Author: virutcham
இரண்டு எழுத்தாளர்களின் பிறந்தநாள் இன்று..
இன்று இரண்டு எழுத்தாளர்களின் பிறந்தநாள். ஒருவர் அசோகமித்திரன். இன்னொருவர் வைதீஸ்வரன். இந்த இரண்டு எழுத்தாளர்களையும் எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். வைதீஸ்வரனுக்கு தற்போது 82 வயது ஆகிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே நாளில் 82வயது நடந்துகொண்டிருக்கும் போது அசோகமித்திரனுக்கு ஒரு விழா எடுத்தேன். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில். நான் முதன் முதலாக ஒரு எழுத்தாளரின் பிறந்தத் தினத்தை அவர் உயிரோடு இருக்கும்போது கொண்டாடியதும் அந்தத் தருணத்திதான்.
அசோகமித்திரனின் எழுத்தாள நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள். பலரைப் பேச அழைத்தேன். எல்லோரும் வந்திருந்து அசோகமித்திரனுக்குக் கௌரவம் அளித்தார்கள். கூட்டத்தை ரசிக்கவும் பலர் வந்திருந்தார்கள். அக் கூட்டத்தை க்ளிக் ரவி என்ற என் நண்பர் வீடியோவில் படம் பிடித்தார். அதன் ஒரு பகுதியை எல்லோருக்கும் தெரியும்படி இப்போது வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன்.
நான் நடத்திய எல்லா இலக்கியக் கூட்டங்களையும் விட அது சிறப்பான கூட்டமாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன்குமார் அசோகமித்திரன் குறித்து எடுத்த ஆவணப்படத்தை அன்று ஒளி பரப்பினோம்.
இப்போது நினைத்தாலும் அதுமாதிரியான கூட்டத்தை வேறு யாருக்காவது நடத்த முடியுமா என்பது தெரியவில்லை. அந்தத் தருணத்தில் நான் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தேசியமயமான வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
தினமும் டூ வீலரில் வங்கிக் கிளைக்குச் சென்று கொண்டிருப்பேன். எளிதாக பாரதியார் இல்லத்தைக் கூட்டத்திற்காக ஏற்பாடு செய்தேன்.
இந் நிகழ்ச்சியை வீடியோவில் பிடிக்க நண்பர் க்ளிக் ரவியை ஏற்பாடு செய்தேன். அசோகமித்திரனிடம் அளவுகடந்த அன்பு கொண்ட அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
குறைந்த நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் பேசி அசத்தினார்கள். அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றி சிலர் பேசினார்கள். சிலர் அவருடன் கிடைத்த நட்பைப் பற்றி பேசினார்கள். இப்படி எல்லோரும் பேசினோம். அத்தனையும் ஒளிப் படமாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறேன்.
இது மாதிரியான நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ததற்குக் காரணம் பல நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததுதான். கூட்டம் ஆரம்பிக்கும் முன், பார்த்தசாரதி கோயிலிருந்து சுவாமி புறப்பாடு ஒரு நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. ஆரம்பத்தில் அந்த வீடியோ அதிலிருந்து ஆரம்பித்து பின் எல்லோரும் பேசுவதைப் படம் பிடிப்பது வரை முடியும்.
ஒவ்வொருவரும் பேசுவதை இப்போதும் எல்லோரும் கேட்டு ரசிக்கலாம்.
அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியை இப்போது அளிக்க முடியுமா என்று பார்க்கிறேன். இன்று அசோகமித்திரன் இல்லை. ஆனால் என் கனவில் அவர் வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 78
கனவுச் சிறைகள்
மு நடராசன்
இயற்கை அழகில்
அடிமைப்பட்டு
இலட்சிய வெறியில்
அலைந்து திரிந்து
கனவுச் சிறையினில்
கைதியானேன்.
நன்றி : நிலாமுற்றம் வெளியீடு – மு நடராசன் – கவிதைகள் – வெளியான ஆண்டு : 1981 – மொத்தப் பக்கங்கள் : 64 – விலை : ரூ.4 – இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை.
ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி
செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது. மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு. நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு ஓட்டிவரும்போது, எதிர்படும் வண்டிகளின் சப்தங்களும், வெளிச்சமும் என்னை நிதானமாக ஓட்டும்படி கட்டாயப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் இருட்டில் காரை ஓட்டிக்கொண்டு போகும் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்தேன். வீடு வந்து சேரும்போது மழையும் பிடித்துக்கொண்டது. இக் கூட்டம் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.
என் சோனி காமிராவில் இந் நிகழ்ச்சியைப் பதிவு செய்த ராஜேஸ் சுப்பிரமணியத்திற்கு என் நன்றி. இனி ஒவ்வொரு கூட்டத்தையும் இது மாதிரி பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஓஷோ கூட்டத்தின் இரண்டாம் பகுதி
நேற்று முதல் பகுதியை வெளியிட்டேன். இன்று இரண்டாம் பகுதியும், நாளை இறுதிப் பகுதியையும் அளிக்க உள்ளேன். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் செந்தூரம் ஜெகதீஷ் பேசி உள்ளார். அவர் பேசியதைக் கேட்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.
ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி
16.09.2017 (சனகிழமை) நடந்த கூட்டத்தின் காணொலியின் முதல் பகுதியை அளிக்கிறேன். எதாவது தவறு தென்பட்டால் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இதன் அடுத்த 2 பகுதிகள் தொடர்ந்துவர உள்ளது.
ஓஷோவும் செந்தூரம் ஜெகதீஷ÷ம்..
ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைத்தான் எல்லோரும்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி சென்னைக்குப் பிரசங்கம் செய்ய வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பல மூலைகளிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் குமிழ்வார்கள் வஸந்த விஹாரில்.
கிருஷ்ணமூர்த்தி பேசுகிற தோரணையே சிறப்பாக இருக்கும். எனக்குத் தெரிந்து எழுத்தாளர் பலருடைய எழுத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் இருக்கும்.
நான்கூட கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்துவிட்டால் எங்கும் போக மாட்டேன். ஒவ்வொரு வாரம் டிசம்பர் மாத்தில் சனி ஞாயிறுகளில் வஸந்த விஹாரில் கூடி பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு எதோ ஒரு உலகத்தில் உலவுவதுபோல் நினைத்துக்கொள்வேன். பின் திங்கள் கிழமை அலுவலகம் செல்லும்போது கிருஷ்ணமூர்த்தியின் பேச்சின் தாக்கம் குறைந்து, சாதாரண மனிதனாகிவிடுவேன்.
கிருஷ்ணமூர்த்தியை விட என்ன பெரிசாக சொல்லிவிட முடியும் என்று எழுதுவதையே நிறுத்தியவர்கள் உண்டு. சாதாரணமாக வங்கியில் பணிபுரிந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டு பித்துப் பிடித்த நிலைக்குச் சென்று, வேலையை விட்டு போகும்படி நேர்ந்திருக்கிறது.
இந்தத் தருணத்தில்தான் ஜெகதீஷ் என்பவர் செந்தூரம் என்ற பத்திரிகையைக் கொண்டு வந்து ஓஷோவைப் பற்றி எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஓஷோ பகவான் ரஜனிஷ். எனக்குத் தெரிந்து பகவான் ரஜனீஷை யாரும் உயர்வாகச் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் நான் ஒருமுறை தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து பதஞ்சலி யோகாவைப் பற்றி ஒரு புத்தகம் எடுத்துப் படித்தேன். அது ரஜனீஷ் அதாவது ஓஷோ புத்தகம். பதஞ்சலி யோகாவைப்பற்றி அவ்வளவு எளிமையாக யாரும் சொல்ல முடியாது. ஓஷோவால் அது முடிந்திருக்கிறது. பலமுறை அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
ஓஷோவைப் பற்றி சொல்லும்போது அவர் கண்களைப் பற்றிதான் சொல்ல வேண்டும். நான் நேரிடையாகப் பார்த்ததில்லை. ஆனால் புகைப்படங்களில் அவருடைய கண்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக இருக்கும்.
அவர் சொல்கிற எந்த விஷயமும் எளிமையாக எல்லோரையும் சென்றடையும் விதம் இருக்கும். நான் பல புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பேன்.
இன்னும் சிறிது நேரத்தில் ஜெகதீஷ் ஓஷோவைப் பற்றிப் பேசப் போகிறார். அவர் ஒஷோவிலே ஊர்ந்தவர்.
விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்….
விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ‘ஓஷோவும் நானும்’ என்ற தலைப்பில் உரையாட உள்ளார். தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார். எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார். யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி.
தீராநதியில் வெளிவந்த கட்டுரை
இந்த மாதம் தீர நாதியில் இரண்டு படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. தயவுசெய்து தீராநதி வாங்கிப் படிக்கவும்.
அதில் ஒருவர் காசியபன். இவரைப் பற்றி நான் என் நேர் பக்கம் புத்தகத்தில் எழுத மறந்து விட்டேன். இப்போது எழுதி அக் கட்டுரை தீரா நதியில் வெளிவந்துள்ளது. நாம் ஒரு புத்தகம் கொண்டு வருகிறோம். அப்படி கொண்டு வரும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அது விற்காமல் இருப்பதை எண்ணி வருத்தமாகவும் இருக்கிறது. காசியபனின் முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி விற்கவில்லையே என்ற திகில் உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்மைதான். அதன் விளைவாக அக் கட்டுரை எழுதினாலும் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தெரியப் படுத்துகிறேன். பெரிய கட்டுரை என்பதால் நவீன விருட்சம் லிங்கில் போய்ப் படிக்கவும்.
முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா?…………..
என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இன்று தமிழில் ஒரு வருடத்தில் 5000 கவிதைப் புத்தகங்கள் வருவதாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. நிச்சயமாக இருக்காது என்று கூறினேன். அவர் அவர் கூறிய கருத்தில் உறுதியாக இருந்தார். அப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன் காசியபனின் முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியைப் பற்றி.
காசியபனின் அசடு என்ற நாவலை நான் படிக்க ஆரம்பித்தபோதுதான் எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. திருவனந்தபுரத்திலிருந்து அவர் சென்னைக்கே குடி வந்துவிட்டார். அவரும் அவர் மனைவி மட்டும் வயதான காலத்தில் பல இடங்களில் தனியாக குடி இருந்தார்கள். அவர் குடும்பத்துடன் உரிமையாகப் பழகியவனில் நானும் ஒருவன். அவர் மைலாப்பூரில் குடியிருந்த போது அவர் வீட்டிற்கு அடிக்கடி போகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
காசியபன் நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதி உள்ளார். அவருடைய அசடு நாவலை நான் திரும்பவும் கொண்டு வந்தபோது அதற்கு லைப்பரரி ஆர்டர் முதலில் கிடைக்கவில்லை. ஆயிரம் பிரதிகள் அடித்து விட்டோம். என்ன செய்வது என்ற திக் பிரமை என்னை விட காசியபனுக்கு அதிகமாக இருந்தது. ஏனெனில் அத்தப் புத்தகக் கட்டுகளை அவர் வீட்டுப் பரணிலில்தான் வைத்திருந்தேன். பின் நான் அவரை அழைத்துக்கொண்டு லைப்ரரி ஆர்டர் தருகிற அதிகாரியைப் போய்ப் பார்த்தேன்.
üüஇவர்தான் காசியபன்.. அசடு என்ற நாவலை எழுதியவர்,ýý என்று அறிமுகப் படுத்தினேன்.
அந்த அதிகாரி காசியபனைப் பாரத்தவுடன் திகைத்துவிட்டார். உடனே லைப்ரரி ஆர்டர் கொடுத்து விட்டார். அப்படித்தான் அசடு என்ற நாவலை முதலில் விற்றேன். அதன்பின் இன்னொரு முறை அசடு நாவலை பல ஆண்டுகள் கழித்து புத்தகமாகக் கொண்டு வந்தேன். அந்த அசடு நாவல்தான் இன்னும் என்னைவிட்டுப் போகாமல் பாக்கேட் பாக்கேட்டாக இருந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு வியூகங்கள் என்ற நாவலையும் கொண்டு வந்தேன். அதற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்ததால் தப்பித்தது அந்த நாவல்.
காசியபனின் முஹம்மது கதைகள் கணையாழியில் தொடராக வந்தது. அவற்றைத் தொகுத்து கோணல் மரம் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.
நான் இங்கே சொல்ல வந்தது அவருடைய நாவல்கள், சிறுகதையைப் பற்றி அல்ல..முடியாத யாத்திரை என்ற அவர் கவிதைத் தொகுதியைப் பற்றி. காசியபன் கவிதை எழுதுவதில் வல்லவர். அவருடைய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வரவேண்டுமென்று விரும்பினார். அவரே முடியாத யாத்திரை என்று ஒரு பெரிய நோட்டில் கவிதைகளை வரிசையாக எழுதி வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அதைக் கொடுத்து விட்டார். üஇதை எப்படியாவது புத்தகமாகக் கொண்டு வா,ý என்று வேண்டுகோள் விடுத்தார்.
முடியாத யாத்திரை என்ற அவர் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும்போது, அவருடைய யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. மொத்தம் 63 பக்கங்கள் கொண்ட இக் கவிதைத் தொகுதியில் முடியாத யாத்திரை என்ற கவிதை ஒரு நீண்ட கவிதை. அதை இன்று காலை எடுத்துப் படித்தபோது, காசியபன் அவர் மனைவியிடம் பேசுவதுபோல் கவிதை ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அந்தக் கவிதையின் ஒரு பகுதியைத் தருகிறேன் :
எங்கள் பழைய வீட்டின்
இருள் அடர்ந்த கூடத்தில்
கற்றூண்கள் பார்த்திருக்க
மின்குழல் வெளிச்சத்தில்
அவளுடைய வெள்ளி மயிர்
(பண்டு கறுப்பாக இருந்தது)
பளபளக்க
எங்கள் மூக்குக் கண்ணாடிகள் வழி
ஒருவரையொருவர் நோக்கி
இரு நாற்காலிகளில் வீற்றிருக்கிறோம்
என்று சொல்லிக்கொண்டு போகிறார். வயதான காலத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் கசடுகளை சுமந்துகொண்டு.
ஒருமுறை இபியிலிருந்து வந்திருப்பதாகக் கூறி அவர்கள் வீட்டிலிருந்து நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு போய்விட்டான். காசியபன் இதையும் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இன்னொரு முறை காசியபனும் அவர் மனைவியும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலையில் காசியபன் எழுந்து விட்டார். மனைவி எழவில்லை. மனைவி இறந்து விட்டாள் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிகிறது. என்ன துயரம் இது. அதன் பின் நான் காசியபனை சென்னையில் பார்க்கவில்லை. கேரளாவில் இருக்கும் அவர் பெண் வீட்டிற்குப் போய்விட்டார்.
வியூகங்கள் என்ற அவருடைய நாவலுக்கு ஒரு போட்டோ அனுப்பும்படி கேட்டிருந்தேன். அவர் அனுப்பியிருந்தார். அந்தப் போட்டோவைப் பார்த்து நான் பயந்து விட்டேன். ரொம்பவும் குண்டாக அந்தப் போட்டோவில் காட்சி கொடுத்திருந்தார். அவர் மரணம் அடையும் முன்பே கையெழுத்துப் பிரதியாக இருந்த அவருடைய வ்யூகங்கள் நவாலை அச்சில் பார்த்துவிட்டுத்தான் இறந்தார்.
அவர் இறந்தபிறகு அவர் விரும்பியபடி அவருடைய கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரையைக் கொண்டு வந்து விட்டேன். 63 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் பெரிய பெரிய கவிதைகள் உண்டு.
திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும்
பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.
நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.
சொல்நயமும் பொருள்நயமும்
நன்றாக வந்துவிட்டால்
சித்திரப் படிமங்கள்
சீராக வீழ்ந்துவிட்டால்
மெத்த நல்ல கவிதையென்று
முரசு அடிக்கின்றீர்…
இந்தக் கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன். மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன். இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன். இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.
என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.
1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது
2. விருட்சம் என்ற பத்திரிகை சந்ததாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது
3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் முடியாத யாத்திரை புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்
4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்கியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்
5. புத்தகம் விலை ரூ.60. புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள்
புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.
காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது. ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது.
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 4
1. சமீபத்தில் நடந்த இரண்டு துயரமான சம்பவங்கள்..
ஆமாம். துயரமான சம்பவங்கள்.
2. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தற்கொலையைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் அது நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை.
3. ஏன் ஒருவருக்குத் தோன்றுகிறது தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்று..
அதுதான் புரியவில்லை. நிறைவேறாத ஆசை, எதிர்பார்க்கிற வாழ்க்கை அமையாமல் போவது. நானும் டாக்டராக வர வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே தெரிந்து விட்டது நம்மால் முடியாது என்று. பெரிய கிரிக்கெட் வீரனாக வர நினைத்தேன். ஸ்கூலில் விளையாடும் கிரிக்கெட்டில் பந்தை வீசும்போதே தெரிந்துவிட்டது…முடியாது என்று..சினிமாவில் நடிகனாக நடிக்க வேண்டுமென்று நினைத்தேன்..சாத்தியமே இல்லை என்று உடனே தெரிந்து விட்டது…நாடக நடிகனாக நடிக்கலாம் என்றால் அதிலும் சிறப்பாக நடிக்க முடியவில்லை..சும்மா இருப்பதுதான் சரியான வழி என்று இப்போது சும்மா இருக்கிறேன்.
4. கருத்துரிமைக்கு எதிராகத்தான் கொலை நடந்தது என்று சொல்லுகிறார்களே?
இருக்கலாம். உண்மையான கருத்துûரிமை என்றால் எதுவும் எப்போதும் சொல்லாமல் இருப்பதுதான் கருத்துரிமை என்று தோன்றுகிறது.
5. இப்போது என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள்?
இரண்டு புத்தகங்களைப் படிக்கிறேன். ஒரு புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், 92 பக்கங்கள் வரை படித்துவிட்டேன். இன்னொன்று தமிழவனின் நாவல் ஆடிப்பாவைபோல. மூன்று விதமாக வாசிப்பதற்குரிய நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர என்னிடம் படிப்பதற்கு ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சிறுகதைகள், கவிதைத் தொகுதிகள், இன்னும் நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் என்று..
6. என்னன்ன புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் தர முடியுமா?
தருகிறேன்.. ஆனால் அது இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் வந்து விடும். வேண்டாமென்று பார்க்கிறேன்.
7. நான் வேண்டுமானால் பெட் கட்டுகிறேன். உங்களால் படிக்கவே முடியாது..
பார்த்துக்கொண்டே இருங்கள். நான் ஒவ்வொன்றாகப் படித்து முடித்து விடுவேன்.
8. விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்களைப் பற்றி…
சமீபத்தில் மூன்று படைப்பாளிகளைப் பற்றிய கூட்டங்களை நடத்தி முடித்துள்ளேன். நாலாவதாக நடைபெற உள்ள கூட்டம் வரும் 16ஆம் தேதி வர உள்ளது. செந்தூரம் ஜெகதீஷ் ஓஷோவைப்பற்றி பேச உள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவோர் மெய்மறந்து பேசுகிறார்கள்.
9. நவீன விருட்சம் 103வது இதழ் எப்போது வரப்போகிறது,
அடுத்த வாரம்.
10. சமீபத்தில் உங்களை அதிகம் யோசிக்க வைத்த விஷயம் என்ன?
ஒரு இலக்கியவாதியின் தனிமை வாழ்க்கை. 80 வயதுக்கு மேல் ஆன அவர், யார் துணையும் இல்லாமல் தனியாக வசிக்கிறார். இன்னும் 100 புத்தகங்கள் வரை எழுத வேண்டுமென்கிறார்..சமீபத்தில் அவர் மனைவி இறந்து விட்டார் என்பதுதான் துக்கம். தில்லியிலும் பங்களூரிலும் அவருடைய பெண்கள் இருக்கிறார்கள். இவர் சென்னையில் இருக்கிறார். பெண்கள் தங்களுடன் வரும்படி கேட்டுத் தொந்தரவு செய்கிறார்கள்.
11. யார் தயவும் இல்லாமல் ஒருவர் வாழ முடியுமா?
நிச்சயமாக முடியாது.
12. சமீபத்தில் நீங்கள் மறைத்த விஷயம் யாது?
காலையில் நான் எப்போதும் வாக் செல்வேன். ஒரு நண்பருடன். அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி பார்கில் நடப்போம். அதுமாதிரி அன்று நடந்து முடிந்து வண்டியை எடுத்துக்கொண்டு திரும்ப நினைத்தேன். எதிர் திசையில் இடிப்பதுபோல் வந்த வண்டிகளைப் பார்த்து நடுங்கிக்கொண்டு பின் ஜாக்கிரதையாக எதிர் திசைக்குத் திருப்பினேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு டூ வீலரில் வந்த இளைஞன் என் வண்டி மீது மோதி வண்டியுடன் என்னை கீழே சாய்த்துவிட்டான். நல்லகாலம் பெரிதாக அடிபடவில்லை. வெறும் சிராய்ப்புதான். வண்டிக்குத்தான் சேதம். எதிர்பாராத தருணத்தில் எப்படியெல்லாம் ஆபத்து வரும் என்பதை அந்த இளைஞன் மூலம் தெரிந்துகொண்டேன். இதை என் மனைவியிடம் சொல்லவில்லை.
13. .இத்துடன் போதுமா?
போதும். பின்னால் தொடர்வோம்.