துளி – 82- மருத்துவர் பாஸ்கரின் ‘கடைசி பக்கம்’ என்ற புத்தகம்

அழகியசிங்கர்

நேற்று மருத்துவர் பாஸ்கரனின் ‘கடைசி பக்கம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா.  எனக்குத் தெரிந்து நான் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இது மாதிரி கூட்டத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளரை மட்டுமல்ல பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் நிகழ்ச்சி.  இந்தக் கூட்டத்தில் மாலன், கல்கி ஆசிரியர் ரமணன். சுந்தர்ராஜன், ரகுராமன் என்று எல்லோரும் கலந்து கொண்ட கூட்டம். 

 எல்லோரும் அவர் புத்தகத்திலுள்ள கட்டுரைகளைப் பாராட்டிப் பேசினார்கள்.  கிரிஜா ராகவன் கூட்டத்தை நடத்திச் சென்ற விதம் நன்றாக இருந்தது. கடைசி பக்கத்திற்கு உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், மருத்துவர் புத்தகத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. யார் கடைசி பக்க கட்டுரைகளை எழுதினாலும் சுஜாதாவிற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கப் போவதில்லை. 

தான் எழுதுகிற புத்தகத்தை வெளியீட்டு கொண்டாடுகிற வழக்கம் மருத்துவர் பாஸ்கரிடம்தான் உண்டு.   அவர் மகிழ்ச்சியை அவர்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்துகிற அழகே தனி.  ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாட வேண்டுமென்று குறிப்பிடுவார் ஓஷோ. அது மருத்துவர் பாஸ்கரன் விஷயத்தில் உண்மை. இது எனக்கு எதிரான நிலை.  புத்தகத்தை வெளியிட்டு விட்டு கவலைப் படுகிற மனிதன் நான்.  இந்த முறை என்னுடைய ஐந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.  பாஸ்கரன் மாதிரி கூட்டம் நடத்திக் கொண்டாடுகிற இன்னொருவர் நல்லி செட்டியார்.  அவர் பிறந்த தினம் போது உட்லேன்ட்ஸ் ஓட்டலில் நடத்தி அசத்துவார்.

ஒவ்வொரு புத்தகம் கொண்டு வரும்போது மருத்துவர் பாஸ்கரன் அதை அவர் நண்பர்களுடன்  சேர்ந்து கொண்டாடுகிறார். வழக்கம்போல் இந்த முறையும்.  எல்லோரையும் விருந்து உண்ண உபசரிப்பிலும் அவருக்கு இணை யாரும் கிடையாது.   

குவிகம் என்ற மின்னிதழில் வெளிவந்த கடைசி பக்கக் கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கிறார்.  கடைசி பக்கத்தில் எழுதுகிற கட்டுரைகளை முகநூலிலும் வெளியிடுவார்.  சில சமயம் படிக்கும்போது கதைகளாக மாற்ற வேண்டியதைக் கட்டுரைகள் வடிவத்தில் கொடுத்திருக்கிறாரே என்று தோன்றும்.

பெரும்பாலும் அவர் கட்டுரைகளைப் பரவச நிலையில் எழுதுவார்.  மிகை உணர்ச்சி சற்று தூக்கலாகப் படும்.  அவர் அறியாமலேயே இதெல்லாம் வெளிப்பட்டு விடும். அப்படி வெளிப்பட்டால் குற்றமல்ல.  எழுத்தாளருக்கே உள்ள குணம் அது. ஆனால் அபாரமான ஞாபக சக்தியுடன் விபரங்களைக் கொண்டு வருவார்.  

விடா முயற்சியுடன் அவர் தொடர்ந்து எழுதி நெகிழ்ச்சியுடன் புத்தகத்தை வெளியிடுவதைப் பாராட்ட வேண்டும். இன்னும் அடுத்த புத்தகத்தை எப்போது வெளியிடப் போகிறாரென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். 

துளி – 81-புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த புத்தகங்கள் – 2

அழகியசிங்கர்

விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வந்த புத்தகம் துளிகள் – தொகுதி 1. 

18.08.201 லிருந்து 02.06.2019 வரை உள்ள 54 கட்டுரைகள் கொண்ட நூல் இது.  கட்டுரைகள் அளவு ரொம்ப குறைவாக இருக்கும்.  அரை பக்கம், கால் பக்கம், முக்கால் பக்கம் ஒரு பக்கம் என்று மிகக் குறைந்த அளவிலான கட்டுரைகள். 

வாழ்க்கையில் நடந்த நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளின் கதம்ப மாலைதான் இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.  ஒருவர் இதை எடுத்து வாசித்தாரென்றால் கீழே வைக்க முடியாது.  அந்த அளவிற்குச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் இப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தையும் புரட்டி வைத்து விடலாம்.  பின் இன்னொரு பக்கத்தை இன்னொரு நாள் எடுத்துப் படிக்கலாம்  இது ஒரு வகையான டைரி என்று குறிப்பிடலாம். 

கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

üதுளி : 20 – மறக்க முடியாத பிரபஞ்சன்

பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசலில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம்.  அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும்  இருவரும் பேசுவோம்.  பிரபஞ்சன் சிறுகதைகளின் மீது காதல் கொண்டவர்.  புதுமைப்பித்தன் கதைகளை எப்படி ரசிப்பது என்பதைப் பற்றி  ஒவ்வொரு வாரமும் அவர் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.  தொடர்ந்து வாசிப்பது எழுதுவதுதான் என்று அவர் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து இருந்திருக்கிறார். 

பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சந்திக்கும் போது அவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு காட்சி அளிப்பார்.  பின் இருவரும் சேர்ந்து காப்பி குடிப்போம்.  அவரைப் பார்த்து நான் விருட்சம் இதழ் பிரதியைக் கொடுப்பேன்.  உடனே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்.  இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்காமல் கொடுத்தாலும் அவருடைய நல்ல பழக்கம் சிறு பத்திரிகைகளை மதிப்பது…

 (21.12.2018 அன்று எழுதியது)

இதை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  இதன் விலை ரூ.90 தான்.                                                                           

108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.90.  தள்ளுபடி சலுகையாக ரூ.70க்குக் கிடைக்கும்.

துளி – 80 – 111வது விருட்சம் இதழ் -1


அழகியசிங்கர்

111வது இதழ் விருட்சம் வந்து விட்டது.  நவம்பர் மாதம் வர வேண்டியது.  டிசம்பர் மாதம் வரை போய்விட்டது.  ஆனால் கொண்டு வந்துவிட்டேன்.  இந்த இதழிலும் வழக்கம்போல் 5 கதைகள்.  சில கவிதைகள்.  கட்டுரைகள். பொதுவாக இதுமாதிரிôன இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்கும்போது மருந்துக்குக் கூட வாசிக்கும்போது சிரிப்பு வருவதில்லை.  ஏதோ அவதி என்று சொல்லமுடியாத அவதியாக இருக்கும்.

நான் சிரிப்பு வரவேண்டுமென்று சில கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறேன்.  சிறுகதைகள் அதிகப் பக்கம் போகாமல் பார்த்திருக்கிறேன். 

கடந்த இரு இதழ்களாக மொழிபெயர்ப்பு கதைகளைப் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இந்த இதழிலும் ஒரு மொழிபெயரப்பு கதையை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  எழுத்தரின் மரணம் என்ற அந்தோன் சேகவ் கதை.  அக் கதையை எழுதிய ஆண்டு 1883.  இன்னும் படிக்க வித்தியாசமாகவும் சிரிப்பு வரும்படி இருக்கிறது.  கடைசியில் கதையின் முடிவுதான் கொஞ்சம் யோசனை பண்ண வைக்கிறது.

இப்போதெல்லாம் வருகிற சிறுபத்திரிகையில் கடிதங்கள் யாரும் எழுதுவதில்லை.  1988ல் கொண்டு வரும்போது ஏகப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு சிறுபத்திரிகை ஒருவருக்குப் போய்ச் சேருகிறதா படிக்கிறார்களா என்பதே தெரியவில்லை.  இதை மாற்ற வேண்டுமென்று தோன்றியது.

மாற்றி இந்த இதழில் செய்திருக்கிறேன்.  என்ன என்பதை பிறகு சொல்கிறேன்.

விருட்சம் இதழை நீங்கள் கட்டாயம் ரூ.20 கொடுத்து வாங்க வேண்டும்.  ஆண்டுச் சந்தாவாக ரூ.80 கட்டவேண்டும்.  இது ஒரு வேண்டுகோள்தான்.

உலக சினிமா சில தரிசனங்கள்


அழகியசிங்கர்

செந்தூரம் ஜெகதீஷின் புத்தக வெளியீட்டு விழா நேற்று (07.12.2019) இக்சா மையத்தில் நடந்தது.  அவர் சினிமாவைப் பற்றி இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்.  முதல் புத்தகம் உலக சினிமா சில தரிசனங்கள்.  இரண்டாவது  புத்தகம் இந்திய சினிமா சில தரிசனங்கள்.  இந்த இரண்டு புத்தகங்களையும் முழுவதும் படித்து கூட்டத்தில் பேச நினைத்தேன். ஒரு புத்தகம் 196 பக்கங்களும், இரண்டாவது புத்தகம் 92 பக்கங்களும் கொண்டவை.

நான் முதல் புத்தகத்தைத்தான் படித்தேன்.  இரண்டாவது புத்தகத்தை நுனிப்úபுல் மேய்ந்தேன். ஒருநாளில் படித்துவிட்டுப் பேச நினைத்தேன்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.  சினிமா என்பது ஒரு கலை.  அதில் பலருடைய ஈடுபாடு அவசியம்.  ஒவ்வொருவரும் அதில் எப்படி ஈடுபாடு கொள்கிறார் என்பது முக்கியம்.  

ஒரு வரியில் கதையைச் சொல்வதிலிருந்து பலர் உரையாடி கதையை உருவாக்குகிறார்கள்.  அந்தக் கதையை சினிமாவாக மாற்றுவதற்குள் கதை வடிவம் மாறிவிடும்.  பல நாட்கள் முயற்சி செய்கிறார்கள்.  இப்படி கதையாக சினிமாப்படம் உருவாகும்போது அதைத் திரையிட வேண்டுமென்றால் இன்னும் யத்தனம் வேண்டும்.

அதனால் சினிமாப்படம் தயாரிப்பதென்பது அசுரர்கள் உலகத்தைச் சார்ந்தது.  உழைப்பு, முதலீடு, எதிர்பார்ப்பு என்று வேற வழிக்குப் போய்விடும். அதிக முதலீடும் பலருடைய உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த எந்தக் கவலையுமில்லாமல் ரசனை அடிப்படையில் ஒரு சினிமாவை தியேட்டரில், டிவிடியில் பார்த்துவிட்டு அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டி உள்ளது. 

ஒரு வரியில் சொல்லப்பட்டு ஆரம்பிக்கிற கதை எல்லோருடைய உழைப்பால் சினிமாவாக மாறுகிறது.  அதைத் திரும்பவும் எழுத்துத் திறமை கொண்ட எழுத்தாளன் புத்தகத்தில் கொண்டு வரும்போது முழுத் திரைக்கதையைச் எழுதுகிறான்.  அவன் பார்வையில் அந்தக் கதை எப்படி வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறான்.

அந்த முயற்சியைத்தான் சினிமாவைப் பற்றி எழுதுகிற பலரும் செய்கிறார்கள். ‘வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்’ என்ற தலைப்பில் கோ.தனஞ்ஜெயின் எழுதியிருக்கிறார்.  அயல் சினிமா என்று எஸ் ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறார், உலக சினிமா 1,2,3  என்ற தலைப்பில் செழியன் 3 பகுதிகள் கொண்ட புத்தகங்கள் கொண்டு வந்துள்ளார். இப்படிப் பல எழுத்தாளர்கள் சினிமாவைப் பற்றி தான் ரசித்ததைப் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளார்கள்.  

இந்தப் புத்தகங்களில் ஒரு சினிமாவை எப்படிப் பார்க்கிறோம்.  தாம் ரசித்த சினிமாக்களை எப்படி சொல்லியிருக்கிறோம் என்றெல்லாம் வருகிறது.  

செந்தூரம் ஜெகதீஷ் உலச சினிமா சில தரிசனங்கள் என்ற புத்தகத்தில் 40 படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இவையெல்லாம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்.    ஒவ்வொரு முறையும் தான் பார்த்து ரசித்தப் படங்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியபோது அவர் குறிப்பிடுகிற 40 படங்களையும் நான் பார்க்கவில்லை என்பது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.  சில நிமிடங்கள் இந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யோசித்தேன்.  இந்தப் புத்தகத்தை இப்படிப் படிக்கக்கூடாது என்று தோன்றியது.  இதில் குறிப்பிடப்படுகிற படங்களை ஒவ்வொன்றாய் நாமும் பார்த்து அவர் எழுதியதை ரசிக்க வேண்டுமென்று பட்டது.  மேலும் அவர் குறிப்பிடுகிற படங்கள் எல்லாம் யூ ட்யுப்பில் எளிதாகக் கிடைக்கிறது.  அதையெல்லாம் பார்த்துவிட்டு செந்தூரம்ஜெகதீஷ் எழுதியதையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர் சொல்வது சரியா இல்லையா என்பது உள்ளே போகும். அதாவது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எழுத்தைத்தான் படிக்க முடிகிறது.  அதன் மூலம் சினிமாவை உணர முடியவில்லை.

உதாரணமாக பாப் டைலானின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் üஎதிர்ப்பே எனது பாடல்ý என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ü80களின் தொடக்கத்தில் பாப்டைலானின் பாடல் ஒன்றை கேட்க நேரிட்டது.  கேட்டதுமே அப்பாடல் மனதுக்குள் ஒரு மழைச்சாரல் போல பொழிந்து வசந்தமாக பரவசமூட்டியது.ý என்று பரவசமாக எழுதுகிறார்.  இந்தப் படத்தை 80களில் பார்த்து இதுமாதிரி எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.   ஆனால் இப்போது இந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தால் எது மாதிரியான எண்ணம் அவருக்குத் தோன்றும்? üபாப்டைலன் தற்செயலாய் கிடைத்த ஒரு வைரக்கல்.ý  இப்படி பல வரிகளை உணர்ச்சிகரமாக செந்தூரம் ஜெகதீஷ் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் எழுதி உள்ளார். 

பல கட்டுரைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கின்றன.  இன்னும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.  சினிமா என்பது பார்ப்பதற்குத்தான்.  சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் சினிமாவைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்ட வேண்டும்.  ஒவ்வொரு சினிமா படத்தைப் பற்றியும் ஒரு அகராதி மாதிரி, மிகக் குறைவான வரிகளில் தயாரிக்க வேண்டுமென்று தோன்றியது.  இது சாத்தியமா என்பது தெரியவில்லை.    

செழியனின் உலக சினிமா என்ற புத்தகத்தைப் படிக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் கதையை விவரிக்கிறார்.  படிப்பவரை அந்தச் சினிமா படத்தை எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறார்.  ஆனால் ஜெகதீஷ் தரிசனத்திற்குப் போய்விடுகிறார.  

40 படங்களை தன் புத்தகம் மூலம் அறிமுகப்படுத்திய செந்துரம் ஜெக்தீஷை நான் வரவேற்கிறேன்.  நான் இதுவரை அறிந்துகொள்ளாத 40 படங்கள் என்று அதிசயிக்கிறேன்.  இந்தப் புத்தகத்தை அவரே வெளியீட்டுள்ளார்.  புத்தகத்தின் விலை ரூ.150. தொலைபேசி எண் : 9444090037

நம்ப முடியவில்லை

அழகியசிங்கர்


இந்த முறை டபுள் டக்கர் வண்டியில் பெங்களூர் பயணம் செய்தேன். பகலில்தான் நான் பயணிக்க விரும்புவேன். புத்தகம் படிப்பது என் வழக்கம். என்ன புத்தகம் படிப்பது என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். ஒரு தடியான புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.
உடனே கண்ணில் பட்டது. பா ராகவன் எழுதிய யதி என்ற நாவல். 926 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பது சாதாரணமான விஷயமல்ல. ஆனால் இம்மாதிரியான ரயில் பயணத்தின் போதுதான் இந்த நாவலைப் படிக்க முயற்சி செய்ய வேண்டும்.
வண்டியில் அமர்ந்தவுடன் தடியான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரித்தேன். உண்மையில் என்னுடன் பயணம் செய்பவர்கள் இம்மாதிரியான புத்தகத்தை எடுத்துப் படிக்கிறானே என்று தெரியவேண்டும் என்று நினைத்தேன்.
யாராவது எதாவது கேள்வி கேட்பார்களா என்றுகூட ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஏமாந்து போய்விட்டேன். யாரும் கேட்கவில்லை. ஆனால் நான் அசரவில்லை. யதியைப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கண்ணைச் சுழட்ட ஆரம்பித்தது. சரி தூங்குவோம் என்று தூங்கினேன். ஆனால் யதியை என் மடியில் வைத்துக்கொண்டு தூக்கம் போட்டேன்.
திரும்பவும் கண் விழித்தபோது யதி. பக்கங்கள் வேகமாகப் புரண்டன. வண்டியை விட்டு இறங்கியவுடன் எனக்குத் திருப்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் தாண்டி விட்டேன். நான் உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குத்தான் பெங்களூர் வந்தேன்.
உறவினர் வீட்டுக்கு வந்தபின்னும் யதியை விடவில்லை. முதல் நாள் பூஜை. அடுத்தநாள்தான் கிரஹப்பிரவேசம். முதல் நாள் பூஜையின்போதே யதி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.
அங்கே யதி புத்தகத்தை எல்லோரும் பார்க்கும்படி பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். யாரும் என்னை அதிசயமாகப் பார்க்கவில்லை. என்னடா இவன் இத்தனை தடிப் புத்தகத்தைப் படிக்கிறானே என்ன என்று கேட்போம் என்று யாருக்கும் தோன்றவில்லை. என்னை வினோதமான மனிதனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.
அடுத்தநாள் நிறையா பேர்கள் கிரஹப் பிரவேசத்திற்கு வந்தார்கள். ம்..யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. கன்னடத்தில் பூஜை செய்யும் குருக்கள் மட்டும் என் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் கொடுத்து விட்டார். அவர் கன்னடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
மதியம் மேல் நானும் நண்பரும் ப்ளாசம்ஸ் போய் புத்தகங்களை வாங்கினோம். உண்மையில் ரூ.600 கொடுத்துத்தான் புத்தகங்கள் வாங்கினேன். இன்னும் கூட வாங்கியிருக்கலாமென்று தோன்றியது. ஹெம்மிங் வேயில்ன் கடைசி நாவல் ஐலெண்ட்ஸ் இன் த ஸ்டிரீம்) வாங்கிக்கொணடு வந்தேன். ப்ளாசம்ஸில் இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் விலையும் அதிகம்தான்.
என் நண்பர் என் பிறந்தநாளிற்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாகத் தந்தார். 84 சாரிங்க க்ராஸ் ரோடு என்ற கடிதங்களால் ஆன நாவல். நான் அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து ஆங்கில நாவல்களை முழுவதும் படித்ததில்லை.
அடுத்தநாள் நான் பாரதி மணி வீட்டிற்கு நண்பரோடு சென்றேன். அவர் சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். திரும்பவும் சென்னை. இந்தமுறை லால்பாக். லால் பாக் வண்டியில் உட்கார்ந்து வருவது சௌகரியமாக இருக்கிறது. காலை நன்றாக நீட்ட முடிகிறது. நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். என் பக்கத்திலிருந்தவர்கள் ரொம்ப பருமனாக இருந்தார்கள். அவர்களைத் தாண்டிப் போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. திரும்பவும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். படிக்க ஆரம்பித்தபிறகு நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் சென்னை வந்திறங்கியபோது 533 பக்கங்கள்தான் படிக்க முடிந்தது. இன்னும் 925 பக்கங்கள் இருக்கின்றன. இந்த நாவலைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ராகவன். யதியைப் படிக்கும்போது எனக்கு இன்னும் இரண்டு நாவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. ஒன்று: அசோகமித்திரனின் மானசரோவர். இரண்டாவது க.நா.சுவின் அவதூதர். நான் குறிப்பிடுகிற இந்த இரண்டு நாவல்களுக்கும் யதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நாவலை முடித்துவிட்டுத்தான் சொல்லவேண்டும். தமிழுக்கு இது புதிய முயற்சி என்று படுகிறது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சரளமான நடையில் எழுதியிருக்கிறார்.

சில கேள்விகள் சில பதில்கள் – பாரதி மணி – ஒளிப்பதிவு 1,2

அழகியசிங்கர்

பாரதிமணியை (புள்ளிகள் கோடுகள் கோலங்கள்) நேற்று பெங்களூரில் (02.12.2019) வீட்டில் சந்தித்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் நான் இதுவரை 25 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். பாரதி மணியை 26ஆவதாக பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதிலாக சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றி உள்ளேன். என்னுடன் எழுத்தாள நண்பர் சிந்தூஜாவும் வந்திருந்தார். அவரையும் பாரதிமணியிடம் சில கேள்விக்ள கேட்கச் சொன்னேன். அவரும் கேட்டிருக்கிறார்.

துளி – 76 – நாளை பங்களூர் செல்கிறேன்

அழகியசிங்கர்

நாளை காலையில் டபுள் டக்கரில் பங்களூர் செல்கிறேன்.  மூன்றாம் தேதி திரும்பி வந்துவிடுவேன்.   ஒன்றாம் தேதி என் பிறந்தநாள்.  பங்களூரில் இருப்பேன்.  ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.  உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குப் போகிறேன். அது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  

பிளாசம்ஸ் என்ற புத்தகக் கடைக்குப் போகிறேன்.  புத்தகம் எதாவது வாங்குவேன். பங்களூரில் சில நண்பர்களைத்தான் சந்திக்க முடியுமென்று நினைக்கிறேன்.  அதுவும் திங்கட் கிழமை ஒருநாள்தான் பார்க்க முடியும்.  

போன முறை பங்களூர் போய் வாங்கிவந்த புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை.  இந்த முறை பங்களூரிலிருந்து திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டு வரும் புத்தகங்களை சிறிதளவாவது படிக்க வேண்டும்.  பராசக்தி அருள் புரியவேண்டும். 

அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை



அழகியசிங்கர்

இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.  

நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.’

168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.  

நான் முதலில் இத்தொகுப்பில்  ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,’ என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கதையûப் படித்த தேதி 31.10.2019.  அதன் பின்  10.11.2019 முழுப் புத்தகத்தைûயும் படித்து முடித்தேன்.

33பக்கங்கள் கொண்ட இது சிறுகதை என்பதை விடக் குறுநாவல் என்று தோன்றுகிறது.  காது செவிடாக உள்ள ஒரு பெண்ணின் கதை.   எனக்கு என்னமோ உலகத் தரமான கதைகளில் இதைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.   இப் புத்தகத்தின் 62 பக்கத்தில் காது செவிடாக இருப்பவர்களின் அவதியைச் சொல்கிறார்: ‘செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும்.  அவை சூடானவை நெருப்பாய்ச் சுடுபவை.  ஒலி ஒரு சாட்டை.  வலியைத் தருவது.  அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு.  எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு.  காட்சி உண்டு.  மண் சிவப்பு.  ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு.  குங்குமச் சிவப்பு.’

சிறு குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றிருந்தான் வசந்தன் என்று ஆரம்பமாகும் இந்தக் கதை.  மைதிலி – வசந்தன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அப்போதுதான் ஆஸ்பத்திரியில் ஒரு அனாதை குழந்தை கிடைக்கிறது.

  அதற்கு தேன் மொழி என்ற பெயரை வைத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துப் போகிறான்.  அந்தக் குழந்தைக்குக் காது கேட்காது.  காது கேட்காத ஒரு பெண் குழந்தையை வளர்க்கிற பாட்டை கதை விவரித்துக்கொண்டு போகிறது. 

காக்ளியர் அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்துவிடுகிறாள் தேன்மொழி.  வசந்தனுக்கு ஏமாற்றம்.  பிரிந்து விடுகிறான். கடைசிவரை அவனைத் தேடித் தேடிப் போகிறார்கள்.  வசந்தன் கிடைக்கவில்லை.  உண்மையில் காது கேட்காத பெண்ணை அவன் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. 

இறுதியில் கதை இப்படி முடிகிறது.  மொழி ஒரு தொடர்பு.  ஒலி இல்லாமலும் அது  நேரலாம்.  

தேன்மொழி, மைதிலி, வசந்தன்.   

‘தொண்டை புடைத்த காகம்’ ஒன்று என்ற கதையில்  சன்னல் வழியாக வரும் காக்கை வித்தியாசமான காக்கையாக இருக்கிறது.   மழைக் காலங்களில் சமையலறை சன்னல் மீதுதான் இருப்பு. உப்பு பிஸ்கோத்து போடாமல் க்ளூகோஸ் பிஸ்கோத்து போட்டால் நிமிர்ந்து பார்த்து தலையைத் திருப்பிக்கொள்ளுமாம்.  வறுவல் என்றால் உயிராம். இன்னும் கேட்கும். பதிலுக்குத் தன் வாயில் வைத்திருக்கும் எலும்பு எதையாவது சன்னல் படிக்கட்டில் வைத்துவிட்டுப் போய்விடும். 

ஒருநாள் காகம் கத்துவதைக் கேட்டபோது அது காகம்தானா என்ற சந்தேகம் வருகிறது.

அப்படியே இந்தக் கதை அப்பாவிடம் ஆரம்பிக்கிறது.  சாப்பாடு சாப்பாடு என்று அப்பா கத்துகிறார்.  அவருக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. அப்பாவின் ஞாபகமறதியிலிருந்து ஒரு பெரிய குடும்பக் கதையை விவரிக்கிறார்.  ஒரு மாலை பொழதில் அப்பா காணாமல் போய்விடுகிறார்.  பின் அவரைக் கண்டுபிடித்து ஒரு நர்ûஸ வைத்துப் பார்த்துக்கொள்கிறாள்.  

இரண்டு காதல்களின் தோல்வி, அம்மா விசாலம், அப்பா என்று பலத்த அலைகளாக நினைவுகள் மோதுகின்றன.  அந்தச் சமயத்தில் சன்னலோரம் வந்த காக்கையைக் கோபத்துடன் விரட்டி விடுகிறாள்.  அதன்பின் காக்கை வரவில்லை.  பேருந்தில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காக்கை பஸ்ஸில் அடிப்பட்டு உயிரை விடுகிறது. காக்கையை மட்டும் கூறுவதல்ல இந்தக் கதை.  காக்கை மூலம் எல்லாமும் வருகிறது.  

பயணம் 21, 22, 23 என்று மூன்று கதைகள்.  மூன்றும் மூன்று பயண அனுபவங்கள். கட்டுரைகளா? கதைகளா? நகுலன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் நிகழ்ச்சியை கதையாக மாற்றி இருக்கிறார்.  அதே போல் முயற்சியா இது.  பயணம் 23 பற்றி சொல்ல வேண்டும்.  கதையில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  üஎதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்குகளின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்தான் இருந்தது.

இன்னொரு இடத்தில் பாரதியின் அக்கினிக் குஞ்சு என்ற கவிதையை மோசமாகக் கிண்டல் அடிக்கிறார்.  வக்கிரமான உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கூட கூறலாம். இதோ:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இதற்கு விளக்கம் தருகிறார்.  அக்னிக் குஞ்சு ஆண் குறியாம், காட்டிலோர் பொந்து பெண்ணுடைய யோனியாம், வெந்து தணிந்தது காடுý கலவி உச்சத்தைக் குறிக்கிறது.  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் கலவி இயக்கத்துடைய தாள கதியாம்.. பாரதி பாடலை இவ்வளவு மோசமாக யாரும் கிண்டல் செய்திருக்க மாட்டார்கள்.  பாரதி படித்தால் தற்கொலை செய்துகொண்டு விடுவார்.

üசாம்பல் மேல் எழும் நகரம்ý என்ற கதையை இரண்டு முறைக்குமேல் படித்தேன்.  என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.  அம்பையின் கதை பெண்களைப் பற்றிச் சுழலுகிறது.  துயரம்தான் அதிகம்.  நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு.  பயணத்தைப் பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கின்றன.   இப்புத்தகம் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.  விலை ரூ.195.

துளி – 75 – நாவல் எழுதியது எப்படி – 2



அழகியசிங்கர்

சரி, நாவல் அவ்வளவு சுலபமாய் எழுதி விட முடியுமா?  முடியும். ஆனால் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப எளிது.  அதன்பின் சிறுகதை கவிதை எழுதுவதை விடச் சற்று சிரமம்.  கட்டுரையும் அப்படித்தான்.  ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் பல புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்துக் கோர்க்க வேண்டும்.

நான் இப்போது எழுதி உள்ள ‘தனி இதழ் நன்கொடை ரூ.20’. உண்மையில் என் முதல் நாவல்.  இரண்டாவதாக வந்து விட்டது. எப்போதோ ஆரம்பித்தேன்.   ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்.’  என் முதல் நாவலாக மாறிவிட்டது. ஒரு நாள் பகல் நேரத்தில் வெகு நேரம் தூங்கி எழுந்தவுடன், யாரோ சொன்னதுபோல் (ஷ்ரடி சாய் என்று நினைக்கிறேன்) தோன்றியது ‘உன் நாவல் கணினியிலேயே இருக்கிறது’ என்று. 

உடனே கணினியைத் தட்டினேன்.  5 ஆண்டுகளுக்கு முன் நான் அம்ருதா பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை எல்லாம் தொகுத்து ‘எதையாவது சொல்லட்டுமா’ என்ற கட்டுரைத் தொகுதி கொண்டு வந்தேன்.  பின் முதல் நாவலைத் தேதி வாரியாக நான் குறித்து வைத்திருந்தேன்.  அது புது விதமான நாவல். தன் புனைவு நாவல்.

பிரமிள் என்ன முயற்சி செய்தும் நாவல் எழுத முடியவில்லை.  ஞானக்கூத்தனும் கவிதைகள் தவிர நாவல் எழுதவில்லை.  ஏன் மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா சிறுகதைகளோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.  இலக்கியத் தரமான நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது என் நண்பர் ஒருவரை ஒரு கிருத்துவப் பெண் காதலித்தார். பார்க்க லட்சணமாகவும் இருந்தார்.  நண்பர் வேண்டாமென்று மறுத்து விட்டார்.  அவர் மறுத்தது என் மூளையில் போய் உட்கார்ந்து விட்டது.  அந்தப் பெண் அவரை மணந்து கொண்டால் எப்படி இருக்கும்?  அதுதான் நாவலின் இன்னொரு இழையாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

அமேசானில் போய் எளிதாக நீங்கள் படித்து விடலாம்.  விலை ரூ.49 தான்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 127


 பாம்புகளற்ற மகுடிகள்

சௌந்தர மகாதேவன்

 

அவன் விதவிதமாய் 

மகுடிகளோடு மண்டியிட்டு

அமர்ந்திருக்கிறான். 

படமெடுக்கும் பாம்புகளை

ஆசையாய் அடக்க

அவன் முன்னால் 

அழகழகாய் மகுடிகள்.

மொழியாய் ஒரு மகுடி 

வண்ணமயமான மாயாஜால

ஜிகினாவாய் ஒரு மகுடி 

விவாதக்கூச்சல்களோடு 

ஒலிவாங்கியாய் ஒரு மகுடி 

விசும்பல் ஒலியோடு ஒரு மகுடி

ஒவ்வொரு மகுடியையும் 

அவன் எடுத்தெடுத்து ஊதினான் 

பிடாரனின் ஓசை காற்றில் கிளம்பியதைக் 

கேட்டன செவியில்லாப் பாம்புகள் அனைத்தும்

மகுடி மயக்கம் மரணத்தொடக்கமென 

ஆடுதல் விடுத்து அப்பால் நகன்றன

பாம்புகள் இல்லாப் பிடாரன்

அன்றிலிருந்து வாசித்தலை 

நிறுத்தினான் யோசித்தலுடன்

நன்றி : தண்ணீர் ஊசிகள் – சௌந்தர மகாதேவன் – மேலும் வெளியீட்டகம், 9 இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை 627002 – பக்கங்கள் : 118 – விலை : ரூ.120