மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 151


அழகியசிங்கர்

காலம்


வண்ண நிலவன்


காலத்தை என்ன செய்யப்

பேனாவைக் கைக் குட்டையைத்

தொலைப்பது போல் காலத்தைத்

தொலைக்க முடிய வில்லை.

காலம் காட்டும் கடிகாரம்

காலம் பற்றி அறிந்ததில்லை

பறப்பன, ஊர்வன, பஸ் ஸடாண்டில்

படுத்திருக்கும் பரமசாது பசுக்கள்

முகம் பார்க்கும் கண்ணாடிக் குருவிகள்

எதற்கும் காலம் பற்றிய

ஓர்மையில்லை, என்னைத் தவிர

விழித்தாலும், உறங்கினாலும்

வீணே என்னுடனிருக்கும்

காலத்தை என்ன செய்ய?


நன்றி : காலம் – வண்ணநிலவன் – பக்கம் : 64 – அன்னம் (பி) ஙூட், 2 சிவன் கோயில் தெற்குத் தெரு, சிவகங்கை – 623 560 – விலை : 13 – வெளியான ஆண்டு : 1994

ஒரு நாள் பிரமிள் வந்தார்..

அழகியசிங்கர்

மாலை நேரம். ஒருநாள் வீட்டிற்கு பிரமிள் வந்தார். என்னைப் பார்த்து, ‘இன்று முக்கியமான நாள்’ என்றார்.
‘என்ன?’ என்றேன்
“என் பிறந்த நாள்” என்றார்
அவரை அழைத்துக்கொண்டுபோய் சரவணபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய், ஸ்வீட் வாங்கிக் கொடுத்தேன்.
******
தியோசாபிகல் சொசைட்டிகுச் சென்றோம். ஒவ்வொரு மரத்தையும் காட்டி விவரித்துக் கொண்டு வந்தார் பிரமிள். குட்டியாக இருக்கும் ஒரு மரத்தைக் காட்டி எதோ பாட்டனி பெயர் குறிப்பிட்டார். ஒரு வறண்ட குளத்திற்கு நடந்தபடியே வந்தோம். அந்தக் குளத்தில் படிக்கட்டில் அமர்ந்து ஒரு பேப்பரை எடுத்து என்பெயரை எழுதி குளத்தில் வீசினார். ஏன் என்று புரியவில்லை? ஒரு கல்லை எடுத்தபோது ஒரு கருந்தேள் கண்ணில் பட்டது.
******
அலுவலகத்தில் மத்தியான நேரத்தில் வருவார் பிரமிள். என் இலக்கிய நண்பர் ஒருவர் அப்போது என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரைப் பார்த்து, ‘அது என்ன மூச்சு விடமாட்டேன்.. நான் பிறர் மீது மூச்சு விடத்தான் விடுவேன் என்றார் உரக்க. ‘ அந்த நண்பர் ஓடிப் போய்விட்டார்;
******
அலுவலகத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தார். சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார். எனக்கு அவர் மீது கோபம். அலுவலகப் பெண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் கமெண்ட் அடிக்கிறாரே என்று. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் சித்திரா. எப்படி இவருக்குத் தெரிந்தது என்று ஆச்சரியம்.
******
“இந்த சட்டை நன்றாக இருக்கிறது,” என்றார் ஒருநாள் காலையில். வியந்தேன். இப்படியெல்லாம் இவருக்குப் பேசத் தெரியுமா என்று. நான் ஒருபோதும் அவர் என்ன சட்டைப் போட்டிருக்கிறார் என்று கவனித்தது இல்லை.
அன்று மாலை அலுவலகம் விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன். மாம்பலம் ரயில்வே நிலையத்தில் மாடிப்படிக்கட்டுகளில் ஏறி வந்தேன். சுவரில் ஒரு ஆணியில் என் சட்டை மாட்டிக் கிழிந்து விட்டது. பிரமிளை நினைத்துக்கொண்டேன்.
******
ஒருநாள் வயிற்றைத் தட்டினார். “நல்ல சாப்பிட்டிருக்கிங்க போலயிருக்கே.” அன்று மாலை வயிற்று வலி . என்ன மனுசர் இவர் என்று நினைத்துக்கொண்டேன்.
******
ஊரிலிருக்கும் எல்லா சாமியார்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு சீர்டி சாய்பாபா, ஜே,கிருஷ்ணமூர்த்தி, ராம் சூரத் குமார் என்று பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பீச் ரயில்வே நிலையத்தின் அருகில் ஒரு பெண் சாமியார் பற்றிச் சொல்வார். அப் பெண் சாமியார் வடநாட்டைச் சேர்ந்தவர்.
“அவங்களைப் பிச்சைக்காரியென்று நினைக்கக் கூடாது” என்றார்.
நானும் அலுவலகம் போகும்போது அந்தப் பெண்மணியைக் கவனிப்பேன். பர்மா பஜார் கடைகளுக்கு முன்னால் கூட்டும் வேலையைச் செய்து கொண்டிருப்பார். யாரிடமும் காசு கேட்க மாட்டார். நான் அவர்களைப் பார்த்து காசுகொடுப்பேன்.
******
இன்று பிரமிள் மறைந்த தினம்.

கவிதையும் ரசனையும் – 8

சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.

கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான் இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான். புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியும் அது புரியவில்லை என்றால் விட்டுவிடுவேன்.
சரி. ஒரு கவிதை புரியாமல் இருக்க வேண்டுமா? அல்லது புரியத்தான் வேண்டுமா? நிச்சயமாகப் புரியவேண்டும். வாசிப்பவருக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும் கவிதை.
இன்றைய சூழ்நிலையில் கவிதைப் புத்தகங்களே விற்கப்படுவதில்லை. புரியாத போகிற கவிதைப் புத்தகங்கள் நிச்சயமாக விற்கப் போவதில்லை.கவிஞர்களே அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு அவர்களே ரசித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.
அதேசமயத்தில் ரொம்பவும் புரிகிற மாதிரி கவிதைகள் எழுதப்பட்டால் அவை கவிதைகள்தானா என்ற சந்தேகமும் வந்து விடும்.
ஒரு கவிதைப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அந்தப் புத்தகத்தைப் பத்திரப்படுத்தத் திரும்பிப் படிக்க ஒரு நியாயம் வேண்டும். அதுமாதிரியான புத்தகங்கள் எல்லார்கவனத்தையும் கவராமல் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

‘அப்பாவின் நண்பர்’ என்ற சமீபத்தில் வந்த (அக்டோபர் 2020) புத்தகத்தில் கே.ஸ்டாலின் கவிதைகளைப்படிக்கும்போது எளிதாகப் புரிவதோடல்லாமல் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கின்றன.


அப்பாவின் நண்பர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்பாவின் நண்பரொருவரை
வழியில் சந்திக்க வாய்த்தது
அவரின் மகனாவென
அவரும் கேட்கவில்லை
இறந்து வருடங்களான
அப்பா குறித்து பகிர்ந்திட
என்னிடமும் எதுவுமில்லை
எனினும் -
எங்கள் கண்கள்
சந்தித்து மீண்ட
அச்சிறு கணத்தில்
எனக்குள்ளிருந்த அப்பாவும்
அவருக்குள்ளிருந்த அப்பாவும்
புன்னகைத்தபடி
கை குலுக்கிக்கொண்டதை
என்னைப்போலவே அவரும்
உணர்ந்திருக்கக்கூடும்


ஒரு விதத்தில் இந்தக் கவிதை நகுலனின் இராமச்சந்திரன் கவிதையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அக் கவிதையிலிருந்து இது மிகவும் விலகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவரை அப்பாவின் நண்பர் என்று நிச்சயமாக கவிகுரலோனுக்குத் தெரிகிறது. நகுலன் கவிதையிலோ எந்த ராமச்சந்திரன் என்று யாருக்கும் தெரியவில்லை.இறந்து போனவரின் மகனா என்று வழியில் சந்தித்தவர் கேட்கவில்லை. ஏனெனில் நிச்சயமாக எதிரில் வருபவன் இன்னாரின் மகன் என்று தெரிந்திருக்கிறது. அவருக்கு அவனுடைய அப்பாவைப் பற்றிக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. அதேபோல் கவிகுரலோனுக்கும் சொல்வதற்கும் ஒன்றுமில்லைûல். இங்கே அவரிடம் அப்பாவைப் பற்றி பகிர்ந்திட ஒன்றுமில்லை என்கிறான் கவிகுரலோன்.
எனினும் – “எங்கள் கண்கள் சந்தித்து மீண்ட அச்சிறு கணத்தில் எனக்குள்ளிருந்த அப்பாவும் அவருக்குள்ளேயிருந்த அப்பாவும் புன்னகைத்தபடி கைக்குலுக்கிக் கொண்டதாக வர்ணிக்கிறார் கவிகுரலோன்.

இருவரும் சந்தித்தாலும் நேரே எதுவும் பேசவில்லை. இரண்டு பேருக்கும் கவிகுரலோனின் அப்பாவைப்பற்றிய நினைவுதான். வெறும் புன்னகையோடு ஒன்றும் சொல்லாமல் பிரிந்து போகிறார்கள்
அப்பாவைப் பற்றிய சிந்தனைகளோடு.இப்படிப்பட்ட நிகழ்ச்சி சாதாரணமாக ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நிகழக்கூடியதுதான். இந்தக் கவிதையில் இருவருக்கும் எந்த ஏமாற்றமும் எதிர்ப்படவில்லை. வெறும் புன்னகைப் புரிந்தபடி போய் விடுகிறார்கள். மிகக் குறைந்த வரிகளில் சிறப்பாக எழுதப்பட்ட கவிதை இது.


சற்றைக்கு முன்தான்

சற்றைக்கு முன்தான்
 உனது சாயலில்
 எனையொருத்திக் கடந்தாள்.
 எஞ்சிய எனது பயணத்தின்
 வெளியெங்கும்
 நிரம்பியது நின் நினைவு.
 விடிந்த பொழுதின்
 தொடுவானத்தில்
 மேகங்களிடையே பிறையென
 மிதந்துகொண்டிருப்பது
 அழுக்கு நீங்கிய
 உன் பெருவிரல் நகம்.
 உறைந்த தார்ச்சாலையில்
 காலைச்சூரியனின்
 கரங்கள் பட்டு மின்னும்
 கண்ணாடித்துண்டு
 அவ்வப்போது
 தோன்றி மறையும் உனது
 தெற்றுப்பல்.
 உதிர்ந்த காட்டுப்பூக்கள்
 மணமெனப் பரப்புவது
 உயிர்வரை ஊடுறுவும்
 உன் தேகத்தின் வாசனை.
 வழிப்போக்கர்களை
 ஆதூரமாய் தழுவிக்கொள்ளும்
 அடர் மரத்தின் பெரு நிழலென்பது
 என்றைக்கும் வற்றாத உனதன்பு.
 கடந்து சென்றது
 நிச்சயம் நீயாகவே இருப்பின்
 எதிர்த்திசையில்
 எனது சாயலில் நீயும்
 எனைக் கண்டிருக்கலாம்
 உனது வெளியெங்கும்
 நினைவுகளால் நான் நிரம்ப
 இன்று நாம் பயணித்தது
 திறந்துகொண்ட இறந்தகாலப்
 பாதையொன்றின் மீதெனலாம்.


நான் குறிப்பிட்ட முன் கவிதைக்கும் இந்தக் கவிதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு கவிதைகளும் தெருவில் நடக்கிறது. தெருவில் ஒருவரைப் பார்க்கும்போது தோன்றும் எண்ணம்தான் கவிதையாக மலர்கிறது.
‘அப்பாவின் நண்பர்’ ஏற்கனவே தெரியும். சந்திக்கும்போது ஒருவரைப் பார்த்துப் புன்னகை செய்தபடி அப்பாவைப் பற்றிப் பேசாமல், ஆனால் பார்த்தபடியே போய் விடுகிறார்.
இன்னொரு கவிதையில் எதிரில் தென்படுகிற பெண்ணை ஏற்கனவே சந்தித்த பெண்ணை பார்த்தது மாதிரி ஞாபகப்படுத்துகிறர் கவிகுரலோன்.
இக் கவிதையில் ஏற்கனவே பார்த்த பெண்ணை நன்றாக ஞாபகப்படுத்துகிறார். தோன்றி மறையும் உனது தெற்றுப்பல் என்கிறர். அழுக்கு நீங்கிய உன் பெருவிரல் நகம் என்கிறார். அதை எதற்கு உவமைப் படுத்துகிறார் என்றால் விடிந்த பொழுதின் தொடுவானத்தில் மேகங்களிடையே பிறையென மிதந்து கொண்டிருப்பது என்கிறார்.
ஏற்கனவே சந்தித்துப் பழகிய ஒருபெண்ணின் ஞாபகமாய் இக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு கவிதைகளும் ரோடில் யாரையோ சந்திக்கும்போது ஞாபகத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன
முதல் கவிதை ‘அப்பாவின் நண்பர்’. அப்பாவைப் பற்றி ஞாபகப்படுத்தாமல் இருவரும் நழுவுகிறார்கள்.இன்னொரு கவிதையில் ஏற்கனவே சந்தித்த பேசிய ஒரு பெண்ணாக இவள் இருக்குமோ என்ற ஏக்கத்தில் தெருவில் நடந்து செல்லும் பெண்ணை ஞாபகப்படுத்திக் கொள்கிறார்.
கடைசியில் முடிக்கும்போது உனது வெளியெங்கும் நினைவுகளால் நான் நிரம்ப இன்று நாம் பயணித்தது திறந்துகொண்ட இறந்தகாலப் பாதையொன்றின் மீதெல்லாம். என்கிறார்.


அப்பாவின் நண்பர்’ என்ற இக் கவிதைத் தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. எல்லோரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். டிஸ்கவரி புக் பேலஸில் வந்துள்ள இப்புத்தகம் விலை ரூ.100தான்.


(திண்ணை முதல் இணைய வாரப் பத்திரிகையில் 03 ஜனவரி 2021ல் பிரசுரமான கட்டுரை)

நர்மதா ராமலிங்கம் சில நினைவுகள்

 துளி : 168 


அழகியசிங்கர்

தி.நகர் செல்லும்போதெல்லாம் நான் மூன்று பதிப்பகங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன்.  1. கலைஞன் பதிப்பகம் 2. நர்மதா பதிப்பகம் 3. கவிதா பதிப்பகம்.
நர்மதா பதிப்பகம் தி.நகரில்  ராஜபாதர்  தெரு ஆரம்பத்தில் மாடியிலிருந்தது.  விஸ்தாரமாகக் கடை காட்சி அளிக்கும்.
ராமலிங்கம் அவர்களைச் சந்திப்பேன்.  சிரித்த முகத்துடன் அவர் விருப்பமுடன் பேசுவதற்கு ஆர்வமாய் இருப்பார்.  
நான் அப்போதுதான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்திருந்தேன்.  அவரிடம் என் பத்திரிகையைக் கொடுப்பேன்.உடனே அந்தப் பத்திரிகைக்கான விலையைக் கொடுத்து விடுவார்.  இலவசமாக வாங்கிக் கொள்ள மாட்டார்.  அப் பத்திரிகையில் கவிதை எழுதும் என் நண்பரைப் பற்றி விசாரிப்பார். 
” அப்போதுதான் பத்திரிகையும் புத்தகம் போடும் முயற்சியிலும் இருந்தேன்.  ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தேன்.  அந்தப் புத்தகத்தை என்னால் விற்க முடியவில்லை. அப்போது அவர்தான் ஆறுதல் படுத்துவார்.
விற்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் புத்தகங்களைத் தேவையில்லாமல் இலவசமாகவோ பேப்பர் கடையிலோ  கொடுத்து  விடாதீர்கள் என்பார்.அந்த அறிவுரையை முக்கியமாக நான் நினைத்துக்கொண்டேன்.    ஒரு முறை விருட்சத்திற்கு விளம்பரமும் கொடுத்திருந்தார்.  
அவர் கலைஞர் பதிப்பகத்தின் உரிமையாளர் மாசிலாமணி அவர்களின் உறவினர். அவர் பதிப்பகம் தொடங்கியபோது வண்ண நிலவன் புத்தகத்தைத் தான் வெளியிட்டிருந்தார் முதல் புத்தகமாக.
ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களையெல்லாம் படிப்பார்.  அவர் நேரிடையாக மேடையில் பேசி நான் கேட்டதில்லை. ஒதுங்கி இருக்கும் சுபாவம் உடையவர்.   அவர் தமிழ்ப்பற்று அதிகம் உள்ளவர்.  நியூ புக்லேண்ட்ஸ் என்று புத்தக விற்பனை நிலையத்தை தி.நகரில் ஆரம்பித்தபோது தமிழ்ப் புத்தகங்களை விற்கும் கடையாகத்தான் அதைச் செயல் படுத்தினார்.
சிறுபத்திரிக்கைகள், இலக்கியப் புத்தகங்கள் என்றெல்லாம் நியூ புத்தக நிலையத்தில் விற்பனைக்கிருக்கும்.  அது ஆரம்பிக்கப்பட்டபோது தமிழில் அப்படியொரு கடை சென்னையில் முதன் முறை என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் விருட்சம் இதழ்களை விற்பனைக்குக் கொடுக்கும்போது ராமலிங்கம் அவர்களுக்குத் தனியாக ஒரு இதழ் பிரதியைக் கொடுப்பேன். ராமலிங்கம் அவர்களையும் விசாரிப்பேன்.  
எப்போதுமே விலை அதிகம் போகாதபடி நல்ல தாளில் அச்சிட்டு நர்மாதா புத்தகங்களைக் கொண்டு வருவார்.  
அவர் வீட்டுத் திருமண வைபவத்திற்கு ஞாபகமாய் என்னைக் கூப்பிடாமலிருக்க மாட்டார்.
‘ஒரே ஒரு புரட்சி’ என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை (2001ல் வெளியிட்டிருந்தார்) விருட்சம் இதழ் விமர்சனத்திற்கு அனுப்பியிருந்தார்.   நான் அந்தப் புத்தகம் விமர்சனத்தையும் வெளியிட்டிருந்தேன்.  அதை இன்னும் என் வசம் வைத்திருக்கிறேன். 
அவரை இழந்து நிற்கும் நர்மதா ஊழியர்களுக்கும், நியூ புக் லேண்ட்ஸ் ஊழியர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 150

அழகியசிங்கர்

150) க. எழில் கவிதை

தொலைவில் வரும்போது
அந்த நபர்
உன்னைப் போலவே இருக்கிறார்.
அருகில் வந்த போது
நீ கூட
நீ மாதிரி இல்லை.

நன்றி : அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது – கவிதைகள் – க.எழில் – வம்சி புக்ஸ், 19 டி.எம்.சாரோன், திருவண்ணாமலை – 606 601 – மொத்தப் பக்கங்கள் : 136 – விலை : ரூ.100.

01.01.2021 அன்று சூம் மூலமாக 32வது விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் கவிதை வாசித்தவர்களின் ஒளிப்பதிவு


20 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தார்கள்.  இந்நிகழ்ச்சி புத்தாண்டில் சிறப்பாக நடந்து முடிந்தது.  புத்தாண்டைக் குறித்தும் கவிதை வாசித்தார்கள்.

புத்தாண்டே புத்தாண்டே

 அழகியசிங்கர்

இன்று காலை எழுந்தபோது

புத்தாண்டு என்று மறந்து விட்டது.

ஆனால் 

கோயில்களுக்குப் போனோம்

கூட்டம் நிரம்பி வழிந்தது


தொற்றுப் பயத்தால் 

க்யூவில் நிற்கவில்லை


ஒரு வருடம் ஓடிவிட்டது

பயத்தைக் காட்டி

மிரட்டி விட்டுப் போயிற்று


புத்தாண்டே வருக வருக என்று

கூவிக் கூப்பிடப் போவதில்லை


ஆனால்

இனி வருகின்ற நாட்களில் 

எல்லாம் சரியாக நடக்க வேண்டும்


வண்ணமயமான கோலங்கள் மூலம்

தெருவில் புத்தாண்டை வரவேற்றார்கள்


புத்தாண்டிற்கு முதல் நாள்

குடியிருப்பவரின் வீட்டில் வயதான பெண்மணி

இறந்து விட்டாள்.                                 01.01.2021


சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தினம்..

 30.12.2020

துளி : 167 

அழகியசிங்கர்

இன்று ரமண மகரிஷி அவதரித்த தினம்.  கடந்த சில நாட்களாகச் ‘சரிதமும் உபதேசமும்’ என்ற புத்தகத்தின் 3வது பாகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

  
கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதை விட ஆன்மிகமாகச் செல்வதை நான் விரும்புவேன்.
அதனால் ரமணர், (அரவிந்தர் எனக்குப் புரியாது) ஆனால் அன்னையைப் புரியும்) ஜே கிருஷ்ணமூர்த்தி, யூ ஜி கிருஷ்ணமூர்த்தி, சீருடி சாய்பாபா, நிசகர்தத்தா மஹாராஜ், ஓஷோ என்றெல்லாம் ஆன்மிகவாதிகளை நம்புவேன்.


அவர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, அவர்கள் சொன்ன தத்துவங்களைக் கேட்பது என் வழக்கம்.  அவர்களைப் படிப்பதால் அரிய ஆன்மிகத் தகவல்கள் கிடைக்குமா என்று பார்ப்பேன்.   அதனால்தான் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட இதைப் படிப்பதில் விருப்பப்படுவேன்.

என்னிடம் ஏராளமான ஆன்மிகப் புத்தகங்கள்.  மனம் சோர்வாக இருக்கும்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன்.


அவர்களைப் பற்றி எழுதப்படுகிற தகவல்களை நான் நம்புகிறேனோ இல்லையோ, நிறையச் சுவாரசியமாக இருக்கும் படிப்பதற்கு. 


ஸ்ரீ ரமணரின்  சரிதம்  படித்தால், அவர் நம் முன்னால் அமர்ந்திருப்பதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. எப்போதோ நடந்த சில அனுபவங்கள் எல்லாம் இப்போதும் நடப்பதுபோல் இருக்கிறது.


உண்மையில் ரமணருடைய வாழ்க்கையில் நடந்த தினசரி நிகழ்ச்சிகளை ஒரு நாட்குறிப்பு குறிப்பு போலப் பல பக்தர்கள் பதிவு செய்துள்ளார்கள்.  மொத்தம் 8 தொகுப்புகள்.  ஒவ்வொரு தொகுப்பும் 544 பக்கங்கள். 

பல அரிய படங்கள்.  இரண்டு தொகுப்புகளைப் படித்து முடித்து விட்டேன்.  இப்போது மூன்றாவது தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இது ஒரு நாட்குறிப்பு தொகுப்பு போல் இருக்கிறது.  இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்.

24.2.1936
ஒரு அமெரிக்கர் இவ்வாறு பகவானை வினவுகின்றார்.


அமெரிக்கர் : கீதையை எப்பொழுதாவது படிக்கலாமா?
மகரிஷி : எப்பொழுதும் (படிக்க வேண்டும்)
அமெரிக்கர் : பைபிளை நாங்கள் படிக்கலாமா?
மகரிஷி : பைபிளும், கீதையும் ஒன்றுதான்.
அமெரிக்கர் : மனிதன் பாவத்தில் பிறந்தான் என்று பைபிள்  கூறுகின்றதே?
மகரிஷி : மனிதனே பாவரூபம்தான்.  ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் என்ற எண்ணம் இல்லை.  தேகத்தின் நினைப்பு வந்தவுடன்தான் பாவத்தின் எண்ணம் வருகின்றது.  எனவே எண்ணங்களின் எழுச்சியே பாவம்தான்.   இப்படிப் படித்துக்கொண்டே போகலாம் போலிருக்கிறது இந்தப் புத்தகத்தை.  ஏதோ கொஞ்சம் புரிவதுபோல் தோன்றுகிறது.


ரமண மகரிஷி பற்றி சின்ன குறிப்புகள்.  விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், 1879 டிசம்பர் 30ம் தேதி பிறந்தவர் வேங்கடராமன், மதுரையில், ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.  17வது வயதில் மரணம் குறித்த கேள்வி அவருக்கு எழுந்தது.  அது தொடர்பாக ஞானம் பெற, திருவண்ணாமலை சென்று, தியானம் செய்தார்.  திருவண்ணாமலை அடிவாரத்தில். 


புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். 1950 ஏப்ரல் 14ம் தேதி, தன்,70வது வயதில் காலமானார்.


துளி : 166


ரஜினி பயந்துவிட்டார்


அழகியசிங்கர்


நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் ஒருவர்.
அவர் முன்பே அரசியலுக்கு வந்திக்க வேண்டியவர். ஏன் தயங்கினார் என்பது தெரியவில்லை?
நடிகர் விஜயகாந்த் துணிச்சல் அவருக்கு இல்லை.உடம்பு சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அவர் அரசியலை விட்டு விலகிவிட்டார்.
ஆனால் தமிழகத்தில் அவர் அரசியல் பிரவேசத்தால் ஒரு பெரிய மாற்றம் கிடைத்திருக்க வேண்டியதை அவர் வேண்டாமென்று உதறி விட்டார்.
உண்மையில் இரண்டு கழக ஆட்சிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளலாமென்று தோன்றுகிறது.
அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் நேரிடையாக மக்களைச் சந்தித்திருக்க வேண்டாம். தொற்றுப் பயத்தால் அதைக்கூட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
எலக்டிரானிக் வழியாக அவர் கூட்டம் நடத்தியிருக்கலாம். மக்களை நேரிடையாக சந்தித்திருக்க வேண்டாம். அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதை மற்றவர்கள் மூலம் சொல்லியிருக்கலாம்.
ஏன் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை வெளிப்படுத்தினார் என்று தெரியவில்லை.அவர் கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஏன் அவர் அரசியலில் இறங்கி அந்த முயற்சியை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும்) செய்திருக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.
இப்போது திரும்பவும் இந்த ஆட்சி இரு கழகங்களுக்கிடையே தான் போகப் போகிறது.என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு முறையாவது கழக கட்சிகள் தவிர்த்து வேற யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று தோன்றுகிறது.
இப்போதோ எந்தக் கட்சியும் இந்தக் கழகங்களை எதிர்த்துப் போராடும் நிலையில் இல்லை.
கழகங்கள் ஆட்சியைத் தவிர மூன்றாவது அணியாக மற்ற எல்லா உதிரிக் கட்சிகளும் ஒன்றாகத் திரண்டு ஒரு அணியாக இருக்க முயற்சி செய்தால் நல்லது.அரசியலில் கொள்கை என்பது எதுவும் கிடையாது. உண்மையில் மக்களுக்கு எதாவது உதவி செய்யவேண்டுமென்ற ஒரு கொள்கைதான் இருக்க வேண்டும். மற்ற எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த முயற்சி செய்ய வேண்டும்.
(அரசியல் அனுபவம் இல்லாத நான் எழுதிய முதல் கட்டுரை இது. எதாவது பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)

சூம் மூலமாக 32வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

01.01.2020(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 32வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன். கவிதைகள் வாசித்துச் சிறப்புச் செய்யும்படி.  புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம். 

2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம்.  இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை. ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.  ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். 


புத்தாண்டு தினத்தை ஒட்டி புத்தாண்டை வரவேற்று கவிதைகள் வாசிக்கலாம்

கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனம் திறந்து வரவேற்கிறேன்.  உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள்.
        Meeting ID: : 841 2521 3276
              Passcode:   273555