அங்கும் இங்கும்……..

அழகியசிங்கர்
கவிதைக்காக என்ற புத்தகத்தில் ஞானக்கூத்தன் கொஞ்சம் பேசட்டுமா? என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறார் :
‘கடினமான காரியங்களில் ஒன்று படிப்பது.  இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள்.  முற்றிலும் தப்பித்துக் கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்து விட்டது.  எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம்.  நாவல் படிப்பவர்க் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிப்பவர்கள் நாவல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை.  பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை.  படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துகளைப் படிக்கிறார்கள்.  இப்படி வாசகரகளின் கடைத்தெரு வீணாகிக கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.’
34 தலைப்புகளில் 256 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல் இது.  எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்தால் இதை ஒரு பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பேன்.  பழைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் ஒன்றாகக் கொண்டு வரும் முயற்சி இதில் இருக்கிறது.
பழைய அரிய தகவல்களை இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  அதைவிட முக்கியம் ஞானக்கூத்தனின் தமிழ் நடை.  
கவிதை எழுதுபவர்களும் கவிதையைப் பற்றி புரிந்துகொள்ள விரும்புவர்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும்.  2009ல் கொண்டு வந்த இந்தப் புத்தகத்தை இன்னும் நான் விற்றுக் கொண்டிருக்கிறேன்.  
புத்தகம் எழுதுபவர்கள் கடைசி வரை புத்தகத் தலைப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கவிதையோ கதையோ எழுதினால் தலைப்பை நாம் எழுதி முடித்தப்பின்தான் யோசிப்போம்.
ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.  முன்னதாக அவர் கொண்டு வர விரும்பிய கவிதைத் தொகுதிக்கு ‘கந்திற் பாவை’ என்ற தலைப்பில் வர உள்ளதாக இந்தப் புத்தகத்தில் 2009 ஆம் ஆண்டில் விளம்பரப் படுத்தி உள்ளார்.   ஏனோ அப் புத்தகம் வரவில்லை.  என்னைப் போல் சாதாரணமானவர்களுக்கு இது போன்ற தலைப்புகள் கற்பனையில் கூட தோன்றாது.  
ஆனால் இத் தலைப்பை தேவகாந்தன் என்ற எழுத்தாளர் அவருடைய நாவலுக்கு சூட்டி விட்டார்.  காலச்சுவடு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளது.
தேவகாந்தன் இதைத் தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *