தெரியாமல் திருட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்

எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது. பெரிய படம். அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன். நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று. இரண்டு பிரச்சினைகளில் நான் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன். ஒன்று புத்தகங்களை வாங்காமல் இருக்க என்னால் முடியவில்லை. இரண்டாவது பிரச்சினை அப்படி வாங்குகிறப் புத்தகங்களைப் படிக்கவே முடிவதில்லை.

எங்கள் வீட்டில் உள்ளவர்கள் வன்முறைக்கு ஆளாகி விடுவார்கள் என்று பயப்பட வேண்டி உள்ளது. நான் வாங்கிக் குவிக்கும் புத்தகங்களைப் பார்த்து ஒரு பெரிய பிரளயமே வீட்டில் வெடிக்கப்போவதாக நினைக்கிறேன். அதனால்தான் பஞ்சமுக ஆஞ்சிநேயரை வணங்குகிறேன்.

எங்கள் மாம்பல பகுதியில் பலர் திடீர் திடீரென்று வீடுகளைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிற வீட்டைவிட்டு சின்ன வீட்டிற்குப் போய்விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் புத்தகம் படிப்பவர் ஒருவர் நோய்வாய்பட்டு இல்லாமல் போகும் சூழ்நிலையில் அவர் வைத்துவிட்டுப் போன புத்தகங்களை ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு பழையப் பேப்பர்களை வாங்குபவர்கள் உதவி செய்கிறார்கள்.

ஒரு கிலோ புத்தகத்திற்கு ரூ.7 கடைக்காரர்கள் கொடுக்கிறார்கள். புத்தகங்களை வைத்துக்கொண்டு தடுமாறும் மேலே குறிப்பிட்டவர்கள் ஏதோ கிடைக்கட்டும் என்று கேவலமான விவைக்கு அதிகமாகப் பணம் செலவழித்து வாங்கியப் புத்தகங்களை கொடுத்து விடுகிறார்கள். உண்மையில் பாதுகாக்கப் பட வேண்டிய புத்தகங்களையும் கொடுத்து விடுகிறார்கள்.

இதைத் தடுக்க நினைத்து நான் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன். என் விளம்பரத்தைப் படித்து யாரும் பெரிய அளவில் புத்தகங்களை விற்க வரவில்லை. என்னிடம் வந்திருந்தால் ஒரு நியாயமான விலைக்கு அந்தப் புத்தகங்களை வாங்கியிருப்பேன். அதனால் வேற வழி இல்லாமல் நானும் பேப்பர் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைச் சேகரிக்கும்படி ஆகி விடுகிறது.

அவர்கள் நம்மிடம் வாங்கும் புத்தகங்கள் கிலோ ரூ.7 ஆனால் அப் புத்தகங்களை நம்மிடம் விற்கும்போது கிலோ ரூ.100. இன்னும் சிலர் புத்தகங்களைப் பார்த்து ஒரு புத்தகத்திற்குப் பாதி விலை கேட்பார்கள். பின் இன்னும் விஷயம் தெரிந்துகொண்டு அப் புத்தகம் இப்போது அச்சடித்திருந்தால் என்ன விலை ஆகுமோ அந்த விலையில் பாதி பணம் கேட்பார்கள். மிரட்டுவார்கள். வாங்காவிட்டால் போ என்பார்கள். அப்படித்தான் நான் கோவிந்தன் தெருவில் உள்ள ஒரு கடைக்குச் சென்று புத்தகம் வாங்கப் பேரம் பேசினேன். அந்தக் கடைக்காரன் தாறுமாறாக விலை சொன்னான். நானும் விடவில்லை. üüநீங்கள் கிலோ ஏழு ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு, அந்நியாயமாய் விலை சொல்கிறீர்களே,ýý என்றேன். வந்தது வினை. அடுத்த முறை அந்தக் கடைக்காரனை நான் திரும்பவும் பார்த்தபோது, புத்தகங்கள் இல்லை போய்வா என்று துரத்திவிட்டான். நான் அந்தக் கடைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு இளைஞன் நிறையாப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கடையில் போட வந்தான். நான் அவனைத் துரத்திவிட்டேன். üüஏன் புத்தகங்களைப் போடுகிறீர்கள்? குறைவாகப் பணம் கொடுப்பார்கள்,ýý என்றேன். புத்தகத்தின் அருமை தெரிந்த என் மாதிரி ஒருவனை அவர்களுக்குத் தெரியவில்லையே என்று கவலைப்பட்டேன்.

உங்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றும். üநீங்கள் எதுமாதிரியான புத்தகங்களை வாங்குகிறீர்கள்..ý என்று. படிக்க உகந்தப் புத்தகங்களைத்தான் வாங்குகிறேன். சிலசமயம் எதிர்பாராமல் நல்ல புத்தகங்களும் கிடைத்து விடுகின்றன. அதுமாதிரி புத்தகங்களை புதையல் மாதிரி எடுத்து வைத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு உண்மையைச் சொல்கிறேன். என்னால் எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை.

அது என் குற்றம்தான். புத்தகங்கள் மீது உள்ள குற்றமல்ல. என்னுடைய இந்தப் பலவீனத்தை வீட்டுள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் மண்டிப் போட்டுக்கொண்டு பஞ்சமுக ஆஞ்சிநேயர் முன் அமர்ந்திருந்து கண்மூடி வேண்டிக்கொண்டேன்.

“பேப்பர் கடைகள், பிளாட்பாரங்களில் காணும் புத்தகங்களை வாங்காமல் இருக்க அருள் புரியுங்கள்,” என்று வேண்டிக்கொண்டேன்.

ஆஞ்சிநேயர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.

“என்ன நான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்..பதிலே காணோமே?” என்றேன் ஆஞ்சிநேயரைப் பார்த்து.

அவர் பதில் பேசாமல் புன்னகைப் புரிவதுபோல் தோன்றியது.

பக்கத்தில் என் மனைவி உட்கார்ந்திருந்தாள். அவள் ஆஞ்சிநேயரிடம், “இவர் புத்தகங்களே வாங்கவும் கூடாது, படிக்கவும் கூடாது,” என்று வேண்டிக்கொண்டாள்.

நான் உடனே, “இவள் டிவியில் அழுகிற சீரியல்களைப் பார்க்கக் கூடாது,” என்று வேண்டிக்கொண்டேன்.

ஆஞ்சிநேயர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் லேசாக சிரிப்பதுபோல் தோன்றியது.

“ஆஞ்சிநேயரே நீங்கள் பேச மாட்டீரா?”

கொஞ்ச நேரம் கழித்து ஆஞ்சிநேயர் குரல் கொடுத்தார்.

“நீ புத்தகம் வாங்கு,”

என்னால் நம்ப முடியாமல், “எங்கே வாங்குவது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“எந்த இடத்தில் புத்தகம் உன் கண்ணில் படுகிறதோ அங்கேல்லாம் வாங்கு..”
“நிஜமாகவா சொல்கிறீர்..என் மனைவி காதில் விழப்போகிறது..”

“இன்று புத்தகம் வாங்குபவரும் இல்லை, படிப்பவரும் இல்லை. ஆனால் நீ புத்தகம் வாங்குவதற்கு துடியாய்த் துடிக்கிறாய். அதனால் என் அருள் எப்போதும் உனக்கு உண்டு, நீ புத்தகம் வாங்கு.”

“ஆனால் வாங்குகிற புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே?”

“நீ படிக்காமல் இல்லை. அதை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்த வேண்டும். நேற்று பேப்பர் கடையில் ‘தம்மபதம்; என்ற புத்தகம் வாங்கினேயே அது அற்புதமான புத்தகம்.

“நீங்கள் வேற..அந்தப் புத்தகக் கடையில் மூன்றரை கிலோ புத்தகங்கள் வாங்கினேன். அப் புத்தகங்களின் ஒன்றுதான் தம்மபதம். ஆனால் மற்றப் புத்தகங்கள் திருட்டுப் புத்தகங்கள்,”

“எப்படி சொல்கிறாய்?”

“எல்லாப் புத்தகங்களிலும் நூல் நிலைய முத்திரை இருக்கிறது. யாரோ நூல் நிலையத்திலிருந்து திருடிய புத்தகங்களை கடையில் போட்டுள்ளார்கள்.”

“உருப்படுவார்களா அவர்கள். படிப்பதற்காக நூல் நிலையத்தில் உள்ள புத்தகங்களையா திருடுவார்கள்.. ஒரு புத்தகம் எத்தனைப் பேர்களிடம் போய் என்னன்ன மாற்றங்களை உண்டாக்கும்..அந்த அறிவு செல்வத்தை பேப்பர் கடையில் போட்டு கேவலாமாக மாறி உள்ளார்களே..”

“அந்த அரசாங்க லேபிள்களைப் பார்க்கும்போது நான்தான் புத்தகங்களைத் திருடி விட்டதுபோல் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது..”

“நீ அதுமாதிரியான புத்தகங்களை வாங்காதே..அப்படியே வாங்கினாலும் திரும்பவும் நூல்நிலையத்தில் சேர்ப்பித்து விடு..”

“என்னை திருடனென்று நினைத்து விடுவார்கள்..”

“அப்படி நினைக்க மாட்டார்கள். ”

“சரி, நான் புத்தகங்கள் அதிகம் படிக்க உங்கள் அருள் வேண்டும். இன்னொன்றும் சொல்கிறேன். நான் படிக்கிற புத்தகங்கள் ஞாபகத்தில் கொஞ்ச காலமாவது இருக்க வேண்டும,”

“புத்தகம் படித்தவுடன் அதைப் பற்றி குறிப்பெடுத்து விட்டு எழுதாமல் இருக்காதே…புத்தகம் படிக்கும் முன் உன் குருநாதரை நினைக்காமல் இருக்காதே,”

“குரு நாதரா..யாரது?”

“க நா சு தான் உன் குருநாதர். அவரை நினைத்துப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பி…வேகமாக எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விடுவாய்..”
கையில் தம்மபதம் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு நான் ஆஞ்சநேயரைப் பார்த்துச் சிரித்தேன்.

எம் ஜி சுரேஷ் சில நினைவுகள்…

ஒரு எழுத்தாளரைப் பற்றி யாராவது எதாவது ஒன்று சொல்ல வேண்டுமென்றால், அவர் எதாவது பரிசு பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணம் அடைந்திருக்க வேண்டும். சமீபத்தில் பரிசுப்பெற்ற சிறுகதைத் தொகுதி ஒன்று 5000 பிரதிகள்மேல் விற்றதற்குக். காரணம், அவர் சாகித்திய அக்காதெமி விருதையும், விஷ்ணுபுர விருதையும் ஒரு சேரப் பெற்றதால்.
வித்தியாசமான பல புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்த எம் ஜி சுரேஷ் என்ற எழுத்தாளர் சிங்கப்பூரில் அவர் பெண் வீட்டில் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டுமென்ற தணியாத தாகம் உண்டு. அவர் கடைசியாக எழுதிய நாவல் தந்திர வாக்கியம். அ சஞயஅக ஐச ஊதஅஎஙஉசபந என்று இந் நாவலைப் பற்றி சுரேஷ் எழுதியிருப்பார். அதேபோல் 37 என்ற நாவலில் பல குரல்களில் ஒரு அறிவியல் புனைகதை என்று எழுதியிருப்பார். சிலந்தி என்ற நாவலை ஒரு துப்பறியும் கதையாக எழுதியிருப்பார். கனவுலக வாசியின் ஒரு நனவுக் குறிப்புகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வந்திருக்கிறார்.
சுரேஷ் ஒரு வித்தியாசமான எழுத்தாளர். சாதாரணமாக யோசிக்காமல் அசாதாரணமாக யோசித்து கதை எழுதுபவர். கோட்பாடு ரீதியாக சிந்திக்கவும் எழுதவும் தெரிந்தவர்.
இவருடைய பின் நவினத்துவம் என்றால் என்ன? என்ற புத்தகம் முக்கியமானது.
கோட்டபாடு ரீதியாக சிந்தித்த சுரேஷ், தனியாகத்தான் இயங்கி உள்ளார். அவர் யாருடனும் கூட்டு சேரவில்லை என்றே தோன்றுகிறது. அவர் எழுத்துக்களை திரும்பவும் எடுத்து தூசித் தட்டும்போதுதான் ஒரு அற்புதமான மனிதரை இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.
எப்போதும் தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொள்ளத் தெரியாதவர் சுரேஷ். ஆனால் அவர் சாதனைகளை நாம் உற்று நோக்கினால், பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் அவரிடம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
அவர் கடைசியாக எழுதிய தந்திர வாக்கியம் என்ற நாவலைக் குறித்துப் பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. வெகு ஆண்டு கழித்து அப்போதுதான் ‘சுரேஷை திரும்பவும் சந்திக்கிறேன். அதே சிரித்த முகம், மெலிதான பேச்சு.’ யாரையும் அவர் கோபப்படும்படி பேசி நான் பார்த்ததில்லை. அவர் நாவலைக் குறித்து பேசியதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை.
கோட்பாடு ரீதியாக சிந்திக்கத் தெரிந்தவர் என்றாலும் யாருடனும் அவர் ஒன்ற மாட்டார். தன் போக்கிலேயே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போவார். பின் நவீநனத்துவம் என்றால் என்ன என்பது அவருடைய முக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் அமைப்பியல் என்றால் என்ன, பின் அமைப்பியல் என்றால் என்ன என்பதையெல்லாம் சுலபமாகப் படிப்பவருக்குப் புரியும்படி விளக்கிக் கொண்டு போவார். யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பலவற்றைப் புரிந்து கொண்டுவிட முடியும்.
கோட்பாடு ரீதியாக சிந்திப்பவர்கள் எல்லோரும் படிப்பவர்களை ஒரு குழப்பு குழப்புவார்கள். ஆனால் சுரேஷ் வேற விதம். அவர் அதிகம் படித்தவர். ‘அடலாண்டிஸ் மனிதன்,’ என்ற நாவல் மூலமாகத்தான் அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.
எம் ஜி சுரேஷ் அவருடைய கட்டுரைத் தொகுப்பில் ‘அடலாண்டிஸ் மனிதன்’ என்ற நாவலை எழுத என்ன முயற்சி செய்துள்ளார் என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்:
“மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டுமென்றால், எளிமையான நடையில் சரளமாக எழுதப்பட வேண்டும் என்று தோன்றியது. எனவே, எளிய நடையில் எழுதினேன். அப்போதுதான் வாசகனால் சலிப்படையாமல் வாசிக்க முடியும். ஆல்பெர் காம்யூ வெகுஜனப் பத்திரிகைக்கான எளிய நடையில்தான் அந்நியன் போன்ற நாவல்களை எழுதினார் என்று பிரெஞ்ச் அறிந்த நண்பர்கள் முலம் அறிந்திருக்கிறேன். அந்த நடையில் எழுதியே அவரால் சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய அளவுக்கு உலகத்தரமான இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிந்தது. ஆதலால் இந்த எளிய நடை இந் நாவலின் இலக்கிய மதிப்பை நீர்த்துப் போகச் செய்யாது என்று நம்பினேன்.” என்று விவரித்துக் கொண்டு போகிறார்.
உண்மையில் ‘அடலாண்டிஸ் மனிதன்’ நாவல் வந்தபோது சில மாதங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
இந்தக் கட்டுரையை எழுதும்போது திரும்பவும் இந்த நாவலை நான் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தன்னுடைய கட்டுரை ஒன்றில் நான் சொன்ன விஷயத்தை சுரேஷ் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
இந் நாவலை நகுலனின் நாவலோடு ஒப்பிடலாம் என்று நான் நவீன விருட்சத்தில் எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் பற்றி குறிப்பிடும்போது அவர் பல முயற்சிகளை தன் எழுத்தின் முலம் கொண்டு வந்துள்ளார்.
‘அரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான ‘போர்ஹேவும், கோஸின்ஸ்கியும்’ என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள். மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னகை அரும்புகிறது.
ஆனால், என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கிறது.. என்கிறார் பரவசத்துடன்.’
‘தந்திர வாக்கியம்’ என்ற நாவலைப் படித்துவிட்டு நான் சில குறிப்புகளை எழுதியிருக்கிறேன். அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘தந்திர வாக்கியம்’ என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான்.
இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். ஒன்று தற்கால வாழ்க்கை முறை. இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை. ஐடி துறையில் படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார். நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர். அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.
இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம். இது ஒரு நிகழ்ச்சி. மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ். இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இந் நாவலைப் படிக்கக் கொடுத்து என்னை மதித்து என் அபிப்பிராயங்களைக் கேட்ட சுரேஷ் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள என் மனது தயங்குகிறது. ஆனால் அவர் உண்மையில் அவர் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
(மலைகள்.காம்மிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது)

மறந்துபோன பக்கங்கள்

இலக்கிய அனுபவம்

தி.சோ. வேணுகோபாலன்

சொல்வ திரண்டு வகை;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்;
கரகம் அல்லது
கண்கட்டு :
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கவிஞன்!
முழிப்வன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!

கோடை வயல் புத்தகத்திலிருந்து எடுத்தது.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 5

1. நீங்கள் யார்?

ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார். என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம். நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்?

2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன்.

3. யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும்.

யாருக்கு என்று தெரியாது. ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள்.

யாரெல்லாம் என்பது தெரியாது. ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான்.

5. துயரத்தின் உச்சம் என்ன?

இன்னொரு துயரம்.

6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே?

ஆமாம். கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை. தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை. டைனிங் டேபில் வந்தபிறகு தரையில் அமர்ந்து சாப்பிடுவதுமில்லை. அதேபோல் ரொம்ப நேரம் நிற்பதுமில்லை. ஒரு முயற்சி செய்யலாமென்று 16.10.2017 அன்று ஒரு மணி நேரம் நின்றுகொண்டு இரண்டு கதைகளைப் படித்தேன். ஒரு கதை அசோகமித்திரனின் காந்தி கதை. இன்னொன்று போர்ஹஸ்ஸின் ‘கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்.’ பிரம்மராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது நல்ல அனுபவமாக இருந்தது. அதிகமாக இதுமாதிரி கதைகளைப் படிக்க உள்ளேன்.

7. சமீபத்தில் வந்துள்ள உங்கள் புத்தகத்தின் பெயர் என்ன?

திறந்த புத்தகம். 50 கட்டுரைகள் கொண்ட 203 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

8. எத்தனைப் பிரதிகள் அச்சடித்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை.

நீங்கள் கேட்டாலும் நான் சொல்லப் போவதில்லை.

9. படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஏற்றுக்கொள்கிறேன்.

10. 80 வயதிலும் தனியாக இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்காக வருந்துகிறேன். அவரைப் பார்க்கும்போது தடுமாற்றம் நிழல் போல் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

11. பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற சுரேஷ் புத்தகத்தில் எதை நீங்கள் ரசித்தீர்கள்?

எழுதி முடித்தவுடன் எழுத்தாளனும் அவனுடைய எழுத்துக்கு ஒரு வாசகன்தான் என்ற கருத்து பிடித்திருந்தது.

12. இப்போதெல்லாம் நீங்கள் சினிமா பார்ப்பதில்லையா?

பார்ப்பதில்லை. பார்க்கும்படியாகவும் இல்லை. ஒரு சினிமாவை தியேட்டரில் அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கிப் பார்ப்பதை விரும்பவில்லை. அதற்குப் பதில் ஒரு சிறுகதையை எடுத்துப் படிக்கலாம்.

13. போதும் உங்கள் சிறுகதை மோகம்..

சரி, ஒரு கவிதையைப் படிக்கலாம்..கட்டுரையைப் படிக்கலாம்..நாவலைப் படிக்கலாம்.

14. உங்கள் கையில் புத்தகம் இல்லை. ஒன்றுமில்லை. பொழுதை எப்படிப் போக்குவீர்கள்?

சும்மாவே உட்கார்ந்து இருப்பேன். அதைப் போல அற்புதமான விஷயம் ஒன்றும் இல்லை.

15. எழுத்துப் பிடிக்குமா எழுத்தாளர்களைப் பிடிக்குமா?

எழுத்துதான் பிடிக்கும்..

நீங்களும் படிக்கலாம் – 32

பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற பெயரில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் எம் ஜி சுரேஷ் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அப் புத்தகத்தை எல்லோரும் வாங்கி வாசித்து அறிவை விருத்திச் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதுவரை படித்த இதுமாதிரியான கோட்பாடு ரீதியாக எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக எழுதப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் இது ஒரு பாடப் புத்தகம் என்று கூட சொல்லலாம். தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இதுமாதிரியான புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றும் நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து எம் ஜி சுரேஷ் பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறார்.
போமோ என்றால் என்ன என்று சுரேஷ் முதலில் ஆரம்பிக்கிறார். போமோ என்கிற இந்த இரண்டெழுத்துப் பதம் போஸ்ட் மாடர்னிசத்தைக் குறிக்கிறது. போஸ்ட் மாடர்னிசம் என்று அழைக்கப்படும் பின் நவீன்த்துவத்துக்கு இப்போது வயது முப்த்தியெட்டு ஆகிறது என்கிறார்.
நான் உடனே உங்களை ‘அதிகாரமும் பின் நவீனத்துவமும்’ என்ற ஒன்பதாவது அத்தியாயத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறேன். அதில் சுரேஷ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“பின் நவீனத்துவத்துக்கென்று தனித்த கண்டுபிடிப்பாளர் என்று யாரும் கிடையாது. ‘ழாக் தெரிதா’, ‘மிஷல் ஃபூக்கோ’, ‘ரொலான் பார்த்’, ‘கில்ஸ் தெலூஸ்’, ‘இஹாப் ஹஸன்’, ‘ழீன் பொத்ரியார்’, ‘ழாக் லக்கான்’ போன்ற ஒரு குழு பின் நவீனத்துவச் சிந்தனையை வடிவமைத்தது.”
பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : ‘அதிகாரம் என்பது அறிவு என்ற அமைப்பின் செயல்பாடுகளால் வருவது. அது சமூகரீதியாக முறைமைப் படுத்தப்படும்போது சட்டமாகவும், சட்டங்களை அமலாக்கும் நிறுவனங்களாகவும் மாறிவிடுகிறது.’
‘அதிகாரங்கள் பல இருக்கின்றன. அதைப்போலவே வரலாறுகளும் பல இருக்கின்றன. ஒற்றையான ஓர் அதிகாரம் என்பது எப்படி இல்லையோ அதேமாதிரி ஒரு வரலாறு என்பதும் இல்லை’ என்பது பூக்கோவின் கருத்து.
இன்னொரு இடத்தில் பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : நவீனத்துவ அறிவு மனப்பிறழ்வுற்றவர்களையும், குற்றவாளிகளையும், நோயாளிகளையும் தகுதியற்றவார்களாக்கி விலக்கி ஒதுக்கி வைக்கிறது.
‘துண்டாடப்பட்ட அதிகாரங்களை, ‘அதிகாரத்தின் நுண் அரசியல்’ என்று குறிப்பிடுகிறார்.
நுண் அலகுகளாக அதிகாரம் எங்கெல்லாம் நிலவுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்களும் நிலவுகின்றன.
பெண்கள், வெள்ளையர் அல்லாதவர், சிறைக்கைதிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் போன்றோரை மற்றமையாக வைத்துப் பார்க்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சுரேஷ் அப்படியே மொழிபெயர்த்துக் கூறாமல் நம்மிடையே நிலவும் புராணங்களையும் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
‘ரொலாண் பார்த்’ சொல்கிற மாதிரி, ‘நாம் ஒரே நேரத்தில் கதாசிரியனாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கிறோம்,’ என்கிறார்.
இதில் நம் நாட்டு ராமாயணத்தை சுரேஷ் உதாரணம் காட்டுகிறார். ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரை அதில் ஒரு பாத்திரமாக லவ-குசர்களுக்கு ஒரு குருகுலத்தில் பாடம் சொல்லித் தருபவராக வருகிறார்.
‘ஃபூக்கோவை’ப் பொறுத்தவரையில் சுயமான முழுமையான மனிதன் என்று யாரும் இல்லை.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
மூன்று மரணங்கள் என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி குறிப்பிடுகிறார்.
1. நவீனத்துவத்தின் மரணம்
2. உண்மையின் மரணம்
3. செக்ஸின் மரணம்
பின் நவீன யுகத்தில் உண்மை இறந்து போய்விட்டது. இங்கு எதுவுமே நிஜமில்லை. டிவி, கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற எல்லாமே நகல்களின் பிம்பங்களைப் பொழிந்தபடி இருக்கின்றன. நகல் உண்மைகளின் (ஹைபர் ரியல்) தாக்குதல்களுக்கு எதிர்ப்பின்றி நாம் ஆளாகிக்கொண்டிருக்கிறோம். நகல்தான் நமது காலத்தின் உண்மைகள் என்று அறிவித்த ‘ழீன் பொத்ரியார்’ ஒரு பிரெஞ்சுக்காரர்.
இப் புத்தகத்தில் ‘மொழியும் பின் நவீனத்துவமும்’ என்ற அத்தியாயம் கீழ் ‘ங’ என்ற எழுத்தை வைத்து ஒரு கண்டிபிடிப்பை செய்திருக்கிறார்.
‘ங’ – ப்போல் வளை’ என்கிறார் ஒளவையார் ஆத்திச்சுவடியில். இதில் ஒளவையாரின் கோணம் என்ன என்று பார்க்கும்போது,
‘தமிழ் மொழியிலே ‘ங’ என்ற எழுத்துதான் அதீத வளைவுகொண்டது. ஓர் எழுத்தை இதைவிட அதிகம் நெளிக்க முடியாது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ‘ங’ என்ற எழுத்தைப்போல் வளைந்து கொடுத்தால்தான் வெற்றியடைய முடியும், என்று ஒளவையார் சொன்னதாக ஒரு கோடி அர்த்தத்தை இதில் நாம் பெறுகிறோம். யோசித்துப் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் தெரிதாவுக்கு இன்னொரு அர்த்தம் கிடைக்கிறது.
ஒரு மனிதன் ‘ங’ என்ற எழுத்தைப்போல் அஷ்டகோணலாக வளைந்து கொடுப்பது மிக மோசமான செயலாகும். அப்படிப்பட்ட அவலநிலைக்குள்ளானவன் தன்மானம் இல்லாதவன்; சுயமரியாதை கெட்டவன் எனலாம். அப்படிப்பட்ட மனிதன் ஒருபோதும் முன் மாதிரியான மனிதனாக இருக்க முடியாது. மனிதன் நாணலைப்போல் வளைந்து கொடுக்கக் கூடாது. கொடிமரத்தைப் போல உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மனிதர்கள் இருக்கட்டும். இப்படி வளைந்துகொடுக்கும் இந்த ‘ங’ என்ற எழுத்துதான் தமிழ்மொழியில் இருந்துகொண்டு என்னத்தைச் சாதித்தது? ‘ங’ ப்போல் வளை என்ற இந்த ஒரு பழமொழியைத் தவிர வேறு எங்கே உபயோகப்படுத்தப்படுகிறது, என்று யோசித்துப் பார்க்கும்போது மருந்துபோல் சொல்லப்பட்ட ஒரு கருத்து விஷமாக மாறுவதை உணர முடிகிறது அல்லவா?
தெரிதாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை அமெரிக்காவை அள்ளிக்கொண்டு போயிற்று.
19 அத்தியாயங்கள் கொண்ட இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து நவீன அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பின்நவீனத்துவம் என்றால் என்ன? – எம்.ஜி சுரேஷ் – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்புர் சாலை, புத்தாநத்தம் 621310 – தொலைபேசி : 04332 273444 – விலை : ரூ.100

கவிதையைப் பற்றிய சில சிந்தனைகள்…1

1. எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது?
மனதால்தான் புரிந்துகொள்ள முடியும்

2. ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித் தெரிந்து கொள்வது?
கவிதையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி. கவிதையைப் படிக்கப் படிக்க மனம் பக்குவம் அடையும். மனம் பக்கவமடைந்தால் கவிதையும் புரியும்.

3. ஒரு கவிதை சரியில்லை அல்லது சரி என்று எளிதாக சொல்லிவிடலாமா?
சொல்லி விடலாம்.

4. ஆனால் சரியில்லாத கவிதை என்று எதுவுமில்லை இல்லையா?
சரியில்லாத கவிதை என்று எதுவும் இல்லை. படிக்கிற மனதிற்கு கவிதை எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதுதான் முக்கியம்.

5. கவிதை நூலிற்குப் பரிசு கொடுப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரே ஒரு புத்தகத்திற்குத்தான் பரிசு கொடுக்க முடியும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற புத்தகம் எந்த அளவிற்கு மற்ற கவிதைப் புத்தகங்களை விட சிறப்பாக இருக்க முடியும் என்று கண்டுபிடிப்பது சிரமம்.

6. ஏன் கவிதைப் புத்தகங்கள் விற்க முடியவில்லை?
ஏகப்பட்ட கவிதை புத்தகங்கள் வெளிவருவதால், எந்தப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

7. கவிதையைப் படிப்பதால் படிப்பவருக்கு என்ன கிடைக்கிறது
கவிதைப் படிப்பதால் மனம் தெளிவடையும். சஞ்சலம் நிறைந்த மனநிலையில் கவிதையை வாசித்தால், சஞ்சலம் நீங்கி குதூகலம் ஏற்படும்.

8. பலர் கவிதைகளில் சோகம் அதிகமாக இருக்கிறதே?
சோகத்திலிருந்து விடுபட சோகக் கவிதைகள் அவர்களுக்குப் பயன்படும். ஆனால் படிப்பவர்களுக்கு அந்தச் சோகக் கவிதைகள் மேலும் சோகத்தை ஏற்படுத்தும்.

9. கவிதைக்குள் இருப்பவன் யார்? கவிதையிலிருந்து வெளிவருபவன் யார்?
கவிதைக்குள் இருப்பவன் உன்னதமான மனிதன். கவிதைக்கு வெளியில் இருப்பவன் சாதாரண அற்ப மனிதன்.

10. நீங்கள் தேடுவது கவிதை மூலம் கிடைக்குமா?
நிச்சயமாகக் கிடைக்கும்.

11. கவிதையின் லட்சணம் என்ன?
உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல்தான் கவிதையின் லட்சணமும் உங்களுக்குத் தெரியும்.

12. கவிதையைப் படித்த உடன் என்ன தோன்றுகிறது?
இன்னொரு முறை படிக்க வேண்டுமென்று தோன்ற வேண்டும்.

13. இல்லாவிட்டால்
இன்னொரு கவிதையைப் படித்துப் பார்க்க வேண்டும்.

14. ஒரு முறை கவிதைப் புத்தகம் முழுவதும் படித்தப்பின் என்ன செய்வது?
தூரப் போட்டு விடாதீர்கள். இன்னொரு முறை படிக்க வேண்டுமென்று தோன்றும்.

15. நீங்கள் ரசித்தக் கவிதையை சொல்ல முடியுமா?
ஒன்றல்ல பல சொல்ல முடியும். ஆனால் இப்போது சாம்பிளுக்கு ஒன்று தருகிறேன்.
வெளிக் கதவு திறந்து

வெளிக் கதவு திறந்து
உள்கதவைத் திறந்து
அறைக்கதவைத் திறந்து
பீரோ திறந்து
ரசகியச் சிற்றறை திறந்து
பெட்டியை எடுத்தேன்
மணம் வீசிக்கொண்டிருக்கிறது
கருநாவல் பழம் ஒன்று
பிசுபிசுவென்று.
கபாடபுரத்தின்
சுடுகாட்டு மரத்தில்
பறிக்கையில்
ஒட்டிய
தூசு தும்பட்டையுடன்
– தேவதச்சன்
(மர்ம நபர் புத்தகத்திலிருந்து)

16. சரி இத்துடன் போதுமா?
போதும். ஆனால் கவிதையைப் பற்றிய சிந்தனையைத் திரும்பவும் தொடர்வோம்.

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாக தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியை குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.
இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம். ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு அசைவ ஹோட்டலுக்கு வருகிறார். காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார். அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார். பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார்.

கதை ஆரம்பத்தில் இப்படி ஆரம்பிக்கிறது. ‘அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று.’
இப்படி ஆரம்பிக்கிற இக் கதை காப்பியைப் பற்றி முதலில் மட்டும் சொல்லிவிட்டு கதை நடுவில், ‘ஒரு இடத்தில் காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே ஏன் ஈயை விரட்டினோம்ý என்று அவனுக்குத் தோன்றியது. பின் கதை முடிவில், அவன் எதிரே üஅரைக்கோப்பை அளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபிமீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவு மூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது..’ என்று முடிக்கிறார்.
இப்படி இந்தக் கதையைப் படிக்கும்போது காப்பியைப் பற்றிய தனிக் கதையாகத் தோன்றும்.
ஆனால் வேறு விதமாகப் படிக்கும்போது இரு நண்பர்களைப் பற்றிய கதையாகக் கூட இது இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன் அறிமுகமான ஒரு நண்பன்.
இப்படிப்பபட்ட நண்பனைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் ;

‘அவனுக்கு அவனைப் பற்றிய பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில் கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப்படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன். எப்பேர்ப்பட்ட நண்பன் என்கிறான் இன்னொரு நண்பன்.’ இந்த இடத்தில் இக் கதை இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாக நமக்குத் தெரிய வருகிறது.
அதே சமயத்தில் காந்தியைப்பற்றிய கதையாகக் கூட இதை அடையாளப்படுத்தப்படலாம். இரண்டு நண்பர்கள் காந்தியைப் பற்றி முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காந்தியைப் பற்றி தீவிரமாகப் பேசுகிறார்கள். இந்த இடத்தில் இக் கதையை காந்தியைப் பற்றிய கதையாக நாம் அடையாளப் படுத்தி விடலாம்.
ஒரே சமயத்தில் மூன்று விதமாக ஒரு கதையைப் பார்க்க முடியும் என்பதை இக் காந்தி கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

உண்மையில் எளிதான வாசகனால் இக் கதையை அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொண்டு விட முடியுமா என்பது தெரியவில்லை.
இப்படி எழுதப்படுகிற கதையில் பளிச் பளிச்சென்று வரிகள் அங்கங்கே தட்டு தெறித்துவிழுகின்றன.
‘சிம்னி விளக்கு ஒளி விழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதைபோல – அப்படித் தேவதைகள் இருக்குமானால் – பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுபட்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக் கற்பனையை, உள் மன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது’ என்கிறார். இப்படி அபாரமான வர்ணனையைப் படிக்கும்போது அசோகமித்திரனா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.
காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது கதை இப்படி நகர்கிறது. ‘அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தன்ககு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப்படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி. எப்பேர்பட்ட மனிதர். வழக்கம்போல் அசோகமித்திரன் அதே கிண்டல் தொனியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இப்படி ஆரம்பிக்கிற கதையில் காந்தியைப் பற்றி இரு நண்பர்களும் காரசாரமாகக் கருத்து வேற்றுமை வெளிப்படுவதுபோல் பேசுகிறார்கள். காந்தி ஒரு மகத்தான மனிதர் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொரு நண்பர் அவருக்கு எதிராக வாதிடுகிறார். இறுதியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதில்லை.

‘ஆர் பி டட்’ எழுதிய ‘இன்றைய இந்தியா’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எதிர்வாதம் செய்கிறான் ஒரு நண்பன். இங்கிருந்து இக் கதை இன்னொரு பிரிவுக்குப் போய் விடுகிறது. அதாவது காந்தியால் நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது. அதாவது 4 மாதங்களாக எல்லாரையும் விட நெருக்கமாகப் பழகிய ஒரு நண்பர் பிரிந்து விட்டாலும் துவேஷத்துடன் இன்னொரு நண்பரைப் பற்றி பொய் வதந்திகளை அவிழ்த்து விடுகிறார்.
கீழ் கண்டவாறு இக் கதையை விவரித்துக் கொண்டு போகலாம்:

ஒரு அசைவ ஹோட்டலில் காப்பி சாப்பிட வருகிற ஒருவர் எதிரில் இடம் பெற்றுள்ள காந்தி படத்தைப் பார்க்கிறார். உடனே அவர் நினைவு காந்தியைப் பற்றி அவரும் அவர் நண்பரும் போட்டுக்கொண்ட சண்டை ஞாபகத்திற்கு வருகிறது. அதனால் அவர்களுக்குள் இருந்த நெருக்கமான நட்பு உடைந்து போய்விடுகிறது. துவேஷத்தோடு தன்னைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான் என்கிறார் ஹோட்டலில் காபி சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் நண்பர்.

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான் என்று சொல்லிக்கொண்டே காந்தியுடன் இதைத் தொடர்புப் படுத்திக்கொண்டு போகிறார்.
அதனால் இக் கதையில் காந்தி மூன்று விதத்தில் சேர்க்கப் படுகிறார்.

அசைவ ஹோட்டல் – காபி – காந்தி
காபிப் கோப்பை – ஈ – காந்தி
நண்பர் – உயர்ந்த கருத்து – காந்தி
நண்பர் – எதிர் கருத்து – காந்தி
நண்பர் 1 – நண்பர் 2 – காந்தி ஒரு காரணம். நண்பரைப் பற்றி தூஷணை செய்ய.
அசோகமித்திரன் எழுதிய கதைகளில் வித்தியாசமான கதையாக எனக்கு இது தோன்றுகிறது.
(28.10.2017 அன்று குவிகம் இலக்கியக் கூட்டத்தில் பேசிய கட்டுரை)

புத்தக அறிமுகம் 2

தமிழ்ப்பெரியார்கள் என்ற பெயரில் வ.ரா எழுதிய புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளேன். கிட்டத்தட்ட 12 பெரியார்களைப் பற்றி இப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி என்ற பெரியாரைப் பற்றி வ.ரா இப்படி எழுதுகிறார் :
“எல்லா ஜீவராசிகளும் ஒன்றுபோல இல்லாததுதான் சிருஷ்டியின் விசித்திரம். தோற்றத்திலும் குண அமைப்பியலும் மாறுபட்ட விசித்திரங்களினூடே, ஒருவகை ஒற்றுமைச் சரடு ஓடுவது சிருஷ்டியின் விசித்திரத்திலும் விசித்திரம். தர்க்க சாஸ்திரத்தைக் கொண்டு சிருஷ்டியின் விசித்திரத்தின் தன்மையை அளவு எடுக்க முடியாது; ஆழங் காண முடியாது. சத்தியமூர்த்தி ஒரு விசித்திர சிருஷ்டி.”
115 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60தான்.

புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை. ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தொகுதிதான் 2013ல் வெளிவந்த வினோதமான பறவை என்ற தொகுப்பு. 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது. 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ. 80.

மாடுகள்

வழியை மறித்துக்கொண்டு
நின்ற மாடுகளிடம்
கேட்டேன் :
போகட்டுமா என்று…
நீ நகரப் போகிறாயா
நாங்கள் நகர வேண்டுமா
என்றன அவைகள்
வால்களை ஆட்டியபடி

மலர்த்தும்பியும் நானும்

1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பத்திரிகை உதயமானது. மலர்த்தும்பி என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர். பெயரைப் பார்க்கும்போது இது ஒரு சிறுவர் பத்திரிகை போல் தோன்றும். உண்மையில் இது இலக்கியப் பத்திரிகை. 32 பக்கங்களில் க்ரவுன் அளவில் பத்திரிகை முடிந்து விடும். அதில் கவிதைகள் கதைகள் எல்லாம் உண்டு. இதன் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரர்.

இதில்தான் முதன்முதலாக என் கவிதைகள் பிரசுரமாயின. அக் கவிதைகளை இப்போது எடுத்துப் படிக்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த மலர்த்தும்பியைத் தொடர்ந்துதான் என் பயணம் சிறுபத்திரிகைகளுடன் ஆரம்பித்தது.

எதிர்பாராதவிதமாய் இந்தப் பத்திரிகை என் கண்ணில் தட்டுப்பட்டது. என் ஆசைக்கு ஒரு 32 பிரதிகள் அச்சடித்து வைத்தக்கொண்டேன். 1979ல் இப் பத்திரிகையின் விலை ரு.50 காசு.

இப்போது அச்சடித்த இந்தப் பத்திரிகையின் விலை ரூ.9. இதோ என் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இக் கவிதைகளை என் இயல்பான பெயரில் வெளியி0ட்டுள்ளேன்.

முதல் கவிதை :

ஆயிரம் ஜென்மங்கள்

பத்தினியில் சிறந்தவள்
மாதவியா…? கண்ணகியா…?
பட்டிமன்ற விளக்கங்கள்
ஏட்டிக்குப் போட்டி
இடறான கருத்துக்கள்
பட்டிமன்றம் முடிந்து
வெளிவந்த பத்தினிகளை
இடித்திட
ஆயிரம் ஜென்மங்கள்
எடுத்த அவதார புருஷர்கள்.

ஒளியும் இருளும்

எதையோ கடந்த நிலை
கற்பனை முடிச்சுகளை
நீக்க முடியாத
விசித்திர அவஸ்தைகள்
தொடர முடியாததை
தொடர நினைக்கும்போது
ஒளியில் கலந்த
இருளாய்
முடிச்சுகள் அவிழாமல்
திணறுவது ஏன்?

சரி, இரண்டாவது கவிதையில் நான் என்ன எழுதியிருக்கிறேன். உங்களுக்கு எதாவது புரிகிறதா?