மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

தவசிக்கருப்புசாமி கவிதை

முடிந்துவைத்துக் கொடுப்பவள் மூச்சு 

வருவதும் போவதுமாயிருக்கிறது 

ஓலை வந்தால் நடையழியும் 

அன்றுமில்லை காற்று இன்றுமில்லை குளிர் 

மீறின பண்ணாட்டுக்காரி தொண்டைக்குழியிலென்ன ஆசையோ 

சொத்துக்கு வழக்காடுகிறா ளென்றுச்சொல்லி 

சித்திரத்தை தோண்டி அப்புறத்திலே பதிக்கும் 

செல்ல மகளை தள்ளி வைத்தோம் 

நெய்ப்பந்தம் பிடிப்பவர்களுக்கேது நேரம் 

தலை திரும்பவொட்டாது தொடுதிரை மேய்ச்சல் 

அப்பனாத்தாள் பேச்சுக்கு செவி சாய்ப்ப தென்பதொரு 

அப்பட்டமான பொய் பித்தலாட்டம் 

எசமான் பிழைக்கவா கன்றுகள் சூல் கொள்வது 

பெயர்த்த பணத்திற்கு குதிரைகளோட வேண்டும் 

மலம் ஜலம் புடை சூழ முடைக்கட்டில் கோலோச்சும் 

காய்ச்சல்காரி கருவாட்டுக்கு அனத்துகிறாள் 

ஊசிப்போட்டுக்கொல்லுங்க 

ஊசிப்போட்டுக்கொல்லுங்க 

ஒத்த நூறுருவா தாளுக்கு பழி சுமக்க 

நமெக்கென்ன கேனமா?

நன்றி : அழிபசி – தவசிக்கருப்புசாமி – வெளியீடு : மணல்வீடு – ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453 பக்கம் : 78 விலை : ரூ.80 தொலைபேசி : 09894605371

புத்தகக் காட்சியை முன்னிட்டு தாறுமாறான கவிதைகள்

 

அழகியசிங்கர்

1.

புத்தகக் காட்சி ஓய்ந்து விட்டது

இன்னும் ஓயவில்லை

மனதிலிருந்து

2.

தனி இதழ் நன்கொடை விலை ரூ.20

என் நாவலின் பெயர்

விலை ரூ.20 தா என்று கேட்கிறார்கள்

3.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு

வந்து விட்டேன்

வீடு முழுக்க புத்தகங்கள்

4.

நண்பர்கள் வந்தார்கள்

புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்

பின்

சிரித்தபடியே சென்று விட்டார்கள்

5.

எல்லாரும் வந்தார்கள்

எல்லாம் சரிதான்

ஆனால் நான் நினைத்தபடி

புத்தகங்கள் வாங்கவில்லை

6

புத்தகக் காட்சியில்

சில இடங்களைத்

தவிர்க்க நினைத்தேன்

ஆனால் முடியவில்லை

யூரின் போகுமிடத்தையும்

சாப்பாடு கூடத்தையும்

7.

இந்தப் புத்தகக் காட்சியில்

நாவல்களாக வாங்கிக் குவித்தேன்

என்னன்ன நாவல்கள் என்று கேட்டார்கள்

நான் சொல்லவில்லை

8.

புத்தகங்களை வாங்கியாயிற்று

எப்போது

என்று கேட்கிறார்கள்

அது

எப்போதும் குழப்பம்தான்

9.

வந்தார்கள்

வென்றார்கள்

சென்றார்கள்

10.

பொன்னியின் செல்வன் வத்தியதேவன்

குதிரையேறி

எல்லாக் கடைகளிலும்

இருக்கிறான்

சில சிறுபத்திரிகைகள்.. 2

 

அழகியசிங்கர்

காக்கைச் சிறகினிலே

காக்கைச் சிறகினிலே நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. 144 பக்கங்கள். ரூ.25 தான்.  ஒருவர் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய இதழ்.  ஒரு விளம்பரமில்லாமல் அதிகப் பக்கங்களுடன் எப்படி இதழைக் கொண்டு வந்துள்ளார்கள் என்ற ஆச்சரியம் இல்லாமலில்லை.  பழைய காக்கைச் சிறகினிலே இதழ் பிரதிகள் என் நூலகத்தில் உண்டு.  

வி முத்தையா ஆசிரியர் பொறுப்பில் உள்ளார்.  ஆசிரியர் குழுவில் இரா.எட்வின், முகிலன், அமரந்த்தா, கசன் உள்ளார்கள்.  இது ஒரு இலக்கிய மாத இதழ். புத்தகக் காட்சி முடிந்தவுடன் நிதானமாக வாசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிறுபத்திரிகை

இந்தப் பெயரில் இது இரண்டாவது இதழ் பயணி கொண்டு வந்துள்ளார்.  இந்த இதழ் எனக்கு வந்தபோது நான் அசந்து போய்விட்டேன்.  இதிலும் விளம்பரமில்லை.  பத்திரிகை நடுவில் வண்ண ஓவியங்கள்.  இதன் விலை ரூ.150.  இப்படி சாத்தியமில்லாததைச் சாதிப்பதுதான் சிறுபத்திரைகயில் பங்கெடுப்பவர்கள் வழக்கம்.

இதில் பயணி ஒரு நீண்ட தலையங்க உரை எழுதியிருக்கிறார். நிதானமாக வாசிக்க வேண்டிய பத்திரிகை.  ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய இதழ்.

துளி – 96- புத்தகக் காட்சி நினைவுகள் 7

துளி – 96- புத்தகக் காட்சி நினைவுகள் 7

அழகியசிங்கர்

2019 ஆம் ஆண்டு இறுதியிலும், 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நாவல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் இன்னும் சில நாவல்களையும் ரேச்க்கிறேன். இதுவரை 9 நாவல்களை நான் சேர்த்துள்ளேன்.

தமிழவனின் ‘ஷம்பாலா’, சோ.தர்மனின் ‘பதிமூனாவது மையவாடி”, பா ராகவனின் ‘புல்புல்தாரா’, ‘இறவான்.’

நான் இப்போது கொடுக்கும் லிஸ்ட் தீர்ந்து விடும் என்று சொல்ல வரவில்லை. என் கணக்கில் இதுவரை 9 நாவல்களை வாங்கிவிட்டேன். இன்னும் என்னன்ன நாவல்களை வாங்குவேன் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. வாங்கும் எல்லா நாவல்களையும் படித்து அலசி ஒரு புத்தகம் எழுதுவதாக உள்ளேன். இதற்கு அசிக்காடு மதுர காளி எனக்குத் தைரியம் கொடுக்கட்டும்.

புத்தகக் காட்சி கூட்டம் – 2 – ஒளிப்பதிவு

அழகியசிங்கர்

ஆதிரா முல்லை 11.01.2020 எல் ரகோத்தமன் 
கவிதைத் தொகுதி நிழல் விரட்டும் பறவைகள் குறித்து ஆற்றிய உரை.

நான்கு புதிய புத்தகங்கள் சலுகை விலையில்

அழகியசிங்கர்

சமீபத்தில் 11 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன் புத்தகக் கண்காட்சியை ஒட்டி.  அதில் 5 புத்தகங்கள் நான் எழுதிய புத்தகங்கள்.  நான்கு புத்தகங்களை 20 சதவீதம் தள்ளுபடி செய்து விற்க விரும்புகிறேன்.  விருட்சம் ஸ்டால் 430க்கு வந்திருந்து வாங்கவும்.

1. தனி இதழ் நன்கொடை ரூ.20 

2. துளிகள் 1

3. வாசிக்க வாசிக்க 1

4. இன்னும் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

புத்தகக் காட்சி நினைவுகள் 5

 

அழகியசிங்கர்

நாம் எல்லோரும் பல அவதாரங்கள் எடுத்துக்கொள்கிறோம்.  சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.  சிலர் தோல்வியும் அடைகிறார்கள்.  புத்தக விற்பனையாளனாக இருந்தால் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு புத்தகத்தையும் எப்படி விற்க வேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும். 

விற்பனையாளனாக மட்டும் இல்லாமல் பதிப்பாளராகவும் இருந்தால் எப்படிப் புத்தகத்தைப் படித்து விற்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.  விற்பனை சந்தையில் எதுமாதிரிôன புத்தகங்கள் போகின்றன.  எப்படித் தயாரித்து விற்க வேண்டுமென்று யோசிக்க வேண்டும்.

ஒருவன் புத்தக விற்பனையாளனாகவும் பதிப்பாளனாகவும் இருக்கலாம். மோசமில்லை.  இன்னொரு அவதாரம் எடுப்பது மோசமானது.  அதாவது எழுதுபவனாக இருப்பது.  எல்லாம் ஒரே அவதாரமாக இருப்பது.  

நண்பருடன் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.  எதாவது பேசிக்கொண்டிருக்கும் போது நானும்தான் எழுதியிருக்கிறேன் என்று கூறிவிடுவேன்.  என்னது நான் என்று சொல்கிறீர்கள் அந்த நானை விட முடியாதா என்பார்.  சரி அழகியசிங்கர் எழுதியிருக்கிறான் என்று மாற்றிக் கூறுவேன். சிரிப்பார் அவர். 

நான் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருந்தால் புத்தகக் காட்சி சாலையில் விற்பனை ஆகும் புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்று விடுவேன்.  விற்கவில்லை என்று சில புத்தகங்கள் இருந்தால் விற்க முயற்சி செய்வான்.

பதிப்பாளனாகவும் விற்பனையாளனாகவும் இருந்தால் ஒரு ஆபத்து இருக்கிறது.  தெரியாமல்  கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து விற்க முடியாமல் அவதிப் படுவான்.  அதனால்தான் சில பதிப்பகங்கள் கவிதைப் புத்தகங்களை அச்சிடுவதில்லை.

விற்பவன், பதிப்பாளன், எழுதுபவன் எல்லோரும் ஒரே நபராக இருந்தால் ஆபத்து.  அதுவும் எழுதுபவன் கவிதை எழுதுபவனாக் இருந்தால், கூடுதல் ஆபத்து.  

என் புத்தகக் கடையில் நான் அமரந்திருந்தேன்.  என் நண்பரும் கவிஞரும் கடைக்கு வந்திருந்தார்.  எதிரில் என் கவிதைப் புத்தகம் தெரிந்தது.  அட்டைப் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார் என் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து.   அந்தப் புத்தகத்தில் என் புகைப்படத்தை ஓவியமாக மாற்றி அச்சடித்திருந்தேன். அழகியசிங்கர் கவிதைகள் என்று தலைப்பில் ஆரம்பத்தில் எழுதிய கவிதைகள் (1977ரலிருந்து) 2017வரை அச்சிட்டிருந்தேன். அவரிடம்,  என்ன செய்வது? அந்தப் புத்தகம் பார்வைக்கு அங்கயே இருக்கிறது என்றேன். 

இதுதான் பிரச்சினை ஒருவன் எழுதுபவனாகவும், (அதுவும் கவிதை எழுதுபவனாக) பதிப்பாளராகவும், விற்பனையாளனாகவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் ஆபத்து. ஆனால் விதி விலக்காக, என் எழுத்தாள நண்பர் புத்தகக் காட்சியில் இரண்டு அரங்கு எடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துக்கள்தான் அவர் கடை முழுவதும். எதை எடுத்தாலும் அவர் புத்தகம்தான் வாங்க வேண்டும்.  அவருக்கு ரசிகர்களும் அதிகம்.  உண்மையில் சிறப்பாக எழுதக் கூடியவர். புத்தகக் காட்சியில் அவர் கடை முன் கூட்டம் அதிகமாக இருந்து கொண்டிருக்கும். அவர் கடைக்கு வருகிறாரென்றால் கூட்டம் அதிகமாகிவிடும. அவ்வளவு ரசிகர்கள்.  தாமதமாகத்தான் அவர் திறமையை உணர்ந்திருந்தார். உணர்ந்த பிறகு தனிப் பதிப்பகம் ஆரம்பித்து கடையும் போட்டிருந்தார். 

துளி – 94- புத்தகக் காட்சி நினைவுகள் 4

அழகியசிங்கர்

ஒரு போன் வந்தது.  புத்தகக் காட்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டு.  என் பதில். என் கடை முன்னால் இந்தப் பக்கமாகவும் அந்தப் பக்கமாகவும் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.  ஒரு விதத்தில் இது சரிதான்.  எல்லோரும்  என் கடைக்குள் வந்தால் தடுமாறிப்போய்விடுவேன்.  அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.  

ஒரு புத்தகக் காட்சியை நடத்துவது சிரமம்.  அதை விடச் சிரமம் புத்தகக் கடையில் புத்தகங்களை விற்பது.   கடைக்குள் வருபவர்களை இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்று கட்டளை இட முடியாது. கட்டாயப் படுத்தவும் முடியாது.

விருட்சம் அரங்கிற்கு ஒருமுறை உதவி செய்யப் புத்தகம் வெளியிடுபவரே வந்தார். அவர் இளைஞர். மிகக் குறைவாகவே புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தார்.  அவர் புத்தகங்கள் குறித்து அவருக்குப் பெருமை அதிகம்.  ஆனால் அவரால் தனியாக அரங்கம் எடுத்துப் புத்தகம் விற்க முடியாது.   என் கடையைப் பார்த்துக்கொள்ளும் பணிக்காகத் தினமும் அவருக்கு ஒரு தொகையைக் கொடுப்பேன்.  அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று அவருடைய புத்தகங்களைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

என் கடையில் அவர் புத்தகங்களையும் வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன்.  அதோடு நில்லாமல் அவர் வெளியிட்ட புத்தகங்களையும் கையில் வைத்துக்கொண்டு வருபவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் வாங்குங்கள் என்று கூறி அவர் புத்தகங்களை வருபவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தார்.

இதுமாதிரி பிரச்சாரம் செய்யாதீர்கள்.  வருபவர்கள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொள்ளட்டும் என்று அவரிடம் கடுமையாக சொல்லும்படி ஆகிவிட்டது.  அடுத்த ஆண்டிலிருந்து அவர் வரவில்லை.  நானும் கூப்பிடவில்லை. 

இது ஒரு பாடம்.  கடையில் உதவி செய்ய வருபவர் அவரே புத்தகம் போடுபவர்களாக இருந்தால் இதுமாதிரியான ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.

என்னடா இது ஒருவன் ஆயிரக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து புத்தகங்களை விற்கத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறானே அவன் கடையிலேயே போய் நம்ம புத்தகங்களை மட்டும் வாங்க பிரச்சாரம் செய்கிறோமே என்று தோன்றவில்லை. 

பல கடைகளில் எளிய மனிதார்கள் புத்தக ஆசையில் புத்தகங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.   அதனால் பெரும்பாலும் குடும்பமே புத்தகம் விற்க வந்து விடும்.  எத்தனையோ கடைகளில் மனûவியும் கணவனும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் பதிப்பாளராகவும் புத்தக விற்பனையாளராகவும் இருப்பார்கள்.

ஒரு சிலர்தான் கடைகளில் ஆட்களை நியமித்துப் பெரிய அளவில் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள்.  அவர்களெல்லாம் பெரிய பதிப்பாளர்கள்.  ஆனால் ஒரு புத்தகத்தை விற்பது அவ்வளவு சுலபமாக எனக்குத் தோன்றவில்லை.

துளி – 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

அழகியசிங்கர்

பொதுவாகப் புத்தகக் காட்சி உரிய நேரத்திற்கு நான் வர முடியாது.  நேற்று கூட்டம் 12 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கிறது என்று போனேன்.  பிறகுதான் தெரிந்தது பதினொரு மணிக்கே.

புத்தகக் காட்சியில்தான் பல நண்பர்களைப் பார்த்து உரையாடமுடியும்.  புத்தகக் காட்சியில் பரிதாபத்துக்குரியவர்கள் கவிஞர்கள்.  

என்ன தலைகீழாக நடந்தாலும் கவிதைப் புத்தகம் விற்பது என்பது நடக்காது.  பலர் கவிதைப் புத்தகங்களை விசிட்டிங் கார்டு போல கொடுத்துவிடலாமென்று கேவலப் படுத்துவார்கள்.  அதுமாதிரியெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருபவர்களை நான் எச்சரிக்கை செய்வது வழக்கம்.  இப்போது உள்ள சூழலில் கவிதைப் புத்தகத்தைக் குறைவாக அச்சிட்டு வைத்து கொள்ளலாமென்று தோன்றுகிறது.

நான் ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் (அவர் சொல்லி) கவிதைத் தொகுதி கொண்டு வந்தபோது 50 பிரதிகள்தான் விற்க முடிந்தது.  நானும் அதிகமாக அடிக்க வில்லை.  அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு 100 பிரதிகள்தான் அடித்திருந்தேன். 100 கவிஞார்களின் கவிதைகளைத் தொகுத்து மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுதி கொண்டு வந்தேன்.  அளவோடுதான். 

ஒரு புத்தகம் 100 பிரதிகள் விற்றால் குதிக்க வேண்டும்போல் தோன்றும். அதுவும் கவிதைப் புத்தகங்கள் விற்றால் ஒரே உற்சாகமாகிவிடுவேன். எனக்குத்தான் இதுமாதிரி நடக்கிறது.  மற்ற பதிப்பாளர்களுக்கு அது மாதிரி இல்லை என்று நினைக்கிறேன்.

என் நண்பர் மையம் ராஜகோபல் கவிதைப் புத்தகங்கள் கொண்டு வர விரும்பினார்.  அவரிடம் எச்சரித்தேன்.  எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வரப் போகிறீர்கள்.  அவர் நூறைத் தாண்டிய ஒரு எண்ணிகையைக் கூறினார்.  300 அல்லது 500.  நான் அலறினேன். ஏன் அப்படி செய்கிறீர்கள்.  50 போதும் என்றேன்.  அவருக்கு நிறையா நண்பர்கள் என்றார்.  அப்படியென்றால் 100 அடியுங்கள். அவர் என் பேச்சைக் கேட்கவில்லை.

என்னிடம் விற்பதற்கு அந்தப் புத்தகம் கொடுத்தார்.  அந்தக் கவிதைப் புத்தகம் தலைப்புப் பார்த்தவுடன் இதுமாதிரி தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகம் எழுதினால் எப்படி விற்குமென்றுதான் தோன்றியது.  இது எடுபடாது என்றேன் ராஜகோபாலனிடம். 

ஆனால் அவருக்கு நிறையா நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் ராஜகோபால் திரும்பவும்.  எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றேன்.   கஞ்சா என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை 64 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவருடைய கவிதை வரிகளில் தமிழ் விளையாடுகிறது. வண்ணமலைக்குன்றின் மேல் அல்லிக்குளம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.  இனிமேல்தான் மனம் ஊன்றி கவிதையை வாசிக்க வேண்டும். கவிதைப் புத்தகம் எந்த ஆண்டு வந்தது என்பதை ராஜகோபாலன் குறிப்பிடவில்லை. 

பழனிவேள்  இப்போது உயிருடன் இல்லை.  என்னுடைய புத்தக அரங்குக்கு வந்திருந்து சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன்.  அதை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன்.    என் புத்தக அரங்கில் வருபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என் வழக்கம்.  பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருப்பவரைப் போல் தோற்றம் தருவார்.  ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர்.

இந்த முறை புத்தகக் காட்சிக்குப் போகும்போது அவருடைய கவிதைத் தொகுப்பு கிடைத்தது.  விற்கலாமென்று 3 பிரதிகள் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். விற்பனைக்கு வந்த எல்லாக் கவிதைத் தொகுதிகளையும் ஒரு தட்டில் குவித்து வைத்திருக்கிறேன். அவருடைய தொகுதியையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.  20 சதவீதம் குறைத்துக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யாரும் அந்தத் தட்டை தொடக்கூட இல்லை. 

புத்தகக் காட்சி நினைவுகள் 2

அழகியசிங்கர்

புத்தகக் காட்சி ஜனவரி மாதம் நடப்பதுதான் சரி.  வங்கியில் பணிபுரியும் போது பொங்கல் திருவிழாவை ஒட்டி பணம் முன்னதாகக் கொடுப்பார்கள்.  பின் ஓராண்டிற்கான மருத்துவ சலுகைக்கான தொகையும் பெற முடியும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் எதாவது புத்தகம் கொண்டு வருவதும்,  நடக்கும் புத்தகக்காட்சிக்கு வாடகை தருவதுமாக இருப்பேன்.

ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்தான் கொண்டு வர முடியும்.  பல ஆண்டுகள் நான் இப்படித்தான் புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  விருட்சம் இதழையும் நான்கு இதழ்கள் கொண்டு வந்து விடுவேன். சிலசமயம் 3 இதழ்களாகப் போய்விடும். 

நான் முதலில் கொண்டு வந்தது கவிதைப் புத்தகம்.  10 ஆண்டுகள் மேல் ஆயிற்று அதை விற்பதற்குள்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  என்னுடைய கவிதைத் தொகுதி இல்லை. சில எழுத்தாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  என் கவிதைப் புத்தகங்கள் நன்றாக விற்று உள்ளன.  ‘தொலையாத தூர’ மாகட்டும், ‘யாருடனும் இல்லை’ ஆகட்டும்.

என் புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாக இருப்பதால் நூலக உத்தரவு வாங்குவதற்கு கிடைக்கவில்லை.  இப்போது இன்னும் மோசம்.

நகுலன் அவர் புத்தகத்தைக் கொண்டு வரும்போது 30 பிரதிகளுக்கு மேல் கொண்டு வராதீர்கள் என்பார்.  அவர் சொல்வது இன்று வரை உண்மை. அதுவும் கவிதைப் புத்தகத்திற்கு அது பொருந்தும்.  அவருடைய இரு நீண்ட கவிதைகள் கொண்டு வந்தேன்.  ஒரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ மாணவர்களுக்கு பாடப் புத்தகம்.  என்ன சோகம் என்றால் அந்தப் புத்தகத்தைப் படிக்க இரண்டே இரண்டு மாணவர்கள்தாம்.

ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சி வரும்போதும் என் பொழுது உற்சாகமாக இருக்கும்.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களை நான் விற்பேன். யாராவது என்னிடம் விற்கக் கொடுத்தால் விற்றுக் கொடுப்பேன்.

நான் ஒவ்வொரு ஆண்டும் எனக்குக் கிடைக்கும் தொகையில் புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  ஆனால் ஒரு போதும் என் மனைவியிடமோ என் தந்தையாரிடமோ (அவர் பெயரில்தான் பதிப்பகத்தை நடத்தினேன்) அல்லது என் நெருங்கிய (அப்படி யாராவது உண்டா) நண்பர்களிடமோ ஒரு பைசா கேட்டதில்லை. 

வருடத்திற்கு 15 நாட்கள் எனக்கு உற்சாகமாகப் பொழுதாக இருக்கும்.  பல எழுத்தாளர்களைச் சந்திப்பேன்.  அவர்களுடன் பேசிப் பொழுது போக்குவேன்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் புத்தக மூட்டைகளுடன் திரும்பவும் என் இடத்திற்கு வரும்போது எதையோ பறி கொடுத்தது போலிருக்கும் கொஞ்ச நாட்களுக்கு…