திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 3

இது மூன்றாவது உரை. முதல் இரண்டு உரைகளை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த உரையைக் கேட்பவர்கள் திருவசாகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அர்த்தத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 2

இதோ இரண்டாவது ஒளிப்படத்தை இப்போது அளிக்கிறேன். கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் இதைப் பார்த்து ரசிக்கலாம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் இதை இன்னொரு முறை கேட்டு ரசிக்கலாம்.

முடிந்தால் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும்.

திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 1

அழகியசிங்கர்

திருவாசகமும் நானும் என்ற தலைப்பில் நேற்று (21.10.2017) சந்தியா நடராஜன் நிகழ்த்தியக் கூட்டத்தின் முதல் பகுதியை இப்போது அளிக்கிறேன். ஒரு சமயச் சொற்பொழிவு மாதிரி இல்லாமல், திருவாசகம் என்ற பாடல்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவாக இருந்தது.

இதைக் கேட்பவர்கள் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

200 கூட்டங்கள் நடத்தி முடித்திருப்பேன்..

நான் இதுவரை 200 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  1988ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் தொடங்கியதிலிருந்து கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  ஆனால் நான் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தவில்லை.  நான் பதவி உயர்வுப் பெற்று பந்தநல்லூர் என்ற ஊருக்குப் போனபின் கூட்டங்கள் நடத்தவில்லை.  ஏன் நான் திரும்பவும் சென்னை மாற்றல் ஆகி வந்தபிறகு திரும்பவும் கூட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறேன்.  கூட்டம் என்பது ஒரு இனிமையான பொழுதைக் கழிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.  அதற்கான முயற்சியைத்தான் செய்துகொண்டு வருகிறேன்.

கூட்டத்தில் பேசுபவரும், கூட்டத்திற்கு வருகை தருபவர்களையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  நாளை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

நானும் நட்ராஜனனும் தினமும் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருப்போம். ஒரு நாள் அவர் திருவாசகத்தைப் பற்றிப் பேச அது குறித்து ஆழ்ந்தத் தேடல் அவரிடம் உருவாகியது. உடனே நானும் என் புத்தக நூல் நிலையத்திலிருந்து திருவாசகப் புத்தகங்களைத் தேடினேன். சுவாமி சித்பவானந்தர் திருவசாகம் எனக்குக் கிடைத்தது.

திருவாசகத்தை போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார். நடராஜன் போப் எழுதிய ஆங்கில பிரதியைப் படிக்க ஆரம்பித்தார். போப்பின் சிறப்பான மொழி ஆற்றலை அறிந்து நட்ராஜனுக்கு ஆச்சரியம். உண்மையில் பரவசம் அடைந்து விட்டார்.

பக்தி இலக்கியம் நம் வாழ்க்கைக்குத் தேவையா என்ற கேள்வியைக் கேட்டு அவரை மடக்குவேன். அவர் அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னை அடக்கி விடுவார்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் உரையாடலில் பலரும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

அழைப்பிதழைப் பார்க்கவும்

 

 

தொடர்ந்து விருட்சம் கூட்டம் மூன்றாவது சனிக்கிழமை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறேன். கூட்டத்திற்கு வந்திருந்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நன்றி. கூட்டத்தின் முக்கிய நோக்கம். ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறோம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. இதோ அழைப்பிதழ்.

 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30

திருவாசகமும் நானும் 

சிறப்புரை :  சந்தியா நட்ராஜன் 

 

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     (4 லேடீஸ் தேசிகர் தெரு)     ஆறாவது தளம்     மயிலாப்பூர்     சென்னை 600 004(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)      

தேதி 21.10.2017 (சனிக்கிழமை) நேரம் மாலை  6 மணிக்கு

பேசுவோர் குறிப்பு :  தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர் 

அனைவரும் வருக,

அன்புடன்

அழகியசிங்கர்

9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 79

 

அடகுக் கடை

 

பத்மஜா நாராயணன்

 

எல்லா அடகுக் கடையுள்ளும்

எப்போதும் ஒரு பெண்

எதையாவது அடகுவைக்க

காத்திருக்கிறாள்.

அது அவள்

புன்னகையாக நிச்சயம் இருக்காது

விற்றுவிட்ட ஒன்றை

அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்?

சிலநேரம்

அதிகாலையில் அடகுக்கடைக்குச்

செல்பவள்

ஏதோ ஒன்றை திருப்பத்தான்

சென்றிருப்பாள்

அப்போது அவள் தொலைத்த புன்னகையை

அக்கடைக்காரன்

கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான்.

மற்றோர் இரவு

மீண்டும் அங்கு வரும் வரையில்

அவள் அதை சுமந்துகொண்டு

அலைகிறாள்

எது எப்படியிருந்தும்

இரவு நேரங்களில்

அடகுக் கடை ஏகும்

பெண்களின் எண்ணிக்கை

குறையவே போவதில்லை

அவர்களின்

துயரைப் போலவே!

நன்றி : தெரிவை – கவிதைகள் – பத்மஜா நாராயணன் – மொத்தப் பக்கங்கள் : 64 – வெளியீடு : டிசம்பர் 2013 – விலை : ரூ.50 – வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் – 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 – தொலைபேசி : 044 – 65157525

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 7

 

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன். காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன். அப்படிப் பதிவு செய்யும்போது, சத்தமாக கார் ஓடும் சத்தம், ஆட்டோ சத்தம் என்று பல சத்தங்களும் பின் புலமாக பேச்சின் நடுவில் கேட்கும். உருப்படியாக இரண்டு கூட்டங்களின் ஆடியோவை அளித்து உள்ளேன். ஒன்று சுந்தர ராமசாமியின் பேச்சு. இன்னொன்று தமிழவன் கூட்டத்தின் பேச்சு.
நான் நடத்திய கூட்டத்திலேயே சிறந்த முயற்சி அசோகமித்திரனின் இந்த ஒளி-ஒலி படம்தான். சிறப்பாக க்ளிக் ரவி படமெடுத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. 8 பகுதிகளாக உள்ள இதில் 6 பகுதிகளை ஏற்கனவே உங்களுக்கு அளித்து விட்டேன். 7வது பகுதியை இப்போது அளிக்கிறேன். எல்லோரும் பார்த்து ரசிக்ýகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல் ந பிச்சமூர்த்தியின் 100வது ஆண்டு விழா ஒளிப்படமும் உள்ளது. ஆனால் அசோகமித்திரனின் ஒளிப்படம்போல் அவ்வளவாய் சிறப்பாக வராத படம் அது.

 

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா……….

சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி.  நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.  முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு  சினிமாவையோ  நாடகத்தையோ பார்க்க முடியுமாவென்று  என்னைச் சோதித்துக் கொள்கிறேன்.  என்னால் உட்கார முடிகிறது.  ரசிக்கவும் முடிகிறது.  ஆனால் சினிமாவும் நாடகமும் என்னை சோதிக்காமல் இருக்க வேண்டும்.  நாரதகானசபாவில் ஆறாம்தேதி இந்த நாடகத்தைப் பார்த்தேன்.

இந்த நாடகத்தைத் தயாரித்தவர்கள் ஷரத்தா என்ற நாடகக் குழுவினர்.  நாடகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.  கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர்களைக்கொண்டு நாடகத்தை இயக்கி உள்ளார்கள். அரங்கத்தின் ஒரு மூலையில் இசை நிகழ்ச்சி நடப்பதுபோல் ஒரு குழு அமர்ந்து இசைக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜி கிருஷ்ணமுர்த்தி இயக்கி உள்ளார்.

நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று தோன்றியது.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் என்ற நாடகப் பிரதியையும் படித்து விடலாமென்று.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய மொத்த நாடகங்களைக் கொண்ட புத்தகத்தை வைத்திருக்கிறேன்.  கிழக்கு வெளியீடாக அது வந்திருந்தது.  அதைப் போல் ந முத்துசாமியின் நாடகங்களையும் வைத்திருக்கிறேன். இதையும் தவிர தனித்தனியாக கொண்டு வரப்பட்ட நாடகப் புத்தகங்களையும் வைத்திருக்கிறேன்.

இபாவின் நாடகப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு ஆச்சரியம். அவர் ஒரு நாடகம் எப்படி மேடையில் அரங்கேற வேண்டுமென்பதுபோல் எழுதி உள்ளார்.  எப்படி ஒரு கதாபாத்திரம் மேடையில் தோன்றவேண்டும்.  அப்போது உள்ள நேரம்  பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.  மனதளவில் அவர் நாடகம் எழுதும்போதே நாடகத்தை கற்பனையில் அரங்கேற்றம் செய்திருப்பார் என்று தோன்றுகிறது.

க நா சு ஒரு நாடகத்தைப் படிப்பதற்காக எழுத வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.  இக் கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் ஒரு நாடகத்தை மேடையில் கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. 40 லிருந்து 50 பேர்கள் எண்ணிக்கை உள்ள நடிகர்களைக் கொண்டு நாடகம் நடத்துவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.   அதை சாதித்துக் காட்டியிருக்கிறது ஷரத்தா என்ற அமைப்பு.

இந் நாடகம் தொடங்கப்பட்ட நேரம் 6.45 மணி.  ஆனால் நாடகம் முடியும் நேரம் 9.30 மணி.   அவ்வளவு நேரம் பார்வையாளர்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தராஜ÷ற்கு ராமானுஜர் பற்றி தெரியும்.  அதனால் நாடகத்தில் நடக்கக் கூடியவற்றை அவர் முன்னதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். முதன் முதலாக ராமானுஜர் பற்றி தெரியாதவர்கள் இந் நாடகத்தைப் பார்த்தால் அவர்கள் சற்று புரிந்துகொள்ள தடுமாறுவார்கள்.

மேடையில் ஒலிபெருக்கிகள் சரியாக இல்லாததால் நடிக்கர்கள் உச்சரிக்கும் வசனங்கள் சரியாக காதில் விழவில்லை.  அதனால் சிலர் மைக் மைக் என்று கத்தினார்கள்.   நாடகத்தில் அவ்வப்போது பாட்டும் இடம் பெற்றது.  அதனால் இந் நாடகத் தன்மை அந்தக் காலத்தில் நடத்தப்படும் நாடகத்தை ஞாபகமூட்டியது.

இந் நாடகத்தில் ராமானுஜராக நடித்த சுவாமிநாதன் சிறப்பான தமிழ் உச்சரிப்புடன் அந்தப் பாத்திரத்திரத்திற்கு பொருத்தமாக நடித்தி உள்ளார்..  இந்திரா பார்த்தசாரதியின் நாடகத்தைத்தான் அவர்கள் கையாண்டார்கள் என்றாலும், வாழ்க்கை வரலாறு போன்ற இந் நாடகத்தில் சுவாரசியமான தன்மையை இன்னும் கூட்ட வேண்டுமென்று தோன்றியது.

2 மணி நேரத்திற்கு நாடகத்தைக் கொண்டு போகாமல் ஒரு மணி நேரத்திலேயே முடித்திருக்கலாம்.  மைக் மூலம் பல சம்பவங்களை சுருக்கமாகக் கூறிக்கொண்டே நாடகத்தை நடத்திக் கொண்டு போயிருக்கலாம்.

ராமானுஜருக்கும் அவர் மனைவி தஞ்சம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.  இதை மட்டும் நாடகத்தை முழுப் பகுதியாகக் காட்டியிருக்க முடியும்.  அதாவது இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தில் கிளைக் கதைகளாக பல நாடகங்கள் எழுத ஒரு வாய்ப்பை ராமானுஜர் என்ற நாடகப் பிரதி ஏற்படுத்துகிறது.

உண்மையில் ராமானுஜர் தஞ்சம்மாவை அதன் பின்னால் சந்திக்கவில்லை.  இதைத்தான் இந்திரா பார்த்தசாரதியும் எழுதி இருக்கிறார்.  ஆனால் ஷரத்தா நாடகக் குழு தஞ்சம்மா ராமானுஜரை சந்திப்பதுபோல் ஒரு கனவுக் காட்சியை உருவாக்கி உள்ளார்கள். அதனால் ஒரு வரலாற்றை மாற்றி எதாவது கூறும்போது ஜாக்கிரதையாக அதைக் கையாள வேண்டுமென்று தோன்றுகிறது.

நாடகம் பார்க்க சபாவிற்குள் நுழையும்போது ஒரு பிட் நோட்டீஸ் போல ஷரத்தா என்ற நாடகக் குழுவினர் வினியோகம் செய்தனர்.  ஆனால் அதை என்னைப் போன்றவர்களால் படிக்க முடியவில்லை.  யார் ராமானுஜராக நடித்தது?  யார் இந் நாடகத்தை இயக்கியது என்ற விபரமெல்லாம் படிக்க முடியவில்லை.

எந்தவித பிரமிப்பையும் ஏற்படுத்தாமல் ஒரு நாடகத்தை ஒரு மணி நேரத்தில் நடத்த முடியுமா முடியாதா..அல்லது நாடகப் புத்தகங்களை மட்டும் வாங்கிப் படித்துவிட்டுப் பேசாமல் இருக்கலாமா….