விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்கள்

அசடு – நாவல் – காசியபன் – பக்கம் : 108 – விலை ரூ.60 – தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று காசியபனின் அசடு. அபூர்வமான மனிதர் என்ற வெங்கட் சாமிநாதன் காசியபனைப் பற்றி குறிப்பிடுகிறார்.

விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்

கடல் கடந்தும் – கட்டுரைத் தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் வெளியான ஆண்டு : 2006 – மொத்தப் பக்கங்கள் : 160 – வாழ்நாள் சாதனையாளராக இயல் விருது 2003ஆம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்குக் கிடைத்துள்ளது. – விலை : ரூ.100<

அஞ்சல் அட்டை என்கிற மகாத்மியம் – 1

அஞ்சல் அட்டை எழுதுவோர் சங்கம் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம். தபால் கார்டு சங்கம் என்று வேண்டாம். முகநூலில் ஒருவர் குறிப்பிட்டதுபோல.

நான் ஏன் இது குறித்தே எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குப் பலர் அஞ்சல் அட்டை மூலம் எழுதியிருக்கிறார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் பலருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அஞ்சல் அட்டை மூலம் எளிமையாகத் தெரிவித்து விடுவார். ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் அவர் தெரிவிப்பதுண்டு.

ஒருவருக்கு ஏன் நாம்அஞ்சல் அட்டை மூலம் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. முதலில் நாம் கணினியை அதிகமாகப் பயன்படுத்தி கையால் எழுதுவதே விட்டுவிட்டோம். நாம் எழுதிப் பழகுவதற்கு தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.

தபால் அலுவலகத்தில் போய் அஞ்சல் அட்டைகளை வாங்கும் வழக்கம் உள்ளவன் நான். ஆனால் அதைப் பயன்படுத்தியதில்லை. ஒரு இடத்தில் அடுக்கி அடுக்கி வைப்பேன். என் பத்திரிகைக்கு சந்தா அனுப்பும் படி முன்பெல்லாம் கார்டு மூலம் கேட்பேன். இப்போது ஏனோ அப்படியெல்லாம் கேட்பதில்லை.

இப்படி தபால் அட்டை வாங்கும் மோகம் என்னை விட்டு மறையவில்லை. ஒருநாள் திடீரென்று யோசித்துப் பார்த்தேன். யாருக்காவது கடிதம் எழுதினால் என்ன என்று. முதலில் 8 அஞ்சல் அட்டைகளில் 8 நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். முதலில் யோசித்தேன் என்ன எழுதுவது. சிலர் எனக்குப் புத்தகங்களைப் படிக்க வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை. அவர்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மேலும் போனில் பேசிக் கேட்கலாம். ஆனால் போனில் இது குறித்துப் பேச விருப்பமில்லை. அப்படியே போனில் பேசினாலும் அவர்கள் எடுக்காமல் இருக்கலாம். இந்த நிலையில்தான் அஞ்சல் அட்டை எனக்குப் பெரிதும் உதவும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மடமடவென்று இரண்டு மூன்று பேர்களுக்கு கார்டில் அவர்கள் எடுத்துச்சென்ற புத்தகங்களில் பெயர்களைக் குறிப்பிட்டு திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டேன். இன்னும் ஒரு நண்பருக்கு விருட்சம் 103வது இதழை அனுப்பினேனே படித்தீர்களா என்று எழுதிக் கேட்டேன்.

நான் முதலில் 8 பேர்களுக்கு எழுதினேன். அடுத்தநாள் இன்னும் 10 பேர்களுக்கு அனுப்பினேன். மூன்றாவது நாள் 2 பேர்களுக்கு அனுப்பினேன். மொத்தம் 20 அஞ்சல் கடிதங்களை எழுதினேன்.

அஞ்சல் அட்டை நாம் விரும்புவதுபோல் இல்லை. அதில் ஒரு வரி எழுதலாம், 2 வரிகள் எழுதலாம். ஆனால் நான் கடிதம் முழுவதும் எழுதினேன். அப்படி எழுத எழுத எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நண்பருக்கு என்னுடைய புத்தகமான திறந்த புத்தகத்தைக் கொண்டு கொடுத்தேன். அவர் வீட்டிற்குப் போனபோது மாடிப்படிக்கட்டு போகுமிடத்தில் பாதை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று எண்ணி தடுமாறி விழுந்தேன். நான் புத்தகம் கொண்டு வருகிறேன் என்று முதல்நாள்தான் அவருக்கு எழுதியிருந்தேன். விழுந்தபிறகு இன்னொரு கடிதம் எழுதினேன்.
எல்லாம் எனக்கு வேடிக்கையாக இருந்தது.

நான் அனுப்பிய பல கடிதங்களை பலர் வந்தமாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. இதையும் நான் எதிர்பார்த்தேன். அலட்சியப் படுத்துவார்கள் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. ஏன்என்றால் நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். பல அஞ்சல் அட்டைகளுக்கு பதிலே போட மாட்டேன். புத்தகம் கேட்டு எழுதினாலும் கண்டுகொள்ள மாட்டேன். அதேபோல்தான் என் நண்பர்களும் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இது தவறில்லை. ஆனால் நான் எழுதிய கடிதம் கிடைத்ததா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் இருக்கும்.

அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் மேலதிகாரிக்கு யாராவது திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தால், உடனே திருமணத்திற்கு வர முடியவில்லை. என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதில் எழுதுவார். இது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. யாராவது எனக்கு அழைப்பிதழ் அனுப்பி நான் போகாவிட்டால் பதில் எழுதுகிற வழக்கம் எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் கடிதம் எழுதும்போது இதையெல்லாம் நாம் செய்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

நான் எழுதிய கடிதங்களைப் படித்துவிட்டு என் நண்பர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று யோசித்தபோது அவர்கள் நல்லவிதமான நினைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ மறை கழன்று போய்விட்டது என்று கூட யோசித்துப் பார்ப்பார்கள்.

ஆனால் மனந்திறந்து அஞ்சல்அட்டையில் எழுதுவது தனி கலை.

சரஸ்வதி வேண்டாம் லட்சுமி வேண்டும்

வரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அடியேனும் புத்தகங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். டிசம்பர் மாதம் முதற்கொண்டு ஒரே பிரச்கினை. எனக்கு ஒரு சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். ஆனாலும் நான் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். எப்படியாவது ஐந்தாறு புத்தகங்களாவது கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் அச்சடிப்பவர்களுக்கு போன் பேசினால் போனையே எடுக்க மாட்டார்கள். அதற்குமுன் நம் முன் கண்ணில் அநாவசியமாகத் தடடுப்படுபவர்கள் இப்போது இந்தத் தருணத்தில் ஏன் என்று கேட்காமல் ஓட்டமாய் ஓடிவிடுவார்கள். இது உலக நியதி.

நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் புத்தகங்கள் தயாரிப்பதும் விருட்சம் என்ற பத்திரிகையும் நடத்துபவனாக இருக்கிறேன். 100 இதழ்களுக்கு மேல் சமாளித்துக்கொண்டு விருட்சம் கொண்டு வந்துவிட்டேன். அதேபோல் புத்தகங்கள் 70க்கும் மேல் கொண்டு வந்துவிட்டேன். 100 வரை கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளுக்குமுன் 300 பிரதிகளுக்குக் கீழ் புத்தகங்கள் அச்சடித்து, விற்க முடியாமல் வைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் ஒரு தெளிவு என்னிடம் பிறந்திருக்கிறது. என்ன தெளிவு என்றால் மிகக் குறைந்த பிரதிகளே அச்சடி என்று. என் குருநாதர் நகுலன்தான் இதற்கெல்லாம் மூல காரணம்.

அவர் புத்தகம் எதாவது கொண்டு வந்தால் போதும் முப்பது என்பார். அவருடைய நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்துவிட்டுப் பேசாமல் இருக்கலாம் என்பார். நானும் 30 என்று இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் இரண்டு முக்கிய கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்தேன். ஒன்று நகுலனின் ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம. இன்னொன்று உமாபதியின் ‘வெளியிலிருந்து வந்தவன்,’ என்ற கவிதைத் தொகுதி.

இந்த இரு தொகுதிகளையும் புத்தகக் கண்காட்சியில் உள்ள எல்லாக் கடைகளிலும் கொண்டு போய் விற்கக் கொடுத்தேன். அந்த ஆண்டு போல் சோதனையான ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. மின் கசிவு ஏற்பட்டு சில ஸ்டால்கள் பற்றிக்கொண்டு எரியா ஆரம்பித்துவிட்டன. அதில் நான் புத்தகம் கொடுத்த ஸ்டால்களும் அடங்கும். என் புத்தகப் பிரதிகள் விற்காமலே எரிந்து விட்டன.

நான் இன்னும் சில ஸ்டால்களில் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகங்களை இன்முகத்துடன் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஒரு பிரதி கூட விற்கவில்லை. எனக்கு இது பெரிய அதிர்ச்சி.

நாம் ஏதோ கற்பனை செய்கிறேன். நான் கொண்டுவரும் புத்தகங்கள் எல்லாம் விற்றுவிடும் என்றுதான். ஆனால் வாங்குபவர்கள் வேண்டுமே? ஒரு புத்தகம் அல்லது பத்திரிகைக் கொண்டு வர சரஸ்வதியின் கடாட்சம் வேண்டுமே? ஆனால் வாங்குபவர்கள் பலர் சரஸ்வதி வேண்டாம் வேண்டாம் என்று துரத்திவிடுகிறார்களே? லட்சுமிதான் வேண்டும் வேண்டும் என்கிறார்கள்.

அதேபோல் இன்னொரு காட்சி. க்ரோம்பேட்டை ரயில்வே நிலையம். அங்குள்ள புத்தக ஸ்டால். அவரிடம் நவீன விருட்சம் இதழ்கனின் பிரதிகள் ஐந்தை விற்பனைக்குக் கொடுத்துவிட்டுப் போகிறேன். அடுத்த இதழ் விருட்சம் கொண்டு வர பாடாய்படுகிறேன். ஏன் கடைக்காரருக்கே நான் அடுத்த இதழ் கொண்டு வரும்போது என் முகம் மறந்திருக்கும். அவர் கொடுக்க வேண்டியது ஐந்து பிரதிகள் விற்று பணம் தருவது. அதாவது ரூ.100ல் கமிஷன் போக ரூ.70 மட்டும்தான். அல்லது ரூ.60 மட்டும்தான். அதைக் கொடுக்க அந்த மனிதர் பாடாய்ப் படுத்தி விடுவார். 103வது இதழ் கொண்டு போய் அவர் முன்னால் நிற்கிறேன். அவர் பணம் கொடுக்காமல் துரத்தியே விட்டார். அதாவது சரஸ்தியை ஓட ஓட விரட்டுகிறார். அதாவது பத்திரிகையை – சரஸ்வதியை – விற்று லட்சுமி வேண்டும். ஆனால் சரஸ்வதியைக் கொடுத்த என்னை ஒன்றுமில்லாமல் துரத்தி விடுகிறார். இதே மாதிரி வீடு நிறைய சரஸ்வதியாகிய புத்தகங்களை வைத்துக்கொண்டிருக்கும் நான், லட்சுமி கிடைப்பாளா என்று பார்த்தால் கண்ணில் லட்சுமி படாமல் ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாள்.

இந்தத் தருணத்தில் இரு நீண்ட கவிதைத் தொகுதியில் நகுலன் எழுதிய ஒரு கவிதை. புத்தகப் பின் அட்டையில் பிரசுரம் ஆகி உள்ளது. அக் கவிதை இதுதான்.

‘மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
üüமாயை என்பது
மன்பதையனுபவம்ýý
மாயை யென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்துý

இக் கவிதையைப் படிக்கும்போது சரஸ்வதியே நம்மிடம் இருக்கட்டும். லட்சுமி வேண்டாமென்று சொல்லத் தோன்றுகிறது.

தபால் கார்டு சங்கம்

தபால் கார்டு மூலம் நாம் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாமென்று தோன்றுகிறது. இதன் முக்கியக் குறிக்கோள்கள் கீழ் வருமாறு.

1. நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது
2. கார்டில் மட்டும்தான் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இன்லென்ட் கடிதம் கிடையாது. கவரில் எழுதி அனுப்புவது கிடையாது.
3. போனில் பேசக்கூடாது
4. இ மெயிலில் எதுவும் அனுப்பக்கூடாது
5. கார்டு மூலம் நாம் ஒருவரை ஒருவர் சாடக் கூடாது
6. ஒரு கார்டில் எதுவேண்டுமானாலும் எழுதலாம்
7. கையெழுத்துப் புரியும்படி எழுத லேண்டும்
8. முக்கியமாக அரசியல் பற்றி எழுதக் கூடாது.
9. தமிழ் மொழியில் எழுதுவது சாலச் சிறந்தது. ஆங்கிலத்திலும் எழுதலாம்.
உங்கள் அறிவுச் செல்வத்தை கார்டு மூலம் தெரியப்படுத்துங்கள். ஆனால் உங்கள் துயரங்களை பயங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் முதல் கார்டை என் முகவரிக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
என் முகவரி : அழகியசிங்கர்
சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்
7 ராகவன் காலனி
மேற்கு மாம்பலம்
சென்னை 600 033

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் – ஒளிப்படம் 2

இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நேற்று முகநூல் நண்பர்களுக்கு அளித்தேன். இதோ இரண்டாவது பகுதியை அளிக்கிறேன்.

என்னுடைய சோனி காமிராவில் இவ்வளவு தூரம் படம் பிடிக்கலாமென்று முன்னதாகவே தெரிந்திருந்தால் பலவற்றைப் படம் பிடித்திருப்பேன். இந்தக் காமெரா மூலம் நேரிடையாகவே இந்தக் கூட்ட.த்தை உலகம் முழுவதும் பலரும் ரசிக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் – ஒளிப்படம் 1

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் சுப்பிரமணியன் நிகழ்த்திய உரையின் முதல் ஒளிப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

வகுப்பில் பாடம் நடத்துவதுபோல் ராஜேஷ் போர்டில் சில வரைப்படங்கள் எல்லாம் வரைந்து லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விளக்கி உள்ளார். அவர் முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இதை நீங்கள் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம் 31வது கூட்டம்

நேற்று (18.11.2017) விருட்சம் 31வது கூட்டம் வழக்கம்போல ஸ்ரீராம் காம்பளெக்ஸில் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் ராஜேஷ் சுப்பிரமணியன். சில மாதங்களுக்கு முன் தற்செயலாக ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன். அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. பல விஷயங்களைப் பற்றி பேசினார். நான் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்னாலே வந்திருந்து எந்தவித நோக்கமும் இல்லாமல் உதவி செய்யக் கூடியவர். அவரிடம் நீங்கள் பேச முடியுமா என்று கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி பேச ஒப்புக்கொண்டார்.
நான் இதுவரை 6 கூட்டங்களை நடத்தி உள்ளேன். முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைப் பற்றி பேசினார். அடுத்து ஜøலை மாதம் நடந்த கூட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றி பெருந்தேவி அவர்கள் பேசினார்கள். மூன்றாவது கூட்டமான ஆகஸ்டில் கடற்கரை அவர்கள் ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார். நான்காவது கூட்டமான செப்டம்பரில் செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஓஷோவைப் பற்றிப் பேசினார். ஐந்தாவது கூட்டமான அக்டோபரில் சந்தியா நடராஜன் திருவசாகத்தைப் பற்றி பேசினார். இப்போது ராஜேஷ÷ன் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றிய கூட்டம். எல்லாவற்றையும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் செம்ம கஷ்டமாக இருக்கும்.
ஒரு கூட்டத்தை நாம் எப்படி ரசிக்க முடியும்? பேசுபவரை நாம் மதிக்க வேண்டும். அவர் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கேட்பவர் உணர வேண்டும். நம்மில் சிலர் தீர்ப்பு கொடுத்துவிடுகிறோம். அந்தத் தீர்ப்பு ரொம்ப மோசமானது. ராஜேஷ் பேசியபோது அவர் மூலம் எனக்கு என்னன்ன தெரிய வருகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தேன். எனக்குப் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவருக்கு என் நன்றி. அவர் பேசிய கூட்டத்தின் வீடியோவை நாளையிலிருந்து துவங்குகிறேன்.
இது மாதிரியான கூட்டங்களை நடத்த எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து ஒரு நண்பர் உதவி செய்கிறார். அவர் வேறு யாருமில்லை கிருபானந்தன் என்ற நண்பர்தான். அவர்தான் இக் கூட்டத்தைப் பற்றிய அறிவிப்பை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறார். நீங்களும்தான் இக் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்று அவரிடம் நான் சொல்வது வழக்கம். அவருக்கும் என் நன்றி. வந்திருந்தவர்களுக்கும் என் நன்றி.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை

சமீபத்தில் வெளிவந்த என் புத்தகத்தின் பெயர் ‘திறந்த புத்தகம்.’

200 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம். இது கட்டுரைகளின் தொகுப்பு. எல்லாக் கட்டுரைகளும் அதிகப் பக்க அளவு போகாதவாறு எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகம். இப் புத்தகத்தின் விலை : Rs..170.

இப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன்
பேசி உள்ளார். அதேபோல் இன்னும் சிலரும் பேச உள்ளார்கள்.

புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..11

தமிழவன் பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை 11 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். இன்று 12.11.2017 (ஞாயிறு) தமிழவனின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றேன். கூட்ட முடிவில் அவரைப் பேட்டி எடுத்தேன். அவரிடம் நான் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:

1. முதலில் உங்கள் எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது?
2. பத்திரிகையில் உங்கள் படைப்பு எப்போது எதில் முதலில் வந்தது?
3. இதுவரை எத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதி உள்ளீர்கள்?
4. கோட்பாடு ரீதியாக விமர்சனத்தைத் தமிழில் ஏன் இந்திய அளவில் நீங்கள்தான் தொடங்கினீர்களா?
5. உங்களுக்கு எதாவது பரிசு கிடைத்துள்ளதா?
6. எப்படி நீங்கள் ஒரு தமிழ் பேராசிரியாக இருந்துகொண்டு படைபாளியாகவும் உள்ளீர்கள்?
7. உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பத்தினர்கள் ஆதரவு தருகிறார்களா?
8. இப்போது உள்ள தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது?
9. சிறுபத்திரிகை என்ற ஒன்றை இன்னும் தொடர்ந்து கொண்டு வர முடியுமா?
10. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில் எது சிறந்த படைப்பு?