நரியும் நிலாவும்

பௌர்ணமி இரவில்

கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை…
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி…
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.

புதிய ஊர்

நான் பார்த்துக்கொண்டிருந்த இடம்
என் கனவாக இருந்தது
எப்போதும் தண்ணீர்
தட்டுப்படாமல் கிடைத்தது
மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது
மழையும் வெயிலும்

மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன

எங்கும் பார்த்தாலும்

அசையாமல் கட்டிடங்கள்

காத்துக்கொண்டிருந்தன

மனிதர்கள்

உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா

அல்லது

வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா

என்பது தெரியவில்லை

நடந்துபோய் பொருள் வாங்க

வேண்டுமென்றால்

காரைக் காட்டினான் புதல்வன்

நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்…

21.07.2011

1.30 pm

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

கட்டங்கள் வரைந்து

சொற்களை உள்ளே இட்டேன்
அவற்றுக்குள் தொடர்பு
ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்
கட்டங்கள் ஒன்றோடொன்று
இணைந்தன
சொற்கள் அடைபட்டுப்போய்
பேச மறுத்தன
கட்டங்களை நீக்கி விட்டு
சொற்களையும் கோடுகளையும்
இணைத்து விடலாம் என
எண்ணினேன்
கட்டி வைத்த சொற்களும்,

இணைக்க இழுத்த கோடுகளும்,

ஒட்ட மறுத்தன
மீண்டும் கட்டங்களை
வரைந்தபோது அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்
ஒரு சேரக்காணாமல் போயின
எஞ்சிய சொற்கள்
என்னைக்கேலி
செய்து கொண்டிருந்தன.

எதையாவது சொல்லட்டுமா……..47
அழகியசிங்கர்
நாங்கள் இறங்கிய இடம் ப்ளோரிடா. விஸ்தாரமான இடம். என் பையன் இருக்கும் வீட்டிலிருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் காரில்தான் செல்ல வேண்டும். ஒரு காய்கறி வாங்குவதற்குக்கூட காரில்தான் பயணம் போக வேண்டும். நடந்துபோக முடியாது. ஒரு பெரிய நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பத்து அபார்ட்மெண்டுகள். வீடுகள் ஓடுகளால் வேயப்பட்டிருக்கின்றன. காரை இடது பக்கமாகத்தான் ஓட்ட முடியும். இதுவே இந்தியாவில் உல்டாவாக இருக்கும். தெருவில் கார் செல்லும் இடம் விஸ்தாரமாக இருக்கிறது. ஒரே சமயத்தில் 3 கார்கள் வரிசையாகப் போவதற்கும் வருவதற்கும் ரோடு வழிவகுத்துக் கொடுத்து இருக்கிறது. ஹைவேஸில் ஓட்டுவதாக இருந்தால் வேகமாக ஓட்ட வேண்டும். குறைந்தது 100 மைல் வேகத்தில் வண்டியை ஓட்ட வேண்டும். சிதம்பரத்திலிருந்து சென்னை வரும் தூரத்தை பையன் 2 மணி நேரத்தில் கடந்து விட்டான். அங்கு என்றால் 5 மணி நேரம் மேல் ஆகும். ஆனால் எங்கும் மனிதர்களே தென்படவில்லை. வீடுகள் கார்கள் மட்டும் கண்ணில் படும். மனிதர்கள் யாராவது உள்ளார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
பையனுக்கு வீட்டிலேயே பணி என்பதால், நான், பையன், மனைவி மூவரும் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட Pre retirement rehersal மாதிரி எனக்குத் தோன்றியது. ஆனால் சென்னையில் இருந்தால் அலை அலையென்று அலைந்து கொண்டிருப்பேன்.
@@@@@@@
நான் இங்கு வரும்போது, நிறையப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வரவேண்டுமென்று நினைத்தேன். எடுத்து வந்தால் என் மனைவி என்னுடன் வரமாட்டாள் என்பதால் சில புத்தகங்களை மட்டும் எடுத்து வந்தேன்.
அவசரம் அவசரமாக வந்ததால் கையில் கிடைத்தப் புத்தகங்களை எடுத்து வந்தேன். மேலும் ஏற்கனவே படித்த புத்தகங்களாக எடுத்து வந்தேன். ஒரு புத்தகத்தை நிதானமாக மிக நிதானமாகப் படிக்க அதிகமான நேரம் இங்கு கிடைத்துள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் நாங்கள் எங்கும் சுற்ற முடியாது. நான் பார்த்த 2 இடங்களை பின்பு சொல்லாம் என்று நினைக்கிறேன். நான் இதெல்லாம் கூட எனக்காகத்தான் சொல்கிறேன். மற்றவர்களுக்காகச் சொல்கிறேன் என்பதுகூட ஆனவமாகத் தெரியும். நான் எழுதிப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏன்என்றால் எல்லாம் மறந்து விடுகிறது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு டைரி மாதிரி எழுதிக் கொள்கிறேன்.
2000ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நான் அசோகமித்திரனை அவர் வீட்டில் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். அப்போது அவர் கையெழுத்திட்டு ஒரு புத்தகம் படிக்கக் கொடுத்தார். இந்தப் புத்தகத்தை ரொம்ப நாட்களாக அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஞாபகமாக எனக்கு அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அப்புத்தகத்தின் பெயர் ‘மானசரோவர்’. அந்த நாவலை ரொம்ப வருடங்களுக்கு முன்னால் நான் படித்து முடித்திருந்தேன். பின் 2000-ல் கொடுத்தப் புத்தகத்தை நான் திரும்பவும் 2011-ல் அமெரிக்காவில் இன்றுதான் படித்து முடித்தேன். ஆனால் அப்போது படித்தபோது அந்தக் கதையில் ஒரு சித்தரை சந்திப்பதாக நிகழ்ச்சி வரும் என்ற ஞாபகம் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை. திரும்பவும் படிக்கும்போது புதியதாக இந்த நாவலை எடுத்துப் படிப்பதாகத் தோன்றியது.
இந்நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் மாறி மாறி கதையைக் கொண்டு போகிறது. ஒரு காதாபாத்திரம் சத்யன்குமார். இன்னொரு கதாபாத்திரம் கோபால். ஒரு பாத்திரம் ஒரு வட இந்திய சினிமா நடிகர். இன்னொரு பாத்திரம் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவம் நம்மை திகைக்க வைக்கிறது. கதையின் இந்தப் பகுதியை blow up பண்ணாமல் கொண்டு செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு வர்ணனையும் மிக முக்கியமானது. கோபால் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பயங்கரத்தை பல அத்ததியாயங்கள் கொண்டு செல்லலாம்.
‘சியாமளா குழந்தையோடு என் வீட்டு வாசலில் காத்திருந்தாள். நான் கதவைத் திறக்க, டாக்டரோடு அவளும் உள்ளே போனாள். எங்களைக் கண்டதும் ஜம்பகம் கத்த ஆரம்பித்தாள். அவளுடைய புடவையெல்லாம் நனைந்திருந்தது. இன்னுமா ராஜா தூங்குகிறான் என்று அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். அவன் ஒரு தலையணையை கொண்டு முகத்தை மூடியபடி படுத்திருந்தான். நான் தலையணையை எடுத்தேன். அவனுடைய மூச்சு நின்றிருந்தது.’
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும்? பையனின் உயிரைப் பறிக்கிற அளவிற்கு சியாமளா ஏன் சென்றாள்? கோபாலின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படும்படி அவள் சத்தம் போட்டாலும் அதில் எந்தவித நியாயமும் இல்லை.
இன்னொரு கதாபாத்திரம் சத்யன்குமார். கோபால் மீது அவர் வைத்திருப்பது என்ன? சத்யன்குமார் கோபாலைச் சந்திப்பதையே முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார். கோபால் வாழ்க்கையில் அவர் செய்த தவறை எப்படியும் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கிறார். கேபால் ஆனால் அதைச் சொல்ல விடுவதில்லை. சுவாமிஜிதான் அதைப் போட்டு உடைக்கிறார்.
‘என்ன சொல்ல வேண்டும். கோபால் வீட்டில் இல்லாதபோது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய். அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்க முடியும்?’ என்று சொல்லும்போது கதையின் புதிர் விடுபடுகிறது. சத்யன்குமாரின் இந்த நிகழ்ச்சிக்காக கோபால் ஆத்திரப்படவில்லை. அசோகமித்திரன் ரொம்பவும் subtle ஆக எடுத்துக்கொண்டு போன விதம் எனக்குப் பிடித்திருந்தது.


சில்லறை

கடிகார முள்

எதை துரத்துகிறது

உச்சி வெயில்

சாலை வெறிச்சோடியது

வானில் ஒரு பட்டம்

நிலவு காய்ந்தது

என்னன்னமோ யோசனைகள்

விடிந்துவிட்டது

பைகளைத் துழாவினேன்

சில்லறை இல்லை

என் அதிர்ஷ்டம்

வீட்டுக்குத் திரும்பினேன்

கதவு பூட்டப்பட்டிருந்தது

நேற்று திறந்திருந்ததே

குடை விரிக்க

யோசிக்கிறேன்

நனைந்தால் ஒன்றும்

கரைந்துவிட மாட்டேன்

இன்று கடிதம்

வரவில்லை

என்று தான் வந்தது

நாய் துரத்தியது

தப்பினால் போதுமென்று

ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன்

நாய்கள் ஜாக்கிரதை என்ற

போர்டை கவனிக்காமல்.

நிலாக் காவல்

நடந்து கொண்டே

இருந்தேன். என்னைத்

தொடர்ந்து கொண்டே

இருந்தது நிலா.

இரவின் தனிமை

என்னை

அச்சமூட்டவில்லை…

நடந்த தூரங்கள் முழுக்க

தொடர்ந்து உரையாடிக்

கொண்டே வந்தது நிலா…

நான் நுழைந்த

அந்த வீட்டிற்குள்

மட்டும் நுழையவில்லை

அந்த நிலா..

எவ்வளவு நேரம்

எனக்காக வெளியே

காத்திருந்ததோ

எனக்குத் தெரியவில்லை…

ஓயாத அலைகள்

நீரலை அடியில்
நீந்தும் மீன்கள்
எப்போது வலையில்
வேடன் குறி
தப்பியது கிளி
அசைவின்றி மரம்
ஓயாத அலைகள்
நீல வானம்
படகின் பயணம்
நிழல்
வளரும் தேயும்
தண்ணீரில் முகம் தெரியும்
மின்விசிறி சுழல்கிறது
விளக்கு எரிகிறது
படுக்கையில் யாருமில்லை
சாலையில் ரோஜா
சருகாகும் வரை
பிணத்தின் வாடை
நடைபாதையில் பணமுடிப்பு
கையேந்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
கும்மிருட்டு
நகரும் நட்சத்திரம்
மின்மினிப்பூச்சி
காட்டுப் பாதை
மேடு பள்ளம்
விநோத ஒலி.

இருபது ரூபாய்..

(சிறுகதை)
இந்த முறை பாபு. ஆனால் அவரை அனுப்ப மேலாளருக்கு விருப்பமில்லை. பாபு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவார் என்று. பாபுவைப் பற்றி என்ன சொல்வது. 24 மணிநேரமும் பணத்தைப் பற்றியே சிந்தனை உள்ளவர். யாரிடம் எப்படி பணம் கடன் கேட்பது. பாபுவுக்கு குடும்பம் பெரிசு. 3 பெண்கள். பின் ஒரு ஆண் பிள்ளை. எல்லோரும் படிக்கிறார்கள். வருமானம் வங்கியில் கிடைக்கும் வருமானம் மட்டும்தான். வீட்டில் ஆடம்பரமான செலவு.
சாட்லைட் கிளைக்கு பாபுவை அனுப்ப மேலாளர் தயங்கியபோது, மேலாளர் மீதே பாபுவுக்குக் கோபம். ஒருநாள் சாட்லைட் கிளைக்குச் சென்றால், ரூ.300 கிடைக்கும். பாபு பரக்கிற பரப்பில் முன்னதாகவே பணத்தைப் போட்டு எடுத்துக் கொண்டு விடுவான். அன்று அப்படித்தான் டிஏ பில் போடாமலேயே பணத்தை வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு விட்டான். நான் மேலாளரிடம் புகார் செய்தேன். ஏனோ அவர் பாபுவை விஜாரிக்கவில்லை.
இது ஒரு பக்கம். பாபு புலம்ப ஆரம்பித்ததால், மேலாளர் சாட்லைட் கிளைக்கு பாபுவை இனிமேல் அனுப்ப ஒப்புக்கொண்டு விட்டார். பல மாதங்களாக சாட்லைட் கிளைக்கு நான் சென்று வந்ததால், சில பொறுப்புகளை பாபுவிடம் ஒப்படைக்க நானும் சென்றேன். காரில், நான், பாபு, மீனு..இந்த மீனு மதுரைப் பெண். அவளைத் தூக்கி சீர்காழி கிளையில் போட்டு சித்தரவதை செய்கிறார்கள். அவள் கிளார்க். பாபுவும், நானும் உதவி மேலாளர்கள்.
6கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீராநல்லூர் சாட்லைட் கிளைக்கு 10 பேர்கள் வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாரத்தில் 2 நாட்கள் போகவேண்டும். ஒரு வாரத்தில் பாபுவுக்கு ரூ.600 கிடைக்கும். பாபு புலம்பியதற்குக் காரணம் இருக்கிறது.
சாட்லைட் கிளையில் உள்ள கணக்குகள் எல்லாம் மானுவல். கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி கணக்கு இருப்பது ஆபத்து. பாபு சாட்லைட் கிளைக்குச் செல்லப் போவதை அறிந்து எனக்கு இது வேற கவலை. மானுவல் கணக்கில் பலர் பணம் எடுக்கவே வருவதில்லை. பல கணக்குகளில் பேர் மாத்திரம் இருக்கும். என்ன முகவரி என்பது தெரியாது. பாபு நினைத்தால் சுருட்டலாம். மீனு செல்வதாக இருந்தாலும் கூட, எளிதாக சுருட்டலாம். மீனு புதுசு என்பதால், ஏமாற்றவும் ஏமாற்றலாம்.
ஆனால் பாபு அதுமாதிரி செய்யக்கூடியவரா என்பது எனக்குத் தெரியவில்லை. கொஞ்ச மாதங்களுக்குமுன் பூங்கோதை என்ற அலுவலர், வங்கியை ஏமாற்றி 3 லட்சம் வரை எடுத்துவிட்டாள். ரொம்பவும் தற்செயலாக அவள் ஏமாற்றிய விதத்தைக் கண்டுபிடித்தார்கள். வேறு பெயரில் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது, அந்தக் கணக்கிற்கு அனோமதயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவது, பின் தானாகவே கையெழுத்து இட்டு பணத்தை எடுப்பது..மீனா மாதிரி மஞ்சுளா என்ற பெண் புதிதாகச் சேர்ந்திருந்தாள். பூங்கோதை சொல்கிறாள் என்று மஞ்சுளா புதிய கணக்கை தொடங்கி வைத்தாள். அந்த வினையால் அவள் எங்கள் கிளையிலிருந்து வேறு எங்கோ தூக்கி எறியப்பட்டாள். அந்தத் திருட்டைக் கண்டுபிடித்த கேசவனுக்கு உடம்பெல்லாம் ஆட ஆரம்பித்து விட்டது. வவுச்சர்களை செக் பண்ணும்போதுதான் கேசவன் கண்டுபிடித்தார். அவரால் முதலில் நம்பவே முடியவில்லை. பூங்கோதை அப்படிப் பேசுவாள். உண்மையில் அந்த வவுச்சர்களை நான் செக் செய்திருந்தால், கண்டுபிடிக்காமல் போயிருக்கலாம்.
அன்று சனிக்கிழமை. பூங்கோதைதான் திங்கட் கிழமையிலிருந்து சாட்லைட் பிராஞ்சிற்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்தோம். அப்படி முடிவு செய்த நாளில்தான் பூங்கோதையின் அயோக்கியத்தனம் தெரிந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எங்கள் கிளையைவிட்டு பூங்கோதை போன பிறகு, திரும்பவும் தொடர்ந்து சாட்லைட் கிளைக்கு நான்தான் போய்க் கொண்டிருந்தேன். இதோ பாபு வந்து 2 மாதங்கள்தான் ஆகிறது.
சாட்லைட் கிளைக்கு நானும் பாபுவுடன் சென்றேன். அங்குள்ள நகைகளை எண்ணிக்கொடுத்தேன். பாபுவிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.
”சரி, வருகிறேன். இனிமேல் உங்கள் பொறுப்பு,” என்றேன்.
”சார், ஒரு விஷயம். நீங்க மங்கள விலாஸ் வழியாகத்தான் போகப் போகிறீர்கள்…ஒரு தக்காளி சாதமும், ஒரு வடையும் வாங்கிக்கொண்டு போக முடியுமா?”
”சரி,” எனறேன்.
என்னிடம் தக்காளி சாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிய பாபு பணம் எதுவும் தரவில்லை. நாங்கள் வந்த வண்டி டிரைவரிடம், என்னை மெயின் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு விடச் சொன்னேன். போகும் வழியில் மங்கள விலாஸ் ஓட்டலுக்குச் சென்று எனக்கும் பாபுவிற்கும் சேர்த்து தக்காளி சாதம் 2 வடைகள் வாங்கி஧ன். மொத்தம் 40 ரூபாய் ஆயிற்று. பாபு ஒரு தக்காளி சாதம் வடைக்கு ரூ20 தரவேண்டும்.
மதியம் 2 மணிக்கு பாபுவும்  மீனுவும்  எங்கள் மெயின் கிளை அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். சாட்லைட் கிளைக்கு அரைநாள் பணிதான். அங்கு மானுவல் கணக்கை முடித்துக்கொண்டு மெயின் கிளையில் கணக்கை முடிக்க வேண்டும்.
பாபு உள்ளே நுழைந்தவுடன் என்னைப் பார்த்து,

”என்ன தக்காளி சாதம் வாங்கியாச்சா?” என்று கேட்டார்.

 பொட்டலத்தைக் கொடுத்தபடி, ”20 ரூபாய் ஆயிற்று,” என்றேன்.

பாபு பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றார்.

திரும்பவும் பாபு சாப்பிட்டுவிட்டு வந்தவுடன், ”என்ன சாப்பாடு நன்றாக இருந்ததா?” என்று கேட்டேன்.
”நன்றாக இருந்தது…. கீரை வடை இருக்குமென்று நினைத்தேன்.” என்றார்.
”கீரை வடை இல்லை…இதற்கே ரூ.20 ஆச்சு..,” என்றேன்.

பாபு கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பதட்டம் ஆகிவிட்டது. எப்படி இவரிடமிருந்து ரூ20 வாங்கப் போகிறேன் என்ற கவலை வந்து விட்டது. கடைஊழியர் நாதமுனி என் பரபரப்பை உணர்ந்து,

”கவலைப் படாதீர்கள்..நீங்கள் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்க முடியாது,”என்றான் சிரித்துக்கொண்டே. பாபுவிடமிருந்து எப்படி 20 ரூபாய் வாங்குவது என்ற என் கவலையை மீனுவிடம் தெரிவித்தேன்.

”நீங்கள் வாங்கிக் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளுங்களேன்..” என்றாள் மீனு.
”இல்லை..என்னிடம் கடன் என்று பத்து ரூபாய் கேட்டால்கூட அதைத் திரும்பவும் வாங்கும் வரை தூக்கம் வராது,”என்றேன்.
அன்று அப்படித்தான். பாபு பரபரப்பாக காரைக்காலிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் நுழைந்தவுடன், ”ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்,” என்று என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அலுவலக வாசலுக்குச் சென்றார். அன்று முழுவதும் ஒரு பத்து ரூபாய் வாங்கிய நினைப்பே இல்லை அவருக்கு.
பாபுவிடம் எது கொடுத்தாலும் திரும்ப வராது என்று நன்றாகத் தெரியும். ஆனால் முகத்தில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வது. என் சங்கடம் இது. பாபுவிடமிருந்து இந்த 20 ரூபாயை எப்படியும் இன்றைக்குள் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

அலுவலகப் பரபரப்பில் பாபுவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வங்கி அலுவல் முடிந்து அலுவலர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். எப்படியும் பாபுவிடமிருந்து வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்து, பாபு இருக்குமிடம் சென்றேன்.

”சாட்லைட் கிளையில் என்ன கூட்டமா?” என்று கேட்டேன் பாபுவைப் பார்த்து.
”எப்போதும் இருப்பதுபோல்தான். எப்படியும் அதிகமாக எல்லோரையும் பணம் போடச் சொல்ல வேண்டும்,” என்றார் பாபு.
”இன்னிக்கு தக்காளி சாதம் ரொம்ப நல்லா இருந்தது…”என்றேன்.
அதைக் கேட்டு பாபுவும் தலை ஆட்டியபடி, ”நன்றாக இருந்தது,” என்றார். நான் வாயைத் திறந்து
20 ரூபாய் கேட்க நினைத்தேன். அதற்குள் பாபுவை கிளை மேலாளர் கூப்பிட நகர்ந்து விட்டார். என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இனிமேல் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்கின மாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நாளைக்குக் கேட்டால், அப்படியா என்றாலும் என்பார். நிச்சயம் வாங்க முடியாது.
வீட்டிற்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்து, இதோ பாபு கிளம்பிவிட்டார். அவர் காரைக்கால் போக வேண்டும். நான் அலுவலகத்தில் உள்ள எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டுத்தான் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்குமுன் மேலாளர், ஏபிஎம் கேசவன் என்று எல்லோரையும் கிளப்ப வேண்டும். இதோ பாபு போய்விட்டார். நாளைக்குத்தான் கேட்கவேண்டும். எங்கே கிடைக்கப் போகிறது? ஆறின கஞ்சி பழம் கஞ்சிதான்.
எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு வந்தேன். இரவு 8 ஆகிவிட்டது. நான் மயிலாடுதுறைக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. கம்ப்யூட்டர்களை அணைத்துவிட்டு வாசல் கதவைச் சாத்த வந்தேன். பாபு அவசரம் அவசரமாக அலுவலகத்தில் நுழைந்தார். ”என்ன பாபு?” என்றேன். ”செல்லை வைத்துவிட்டுப் போய்விட்டேன்,”என்றார்.
நல்ல சந்தர்ப்பம் 20 ரூபாய் கேட்டுவிடலாமென்று நினைத்தேன். பின் பாபு செல்லை எடுத்துக்கொண்டு எங்களுடன் கிளம்பினார்.
வழக்கம்போல் மயிலாடுதுறை பஸ் நிற்குமிடத்தில்தான் காரைக்கால் பஸ்ஸும் நிற்கும். மேலும் பாபு வங்கிக் கதவுகளைச் சாத்தும்போது எந்த உதவியும் செய்ய மாட்டார். அவரை நான் மாப்பிள்ளை என்று என் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொள்வேன்.
எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பாபுவைப் பார்த்து, ”நீங்கள் 20 ரூபாய் கொடுக்க மறந்து விட்டீர்கள்…தக்காளி சாதம் வாங்கியதற்கு..” என்றேன் துணிச்சலுடன்.
”நான் அப்பவே கொடுக்க வேண்டுமென்று, 100 ரூபாய்க்குச் சில்லறை மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன். இந்தாருங்கள்..” என்று நீட்டினார்.
நான் அவரிடமிருந்து 20 ரூபாயைப் பறித்துக்கொண்டு மேலும் கீழுமாக அவரைப் பார்த்தேன்.

பானகம்.

வாசலுக்குக்கோலம் போட வந்த  ஜனகா   அந்தக்காலைப்பொழுதில்  தெருவில்  கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக  இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும்  இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு.  வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று  அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள்.

“ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும்  அழகுக்கிளியா  ஒர் பொண்ணும் நமக்கு  இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே  ஜனகா…” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள்.

’நீ போய்ட்டுவா  ..நான் குழந்தைகளைப்  பார்த்துக்கொள்கிறேன்’  என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து  பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில்  சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை  ஜனகாவின் வயிற்றில்  இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வேலையை அடியோடுவிட்டு விட்டான் ..வேறேங்கும் வேலை தேடிப்போகவுமில்லை. உடனே ஜனகா வாயும் வயிறுமாய்  சமையல்வேலை  தேடிப்போனபோது பெசண்ட் நகரில் வக்கீல் திருமலைவீட்டில் ஆள் தேடுவதாய் காதில்விழவும் போய்க்கெஞ்சி மன்றாடியதில்,  வக்கீல்மாமி மனம் கனிந்து வேலை போட்டுக்கொடுத்தாள்..ஜனகாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. இதில் சீட்டாட்டத்தில் விட்டதைப்  பிடிக்கிறேன் என்று  இருநூறும் ஐநூறுமாய்  பத்ரி சுருட்டிக்கொண்டுவிடுவான்.

 “டேய் பசங்களா என்னடா  இந்த நேரத்துல கோலிவிளையாட்டு? பல் தேய்ச்சீங்களா இல்லையா?”ஜனகா  கோலப்பொடியில்குனிந்து தரையில் நாலு இழு இழுத்தபடி கேட்டாள்.

“அம்மா! நான்  தெருக்கோடி பைப்புல எழுந்ததும் போய் பல்தேச்சிக் குளிச்சும் ஆச்சு. ராத்திரியெல்லாம்  நம்ம வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்  வழியா ஒரேடியா வெய்யில் அனலா தாக்கிடுத்து.  திரும்ப ஆத்துல வந்து பார்த்தா நீ பின் கட்டுல பாத்ரூம்ல குளிச்சிண்டு இருந்தே அதான் தம்பியும் நானும் விளையாட இங்க வந்துட்டோம்.  தங்கப்பாப்பா தூங்கறா..” என்றான் பெரியவன் பிரஹலாதன்.

ஜனகா கோலமாவுக்கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மணி ஏழாகியும்  வேஷ்டி நழுவினது தெரியாமல் பாயில் தூங்கிக் கொண்டிருந்த பத்ரியை எழுப்பினாள்.

”எழுந்திருங்க நான்  வக்கீல் மாமியாத்துக்கு   சீக்கிரமா கிளம்பணும். நரசிம்மஜயந்தியாம் ராத்ரி ஆயிடும் இன்னிக்கு திரும்பி வர்ரதுக்கு. ஐம்பதுபேருக்கு சமையல் செய்யணும்.  அந்திப்பொழுதுலதான்  நரசிம்ம அவதாரம் நடந்ததாலே சாயந்திரமா நரசிம்மருக்கு  பூஜை இருக்கு   நிறையவேலைஇருக்குன்னு வக்கீல்மாமிசொல்லி இருக்கா.  லேட் ஆச்சுன்னா மாமி என்னை உண்டுஇல்லைன்னு பண்ணிடுவா”

…”யாரு அந்த பெண் சிங்கம்  தானே?  ’பெசண்ட்நகர்பேய்’ன்னு  எங்க வட்டாரத்துல அந்த மாமிக்கு பேரு வச்சிருக்கோம்..சீமாச்சு ஒருதடவை அவாத்துக்கு  ஏதோ ஃபங்ஷனுக்கு   காட்ரிங் பண்ணப்போனப்போ ஏற்பட்ட அனுபவத்துல  வச்சபேருதான்..ஹ்ம்ம்..  நீ என்னமாத்தான் ஆறுவருஷமா அவகிட்ட வேலைபாக்றியோ ஜனகா? ஆஆஆவ்வ்வ்…”  என நீளமாய்க் கொட்டாவிவிட்டபடி எழுந்த பத்ரி,” இன்னிக்கு சீட்டுவிளையாட்ற ப்ரண்ட் ரங்கமணி லஞ்ச் ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்.. நங்கநல்லூர்ல அவன் மச்சினன்  புது மெஸ் திறந்திருக்கானாம் அதுக்கு வரசொல்லி இருக்கான்  நான்  சின்னவன் துருவனையும்  குட்டி கோதையையும் சைக்கிள்ல வச்சி அழைச்சிண்டு போறேன்.. மூணுபேரை சைக்கிள்ல கூட்டிண்டு போறது க‌ஷ்டம்..அதனால பெரியவனை நீ உன்கூட இன்னிக்குக் கூட்டிண்டு போ… அவனும் நரசிம்ம  ஜயந்தி வைபவத்துல கலந்துக்கட்டுமே”

” வக்கீல் மாமி என்ன சொல்வாளோ தெரியல ஆனா   யார் யாரோ வருவா  வருஷா வருஷம்  பாத்துருக்கேனே…. சரிடா ப்ரஹா  வரியா என்கூட?”

”வரேனே…பெரிய பங்களான்னு நீ சொல்வியேம்மா  ! தோட்டம்லாம் இருக்குமா? மரம் செடில்லாம்  இருக்குமா? ஊஞ்சல் போட்ருப்பாளா நான் அதுல ஆடலாமா?” 

“சமத்தா இருக்கணும்.. ஏதும் விஷமம் பண்ணினா  அந்த வக்கீல்மாமிவேதவல்லி உன்னை மிரட்டுவா..,,,பொல்லாதமாமி  அவாத்துல  மாமாவே மாமிகிட்ட பயப்படுவார். என்னவோ போ அப்பப்போ கொஞ்சம் அரிசியும் பருப்பும் தூக்கித்தரா  …மிச்சம் மீதி சாப்பாடு தரா…மாமியோட பொண்ணு  அமெரிக்காலேந்து வந்தா இரக்கப்பட்டு   நமக்கு துணி மணில்லாம் வாங்கித்தரா.அதான்  நானும் பல்லைக் கடிச்சிண்டு அங்கபோய்ட்டுவரேன்  உங்கப்பா மட்டும் பொறுப்பா  இருந்தா எனக்கு இந்த  நிலைவருமா  ப்ரஹா?”

தன்னைச் சுட்டிக்காட்டிப்பேசுவதைக் கேட்ட  பத்ரி பாயைவிட்டு துள்ளி எழுந்தான்.”என்னடி  குழந்தைகிடட் வாய் நீள்றது ?நாந்தான்  உன் இடத்துல இங்க தினமும் பசங்களைப் பாத்துக்கறேனே? குளிப்பாட்டி  யுனிஃபார்ம் உடுத்தி பழையதைப்போட்டு   பள்ளிக்கூடம் அனுப்பறேன்.  சின்னது கோதை நடுக்கூடத்துல ஆய் போனா அள்ளிக்கூட போட்றேன்.பகல்  ஒருமணீக்கு நீ திரும்பிவரவரைக்கும் எல்லாத்தியும் பாத்துண்டு வீட்ல சீட்டு ஆடி சம்பாதிக்கவும்  செய்றேன்  இன்னும் என்னடி பொறுப்பு வேணும் உனக்கு?”.

பத்ரி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டால் ஓயமாட்டான் தன்மேல்தவறு இருப்பவர்களுக்கே  உரிய அதிகப்படி பேச்சு பத்ரியிடம் உண்டு. 

 பதில் பேசாமல் மௌனமாய் ஜனகா  வெளியேறினாள்.  கூடவே அரைட்ராயரை  இழுத்துப்பிடித்துக்கொண்டு  நடந்து வந்த ப்ரஹ்லாதன்,” அம்மா! எனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கே!அதான்  அப்பா இரண்யனாட்டம் அரக்கனா இருக்காரோ?’என்றான்.

” உஷ் அப்பாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது…. உனக்கு நான் பேரு வைக்கலடா..  வக்கீல் மாமியாத்துல  நீ என் வயத்துல இருக்கறப்போ வேலைல சேர்ந்தேன். மாமி    நரசிம்மபெருமாள்பக்தை.  பையன் பொறந்தா பிரஹலாதன்னு வைடீ ஜனகா  ன்னு சொல்லிட்டா!”

“அப்போ மாமிதான்   ஹிரண்யா!” கைகொட்டி சிரித்தான் பிரஹலாதன்.

 ”உஷ் அங்கவந்து இப்டில்லாம் சிரிக்கப்டாது …மாமி கோச்சிபபா…சமத்தா இரு என்ன?’

”சரிம்மா. ”

  பழைய மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசல் பஸ் ஸ்டாப்பில் இருவரும்   சில நிமிஷங்கள் காத்திருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.

பஸ்ஸில்  ஏறியதும்  கண்டக்டரிடம்,” பெஸன்ட்நகர் கலாஷேத்ரா காலனி” என்று  சொல்லி  பத்துரூபாயைக்கொடுத்தாள்.  

பஸ்ஸில் நிற்கக்கூட இடமில்லை..

”ஏன்மா தினம் இப்டித்தான் நெருசல்ல  போய்ட்டு வரியா பாவம்மா நீ”

“தினம் இவ்ளொ கூட்டம் இருக்காது,இன்னிக்கு தான் இப்படி .சரி நீ என் பக்கமாவே இரு….காணாமபோய்டாதே”

கலாஷேத்ரா காலனி வந்ததும் ஜனகா மகனுடன் கீழே இறங்கினாள்.  இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“பக்கத்துலதான் வீடு ப்ரஹா…அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்”

“வக்கீல் வீட்ல நாய் இருக்காம்மா?’

’மாமிதான் ’ என்று சொல்லவந்த ஜனகா  லேசான சிரிப்புடன்  ” இப்போ இல்லை…நீ குழந்தையா இருக்கறப்போ  ஒண்ணு இருந்தது  அது பேரு நரசிமமா” என்றாள்.

”என்னது நாய்பேரு நரசிம்மனா?”

” ஆமாம்   வக்கீல் மாமி  பயங்கரமான நரசிம்ம சுவாமிபக்தை! வீட்டுக்கு பேரு ஜெய்நரசிம்மா!

மாமியோட பையன் பேரு லஷ்மிநரசிம்மன்.  மாமியாத்ல குலதெய்வம் நரசிம்மராம் அதனால் நாய்க்கும் அதே பேரை வச்சாளாம் அந்தநாய்  ஒருநாள் செத்துபோனதும் மாமிக்கு ஒருமாசம் சாப்பாடு இறங்கல…பாவம்..அந்த சோகத்துல  இதுவரைக்கும் வேற  நாயே வாங்கல..”

” ஏன்மா நம்மவீடல் நாய் வாங்கிவளக்கலாமா?  கிரிக்கட்  தோனி  பேரை  வைக்லாம் எனக்கு அவரை ரொம்பபிடிக்கும்.”

”ஆமாண்டா   ந்ம்ம  பொழைப்பெ நாய் பொழப்பா இருக்கு இதுல நாய் ஒண்ணுதான்  குறைச்சல்..சரிசரி…வக்கீல் வீடு வந்துடுத்து  நான் சொன்னது நினைவிருக்கோல்லியோ?’

”அம்மா! நீ  எழுந்ததும்  நீராகாரம் தருவே   இன்னிக்கு தரவே இல்ல.பசிக்கறதும்மா  இப்போவே…”

”அவசரத்துல மறந்துட்டேன் ப்ரஹா…  மாமியாத்துல  பாலோ மோரோ      போனதும் தரேன்ப்பா”

”சரிம்மா”

வீட்டு வெளிவாசலில்   செம்மண் நிரப்பி பெரிய படிக்கோலம்போடப்பட்டிருந்தது,

காம்பவுண்ட் சுவரில் க்ரானைட்டில்  பதித்திருந்த  சிறிய  நரசிம்மர் சிலைக்கு  சாமந்திமாலை அணிவித்திருக்க போர்ட்டிகோ தாண்டி நிலைப்படிக்கு வரும்போது மேலே மாவிலைக்கொத்து தொங்கியது. திறந்த கதவிற்கு அருகே நின்று ‘மாமி…”என்று குரல்கொடுத்தபடியே  உள்ளே  நுழைந்தாள் ஜனகா.

“மணி எட்டாறது   இவ்ளோ லேட்டா வரயே?   ஏழரைக்கே வரசொன்னேனே,  இன்னிக்கு ந்ருசிம்ம ஜயந்தி  நினைவிருக்காடி  ஜனகா? ” உரத்த குரலில் அதட்டலாய்க்   கேட்டபடியே வந்த உருவத்தைப்  பார்த்தான் ப்ரஹலாதன்.

 பழுத்த  மாம்பழ நிறத்தில்  பெரியவிழிகளும் அதை இன்னும் பெரிதாக்கிய காட்டிய  மூக்குக்கண்ணாடியும் விடைத்தநாசியும் தடித்த உதடுமாக   வேதவல்லியைப் பார்க்கும்போது  அம்புலிமாமா  புத்தகத்தில்  அசோகவன சீதை அருகே அமர்ந்திருந்த ஒருராட்சசியின் படம்  ப்ரஹலாதனுக்கு  நினைவுக்கு வந்தது..மாமியும் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள்.

”யாருடி இந்த வாண்டு ? பெரியவனா சின்னவனா?”

”பெ.. பெரியவன்  ப்ரஹா..”

”என்னடி ப்ரஹா? ப்ரஹலாதன்னு வாய் நெறயக் கூப்டாம? நான்   வச்ச  பேராச்சே    ஏண்டா அம்பி என்ன படிக்கறே?’

”ரண்டாம் க்ளாஸ், மாம்பலம் அரசுப்பள்ளில”

”ஒழுங்காப்படிக்கப்போறியா இல்ல  உங்கப்பனாட்டம் சீட்டு ஊருசுத்தறதுன்னு திரியப்போறியா?  இன்னிக்கு எதுக்குடி இவனை  இங்க அழைச்சிண்டு வந்தே  ஜனகா?’

”அவர் எங்கயோ போகணூமாம்…  சைக்கிள்ள  இவனையும் கூட்டிண்டு போகமுடியாது ஆத்துல  தனியா விடவும் முடியாது ரெண்டுங்கெட்டான்  ..ஸ்கூல் வேற  லீவ் விட்டாச்சு. அழைச்சிண்டுபோன்னு அவர் ஆர்டர் போட்டுட்டார்”

”நீயும் அழைச்சிண்டு வந்துட்டியாக்கும்? இந்தகாலத்துலயும் இப்படி ஒரு பதி பக்தியான பொண்ணை நான் இப்பத்தான் பாக்கறேன்  “என்றாள் மாமி கிண்டலாக..

ஜனகா தலை குனிந்தாள்
 ..
”சீக்கிரமா தளிகை  முடிச்சிட்டு  ஜோடுதவலை  நிறைய பானகம் பண்ணிடு.  பதினஞ்சிகிலோ வெல்லம் உடைச்சி சுக்கு ஏலம் தட்டிப்போட்டு பண்ணு.. அம்பதுபேராவதுவருவா   ஆமா, எங்க இந்த மனுஷன் போய்த்தொலைஞ்சார்?  காலங்கார்த்தால  பேப்பர்ல தலைசாய்ச்சா எழுந்து வர்ரதே கெடயாது….. ஏன்னா…. ஏன்னா  எங்கபோய்த்தொலைஞ்சேள்?”

மாமி கணவரைத் திட்டிகொண்டே தேடும்போது  வக்கீல் திருமலை தனது மெலிந்த உடலைக்குறுக்கிக்கொண்டு பயந்தபடி எதிரே ஓடி வந்தார்.

“எங்க ஒழிஞ்சங்கோ  இவ்ளோ நாழி? கொல்லைலபோயி பவழமல்லி பொறுக்க சொன்னேனே? வெய்யில் வந்தா எல்லாம் வாடிப்போயிடும்.தோட்டக்கார கடங்காரன் இன்னிக்குப்பாத்து லீவ் போட்டுட்டான்.”

”ஹிஹி  …..போன் வந்தது  நம்ம  லஷ்மிநரசிம்மன்   அமெரிக்காலேந்துபேசினான்.  பொழுதுபோனதே தெரில்லடி வேதம்”என்று அசடு வழிந்தார்.

”  அவன் நறுக்குனு நாலு வார்த்தைதான்  பேசுவான் நீங்கதான்  வளவளனு கோர்ட்கேஸ் கதைலாம் அவன்கிட்ட அளப்பங்கோ…சரி,  இன்னும் காபி  குடிக்கலதானே?”

”இல்லையே ஜனகா வந்து வழக்கம்போல  கலந்துதருவான்னு காத்துண்ட்ருக்கேன்”

”இன்னிக்கு காபி சாப்பிடக்கூடாது”

“இதென்ன புதுசா இருக்கு?”

”ஆமாம்  புதுசா கேள்விப்பட்டேன் அன்னிக்கு டிவில  உபந்நியாசகர் சொனனர் ந்ருசிம்ம ஜெயந்தி அன்னிக்கு சாயந்திரம் அவர் பிரத்யட்சமான அந்திpபொழுதுவரை  வாய்ல பச்சத்தண்ணி குத்திக்கக் கூடாதாம் அப்றோமா அவருக்கு அம்சை பண்ணின பானகத்தை முதல்ல சாப்பிடணுமாம்  நாம பாட்டுக்கு இத்தனை வருஷமா காலமெருந்து  நாலு காபி ஒரு பாக்கெட் பிஸ்கட்டுன்னு   தள்ளிண்டு இருந்திருக்கோம். அறுவயசு பக்கம் நெருங்கிண்ட்ருக்கோம் இனிமேலாவது இந்த அல்ப ஆசைலாம் விடணும் அதுவும் நாள் கிழமைல புரிஞ்சுதா?”

 அதட்டிவிட்டு மாடிக்குஏறினாள் மாமி.அவள் போனதும்,ஜனகாவிடம் தயங்கித்தயங்கி  நெருங்கி வந்த  வக்கீல்திருமலை,”அம்மாடி ஜனகா! ஒருவாய் காபி சக்கரை போடாம வழக்கம்போலக் கொடுத்துடுடிம்மா. எனக்கு டயபடீஸ்னு தெரிஞ்சும் மாமி இப்படி கண்டிஷன் போடறா பாரு?”என்றார் கெஞ்சுதலான குரலில்

”மாமா!    மாமிக்குத்தெரிஞ்சா…..?”

”தெரிஞ்சாதானே? ஆமா இதுயார் உன் பிள்ளையா ஜனகா?”

“ஆமாம் மாமா  பேருபிரஹலாதன்”

“இவன் கைல ஒரு லோட்டா காபி கொடுத்து தோட்டம் பக்கம் அனுப்பிடு அங்க பவழமல்லி மரத்துகிட்ட நான் இருக்கேன்…”

“சரி மாமா”

திருமலை நகர்ந்ததும்  பிரஹலாதன் சிணுங்கினான்.

 ”அம்மா  பசிக்கறது எனக்கும்  ஏதாவது கொடு”

”முதல்ல மாமாக்கு காபி கொண்டு கொடுத்துட்டுவாடா..”

ப்ரஹலாதன்  கொண்டுவந்து கொடுத்த  காபியை சாப்பிட்டதும்  திருமலை” தாங்க்ஸ்டா குழந்தை! ஆமா நீ காபி சாப்ட்டியோ?”என்று அன்பாகக்கேட்டார்.

”இல்ல மாமா  காபில்லாம்  ஆத்லபோடறதில்ல … ஆனா  கார்த்தால் நீராகாரம் சாப்டுவேன் இன்னிக்கு கிளம்பற அவசரத்துல அம்மாவும் தரல நானும்  அப்படியே வந்துட்டேன்…  பானகம் பண்னப்போறாளாமே மாமா? எனக்கு.பானகம் ரொம்பப் பிடிக்கும்  ”

 ”அது பூஜைமுடிஞ்சி   சாய்ந்திரமாத்தான் உன் வாய்க்குக்கிடைக்கும்டா..அதுவரை பட்டினி கிடக்கமுடியுமா உன்னால? அம்மாகிட்ட கேட்டு  ஃப்ரிட்ஜ்ல ஜூஸோ பழமோ எடுத்து சாப்பிடுப்பா”

பிரஹலாதன் காபிலோட்டாவுடன் சிட்டாய்ப்பறந்தான்.

ஜனகா வெல்லத்தை  கொல்லைப்புறம் கொண்டுவந்து அங்கிருந்த பாறாங்கல் திண்ணைமீது வைத்து சிறு கல் உலக்கையால் நங்நங்கென்று  தட்டினாள்.

கூடவே வந்த பிரஹ்லாதன்,”அம்மா! எனக்கு துளி வெல்லம் தரியா?” என்று கேட்டான் ,கேட்கும்போதே நாவில் நீர் சுரந்துவிட்டது.

“இல்லடா  உம்மாச்சிக்கு பண்றது இதை முதல்ல நாம சாப்டக்கூடாது”

இதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த திருமலை” குழந்தைக்கு சின்ன வில்லை கொடு ஜனகா  ஆசைப்படறான் பாவம்”
என்றார்.

ஜனகா  யோசித்தபடி  ஒரு வில்லையை  எடுத்து  மாமாவிடம் கொடுத்து,:நீங்களே கொடுங்கோ மாமா..எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள்.

எதேச்சையாய் அங்கே வந்த வேதவல்லி   திருமலையின் கையில் வெல்ல வில்லையைப்பார்த்து   ருத்ரதாண்டவம் ஆடினாள்.

” என்ன நினைச்சிண்டு இருக்கேள் மனசுல? பெருமாளுக்கு அதுவும் உக்ரநரசிம்மருக்குபண்ற பிரசாதத்தை  மனுஷா முதல்ல சாப்பிடறதா? எனன் அக்கிரமம் இது? வயசுக்கு ஏத்த விவேகமே இல்லை உங்ககிட்ட..  இந்தப்பொடியனுக்காகவோ இல்ல நீங்க  முழுங்கவோ  எப்ப்டி எடுத்தாலும் அது மகா தப்புதான்.. டேய் பொடியா போடா  அந்தப்பக்கம்…..கூடத்துமூலைல உக்காந்துக்கோ  அம்மாபுடவைத் தலைப்பைப் பிடிச்சிண்டு வந்தே  கொன்னுடுவேன் உன்னை.பூஜைமுடிஞ்சதும்  எல்லாம் நீயும்  கொட்டிக்கோ யார் வேண்டாஙக்றா? முன்னாடி சாப்ட்டா  நரசிம்மர் யார்மேலயாவது ஆவேசம் வந்து அவாமூலம் தன் கோபதைக்காட்டமாட்டாரோ? சுவாமி உக்ரம் தெரியாதா என்ன? அதைத் தணிக்கத்தானே பானகம் பண்றோம்?  என்னிக்கோ ஒருநாளாவது சாயந்திரம் வரைக்கும் உபவாசம் இருக்க துப்பு இல்லாத ஜன்மம் எடுத்து  என்ன பிரயோஜனமோ  நரசிம்மா இவாளுக்கு நீதான் புத்தி புகட்டணும்”முணுமுணுத்தபடி மாமி அகன்றாள்.

பிரஹலாதன் பயந்துபோய்  கூடத்துமூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.டிவியில்  நரசிம்மர்கோயில் ஒன்றின் அபிஷேக ஆராதனைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

மணி பகல் 12 ஆனது.

திருமலை திருதிருவென விழித்தபடி  பிரஹலாதன் அருகில் வந்தவர்,”குழந்தே பசிக்கறதாடா?” என்று கேட்டார்.

“ஆமாம் மாமா  அம்மாவும் பயப்படறா ஒண்ணும் தரமாட்டேங்கிறா..”

“நான் கொஞ்சம் பழம் கொண்டுவந்து தரட்டுமா வேஷ்டில மறைச்சி எடுத்துண்டு வரேனே?”

“வேண்டாம் மாமா  ..மாமி உங்கள ரொம்ப திட்றா பாவம் நீங்க..”

”அவ அப்படித்தான்..ஆனா மாமி ஃப்ரண்ட்ஸெல்லாம்  வந்தா  அவாளே உரிமையா ஃபிரிட்ஜைத்  திறந்து ஜூசும் கூல்ட்ரிங்கும் குடிச்சிட்டுத்தான்  பூஜைக்கு உக்காருவா பாரேன்.மாமியும் அவாளை  ஒண்ணும் சொல்லமாட்டா…எல்லாம் பணம் பண்றவேலைடா”

எரிச்சலுடன் முணுமுணுத்தபடி  மாடிக்குப்போனவர் மறுபடி மூன்றுமணிக்குக் கீழே வந்தபோது கூடத்தில் அப்படியே கைகட்டிக்கொண்டு முகம் வாடிய நிலையில் அமர்ந்திருந்த பிரஹலாதனைப்பார்த்து வேதனையுடன்  ‘ச்சூள்’ கொட்டினார்.

 வேதவல்லி ஹாலில்  கீழே  ரத்னகம்பளத்தை விரிக்கச்சொல்லி பணியாட்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தாள். 

இதுதான் நலல் சமயம் உள்ளபோய் ஒரு லோட்டா பானகத்தை கொண்டுவந்துடலாம்..குழந்தையும் தெய்வமும் ஒண்ணூதான்..இந்தக்குழந்தை சாப்பிட்டால் பகவான் ஒண்ணும் கோவிச்சிக்கமாட்டார்.அதுவும் நரசிம்மனின் அபிமான பக்தனின் பேரை வச்சிண்டு இருக்கான் குழந்தை. வாய் மூடி தேமேன்னு  உக்காந்திருக்கு…இன்னும் மூணுமணிநேரத்துக்கு மேல ஆகும் பிரசாதம்  கிடைக்கறதுக்கு . அதுவரை  பையன் தாங்குவானா? எங்காவது மயக்கம் போட்டு விழுந்துட்டா…?  இந்த ஜனகாவும் எனக்கு மேல பயந்துசாகறா..

இப்படி நினைத்தபடிதிருமலை மெல்ல சமையலறைக்குப்புகுந்தார்.

ஜனகா அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்குத்தெரியாமல்  ஓரமாய் தாம்பாளம் போட்டு மூடிவைத்திருந்த ஜோடுதவலையை நெருங்கினார். மெல்ல அந்த தாம்பாளத்தை  கையில் எடுக்கும்போது அது கைதவறி ஜிலீங் என்று  சப்தப்படுத்திக்கொண்டு கீழே விழுந்தது.தூக்கிவாரிப்போட  ஜனகா திரும்பினாள்.

“என்னாச்சு என்ன சத்தம் அங்க?வாசல்ல  எல்லாரும் கார்ல  வந்துட்டா…நீங்க கிச்சன்ல என்ன பண்றங்கோ? வாசல்லப்போய் எல்லாரையும் வரவேற்கிற வழியைப்பாருங்கோ..ம்ம்?”

வேதவல்லி போட்ட கூச்சலில் சப்தநாடியும் ஒடுங்க  திருமலை வாசலுக்குப்போய்விட்டார்.

வந்தவர்கள் “ஸ் அப்பா என்ன வெய்யில்…. ஜூஸ் கொண்டாங்க சமையக்கார மாமி “ என்று  நுழைந்ததும் உத்தரவிட்டனர்.

ஜனகா கொண்டுபோய்கொடுக்கும்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த மகனையும் ஒரு கண் பார்த்துவந்தாள்.

திருமலைக்கு  கோபமாய்வந்தது கூடத்தில்  மூலையில் உட்கார்ந்திருக்கிற  குழந்தைக்கு ஒருவாய் நீராவது யாராவது  கொடுத்துத்  தொலைத்தால் என்ன? பெத்தவளுக்கே விசாரமில்லை..

அவன் அருகில்போய்,”சர்பத் கொண்டுவரட்டுமாப்பா?” என்றுகேட்டார்.

”வேண்டாம் மாமா அதெல்லாம் பழக்கமில்ல..  எனக்கு  பானகம்பிடிக்கும் பூஜை ஆனதும்அதே  சாப்பிட்றேனே?” என்றான் பிரஹலாதன் .

“அதுக்கு இப்போதான் மணி அஞ்சாறது அஞ்சரைக்கு ஆரம்பிச்சி ஆறரைக்குதான் பூஜை முடிப்பா அப்புறம்தான்ப்பா பானக விநியோகம் நடக்கும்”

 ”பரவால்ல மாமா..தோட்டத்துப்பைப்ல  தண்ணி  குடிச்சிட்டேன் ..”

திருமலை  வேதனையுடன்  வந்தபோது கையில்  ஜூஸ் டம்ளருடன் வந்த லேடீஸ்க்ளப் தலைவி மாலதி ஜகன்னாதன்,” வேதா ஈஸ் ஆல்வேஸ் க்ரேட்!  நரசிம்ம ஜயந்தி வைபவத்தை அவள் வீட்டில் கொண்டாடறவிதமே தனி” என்று யாரிடமோ புகழ்ந்து கொண்டிருந்தாள்.

“எல்லாம் சிரத்தையாய் செய்யணும் மாலதி, இல்லேன்னா  நரசிம்மர் யார்மேலாவது ஆவேசமாய் வந்துடுவார்.” என்றாள் வேதவல்லி பெருமையும் பயத்துடனுடனும்.

பூஜை ஆரம்பித்தது. திருமலை முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சட்டென பின்வரிசையைப்பார்த்தார் அங்கே பிரஹலாதன்  சுவரோடு சுவராய் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டிருந்தான்.

‘ஐயோ அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துருக்குமோ?’

விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத்தொடங்கினர். பஜனைபாடல்கள் என்று தொடர்ந்தது. இரண்டுமணிநேரமானதும்,

’எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
  வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
  அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
  பந்தனை தீரப்  பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே’

பல்லாண்டு கூறிவிட்டு ஒருவழியாய்கற்பூர ஹாரத்தி காண்பித்து மங்கள சுலோகம் சொல்லிமுடித்தனர்.. பானக நைவேத்யமும் முடிந்தது

வேதவல்லி மடிசார் புடவை தடுக்கத்தடுக்க வேகமாய்  பானக ஜோடுதவலைப்பாத்திரத்தை திறந்தாள்..டம்ளரில்  பானகத்தை  ஊற்றி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.

திருமலை ஓடிப்போய்,”ஒரு டம்ளர் இங்க..” என்றார்.

“அடடா  உங்களுக்கு என்ன அவசரம்? வெளிமனுஷாளை கவனிங்கோ முதல்ல போங்கோ அந்தப்பக்கம்”  விரட்டிய மனைவியை விரக்தியாய் பார்த்தபடி  ஒரு மூலையில்போய் நின்றுகொண்டார் திருமலை.

ஓரிரு நிமிடங்கள்தான்…..

 திடீரென  ஹ்ஹ்ஹ்ஹூஉம்ம் என்று  தலைமயிரை சிலுப்பிக்கொண்டு உடம்பை  முறுக்கிக்கொண்டு நடுக்கூடத்தில் தொம் என கைகாலை அகட்டியபடி குதித்தார் திருமலை.

”வக்கீல் சாருக்கு எனனச்சு? முழியை உருட்றாரே? ஐய்யோ பயமா இருக்கே?”

“மாமா மாமா!”

“நான் நரசிம்மம் வந்துருக்கேன்..”  திருமலை  உக்ரமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்.

”ஆ பெருமாளே! நரசிம்மா ! நான் சொன்னெனே  சிரத்தையா பூஜை பண்ணினா பெருமாள் யார்மேலாவது வந்துடுவார்னு. என் பாக்கியம்  பெருமாள் இங்க .ஹோ பெருமாளே ஏஏஏ..” வேதம் பெருமையாய் சொன்னபடி நாலுதடவை  கீழேவிழுந்து சேவித்தாள்.

”உன் பூஜைல குத்தம் இருக்கு் வேதா”

“கு..குத்தமா? இல்லையே நேமமா செய்தேனே சுவாமீ?” கைநடுங்க  குரல் நடுங்க சொன்னாள் வேதவல்லி/

“ஹ.. அநியாயமா செய்துட்டு  என்ன பேச்சு பேசறே நீ?”

“அநியாயாமா? அபசாரம் மன்னிச்சிடுங்கோ பெருமாளே என்ன குத்தமாச்சு?”

”என் பக்தனை பட்டினி போட்டுட்டு நீங்கள்ளாம்  பானகம் சாப்பிடறங்கோ…இது மகா அநியாயம்”

“பக்தனா?   எல்லாரும் உங்க பக்தா பெருமாளே.. யாரைசொல்றேள்?யாரு?”

“பிரஹலாதன் என் அபிமான பக்தன் தெரியாதா?  ஹூஹூ,ம்ம்ம்ம்”

“ப்ரஹலாதன் உங்க அருமைபக்தன் அறிவேனே ஹரி ஹரி”

“அந்தபிரஹலாதன் இல்லை…இங்க இருக்கும் பிரஹலாதன்”

“பிரஹ்…ஓ  சமையக்காரி பையனா?…” புரிந்தவளாய் வேதம் “அபச்சாரம் பண்ணிட்டேன் “ என்று மறுபடி விழுந்து சேவித்தாள் பருத்த உடல் மூச்சிறைக்க கூடத்துமூலையில் மயக்கமாகிக் கிடந்த பிரஹலாதனை நெருங்கினாள்..

“சீக்கிரமா   பெருமாள் மலையேறதுக்குள்ள  பெருமாள் உத்தரவை  செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி  உரத்தகுரலில்  சொன்னாள்.

 பிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.

மடக் மடக் என   பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும்  தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே  நின்றுகொண்டிருந்த திருமலை  மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார்.

கிளிஞ்சல்கள்

மின்விசிறி
புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுகிறது
கோடுகள் தான்
ஓவியமாகிறது
நதியின் போக்கிலே
சடலம் மிதக்கிறது
சுவரொட்டி
மனிதர்களுக்கா
மாடுகளுக்கா
தண்ணீர்க் குழாயிலிருந்து
தவளை வெளிவந்தது
வானம் கறுத்தது
காற்று கலைத்தது
ரசமிழந்த கண்ணாடி
குப்பைத் தொட்டியில்
சாக்கடையில் மிதக்கிறது
ரப்பர் பந்து
காகம் கரைந்தது
வாழை இலை நறுக்கினேன்
விருந்தினர்களை எதிர்பார்த்து
கடலைப் பார்த்ததற்கு
சாட்சியாக
இந்தக் கிளிஞ்சல்கள்.