ஏன் என்று தெரியவில்லை?

தமிழ் ஹிந்துவைப் புரட்டிப் பார்த்தேன். ஞ:ôனக்கூத்தன் பிறந்த நான் இன்று. எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்.. ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். :ஞானக்கூத்தன் எங்களைப் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்தார். ஞானக்கூத்தன் ஒன்று சொன்னார் : “எனக்கு இன்று பிறந்த நாள்,” என்று. வாழ்த்துத் தெரிவித்தோம். பின் இன்னொன்றும் சொன்னார் ‘இந்தப் பிறந்தநாள்போது வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னாராம். ஆண்டவன் இன்றுவரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறானாம். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று. இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் கலங்கி விட்டார்கள்,” என்று. அன்று முழுவதும் ஞானக்கூத்தன் சொன்னது என் ஞாபகத்தை விட்டுப் போகவில்லை.
 
என் அப்பா பாட்டியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. அவர்களுக்கே தெரியாது..எப்போது பிறந்தோம் என்று..எனக்குக் கூட பல ஆண்டுகளாக பிறந்த நாள் எப்போது வருகிறது என்பது தெரியாது..உண்மையில் என் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடிய பின்தான் என் பிறந்தநாள் ஞாபகம் வந்தது.
 
ஒரு முறை என் பெண் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட கேக்கெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தேன். சுற்றிலும் தெருவில் உள்ள சின்ன சின்ன பொடியன்கள். பெண்ணை எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு கத்தியால் கேக்கை வெட்டச் சொன்னேன். பெண் மிரண்டாள். பின் ஓங்கி என் கன்னத்தில் அடித்து விட்டாள்.
 
இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
 
ஒருநாள் மாலை பிரமிள் வீட்டிற்கு வந்தார். பின் என் கையைப் பிடித்துக் குலுக்கினார். “என்ன?” என்றேன். “பிறந்தநாள்” என்றார்.
அசோக்நகரில் உள்ள சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். டிபன் சாப்பிட்டு பிறந்தநாள் கொண்டாடினோம்.
 
ஒவ்வொரு பிறந்தநாள் போதும் பிறந்தநாள் கவிதை எழுதுவது வழக்கம். பிறந்தநாள் போது யாரும் வாழ்த்தவில்லையே என்று ஏக்கம் இருக்கும். பிறந்த தினம் போது மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடி எதுவும் படக்கூடாது. யாரிடமும் திட்டு வாங்காமல் இருக்க வேண்டும். பிறந்த தினம் போது கவிதை எழுதுவது வழக்கம்.
 
2011ஆம் ஆண்டு ஒரு கவிதை எழுதினேன். 58 என்று.
 
58
 
ஓடி விட்டன
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும்
கழுத்தில் சுருக்கம்
இளமை இன்னும் மாறவில்லை
என்று அப்போதிருந்த சிந்தனை
ஓட்டம் ஒரே மாதிரிதான்
 
வானத்தில் நட்சத்திரம் மின்ன
தூரத்தில் தெருநாய் குரைத்தது
வேடிக்கையாக யாரோ
கொட்டாவி விட்டனர்
 
இன்று 58
 
இப்படித்தான் 59ஆம் வயதில் ஒரு கவிதை எழுதினேன். ஆனால் அதன்பின் எழுதவில்லை. ஞானக்கூத்தனோ பிரமிளோ ஏன் வைதீஸ்வரனோ பிறந்த தின கவிதைகள் எழுதவில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை?
 
 

ஏன் இந்தக் கூட்டம்?

 

வழக்கம்போல் நவீன விருட்சம் 103வது இதழை எடுத்துக்கொண்டு போய் வைதீஸ்வரனிடம் கொடுத்த போது, அவர் மொத்தக் கவிதைகள் அடங்கிய தொகுப்பான மனக்குருவி என்ற கவிதைத் தொகுதியை என்னிடம் நீட்டினார்.  திரும்பத் திரும்ப அவர் முன் அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.  பல ஓவியங்களுடன் 366 கவிதைகள் அடங்கிய தொகுப்பு அது.

 சனிக்கிழமை வைதீஸ்வரன் சிட்னி செல்கிறார்.  திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் மேல் ஆகும்.  உடனே எனக்குத் தோன்றியது, இப் புத்தகத்தை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி கவிதைகள் வாசிப்பது என்று.  

இக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். டாக்டரும் கூட்டம் ஏற்பாடு செய்ய தயாராய் இருந்தார்.  இந்தத் தருணத்தில்தான் புத்தகம் கொண்டு வந்த பதிப்பாளர் லதாவால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது.

 லதா வர முடியவில்û9ல என்றால் கூட்டம் நடத்த வேண்டாமென்று தோன்றியது.  தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன்  வைதீஸ்வரனைப் பார்த்துவிட்டு கூட்டம் நடத்தாமல் விட்டுவிடலாமென்று தோன்றியது.  திங்கள் கிழமை கிருபானந்தன் எனக்கு போன் செய்து, எப்படியாவது வைதீஸ்வரன் கூட்டத்தை நீங்கள் நடத்த வேண்டுமென்று சொன்னார்.  டிஸ்கவரி புத்தக நிலையத்தில்  நடத்தலாமென்றும் சொன்னார்.  

அதன் விளைவுதான் புதன் கிழமை நடந்த கூட்டம்.  கூட்டத்திற்கு வந்திருந்து வைதீஸ்வரன் கவிதைகள் வாசித்த அனைவருக்கும் என் நன்றி.

இக் கூட்டத்தை எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.  ஒவ்வொருவராய் அவருடைய கவிதையை வாசிப்பது என்று தீர்மானித்திருந்தேன்.   நான் முதலில் அப்படித்தான் வசித்துவிட்டு அமர்ந்தேன்.  உண்மையில் எல்லோரும் அவருடைய பிடித்தமான கவிதைகளை வாசித்துவிட்டு அமர வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் என்னுடைய தவறு இதைத் தெளிவாக சொல்லவில்லை. பின்னால் வந்த ஒன்றிரண்டு பேர்கள் அவர் கவிதைகளை மட்டும் வாசிக்காமல் அக் கவிதைகளுக்கு விளக்கங்களையும் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  கவிதையைப் படித்தாலே போதும்.  விளக்கம் தேவையில்லை.  பொழிப்புரை சொல்வதுபோல் ஆகிவிட்டது.  இதைக் கேட்பவர்க்கு அலுப்பை ஏற்படுத்தி விடும்.  என்னால் இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை.  அதேபோல் ஒரு கட்டுரையை வாசித்தது மனதில் ஏறவில்லை.  அலுப்பாக இருந்தது.

 மேலும்  அவர் கவிதைகள் குறித்து பேசுவதை கவிதை வாசிப்பது முடிந்தவுடன் வைத்துக்கொள்ளலாமென்றும் நினைத்தேன்.  நானே ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டு வந்தேன்.  நான் ஒரு கவிதை வாசித்ததோடு நிறுத்திவிட்டேன்.  கட்டுரையைப் படிக்க வில்லை.  இக் கூட்டத்திற்கு எங்கிருந்தோ வந்திருந்து கூட்டத்தில் கலந்து கொண்டதோடல்லாமல், வைதீஸ்வரன் புத்தகம் ஒன்றை வாங்கிச் சென்றார் தமிழ்மணவாளன். மேலும் அவரிடம் ஒரு கவிதையை எப்படி வாசிக்க  கற்றுக்கொள்ள வேண்டும் போலிருந்தது.  அது மாதிரி வாசித்தார்.  அவருக்கு தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  எல்லோரும் வைதீஸ்வரன் கவிதைகளைக் கேட்டு ரசித்தோம்.  கைத் தட்டினோம்.  சிரித்தோம். இதைவிட என்ன பெருமையை வைதீஸ்வரனுக்கு தந்துவிட முடியும் என்றும் தோன்றியது. கூட்டம் நடத்துவதில் நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று என்னையே நொந்து கொண்டேன்.     எல்லாமே வேறு வேறு விதமாக மாறி கூட்டம் 8.45க்கு முடிந்தது.  கூட்டத்தை ஏற்பாடு செய்து உதவிய வேடியப்பனுக்கு நன்றி. 

அற்புதமாக டிவியில் படம் பிடித்த ஷ்ருதி டிவிக்கு நன்றி.   எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பிடித்தார். அதேபோல் வேடியப்பன்.  இடம் கொடுத்தவரிடம் எவ்வளவு தர வேண்டுமென்று கேட்டேன்.  ‘எது வேண்டுமானாலும் கொடுங்கள்.  உங்கள் இஷ்டம்.’  யார் சொல்வார்கள் இதுமாதிரி.   அதேபோல் லதாவும், கே எஸ் சுப்பிரமணியனும்.  வைதீஸ்வரன் மீது கொள்ளை அன்பு இவர்கள் இருவருக்கும்.   அதேபோல் டாக்டரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.  மனக்குருவி என்ற இந்தப் புத்தகம் நிச்சயமாக எல்லாப் பிரதிகளும் விற்றுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.  இது திட்டமிடாத அவசரமான கூட்டம்.

சென்னையில் மூன்று கவிஞர்களும் விருட்சமும்..

 

விருட்சம் ஆரம்பித்தபோது மூன்று கவிஞர்கள் சென்னையில் இருந்தவர்கள் விருட்சத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்.  ஒருவர் ஞானக்கூத்தன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் வைதீஸ்வரன்.

இந்த மூன்று கவிஞர்களும் விருட்சத்தில் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பிரமிள் கவிதை மூலம் யாரையாவது திட்டி எழுதியிருந்தால், அதைப் புரிந்துகொள்ளாமலேயே நான் பிரசுரம் செய்திருக்கிறேன்.  ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையைப்   மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.

 

அந்தக் கவிதை இதுதான் :

விடிவுக்கு முன் வேளை

ஆகாயத்தில் மிதக்கின்றன

நாற்காலி மேஜைகள்

ஊஞ்சல் ஒன்று

கடல்மீது மிதக்கிறது

அந்தரத்து மரச் சாமான்களைச்

சுற்றிச் சுற்றிப் பறக்கிறது

அசிரீரிக் கூச்சல் ஒன்று

சிறகொடித்து கிடக்கிறது

ஒரு பெரும் கருடப் பட்சி

கிழக்கு வெளிறிச்

சிவந்து உதித்த மனித மூளைக்குள்

வெறுமை ஒன்றின் இருட் குகை

குகைக்குள் கருடச் சிறகின்

காலை வேளைச் சிலிர்ப்பு

ஆகாயத்தில்

அலைமேல் அலை.

மௌனித்தது

அசரீரிக் குரல்..

இந்தக் கவிதையை முதல் இதழ் வெளிவந்த விருட்சத்தில் நான் பிரசுரம் செய்யவில்லை.  இந்தக் கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.  மேலும் விருட்சத்தைக் கிண்டல் செய்ய இதை எழுதி உள்ளார் என்று அப்போது நினைத்தேன்.  ஆனால் பின்னால் பிரமிள் எழுதிக் கொடுத்த கவிதைகள் எல்லாவற்றையும் நான் பிரசுரம் செய்தேன். இந்தக் கவிதையையும் பின்னால் வந்த விருட்சம் இதழில் பிரசுரம் செய்தேன்.

ஆனால் வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகளை நான் உடனே பிரசுரம் செய்து விடுவேன்.  ஆனாலும் ஞானக்கூத்தன் ஒரு முறை குதிரை என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார்.

அக் கவிதை ஒரு சிறிய கவிதை.  அதை இங்கே தருகிறேன்.

மரத்துக்குக் கீழே குதிரை

அதற்குக் கொடுக்கப்பட்ட

புல்லைக் குனிந்து குனிந்து

தரையிலேயே தின்றவாறு நிற்க

குதிரைக்குப் பக்கம் இவன் போனான்.

‘குதிரை’ ‘குதிரை’ என்றான்.

இவனைக் குதிரை கவனிக்காமல்

தன்

பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது.

மீண்டும் இவன் சொன்னான்

குதிரை குதிரை குதிரை

விட்டது பட்டென் றொருஉதை

அந்தக் குதிரை.

தரையில் உருண்டான்

அப்பால் ஒருமுறைகூட

குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.

இந்தக் கவிதையை ஞானக்கூத்தன் முன் நான் படித்தேன்.  என்னைப் பார்த்துக் கேட்டார்.  ‘விருட்சத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா?’ என்று. நான் ஒன்றும் சொல்லாமல் தலை ஆட்டினேன்.  என்னடா இது குதிரை என்று இப்படி எழுதிவிட்டாரே என்று பின்னால் யோசித்தேன்.  பின் அந்தக் கவிதையைப் பிரசுரம் செய்துவிட்டேன்.

வைதீஸ்வரன் முதன் முதலாக விருட்சத்தில் எழுதிய கவிதை.  ஒன்ஸ் மோர்.  ஆத்மாநாமின் தற்கொலையைப் பற்றி எழுதியிருப்பார்.

தற்கொலை செய்துகொள்வது

தண்ணீரில் குளிப்பதைப் போல்

மனசில் ஒட்டாத விஷயமா?

உயிர் வெறும் எச்சிலா

பச்சென்று துப்பிவிட?

பிறவியில்

உயிரை உடமபுக்கு வெளியில்

ஒட்டிக்கொண்டு வந்தானா

ஆறாவத விரலாக

வேண்டியபோது வெட்டிவிட?

என்றெல்லாம் எழுதியிருப்பார்.  இது ஒரு நீளமான கவிதை. வைதீஸ்வரன் எதை எழுதிக் கொடுத்தாலும் பிரசுரம் செய்து விடுவேன்.  பிரமிள் கவிதைக்கும், ஞானக்கூத்தன் கவிதைக்கும் நான் படிக்கும்போது ஏற்பட்ட மனக் கிளேசம் வைதீஸ்வரன் கவிதையைப் படிக்கும்போது உண்டாகவில்லை.

 

இதோ  366 கவிதைகள் கொண்ட வைதீஸ்வரனின் மனக்குருவி என்ற முழுத் தொகுதியைப் புரிந்துகொள்ள அதிகக் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

நாளை (04.10.2017) மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் வைதீஸ்வரனைப் பற்றி பேசுவோம்.  அவர் கவிதைகளை அவர் முன்னால் வாசிப்போம்.  முடிந்தால் கவிதைகளைப் பற்றி அவரிடம் விவாதிப்போம்.

விருட்சமும் டிஸ்கவரி புத்தக பேலஸ÷ம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

 

வைதீஸ்வரனின் பிறந்த நாள் போன மாதம் 22ஆம் தேதி நடந்துள்ளது.  இதை ஒட்டி லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி என்ற வைதீஸ்வரனின் முழுத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.  1961 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை வைதீஸ்வரன் எழுதிய கவிதைகள் மட்டுமல்லாமல், அவருடைய அற்புதமான ஓவியங்களும்  கொண்ட தொகுப்பு இது.  ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.  ரூ.450 கொண்ட இப்புத்தகத்தை நாளை மட்டும் சலுகை விலையில் தர உள்ளோம்.

வருகிற ஆறாம் தேதி வைதீஸ்வரனும், அவர் மனைவியும் சிட்னி செல்கிறார்கள்.  அவர்கள் அடுத்த ஆண்டு திரும்பி வர உள்ளார்கள்.

அவருடைய பிறந்தநாளை ஒட்டியும், அவருடைய முழுத் தொகுதியை ஒட்டியும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.  அவர் கவிதைகளை அவருடைய நெருங்கிய நண்பர்கள், வாசகர்கள் வாசிக்க உள்ளார்கள். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அவருடைய கவிதைகளை வாசித்து அவரைப் பெருமைப் படுத்துகிறோம்.

இக் கூட்டம் நாளை மாலை 6 மணி சுமாருக்கு நடக்க உள்ளது. இக் கூட்டத்தில் வைதீஸ்வரனும் பங்கு கொள்கிறார்.  அவர் முன்னிலையில் அவருடைய கவிதைகளையும் அவர் கவிதைகள் குறித்து கருத்துக்களையும் பதிவு செய்ய உள்ளோம்.

நாளை மனக்குருவி புத்தகத்தில் வைதீஸ்வரனே கையெழுத்திட்டு புத்தகத்தை விலைக்குக் கொடுக்க உள்ளார்.  இக் கூட்டத்திற்கு திறளாக வந்திருந்து எல்லோரும் சிறப்பு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டம் நடக்கும் தேதி : 4ஆம் தேதி – புதன் கிழமை

நேரம் : 6 மணிக்கு

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் கே கே நகர்

இப்படிக்கு

அழகியசிங்கர், நவீன விருட்சம், (9444113205)

வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் (9940446650)

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 6

 

பார்ப்பவர்களுக்கு அலுப்பில்லாமல் இருப்பதற்கு இதன் ஒவ்வொரு பகுதியாக வெளியிடுகிறேன். இதைத் தவிர இன்னும் இரண்டு பகுதிகள் பாக்கி உள்ளன.

இந் நிகழ்ச்சியைக் குறித்து யாரும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் பலரிடம் போய் சேர்ந்திருக்கிறது என்பது தெரிகிறது.

 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 5 

 

அன்றைய கூட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள்.  பேசியவர்கள் அனைவரும் அசோகமித்திரன் மீது மதிப்பும் மரியாதையும் கூடவே அன்பும் கொண்டவர்கள்.  அவர்கள் யாரும் நான் கூப்பிட்டதற்காக வரவில்லை.  ஆனால் அசோகமித்திரன் பற்றி  பேச வேண்டுமென்பதற்காகவே வந்தார்கள். இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் போக வேண்டுமென்ற முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளேன்.  5வது பகுதியைத் தொடர்ந்து 6, 7, 8 என்று இன்னும் மூன்று பகுதிகள் உள்ளன.

 

இரண்டு தகவல்கள்….இரண்டு தகவல்கள்….

 

முதல் தகவல் :

 

நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்துவிட்டது.  ஒரு மாதம் மேல் தாமதாகிவிட்டது.  102வது (அசோகமித்திரன் இதழ்) போன மே மாதம் வெளிவந்தது.  ஆகஸ்ட் மாதமே இதழைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.  ஆனால் செப்டம்பர் கடைசியில்தான் கொண்டு வர முடிந்துள்ளது. இந்த இதழில் ஆறு கதைகள் வெளிவந்துள்ளன.  மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் என்ற பெயரில் அழகியசிங்கரும், விலகும் திரைகளும் சரியும் பிம்பங்களும் என்ற பெயரில் ஸிந்துஜாவும், மாரி என்ற பெயரில் டாக்டர் ஜெ பாஸ்கரனும், முதல் தேநீரின் ருசி என்ற பெயரில் சோ சுப்புராஜ÷ம், மெய் வருத்தம் பாரார் என்ற பெயரில் பிரபு மயிலாடுதுறையும், ஊர்மிளா என்ற தலைப்பில் பானுமதியும் எழுதி உள்ளார்கள்.

இதைத் தவிர, கீழ்க்கண்டவர்கள் கவிதைகள் படைத்துள்ளார்கள். அழகியசிங்கர், ஜோர்டி டோஸ், எம் ரிஷான் ஷெரீப், பிரபு, சுரேஷ் ராஜகோபால், எஸ் வைத்தியநாதன், பொன் தனசேகரன், விஷ்ணு குமாரபிள்ளை, வி விஸ்வநாத், தேவேன்தர் நைய்தானி. கட்டுரைகளை விட்டல்ராவ், அம்ஷன்குமார், அழகியசிங்கர் முதலியவர்கள் படைத்துள்ளார்கள். இந்த இதழிலிலிருந்து விருட்சம் 80 பக்கங்கள் வரை வரும். விலை ரூ.20 தான்.

முகநூல் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுக்க விரும்புகிறேன்.  விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்பி ஒவ்வொரு இதழையும் சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

இரண்டாவது தகவல் :  

 

2.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படத்தின் நான்குப் பகுதிகளை வெளியிட்டேன்.  இந்த நான்கு பகுதிகளிலும், ஞானக்கூத்தன், கி அ சச்சிதானந்தம், சா கந்தசாமி, அம்ஷன்குமார், திலிப்குமார், தேவிபாரதி, மனுஷ்யபுத்ரன், ஆர் வெங்கடேஷ், பத்ரி போன்றவர்கள் பேசினார்கள்.  உண்மையில் அதற்கு மேலும் அதிகமாகப் பலர் பேசி உள்ளார்கள்.   க்ளிக் ரவி எனக்கு இரண்டு ஒளித் தகடுகளை அளித்திருக்கிறார்.  ஒரு ஒளித்தகடில் உள்ளவற்றைதான் நான் நான்கு பகுதிகளாகக் கொண்டு வந்தேன்.  இன்னொரு ஒளித்தகடில் உள்ள இன்னும் நான்குப் பகுதிகளை நாளையிலிருந்து வெளியிட உள்ளேன்.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான கூட்டம்.

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 4 – கடைசிப் பகுதி

அசோகமித்திரன் கூட்டத்தை சிறப்பாகப் படம் பிடித்தவர் க்ளிக் ரவி. அவரிடம் ஏன் நீங்கள் ஆவணப்படம் எடுக்கக் கூடாது என்று கேட்டதற்கு தன்னால் அது சாத்தியமில்லை என்று கூறி உள்ளார். எனக்கு இது ஆச்சரியம். ஆவணப்படத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத நான், என்னுடைய சோனி காமிராவிலேயே ஆவணப்படம் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கூட்டத்தின் கடைசிப் பகுதி இது. மறைந்த எழுத்தாளர் மவே சிவக்குமார் இதில் பேசி உள்ளார். இந்த ஒளிப்படத்தின் முக்கியத்துவம் எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான். ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் பார்க்கும்படி இல்லாமல் நான்குப் பகுதிகளாகப் பிரிந்து இது காணப்படுகிறது. இது தானகவே அப்படி பதிவாகி உள்ளதாகத் தோன்றுகிறது. க்ளிக் ரவி நன்றாக எடிட் செய்துள்ளார்.
இதேபோல் இன்னொரு ஒளிப்படம் ஆன ந பிச்சமூர்த்தியின் நூறாண்டு விழா நிகழ்ச்சியும் காட்ட முடியுமா என்று பார்க்கிறேன்.

 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 3

 

 

இரண்டு நாட்கள் நான் சென்னையில் இல்லை என்பதால் தொடர்ச்சியாக இந்த ஒளிப்படத்தை வெளியிட முடியவில்லை. நாளையுடன் மொத்தப் படமும் முடிந்துவிடும். இந்த ஆவணம் எல்லோரும் பார்க்க வேண்டுமென்று வெளியிடுகிறேன்.

அபூர்வமாக பல எழுத்தாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். இப்படி அமையும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.

 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 2

 

 

நான்கு பகுதிகாளகப் பிரிக்கப்பட்ட 22.09.2017 அன்று நடந்தக் கூட்டத்தின் இரண்டாம் பகுதியை இப்போது அளிக்கிறேன். மிகக் குறைவான மணித்துளிகளில் எல்லோரும் பேசுவதை ஒளிப்படம் மூலம் கேட்டு ரசிக்கலாம். எதாவது குறை தென்பட்டால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.