எதையாவது சொல்லட்டுமா……..45

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நவீன விருட்சத்தின் 90வது இதழை எடுத்துக்கொண்டு வந்தேன். எப்படியோ வந்து விட்டது. இந்த இதழைக் கொண்டுவர ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. முனைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதுபவர்கள் படிப்பவர்கள் என்ற இரு பிரிவுகளை எடுத்துக்கொண்டால், இரண்டுமே குறைவு என்று ஆரம்பம் முதல்
சொல்லிக்கொண்டிருப்பவன் நான்.

அச்சடித்த இதழைப் பிரித்துப் பார்க்கவே எனக்கு சற்று அச்சமாக இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே இதழில் அச்சுப் பிழைகள் தாராளமாக இருந்தன. இந்த முறையும் புத்தக விமர்சனம் செய்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

மின்சாரம் இல்லை என்பதால் இதழை ரொம்பவும் தாமதப் படுத்தி விட்டார்கள். நான் இதோ 12ஆம் தேதி Florida என்ற அமெரிக்காவில் உள்ள ஊருக்குப் போக உள்ளேன். என் புதல்வன் அங்கிருக்கிறார். 1 மாதம் அங்கிருப்பேன். அதற்குள் இதழை எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

இந்த இதழ் அட்டைப் படத்தில் பூனையைக் கொண்டு வந்ததால், என் வீட்டில் பூனைக் குட்டிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் 90வது இதழில் இடம் பெற்றுள்ளன.

1. இலக்கியத் தரம் உயர – க.நா.சு
2. உப்பு – லாவண்யா
3. புத்தக விமர்சனம் – ஐராவதம்
4. அழகிய வீரர்கள் – கவிதை – ராமலட்சுமி
5. பழம் புத்தகக் கடை – விட்டல் ராவ்
6. அவலம் – சிறுகதை – உஷா தீபன்
7. குவளைகளில் கொதிக்கும் – கவிதை – மிருணா
8. மிகை – சிறுகதை – எஸ். ஷங்கரநாராயணன்
9. ஜோல்னா பைகள் – கவிதை – அழகியசிங்கர்
10. வெளியே ஒருவன் – சிறுகதை – நா.ஜெயராமன்
11. இரண்டு கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
12. இரண்டு கவிதைகள் – ராஜேஷ் நடராஜன்
13. பால்ய பொழுதுகள் – கவிதை – ப மதியழகன்
14. இரண்டு கடிதங்கள் – சிறுகதை – அழகியசிங்கர்
15. அகாலம் – சிறுகதை – பஞ்சாட்சரம் செல்வராஜன்
16. அவனின் தேடல் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
17. முகங்கள் – கவிதை – ஐராவதம்
18. சாய்பாபா – கட்டுரை – அம்ஷன்குமார்
19. அனுமானங்கள் – கவிதை – அனுஜன்யா
20. நிசி – கவிதை – ப மதியழகன்
21. உரையாடல் – அழகியசிங்கர்

பத்திரிகை அனுப்புவதில் விட்டுப் போயிருந்தால், New Booklandsல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்துக்கொள்ளவும். கூடிய விரைவில் அடுத்த இதழ் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

தற்கொலைக் குறிப்பு

படிக்கட்டின் விளிம்பில்
நின்றவாறு
இடதா,வலதா என
யோசித்தான்
தொப்பலாக
மழையில் நனைந்த பிறகு
குடை பையிலிருப்பது
ஞாபகம் வந்தது அவனுக்கு
கோயிலுக்குள் சென்ற பிறகும்
அவன் மனம்
கழட்டிப் போட்ட
காலணிகளையே
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
தினமும்
ஏதாவது ஒரு வரிசையில்
நிற்க நேர்வது
எரிச்சலைத் தந்தது அவனுக்கு
தனது அலைவரிசையை
ஒத்தவர்களை
சந்திக்க நேரும்
தருணங்களிலெல்லாம்
டைரிக் குறிப்பில்
சிவப்பு மையால்
அடிக்கோடிடுவான்
வாழ்க்கை மீது
நம்பிக்கை இழக்கும்
தருணங்களிலெல்லாம்
பர்ஸை திறந்து
அதிலுள்ள புகைப்படத்தை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருப்பான்
சில நாட்களாக
தற்கொலைக் குறிப்பை
சட்டைப் பையில்
வைத்துக் கொண்டே
நடமாடி வந்தான்
வலி இல்லாமல் சாக
வழி சொல்லும் புத்தகம்
எங்கேயாவது கிடைக்குமா
எனத் தேடிக்கொண்டிருந்தான்.

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென

ஒரு வலிய திரை

ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட

பாடல்களை இசைத்தபோதும்

வெறித்த பார்வையோடு தான்

துயருறுவதாகச் சொன்ன போதும்

பொய்யெனத் தோன்றவில்லை

ஏமாறியவளுக்கு

இருள் வனத்திலொரு ஒளியென

அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன

வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன

அவனது கைகள்

ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன

தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது

அவனிட்ட மாயச் சங்கிலி

விலங்கிடப்பட்ட பறவையென

காலடியில் வீழ்ந்துகிடந்தாள்

சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன

கூரிய நகங்களைக் கொண்ட

அவனது விரல்கள்

பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு

விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்

இருவரையும் நனைத்தது மழை

அவளது குருதியும் வேதனையின் ஓலமும்

தடயமழிந்து போயிற்று

என்றென்றைக்குமவளது

சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

எதையாவது சொல்லட்டுமா……..44

உங்களுக்கு கல்யாண சுந்தரம் தெரியுமா? எப்படி தெரியும்? நான் சொன்னால்தான் தெரியும். இது கணனி யுகம். எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றம் நடந்தவண்ணம் உள்ளது. வங்கியிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வங்கியின் கணனியின் Intranet மூலம் ஒருநாள் வங்கியின் சர்குலர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சி எனக்கு. கல்யாணசுந்தரம் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. நான் பார்த்த சமயம் ஏப்ரல் மாதம். கல்யாணசுந்தரம் மரணம் அடைந்த மாதம் மார்ச்சு மாதம்.

இந்தக் கல்யாணசுந்தரம் எனக்கு தூரத்து உறவு. அவர் இறந்த விஷயத்தை என் பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாணசுந்தரத்தை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பீச் வரை வரும் மின்சார வண்டியில் தினமும் சந்திப்பேன். அப்படி இல்லாவிட்டாலும் ஹார்பர் கிளையில் கீழே வரும்போதெல்லாம் சந்திப்பேன். அப்போது நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிகமாகப் பேச மாட்டோ ம். எதாவது ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவோம். அவ்வளவுதான். கிளார்க்காக இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ரொம்ப ஆண்டுகளாக அவர் எந்தப் பதவி உயர்வும் பெறாமல் கிளார்க்காகத்தான் இருந்தார். பின் ஒரு தவறான முடிவு எடுத்தார். அதிகாரியாகப் போக வேண்டுமென்று. அந்த முடிவுதான் அவருக்கு வினையாகப் போயிற்று.

சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம் வட்டாரத்தில் பதவி உயர்வு கொடுத்து அவரைத் தூக்கிப் போட்டார்கள். அங்கிருந்து அவர் சென்னைக்கே வந்து விட்டார். ஆனால் அதிகாரியாக அவரால் உழைக்க முடியவில்லை. வயது அதிகரித்து விட்டதால், உடல்நிலை பாதிப்பும் வந்துவிட்டது. உஸ்மான் சாலையில் உள்ள ஒரு கிளையில் அவர் நின்றுகொண்டே இருப்பார். உட்கார முடியாது. நான் அவரைப் பார்த்துக் கேட்கும்போது, உடல் உபாதைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

சென்னையில் அவர் அதிகாரியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை திருச்சி வட்டாரத்திற்கு அனுப்பி விட்டார்கள். அங்குதான் அவருக்குப் பிரச்சினை இன்னும் அதிகம் கூடிவிட்டது. அவரால் அலுவலகத்தில் பணி புரிவது அசாத்தியமாகி விட்டது. உடல்நிலை அவரை விட்டு வைக்கவில்லை. திரும்பவும் அவர் உடல்நிலை பொருட்டு சென்னைக்கு வரவேண்டுமென்று சொன்னாலும் முரட்டுத்தனமான தலைமை அலுவலகம் செவி சாய்க்கவில்லை. அதிகாரியாக இருந்ததால், அலுவலகத்திற்குக் காலையில் சென்றால், இரவுதான் திரும்பி வரவேண்டும். கடுமையான வேலை. அவருக்கு குழந்தை எதுவுமில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிடலாமென்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தன் உடல்நிலையைக் குறித்து மருத்துவச் சான்றிதழ்களுடன், அவர் மனைவியை அழைத்துக்கொண்டு
தலைமை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் போய்ப் பார்த்தார். தானாகவே விடுதலை செய்யும் திட்டத்தில் (VRS) இவரை விடுவிக்கவில்லை. வேலை வேண்டாமென்று எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத கல்யாணசுந்தரத்தை திருச்சியில் உள்ள வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக வேலை வாங்கினார்கள். முன்பு அரசாங்கத்தில் பணிபுரிபவர்களைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு அப்பாவின் முகமே தெரியாது என்று. அதாவது அவர் காலையில் பிள்ளைகள் தூங்கி எழுவதற்கு முன்பே அலுவலகம் போய்விடுவார்கள். பின் அவர்கள் வரும்போது, பிள்ளைகள் தூங்கி விடுவார்கள் என்று. அதேபோல் இன்றைய வங்கியும் மோசமாகி விட்டது. அதுவும் அலுவலராக யாரும் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது.

காது பிரச்சினை காரணமாக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை எடுத்துக்கொண்டார்.அதுவும் மருத்துவமனைக்குச் சென்றால் உடனே அலுவலகத்திலிருந்து போன் வரும் எப்போது வரப்போகிறீர்கள் என்று. அரைகுறையாக அவசரம் அவசரமாக அலுவலக ஓடி வரும். திரும்பவும் கடுமையான வேலை. காது பிரச்சினை போய் மூக்கில் அவருக்குப் பிரச்சினை. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போதே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவர் நிலை மோசமாகிவிட்டது. எல்லாவிதமான பிரச்சினைகளும் சேர்ந்து விட்டன. சென்னையில் அப்போல்லா மருத்துவமனையிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மரணம் அவரைத் தழுவி விட்டது. என் பெரியப்பா ஸ்ரீபையனிடம் கேட்டேன். ஏன் கல்யாணசுந்தரம் மரணமடைந்த விஷயத்தைக் கேட்டேன். ”எல்லாம் குழப்பமாக இருக்கிறதுப்பா..உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. கல்யாணசுந்தரம் என்னை விட வயதில் சிறியவர். கல்யாணசுந்தரம் மனைவியிடம் போன் பண்ணி விஜாரித்தேன். அவர் திருச்சியில் வீடை காலி செய்யாமல் இருக்கிறார். கல்யாண சுந்தரத்திற்கு வரவேண்டியதைப் பெறுவதற்கு. அதுவும் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதோ நானும் கல்யாணசுந்தரம் மாதிரி சீர்காழியில் அலுவலராக மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அப்பாவிற்கு 90 வயது நான் இங்கே வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் மாற்றல் கிடைக்கவில்லை. டம்மியாய் ஒரு யூனியன். கையில் சாட்டையுடன் ஒரு பூதம் மாதிரி தலைமை அலுவலகம் வீற்றிருக்கிறது. பணிபுரிபவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல்.

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின்

பரந்த வெளியில்

கொட்டகைத் தொட்டியில்

கொட்டிய கழனியை

சப்பி சப்பி

குடித்தது பசு.

நிலா மிதந்த

கழனியை மென்று

மென்று சுவைத்தது.

மிகுந்த சுவையாய்

இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல

வாய்க்கு பிடிபடாமல்

தொட்டியில் எஞ்சிய

கழனியிலேயே கொஞ்சி

விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்

காணாமல் நிலா போக

பசு கன்றைப்

பார்த்தது சந்தேகமாக

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது

பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது

கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது

பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,

புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.

ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டப்படி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக் கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது
கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்
வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்
ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல..

27.05.2011
மதியம் : 1.50

அதிர்வு தாங்கா அறைகள்

அறையை விட்டு வெளியேறுகிறேன்
விதிக்கப்பட்ட பொருட்களை
எடுத்துக்கொண்டு
வந்து நின்ற மரத்தின்
நிழலில் ஆசுவாசமடையத் தொடங்குகிறேன்

நான் வெளியேறிய
அறை
முன்னிலும் பிரகாசிக்கிறது
அடைசலாயிருந்த
புத்தக அலமாரியின் சுண்ணாம்புகள்
மீண்டும் பூசப்படுகின்றன

முட்டைகளின் நாற்றம் போக
பளிங்குக்கற்களில் சோப்புகளை
பிரயோகிக்கிறார்கள்

இவன் வெளியேற்றம்
இன்னொருவனுக்கான வழி
என யாரும்
சொல்லிவிடாதீர்கள்.
என் அறைகள்
அதிர்வுகளைத் தாங்குவதில்லை

சில நேரங்களில்

சில நேரங்களில் ஒரு கவிதையில்

சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது

நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு

ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும்

முற்றுப் பெறுகிறது – சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்

தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்…
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை

தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்

லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும

பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்

தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.

ஆடுகளம்

ராமலக்ஷ்மி

வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்

தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்

இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்

பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்

நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்

பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்

விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்

கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்

கல்லா மண்ணா..
வாழ்க்கை பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்

காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்…

எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***