“ஏழுவரி”க் கதைகள்

மூலம் 
ஸிந்துஜா 


ன்று காலை அது நடந்தது .
நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன் . அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு வருவான் . நான் அவனுக்கு எதிரே வரும்போது 
அவன் நாயிடம் ஆங்கிலத்தில் உத்தரவுகளை இடுவான் . ஆங்கிலத்தில் மட்டும்தான் . அவன் ஆங்கிலம் குறுகத் தரித்த குறள் . கோ , கம் ,
சிட் , டோன்ட் , ஸ்டாப் , ஈட் , நான்சன்ஸ் , ஜம்ப் , ரன் , ஷிட், டாமிட் ….என்று  .  ஓரக் கண்ணால் நான் கவனிக்கிறேனா என்று பார்த்துக் கொள்வான் . 
ஒரு நாள்  யாரோ ” சிவனாண்டி ” என்று கூப்பிட்டார்கள். அவன் திரும்பிப் பார்த்துக் கூப்பிட்டவரைப் பார்த்து ” வணக்கமண்ணே .
நல்லா இருக்கீங்களா “என்று கேட்டான். நான் அவர்களைக் கடந்து சென்றேன் . அவரும் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார் . அவன் வழக்கம் போல நாயிடம் ” கோ , கோ ” என்று சங்கிலியை இறுக்கினான் .
இன்று அது நடந்தது .
நான் அவனைக் கடந்து சென்ற மறு நிமிடம் ” ஐயோ அம்மா ! ஐயோ !  ஐயோ ! ” என்று கூக்குரல் கேட்டது . திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். சிவனாண்டியின் கை நாயின் வாய்க்குள் இருந்தது .  நானும் மற்றும்  சிலரும் அவனை நோக்கி ஓடினோம் . நாய் அவன் கையை விட்டு விடாமல் அவனை இழுத்துக் கொண்டு போனது . ” அம்மா, யாராவது காப்பாத்துங்களேன் . ஐயோ , வலி உயிர் போகுதே  ” என்று அவன் கதறினான் . யாரோ ஒருவர் கையால் இருந்த தடியை நாயை நோக்கி வீசினார் . அது கலவரப்பட்டு  சிவனாண்டியின் கையை விட்டு விட்டு ஓடியது . ” ஐயோ அம்மா ! ஐயோ அம்மா ! ” என்ற சிவனாண்டியின் கதறல் நிற்கவில்லை .
சிவனாண்டியின் கையிலிருந்து ரத்தமும், வாயிலிருந்து தமிழும் ஒழுகிக் கொண்டிருந்தன . 

  .

 .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன