ஸ்ரீதர் – சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள் குறித்து மீ.விஸ்வநாதனின் அறிமுக உரை

அழகியசிங்கர்

10.01.2020 அன்று புத்தகக் காட்சியில் விருட்சம் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீதர்-சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபúதெங்கள் என்ற தொகுப்பைக் குறித்து கவிஞர் மீ விஸ்வநாதன் ஆற்றிய உரை.    

க.நா,சுவின் சிறுகதைகள்

அழகியசிங்கர்

க.நா.சுவின் படைப்புகள் என்ற பெயரில் போன ஆண்டு 4 புத்தகங்களையும் இந்த ஆண்டு 2 புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  படைப்புகள் பகுதியில் 7, 8 சிறுகதைகள்.  இந்த இரு தொகுதிகளில் 28 கதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப் புத்தகத் தயாரிப்பில் எனக்கு உறுதுணையாக இருப்பவர் கிருபானந்தன்.  அவர் முயற்சி இல்லாவிட்டால் இந்தத் தொகுப்புகள் சாத்தியமாக இருக்காது.

ஆனால் இன்னும் கூட க.நா.சு கதைகள் இருக்குமென்று தோன்றுகிறது.  மூன்றாவதாக ஒரு தொகுப்பில் அதில் விட்டுப்போன கதைகளையும் சேர்க்க உள்ளேன்.

க.நா.சு  சகல கலா வல்லவர்.  கிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்பு படைப்புகள் என்று அசுரத்தனமாக எழுதிக் குவித்தவர். 

புதுக்கவிதைக்கு புது வடிவம் அளித்தவர்.  சோதனை ரீதியாகப் பல முயற்சிகளைச் செய்துள்ளார்.  க.நா.சு படைப்புகள் என்ற பெயரில் நாங்கள் 6 புத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

இதற்கு முன்னால் என் முயற்சியில் அவதூதர் என்ற நாவலையும் ஆட்கொல்லி என்ற நாவலையும் கொண்டு வந்துள்ளேன்.  மிகக் குறைவான விலையில் இப் புத்தகங்களைத் தயாரித்துள்ளேன்.  மேலும் குறைவான பிரதிகளை அச்சடித்துள்ளேன்.  

அதேபோல் க.நா.சு வின் அத்தனைப் புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரத் திட்டம் தீட்டி உள்ளேன். எனக்கு இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  üநீங்கள் ஏன் இலக்கியக் கூட்டங்கள் நடத்தக் கூடாது,ý என்று என்னைப் பார்த்து க.நா.சு சொன்னது.

ஒருமுறை க.நா.சு மயிலாப்பூரில் குடியிருந்தார்.  ஞானக்கூத்தன், நகுலன், காசியபன், வைத்தியநாதன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த் என்று பெரிய கூட்டமே அவரைப் போய்ப் பார்த்தோம்.  மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் போய் டிபன் சாப்பிட்டோம்  

க.நா.சுவிடம் அன்று என்ன பேசினோம் என்று சிறிது கூட என் ஞாபகத்தில் இல்லை.

விருட்சம் 3வது இதழ் தயாரித்துக்கொண்டிருந்தேன்.  க.நா.சுவிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.  உடனே கொடுத்தார்.  புதுக்கவிதையின் எல்லை என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது.  அந்தத் தருணத்தில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்ய வில்லை.  சமீபத்தில்தான் பிரசுரம் செய்தேன்.  கவிதையின் எளிய வடிவத்தை கநாசுவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். 

ராஜேஷ் சுப்பிரமணியன் மொழி பெயர்த்தார்…

அழகியசிங்கர்

போன ஆண்டு என் கவிதைகள் முழுவதும் சேர்த்து முழுத் தொகுதி கொண்டு வந்தேன். மொத்தம் 306 கவிதைகள். 504 பக்கங்களில் இதைக் கொண்டு வந்தேன்.

பிப்பரவரி மாதம் நான் அமெரிக்கா போய்விட்டேன். அங்குப் போய் 26 கவிதைகள் எழுதினேன். திரும்பவும் சென்னை வந்தவுடன் எந்தக் கவிதையும் இன்று வரை எழுதவில்லை.

என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியத்தைப் பார்த்து, என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்கக முடியுமா என்று கேட்டேன். உரிய நேரத்தில் 92 கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார். என்னால் நம்ப முடியவில்லை. அவர் சிறப்பாகவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு என் நன்றி. தொகுப்பின் பெயர் Shifting shadows 130 பக்கங்கள் விலை ரூ.150. 

லை.

தீபம், கணையாழி கவிதைகள்….

அழகியசிங்கர்

70கள் ஆரம்பத்தில் அல்லது 80களில் என்று நினைக்கிறேன்.  தீபத்திலும கணையாழியிலும் அதிககமாகக் கவிதைகள் வெளிவந்தன. அவையெல்லாம் வேறுவிதமான கவிதைகள். புதிய வகை கவிதைகள். தீபத்தில் வானம்பாடி கவிதைகளின் போக்கை அதிகம் பார்க்கலாம்.  கணையாழியிலோ எழுத்து காலத்துக் கவிதைகள்.  அதாவது சிறுபத்திரிகைகளின் கவிதைகள்.

பலர்  இரண்டு பத்திரிகைகளிலும் அறிமுகமானார்கள்.  அப்போது வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகள் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன (நடை, கசடதபற, பிரஞ்ஞை, அஃ போன்ற உதாரணங்கள்).  ஆனால் தொடர்ச்சியாக சிறுபத்திரிகைகள் வரவில்லை.  ஒரே காலத்திலும் வரவில்லை.  ஆனால் கணையாழியும், தீபமும் வந்து கொண்டிருந்தன. மாதம் ஒரு முறை. அதனால் சிறுபத்திரிகையின் பங்கை இரண்டு பத்திரிகைகளும் ஏற்றுக் கொண்டன.

80களின்தான் கவிதைகள் முழு உருப்பெற்றன.  பெரும்பாலான சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் கணையாழியில் தொடர்ந்தார்கள்.  

தீபத்தில் வானம்பாடி என்ற குழுவைச் சார்ந்தவர்கள்.  இரண்டு பத்திரிகைகளிலிருந்தும் இரண்டு விதமான கவிதைகளைக் காட்ட முடியும். 

முதலில் கணையாழியை எடுத்துக்கொள்வோம். 

ஆகஸ்ட் 65ல் எழுதிய கி.கஸ்தூரிரங்கன் இறைவணக்கம் என்ற பெயரில் எழுதிய கவிதையைப் பார்ப்போம். 

இறை வணக்கம்

“கடவுளும் கவர்மென்டும் ஒன்று 

அதைத் தூற்றாதே; பழிசேரும் 

உனக்கு. அதற்கு 

ஆயிரம் கண்கள்; காதுகள். 

ஆனால் குறையென்றால் 

பார்க்காது கேட்காது

கை நீளம்; பதினாயிரம் 

கேட்கும், பிடுங்கும். 

தவமிருந்தால் 

கொடுக்கும். 

கவர்மென்ட் பெரும் கடவுள் 

அதைப் பழிக்காதே 

பழித்தால் 

வருவது

இன்னும் 

அதிகம் 

கவர்மென்ட்தான்!”

– கி. கஸ்தூரிரங்கன்

ஆகஸ்ட் 1965

தீபத்திலிருந்து ஒரு கவிதை. 

சமயோஜிதம் என்ற கவிதை.

இன்று பிற்பகல்

கட்சி மாறிய

அந்த அரசியல்வாதியின்ü

பெயர்

üபலவேசம்ý

இவரைவிடப் புத்திசாலிகள் 

இந்தப் பெயரை வைத்த

அவரின்

அப்பா…அம்மாக்கள்தான்.

– இளசை அருணா

இரண்டு பத்திரிகைகளில் பிரசுரமான கவிதைகளின் மாதிரிதான் கொடுத்துள்ளேன்.  

நன்றாகப் படித்துப் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளிலும் இரண்டு விதமான கவிதைப்போக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.  கணையாழி கவிதைகள் போல் தீபத்தில் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கவில்லை.  இந்தப் போக்கு இப்போது வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

80களில்  கணையாழியில், தீபத்தில், தினமணிகதிரில் வெளிவந்த எல். ரகோத்தமனின் கவிதைகளை ‘நிழல் விரட்டும் பறவைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன். உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.  

முதலில்…..

ரோஜா அழகாக இருக்கும்! 

பக்கத்தில் போய் முகரலாம்! 

இதழ்களைக் கிள்ளி 

சுவைக்கலாம்! 

கையில் முள் கிழிக்காமல் 

கொய்து சூடலாம்! 

நாரில் அடைத்து காசு 

பண்ண லாம்! | 

நீரூற்றலாம்! 

தெம்பிருந்தால் உரமிடலாம்! 

சொந்தம் கொண்டாட வேலி போடலாம்! 

நமதென்று உரிமை கோரலாம்! 

இன்னும் என்னெனன்ன பயனென்று 

யோசிக்கலாம்! 

அது பூப்பது முதலில் செடிக்காக 

என்பதை மறந்துவிட்டு!

விருட்சம் வெளியீடாக வந்த இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.70.

துளி – 88 – ஸ்டீல் ரேக்குகளை காலி செய்து கொண்டிருக்கிறேன்.

அழகியசிங்கர்

நான் மாலை என் நூலகத்திற்குச் சென்று சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைச் சாக்கு மூட்டையில் இடத்துவங்கினேன். புத்தகக் காட்சிக்கு 7 ஸ்டீல் ரேக்குகள் தயார் செய்ய வேண்டும்.  எப்போதும் என் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் ஸ்டீல் ரேக்குகளில் வைத்திருப்பேன்.  பத்து பன்னிரண்டு ரேக்குகள் இருக்கும்.  என் நூலகத்தில் நான் தயாரித்திருக்கும் புத்தகங்கள் ஒரு பக்கமும் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்கள் இன்னொரு பக்கமும் இருக்கும். 

 புத்தகக் காட்சிக்கு ஏழு ரேக்குகள் போதும்.  இந்த ரேக்குகள் புத்தகக் காட்சி முடிந்து வந்தவுடன் உருமாறிப் போய்விடும். தட்டு: பிசகி விடும்.  இரும்பு கால் வளைந்திருக்கும்.  பின் அதைச் சரிசெய்ய வேண்டும். 

மேலும் சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை எடுத்து வைத்துவிடுவேன்.  அந்தச் சாக்கு மூட்டைகளைப் புத்தகக் காட்சிமுடிந்து பிரித்து ரேக்குகளில் வைக்கும்போது மாதக் கணக்கில் ஆகிவிடும்.  அவ்வளவு லேசில் முடியாது.

ஒவ்வொரு முறையும் புத்தகங்களைத் திருப்பி அடுக்கும்போதும் சரி, சாக்கு மூட்டைகளில் வைக்கும்போதும் சரி எனக்குப் பிடித்துத்தான் செய்கிறேன். 

இன்று மாலை 6 மணிக்கே போஸ்டல் காலனி நூலகத்திற்குப் போய்விட்டேன்.  வருவதற்கு 9 ஆகுமென்று வீட்டில் சொல்லி விட்டு வந்திருந்தேன்.

புத்தகங்களைச் சாக்கில் போடும்போது ஒவ்வொரு புத்தகமாகப் பார்க்கும்போது எதாவது சிந்தனை செய்தபடி இருப்பேன்.  அப்படி ஒரு புத்தகம் கிடைத்து என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரே ஆண்டில் 1,00,000 பிரதிகள் விற்றதாக அந்தப் புத்தக முகப்பட்டையில் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனந்தவிகடன் வெளியீடாக அந்தப் புத்தகம் வந்திருந்தது.  

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்பதுதான் தலைப்பு.  சுவாமி சுகபோதானந்தா என்ற பெயரில் வந்திருந்தது. 

அது நிஜ பெயரா புனைபெயரா என்று தெரியவில்லை. இந்தப் புத்தகம் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்திருந்தது.  1998 டிசம்பர் மாதத்திற்குள் 1,00,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்து விட்டன்.

நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.  நான் வெளியிடும் கவிதைப் புத்தகங்கள் எதுவும் கொஞ்சங்கூட நகர்வதாக இல்லை.  உண்மையில் கவிதைகள் மட்டுமல்ல எல்லாப் புத்தகங்களுமே. 

உடனே நானும் மனசே ரிலாக்ஸ் மாதிரி புத்தகங்கள் எழுத முடியாது என்று தெரியும்.  என் நண்பர் ராஜேஸ் அவர்களிடம் போன் செய்தேன்.  நான் என்ன போன் செய்தாலும் அவரும் சிரித்தபடியே உள் வாங்கிக் கொள்வார்.  அவர் கருத்துக்களையும் சொல்வார்.  

“சார் அந்தப் புத்தகம் 90 இறுதியில் வந்தது…இப்ப அவர் புத்தகம் எடுபடாது..அவருக்கு மாற்றாக ஜக்கி, நித்தியானந்தா எல்லோரும் வந்து விட்டார்கள்..” என்றார்.

“அவர்கள் புத்தகங்கள் ஒரு லட்சம் விற்கட்டும்..நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள் 100 பிரதிகள் விற்பதற்கு என்ன வழி,” என்றேன்.

“ஒன்றும் செய்ய முடியாது.  ஒரு சமயம் விளம்பரம் செய்தால் விற்கலாம்,” என்றார் சிரித்தபடி. 

“இருபது வருடங்களாக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நடக்காது. விளம்பரம் செய்தாலும் போகாது,” என்றேன்.

நான் 6 ரேக்குகளை காலி செய்து மூட்டையில் புத்தகங்களை அடுக்கி விட்டேன்.  இன்னும் ஒரு ரேக்கில் உள்ள புத்தகங்களை சாக்கில் திணிக்க வேண்டும்.  அந்த ரேக்கில் இருப்பது கவிதைப் புத்தகங்கள்.

துளி – 87 – இன்று அப்பா தவசம்..

அழகியசிங்கர்

சென்னை புத்தகக் காட்சியின்போது எனக்கு எப்போதும் ஞாபகம் வருவது அப்பா. அவர் இறந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அவர் தவசம். 

2017ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி துவங்குகிற நாள் ஐந்தாம் தேதி. அன்றுதான் அப்பா இறந்து விட்டார். அதனால் என்னால் ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி வரும்போதும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.

அவர் இறந்து போகிற அன்று நான் பதட்டமாக இருந்தேன்.  2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை அப்பா இறந்தார்.  அன்றைய தினம் நாட்குறிப்பில் எழுதியிருந்ததை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

“இன்று முழுவதும் அப்பா சாப்பிடக் கூடப் படுத்தினார்.  கண்களை விழிக்கவில்லை.  வாயைச் சரியாய் திறக்கவில்லை.  எப்போதும்போல் அப்பாவிற்குக் கஞ்சி கொடுக்கச் சென்றேன்.  வாயைத் திறக்க முடியவில்லை. அப்பா வேறு மாதிரி இருந்தார்.  எந்தவிதமான ரெஸ்பான்ஸ÷ம் இல்லை. அப்பா கொஞ்சம் கொஞ்சம் மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.  நான் பதட்டமானேன்.  மைதிலியைக் கூப்பிட்டேன்.  பின் பக்கத்தில் உள்ள சுரேஷ்ஷைக் கூப்பிட்டோம்.  ஆம்.  அப்பா 9.05க்கு இறந்து விட்டார்.  எனக்கு அதிர்ச்சி.  நண்பர் மருத்துவர் பாஸ்கரன் வந்திருந்து கையெழுத்துப் போட்டார். அப்பா மரணமடைந்ததை உறுதிப் படுத்தினார். அவருக்கும் அப்பா நண்பர்.

ரமணனிடம் (என் சகோதரன்) சொன்னேன்.  அவன் வருவதற்குள் அப்பா இறந்து விட்டார்.  பவானியும் ரமணனும் இங்கே தங்கினார்கள்.  எல்லோருக்கும் போன் செய்து சொன்னேன்.  வித்யா அப்பா ஸ்ரீனிவாசனும், அவர் மனைவியும் பலவிதங்களில் உதவி செய்தார்கள். ராத்திரி முழுவதும் நான் தூங்கவில்லை.”

துளி – 86- எல்லாம் ஏழு மயம்

அழகியசிங்கர்

எப்போதும் புத்தகக் காட்சியில் இரட்டை அரங்கை வாடகைக்கு எடுக்கத் தைரியம் வருவதில்லை.  கூடுதலாக அரங்கை எடுத்தால் கூடுதலாக வருமானம் வரவேண்டும்.  அப்படியெல்லாம் பணம் கொட்டி விடாது என்று தோன்றும்.

புத்தகம் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை.  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  

இன்று அரங்கு குலுக்கல்.  எந்த எண் எனக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.  கடைசியில் கூப்பிட்டார்கள்.  430வது அரங்கு எண். கூட்டு எண்ணிக்கை 7.  ஏழாவது வரிசை.  நான் முடித்துக்கொண்டு வீடு வரும்போது 7 மணி. இது 43வது சென்னை புத்தகக் காட்சி. அதன் கூட்டுத் தொகை 7.

பிரமிளுடன் நட்பாகப் பழகியதால் அவருடைய எண் கணித சாஸ்திரத்தை அரைகுறையாய் தெரிந்து வைத்திருக்கிறேன்.  ஏழு நல்ல எண்.  தத்துவவாதி எண்.  எதற்கும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கக் கூடிய எண். 

எனக்கு புத்தகக் காட்சி என்றால் ஜாலியாகப் பொழுது போக்கிற இடம்.

துளி – 85- வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

அழகியசிங்கர்

புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா  பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.

இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.  சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும்.

நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன்.  ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.  

இதில் பெரும்பாலான கட்டுரைகள் எல்லாம் படித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதப்பட்டவை.  ஒருவர் இதை வாசிக்க ஆரம்பித்தால் விறு விறு என்று வாசித்து விடலாம்.

முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா என்ற கட்டுரை எழுதி அனுப்பியபோது ரொம்ப நாட்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  இது மாதிரி எழுதியது சரியா என்றுதான்.  அப்படி சில சந்தேகங்களும் வந்து விடும்.  எழுத்தாளர் நண்பர் காசியபனின் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்திருந்தேன்.  அந்தப் புத்தகம் பெயர் முடியாத யாத்திரை.   அவர கவிதைத் தொகுப்பு இன்னும் விற்றுத் தீரவில்லை.  ஆனால் அவர் யாத்திரை என்னமோ முடிந்து விட்டது என்று எழுதியிருந்தேன். 

இன்னும் சில விஷயங்களையும் வேடிக்கையாக அந்தக் கட்டுரையில் சேர்த்திருந்தேன்.

திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும் பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.

சொல்நயமும் பொருள்நயமும்

நன்றாக வந்துவிட்டால்

சித்திரப் படிமங்கள்

சீராக வீழ்ந்துவிட்டால்

மெத்த நல்ல கவிதையென்று

முரசு அடிக்கின்றீர்…

முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன்.  இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன்.  இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.  

என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.  அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன். 

1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது

2. விருட்சம் என்ற பத்திரிகை சந்தாதாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது

3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.  அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் üமுடியாத யாத்திரைý புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்

4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்

5. புத்தகம் விலை ரூ.60.  புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.

காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது.  ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. 

                                                                                               20.08.2017

துளி – 84- மேற்கு மாம்பலத்தில் வீட்டில் சமையல் செய்ய வேண்டாம்.



அழகியசிங்கர்

நேற்று என் பேரன் பிறந்தநாள்.  மாம்பலத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்தேன்.  சரியாக 10.30 க்கு அன்னதானம் ஆரம்பமாகிவிடும்.  200 பேர்களுக்கு மேல் அன்னதானத்தைப் பெற்றுச் செல்வார்கள்.  ஒரு பொட்டலமதான்.  நேற்று வெத்தக் குழம்பு சாதம்.

அன்னதானம் செய்பவர்களுக்கு 2 பொட்டலங்கள் கிடைக்கும். நானும் மனைவியும் ஒரு பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகும் இன்னும் ஒருவர் சாப்பிடும்படி மீந்தது.

அதனால்தான் சொல்கிறேன் மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்கள் வீட்டில் சமையலே செய்யாமல் பொழுதைப் போக்கலாம். சாப்பாட்டிற்காக ஹோட்டலுக்குப் போய் செலவு செய்ய வேண்டாம். 

ஒரு நாளைக்குக்குறைவாக ரூ.30 மட்டும் செலவு செய்தால் போதும்.  காலையில் எழுந்தவுடன் வெங்கடேஸ்பரா போளி ஸ்டாலுக்குப் போய் ரூ.15க்கு காப்பி சாப்பிடலாம். பின் அனுமார் கோயிலுக்குப் போனால் பொங்கல் தானமாகக் கிடைக்கும்.  தானமாகக் கிடைக்கும் பொங்கல் ஒட்டலில் காசு கொடுத்து வாங்கும் பொங்கல் அளவை விட அதிகமாக இருக்கும்.

பத்துமணி சுமாருக்கு சாய்பாபா கோயிலுக்குப் போனால் ஒரு பொட்டலம் சாதம் தானமாகக் கிடைக்கும்.  தக்காளி சாதம், புளியஞ்சாதம், சாம்பார் சாதம் என்றெல்லாம் கிடைக்கும். ஒருவருக்கு அதிகம். இரவு நேரத்தில் கூட வைத்திருந்து சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் திரும்பவும் அனுமார் (மாம்பலத்தை ஒட்டி

அசோக்நகரில் உள்ளது) கோயிலுக்குச் சென்று தயிர் சாதம் வாங்கிக் கொள்ளலாம்.  திரும்பவும் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் ஒரு காப்பி ரூ.15 க்கு வாங்கிக் குடிக்கலாம்.  இரவு நேரத்தில் அனுமார் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.  இரவு நேரத்தில் நடை சாத்தும் சமயத்தில் பருப்பு சாதமும் கொடுப்பார்கள்.  எல்லாம் கடவுள் பிரசாதம். இலவசம்.

இப்படி பெரிய செலவு செய்யாமல் (ரூபாய் 30வரைதான் செலவு) வீட்டில் யாரும் சமைக்க இல்லாவிட்டால் ஒருநாள் பொழுதை நீங்கள் கழித்து விடலாம்.  அதனால்தான் மாம்பலத்தில் வீட்டில் யாரும் சமையல் செய்ய வேண்டாமென்கிறேன்.

துளி – 83- புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த வாசிப்போம் வாசிப்போம்

அழகியசிங்கர்

மயிலாடுதுறையில் ஒரு நண்பர் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கும் வழக்கத்தை திடீரென்று மேற் சொண்டிருந்தார்.  என்னிடமும் சொன்னார்.  முதலில் 50 நாட்களுக்குத் தொடர்ந்து புத்தகம் வாசியுங்கள்.  அவர் தூண்டுதல் பேரில் நானும் வாசிக்கத் தொடங்கினேன். 

அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  புத்தகங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன.  வாங்கி வைத்து விடுகிறோம்.  ஆனால் வாசிக்க முடியவில்லை.  ஏன்?  புத்தகம் வாங்கும் வழக்கம் மட்டும் குறையவே இல்லை.  உடனே ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்பது என்று முடிவு செய்தேன்.  முதலில் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது என்று திட்டம் போட்டேன்.

ஒரு மணி நேரம் படிக்க ஆரம்பித்தபோது மிகக் குறைவான பக்கங்களைத்தான் வாசிக்க முடிகிறது என்று கண்டு பிடித்தேன்.  முதலில் வாசிக்கும் நேரத்தை விட்டுவிட வேண்டும்.  புத்தகம் முடிக்க வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று பட்டது.

இரண்டாம் தேதி செப்டம்பர் மாதம் முதல் வாசிக்க ஆரம்பித்தேன்.  தினம் தினம் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தேன். கிட்டத்தட்ட 27 நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன்.  உடனே வாசித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.  100 பக்கங்கள் வந்து விட்டது.  

ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது. அதுதான் üவாசிப்போம் வாசிப்போம்ý தொகுதி 1 என்ற புத்தகம். இது இன்னும் தொடருகிறது.  தொடரும்.

சமீபத்தில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தார்கள்.  5 புத்தகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று சொன்னார்.  புத்தகங்களை அதிகமாக வாசித்துக் கொண்டிருப்பதால் மிகச் சுலபமாக 5 புத்தகங்களைப் பற்றி சொல்ல முடிந்தது.  இது ஒரு நல்ல அனுபவம்.  

எனக்கு அபூர்வ திறமையை ஆண்டவன் அளித்திருக்கிறான். நான் படித்த புத்தகங்கள் எல்லாம் சில தினங்களில் என் ஞாபகத்தில் இருக்காது.  அதனால்தான் அவசரம் அவசரமாக நான் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதி விடுவேன்.  ஏற்கனவே நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்டு வந்தேன். எல்லாம் புத்தகங்களைப் பற்றி.  அதேபோல் வாசிப்போம் வாசிப்போம்.  இது கொஞ்சம் தீவிரம்.  இதில் பெரிய புத்தகங்களை அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை என்னால் உடனே வாசிக்க முடியவில்லை.  ஆனால் அதையும் முயற்சி செய்வது என்று முடிவு எடுத்துள்ளேன்.  அதனால் பா.ராகவனின் üயதிý என்ற நாவலை எடுத்து 806 பக்கங்கள் படித்து விட்டேன்.  இது பல நாட்கள் முயற்சி.  இது குறித்து கூடிய விரைவில் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி. நகுலன் நாவல் இவர்கள் என்ற புத்தகத்தைப் படித்து நான் எழுதிய வரிகள்.

“இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள். ‘நான் யார்?’ என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் ‘நேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை’ என்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.”   

வாசிப்போம் வாசிப்போம் என்ற புத்தகம் விலை ரூ.90.