மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 77

அம்மாவும் அப்பாவும்

 

ஹேச் ஜீ ரசூல் 

ஒன்றும் சொல்லவில்லை அப்பா

 

சாயங்காலம் முழுவதும்

நான்பாண்டி விளையாடியபோதும்

தம்பி கிட்டிப்புள் விளையாடிவிட்டு

பக்கத்து வீட்டுப்பையனை

அடித்துவிட்டு வந்தபோதும்

 

கிளாஸிலே முதல் மார்க்கெடுத்து

நான் பாஸôன போதும்

எட்டாம் கிளாஸில்

இரண்டாவது தடவை

தம்பி பெயிலான போதும்

 

இடையே ஒரு தடவை

வாய்திறந்தார் அப்பா.

 

இப்போதெல்லாம்

ஏழுமணிக்கே பொங்கி சமச்சு

சாதம் கெட்டி கொடுக்கணூம்

காலேஜ÷க்கு போகும் தம்பிக்கு

 

இப்போதைக்கு ஒன்றும் சொல்வதில்லை

அம்மா மட்டும்

அப்பா எதைச் சொன்னாலும்

தலையாட்டிக் கொண்டே.

 

நன்றி : பூட்டிய அறை – ஹெச் ஜி ரசூல் – மொத்தப் பக்கங்கள் : 88 – வெளியீடு : திணை வெளியீட்டகம், 30 பகவதி லாட்ஜ், நாகர்கோவில் – வெளியான ஆண்டு : மே 1998 – விலை : ரூ.30

பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகளை கவிதை நூல்களிலிருந்து மட்டும் எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  ஆனால் என்னிடம் கைவசம் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  இன்னும் சில கவிதைப் புத்தகங்கள் நான் வாங்கவும் வேண்டும்.  எப்படி இதில் 100 கவிதைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை.  அதனால் முதல் நூறு, இரண்டாவது நூறு என்று கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  ரசூல் அவர் கைப்பட கையெழுத்துப் போட்டு அனுப்பிய கவிதைத் தொகுதி இது. சில தினங்களுக்கு முன் தற்செயலாக இந்தப் புத்தகம் கண்ணில் தட்டுப்பட்டது.  எளிமையான வரிகளின் மூலம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்வதுதான் கவிதை.

இன்று இடம் கிடைத்துவிட்டது

 

இன்று என் திருமண நாள்.  திருமணம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இப்போது ஞாபகம் வருகிறது.  மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.  என் அலுவலகத்திலிருந்து 100 பேர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள்.  பின்னால் சாப்பிட வந்தவர்களுக்கு ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. பலர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்கள். 

ஆகஸ்ட் செப்டம்பர் என்றால் பல திருமணங்கள் நடைபெறுகின்றன.  நேற்றும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்.  நானும், கிருபானந்தனும் மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். திருமணம் நடக்குமிடம் கூடுவாஞ்சேரி.  அசோக் நகரில் பஸ் பிடித்து தாம்பரம் போய்விட்டோம். பின் சரவணாவில் காப்பி சாப்பிட்டோம்.  கூடுவாஞ்சேரி பஸ்ûஸப் பிடிக்க நிற்கும்போதுதான் தெரிந்தது, நேற்று செங்கல்பட்டு வரை போகும் மின்சார வண்டிகள் ரத்து செய்யப்பட்டதென்று.  ஓலாவிற்காகக் காத்திருந்தோம்.  20 நிமிடம் ஆனபின்னும் கார் கிடைக்கவில்லை.  வீட்டிற்குத் திரும்ப யோசித்தோம்.  அவ்வளவு தூரம் வந்து திரும்பிப் போக விருப்பமில்லை.  திரும்பவும் முயற்சி செய்தபோது பஸ் கிடைத்தது.  கல்யாண மண்டபத்தை அடையும்போது மணி இரவு 8.15 ஆகிவிட்டது.  இலக்கிய நண்பரை மேடையில் பார்த்தேன்.  உற்சாகமான சிரிப்புடன், கனத்த குரலுடன் தென்பட்டார்.  அவரைப் பார்க்கும்போது ஒரு குட்டி ஜெயகாந்தனைப் பார்ப்பதுபோல் தோன்றியது.  அவருடைய பையனுக்குத்தான் திருமணம்.

மேடையை விட்டு கீழே இறங்கியபோதுதான் ஒன்றைக் கவனித்தேன்.  பயங்கர கூட்டம்.  சாப்பாடு மேடைக்குப் போனேன்.  அங்கே இடம் பிடித்து சாப்பிட முடியாது போல் இருந்தது.  எல்லா இடங்களிலும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்.  பின்னால் சாப்பிடப்போகிறவர்கள் நின்றுகொண்டே இருந்தார்கள்.  கடைசியில் இடம் பிடித்துச் சாப்பிட முடியாது போல் தோன்றியது.  கிருபானந்தன் ஐஸ்கிரிம் வாங்கிக்கொண்டார்.  நான் பீடாவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பின் பஞ்சு மிட்டாயும், பாப்கார்னும் வாங்கிச் சாப்பிட்டோம். ஒரு கல்யாணத்திற்குப் போய் சாப்பிடாமல் போவது இதுதான் முதல்தடவை எனக்கு.

நாங்கள் அவதிப்பட்டு அங்கு சென்றதால், அவதிப்படாமல் வீட்டிற்குப் போனால் போதுமென்று தோன்றியது.  கல்யாணத்திற்கு வந்திருந்த நண்பரின் உதவியால் அவர்கள் காரில் தொற்றிக்கொண்டோம்.  தாம்பரம் வரை விடும்படி கேட்டுக்கொண்டோம்.  பெரிய மனசுடன் அவர்கள் எங்களை தாம்பரத்தில் விட்டுவிட்டார்கள்.  பின் நாங்கள் தாம்பரத்தில் உள்ள வஸந்த் பவன் போய் தோசை சாப்பிட்டோம்.

பஸ் பிடித்து அசோக்நகருக்கு வரும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  எனக்கு இந்தத் திருமணத்திற்கு வந்ததே பயங்கர கனவுபோல் இருந்தது.

என் அலுவலக நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  நாங்கள் சாப்பிட உட்கார்ந்துகொண்டு சாப்பிடப் போகிறோம்.  இலையெல்லாம் போட்டாகிவிட்டது.  பாதார்த்தங்கள் பரமாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது கூரையிலிருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.  திகைத்துப் போய மேலே பார்த்தோம்.  பூனை மூத்திரம்.  உடனே அருவெறுப்புடன் எல்லோரும் சாப்பிடாமல் எழுந்து விட்டோம்.

இதோ இன்று மாலை என் உறவினர் வீட்டுத் திருமணம். மேடையில் மணமக்களைப் பார்த்து கை குலுக்கி விட்டு, கீழே இறங்கி வந்தபோது சாப்பாடு கூடத்தில் சாப்ப்பிட இடம் கிடைத்து விட்டது.   சாப்பிட்டு விட்டு ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.  ஆனால் கல்யாணம் என்றால் சாப்பிடத்தான் போக வேண்டுமா?  கல்யாணத்திற்குப் போகாமல் இருந்தால் என்ன? கல்யாண பரபரப்பில் யாருடனும் நாம் பேச முடியவில்லை.

எல்லோரிடமும் ஒரு நிமிடம்தான் பேச முடிகிறது  

என் அலுவலக நண்பரின் பெண்ணிற்குத் திருமணம். பத்திரிகை அனுப்பியிருந்தார். பின், போனில் கூப்பிட்டார். நானும் அவரும் சீர்காழி என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் ஒன்றாகப் பணிவுரிந்து கொண்டிருந்தோம். அங்கே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்போம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது ஒன்றாக கிளம்பிப் போவோம். இதோ நான் அலுவலகத்தை விட்டு 4 ஆண்டுகள் முடியப் போகிறது.
 
அவர் இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார். நான் இருக்குமிடம் மாம்பலம். திருமணம் நடக்குமிடம் புழுதிவாக்கத்தில் உள்ள மூவரசம் பேட்டை கூட்டு ரோடில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்.7.30க்கு ரிசப்ஷன். நான் மாலை 5.30 மணிக்கே கிளம்பி மடிப்பாக்கத்தில் உள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றேன். அங்கே ஒரு அரை மணி நேரம் இருந்தேன். “மழை பெய்யப் போகிறது..சீக்கிரம் போ,” என்றாள் பெண்.
 
நான் அங்கிருந்து கிளம்பி கல்யாண மண்டபத்தை அடைந்தேன். சரியாக 7.15 மணி ஆகிவிட்டது. அலுவலக நண்பர் வாசலில் நின்று என்னை உபசரித்தார். இந்த நான்கு வருடங்களில் அவர் உருவம் முழுவதும் மாறி விட்டது. முதல் மாடி. ஏசி ஹால். ஒரே இரைச்சல். கும்பகோணத்தைச் சேர்ந்த பல அலுவலக நண்பர்களைப் பார்த்தேன். பலர் பெயர்கள் மறந்து விட்டன. பக்கிரி என்பவரை ரொம்ப நன்றாகத் தெரியும். அவருக்கு என் பெயர் மறந்து போய்விட்டது. “உங்கள் பெயர் என்ன?” என்று அவர் கேட்க, என் பெயர் பக்கிரி. உங்கள் பெயர் மௌலி என்றேன்.
 
நான் சொன்னது அவருக்குப் புரிந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து எல்லோரும் மேடைக்குச் சென்றோம். யாரும் ரொம்ப பேசிக்கொள்ளவில்லை. பின் மணமகளைப் பார்த்து நான் ஒரு புத்தகமும், ஒரு கவரும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் முதலில் பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் புத்தகம்தான் கொடுக்க நினைத்தேன். ஆனால் அவசரத்தில் அந்தப் புத்தகம் கிடைக்காததால் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்துவிட்டேன். கொடுத்தப் பிறகு எதோ பாதகமான செயலை செய்து விட்டேனோ என்று கூடத் தோன்றியது. மணமகளுக்கும், மணமகனுக்கும் தமிழ் தெரியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அல்லது சிறுகதைகள் படிப்பார்களா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது.
 
என் அலுவலக நண்பர் அந்தப் புத்தகத்தைப் படிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அலுவலக நண்பருடன் ஒரு நிமிடமதான் பேச முடிந்தது. நிறையாப் பேர்கள் அவரைச் சுற்றி இருந்தார்கள்.
 
கல்யாணத்தில் முக்கிய விஷயம் சாப்பாடு. முன்பெல்லாம் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருக்கும். இப்போதெல்லாம் முடிவதில்லை. இப்போது எல்லாவற்றிலும் ஒரு கவளம் சாப்பிடுகிறேன். இன்னும் சில ஆண்டுகள் போனால் ஸ்பூனில்தான் சாப்பிடுவேன். இரண்டு ஸ்பூன் சாம்பர் சாதம். மூன்று ஸ்பூன் ரசம் சாதம். ஒரு அரை சப்பாத்தி. கொஞ்சம் பாயாசம். பின் நாலு ஸ்பூன் தயிர்சாதம். ஆனால் கட்டாயம் பீடா சாப்பிடாமல் வர மாட்டேன்.
 
கல்யாண மண்டபத்தை விட்டு தெருவில் கூட்டு ரோடில் வண்டியைச் செலுத்தினேன். ஜே ஜே என்று கூட்டம். தாங்க முடியாத கூட்டம். மழை வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது.
 
வீடு வந்து சேர்ந்தபோது மழையில் நனைந்து விட்டேன். உதயம் தியேட்டர் முதல் வீடு வரை மழை. ஆனால் நனைந்து வருவது உற்சாகமாக இருந்தது.
 
என் அலுவலக நண்பரிடம் ஒரு நிமிடம்தான் பேசினேன். அவருடைய அடுத்தப் பெண் திருமணத்திற்கு என்னைக் கூப்பிடுவார8ô என்று தெரியவில்லை. கூப்பிட்டால் இன்னொரு ஒரு நிமிடம் அவருடன் பேசலாம். நாளை காலையில் இன்னொரு கல்யாணத்திற்குப் போகப் போகிறேன். அங்கேயும் ஒரு நிமிடம்தான் பேசும்படி இருக்கும்.

நகுலனும், அப்பாவும், நானும்….

 

நகுலன் சென்னை வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் தங்கும் இடம் ஆன அவர் சகோதரர் வீடு என் வீட்டிலிருந்து அருகில் இருந்தது.  சகோதரரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார்.  ஒருமுறை அவர் வந்திருந்தபோது நான் வீட்டில் இல்லை.

நகுலன் என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் மேலேயிருக்கும். நான் வீட்டிற்கு வந்தபோது நகுலனும், அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? எதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்?  என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

நகுலன் எப்போதும் புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பவர்.  என் அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது.

மாடியில் உள்ள அறைக்கு நகுலனை அழைத்துக்கொண்டு போனேன்.

“அப்பாவிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

நகுலன் சிரித்தபடியே,”உங்கள் அப்பா சுவாரசியமான மனிதர். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.. அந்த மருந்துகளைப் பற்றி சொன்னார்?”

“போச்சுடா..யார் வந்தாலும் இப்படித்தான் ஆரம்பித்துவிடுவார். போனில் அசோகமித்திரனிடம் கூட ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி சொல்வார்.”

“ஒரு கான்சர் பேஷண்ட் இவர்  மருந்தால் குணமாகிட்டாராம்..”

“என்னால் நம்ப முடியவில்லை… ஹோமிபோபதி மருந்தால் கான்சரை குணப்படுத்த முடியுமா?”

“எனக்குத் தெரியாது..உங்கள் அப்பாதான் சொன்னார்..”

“வேற எதுவும் சொல்லவில்லையா?”

“உங்கள் அப்பா அரசியலைப் பற்றி பேசினார்…எனக்கு தமிழ்நாட்டு அரசியல் புரியலை…அவர் கருணாநிதி மாதிரி பேசிக் காட்டினார்..”

“போச்சுடா இப்படித்தான் அவர் எல்லார் கிட்டேயும் பேசிக் காட்டுவார்..”

“அவர் ஒரு ஜாலியான மனிதர்..”

“வேற எதுவும் பேசலையா?”

“பேசினார்…உங்களைப் பற்றி..”

“என்னைப் பற்றியா?”

“ஆமாம்.  நீங்கள் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீங்களாம்..ஆனால் எதுவும் படிப்பதில்லையாம்.  இப்போது உங்கக் கிட்ட இருக்கிற புத்தகங்களைப் படிச்சாலே இந்த ஜன்மத்திலே படிக்க முடியாதாம்..என்னை உங்களுக்கு அட்வைஸ் பண்ணச் சொன்னார்.. பையனை இனிமேல் புத்தகம் வாங்காமல் இருக்கச் சொல்லுங்கள்..என்று,” நகுலன் இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

எங்கள் பேச்சு அப்பாவை விட்டுப் போயிற்று.. “என்ன புதுசா எழுதினீங்க?” என்று கேட்டார் நகுலன்.

நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த சில கவிதைகளைக் காட்டினேன்.

நகுலன் ஒரு விஷயம் சொன்னார்..” நீங்க இவ்வளவு வருஷம் எல்லோருடைய படைப்புகளையும் பிரசுரம் செய்கிறீர்கள்…யாராவது உங்கள் எழுத்தைப் பற்றி எதாவது சொன்னார்களா?”

“இல்லை..”

“ஏன்?”

“ஒரு சமயம் என் படைப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்க வேண்டும்..”

“அதெல்லாம் இல்லை.  நீங்க மோசமாக எழுதுவதில்லை.  இது உங்களைச் சுற்றி உள்ளவர்களின் மனசைக் காட்டுகிறது.  நீங்க அதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்..”

நான் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தேன்.

நகுலன் என் நோட்டில் உள்ள கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு, சில மாற்றங்களைச் செய்யும்படி குறிப்பிட்டார்..

என் வீட்டைவிட்டு நகுலன் கிளம்பும்போது, ஒன்று சொன்னார். “உங்களைப் பற்றியும், வைதீஸ்வரனைப் பற்றியும் கட்டுரைகள் எழுதுகிறேன்.”

நகுலன் எசான்னபடி என் கவிதைகள் குறித்தும், வைதீஸ்வரன் கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதி அனுப்பினார்.

அன்றைய அவருடைய பேச்சை என்னால் மறக்கவே முடியாது.

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 76

அந்நியன்

 

சிற்பி

எப்போதும்

என் பின்னால்

யாரோ வருகிறார்கள்

அவன் முகத்தை

நான் அறியேன்

ஆயினும் அவன் இருக்கிறான்

கண்ணுக்குத் தெரி0யாத

மாயாவி அவன்

என் அசைவு ஒவ்வொன்றும்

அவனுக்குள் பதிவாகி விடுகிறது

உண்ண அமர்ந்தால்

உடன் அவனும்

அமர்வதுபோல் தெரிகிறது

தெருவில் நடந்தால்

உரசிக் கொண்டே

நடப்பதாய் உணர்கிறேன்

பத்திரிகை வாங்கினால்

எனக்கு முன்

அவன் அதைப் படித்து விடுவதாய்

பிரமை

யாரையேனும் சந்தித்தால்

அவர்கள் அடையாளங்களும்

குறிக்கப் படுவதாய்த் தெரிகிறது

மேடையில் போனிôல்

üஜாக்கிரதைý என

எச்சரிக்கப்படுவதாய்

உள்ளூணர்வு

படுக்கை அறையில்

மனைவியின் முகம் பார்க்க

எத்தனிக்கையில்

சுற்றியது இனம்புரியா

மூச்சுக் காற்றின்

வெப்பம்

எப்போதும் என் பின்னால்

யாரோ வருகிறார்கள்

நன்றி : கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை – சிற்பி – கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123,  8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 600 017 – தொலைபேசி எண் : 2436423 – வெளியான ஆண்டு : மே 2016 – விலை : ரூ.80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 75

 

இருளில் நகரும் யானை

மனுஷ்ய புத்திரன்

வனப்பாதையின்

இரவுப் பயணத்தில்

திடீரென காரோட்டி

‘யானை யானை’

என்று கிசுகிசுத்தபடி

விளக்குகளை அணைத்தான்.

சாலைக்கு வெகு அருகாமையில்

மூங்கில் வனம் நடுவே

யானைக் கூட்டம்

இருளில் மேகக் கூட்டங்கள்போல

நகர்ந்து கொண்டிருந்தன

எத்தனை ஆயிரம் ஆண்டுகள்

இரவெல்லாம் இதுபோல

யானைகள்

இருளிலேயே நடந்துகொண்டிருக்கின்றன

வேறொரு இடத்தில்

காரோட்டி

ஒரு புதருக்குள் ஹெட் லைட்டைத்

திருப்பிக்காட்டினான்

ஒரு பெரிய ஒற்றை யானை

தனியாக நின்றுகொண்டிருந்தது

அதன் கண்களில் நீர்

‘இருளில் அழும் யானைகள்’

ஒரு வாக்கியம் மனதை அழுத்தியது

‘நாம் நம் குடிலுக்குத் திரும்பிவிடலாம்’

என்றேன்.

இப்போதெல்லாம்

நான் என் அறையில்

விளக்கைப் போடாமல்

இருளிலேயே குளிக்கிறேன்

இருளிலேயே தொலைபேசியில் பேசுகிறேன்

இருளிலேயே துணி துவைக்கிறேன்

இருளிலேயே மேசையை ஒழுங்குபடுத்துகிறேன்

இருளிலேயே தரையை பெருக்குகிறேன்

இருளில் ரேடியத்தில் ஒளிரும்

கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இருளில் புழங்குவதில்

ஒரு எடையற்ற தன்மை இருப்பதை

நான் வெகு அண்மையில்தான் கண்டுபிடித்தேன்

வனத்தின் இருளில் நகரும்

ஒரு யானை

எப்படியோ

என் அறைக்குள் வந்துவிட்டது

நன்றி : இருளில் நகரும் யானை – மனுஷ்ய புத்திரன் – கவிதைகள் – உயிர்மை பதிப்பகம் – 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 016 – பக்கங்கள் : 232 – விலை : ரூ.275 – தொலைபேசி எண் : 044 24993448

பின் குறிப்பு :

80களில் சிறுபத்திரிகைகளில் பிரம்மராஜனும், விக்கிரமாதித்யனும்தான் அதிகமாகக் கவிதைகள் எழுதுவார்கள். பிரம்மராஜனின் கவிதைகள் ஒருவிதம் என்றால், விக்கிரமாதித்யன் கவிதைகள் வேறு விதம்.  இறுக்கமான நடையில் பிரம்மராஜன் கவிதைகளை எழுதி விடுவார். விக்கிரமாதித்யனோ வெகுசுலபமாய் கவிதைகளை எழுதித் தள்ளிவிடுவார்.  படிப்பவர்கள் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பார்த்து நாமும் எழுதலாமா என்று நினைப்பார்கள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை நெருங்கவே மாட்டார்கள். இவர்கள் இருவரில் இன்று பிரம்மராஜன் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.  ஆனால் விக்கிரமாதித்யன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

மேலே சொன்ன இருவர்களைப் போல் இன்று அதிகமாக கவிதைகள் எழுதும் மனுஷ்யப்புத்திரன் பிரம்மராஜனைப் போல் இறுக்கமான நடையில் எழுதவில்லை.   விக்கிரமாதித்யனைப் போல் தாராள நடையிலும் எழுதவில்லை. இந்த இரண்டு கவிதை முறைக்கும் நடுவில் உள்ள ஒரு போக்கு இவர் கவிதைகளில் தென்படுகின்றன. கவிதையை ஒரு முறை படித்தப் பின்பும் இன்னொரு முறை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.

நீங்களும் படிக்கலாம் – 31

 

40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்…

கேள்வி கேட்பவர் : இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?

நான் : அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.

கே கே : 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் ஆயிற்றே?

நான் : ஒரு கூட்டத்தில் எனக்கு அசோகமித்திரனைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவருடைய சில சிறுகதைகளையும், நாவல் ஒன்றையும் படித்தேன்.  கரைந்த நிழல்கள்தான் அந்த நாவல்.

கே கே :  முன்பே படிக்கவில்லையா?

நான் : படித்திருக்கிறேன்.  சினிமா சநம்பந்தமான நாவல் என்ற ஞாபகம் மட்டும் இருந்தது.  ஆனால் நாவல் முழுக்க மறந்து போய்விட்டது.

கே கே : நாவலில் என்ன விசேஷம்.

நான் : அவர் நாவலை எடுத்துக் கொண்டு போகும் பாங்கு..

கே கே : சினிமா சம்பந்தமான நாவல்தானே இது,..

நான் : உண்மைதான்.  இந் நாவலை இப்போது படித்தாலும், சினிமாவில் நடக்கும் எந்த விஷயமும் பெரிதாக மாறவில்லை என்று தோன்றும்.

கே கே : இந்த நாவலில் என்ன விசேஷம்?

நான் : பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அசோகமித்திரன் உருவாக்கியிருக்கிறார்.  ஒரு சினிமா அவுட்டோர் ஷ÷ட்டிங் நடப்பதிலிருந்து இந்தக் கதை ஆரம்பமாகிறது.  அதை நடத்த எத்தனைப் பேர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை துல்லியமாக விவரித்துக்கொண்டு போகிறார்.

கே கே : உண்மையில் இந்த நாவல் இரண்டு பட முதலாளிகளின் கதை.

நான் : ஆமாம்.  ஒருவர் படம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு யார் கண்ணிலும் படாமல் ஓடிப் போய் விடுகிறார். படம் எடுத்து திவாலாகி விடுகிறார்.  இன்னொரு தயாரிப்பாளர் படம் எடுத்து முடித்துவிட்டு ரிலீஸ் பண்ண முடியாமல் அவதிப் படுகிறார்.

கே கே :  சினிமாவில் சாதாரண நிலையில் இருப்பவர்களிலிருந்து தயாரிப்பாளர்கள் வரை எல்லோரையும் எழுதியிருக்கிறார்.

நான் : ஒரு நாவலில் ஏகப்பட்ட குரல்களை ஒலிக்க வைக்கிறார். அமைப்பியல் விமர்சன முறைபடி நாம் ஆசிரியரைப் பார்க்கக் கூடாது. படைப்பைப் பற்றிதான் பேச வேண்டும்.

கே கே : அமைப்பியல் முறைபடி வேற என்ன பார்க்க முடியும்?

நான்; : ஒரு படைப்பு சிறந்த படைப்பா இல்லையா என்பதை அமைப்பியல் முறை கூறாது.  ஆனால் ஒரு படைப்பில் காணப்படுகிற பல அம்சங்களை அலசி ஆராயும்.

கே கே : இந்த நாவலில் அப்படி என்ன கண்டீர்கள்?

நான் : இந்த நாவலில் யாருக்கும் முக்கியமான பாத்திரம் கிடையாது.  ஒரு இடத்தில் உதவி டைரக்டராக இருக்கிற ராஜகோபால் இப்படிப் பேசுகிறார் : ‘üசினிமாவில் எல்லாம் டெம்பரரி, பர்மனென்ட்னு கிடையாது.  எல்லாம் பர்மனென்ட்தான், எல்லாம் டெம்பரரிதான்.ý இது சினிமாவைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.

கே கே : இந்த நாவலில் தாவிப் போகிற தன்மை இருக்கிறது.

நான் : ஆமாம்.  முதலில் நடராஜன் என்ற கதாபாத்திரம் வருகிறது.  அடுத்த அத்தியாயங்களில் நடராஜன் என்ற பாத்திரம் வருவதில்லை.  ஆனால் அவரைப் பற்றி பேச்சு மட:டும் வருகிறது. அடுத்தது பட்டாபிராம் ரெட்டியார் வருகிறார்.  ஜயசந்திரிகாவை ஷ÷ட்டிங் அழைப்பதற்குச் கூப்பிடுகிறார்.  அவள் உண்மையில் மயங்கி விழுந்து விடுகிறாளா அல்லது நடிக்கிறாளா என்பது தெரியவில்லை. ஆனால் அதன்பின் ரெட்டியார் காணாமல் போய் விடுகிறார்.

கே கே  : கரைந்த நிழல்கள் என்ற தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் கரைந்து போய்விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

நான் : ராம ஐய்யங்காரைப் பற்றி அடுத்தது வருகிறது.  அதில் மணிமுடி என்ற தமிழ் வாத்தியாரைப் பற்றி வருகிறது.  வாரப் பத்திரிகையில் ஒன்றில் ஒரு கதை எழுத, அதை ஒரு படத் தயாரிப்டபாளர் திரைப்படமாக எடுக்க, எடுத்த படம் பல்வேறு காரணங்களார் பிரபலமாக, மணமுடி ஒரு ராசிக்கார வசனகர்த்தா என்று பெயர் பெற, அவர் வாத்தியார் வேலையை விட்டுவிட்டு அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் ûத்துக் கொண்டார் என்று கிண்டலடிக்கிறார்.

கே கே : ராம ஐய்யங்கார் அவருடைய மகன் பாச்சாவைப் போய்ப் பார்க்கிற இடத்தில், பையனிடம் நிறையா வசனம் பேசுகிறார்.  இந்த இடத்தில் மகனும், அப்பாவும் பேசும்போது, ராம ஐய்யங்கார் யார் என்பதை தோலுரித்துக் காட்டி விடுகிறான் பையன்.

நான் : இன்னொன்று இந்த நாவலின் கடைசி அத்தியாயம். நாவலின் ஒன்பது அத்தியாயங்கள்  படர்கையில் சொல்லப்படுகின்றன.  பத்தாவது அத்தியாயமான கடைசி அத்தியாயத்தில் தன்மை ஒருமையில் வருகிறது.  இங்கு கதை சொல்பவன் பெயர் தெரியவில்லை.

கே கே : கடைசியாக  நாவலைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?

நான் : சினிமாவில் ஈடுபடுகிறவர்களின் தாறுமாறான வாழ்க்கையை இந் நாவல் படம் பிடித்துக் காட்டுவதாகத் தோன்றுகிறது.  ஒரு நிறைவான நாவலைப் படித்தத் திருப்தி ஏற்படுகிறது.

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் – 2

 
ஜோர்ஜ் லூயி போர்ஹே
 
 
 
தற்கொலை
 
 
தனித்த ஒரு நட்சத்திரத்தைக்கூட விட்டுவைப்பதாயில்லை இரவில்
இந்த இரவையும் விட்டுவைப்பதாயில்லை
 
நான் மடிந்து விடுவேன். என்னுடன்
சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும்.
 
பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும்,
கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன்.
 
சேமிக்கப்பட்ட கடந்த காலத்தையும் நான் துடைத்துவிடுவேன்
 
நான் உண்டாக்குவேன் புழுதியை, வரலாற்றிலிருந்து, புழதியிலிருந்து
 
இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை
 
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக் கடைசிப் பறவையை.
 
நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது
 
மூலம் : ஸ்பானிய மொழி
ஆங்கிலம் வழி தமிழில் : அஷ்டாவக்ரன்
 
(நவீன விருட்சம் ஜனவரி – மார்ச்சு 1989)

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்

விருட்சம் ஆரம்பித்த 1988ஆம் ஆண்டிலிருந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விருட்சத்தில் பிரசுரம் ஆகிக் கொண்டிருந்தன.  பலர் மொழிபெயர்ப்புக் கவிதைகளை விருட்சத்தில் எழுதி உள்ளார்கள்.  அவற்றை எல்லாம் தொகுக்கும் எண்ணம் உள்ளதால், ஒவ்வொன்றாய் முகநூலிலும், பிளாகிலும் வெளியிடுகிறேன்.

நார்மன் மேக்கே 

கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமுகம், நோய் –

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மௌமாக்க முடியவில்லை

கல்லெறியப்பட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன் மீத படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீரென

அவன்

தடுமாறுகிறான்

தடைப்பட்டு நிற்கிறான்

பக்கவாட்டில் சுலு;கிறான்

இதில் என்ன ஆச்சர்யம்!

மூலம் : ஆங்கிலம்

தமிழில் : கன்னி

நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர்.  தனது 75வது வயதில் 26.02.1986ல் காலமான இவர், 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.  இத் தொகுதியிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார்.  இதற்கு இங்கிலாந்து அரசின் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது.  ராபர்ட்கிரேவ்ஸ், டபிள்யூ எச் ஆடன், ஸீக்ஷபிரிட் ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பே பெற்றுள்ளனர்.  

                                                                    (நவீன விருட்சம் அக்டோபர் – டிசம்பர் 1988)

ஏ கே செட்டியாரைப் பற்றி நெகிழ்வான பேச்சு

 

                                                                                                   

சமீபத்தில் நான் மூன்று கூட்டங்களை நடத்தி உள்ளேன். இந்த மூன்று கூட்டங்களிலும் பேசியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் பேச்சுக்களைக் கேட்க வந்தவர்களுக்கு அதிகப்படியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது.  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைக் குறித்துப் பேசினார்.  உண்மையில் அன்று தி ஜானகிராமனை நேரில் அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்கார வைத்து உரையாடியது போல் தோன்றியது.  இரண்டாவது கூட்டம் ஜøலை மாதம் நடந்தது.  இக் கூட்டத்தில் பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார்.  பெருந்தேவியின் பேச்சைக் கேட்டு புதுமைப்பித்தனே நெகிழ்ந்து போனதுபோல் உணர்வு ஏற்பட்டது.

மூன்றாவது கூட்டமாக இன்று கடற்கரை ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார்.  அவருடைய பேச்சை ஏ கே செட்டியார் கேட்டிருந்தால், அவரை மனமுவந்து ஆசிர்வாதம் செய்திருப்பார்.  எனக்கு என்ன மலைப்பு என்றால் 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஏ கே செட்டியாரை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தது.  இந்தப் புத்தகத்திற்கு கடற்கரை 30 பக்கங்களுக்கு மேல் பதிபாசிரியர் உரை எழுதி உள்ளார்.  ஏ கே செட்டிôர் புகழ் ஓங்குவதோடல்லாமல் கடற்கரையின் புகழும் ஓங்கும். புத்தகத்தைப் பதிப்பித்த சந்தியா பதிப்பகம் வாழ்க.  என் புத்தக அலமாரியை அலங்கரிக்க இப் புத்தகத்தை விலைக்கு  வாங்கி உள்ளேன்.

இந்த மூன்று உரைகளையும் நான் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்து கம்ப்யூட்டரில் கொண்டு வந்து விட்டேன்.  திருப்பூர் கிருஷணன் உரையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதேபோல் பெருந்தேவி பேசியதையும், கடற்கரை பேசியதையும் ஒருவர் கேட்க வேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்ய உள்ளேன்.  கூடிய விரைவில்.

இக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சிலர் கூட்டத்திற்கு வருகிறார்கள்.  சிலர் கூட்டத்திற்கு வரவேண்டுமென்று நினைத்து வர முடியாமல் போய் விடுகிறது.  இன்னும் சிலரால் கூட்டத்திற்கு வரவே முடியவில்லை.  ஆனால் இதுமாதிரியான கூட்டங்கள் தொடரந்து நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால் எல்லோரும் வந்துவிட்டால் கூட்டம் நடக்கும் இடமே தாங்காது.