துளி – 109 – மணல்வீடு கொடுத்த கொடை

அழகியசிங்கர்

இந்த இதழ் மணல் வீடு பார்க்கும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  ‘சிறுபத்திரிக்கைகளின் சிறு என்னும் சாராம்சம்’ என்ற தலைப்பில் பிரவீன் பஃறுளியின் கட்டுரைதான் காரணம்.  

ஈரோட்டில் 03.08.2019 அன்று நடைபெற்ற சிற்றிதழ்களுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற ‘நவீன விருட்சம்’ சிறு சஞ்சிகை குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை.

அக்கட்டுரையில் காணப்பட்ட வைர வரிகளை இங்கே அளிக்கிறேன். 

….இந்த நவீன எழுத்தியக்கதின் ஊடும் பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித்தடங்களும், இன்றைய குழப்படிகளுக்கும் இடையேயான ஒரு நெடிய பாதையில் “விருட்சம் இதழ் தனது அசாதாரணமான நிதானத்துடனும்,  பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது…..

…விருட்சம் தன்னூடாகக் குறிப்பாகக் கவிதைகளின் வழி சாட்சிப் படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்…..

…..இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவிக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்குச் சிறிதும் உட்படாது, விலகி நின்று நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ் காலப் பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது… 

\

..ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது…

இக் கட்டுரையை எழுதிய பிரவீன் பஃறுளியைப் பாராட்டுகிறேன்.  மணல் வீடு ஹரிகிருஷ்ணனுக்கும் என் நன்றி.

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி



அழகியசிங்கர்

மயிலாடுதுறையில் இருக்கும்போது ஒரு இலக்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்  ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ஆயிரம் புத்தகங்கள் என்றால் அளவு என்ன என்று பார்ப்பதற்காகப் போனேன்.  

அங்குப் போய் பார்த்தவுடன் ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை.  அந்த அளவிற்கு அடுக்கி வைத்திருந்தார். மூன்று அடுக்குகளாக வைத்திருந்தார்.  

வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அப்படி அடுக்க வேண்டுமென்று தோன்றியது.  என் நூலகத்தில் அதுமாதிரி ஆரம்பித்தேன். 

புத்தகங்களை நிரப்புவதற்கு முன்னை விட அதிக இடம் கிடைத்தது.  முன்பு நான் புத்தகங்களைப் படுக்க வைத்திருந்தேன்.  அதன் மேல் மேல் என்று அடுக்கிக்கொண்டு போவேன்.  ரொம்ப இடத்தை அது எடுத்துக்கொண்டு விடும்.

நண்பர் வீட்டிலிருப்பதுபோல் நீளமாகப் புத்தகங்களை நிற்க வைத்திருந்தேன்.  புத்தக முதுகு பார்ப்பவர்களைக் கவர்ந்து விடும். மேலும் அதிக இடம் கிடைக்கும்.  நான் வசிக்கும் வீட்டிலேயும் கட்டிலில் அப்படி அடுக்கத் தொடங்கினேன். மேலும் முதுகைப் பார்க்கும் போது என்ன புத்தகம் என்று தெரிந்து விடும்.

ஊரிலிருந்து வந்தவுடன் எனக்கு இரண்டு நாட்கள் இப்படிப் பொழுது போயிற்று.  மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஏகப்பட்ட புத்தகங்கள் நீள வாக்கில் அடுக்க வேண்டும்.

ஒரு இரும்பு ராக் முழுவதும் 33 வருடங்களாகச் சேகரித்து வைத்திருக்கும் விற்காத விருட்சம் இதழ்களை (என்னை விட்டுப் போக விரும்பாத) நீள வாக்கில் அடுக்கி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 11 – 20.01.2020 அன்று நடந்த நிகழ்ச்சி

அழகியசிங்கர்

“புத்தகக் காட்சி முடிந்து விட்டது. என் புத்தகமான காலியாக இருக்கின்றன நாற்காலிகள் என்பதைக் குறித்து செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் பேசியதை ஒளி பரப்புகிறேன். ஆனால் அங்கே பேசியதை ஒளிபரப்பு செய்வதில் தாமதம். கணினியின் ஹார்ட் டிஸ்க் போய்விட்டது. முகநூலில் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. இதோ இப்போது பதிவு செய்கிறேன்.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 9 – 18.01.2020 அன்று

அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில் எடுத்த ஒளிப்பதிவுகள் முழுவதையும் நான் இன்னும் ஒளிபரப்பவில்லை. அதன் பின் நண்பர்கள் புத்தகக் காட்சி அனுபவங்களைக் குறித்து எடுத்த ஒளிப்பதிவுகளை நான் இன்னும் பயன் படுத்தவில்லை.
கவிஞர் ஜானு இந்து அவர்கள் அழகியசிங்கரின் நாவலான ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் என்ற புத்தகம் குறித்து உரையாடிய ஒளிப்பதிவு

நீங்களும் படிக்கலாம்..

.

அழகியசிங்கர்

இன்றோ நாளையோ 925 பக்கங்கள் கொண்ட நாவலைப் படித்து விடுவேன். ஒரு பங்களூர் பயணத்தின்போது ஆரம்பித்தேன். பின் இன்னொரு பயணம் போது தொடர்ந்து படித்தேன்.  800 பக்கங்கள் வரை படித்து முடித்தேன்.  கிட்டத்தட்ட இன்னும் 200 பக்கங்கள் வரை படிக்க வைத்திருந்தேன். பின் புத்தகக் காட்சியை முன்னிட்டு புத்தகங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக என் கவனம் திரும்பியது.  ஆனால் எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டுமென்று தோன்றியது.

இதோ இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டும்.  புத்தகத்தைப் படித்து விடலாம் ஆனால் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.  நீங்களும் படிக்கலாம் என்ற என் முதல் புத்தகத்தை ( 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்) எழுத்தாளர் அசோகமித்திரனிடம் கொடுத்தேன்.  அவர் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.  ‘ஒரு புத்தகத்தைப் படித்துவிடலாம்.  ஆனால் அப் புத்தகத்தைப் பற்றி எழுதுவது சுலபமல்ல.  சமயத்தில் என்ன எழுதவேண்டுமென்று தோன்றாது,’ என்றார். 

உண்மைதான்.  ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு என்ன எழுதுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். பொதுவாக ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, பிரமாதம் இதில் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒரு புத்தகத்தைப் பற்றி என்ன எழுதுவது?  இதை இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது எதிர்கொள்ளாமலிருக்கப் போவதில்லை.  ஆனால் ஒன்றுமே எழுதாமல் விட்டுவிட்டால் இந்தப் புத்தகம் எந்தக் குறிப்பும் இல்லாமல் என் கவனத்திலிருந்து மறந்து விடும். அதனால் நான் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதாமல் இருக்க மாட்டேன்.  ஆனால் வாசிக்கிறவர்கள் இதை ரசிக்க முடியுமா? இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்ன நினைப்பார் என்றெல்லாம் தெரியாது. இதோ இன்னும் ஒரு நாள் இரண்டு நாளில் எழுத வேண்டியதுதான்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 130

அழகியசிங்கர்  

‘உயிருள்ள பத்திரிகை’

மீரா

லாரி மோதி

மாடு சாவு

மாடு முட்டிக்

கிழவி மரணம்

கணவன் மனைவியின்

கழுத்தை அறுத்தான்

மருமகன் மாமன்

மண்டையை உடைத்தான்

இவை தாம்

என் தமிழ் இனத்தை மேலே

உயர்த்த வந்த

ஒரேஉயி ருள்ள

பத்திரி கையிலே

பளிச்சிடும் செய்திகள்

நன்றி : மீரா கவிதைகள் (முழுத் தொகுப்பு) – அன்னம் மனை எண்.1 நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 077 கை பேசி : 7598306036 – பக்கங்கள் : 573 – விலை : ரூ.400  முதல் பதிப்பு : 2015 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2– 129

அழகியசிங்கர்  

பிம்பம்

சுரேஷ் ராஜகோபால்

வீட்டில் நிலை கண்ணாடி

அதில்தான்

தினமும் முகம் பார்ப்பேன்

ஒரு அருவருப்பான பிம்பம்தான்

தெரிந்தது

எனக்குள் ஒரு அகம்பாவம்

குற்றம் அதில்தானே என்றே

கண்ணாடியை சுத்தம் செய்தேன்

துணிகொண்டு துடைத்தேன்

மின்னியது

மறுபடி போய் நின்றேன்

பிம்பத்தில் மாற்றமில்லை

பிழை

ஆடியிலா

என்னிலா-

வியந்து நின்றேன்

நன்றி : நான் என்னைத் தேடுகிறேன் – சுரேஷ் ராஜகோபால் – பக்கங்கள் : 104 – விலை : ரூ.75 – குவிகம் பதிப்பகம் – தொலைபேசி : 9442525191 – 9791069435

துளி – 103 – குமுதத்திற்கு நன்றி

அழகியசிங்கர்

இன்று குமுதம் பத்திரிகையில் என் நாவல் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý குறித்துபு(து)த்தகம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள்.  குமுதம் ஆசிரியருக்கு நன்றி.  

இந்த ஆண்டு என் இரண்டாவது நாவலைக் கொண்டு வருவதென்று பெரிய முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன்.  இந்த ஆண்டு நாவல் யுகம்போல் தோன்றுகிறது.  புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட நாவல்களை வாங்கியிருக்கிறேன்.  

குமுதம் கீழ்க்கண்ட குறிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
‘தனி இதழ் நன்கொடை ரூ.20’  என்ற நாவலைப் பற்றி 5.2.2020 குமுதம் இதழில் குமுதம் நூலகத்தில் பு(து)த்தகம் என்ற பகுதியில் வெளிவந்த குறிப்பு.       
‘சிற்றிதழ்கள் பெருகியிருந்த காலம் மறைந்து அருகிவிட்ட இக்காலத்தில், சிற்றிதழ் ஒன்றினை நடத்தும் ஆசிரியர் முதல் அதில் எழுதுவோர், வாசகர் என அத்தனை பேரின் அத்தனை கணங்களையும் கண் முன் நிறுத்தும் நாவல்/நடையிலும் நயத்திலும்  நவீனத்துக்கு ஏற்ற நளினமான மாற்றங்களுடன் புதிய உத்தியோடு சுவாரஸ்யமான கதையாக நகர்கிறது. படிக்கப் படிக்க, நிஜமா? கற்பனையா? என்ற கேள்வி நிறைய முறை மனசுக்குள் எழுவது நிஜம்!’

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

அழகியசிங்கர்

போன சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை, குவிகம் கூட்டத்திற்கு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அம்புஜம்பாள் தெருவிற்குச் சென்றேன்.  நான் ஐந்தரை மணிக்கே அங்குச் சென்றுவிட்டேன்.  இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்க வேண்டுமென்றுதான்.  

சமீபத்தில் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.  நான் அவர் வீட்டின் முன் நுழைவதற்கு வண்டியை வைத்துவிட்டுத் திரும்பினேன்.  என்னை கல்கி  பொறுப்பாசிரியர்  (அவர் மனைவியுடன் வந்திருந்தார்) ரமணன் கூப்பிட்டார்.  

“கூட்டம் ஐந்து மணிக்கென்று போட்டிருக்கிறார்கள்.  யாரும் வரவில்லையே?”

“இல்லை ஆறுமணிக்குத்தான் கூட்டம்.  தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.  நான் இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கப் போகிறேன்,” என்றேன்.

இ.பாவைப் பார்க்க கல்கி ஆசிரியரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.  இ.பா வீட்டு வாசலில் காலிங்பெல்லை அழுத்தியவுடன், இ.பாவே கதவைத் திறந்தார்.  கொஞ்சம் பலவீனமாகப் பார்க்கத் தென்பட்டாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.  அவருக்கு 90 வயது.  அந்த வயதிலும் கடுமையான அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டிருக்கிறார். 

 அன்றுதான் கல்கி பத்திரிகைக் கடைகளில் வெளிவந்திருந்து. அதில் üஈஸ்வர அல்லா தேரே நாம்ý என்ற இந்திரா பார்த்தசாரதியின் கதை.  ஒரு பக்கம்தான் கதை.  அதைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார் கல்கி ஆசிரியர். உடனே கடையில் கல்கி பத்திரிகையை வாங்கவேண்டுமென்று தோன்றியது. 

கூட்டம் முடிந்து திரும்பும்போது நான் வீட்டிற்குப் போகிற வழியிலேயே கல்கி பத்திரிகையை வாங்கினேன்.  கல்கி வித்தியாசமான தோற்றத்திலிருந்தது.  இ.பா கதை கன கச்சிதமான வடிவத்தில் ஒரு பக்கத்திலிருந்தது. இந்த வயதிலும் உடம்பு முடியாதத் தருணத்திலும் கதை எழுதி கல்கிக்கு அனுப்பியிருந்தார்.  எனக்கு என்னமோ கல்கி வாசகருக்கு இந்தக் கதை புரியுமோ என்று தோன்றியது.

கல்கியின் லே அவுட் பெரிய வடிவத்தில் மாறி இருந்தது.    68 பக்கத்தில். இரண்டு அல்லது மூன்று கதைகள்.  மூன்று தொடர்கள். தொடர்களும் இரண்டு மூன்று பக்கங்களில் அடங்கி விடுகின்றன.   வழக்கம் போல கல்கியின் அலை ஓசை.  முன்பெல்லாம் கல்கியில் தொடர் நாவல்கள் வரும்.  எனக்குத் தெரிந்து பி ரெங்சநாயகியின் தொடரை வாசித்திருக்கிறேன்.  ஜெகசிற்பியின் கிளிஞ்சல் கோபுரம். எப்போதும் கல்கியில் திரைப்பட நாயகிகளின் அட்டைப் படங்கள் வருவதில்லை.  பொறுப்பாசிரியர் ரமணனின் முயற்சியில் கல்கி சிறப்பாக இருக்கிறது. 

ஒரு புகைப்படம் கிடைத்தது

அழகியசிங்கர்

புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன்.  இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும்.  புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.

திரும்பவும் புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஸ்டீல் ராக்குகளை  கொண்டு வந்து எல்லாப் புத்தகங்களையும் சாக்கு மூட்டைகளிலிருந்து எடுத்து அடுக்குவேன்.  அப்போது எல்லாம் புத்தகங்களும் இடம் மாறிவிடும்.  முன்பு கவிதைகள் இருந்த ஸ்டீல் ராக்கில் ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பேன்.  

தினமும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்களைத்தான் ஒதுக்குவேன்.  அதற்குமேல் அதில் ஈடுபட முடியாது.  எனக்கு உதவி செய்ய ஒரு இலக்கிய நண்பரும் வருகிறார்.  

இன்று மாலை கவிதைப் புத்தகங்களாக மூட்டையிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு புத்தகத்திலிருந்து ஒரு புகைப்படம் கிடைத்தது. யாரோ எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.  யார் கொடுத்தார்கள்?  எப்போது கொடுத்தார்கள் என்றெல்லாம் நினைவில்லை.  ஆனால் நண்பர்களுடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றியது. இதோ: