மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 140

அழகியசிங்கர்

அப்பாவின் முகம்

இரா.மதிபாலா 

அப்பாவின் காதலி 

வந்திருந்தார் 

இங்கு 

முன்னாள் என 

எழுதுவதில் உடன்பாடு இல்லை 

பருவத்திற்கேற்ப மனசில் 

உடன் பயணிக்கவே 

செய்தவள் 

நேற்று வரை.. 

எழுத்திலும் தொடாதபடி 

காதலும் நட்புமாய் 

மனமூச்சில் இருந்தவள்.

அப்பா தன் துக்கப்பொழுதிலும் 

மகிழ் பொழுதிலும் 

சில நொடிகள் யாரும் 

அறியாதபடி 

அவளை உச்சரிப்பார் 

அவள் 

அருகிருந்த வாசமுணர் உயிர்ப்போடு…

இதோ

வந்திருக்கிறாள்

அம்மாவிற்கு அவள் 

புதுமுகம்.

எனக்கு அவள் 

அப்பாவின் 

இன்னொரு முகம்.

அப்பாவின் 

இளமை வாசம் 

அவளிடம் இன்னும் 

வீசுகிறது

அப்பா படத்தின் 

சம்பங்கி மாலை போல

நான் 

அவரை வரச்சொல்லி 

கைப்பிடித்து அமர்த்தினேன் 

அப்பாவை அமர்த்தியது 

போலவே  

நன்றி :  அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் – இரா.மதிபாலா – வெளியீடு : தேநீர் பதிப்பகம், 24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை 635851 தொடர்புக்கு : 9080909600 – மொ.பக்: 72 – விலை : ரூ.80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/139

அழகியசிங்கர்  

ஒரு போதும்

பவித்ரன் தீக்குன்னி 

மொழிபெயர்ப்பு : என்.டி.ராஜ்குமார்

அம்மாவும் அக்காவும் குடிசையும் 

தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது 

மண்ணெண்ணை மணக்கின்ற 

இருட்டிலிருந்து 

எழுந்துவந்த குழந்தை 

இறைவனிடம் கேட்டது 

ஒருபோதும் தேயாத ஒரு பென்சில் 

வேண்டுமென்று 

இறைவனும் நல்ல ஒரு பென்சிலை 

கொடுத்துவிட்டுச் 

சொன்னான் 

பத்திரமாக வைத்துக்கொள் 

ஒருபோதும் எழுதக்கூடாது.

நன்றி :  பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் – மொழிபெயர்ப்பு என்.டி.ராஜ்குமார் – வெளியீடு : புது எழுத்து – 3/167 ஸ்ரீராமுலு நகர், காவேரிப்பட்டிணம் 636 112, கிருஷ்ணகிரி மாவட்டம் – பின்கோடு : 9842647101 – பக் : 80 – விலை : 75 – வெளியான ஆண்டு : 2010

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 138

அழகியசிங்கர்

எனக்கான காலம்

ஆசு

எல்லாருக்கும் உண்டு

ஒரு காலம்

நடை பழக

ஒரு வண்டி

அரவணைக்க

ஓர் அம்மா

இளைப்பாற

ஓர் அப்பா

தாங்கி நிற்க

ஓர் அன்புத் துணைவி

எல்லாருக்கும் வாய்த்திருக்கும்

இப்படியாக காலம்

எனக்கும் வாய்த்திருக்கிறது

என் கைபிடித்தவள்

வாழ்வின் தணலில் உருக

தோள் சுமக்கும்

என் மழலைகள்

நாளும் பசி உண்ண

எனக்கும்

இப்படியாகத்தான் உண்டு

எனக்கான காலம்

நன்றி : என்றொரு மௌனம் – ஆசு – தவம் வெளியீடு, 4 கந்தப்பன் குடியிருப்பு, சூளை மேடு, சென்னை -94 – வெளியான ஆண்டு : 1999 – விலை : ரூ.15 – பக்கம் : 112

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 137

அழகியசிங்கர் 

நதி

கி.தாமரைச்செல்வன்

மலையினிடுக்கில் 

சுனையாய் தோன்றி

போகிற போக்கில்

ஒடுங்கிச் சிறுத்து 

ஓசை காட்டி

அகன்று பெருத்து

அமைதியாய் நடந்து

ஆர்ப்பரித்து

அருவியாய் விழுந்து

நதிக்கரைதோறும்

நாடு வளர்த்து

செம்புலம் பெயர்ந்தால்

செந்நீராக

கடல்மடி நுழைந்தால்

வானிறமாக 

நன்றி : மனதினில் கவிதை பூவெழுத – கி.தாமரைச்செல்வன் – பொதினி பதிப்பகம், 9 சுப்பையா நகர் அனெக்ஸ், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 056 பக்கங்கள் : 100 – விலை ரூ.120 – தொடர்புக்கு : 9841086696

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 136

அழகியசிங்கர்  

சிமெண்ட் பெஞ்சுகள்

நஞ்சுண்டன்                                                     

வசந்த காலத்தில்

பூத்துக்குலுங்கும் மரங்களின் 

கீழிருக்கும் 

சிமெண்ட் பெஞ்சுகள் 

கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் 

அழைக்கின்றன 

‘வா. உட்கார். ஓய்வெடுத்துக்கொள். 

கோடை வெயிலிலோ 

விநயமாய் வேண்டுகின்றன

‘மன்னித்துக்கொள். வேறிடம் தேடு.’

சிமெண்ட் பெஞ்சில்

அமரும் யாரும் அறியார் 

தனக்கு முன்னும் பின்னும் 

அமர்கிறவர் யாரென்று.

சிமெண்ட் பெஞ்சுகள் மட்டும் அறியும் 

உட்காரும் மனிதர் யாவரையும்.

நன்றி : சிமெண்ட் பெஞ்சுகள் – நஞ்சுண்டன் – பக்கங்கள் : 52 – விலை : ரூ.25 – ஆண்டு : நவம்பர் 1996

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2>- 135

புத்தரின் படுகொலை


எம்.ஏ.நுஃமான்

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். 

சிவில் உடை அணித்த 

அரச காவலர் அவரைக் கொன்றனர். 

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே 

அவரது சடலம் குருதியில் கிடந்தது. 

இரவில் இருளில் 

அமைச்சர்கள் வந்தனர்

 ‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

 பின் ஏன் கொன்றீர்?’

 என்று சினந்தனர்.

 ‘இல்லை ஐயா, 

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை 

இவரைச் சுடாமல்

 ஓர் ஈயினைக் கூடச் 

சுடமுடியாது போயிற்று எம்மால் 

ஆகையினால். 

என்றனர் அவர்கள்.

‘சரி சரி

 உடனே மறையுங்கள் பிணத்தை’

 என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். 

சிவில் உடையாளர் 

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் 

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் 

*சிகாலோகவாத சூத்திரத்தினைக் 

கொழுத்தி எரிந்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது 

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

(சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.)

நன்றி : மழை நாட்கள் வரும் – எம்.ஏ.நுஃமான் – பக்கங்கள் : 80 – வெளியீடு : அன்னம் வெளியான ஆண்டு : 1983 – விலை : ரூ.5  

பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் 100 கவிதைகள் அடங்கிய தொகுதியை ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். இது இரண்டாவது தொகுதி.  கவிதைத் தொகுதிகளிலிருந்து மட்டும் கவிதைகள் எடுக்கப்படுகின்றன.

அமேசான் கிண்டலில் நவீன விருட்சம் 112வது இதழ்

அழகியசிங்கர்

விருட்சம் 111வது இதழ் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை.  ஆனால் முடிந்த மாதம்  டிசம்பர் 2019.  இதைத் தொடர்ந்து புத்தகச் சந்தை ஜனவரி மாதம் நடந்தது.  112வது இதழ் கொண்டு வர முடியவில்லை.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் முழுவதும் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருந்த புத்தகங்களை அடுக்கி வைப்பதில் பெரும்பாலான நேரம் போய்விட்டது.  கூடவே நண்பர் ஒருவரும் உதவி செய்தார். 

மார்ச்சு மாதம் வந்தவுடன் கிட்டத்தட்ட 112வது இதழை முடித்து விட்டேன்.  ஒருவழியாக அச்சில் கொண்டு வரத் தயாராக இருந்தபோது கொரானா விருட்சத்தைத் துரத்தி விட்டது.  இதோ இதழை அச்சடிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். 

ஆனால் நவீன விருட்சம் இதழை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது.  ஏற்கனவே நவீன விருட்சம் இதழ் 105 ஐ நான் அமேசான் கிண்டலில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.   கிண்டலில் அந்த இதழை பலர் வாசித்திருக்கிறார்கள்.  அதேபோல் 112வது இதழையும் கொண்டு வர நினைத்து கொண்டு வந்து விட்டேன்.  கிண்டலில் நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்காமல் பக்கங்களை வாசிக்கலாம்.  80 பக்கங்கள் கொண்ட இந்த இதழை சில மணித்துளிகளில் வாசித்து விடலாம். நான் இதுவரை அமேசான் கிண்டலில் 9 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். 

வழக்கம்போல் விருட்சம் 112வது இதழில் பங்குப் பெற்ற படைப்பாளிகள்.
  1. பதில்கள் – கேள்விகள் – பா. ராகவன்
  2. பிரதீபன் கவிதை
  3. நானும் – பராசக்தியும் நலம் – 1 – கடிதம் – சுப்பு
  4. அரசியல் + சினிமா + இலக்கியம் – பாதாளச்
    சாக்கடை – கட்டுரை – முத்துக்கிருஷ்ணன்
  5. வனம் தேடும் சிறகுகள் – கவிதை – பிறைநிலா
  6. கடிதம் – வளவ துரையன்
  7. லாரா – சிறுகதை – ரகுராமன் ஜெயராமன்
    8.. சிகப்பு முக்கோண காலம் – கட்டுரை –
    சந்தியா நடராஜன்
  8. அழகியசிங்கர் கவிதைகள்
  9. ஏழை நல்லவனாக இருப்பதில் உலக அதிசயங்களில்
    ஒன்றாகி விட்டது – சிறுகதை – ஸிந்துஜா
  10. மேழி கவிதைகள்
  11. பிரதீபன் கடிதம்
  12. ஸ்ஸ்சுரங்கம் – சிறுகதை – சிறகு இரவிச்சந்திரன்
  13. அதங்கோடு அனீஷ்குமார் கவிதைகள்
  14. சாயல் – சிறுகதை – சத்யா ஜீ பி
  15. ஜீவன் பென்னி கவிதைகள்
  16. எண்ணம் – கவிதை – ந பானுமதி
  17. மழையமைதி – கவிதை – நந்தாகுமாரன்
  18. நேர்த்தி – சிறுகதை – பிரபு மயிலாடுதுறை
  19. அஞ்சலட்டை கதைகள் – அழகியசிங்கர்
  20. மற்றுமொரு மூக்கு வதம் – சிறுகதை
    லதா ரகுநாதன்
  21. உரையாடல் இதோ கிண்டலில் போய் பார்க்க இந்தச் சுட்டியையும் இணைத்துள்ளேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 134

அறிவேனா

சி.சு.செல்லப்பா

கனவுக்குள் கனவு; 

பிளந்து 

இமை திருகி- எழ 

விழித்ததுண்டு 

நினைவுக்குள் நினைவு; 

மூழ்கி 

சொரணை தப்பி – விழ 

உறங்கிய துண்டு

வாழ்வுக்குள் வாழ்வு; 

தெளிந்து 

நேர் ரோட்டில் 

நடந்தேனா 

சாவுக்குள் சாவு; 

வற்றி 

ஓயும் பொழுதை 

அறிவேனா

நன்றி : மாற்று இதயம் – சி.சு.செல்லப்பா – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு – மே, 1974 – பக்கங்கள் : 104 – க்ரவுன் அளவு – விலை : ரூ. 4,00

கொரானாவைப் பற்றி கவலைப் படாத இளைஞர்கள்

அழகியசிங்கர்

எங்கள் தெரு வித்தியாசமானது. தெருவில் எல்லாமே நடக்கும். தெருவை உற்சாகமாக வைத்துக்கொள்பவர்கள் எங்கள் தெரு இளைஞர்கள். சிறுவர்கள். கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடுவார்கள். பின் கேரம் விலையாடுவார்கள். கொரானோவைப் பற்றி கவலைப்படாமல் விலையாடிக் கொண்டிருக்கும் இளைஞார்களின் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். (அவர்களுக்குத் தெரியாமல்)

அசோகமித்திரன் இரண்டு முறைதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்

அழகியசிங்கர்

அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது.  எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார்.  நானும் உடனே போய்விடுவேன்.  நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.  எந்த நேரத்திலும் நான் அவரைப் பார்க்கப் போவேன்.

மேற்கு மாம்பலத்தில் அவருடைய நண்பரின் பெண் கல்யாணத்திற்குக் கூப்பிட்டார்.  எனக்குச் சற்று சங்கடம்தான்.  என்னை யாரென்று தெரியாத ஒரு கல்யாணத்திற்குப் போகிறோமே என்று.  ஆனால் அசோகமித்திரனை அழைத்துக் கொண்டு போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் செல்வேன்.  அந்தக் கல்யாணத்திற்கு யாரும் என்னை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் அசோகமித்திரன் என்னை அழைக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் திருமணம் போன்ற வைபவத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் அழைத்துக்கொண்டு வரும்போது அவர் தடுமாறிப் போய்விடுவார்.  ஏன் அவர் இப்படிக் கஷ்டப்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றும். 

இப்படிப் பல இடங்களுக்கு நான் அவருடன் போயிருக்கிறேன்.  இப்படிப் பயணம் செய்யும்போது எங்களிடையே நடக்கும் உரையாடல் முக்கியமாகத் தோன்றும்.  அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தத் தவற மாட்டார். என்னை அறிமுகப்படுத்தும்போது என்னைப் பற்றி உயர்வாகவே அறிமுகப்படுத்துவார். ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போது  முராகாமி என்று ஜப்பான் நாட்டு எழுத்தாளரைப் பற்றி ஒரு முறை கேட்டேன்.  

“அவர் எழுத்தில் சுயமான அனுபவம் சற்று குறைவாக இருக்கிறது,” என்று கூறினார்.

என்னடா இது எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி இப்படி ஒரு அபிப்பிராயம் சொல்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.  ஆல் இந்தியா வானொலியில் கதை படிக்க ஒரு முறை சென்றார்.  கூடவே நானும். அவர் படித்த ஒரு அற்புதமான கதை. விருட்சத்தில் அக்கதையைப் பிரசுரம் செய்தேன்.  அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரிடம் என்னை அறிமுகப்படுத்தி இவரிடமும் கதை படிக்கக் கேளுங்கள் என்று குறிப்பிட்டார். பின்னால் எனக்கும் அவரால் கதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இதை ஏன் இங்கே சொல்கிறேனென்றால் பொதுவாக ஒரு மூத்த எழுத்தாளர் அவருடன் பயணிக்கும் இன்னொரு எழுத்தாளரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.  தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள்.  நான் பலருடன் பயணப்பட்டதால் இதைக் குறிப்பிடுகிறேன்.  ஆனால் அசோகமித்திரன் விதிவிலக்கு.

அவருடைய எந்தப் புத்தகத்தையும் எனக்குக் கையெழுத்து இட்டு எனக்கு அளிப்பார்.  அவருடைய தள்ளாத வயதில்தான் என்னால் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது.  நான் அவரை சுலபமாகச் சந்தித்து விடுவேனே தவிர அவரை நான் இருக்குமிடத்திற்குக் கூப்பிட்டதே இல்லை.  காரணம் அவருடைய முதுமை. 

பொதுவாக என் வீட்டிற்குப் பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்.  அசோகமித்திரனும் இரண்டு முறை வந்திருக்கிறார்.  ஒரு முறை நான் மயிலாடுதுறையிலிருந்தபோது.  அங்கு வள்ளலார் கோயில் தெருவில் குடியிருந்தேன்.  மயிலாடுதுறைக்கு வரும் எழுத்தாள நண்பர்களெல்லோரும் என் வீட்டிற்கு வராமலிருக்க மாட்டார்கள்.  அசோகமித்திரனும் அவர் மனைவியுடன் ஒருமுறை வந்திருந்தார்.  அவருடைய மூதாதையர் ஊர் மயிலாடுதுறை.  அங்கு வசிக்கும் மருத்துவர் குரு அவருடைய உறவினர்.  வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்குத்தான் அவர் வந்திருந்தார். 

இங்கேயெல்லாம் இனிமேல் எங்கே வரப் போகிறேனென்று அவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

சென்னையில் நானிருக்கும் வீட்டிற்கு இரண்டாவது முறை வந்திருந்தார்.  அன்று மாடிப்படிகளில் ஏற சிரமப்பட்டார். உண்மையில் மாடிப்படிகளைச் சபித்தபடியே வந்தார்.  அவர் வருவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.  

என் தந்தை இறந்தபோதுதான் அவர் வந்திருந்தார்.  

பி.கு : 1 அசோகமித்திரன் நினைவுகள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  100 பக்கங்களுக்கு மேல் எந்தக் கட்டுரைப் புத்தகத்தையும் எழுத மாட்டேன்.  அசோகமித்திரன் குறித்து இது வரை 77 பக்கங்கள் எழுதி விட்டேன். 

பி. கு 2 : ஒரு முறை புகைப்பட நெகடிவ் ஒன்றைக் கொடுத்து அவர் குடும்பப்  புகைப்படத்தை எடுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார்.  புகைப்படத்தை எடுத்த பிறகு எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இன்னொருமுறை எடுத்துக்கொடுத்துவிட்டேன்.  என் கண்ணில் அந்தப் புகைப்படம் தற்செயலாக இப்போது கிடைத்தது. அவர் திருமணத்தின்போது எடுத்த புகைப்படமாக இருக்குமென்று நினைக்கிறேன்.