நேற்றைய தினமலருக்கு நன்றி.

விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ‘இடம், பொருள், மனிதரகள்,’ என்ற மாதவ பூவராக முர்த்தியின் புத்தகத்தைப் பற்றி மாணிக்கப் பரல்கள் என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினமலருக்கு என் நன்றி. அந்தப் பகுதியில் எழுதப்பட்டதை இங்கே தருகிறேன்.

பன்முக தன்மை கொண்ட நூலாசிரியர் , சென்னை மாநகரில் இன்று அழிந்துபோன ஜெமினி அருகே இழந்த சொர்க்கம், சர்க் கஸ் என்னும் மாய உலகம், ஆடிப் பெருக்கு, வீடு மாற்றம் உள்ளிட்ட இடங்களையும்; ஊதா கலரு ரிப்பன், காணாமல் போன சைக்கிள், ‘பாக்கு வெட்டியும் பாதாள கரண்டியும், து£ளி உள்ளிட்ட பொருட்களையும் விந்தை மனிதர்கள், கொங்கு மாமியின் கடைசி ஆசை, பாத்திரமறிந்து பிச்சையெடு உள்ளிட்ட மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இடம் பொருள் மனிதர்கள் ஆசிரியர், மாதவ பூவராக மூர்த்தி வெளியீடு விருட்சம் தொலைபேசி: 044 – 24710610, 94444113205 பக்கம்: 156 விலை ரூ.120

வித்தியாசமான காலண்டர்

என் நெடுநாளைய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்கள். சமீபத்தில் அவர் எழுதிய அது ஒரு கனாக் காலம் என்ற புத்தகத்திற்கு ஒரு ஸ்டார் ஓட்டலில் விருந்து அளித்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினார். 100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். என்னை மேடையில் உட்கார வைத்து அவர் புத்தகத்தைப் பற்றி பேச சந்தர்ப்பம் கொடுத்தார். நானும் அப் புத்தகத்தைப் படித்து கட்டுரை வாசித்தேன்.

இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பும், இரண்டு கட்டுரைத் தொகுப்பும், மருத்துவம் சார்ந்த புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் வரும்போது அதை வெளியிடும்போது உற்சாகமாகக் கொண்டாடுவார். விருந்தினர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை.

இன்றைய காலக்கட்டம் மெச்சும்படி இல்லை. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் விழா கொண்டாடி கொண்டாடும் டாக்டர் பாஸ்கரனை யாரும் வாழ்த்தாமல் இருக்க மாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று (07.09.2018) டாக்டரைப் பார்த்தேன் கையில் ஒரு காலண்டர் கொடுத்தார். அந்த காலண்டர் செப்டம்பர் 2018லிருந்து அடுத்தவருடம் ஆகஸ்ட் 2019 வரை உள்ள காலண்டர். அந்தக் காலண்டரின் முக்கியத்துவம் என்னவென்றால், அவருடைய விழாவிற்குக் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களையும் புகைப்படம் எடுத்து ஒவ்வொரு மாதம் வெளியிட்டிருந்தார். என்னுடைய புகைப்படமும் அந்தக் காலண்டரில் இருந்தது. எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய காலண்டராக எனக்குத் தோன்றியது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 87

ப கங்கைகொண்டான்

பழைய சுசீலாக்கள்

பத்தாவது பாரம் படித்தோம்
பாவை சுசீலாவும் நானும்
ஆசிரியர் வெளியே போனால்
மானிட்டர் என்னை நோக்கி
ஒன்றுக்குப் போக வேண்டி
ஒரு விரல் காட்டி நிற்பாள்
ஆள் பார்க்க இல்லாவிட்டால்
அக்கம் பக்கம் நோக்கி விட்டு
ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள்
அரைக்கால் டிராயர் துறந்து
முழுக்கால் மாட்ட வைத் தாள்
ஒரு நாள் ஒரே மாதிரி
சொல்லி வைத்தாற் போலச்
சாக்கு நிறக் காக்கிப் பையில்
புத்தகங்கள் தூக்கி வந்தோம்
பையன் கள் மாற்றி வைத்தார்
பைமாற்றிப் போனாள் அந்நாள்
கைமாறிப் போனாள் மறு நாள் ……..

நன்றி : கூட்டுப் புழுக்கள் – கவிதைகள் – ப கங்கைகொண்டான் – வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் – பொத்தனூர் அஞ்சல் – சேலம் 638 181 – ஆண்டு : 1974 – விலை : ரூ.10

தினமணி இதழுக்கு நன்றி..

தினமணியில் நூல் அரங்கம் என்ற பகுதியில் என்னுடைய திறந்த புத்தகம் என்ற நூலின் விமர்சனம் வந்துள்ளது. கீழே அதில் வெளி ஆனதைக் கொடுத்திருக்கிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி.

அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கி றது இந்தப் புத்தகம்.
கவிஞர், கதாசிரியர், பல் லாண்டுகள் ஒருசிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகி
றார். மொத்தம் ஐம்பது பதி வுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன
இத்தொகுப்பில். ‘அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் பற்றிய பதிவு ‘ஆத்மாநாம் சில குறிப்புகள்’. அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்மாநாம் நினைவாக நடந்த உணர்ச்சிபூர்வமான இரங்கல் கூட்ட விவரணையுடன் அந்தப் பதிவை நிறைவு செய்கிறார்.
பேராசிரியரும் நாவலாசிரியரும் கவிஞருமான நகுலனைப்பற்றிய பதிவில் அவருடைய ஐந்து கவிதைகள் இடம்பெறுகின்றன.
தமிழில் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவது பற்றியும், அதை விற்பதற்குப் படும் பாட்டைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
‘யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்? என்ற பதிவு நியாயமான கவலையை எழுப்பக் கூடியது. ‘இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு. சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை’ என்கிற அவரது அங்கலாய்ப்பு நிஜமாகிவிடக் கூடாதே என்ற கவலை நமக்கும் ஏற்படுகிறது.

திறந்த புத்தகம் – அழகியசிங்கர்; பக்.211; ரூ.170; விருட்சம், 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை -33

செப்டம்பர் மூன்றாம் தேதி

38 ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்த நிகழ்ச்சியை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
இன்னும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டோமா என்றெல்லாம்
தெரியவில்லை

காலையில்
ஹனுமார் கோயிலுக்குச் சென்றோம்

இன்று கடைக்குச் சென்று
எனக்கு வேண்டிய துணிமணிகளை
வாங்கிக்கொண்டேன்
அவளும் கூடவே வந்தாள்

புத்தகக் கடையில் புத்தகங்களை
வாங்கி வெறுமனே சேர்ப்பதை அவள் விரும்பவில்லை
ஆனால் தடுப்பதில்லை
அவள் விருப்பம் என்னவென்று தெரிவதில்லை

இன்று செப்டம்பர் மூன்றாம் தேதி

(Photo taken by Srinivasan Natarajan)

மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன் பகுதி 1

சமீபத்தில் ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எதாவது சொல்வதா அல்லது என்னைப் பற்றி எதாவது சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. நான் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன். என் அவதார நிகழ்ச்சியைச் சொன்னாலே போதுமென்று எனக்குத் தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.

1. புத்தகப் பதிப்பாளர் கம் விற்பனையாளரான அழகியசிங்கரின் கூற்று.

நான் 30 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். கூடவே புத்தகங்களை அச்சடிக்கிறேன். கிட்டத்தட்ட 80 புத்தகங்களை அச்சடித்து விட்டேன். பெரும்பாலும் கவிதைப் புத்தகங்கள். கவிதைகளை அடித்து விற்பது என்பது சாத்தியமில்லை என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும் கவிதைகளை மட்டும் புத்தகம் அடிக்க என்னிடம் கொடுப்பார்கள் பலர். புத்தகக் காட்சியில் என் புத்தகங்களை மட்டும் விற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது. மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களோடு என் புத்தகங்களையும் விற்று வருகிறேன். புத்தகம் விற்று லாபம் சம்பாதிப்பது என்பது நிகழ்ந்தால் அது அற்புதமான கணமாக இருக்கும்.
இந்த முறை ராயப்பேட்டையில் நடந்த புத்தகக் காட்சியில் முதல் நாளே எனக்குத் தெரிந்து விட்டது. எவ்வளவு பணம் நஷ்டமடையப் போகிறோம் என்று. அதனால் நஷ்டத்தை எண்ணி பதற்றமடையாமல் என்னைத் தேற்றிக்கொண்டேன். ஏன் இப்படி ஆயிற்று என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது போதிய விளம்பரம் இல்லை என்று மனதில் பட்டது. இவ்வளவு வருடங்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும் பெரிய அளவில் பொருள் ஈட்ட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். என்னிடம் ஆள் இல்லை இல்லை. நான் மட்டும்தான் எல்லாம். புத்தகம் தயாரிப்பதிலிருந்து எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது வரை. ஆனால் பலர் புத்தகம் தயாரிக்காமல் புத்தகம் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். நான் சற்று யோசித்துப் பார்த்தேன். இந்த முறை புத்தகக் காட்சியில் பராமரிப்பு செலவு அதிகமாகிவிட்டது. அரங்கு வாடகை சற்று அதிகம். புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருகிற செலவும் கூடி விட்டது. ஆனால் இதன் மூலம் பல அனுபவங்களைச் சேகரிக்க முடிந்தது. ஒரு விற்பனையாளர் கூறினார். ‘நீங்கள் வெளியூருக்கெல்லாம் போய் புத்தக விற்பனையைச் செய்யாதீர்கள்,’ என்று. உண்மையில் என்னால் டெம்போகாரர்களுக்கு பணம் கிடைத்தது. டீ விற்பவர்களுக்குப் பணம் கிடைத்தது. வெளியே தின்பண்டம் விற்பவருக்குப் பணம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் புத்தகம் விற்றுப் பணம் கிடைக்கவில்லை.
பெரும்பாலான புத்தகப் பதிப்பாளர்கள் என்ன புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று போய்ப் பார்த்தேன். திருக்குறள், பாரதியார் இல்லாத கடைகளே இல்லை. மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் பல பதிப்பாளரின் வருமானத்தை உயர்த்துகின்றன. ரூ.200க்கு நான்கு நாவல்கள் என்று ஆங்கிலப் புத்தகங்களை விற்கிறார்கள். அங்கே கொஞ்சம் கூட்டம். என் அரங்கில் சுஜாதா புத்தகங்கள் ஏனோ இந்த முறை சரியாக விற்கவில்லை. அதனால் சுஜாதா புத்தகங்களுக்கான கவர்ச்சி குறைந்து விட்டது என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. பல புத்தகங்களின் விலை கடுமையாக இருக்கிறது. இது கூட புத்தகங்கள் வாங்குபவரை யோசிக்க வைக்கிறதோ? விருட்சம் மூலம் கொண்டு வந்துள்ள பெரும்பாலான புத்தகங்களுக்கு விலை மிகக் குறைவு. ஆனால் வாங்க வருபவர்கள் அதை விடக் குறைவு.
(photo taken by Srinivasan Natarajan)

(இன்னும் வரும்)

இந்து தமிழிற்கு என் நன்றி

கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழில் என் முழு சிறுகதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து தமிழிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் – 2

போன மாதம் விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் üகல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்ý என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்

போன மாதம் (26.07.2018) விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் ‘கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் முதல் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

கேட்டாலும் சொல்ல மாட்டேன்…..

தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார். “எவ்வளவு இன்று விற்றது?” இதற்கு என் பதில் மௌனம்…பலத்த மௌனம். எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன். அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன். இதுவரை சொல்லவில்லை. ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அது தெரிந்து விடுகிறது. என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன.

ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம். அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள்.

இதில் என்ன ஜென் தத்துவம். இனிமேல்தான் இருக்கிறது.

என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும், இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள்.

உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன. வெளியே நாங்கள் இருக்கிறோம். சிலர் புத்தகங்களுடன் வெளியே செல்கிறார்கள். சிலர் வெறுமனே செல்கிறார்கள்.

நானும் நண்பரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு டீ அருந்திக்கொண்டிருக்கிறோம்.. இன்னும் சில மணி நேரம் கழித்தும் டீ அருந்திக்கொண்டிருக்கிறோம்.

டேபிளில் பில் புக் இருக்கிறது..பேனா இருக்கிறது. நாங்கள் டீ அருந்திக் கொண்டிருக்கிறோம்.

கேட்டாலும் சொல்ல மாட்டேன் எவ்வளவு விற்றது என்று. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். மனைவியிடம் சொன்னால் போதும் நிம்மதி போய் விடும்.