் வார் அன்ட் பீஸ் என்ற டால்டாய் நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தவர். 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள டால்ஸ்டாய் நாவலை மூன்று நாட்களில் படிததவர் என்ற தகவல் எனக்கு அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.  ஏன் என்றால் என்னால் அதுமாதிரி படிக்க முடியாது.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்தேன்.  அந்தப் புத்தகத்தை 3 நாட்களில் படித்தேன் என்று பெருமையுடன் சொன்னாரே தவிர, அது எப்படிப்பட்ட புத்தகம் என்பதை சொல்லவில்லை.  அவர் சொன்னதில் எதுவும் புத்தகம் பற்றிய தகவல் இல்லை.  அந்த மொத்தப் புத்தகத்தையும் 3 நாட்களில்  படித்தேன் என்பதைத் தவிர வேற ஒன்றுமில்லை. மேலும் அவர் அப் புத்தகத்தை 3 நாட்களில் முடித்தார் என்ற தகவலால், நான் அப் புத்தகத்தை வைத்திருந்தும் ஒரு பக்கம் கூட படிக்க ஆரம்பிக்கவில்லை.  காரணம் 2000 பக்கங்கள்.  மேலும் அவர் 3 நாட்களில் முடித்துவிட்டார். நம்மால் முடியாது என்ற அவ நம்பிக்கை.  அதனால் அப்புத்தகத்தை படிக்காமலேலேய 30 ஆண்டுகளாக நான் இன்னும் வைத்திருக்கிறேன்.  ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று ஆரம்பித்திருந்தால், நான் எப்பவோ படித்து முடித்திருப்பேன்.  
நான் வங்கியிலிருந்து பதவி மூப்பு அடைந்த  பிறகு எனக்குப் படிக்க அதிக நேரம் இருக்குமென்று நினைத்தேன்.  பல மெகா நாவல்களை  வாங்கி வைத்திருந்தேன்.  ஆனால் படிக்க முடியவில்லை.  அதிகப் பக்கங்கள் என்னை அயர்ச்சி அடைய வைத்தன.  
நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம்.  அதுவும் அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படிக்கிறோம்.  ஏன் படிக்க வேண்டும்? அதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது.  இந்தக் கேள்வி என்னை எப்போதும் வாட்டிக்கொண்டே இருக்கும்.  வெறும் பொழுது போக்குவதற்காகப் படிக்கிறோமா?  இதற்கு சரியான பதில் இன்று வரை கிட்டவில்லை.  

ராமலக்ஷ்மி




சாதீயம்
வ்வொரு வேட்டைக்குப் பிறகும் 
விருந்துகள் நிகழ்கின்றன. 
வேலி தாண்டி வந்து விட்டதாக 
அறைந்து இழுத்து செல்லப்பட்ட 
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை
குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த 
மிருதுவான கண்களின் சுவையை 
வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன 
வேங்கைப் புலிகள். 
கானகமாகிக் கொண்டிருக்கிறது 
மானுடர் உலகம். 

அவனுக்கு வேற வழி இல்லை.

அவனுக்கு வேற வழி இல்லை. 

அழகியசிங்கர் 

அப்பா அவர் அறையை விட்டு இன்னொரு அறைக்குச் சென்று போய்ப் படுத்துக்கொள்ள ஆரம்பித்தார்.  அவருக்கு நடப்பது கஷ்டமாகி விட்டது.  எப்போதும் இருந்த அறையில் அவருடைய எளிமையான படுக்கை இருக்கும்.  பக்கத்தில் ஹோமியோபதி மருந்துகள் இருக்கும்.  செலவு கணக்கு எழுத ஒரு நோட் புத்தகம் இருக்கும்.  ஒரு விபூதி டப்பா இருக்கும்.  ஒரு சின்ன கண்ணாடி இருக்கும்.  அப்பா அடிக்கடி அந்தக் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்துக் கொள்வார்.  கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவர் சரியில்லை.  நடக்க முடியவில்லை. தூங்கி தூங்கி விழுந்தார்.  சாப்பாடு ரொம்ப குறைவாகப் போய் விட்டது.  அவர் அறையில் புத்தகக் குவியலும், ஒரு கம்ப்யூட்டரும் இருக்கும்.   எப்போதும் அவருடைய பெரிய பையன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு டைப் அடித்துக் கொண்டிருப்பான்.  அப்பாவிற்கு வெறுப்பாக இருக்கும்.
“என் இடம்தான் பேரு..நீதான் முழுக்க முழுக்க உன் புத்தகங்களையும் கம்ப்யூட்டரையும் வைத்துக் கொண்டிருக்கிறாய்..” என்று பெரிய பையனைப் பார்த்து  முணுமுணுப்பார். 
அவர் பேரன் தங்கும் அறைக்குச் சென்று விட்டார்.  பெரிய கட்டில்.  தாராளமான மெத்தை, அங்கயே தங்கி விட்டார்.  பெரும்பாலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்.  ஏனோ அவரால் எழுந்திருக்க முடியவில்லை.  
முன்பெல்லாம் அப்பா  மாலை வேளைகளில்  டிவியைப் வந்து பார்ப்பார்.  பின் அதுவும் போய்விட்டது.   அவர் பேரன் அறையில் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.  
அவரால் எழுந்து பாத்ரூம் போக முடியவில்லை என்பதால்,  அடல்ட் டைபர்ஸ்ûஸ கட்டிக் கொள்ள வேண்டி உள்ளது.  பெரி0ய பையன்தான் இதையெல்லாம் செய்கிறான். வேளா வேலைள்கு சாப்பாடு கொடுக்கிறான்.  அப்பா அவன் பெயரை அடிக்கடி கத்தி கூப்பிட்டபடி இருப்பார்.  தங்கியிருக்கும் அறை பக்கத்தில் உள்ள இடத்தில் இரவில் பெரிய பையன் படுத்துக் கொள்கிறான்.  அப்பா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு எழுப்பிகிறார். அவனுடைய தூக்கம் கெடுகிறது.  அவனுக்கு அடுத்த நாள் ஒரே தடுமாற்றமாக இருக்கிறது.  ஆனால் வேறு வழி இல்லை.  அப்பா சொல்கிறார்.  üüநீ எங்கே போனாலும் 30 நிமிடத்திற்குள் வந்து விட வேண்டும்,ýý என்று. அவனும் எங்கும் செல்வதில்லை.  அவன் சென்றால், அவன் மனைவி இருப்பாள்.  அவன் மனைவி சென்றால் அவன் இருப்பான். 
அவனுக்கு வேற வழி இல்லை.  இனிமேல் அப்பாவால் எழுந்து நடமாட முடியாது என்று அவனுக்குத் தோன்றியது.  அவர் அறையில் அவருடைய கட்டிலில் முந்தாநாள் புயல் எதிரொலியால் பால்கனியில் வைத்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தான்.  அன்று அவர் எதிர்பாராமல் ஒரு நாள் மாலையில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார்.  ஆச்சரியம்.  நம்ப முடியவில்லை அவனுக்கு.  அவர் அவருடைய அறைக்கு வந்தார். கட்டிலில் காணப்பட்ட புத்தகங்களைப் பார்த்து கெட்ட கோபம் அவருக்கு.  அவனைப் பார்த்து திட்டினார்.  அவன் அவசரம் அவசரமாக அந்தப் புத்தகங்களை எடுத்துத் தரையில் அடுக்கினான்.  அப்பா படுத்துக் கொள்ள படுக்கையைப் போட்டான். அப்பா சிறிது நேரம் படுத்துவிட்டு, திரும்பவும் நடந்து பேரன் அறைக்குச் சென்று விட்டார்.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  புத்தகங்கள் கீழே வழிந்தவண்ணம் உள்ளன.    அதை அவன் தொடவில்லை.

“ஏழுவரி”க் கதைகள்

மூலம் 
ஸிந்துஜா 


ன்று காலை அது நடந்தது .
நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன் . அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு வருவான் . நான் அவனுக்கு எதிரே வரும்போது 
அவன் நாயிடம் ஆங்கிலத்தில் உத்தரவுகளை இடுவான் . ஆங்கிலத்தில் மட்டும்தான் . அவன் ஆங்கிலம் குறுகத் தரித்த குறள் . கோ , கம் ,
சிட் , டோன்ட் , ஸ்டாப் , ஈட் , நான்சன்ஸ் , ஜம்ப் , ரன் , ஷிட், டாமிட் ….என்று  .  ஓரக் கண்ணால் நான் கவனிக்கிறேனா என்று பார்த்துக் கொள்வான் . 
ஒரு நாள்  யாரோ ” சிவனாண்டி ” என்று கூப்பிட்டார்கள். அவன் திரும்பிப் பார்த்துக் கூப்பிட்டவரைப் பார்த்து ” வணக்கமண்ணே .
நல்லா இருக்கீங்களா “என்று கேட்டான். நான் அவர்களைக் கடந்து சென்றேன் . அவரும் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார் . அவன் வழக்கம் போல நாயிடம் ” கோ , கோ ” என்று சங்கிலியை இறுக்கினான் .
இன்று அது நடந்தது .
நான் அவனைக் கடந்து சென்ற மறு நிமிடம் ” ஐயோ அம்மா ! ஐயோ !  ஐயோ ! ” என்று கூக்குரல் கேட்டது . திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். சிவனாண்டியின் கை நாயின் வாய்க்குள் இருந்தது .  நானும் மற்றும்  சிலரும் அவனை நோக்கி ஓடினோம் . நாய் அவன் கையை விட்டு விடாமல் அவனை இழுத்துக் கொண்டு போனது . ” அம்மா, யாராவது காப்பாத்துங்களேன் . ஐயோ , வலி உயிர் போகுதே  ” என்று அவன் கதறினான் . யாரோ ஒருவர் கையால் இருந்த தடியை நாயை நோக்கி வீசினார் . அது கலவரப்பட்டு  சிவனாண்டியின் கையை விட்டு விட்டு ஓடியது . ” ஐயோ அம்மா ! ஐயோ அம்மா ! ” என்ற சிவனாண்டியின் கதறல் நிற்கவில்லை .
சிவனாண்டியின் கையிலிருந்து ரத்தமும், வாயிலிருந்து தமிழும் ஒழுகிக் கொண்டிருந்தன . 

  .

 .

குழந்தைகள் பூங்காவில்

அழகியசிங்கர்



நேற்று ஞாயிற்றுக்கிழமை.  இந்த முறை விட்டுவிடலாம் என்று தோன்றியது. அதற்குக் காரணம் அப்பா. வீட்டில் அறையில் இருந்த அவர் நொடிக்கொருதரம் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.  எங்கும் நகர முடியவில்லை.  கிருபானந்தன் போன் செய்தார்.  அசோக்நகரில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குச்  சென்றோம்.  இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயகாந்தன் கதைகளும் ஞானக்கூத்தன் கவிதைகளும்.  பிறகு எங்களுடைய கதைகள் கவிதைகள் வாசித்தோம்.
குழந்தைகள் பூங்காவில் நாங்கள் வாசித்ததுக் கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.  பக்கத்தில் ராஜாமணி வீடு இருந்தது.  அங்கு போய்விட்டோம்.  ராத்திரி 8 மணிவரை படித்தோம். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாதிரி.  இதுவும் அப்படித்தான். கதைகளையும், கவிதைகளையும் படிக்கும்போது அது ஒருவித அனுபவத்தைத் தராமல் இருக்க தவறுவதில்லை.  பின் நாங்களே கதை சொல்லும் முயற்சியையும் செய்து பார்த்தோம்.  எல்லாவற்றையும் ஆடியில் கொடுத்துள்ளோம். கேட்டு மகிழவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். மேலும் இதை இன்னும் பிரமாதமாகக் கொண்டு போக என்ன வழி என்று சொல்லவும்.

எழு வரிக் கதைகள்

அழகியசிங்கர்
1.சிகரெட் பிடிப்பவன்…
நானும் என் மனைவியும் தெருவில் நடந்து சென்றோம்.  தெரு முனையில் வாலை ஆட்டியபடி மாடுகள்.  வீரபாகு திரும்பவும் மாடு வியாபாரமும் பால் வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறான்.  அவனைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை.  கோடம்பாக்கம் ரோடில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம்.  வண்டி ரிப்பேர் என்பதால் வண்டியில் செல்லவில்லை.  மசூதி தெருவில் தனியாக இருக்கும் மாமியார் வீட்டிற்குத்தான் சென்று கொண்டிருந்தோம்.  தெருவில் ஒரு இடத்தில் நாலைந்து இளைஞர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் சிகரெட் பிடிப்பேன்,” என்றேன் மனைவியிடம்.
அவள் பேசாமல் வந்து கொண்டிருந்தாள்.  நான் திரும்பவும் அதையே சொன்னேன்.
“நான் நம்பவில்லை,” என்றாள் அவள்.
“நீ நம்ப வேண்டும், அவ்வளவுதானே,,” என்று ஒரு பெட்டிக் கடையை நோக்கிச் சென்றேன்.  கடைக்காரனைப் பார்த்து, “ஒரு சிகரெட்” என்றேன்.  “என்ன பிராண்ட்” என்று கேட்டான்.  “ஏதோ ஒன்று,” என்றேன்.  அவன் ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.  அதைப் பற்ற வைத்துக் கொண்டேன்.  மனைவி முன் சிகரெட்டை ஊதினேன்.  அவள் சிரித்தாள்.  “இப்பவாவது தெரிந்து கொள்.. நான் சிகரெட் பிடிப்பேன்” என்றேன்.  அவள் மௌனமாக இருந்தாள்.
“என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டேன்.
“இப்பவும் சொல்கிறேன்…உங்களால் சிகரெட் பிடிக்க முடியாது,” என்றாள்.
கையிலிருநத சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, அவளுடன் அமைதியாக நடந்தேன்.

2.  பெயரை மாற்றிப் பார்
 நாங்கள் இருவரும் ஒரு பஸ்ஸில் தியோசபிகல் சொûஸட்டிக்குச் சென்று கொண்டிருந்தோம்.  “ஓரு கவிதை சிறந்தது என்று எப்படித் தெரியும்,” என்று கேட்டேன்.
“கவிதை உயிரோடு இருக்க வேண்டும்.  அதுதான் சிறந்த கவிதை,” என்றார்.
“உயிரோடு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது,”என்று கேட்டேன்.
“அது உமக்குப் புரியாது,ý”என்றார்
பின் நாங்கள் இருவரும் தியோசபிகல் சொûஸட்டி கட்டடத்திறகு உள் சென்றோம்.  அவர் ஒவ்வொரு மரம் முன் நின்று நின்று வந்தார்.  ஒரு மரம் குள்ளமாக இருந்தது.  அடர்த்தியாய இலைகள் இருந்தன.  ஒரு மரம் நீண்டு இருந்தது.  அந்த மரத்தின் பெயரை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.  ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு பெரிய பாறாங்கல் இருந்தது.  ஏன் அதை கையால் அவர் புரட்டினார் என்று தெரியவில்லை.  நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கருந்தேள் கண்ணில் தட்டுப் பட்டது.  எனக்கும் அவருக்கும் திகைப்பு.
பின் அங்கிருந்து வறண்ட குளம் கிட்டே போய் நின்றோம். üüஉன் பெயரை மாற்று,ýý என்றார் பின்  ஒரு பேப்பர் பேனாவை எடுத்து என் பெயரை மாற்றி எழுதினார்.  அவர் பெயரையும் எழுதினார்.  பின் அந்தக் காகிதங்களை தூக்கி குளத்தில் போட்டார்.  
அன்று நான் வீட்டிற்குத் திரும்பிய பிறகு யோசித்தேன்.  ஏன் அவர் அப்படிச் செய்தார் என்று. 
2.   நேதாஜிதாசன் 
1,  கேள்வி
ஒரு யோகியிடம்  ஒரு பெரிய செல்வந்தர் “பிறப்பதற்கு முன் மனிதன் என்னவாக இருப்பான்” என்று கேட்டான். அதற்கு அந்த யோகி  “எனக்கு எப்படி தெரியும்” என பதிலளித்தார்.அந்த செல்வந்தன் “நீங்கள் ஒரு முற்றும் உணர்ந்த யோகி. உங்களுக்கு தெரிந்திருக்கும்” என சொன்னார்.மீண்டும் அந்த யோகி பேச ஆரம்பித்தார் “நான் யோகி தான் ஆனால் இன்னும் பிறக்கவே இல்லை”.
அந்த செல்வந்தன் பயங்கர குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த யோகி தன் அருகில் இருந்த சீடனிடம் சொன்னார் “இவர்களை கேள்வி கேட்க இயலவில்லை என்ற நிலையில் வைத்திருக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு” என.அந்த சீடன் ஒரு இருபது நொடிக்கு சிரிப்பை நிறுத்தவில்லை

அங்கும் இங்கும்……..

அழகியசிங்கர்
கவிதைக்காக என்ற புத்தகத்தில் ஞானக்கூத்தன் கொஞ்சம் பேசட்டுமா? என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறார் :
‘கடினமான காரியங்களில் ஒன்று படிப்பது.  இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள்.  முற்றிலும் தப்பித்துக் கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்து விட்டது.  எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம்.  நாவல் படிப்பவர்க் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிப்பவர்கள் நாவல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை.  பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை.  படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துகளைப் படிக்கிறார்கள்.  இப்படி வாசகரகளின் கடைத்தெரு வீணாகிக கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.’
34 தலைப்புகளில் 256 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல் இது.  எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்தால் இதை ஒரு பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பேன்.  பழைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் ஒன்றாகக் கொண்டு வரும் முயற்சி இதில் இருக்கிறது.
பழைய அரிய தகவல்களை இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  அதைவிட முக்கியம் ஞானக்கூத்தனின் தமிழ் நடை.  
கவிதை எழுதுபவர்களும் கவிதையைப் பற்றி புரிந்துகொள்ள விரும்புவர்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும்.  2009ல் கொண்டு வந்த இந்தப் புத்தகத்தை இன்னும் நான் விற்றுக் கொண்டிருக்கிறேன்.  
புத்தகம் எழுதுபவர்கள் கடைசி வரை புத்தகத் தலைப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கவிதையோ கதையோ எழுதினால் தலைப்பை நாம் எழுதி முடித்தப்பின்தான் யோசிப்போம்.
ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  முன்னதாக அவர் கொண்டு வர விரும்பிய கவிதைத் தொகுதிக்கு ‘கந்திற் பாவை’ என்ற தலைப்பில் வர உள்ளதாக இந்தப் புத்தகத்தில் 2009 ஆம் ஆண்டில் விளம்பரப் படுத்தி உள்ளார்.   ஏனோ அப் புத்தகம் வரவில்லை.  என்னைப் போல் சாதாரணமானவர்களுக்கு இது போன்ற தலைப்புகள் கற்பனையில் கூட தோன்றாது.  
ஆனால் இத் தலைப்பை தேவகாந்தன் என்ற எழுத்தாளர் அவருடைய நாவலுக்கு சூட்டி விட்டார்.  காலச்சுவடு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளது.
தேவகாந்தன் இதைத் தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை.  

ஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை?

அழகியசிங்கர்


சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் எனக்கு போன் செய்தார்.  “ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.  “நிச்சயமாக,” என்றேன்.  “ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும்,” என்றார்.
நான் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  என் வீடு பக்கத்திலேயே அவர் வீடு இருந்தது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.  
சிலசமயம் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார். அவர் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக்கிழமையில் நான் போயிருக்க மாட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.  அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்னொரு ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, “உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்,” என்று அவர் மனைவிதான் குறிப்பிடுவார்.
அவரால் நடக்கவே முடியாது.  ஆர்யக்கவுடர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் அவரால் நடந்தே போக முடியாது.  நான் டூ வீலரில் அவரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போவேன்.  அப்போது டூ வீலரை ஜாக்கிரதயாக ஓட்டுவேன்.  ஏன் எனில் அவர் குள்ளமாக குண்டாக இருப்பார்.  எனக்கு டூ வீலர் ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்படுமோ என்று தோன்றும்.
ஏடிஎம் இருக்கும் இடத்திற்குப் போவோம்.  பின் மெதுவாக படி ஏறுவார். சில படிகள் என்றாலும் அவருக்கு ஏறுவதில் தடுமாற்றம் இருக்கும்.  நான் அவருக்கு உதவி செய்வேன்.  என் தோள்பட்டையைப் பிடித்தபடி படிக்கட்டு ஏறுவார்.
ஏடிஎம் அறையில் அவரிடம் உள்ள கார்டை என்னிடம் கொடுத்து விடுவார். ஏடிஎம் பெட்டியில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியாது.  ரொம்ப மெதுவாக சீக்ரெட் எண்களைச் சொல்வார்.  
அவருக்கு என் மீதே சநதேகம் வந்து விடுமோ என்று தோனறும்.  அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன்.  அந்தத் தொகையை அவர் 15 நாட்கள் அல்லது 30 நாட்கள் வைத்துக் கொண்டு செலவு செய்வார்.  ஏன் அவரால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்று பலமாக யோசிப்பேன்.  அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கும். 
பின் அங்கிருந்து நாங்கள் ஜேபி டிபன் சென்டருக்குப் போவோம்.  எனக்கும் அவருக்கும் பொங்கல் என்றால் பிரியம்.  மேலும் ஜேபி டிபன் சென்டரில் டிபன் செலவு குறைவாக இருக்கும்.  அவர் சரவணா ஓட்டலுக்குப் போவதை விரும்ப மாட்டார்.
வாரத்திற்கு ஒரு முறை அவர் இப்படி வெளியில் வருவதுண்டு.  மற்றபடி வீட்டிலேயே இருப்பார்.  எங்கும் போக முடியாது.  போகவும் மாட்டார்.  அவர் வீட்டில் வைத்திருக்கும் புத்தகங்கள் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருப்பார். அவற்றைப் படித்து எழுதுவார். அவர் வீட்டில் கணனி கிடையாது.  அவருக்கு உபயோகப் படுத்தவும் தெரியாது.
மின்சாரக் கட்டணத்தை அவருக்காக இன்டர்நெட் மூலம் நான் கட்டுவேன். நான் கட்டிக் கொடுத்தாலும் அதை அவர் நம்ப மாட்டார்.  அதைக் கட்டுவதற்காக ஒருத்தரை உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.  உதவி செய்பவ் நேரில் போய் மின்சாரத் தொகையை கட்டினால்தான் நம்புவார்.
“கொஞ்சமாவது நடக்க முயற்சி செய்யுங்கள்,”என்பேன்.  அதைக் கேட்கவே அவர் விரும்ப மாட்டார்.
ஒரு முறை ஒரு கல்யாணத்திற்கு என்னை அழைத்துப் போகச் சொன்னார். “நீயும் வா..தெரிந்தவர்கள் கல்யாணம்தான்,” என்றார்.  “நான் எப்படி வருவது. என்னை யாருக்கும் தெரியாதே?,” என்றேன்.  “பரவாயில்லை…வா..யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.  நான் உன்னைக் கூப்பிடுகிறேன்,” என்றார்
நான் வேறு வழி இல்லாமல் என்னுடைய நானோ காரில் அவரை அழைத்துக் கொண்டு போனேன்.  என் காரில் அவர் உட்கார்ந்தாலும் அவர் முகத்தில் நான் சரியாக ஓட்டுகிறேனா என்ற பயம் இருந்துகொண்டு இருக்கும்.
நாங்கள் இருவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றோம்.  முதல் மாடியில் கல்யாணம்.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  சாபபிட்டுவிட்டு மாடிப்படிக்கட்டுகள் வழியாக இறங்கினோம்.  அவரால் இறங்க முடியவில்லை.  மூச்சு வாங்கியது.  எனக்கு திகைப்பாக இருந்தது.  ஒருவர் ஏறுவதற்குத்தானே திணறுவார்.  இவர் இறங்கவே தடுமாறுகிறாரே என்று நினைத்தேன்.   அவரை வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
பின் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப் போய் பொங்கல் வாங்கினேன். அவரும் வந்திருந்தார்.  திடீரென்று உட்கார்ந்து விட்டார்.  ஒரு மாத்திரை பெயரைச் சொல்லி உடனே வாங்கி வரச் சொன்னார். எதிரில் அப்போலோ பார்மஸியில் வாங்கி வந்தேன்.  மாத்திரையை விழுங்கியபிறகு அவருக்கு சரியாகிவிட்டது.  வீட்டில் கொண்டு வந்து விட்டேன்.  இனிமேல் அவரைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.  அப்படிப் பார்த்தாலும் வெளியே அழைத்துப் போகக் கூடாது என்று நினைத்தேன்.  ஒரு நாள் மதியம் அவர் மனைவி மடியில் இறந்து விட்டார்.  அன்று அவர் விபூதிப் பூசிக்கொண்டு பளிச்சென்று இருந்தார்.
ஒவ்வொரு முறை நான் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, 68 வயதில் ஏன் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்று யோசிப்பேன்.

ஏழு வரிகளில் கதை….


செல்வராஜ் ஜெகதீசன் 
நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?”



“மொத்தமா உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல எத்தனை பேர் தேறும்” என்றான் ரமேஷ்.
ரமேஷ் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இப்படி எதையாவது கேட்பான். அப்போது சரவணன் பேசிக்கொண்டிருந்தான். வெளியூரில் வேலை. ஏதோ விடுமுறையில் வந்திருந்தான்.
“உன்னையும் (என்னைக்காட்டி) இவனையும் விட்டா இன்னும் ஒரு ரெண்டு பேர் தேறும்…நான் அதிகமா யார் கிட்டயும் அவ்வளவா வச்சிக்கிறதில்ல..”என்றான் சரவணன்.
“நல்லா யோசிச்சுப் பாரு.. அது மட்டும்தான் காரணமா…” என்ற ரமேஷிடம்
“இப்போ என்ன சொல்ல வர?”…என்றான் சரவணன்.
“கடந்த அரைமணி நேரமா நீதான் பேசிக்கிட்டிருக்க…நாங்க வெறுமனே கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்…இதுவே உன் பிரண்ட்ஸ் சர்க்கிள் கம்மியா இருக்கக் காரணமா இருக்கலாம். நீ கொஞ்சம் அதிகமா பேசற..”
நன்றாக யோசித்திருப்பான் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பேசும்போது இடையிடையே “நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?” என்பதை சேர்த்திருந்தான்.
பேச்சு என்னவோ அதே அளவுதான்.
o

ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்

அழகியசிங்கர்
ஆத்மாநாமின் பிரச்சினை உடனடியாக புகழ் வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று அவர் நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் அதுமாதிரியான பிரச்சினை இருக்குமென்று தோன்றுகிறது. குறிப்பாக எழுதுபவர்களுககு.   எப்போதும் நம்முடைய எழுத்தை யாராவது படிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.  பத்திரிகைகளில் தினசரி தாள்களில் எதாவது படைப்புகள் வெளிவந்தால் அதை உடனடியாக தெரிந்தவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
இப்போதாவது முகநூல் என்ற ஒன்று இருக்கிறது.  அதன் மூலம் நாம் தெரிவிக்கிற கருத்துகளை உடனுக்குடன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இப்போது ஒருவருக்குக் கிடைக்கிற இந்த அங்கீகரிப்பு அன்று மட்டும் இருந்திருந்தால், ஆத்மாநாம் போன்றவர்கள் தற்கொலையே செய்திருக்க மாட்டார்கள்.  
அவர் எழுதி வைத்த அத்தனை கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வழி இல்லாமல் தவித்தார்.  அந்தச் சமயத்தில் அவர் எழுதிய வேகத்தில் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று தெரியவில்லை.  
நம் முன்னே விரிந்து கிடக்கும் இந்த உலகம் கொடூரமானது. அதை நாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேற வழி இல்லை.
ஆத்மாநாமிற்கு இதெல்லாம் தெரியாது.  கட்டாயம் தெரிந்திருக்கும்.  திறமையாக கவிதை எழுதத் தெரிந்த ஒருவருக்கு இதெல்லாம் ஏன் தெரியாது.  அப்படி தெரிந்தாலும ஒரு கேள்வி உள்ளே உழன்று கொண்டே இருக்கும்.  
üஏன் எல்லோருடைய கவனத்திற்கு எழுத்து போகவில்லை என்ற கவலை.ý அதைப் பற்றி யோசிக்க யோசிக்க பூதம் போல் அது வளர்ந்து கொண்டே அவரையே விழுங்கக் காத்திருக்கும்.
விடுதலை என்ற கவதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்: 
கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக் கண்ணாடிச் சிறைக்குள்
நான்
அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்
திறக்கும் வழியே இல்லை.
இதுதான் பிரச்சினை.  ஆத்மாநாமின் பிரச்சினை.  அவருக்குத் தெரியவில்லை நம்மைச் சுற்றிலும் எந்தக் கண்ணாடிச் சிறையும் இல்லை என்பது.  நாமே கற்பித்துக் கொள்வதுதான் இந்தக் கண்ணாடிச் சிறை என்று. இப்படி வேறு விதமாக அவர் யோசித்திருந்தாலும் எதைக் குறித்து அவர் கவலைப் பட்டிருக்க மாட்டார்.
   நம்முடைய சராசரி நிலையை உணர்ந்து சாதாரணமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  அப்படி இருந்தால் உடனடியாக புகழ் வேண்டும் என்ற வேதாளத்தைப் பிடித்துத் தொங்கியிருக்க வேண்டாம்.
ரொம்ப ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்.  இப்போதென்றால் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, ஷ்ரூதி டிவியைக் கூப்பிட்டு படம் எடுக்க வைத்து நாலு பேர்களைப் பேசக் கூப்பிட்டிருக்கலாம்.  ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் தெரியவில்லை. 
    கவிதை நூலை கொண்டு வந்தவர் அதை எப்படி விற்பது என்பது கூட தெரியவில்லை.  அவருக்குத் தெரிந்த இன்னொரு கவிஞருக்கு அந்தப் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து, படித்து அபிப்பிராயம் சொல்ல சொன்னார்.  ஏன் இது மாதிரி பெரிய தப்பை செய்தார் என்று தெரியவில்லை.  அந்த இன்னொரு கவிஞரும் அந்தப் புத்தகத்தை வாங்கியவர், அக் கவிதைப் புத்தகம் குறித்து எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை.  கவிதை எழுதியவரும் விடாமல் அவரைப் பார்த்துக் கேட்க, வேற வழி இல்லாமல் அவர் சொன்ன கருத்து, கவிதைகள் பிடிக்கவில்லை என்பதுதான். 
என்ன பெரிய அடி கவிதை எழுதியவருக்கு..இதற்கு அடிப்படையான காரணம்.  ஆத்மாநாமின் சின்டரம்தான்.  உடனடியாக புகழ் வேண்டும்..ஆனால் சுஜாதா என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன்.  உலகத்தில் எல்லோரும் சில நிமிடங்களாவது புகழ் அடைந்து விடுவார்கள் என்பது.  இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
ஆனால் ஆத்மாநாமைப் பொறுத்தவரை அது தற்கொலை வரை போய் கொண்டு விட்டது.  சரி, நாம் வசித்துக் கொண்டிருக்கும் வீடு நம்மைவரவேற்குமா?  நிச்சயமாக இருக்காது…ஆத்மநாமிற்கு வீடு கண்டு கொள்ளவே இல்லை.  அவர் அன்புக்காக ஏங்கினார்.  
அவருடைய வெளியேற்றம் என்ற கவிதையைப் படித்துப் பார்க்கலாம்.
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான் 
சிகரெட்டிலேயே 
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை 
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாம் எதிர்பார்த்தது ஒரு புன்னகைதான், ஒரு கை அசைப்புதான் 
ஆனால் அது கூட கிடைக்கவில்லை.  என் கேள்வி ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார் என்பதுதான். ஆத்மாநாம் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிழல் ஆத்மாநாமன்களாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.