காந்தியுடன் நாங்கள் 2




அழகியசிங்கர்

திருமதி ஆபா காந்தியின் நினைவுகளாக 14வது அத்தியாயத்திலிருந்து 24ஆம் அத்தியாயம் வரை இப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
ஆபா காந்தியை 12வயது சிறுமியாக இருக்கும்போதே அவருடைய தந்தை சேவா கிராம ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார். ஆபா காந்திக்குப் புரியவில்லை. அனாதைக் குழந்தைகளைத்தானே ஆசிரமத்தில் சேர்ப்பார்களே தான் அனாதை இல்லையே என்கிறார் அப்பாவிடம்.
வர்தாவிலிருந்து சேவா கிராமம் சுமார் 5 மைல் தூரம். முதலில் ஆபா காந்திக்கு விருப்பமில்லை. தன் தாயரை விட்டு வருகிறோமே என்று தோன்றியத. ஆபா காந்தியையும் அவர் அண்ணன் தீரேன் பாபியையும் அழைத்துக்கொண்டு சேவாகிராமம் வருகிறார் அவர்கள் தந்தையாகிய அம்ருத்லால்.
வீட்டு நினைவாகவே இருக்கிறார் ஆபா காந்தி. காந்திஜி வேடிக்கைப் பிரியர். “நான் வேடிக்கைக்காரனாக இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்று அடிக்கடி சொல்வார்.
“என்ன தீர்மானித்தாய்? இங்கே இருப்பாய் அல்லவா?” என்று கேட்கிறார்.
“ரொம்ப அம்மா ஞாபகம் வருகிறது. மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வருஷம்தான் இங்கு இருப்பேன்” என்கிறார் ஆபா காந்தி.
ஆபா காந்தியை ஆசிரம வாழ்க்கைக்கு பழக்கப் படுத்துகிறார் காந்தி. முதலில் வங்காளி மொழி மட்டும் தெரியும் ஆபா காந்திக்கு. எட்டு மாதங்களில் ஹிந்தி கற்றுக்கொண்டு விடுகிறார். அம்மாவின் ஞாபகமும் வீட்டு நினைவும் வராத அளவுக்கு காந்திஜி ஆபா காந்திமீது அன்பு காட்டினார். அவருக்கு ஆசிரமம் பிடித்து விட்டது.
1200 கிலோ மீட்டர் தூர வெளி மாநிலத்திலிருந்து வந்த ஆபா காந்தி ஒரு வருடம்தான் ஆசிரமத்தில் இருக்கப் போவதாகச் சொன்னவர் வருடக்கணக்கில் இருந்துவிட்டார். இதற்குக் காரணம் காந்திஜி தாயைப் போன்று அவரைப் பார்த்துக்கொண்டதுதான்.
அதேபோல் ஆபாவிற்கு கஸ்தூர்பாயின் ஆதரவு அதிகம். ஒரு சமயம் ஜ÷ரம் 34 முறை வந்தது. அந்தச் சமயத்தில் பா (கஸ்தூர்பா) தான் அவரை தன்னுடன் தன் குடிலுக்கு அழைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டார். இதை நெகிழ்ச்சியுடன் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதுமே தன்னுடைய காரியத்தை பா யாரையும் செய்ய விரும்புவதில்லை. 1941ல் பா நோய்வாய்ப்பட்டார். அவர் கருக்கலில் குளியலரையில் வைத்திருக்கும் பானையில் காலைக்கடன் கழிப்பார். அந்தப் பானையை சுத்தம் செய்ய ஆபா எடுத்து வைத்துக்கொண்டார். பானையைப் பிடுங்கிக் கொண்டு, ‘வேண்டாம், வேண்டாம்’ என்று தடுத்துவிட்டார் பா. முடியாதத் தருணத்திலும் மற்றவரைத் துன்புறுத்தக் கூடாது என்று நினைத்தவர் பா. இந்த நிகழ்ச்சியை ஆபா பதிவு செய்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில்.
எப்படி காந்தி ஒரு இலட்சிய ஆசிரியர் என்பதை நிரூபிக்கிறார் என்பதை இந்தச் சம்பவம் மூலம் தெரியப்படுத்துகிறார் ஆபா.
ஒருநாள் குடிலுக்குப் போகும்போது மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்துவிடுகிறார் ஆபா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த காந்திஜி இப்படிக் கூறுகிறார் : ” நீ ஒரு இலையைப் பறித்திருக்கிறாய். நீ மட்டும்தான் இந்தத் தவறைச் செய்கிறாய் என்பதில்லை. இது நம் எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது. போகும்போதும் வரும்போதும் மரத்தைப் பார்த்தால் இலையைப் பறிப்பது, பூவைப்பார்த்தால் பூவைப் பறிப்பது. இது என்னை மிகவும் உறுத்துகிறது. வலி தருகிறது. இப்படி தேவையில்லாமல் பூ, இலை பறிப்பது ஒரு வகையில் ஹிம்சைதான். நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானியான ஜகதீஷ் போஸ் சின்னஞ்சிறு செடிகளுக்கும் உயிர் உண்டு என்று என்னிடம் சொன்னதிலிருந்து மக்கள் என் கழுத்தில் மாலை போடுவதை நான் அனுமதிப்பதில்லை ” என்கிறார் காந்தி.
அந்தக் காலத்திலேயே காந்திஜிக்கு கரோனா என்ற நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்திருக்கிறது போலும். இந்தச் சம்பவத்தைப் படித்தால் அப்படித்தான் உங்களுக்குத் தோன்றும்.
காந்திஜியிடம் இரண்டு கைக்குட்டைகள் இருக்கும். ஒன்று முகம், கை துடைக்க ஒன்பது அங்குல நீளமும், ஆறு அங்குல அகலமும் கொண்டது. இன்னொன்று அதைவிடச் சின்னது மூக்கை சுத்தம் செய்து கொள்ள. ஒருவர் காந்திஜியிடம், “பாபுஜி, நீங்கள் முகம் துடைக்க இவ்வளவு சின்ன துணியை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்டார். காந்திஜி, இது போதுமானதாக இருக்கிறது. இவ்வளவு சின்ன துணி போதும் எனும்போது பெரிய துணியை ஏன் பயன்படுத்த வேண்டும்,? என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, காந்திஜி, சின்ன கைக்குட்டை மூக்கு சுத்தம் செய்ய, தும்மல் வந்தால் மூக்கின் முன் வைத்துக் கொள்வேன். எதிரேயிருப்பவர்கள் மீது எதுவும் பட்டுவிடக்கூடாதல்லவா? அதனாலேயே மூக்கையும் சுத்தம் செய்து கொள்வேன். மூக்கை சுத்தம் செய்த துணியால் முகம் துடைக்கக் கூடாது. தூய்மையின் கண்ணோட்டத்தில் அது நல்லது அல்ல..
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மாலை. அன்று தான் காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்றான். உண்மையில் அன்று மாலை என்ன நடந்தது என்றால் சர்தார் வல்லபாய் படேல் காந்திஜியைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவாக அவர் காந்திஜியைப் பார்க்க வரும்போது ஆபா காந்தியும் மனு காந்தியும் அறையில் இருப்பார்கள். ஆனால் அன்று சர்தார் சில முக்கிய விஷயங்களைப் பேச வந்தார். ஆபாவும் மனுவும் வராண்டாவிற்கு வந்துவிட்டார்கள்.
ஐந்து மணி பிரார்த்தனை நேரம். எப்படி ஞாபகப்டுத்துவது என்ற தவிப்பு ஆபா காந்திக்கு. சர்தாருடன் பேசிக்கொண்டே இருக்கிறார் காந்தி. 8 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது. ஆபா காந்திக்குப் பொறுக்க முடியவில்லை. காந்திஜி பொதுவாக பிரார்த்தனையில் நேரத்தைக் கடைப்பிடிப்பவர். பேச்சை முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஜன்னல் வழியாகக் குதித்து பிரார்தனைக்கு ஓடினார். கொஞ்ச தூரம் கூட நடந்திருக்க மாட்டார். இடப்பத்கத்திலிருந்து ஒரு இளைஞன் வேகமாக காந்திஜி பக்கம் குனிந்தான். மனு அவனைத் தடுக்க முனைந்தார். அவன் அவரைத் தள்ளினான். மனுவின் கையில் உள்ள காந்திஜியின் மாலை, குவளை எழுது அட்டை எல்லாம் கீழே சிதறின. மனு அவற்றை எடுக்கக் கீழே குனிந்தாலோ இல்லையோ, டுமீல் டுமீல் டுமீல் என்று மூன்று குண்டுகள் காந்திஜி மீது பாய்ந்தன. அவை காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. காந்திஜியின் வாயிஙூருந்து ஹே ராம் ஹே ராம் என்ற சொற்கள் வெளிவந்தன. பக்கத்தில் ஆபா காந்தி இருந்ததால் அவருடைய உடல் பாரம் முழுவதும் ஆபா காந்தி மீது சரிந்தது. சமாளித்துக் கொண்டு காந்திஜியை தன் மடியில் தாங்கிக் கொண்டார்.
டாக்டர் பார்கவ் வந்து நன்கு பரிசோதித்த பின்பு நேருவையும் படேலையும் பார்த்து, பாபுஜி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்றார். நேருஜி குழந்தையைப் போல் தேம்பி தேம்பி அழுதார்.
பிரார்த்தனை காந்திஜிக்கு உணவு போன்றது.

காந்தியுடன் நாங்கள்….1



அழகியசிங்கர்

காந்தியைப் பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும் அதன் மூலம் நமக்கு எதாவது செய்தி கிடைக்காமலிருக்காது.  நாம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமலிருக்க மாட்டோம்.  அல்லது படித்துவிட்டு அப்படியா என்று ஆச்சரியப்படாமலிருக்க மாட்டோம்.  

நான் சமீபத்தில் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் வெளியிட்ட காந்தியுடன் நாங்கள் என்ற  புத்தகத்தைப் படித்தேன்.  இதை எழுதியவர்கள் கனு காந்தி மற்றும் ஆபா காந்தி.  இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தவர் டாக்டர் எம். ஞானம்.

கனு காந்தி காந்தியின் பேரன்.  ஆபா காந்தி கனு காந்தியின் மனைவி.  கடைசிவரை இவர்கள் இருவரும் காந்தியுடன் வாழ்ந்தார்கள்.  கனு காந்தியின் நினைவுகள், ஆபா காந்தியின் நினைவுகள் என்று இரண்டு பிரிவுகளாகப் புத்தகத்தைப் பிரித்துள்ளார்கள்.

பல தருணங்களையும், நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்நூலில் நினைவுச் சித்திரங்களாக வரைந்துள்ளனர்.  இவர்கள் இருவர்களும் காந்திஜியை எவ்வளவு நெருக்கத்தில் கண்டார்களோ, அவ்வளவு நெருக்கமாக அநேகமாக யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.  அந்த விதத்தில் இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான பதிவேடாக எனக்குத் தோன்றுகிறது.

 முதல் 13 அத்தியாயங்கள்  கனு காந்தியும் அதன்பின் 24 அத்தியாயங்கள் வரை ஆபா காந்தியும் புத்தகத்தை எழுதி உள்ளார்கள்.  

          இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சிவாஜி நரஹரி பாவே சில முக்கியமான குறிப்புகளை முன்னுரையில் எழுதி உள்ளார்.  காந்திஜி 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  ஆனால் ருசியான உணவுகள் அருந்தும் நம்மைப் போன்றவர்களின் முகத்தில் காணமுடியாத தேஜûஸ அவர் முகத்தில் காணும்பேறு அவருக்குக் கிடைத்ததாக எழுதி உள்ளார். காந்தியின் இந்திய சுயராஜ்யம் என்ற நூலைப் படித்துவிட்டு காந்திஜியின் குருநாதராகிய கோகலே, நீங்கள் இந்தியாவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  நீங்கள் இந்தியா வரும்போது இதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும், என்றார்.

காந்திஜி அவர் அறிவுரையின்படி இந்தியாவைச் சுற்றி வந்தார்  மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில். காந்திஜிக்கு அவர் எழுதிய இந்திய சுயராஜ்யம் புத்தகத்தில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை.

பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் காந்தி.  கனு காந்தி குறிப்பிடுகிறார்.  ஒரு சமயம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, மன்னிக்க வேண்டும். மாலை பிரார்த்தனை  நேரம் வந்து விட்டது.  நான் நேரத்திற்குப் போக வேண்டும். என்னைப் போக அனுமதியுங்கள் என்று கூறியபடியே கூட்டத்திஙூருந்து எழுந்து விடுவார்.

பிரார்த்தனை என் உணவு, நான் உணவும், நீரும் இன்றி பல நாட்கள் இருந்து விடுவேன்.  ஆனால் பிரார்த்தனையோ, ராம நாமமோ இன்றி ஒரு கணமும் இருக்க முடியாது என்கிறார் காந்திஜி.

1939 கோடைக்காலம்.  சேவா கிராமத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.  மதிய நேரம்.  காந்திஜி வழக்கம்போல படுத்தபடியே கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தார்.  காந்திஜியின் பக்தையான அம்துஸ்ஸலாம் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார்.  காந்திஜிக்குத் தூக்கம் வந்து விட்டது.  அவர் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தார்.  1520 நிமிடங்கள் அந்தப் பெண்மணிக்கும் தூக்கம் வந்துவிட்டது.  அவர் தலையணையின் மீது சாய்ந்த உட்கார்ந்து கொண்டு விசிறியை வீச ஆரம்பித்தார்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டார்.  கையிஙூருந்து விசிறி நழுவி காந்திஜி மீது விழுந்து விட்டது.  காந்திஜி விழித்துக் கொண்டார்.  விசிறியை எடுத்து அந்தப் பெண்மணிக்கு விசிற ஆரம்பித்தார்.  நம் காந்திஜி இப்படிப்பட்ட மனிதர் என்று கனு காந்தி வியக்கிறார்.

ஆகாகான் மாளிகையில் காந்திஜியின் சிறைக் காவலின்போது 1943 இல் அவர் 21 நாள் உண்ணாவிரதம் துவங்கியபோது அவருக்குப் பணிவிடை செய்ய அரசாங்கம் கனு காந்திக்கு அனுமதி கொடுத்து விட்டது.  அவர் காந்திஜியுடன் ஆகாகான் மாளிகையில் இருக்க ஆரம்பித்தார்.  கனு காந்தியிடம் கேமரா இருப்பதைக் கண்ட காவலாளி, இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.  ஆனால் கண்காணிப்பாளர் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது, என்றார். அவர் கனு மீது நம்பிக்கை வைத்து கேமராவை எடுத்துப்போக அனுமதித்தற்குக் காரணம் எப்போதும் சத்தியத்தை வற்புறுத்தும் காந்திஜியே ஆவார்.  கனு கேமரா வைத்திருந்தாலும், அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க காந்திஜி விடமாட்டார் என்று ஆங்கில அதிகாரிகளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. 

(இன்னும் வரும்)


துளி – 113 – அசிக்காடு வீரனும், சொகுசு விடுதிகளும்

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் அசிக்காடு சென்றேன்.  மயிலாடுதுறையிலிருந்து அசிக்காடு என்ற கிராமம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  அசிக்காடில் உள்ள புராதன சிவன் கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தும் முகாந்தரமாக ஒரு யாகம் நடத்தினார்கள். எல்லோரும் பல இடங்களிலிருந்து வந்திருந்து அசிக்காடில் குமிழியிருந்தோம்.  நல்ல வெயில்.  

முதல் நாளில் ருத்திர யாகம். அசிக்காடு வீரன் கோயிலில்.  காலை ஏழு மணியிலிருந்து மதியம் வரை நீண்டிருந்தது.  காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம்.  எனக்கு யாகத்தில் எழும் புகை கண்ணிற்கு ஆகாது.  அதனால் தள்ளிப்போய் உட்கார்ந்திருந்தேன். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அசிக்காடு கிராமம் வருவதென்றால் உற்சாகமாக இருக்கும்.  முன்பு அங்கிருந்து பலர் வேற இடங்களுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.  அக்கிரகாரத் தெருவிஙூருந்த பல வீடுகளை விற்று விட்டுப் போய்விட்டார்கள். தெருவில் ஈ காக்காய் கிடையாது.  இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று மேல குளம்.  இன்னொன்று கீழ குளம்.  மேல குளத்தில் தண்ணீர் வற்றி விட்டது.  

அந்த மேல குளத்திலிருந்து மண்ணை லாரி லாரியாக வாரி எடுத்துக்கொண்டு போய் விற்றுவிட்டார்கள்.  விவசாய கிராமம் என்றாலும், சொல்லும்படி விளைச்சல் இல்லை.  

எங்கள் பாட்டனாரின் நிலம் நீச்சு எல்லாம் விற்றாகி விட்டது.  வீரன் கோயில்தான் உண்டு.  அங்கிருக்கும் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும்தான் உண்டு.

ருத்ர யாகம் நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வசிக்கும் ஏழைகள் எங்களைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.  அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு வயதானவள் அழ ஆரம்பித்தாள்.

“ பிறந்ததிலிருந்து இங்கதான் சார் இருக்கோம்.  இப்ப சாப்பிட ஒண்ணும் கிடக்கலை சார்.. எங்க பசங்க எல்லாம் இந்த இடத்தை விட்டுப் போயிட்டாங்க..நாங்க போறதுக்கு வழி தெரியலை.. என் வீட்டுக்காரரு சம்பாதிக்க வழி தெரியாம…வீட்டில கிடக்காங்க.. சார் காலையிலிருந்து ஒரு டீ சாப்பிடக் கூட வழி தெரியலை சார்..”.என்று அழுதபடியே சொல்ல, நான் உருகி விட்டேன்.  ஒரு 20ரூபாயைக் கொடுத்தேன்.  அதை எடுத்துக்கொண்டு டீ குடிக்க ஓட்டமாய் ஓடினாள்.  அந்த அழுகை நிஜம்.  நடிப்பில்லை.

அதே அசிக்காட்டில் இன்னொரு பக்கம்.  வற்றிப் போன மேல குளம் இருக்கும் அருகில். தனித்தனியாக சொகுசு விடுதிகள் கட்டுகிறார்கள்.  கட்டிய விடுதிகளைப் பார்க்கும்போது பிரமிப்பு அடங்கவில்லை.  நம்ம அசிக்காடா என்பதை நம்ப முடியவில்லை. நீச்சல் குளம் தனியாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பக்கம் புராதன பெருமாள் கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது.   ஆனால் கருமுத்து தியாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் அசிக்காட்டின் வேறொரு பகுதியில் பெரிய இடத்தை வளைத்துப் போட்டு சொகுசு வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜாரித்ததில் விடுதிகளில் தங்க மேலை நாட்டினர்தான் வரவேண்டுமாம்.  அசிக்காடு இன்னும் சில மாதங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளது. என்ன இருந்தாலும் நாங்கள் பார்த்த அசிக்காடு இருக்கப் போவதில்லை.

நியாயமா?



அழகியசிங்கர்

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் பத்திரிகைகள் வாங்குவேன்.  திங்கட் கிழமை தினமணி,  புதன் கிழமை தினத்தந்தி.  சனிக்கிழமை தமிழ் இந்து. ஞாயிற்றுக்கிழமை தமிழ் இந்து, தினமணி, தினமலர்.  ஏன் அப்படி வாங்குகிறேன் என்று கேள்வி கேட்கத் தோன்றும்.  புத்தகங்கள் பற்றிய செய்திகள் இந்தக் கிழமைகளில் இந்தப் பத்திரிகைகளில் வெளிவரும்.

இதனால் நாம் பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.  ஓரளவு புத்தகங்களைப் பற்றி தகவல்களை இப் பத்திரிகைகள் தருகின்றன.  இது மாதிரி யாரும் செய்வதில்லை.  உண்மையில் அனுப்பப் படுகிற எல்லாப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது கூட இப் பத்திரிகைகளால் முடியாது. ஒரு சமயம்  விருட்சம் வெளியீடாக வந்த காஞ்சி மகானைப் பற்றிய புத்தக விமர்சனம் தினமணியில் வந்தது. அது வெளிவந்தவுடன் தொடர்ந்து போன் வந்து 100 பிரதிகள் வரை விற்றது.  என்னால் நம்ப முடியவில்லை.  ஆனால் இலக்கியப் புத்தகங்களுக்கு இந்த மதிப்பு கிடையாது.  இரண்டு மூன்று போன்கள் வந்தால் ஜாஸ்தி.  பெரும்பாலும் விஜாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள்.   இருந்தாலும் விருட்சம் வெளியீடாக வரும்  புத்தகங்களை அனுப்பிக் கொண்டிருப்பேன்.  

இன்றைய தினமணி (09.03.2020) இதழில் என் நாவலைப் பற்றி நூல் அரங்கத்தில் வரப்பெற்றோம் என்ற பகுதியில் குறிப்பு வந்திருந்தது.  பெரிய ஏமாற்றமாக இருந்தது எனக்கு.  

தனி இதழ் நன்கொடை ரூ.20 என்று மட்டும் பிரசுரம் செய்திருந்தார்கள்.  அது நாவல் என்றெல்லாம் குறிப்பிடவில்லை.  படித்துவிட்டு புத்தக விமர்சனம் செய்வார்களென்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். தினமணியில் அரைகுறையாய் வந்ததைப் படித்து இரண்டு பேர்கள் போன் செய்தார்கள்.  அவர்களுக்கும் பெரிய குழப்பம்.  அந்தத் தலைப்பு ஒரு நாவலின் தலைப்பு என்று புரியவில்லை. நாவலை வாங்குவதற்குப் பதில் நான் கொண்டு வரும் விருட்சம் பத்திரிகைக்கு ரூ.20 அனுப்புகிறேன் என்று ஒருவர் குறிப்பிட்டார்.  பெரிய ஏமாற்றம் எனக்கு. நான் எதிர்பார்த்தது நாவல்.  ஒரு தகவலைச் சரியாகத் தர தினமணி தவறி விட்டது என்று எனக்குப் பட்டது. 

கொரோனா

                 

               அழகியசிங்கர்

 தெருவில் 

நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத்

திறந்து 

தெருவில் இறங்கினான்

சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம்

காதில் விழ 

யாரும் கண்ணில் படவில்லை தெருவில்

நடந்தவன் 

திரும்பவும் வீட்டிற்குள் சென்று

கட்டிலின் அடியில் போய் 

பதுங்கிக்கொண்டான்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர் 

 ஜான்ஸி ராணி கவிதை

முற்பகல் பிற்பகல்

மதியம் முன் அந்தி

ஏதோ ஒரு யாமம்

எதிர்பார்த்த

அல்லது

எதிர்பாரா

ஏதோ ஓர் க்ஷணம்

நீ வரக்கூடும்

தர்மராஜன் உன் நாமம்

எருமையுன் வாகனம்

என்பதென்

கேள்விஞானம்

நீ வருவதில்

ஒன்றுமேயில்லை

சுவாஸ்யமெல்லாம்

இந்த காத்திருப்பில்தான்.

நன்றி : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் – ஜான்ஸி ராணி – பக் : 70 -விலை : ரூ.80 – முதல் பதிப்பு : டிசம்பர் 2019 – வெளியீடு : வாசகசாலை பதிப்பகம், சென்னை 600073 தொடர்பு

எண்கள் : 9942633833, 9790443979

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 132


அழகியசிங்கர்  




 பகிர்வு




ஆர். ராஜகோபாலன் 

பக்கத்துக் கோயிலில் தமிழ்த்தலைவன்* பற்றிய பொழிவு

ஒரு நூறு பேருக்கும் மேல் வருகை சுவரோரத்தில்

நெகிழி நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு ஒவ்வொனறாய்

 வெள்ளை சிகப்பு நீல வண்ணங்களில் எடுத்துப்

போட்டுக்கொள்கிறார் வருபவர் ஒவ்வொருவரும்

ஒன்று மட்டும் கடைசியில் தேறவேயில்லை ஒரு கால்

முறிந்து தள்ளாடுகிறது இப்பக்கமும் அப்பக்கமும்

கடைசி வரிசைக்காரர் எச்சரிக்கிறார் இதைச்சொல்லி

இப்போது வருவோரையெல்லாம் மீண்டும் மீண்டும்

யாரேனும் உடல் பருமனானவர் உட்கார்ந்திருப்பாரோ

கீழே விழுந்திருப்பாரோ மேற்கொண்டு என்ன ஆயிற்றோ

நல்ல வேளை இப்போது அதற்கு தேவையில்லை

உடல் சுருக்கி கண்களை மூடிமூடித்திறந்து

உடைந்த நாற்காலிக்குள் படுத்திருக்கிறது

ஒரு பழுப்புநிறக் குட்டிப்பூனை

*தமிழ்த்தலைவன்: பேயாழ்வார்

நன்றி : கால்நடைக் கவிதைகள் – ஆர்.ராஜகோபாலன்,  வித்யுத் பப்ளிகேஷன்ஸ், மனை எண்.10 மேட்டுத்தெரு, நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை, பேசி : 900 310 76 54  பக். 64 – விலை : ரூ.100  

கனவு மெய்ப்பட வேண்டும்…

 

அழகியசிங்கர்

எலிஸபத் கில்பர்ட் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஈட், பிரே, லவ்.  இது ஒரு சுயசரிதம்.  இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.  உலகம் முழுவதும் இந்தப் புத்தகம் 6 மிலியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. 1 மிலியன் என்றாலே பத்துலட்சம் இருக்குமென்றாலும் 6 மிலியன் என்றால் 60 லட்சம் பிரதிகள்.  நினைத்தே பார்க்க முடியவில்லை.

இப்படி என் புத்தகம் ஒன்று விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நான் அதை அச்சடிப்பதற்கும் அனுப்புவதற்கும் திண்டாடிப் போய்விடுவேன்.  நல்லகாலம் எனக்கு ஆண்டவன் அதுமாதிரி அருள் புரியவில்லை. லட்சமே வேண்டாம்.  ஆயிரக்கணக்கில் ஒரு புத்தகம் விற்றால் கூட போதும். வேண்டவே வேண்டாம் நூற்றுக் கணக்கில் விற்றால் போதும்..

சுய சரிதம் என்பதால் இப்புத்தகம் சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.  348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 30 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். அதற்குள்ளேயே நிறையா மின்னல்கள் இப் புத்தகத்தில்.    ..பூமியில் கால் ஊன்றி நிற்கவேண்டும்.  நாலு கால்களில் நிற்பதுபோல் அழுத்தமாக நிற்க வேண்டும்.  அப்போதுதான் இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்க முடியும்.  இந்த உலகத்தை நீ மூளையைப் பயன் படுத்திப் பார்க்காதே..மனதின் வழியாகப் பார்.  அப்போதுதான் கடவுளை அறிய முடியும்.எலிஸபத் இப்போது நியூ ஜெர்சியில் வசிப்பதாக இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. 

இந்தப் புத்தகத்தை நான் ஏதோ பேப்பர் கடையில் வாங்கினேன் என்று நினைக்கிறேன். 

ஒரு தகவல்



அழகியசிங்கர்



இந்த மாதம் (மார்ச்சு 2020) தீரா நதியில் “இரண்டு பிரதிகள் மட்டும்’ என்ற நான் எழுதிய கட்டுரை பிரசுரமாகி உள்ளது. அவசியம் படிக்கவும். உங்கள் கருத்துக்களை navina.virutcham@gmail.com தெரிவிக்கவும்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

 படிப்பு

கால சுப்ரமணியம்

படிப்பதென்பது சிரமமான காரியம்தான்.

படித்தால் அறிவு வருகிறது

எதையும் யோசிக்க வைக்கிறது. 

மற்றவர்களுடன் 

எரிச்சலடைய வேண்டியிருக்கிறது

பிழைக்கத்தெரியாதவனாகிறான் 

வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு 

உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான்.

கண்களில் தீட்சண்யம் மங்கி 

கண்ணாடி போடுகிறான். 

வேலைகளைத் தட்டிக் கழித்து 

அவசரமாய் மேய்ந்து 

தூக்கமில்லாமல் அசைபோடுகிறான்.

மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும் 

கனத்த புத்தகங்கள் 

மந்திர எழுத்துகள் 

இவனுக்குச் சாதாரணமாகின்றன. 

முகம் கடுத்து தலை நரைக்கும் 

வழுக்கையும் விழும் , 

நெற்றியில் கோடிழுக்கும். 

போதைவஸ்து வேறு தேவையில்லை 

விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான் 

மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை 

எண்ணிச் சிரிக்கிறான். 

படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப் 

படாதபாடு படுவான் 

அவர்கள் சொல்வதைத் 

தனதாகப் பாவித்துக் கொள்வான்

சுயமிழப்பான் 

வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு 

உயிரையும் விடுவான். 

படிப்பதைவிட ஆறறிவுக்கு 

வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன?

நன்றி : மேலே சில பறவைகள் – கால சுப்ரமணியம்  லயம் வெளியீடு – பக். 88 – விலை : 70 – தொலைபேசி : 9442680619