மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 54

அழகியசிங்கர்  


54)  பாலம்


கள்ளழகர்                                                                     

அம்மா இறந்து ஓராண்டு கழித்து

திவசத்திற்காக

ஊருக்குப்போயிருந்தபோது

உணர்ந்தேன்

எனக்கும் என் உறவுகளுக்கும்

எனக்கும் என் ஊருக்கும்

இடையே

நீந்திக் கடக்க முடியாத

பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதையும்

இக்கரைக்கும் அக்கரைக்குமாக

நீண்டிருந்த பாலம்

இப்போது இல்லாமலிருப்பதையும்

அறிந்தேன்

என்னில் ஒட்டியிருந்த

ஊர்மண் உதிர்ந்திருப்பதையும்

இரத்தத்தில் ஊறியிருந்த

ஊர் உறைந்திருப்பதையும்

நன்றி : நதிநீர்த் தேக்கத்தின் முகங்கள் – கவிதைகள் – கள்ளழகர் – பக்கங்கள் : 48 – முதல் பதிப்பு : நவம்பர் 2000 – விலை : ரூ.20 – வெளியீடு : தாமரைச் செல்வி பதிப்பகம், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600 078

டாக்டர் ருத்ரன் சொன்னது நடந்தே விட்டது..

 

அழகியசிங்கர்

உங்களுக்கு ராம் மோஹனைத் தெரியுமா?  தெரியாதா?..காளி-தாஸ் என்ற கவிஞரை – தெரியாதா?  என்ன இது அவருடைய கவிதைத் தொகுதி கூட திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  சரி காளி-தாஸ் யார் என்று தெரியவேண்டாம்..ஆனால் ஸ்டெல்லா புரூûஸத் தெரியுமா? இப்போது புதியதாக எழுதுபவர்களுக்கு அவரைத் தெரிய வாய்ப்பில்லை.  இன்னும் சில வருடங்கள் போனால் சுத்தமாக மறந்து விடுவார்கள்.  இது நிதர்சனம்.  இதற்காக வருந்த முடியுமா?  ஆனால் இன்றுதான் ஸ்டெல்லா புரூஸ் மறைந்த தினம்.

அவர் மரணம் எப்படி நடந்தது?  கொஞ்சங்கூட அவருடன் பழகியவர்கள் நம்ப மாட்டார்கள்.  நானும் நம்பவில்லை.  ஆனால் அவருக்கு மரணம் நடந்தே விட்டது.  2008ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதி அவர் இறந்து விட்டார்.  டாக்டர் ருத்திரனைத் தெரியுமா? அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  அவர் எனக்கு நண்பர். எங்கே சந்திப்பேன் என்று கேட்கிறீர்களா?  அவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி சாலையில் சந்திப்பேன்.

அவரை ஒரு புத்தகக் காட்சி சாலையில் சந்தித்தபோது, ஸ்டெல்லா புரூஸ் பற்றி சொன்னேன்.  ஸ்டெல்லா புரூஸ் அப்போது மகா துன்பத்தில் இருந்தார்.  வாழ்வதற்கே பிடிக்க வில்லை.  அவருடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.  அவரால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை.  கிட்டத்தட்ட 6 மாதங்கள் அந்தத் துயரத்துடன் இருந்தார்.

டாக்டர் ருத்ரன்தான் சொன்னார் : “நீங்கள் உடனடியாக அவருடைய உறவினர் வீட்டில் அழைத்துக்கொண்டு போய் விட வேண்டும்.  இல்லாவிட்டால் அவருடன் யாராவது இருக்க வேண்டும்,” என்று.

“ஏன்?”

“அவர் தற்கொலை செய்துகொள்ள நினைப்பார்..”

எனக்கு அவர் சொன்னதைக் கேட்கும்போது, நம்ப முடியாமல் இருந்தது.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு அப்போது வயது 68.  ஒருவர் அந்த வயதில் தூக்குப் போட்டுக்கொள்வார் என்பதை நம்ப மறுத்தேன். மேலும் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் அவருடைய உறவினர் வட்டத்தைத் துண்டித்து வந்தவர்.  அவரால் யார் வீட்டிலும் பொருந்தி இருக்க முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் நான் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன்.   வீட்டில் திருநெல்வேலி முறுக்கும், டீயும் கொடுப்பார்கள். நன்றாகப் பேசுவார்கள்.

அவர் வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருந்த வட்டியில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்.  எளிமையான வாழ்க்கை.  புத்தகம் படிப்பார்.  இசைக் கேட்பார்.  அவருக்குப் பிடித்த நண்பர்களைப் பார்ப்பார்.  அவருக்குத் தோன்றுவதை ஆனந்தவிகடனுக்கு எழுதி அனுப்புவார்.  அவர் எழுத்தில் உள்ள வசீகரம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்குப் பிடித்துப் போயிற்று.  அவருக்கு ஸ்டெல்லாபுரூஸ் மீது அளவு கடந்த மரியாதை உண்டு.

ஸ்டெல்லா புரூஸ÷ற்கு ஜே கிருஷ்ணமூர்த்தி மீது அபார நம்பிக்கை உண்டு.  எனக்குத் தெரிந்து இரண்டு எழுத்தாளர்களுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தி மீது அபார நம்பிக்கை உண்டு.  ஒருவர் ஸ்டெல்லா புரூஸ்.  இன்னொருவர் பிரமிள்.

ருத்திரன் சொன்னது என் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது.  நான் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.  மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  68 வயதில் யாரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்  என்று நம்பினேன்.  அந்தத் தருணத்தில் சிபிச்செல்வன், விஜய் மகேந்திரன் என்று என் இலக்கிய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச் செல்வேன்.  மனைவி இறந்ததைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.  இந்த இடத்தில் தேவராஜன் என்ற நண்பரைப் பற்றி சொல்ல வேண்டும்.  அவர் ஸ்டெல்லா புரூஸ÷டன் அவர் வீட்டில் இருந்தார். அவர் மனைவி இறந்த தருணத்தில்.  ஆனாலும் அவராலும் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை.

இரண்டு நிகழ்ச்சிகள் நடந்திருந்தால், ஸ்டெல்லா புரூûஸ தப்ப வைத்திருக்கலாம்.  ஒன்று : அவருடைய உறவினர்கள் வீட்டில் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம்.  இரண்டு : அவர் இருந்த இடத்திலிருந்து வேறு எங்காவது அழைத்துக்கொண்டு போயிருக்கலாம். இரண்டும்  நடக்கவில்லை.

“ஒரு முறை என்னைப் பார்க்க வரச் சொல்லுங்கள்,” என்றார் ருத்திரன்.  ஸ்டெல்லா புரூஸ் அப்படியெல்லாம் யாரையும் பார்க்கப் போக மாட்டார்.  அழைத்துக்கொண்டு போவது சிரமம்.

 

என்னசெய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

மறக்க முடியாத சுஜாதா

அழகியசிங்கர்
நேற்றுதான் சுஜாதாவின் மறைந்த நாள் என்பது தெரியாமல் போய்விட்டது. இன்றுதான் என்று தவறாக நினைத்துவிட்டேன். சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இனி தமிழில் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழுக்கு அவர் எழுத்து புதிது. ஆனால் பலர் இதை மறுப்பார்கள். இன்று எல்லோரும் படிக்கக் கூடிய நடையை தடங்கல் இல்லாமல் அளித்தவர். சமீபத்தில் லைப்ரரி போய் அவருடைய தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்து வந்தேன். படிக்க படிக்க விட முடியவில்லை. அப்படியொரு எழுத்து.
 
சி சு செல்ப்பாவின் எழுத்து காலத்தில்தான் வணிகப் பத்திரிகை எழுத்து சிறுபத்திரிகை எழுத்து என்று பெரிய பள்ளம் விழுந்து விட்டது. ஆனால் இப்போது அதுமாதிரியான பள்ளம் இல்லை. பெரிய பத்திரிகைகளை தன் வழிக்குக் கொண்டு வந்த பெருமை சுஜாதாவிற்கு உண்டு. அவர் எவ்வளவு வேகமாகப் படிக்கிறாரோ அதே வேகத்தில் எழுதக் கூடியவர். அறிவியல் புனை கதைகளை தமிழுக்கு முயற்சி செய்த பெருமை அவருக்கு உண்டு. அறிவியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
 
மே 1968ல் நகுலன் குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பை கொண்டு வந்துள்ளார். அதில் எஸ் ரங்கராஜன் என்ற பெயரில் தனிமைகொண்டு என்ற கதை எழுதி உள்ளார். அந்த ரங்கராஜன் வேறு யாருமில்லை நம்ம சுஜாதாதான். அக் கதையை எப்படி ஆரம்பிக்கிறார் என்பதைப் பாருங்கள் :
 
“இந்தக் கதை ஆர அமரத்தான் செல்லும். ரயில் தப்புகிற அவசரத்திலோ அல்லது ஒரு பிரயாணப் பொழுதுபோக்குக்காவோ இதைப் படிக்க வேண்டாம். தனிமையில் படித்தால் நல்லது. ரேடியோவை அணைத்துவிடுங்கள். குழந்தைகள் எல்லாம் தூங்கட்டும். இரவி இறங்கி இரவு வந்ததும், மௌனம் வந்ததும், தின வாழ்க்கையின் அவசரங்கள் செத்ததும், சமாதானமான நிலையில் உங்கள் மனதில் இரக்கம், பச்சாதாபம், வெறுப்பு, அதி தீவிரமான அன்பு இந்த உணர்ச்சிகளுக்கு எல்லாம் வரவேற்பு இருக்கும்போது படியுங்கள். சாப்பிட்டுவிட்டுப் படியுங்கள். நிதானமாகப் படியுங்கள். தயவுசெய்து வரிகளைத் தப்ப விடாதீர்கள்…”
 
அத் தொகுப்பிலே சுஜாதாவின் இந்தக் கதை குறிப்பிடும்படியான கதையாக உள்ளது. வித்தியாசமாக எழுதி உள்ளார். டைரியில் பேசுவதுபோல் கதையை எழுதி உள்ளார்.
 
ஒரு சமயத்தில் குமுதம் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக அவர் இருந்தபோது, சிறு பத்திரிகைகளில் உலாவி வந்த புதுக்கவிதைகளை ஏராளமாக உள்ளே நுழைந்து விட்டார். இதை அப்போது உள்ள யாரும் செய்திருக்க மாட்டார்கள். அன்றிலிருந்து புதுக்கவிதைகளை பெரும் பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு விட்டன. அவர் கதைகள் ஒவ்வொன்றும் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கலாம்.
 
ஆனால் யாரும் சுஜாதாவை பாராட்டி சொல்ல மாட்டார்கள். அதுமாதிரி எழுத இப்போது யாரும் இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக ஜனரஞ்சக எழுத்தாளர்கள் யார் கண்ணிலும் படாமல் ஜனரஞ்சகமாகவே இருப்பார்கள். ஆனால் சுஜாதா விதிவிலக்கு. தீவிர எழுத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் பாலமாக இருந்து செயல் பட்டிருக்கிறார். நிறையா எழுதி விட்டார். இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். எழுதி தயாரித்து வந்து கட்டுரையாக வாசித்து விடுவார். அவர் மனதுக்குப் பிடித்த படைப்புகளைப் பாராட்டாமல் இருக்க மாட்டார். அவர் தொடர்கதைகளில் கணேஷ் வசந்த் பேசுகிற உரையாடலில் எல்லாம் இருக்கும். திடீரென்று விருட்சம் பத்திரிகையைப் பற்றிய பேச்சும் இருக்கும். அவர் புத்தகம் எப்போதும் விற்றுக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலரை முழுவதும் படித்துவிட்டு விடு விடுவென்று விமர்சனம் எழுதி விட்டார். என் சகோதரன் அடிக்கடி சுஜாதா புத்தகத்திலிருந்து ஒரு வரி சொல்வான். ‘அவள் உட்கார்ந்த இடத்தைத் தட்டினான்,’ என்று. எந்தப் புத்ததத்தில் இதைப் படித்தான் என்பது தெரியவில்லை. ஆபாசத்தைக் கூட நகைச்சுவை உணர்வோட சொல்லக் கூடியவர்.
 
கணையாழியில் தீவிரமாக கடைசிப் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் எழுதி தள்ளி விடுவார். எனக்கு இன்னும்கூட குருபிராசாத்தின் கடைசி தினங்கள் என்ற குறுநாவல் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதைகளையும் அவர் அலட்சியமாக எழுதி உள்ளார். சுஜாதாவின் கதையைத்தான் எந்திரன் என்ற படமாக எடுத்து உள்ளார்கள். திரைக் கதை எழுதுவது எப்படி என்ற சுஜாதாவின் புத்தகம் பிரபலமான புத்தகம். நாடகம் எழுதுவதிலும் அவர் முயற்சி செய்யாமல் இல்லை.
 
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதியிருக்கிறார். உடனே படித்து முடித்து விடலாம். நான் புத்தகத்தை மூடி வைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது உண்டா என்பது தெரியவில்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 53

 

அழகியசிங்கர்

பார்க்கும் புத்தர்

பேயோன்

நேற்று புத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்

தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர்

பீங்கானில் செய்த முனிபுங்கவர்

தாடி வைத்தால் திருவள்ளூவர்

போட்டிசெல்லி முகபாவி

சுருட்டைமுடிக் காந்தார உருவி

தொங்கட்டானை இழந்த காது

மூக்கென்னவோ கிழக்காசியம்

நகைச்சுவைத் துணுக்கொன்று

சொல்லி முடித்த புன்னகை

மனக்கண்ணில் எதையோ பார்க்க

விரும்பி மூடிய கண்கள்

கண் திறந்தால் தெரிந்துவிடுமோ

என்று மூடிய கண்கள்

எனக்கு புத்தரைப் பிடிக்கும்

பார்த்தால் அமைதி தருகிறார்

என்றெண்ணவைக்கும் ஆளுமை

கிளர்ந்தெழும் அன்போடு

கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை

பிறவியிலேயே மூடிய கண்களால்

அவரும் என்னைப் பார்க்கிறார்

ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல

எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து

அவர் பார்ப்பது எனக்குத் தெரியும்

நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது.

நன்றி : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை – பேயோன் – கவிதைகள் – பக்கங்கள் : 243 – விலை : 200 – வெளியீடு : சஹானா,  26/1 சிபிடபூள்யூடி குவார்ட்டர்ஸ், பெசண்ட் நகர், சென்னை 90

மொழி பெயர்ப்பாளருக்குக் கிடைத்த விளக்கு விருது

அழகியசிங்கர்

                                                                                                                  

இந்த முறை விளக்குப் பரிசு மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.  இது ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைத்த கௌரவம். தமிழில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானதாக கருதுகிறேன்.  பல அரிய படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளன.  அதேபோல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும் செல்லாமல் இல்லை. ஆனால் மிகக் குறைவான படைப்புகளே அவ்வாறு மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன.  ஒரு மொழி பெயர்ப்பாளரின் விருப்பத்திற்குத்தான் ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது.  அந்த மொழிபெயர்ப்பாளர் விரும்பவில்லை என்றால் மொழிபெயர்ப்பு நிகழ வாய்ப்பு இல்லை.

ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரை எல்லோரும் விரும்புவார்கள்.  கல்யாணராமன் அப்படிப்பட்ட ஒருவர்.   எனக்குத் தெரிந்து கே எஸ் சுப்பிரமணியன் என்ற மொழிபெயர்ப்பாளர் உள்ளார்.  இவர் ஜெயகாந்தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைக் கொண்டு வந்துள்ளார்.  ஆனால் இவரும் அவருக்குப் பிடித்த படைப்பாளிகளைத்தான் மொழிபெயர்ப்பார்.

ஆனால் தமிழில் பல படைப்பாளிகளின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.  ஆனால் மொழிபெயர்ப்பாளரின் கருணை இருந்தால்தான் இதெல்லாம் நடக்கும்.

கல்யாணராமன் மொழிபெயர்த்த ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை நான் தமிழிலேயே படிக்கவில்லை.  ஒரு எழுத்தாளருக்கு ஒரு நல்ல மொழிபெயர்ப்பளர் கிடைத்துவிட்டால், அது எழுத்தாளருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த இடத்தில் வே ஸ்ரீராம் அவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  பிரான்சு மொழியிலிருந்து அல்பெர் கம்யூவின் அந்நியன் என்ற நாவலை அவர் மொழி பெயர்த்துள்ளார்.  அவர் இன்னும் கூட பல புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  அனால் அவர் தமிழ் மொழியிலிருந்து எந்தப் படைப்பையாவது பிரான்சு மொழிக்கு மொழி பெயர்த்துள்ளாரா என்பது அடியேனுக்குத் தெரியாது.

இந்த மொழிபெயர்ப்பாளர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.  யாரும் இவர்களை படைப்பாளிகளாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.  அதேசமயம் படைப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு போக நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.  அந்தோன் சேகவ்வின் சிறுகதைகளும் குறுநாவல்களும் முன்னேற்றப் பதிப்பகம் மூலம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர் : ரா கிருஷ்ணையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு வந்துள்ளது இந்தப் புத்தகம்.   அவர் இப்போது எங்கு உள்ளார் என்பது கூட தெரியாது.

கல்யாணராமனுக்கு பரிசு கிடைத்ததுபோல் இன்னும் பலருக்கும் விளக்கு பரிசு கிடைக்க வேண்டும்.  இந்த விழாவில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் கையால் விளக்கு விருதை கல்யாணராமன் பெற்றுக்கொண்டார்.  இந்திரா பார்த்தசராதி கூட இந்த விழாவில் கலந்துகொண்டார்.  என்ன வேடிக்கை என்றால், இவர்கள் யாரும் விளக்கு விருது இன்னும் பெறாத மூத்த எழுத்தாளர்கள்.

 

முதியோர் இல்லத்தை விட்டு பறந்த பறவைகள்

 

அழகியசிங்கர்

லட்சியப் பறவைகள் என்றபெயரில் உஷாதீபன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.  இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  உண்மையில் பல புத்தகங்கள் பலருக்குத் தெரிவதில்லை.  இந்தப் புத்தகத்தை உஷாதீபன் படிப்பதற்கு எனக்கு அளித்தபோது உடனடியாகப் படிக்க நினைத்தேன். நினைத்தேன் என்பதே படிக்க முடியாமல் போகும் தடைக்கல்லாக நினைதக்கிறேன்.  இதோ இப்போது படித்து முடித்துவிட்டேன்.

ஒரு நாவலில் கதைக்களத்தை எப்படி உருவாக்குகிறார் என்பதை முதலில் கவனிக்கத் தோன்றியது.   முதியோர் இல்லத்திலிருந்து துவங்கும் இந்த நாவல் அதைப் பின்னணியாகக் கொண்டு கதையைப் பிணைத்துக்கொண்டு போகும் என்று நினைத்தேன்.  ஆனால் வேறு பாதையில் இந்த நாவல் பயணிக்கத் தொடங்கியதை அறிந்தேன்.  முதியோர் இல்லத்தைத் திறன்பட நடத்தி வரும் தேவகி, ஒரு நல்ல தரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்று துடிப்பாக செயல்படும் பிரபு.  அலுவலக வாழ்க்கையில் நேர்மையாக பணிபுரிய நினைக்கிற பாலன். இவர்களைப் பின்னிப் பிணைந்த இந்த நாவல், முக்கியமாகக் கொண்டு செல்ல வேண்டிய முதியோரின் அவதி என்ற காட்சி பின்புலத்தை வெட்டி விட்டதாகவே எனக்குத் தோன்றியது.

ஆரம்பிக்கும் போது நாவல் இப்படி ஆரம்பமாகிறது : üகம்ப்யூட்டரின் முன் அமர்ந்திருந்த தேவகியின் பார்வை கலங்கியிருந்தது. கடந்த அரை மணி நேரமாகத் திரையையே பார்த்துக்கொண்டிரப்பதால் ஏற்பட்டதுவோ என்று நினைத்தபோது, அது மெயிலில் படித்த செய்தியினால் விளைந்தது என்பது புரிந்தது.ý

நேரிடையாகவே ஒரு கதாபாத்திரம் தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை அமைக்கலாம்.  ஆனால் இங்கு ஆசிரியர் கூற்றாக இது அமைந்துள்ளது.  மேலும் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலை ஓட்டத்தை ஆசிரியர் கூற்று உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது.  ஒரு பெரியவரின் மரணத்தைத்தான் அந்தச் செய்தி சொல்கிறது.  அந்தப் பெரியவர் அந்த முதியோர் இல்லத்தில் தன்னை மனப்பூர்வமாய் பிணைத்துக் கொண்டவர்.  அவருடைய மரணம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது.  ஆனால் அவருடைய பையனோ அவர் மரணத்தை அறிந்து இறுதி சடங்கு நடத்தக்கூட அங்கு வரத் தயாராய் இல்லை. அந்த முதியோர் இல்லத்திலேயே இறுதி சடங்கை முடித்துவிட கூறுகிறான்.  அதற்கான செலவை அனுப்பி விடுகிறான்.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இது ஒரு உருக்கமான கட்டம்.  அல்பெர் கம்யூ என்ற எழுத்தாளர் அந்நியன் என்ற நாவல் எழுதி உள்ளார்.  விடுதியில் தங்கியிருக்கும் அம்மா இறந்து விடுகிறாள்.  இறுதி யாத்திரியில் கலந்துகொள்ள செல்லும் தமையன், அம்மாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை. அவனாவது பரவாயில்லை இறுதி யாத்திரையில் கலந்து கொள்கிறான்.  ஆனால் உஷாதீபனின் நாவலிலோ தனயன் வரவே இல்லை. எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று பணத்தை அனுப்பி விடுகிறான். இதன் தொடர்பாக இன்னும் இரண்டு நாவல்களைப் படிக்க விரும்புகிறேன்.  ஒரு நாவல் நீல பத்மநாபனின் üஇலை உதிர் காலம்ý.  இன்னொரு நாவல் நகுலனின் üவாக்கு மூலம்ý.

முதியோர் இல்லத்தை நடத்தி வரும் தேவகி இன்னும் சில நல்ல உள்ளங்களையும் சந்திக்கிறாள்.  எதாவது உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிற சிலரும் அங்கு வருகிறார்கள்.  அவள் சேவை மனப்பான்மையை அறிந்து அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிற இளைஞன் பிரபு, அவளிடம் கடிதங்கள் மூலம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறான்.

குறுக்கு வழியில் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கிற சதாசிவம், நேர் வழியில் செல்ல விரும்பும் அவர் புதல்வன் பாலா. இப்படி ஒரு முரண்பாடை நாவலில் கட்டமைக்கிறார்.  தேவகியின் அப்பா

பாலகிருஷ்ணன் நேர்மையான மனிதர்  ஜவுளி வியாபரத்தில் நேர்மையாக ஈடுபட்டு முன்னுக்கு வந்தவர். மனைவியை இழந்தவர். ஆனால் அவருடைய பையன் அவருக்கு முரணாக அப்பாவை மதிக்காமல் இருக்கிறான்.  அவருடைய நண்பரான சதாசிவம், அவருடைய பையன் பாலனை தேவகிக்கு திருமணம் செய்துகொள்ள முன் வருகிறார்.  பாலகிருஷ்ணன் கெட்டிக்காரத்தனமாய் நடத்தும் வியாபாரத்திலும் தன்னை இணைத்துக்கொள்ள நினைக்கிறார். ஆனால் பாலன் மனதோ நந்தினி என்ற பெண்ணிடம். அந்த நந்தினியை பாலா திருமணம் செய்துகொள்ளகூடாது என்று கடுமையாக பையனிடம் ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறார். ஒரு காலத்தில் நந்தினி அப்பாவுடன் நடந்த சாப்பாடு வியாபாரத்தில் அவள் அப்பா அவரை மோசம் செய்து விடுகிறார்.  அந்த வெறுப்பில் அவர் பெண்ணை பையன் திருமணம் செய்து கொள்ளகூடாது என்கிறார்.  பையன் ஒன்றும் சொல்லவில்லை.  தேவகிக்கும் பிரபுவை விட மனதில்லை.  இந் நாவலில் வெளிப்படையாக சொல்லப்படாத காதலை சாமார்த்தியமாக முடிக்கிறார் நாவலாசிரியர். பாலன் நந்தினி திருமணம் முடிந்த கையோடு அவர் பெண்ணின் திருமணத்தையும் முடித்துவிடுகிறார். எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லத்தில் ஆரம்பித்த இந்த நாவல் கிளைபிரிந்து பல விஷயங்களைத் தொட்டுக் காட்டியிருக்கின்றன. ஆனால் முதியோர் இல்லத்தில் அவதிப்படும் ஜன்மங்களைப் பற்றி லேசாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

நாவலை சரளமான நடையில் விறுவிறுப்பாக எழுதிக்கொண்டு போகிறார்.

லட்சியப் பறவைகள் – நாவல் – உஷாதீபன் – பக்கங்கள் : 208 – வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 17 – தொலைபேசி எண் : 24364243, 24322177 – விலை : ரூ.150

ஒரு பயணம்

 

அழகியசிங்கர்

 

திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம்.  காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார்.  நாங்கள் பஸ்ஸில் பத்து ரூபாய்க்குச் சென்றோம்.  பஸ் ஸ்டான்டிலிருந்து மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச்  சென்று ரொம்ப லைட்டாக ஒரு சாப்பாடு சாப்பிட்டோம். சுவையாக இருந்தாலும் காரம் தாங்க முடியவில்லை.  தர்மபுரம் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தவுடன், அப்பாடா என்று இருந்தது.  மயிலாடுதுறை இடம் பயங்கரமான அமைதியாக இருக்கும்போல் இருந்தது.  இந்த அமைதியை உணரத்தான் முடியும்.  விவரிக்க முடியாது. எதிரில் இருந்த நண்பர் குடும்பம் எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்தது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா என்ற ஆச்சரியம் வந்து போனது.

அடுத்தநாளிலிருந்து நண்பரின் டூ வீலர் கிடைத்தது.  அந்த டூ வீலர் எப்படி என்று விவரிக்கப் போவதில்லை. ரொம்ப உபயோகமாக இருந்தது.  ஆட்டோவில் உட்கார்ந்த கொஞ்ச தூர இடத்திற்குப் போனால் கூட கொள்ளை அடித்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான ராஜன் தோட்டத்தைச் சுற்றி சுற்றி நடந்து வந்தோம்.  ஒரு ரவுண்ட் சுற்ற 10 நிமிடம் ஆகிறது.  மூன்று முறை சுற்றினோம்.   அங்கு நான் முன்பு இருந்தபோது சந்தித்த பல நண்பர்களைச் சந்தித்தேன்.  என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசினார்கள்.

திருஇந்தளூர் என்ற இடத்தைப் போயப் பார்த்தோம்.  அங்குதான் ஞானக்கூத்தன் பால்யக் காலத்தில் வளர்ந்த வீடு இருந்தது.  பாழ் அடைந்து யாரும் கவனிப்பாரற்று கிடந்தது.  அங்கிருந்தவர்களைப் பார்த்து  அந்த வீடைப் பற்றி கேட்டேன்.  üபரம்பரையாக வசித்து முடித்து விட்டார்கள்.  இப்போ யாருமில்லை,ý என்றார்கள். ஞானக்கூத்தன் அங்குள்ள மண்டபத்தை வைத்தும் குளத்தை வைத்தும் கவிதைகள் எழுதி உள்ளார். காவேரியில் தண்ணீரே இல்லை.  அதன் காய்ந்துபோன நிலத்தைப் பார்த்து கண்கலங்கினேன் என்று வசனம் எழுத விரும்பவில்லை.

திருஇந்தளூரில் உள்ள பெருமாள் சயனித்திருப்பார்.  ஒருமுறை நான் அங்கு வந்தபோது, எலிகள் பெருமாள் மேல் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்தநாள் கும்பகோணம் என்ற வசீகரமான இடத்திற்குச் சென்று கோயில்களைச் சுற்றினோம்.  மகாமகம் குளத்தில் காலை நனைத்தோம். பிரான்சிலிருந்து ஒரு ஆங்கிலப் பேராசிரியர் வந்திருந்தார்.  அவருக்கு 38 வயதாம்..கல்யாணம் செய்து கொள்ளவில்லையாம்..திருவண்ணாமலை போய்விட்டு இங்கு வந்திருக்கிறாராம்.  உற்சாகமாக இருந்தார்.  கும்பகோணம் ஒரே களேபரமாக சப்தமாக இருந்தது.  மயிலாடுதுறையின் அமைதி இல்லை.

இதற்கு முன் மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கிக்கிளையில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன்.  ஓடி வந்து விட்டேன்.ஒரே கூட்டம் அவரைச் சுற்றி.

எனக்கு உதவிய நண்பர் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை என்னிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார்.  நான் அபிப்பிராயம் சொன்னதைக் கேட்டப் பிறகு, அடுத்த முறை ஞாபகமாய் என்னிடம் எந்த அபிப்பிராயத்தையும் கேட்க மாட்டார் என்று தோன்றியது.

ஒரு கவிதையில் ஆரம்பிப்பதும் முடிப்பதும் முக்கியம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கவிதை ஒரு பக்கத்தில் ஒரு சில வரிகளுடன் நின்று விட வேண்டும்.  இரண்டு மூன்று பக்கங்கள் என்றால் படிப்பவர்களுக்கு அலுப்பு வந்து விடும்.

கவிதையை எழுதுபவரும் சரி, படிப்பவரும் சரி, சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.  புரிந்து கொண்டவர்கள் யாரிடமும் அபிப்பிராயம் கேட்க மாட்டார்கள்.

நம்முடைய கவிதைகளுடன் மற்றவர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும்.

 

நான் சென்னை கிளம்பி வரும்போது தினமும் ஒரு கவிதை எழுதுங்கள் என்று அறிவுரை கூறினேன்.  நான் வந்த இரண்டாவது நாள் நண்பரை காலையில் பார்த்தபோது, ஜெயமோகனின் வெண்முரசைப் படித்துவிட்டேன் என்று உற்சாகமாக சொன்னதைக் கேட்க  ஆச்சரியமாக இருந்தது.  நான் திரும்பவும் கவிதைகளைப் பற்றிப் பேசலாமென்றேன்.  ஓடியே போய்விட்டார். உழவன் எக்ஸ்பிரஸ் ஏறும்வரை கவிதையைப் பற்றி மூச்சை விடவில்லை.

நேற்று மாலை முனைவர் மு சிவச்சந்திரன் என்ற பேராசிரியர் தமிழ்ச் சுரங்கம் என்ற தலைப்பின் கீழ் செம்மொழித் தமிழ் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்.  30 பேர்களுக்குமேல் வந்திருந்தார்கள். பொரும்பாலோர் கல்லூரி மாணவ, மாணவிகள்.  நான் வாங்கிய சில தலவரலாறு புத்தகங்கள் : 1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் 2. ஸ்ரீசார்ங்கபாணிசுவாமி திருக்கோயில் தலவரலாறு 3. அருள்மிகு நாகேசுவரசுவாமி திருக்கோயில் வானமுட்டி பெருமாள் கோயில் போனோம்.  பெருமாள் நின்றுகொண்டே கண்களை அகலவிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பது வித்தியாசமாக இருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் முகநூல் பக்கமே போகவில்லை.

வியாழக்கிழமை ஆகிய இன்று காலை சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்  

தவளைக் கவிதை

பிரமிள்

 

தனக்குப் புத்தி

நூறு என்றது மீன்

பிடித்துக் கோர்த்தேன்

ஈர்க்கில்

தனக்குப் புத்தி

ஆயிரம் என்றது ஆமை

மல்லாத்தி ஏற்றினேன்

கல்லை.

üஎனக்குப் புத்தி

ஒன்றேý

என்றது தவளை

எட்டிப் பிடித்தேன்

பிடிக்குத் தப்பித்

தத்தித் தப்பிப்

போகுது தவளைக்

கவிதை –

üüநூறு புத்தரே!

கோர்த்தரே!

ஆயிரம் புத்தரே!

மல்லாத்தரே!

கல்லேத்தரே!

ஒரு புத்தரே!

தத்தரே!

பித்தரே!

நன்றி : பிரமிள் கவிதைகள் – தொகுப்பு கால சுப்ரமணியம் – லயம் வெளியீடு, பெரியூர், சத்தியமங்கலம் 698 402 – 328 பக்கங்கள் – விலை : ரூ.130 – வெளியான ஆண்டு : அக்டோபர் 1998

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

 

அழகியசிங்கர்

1. யார் வருவார்கள் ஆட்சி அமைக்க?

தெரியாது

2. அரசியல் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதாக இருந்தால்..

சமஸ் அவர்களுக்குப் போட்டியாக எழுத விரும்பவில்லை.

3. ஊழல் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடியுமா?

பார்க்க முடியாது.  ஆனால் யாருக்கும் தெரியாமல் எப்படி ஊழல் செய்வது என்பதை ஒரு சில அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு கலை.

4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?

அசோகமித்திரனை.  சமீபத்தில் அவருடைய பேட்டி விகடன் தடத்தில் வந்துள்ளது.  நான் பத்திரப்படுத்தி எப்போதும் படிக்க விரும்புகிறேன்.

5. எந்த எழுத்தாளரின் வேகம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது?

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா..

6. எந்தப் புத்தகம் இப்போது படிக்கிறீர்கள்?

சர்க்கரை நோயுடன் வாழ்வது எப்படி? என்ற புத்தகத்தைப் படிக்கிறேன். நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.

7. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் எது?

அப்பா படுத்திருந்த அறை.  அங்கு போகவே என்னால் முடியவில்லை. தனியாக இரவு நேரத்தில் இருக்கும்போது எல்லா இடங்களிலும் விளக்குகளைப் போட்டுவிட்டுத்தான் தூங்குகிறேன்.

8. உங்கள் புத்தகங்களை விற்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?

கவலைப்படமாட்டேன்.  நான் இருக்கும் மாம்பலம் பகுதியில் நிறைய பேப்பர் கடைகள் இருக்கின்றன.  திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலும் சில கடைக்காரர்களைப் பார்த்து விற்க புத்தகங்களைக் கொடுக்கலாம் என்றும் யோசிக்கிறேன்.

9. உங்களுக்கு இலக்கிய விருது கிடைப்பதாக கனவு கண்டேன்.

விபரீத கனவு

10. புத்தகம் படிப்பது எளிதானதா? புத்தகம் எழுதுவது எளிதானதா?

இரண்டும் எளிதானதல்ல.

11. நொண்டி அடிப்பது உங்களுக்குப் பிடிக்குமே..

சின்ன வயதில் நொண்டி அடிக்கும்போது இரண்டு கைகளையும் அகல விரித்து எல்லோரையும் பிடித்து விடுவேன்.  இப்போது அதுமாதிரி நொண்டி அடிக்க முடியவில்லை.

12. ஒரு பஸ்ûஸப் பிடித்து எங்காவது போக வேண்டுமென்றால் எங்கே போவீர்கள்..

திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டுகளில் உட்காரப் போவேன்.

13. மின்சார வண்டியில் போவது என்றால்

திரிசூலம் ரயில் நிலையத்திற்குப் போய் நண்பர்கள் சிலரைக் கூப்பிட்டு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கவிதைகள் வாசிக்கச் சொல்வேன்.

14. சமீபத்தில் உங்கள் பதிப்பகம் மூலம் கொண்டு வந்த புத்தகத்தில் எது உங்களைக் கவர்ந்தது.

ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்.

நீங்களும் படிக்கலாம்… 27

நீங்களும் படிக்கலாம்… 27
 
 
நிறைவு செய்ய முடியாத கற்பனை
 
 
அழகிய்சிங்கர்
 
 
 
 
ரொம்பநாள் கழித்து லாசராவின் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துள்ளேன். நான் முன்பு அவர் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் சிலாகித்துக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். நானும் அவருடைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை. அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல. இன்னும் கேட்டால் அவருடைய புத்தகங்கள் என் அலமாரியில் இருந்தாலும், எடுத்துப் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ள வில்லை என்றுதான் தோன்றுகிறது.
 
அபிதா என்ற இந்த நாவல் 1970ல் வாசகர் வட்டம் மூலம் வெளிவந்தது. இந்த நாவலை லாசரா மூன்று பெண்களை மையமாக வைத்து எழுதி உள்ளார். சாவித்திரி, சகுந்தலா, அபிதா என்ற மூன்று பெண்கள்தான் அவர்கள்.
இந்த நாவலை லாசரா கொண்டுபோகிற விதம் அபாரம். எல்லா இடங்களிலும் வார்த்தை ஜாலம். வார்த்தை ஜாலம் இல்லாவிட்டால் இந்த நாவலே எழுத முடியாதுபோல் தோன்றுகிறது.
 
நாவல் எழுதிக்கொண்டு வருபவர் திடீர் திடீரென்று கவிதை வரிகள் எழுதி விடுகிறார். ஆனால் ஒரு நேர்பேச்சில் லாசராவிற்கு கவிதைகள் மீது ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதோ புத்தகத்தின் ஒரு பகுதியில் எழுதியிருப்பதை உங்களுக்கு அளிக்கிறேன்.
 
பித்தத்தின் உச்சம்
தேன் குடித்த நரி
புன்னகையாலேயே ஆக்கி
புன்னகையாலேயே ஆகி
புன்னகை மன்னன்.
ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே
 
லாசரா வெகு சுலபமாய் வார்த்தைகளை வைத்து விளையாடிக்கொண்டே பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகிறார். சாவித்திரி என்ற பெண் வசதி படைத்தவள். அவள் ஒரு ஏழையை அல்லது கிட்டத்தட்ட ஒரு அனாதையை திருமணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒரு சிலருக்குத்தான் கிட்டும். அந்த அதிர்ஷ்டம் இந்த நாவலின் வரும் கதாநாயகனுக்குக் கிடைக்கிறது. பட்டினியில் சத்திரத்துத் திண்ணையில் படுத்துக் கிடந்தவனுக்கு அடிக்கும் அதிர்ஷ்டத்தில் ஒரு பெண்ணும் கிடைக்கிறாள். அவளை ஏற்றுக்கொண்டவனுக்கு ஒருவித சந்தேகப் புத்தி. அவன் இப்படி சொல்கிறான்.
 
ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்
ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை, என்றும் அவன் பிரஜைதான். அவனுக்கும் அவன் மனைவி சாவித்திரிக்கும் இருக்கும் முரண்பாடை எளிதில் கொண்டு வருகிறார் லாசரா. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அவன் இணக்கமாக வாழ வேண்டுமென்று நினைத்த கரடிமலையில் இருந்த சகுந்தலை அவன் நினைவுக்கு வருகிறாள்.
அடிக்கடி வியாபார நிமித்தமாக அவன் வெளியூர் செல்பவன், அவன் மனைவி சாவித்திரியை அவன் எங்கும் அழைத்துப் போவதில்லை. முரண்பாடுடன் அவர்கள் வாழ்க்கை தொடராமல் இல்லை. அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் வாரிசாக யாரும் உருவாக இல்லை. இந்த அலுப்பான வாழ்க்கையில் அவன் அவளை தன் இருந்த கரடிமலை என்ற ஊருக்கு அழைத்துக்கொண்டு போகிறான்.
 
சாவித்திரியுடன் அவன் அந்த ஊருக்குப் போனாலும், அவனுக்கு சகுந்தலையின் ஞாபகமே வருகிறது. இதோ ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
 
….குன்றையே அணைப்பதுபோல், அந்த இடத்தில் ரயில் லாடமாய் ஒடிந்தது. எத்தனை நாள் இந்த வளைவை நானும் சகுந்தலையும் நின்று வேடிக்கை பார்த்திருப்போம். ரயில் கடந்த சூட்டில் துண்டித்து விழுந்து கிடக்கும் பாம்பின் துடிப்புப் போல், தண்டவாளத்துக்கு மூச்சு இறைப்பதுபோல் எங்களுக்கு ஒரு ப்ரமை….
 
என்ன அந்நியாயம் பக்கத்தில் மனைவி இருக்கும்போது பால்ய காலத்தில் பழகிய சகுந்தலையை ஞாபகம் வைத்துக்கொண்டு வருகிறார். அவர் கரடிமலையை விட்டுப் பிரியும்போது, வயது முதிராத ஒரு ஆணும் பெண்ணும் பேசுகிற பேச் இருந்தாலும், வெளிப்படுத்த முடியாத காதல் அதில் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
சகுந்தலையைப் பார்த்து கோயில் மலை அடிவாரத்தில் நின்றிருக்கும்போது, அவன் ஒரு கேள்வியைக் கேட்கிறான் :
 
“சக்கு, நீ என்னோடு வந்துடறையா?”
 
இந்தக் கேள்வியில் எல்லாமே முடிந்து விடுகிறது. அந்த இடத்தைவிட்டுப் போகிற நிர்ப்பந்தம், பின் ஒரு சத்திரத்தில் அனாதையாகக் கிடந்தவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம், அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த சாவித்திரி. லாசரா இந்தக் கதையை விவரித்துக்கொண்டு போனாலும் சாவித்திரியிடம் காணததை சகுந்தலையிடம் என்ன கண்டார் என்ற கேள்வி மனதில் ஓடாமல் இல்லை.
 
ஆனால் இந்தக் கதையை அவர் எடுத்துக்கொண்டு போகும் விதம். அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலையைப் பார்க்கிறமாதிரி இக் கதையின் நாயகனுக்குத் தெரிகிறது. சக்குவா அபிதாவா என்ற குழப்பம் ஏற்படுகிறது. சகுந்தலை யாரை நினைத்துக்கொண்டு அழுதகொண்டு இருக்கிறாள். அவள் மரணம் ஏன் இப்படி கோயிலில் உள்ள சிவலிங்கத்தை அணைத்தபடி நடக்கிறது. இப்படிப் பல புதிர்கள் இந்த நாவலில்.
 
அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலாவைப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டு, அவர் உடலெல்லாம் துடியாய் துடிக்கிறது. ஆனால் இது தகாத உறவாகும் என்றும் தோன்றுகிறது. இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு நபக்கோவின் லோலிதா என்ற நாவல் ஞாபகம் வருகிறது.
 
ஒரு இடத்தில்
 
‘நீ என்னைக் கைவிட்ட கதையை, நானே உன்னிடம் சொல்லத்தான், அபிதாவாய்த் திரும்பி வந்திருக்கிறேன். என்னைக் கொன்னாச்சு. அவளை என்ன செய்யப் போகிறாய்? என்னைப் பழி வாங்கிக்கத்தான் நான் அபிதா.ýý என்று வருகிறது. இது விபரீத உணர்வு நிலையும் நம்ப முடியாத கற்பனையாகத் தோன்றுகிறது. ஆனால் எப்போதும் அபிதாவைப் பார்க்கும்போது காம உணர்வோடுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நாவலின் முடிவுதான் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மரணம் ஒரு தீர்வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. நிறைவு செய்ய முடியாத கற்பனை என்று சொல்லலாமா?
 
 
அபிதா – லாசரா – நாவல் – பக்கங்கள் : 104 – வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர் மேற்கு, சென்னை 78 – விலை: 80 – தொலைபேசி எண் : 044 65157525