Author: virutcham
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்
யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்..
ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று பார்த்து வாங்கி வந்து விடுவார். தீபாவளி மலர்களையும் அப்படி வாங்கிப் படித்திருக்கிறார்.
இந்தப் பேப்பர் கடைகளில் பழையப் புத்தகங்களும் கிடைக்கும். ஐராவதம் இதுமாதிரி பேப்பர் கடைகளில் வீசி எறியப்படும் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார். எனக்கும் அவர் மாதிரி ஒரு பித்து. பேப்பர் கடைகளில் என்ன புத்தகம் கண்ணில் படுகிறது என்று பார்ப்பேன்.
பேப்பர் கடைகளில் புத்தகங்களை விலைக்குப் போடுபவர்களை நான் உயர்வாகவே நினைக்க மாட்டேன். ஏன்என்றால் ஒரு பேப்பர் கடையில் புத்தகங்களை விலைக்குப் போட்டால் ஒரு கிலோவிற்கு ரூ8 தான் பணம் கிடைக்கும். ஆனால் ஒரு கிலோ புத்தகம் என்பது நாலைந்து புத்தகங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். என்னைப் போன்றவர்கள் திரும்பவும் அந்தப் புத்தகங்களை வாங்கச் சென்றால், பேப்பர் கடைக்காரர் ஒரு கிலோவிற்கு ரூ.100 என்று கொடுப்பார்கள். அல்லது புத்தகத்தின் பாதி விலையைக் கேட்பார்கள். இப்படி அந்நியாயக் கொள்ளை இந்தப் பேப்பர் கடைகளில் நடக்கின்றன. புத்தகம் வைத்திருப்பவர்கள் இப்படி புத்தகங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றுதான் பேப்பர் கடைகளில் புத்தகங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம். அவர்களிடம் புத்தகம் இருக்க வேண்டாமென்று நினைத்தால் ஏதாவது நூல் நிலையத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம். அல்லது யாராவது உங்கள் நண்பர்கள் புத்தகங்களைப் படிக்கும் புழுக்களாக இருந்தால், அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு புத்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியே தரமாட்டார்கள். நீங்களும் மறந்து விடுவீர்கள். பெரும்பாலான நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஏன் நீங்களும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.
இன்று காலை கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு பேப்பர் கடைக்குச் சென்றேன். அங்கு அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். அதில் ஒரு புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் : கெட்டவன் கேட்டது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டது நான்தான். என் புத்தகமே எப்படி பேப்பர் கடைக்கு வந்தது என்ற திகைப்பு. மேலும் அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுதியவர் சாட்சாத் ஐராவதம் அவர்கள். 19 சிறுகதைகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ.130 தான். வெளியான ஆண்டு 2012. யார் இதை பேப்பர் கடையில் போட்டிருப்பார்கள். இலவசமாக நான் யாரிடமாவது படிக்கக் கொடுத்தப் புத்தகமா அல்லது என்னிடம் விலைக்கு வாங்கிய புத்தகமா? அந்த நபர் யார் யார் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஐரனி என்னவென்றால் பேப்பர் கடையில் பழையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஐராவதத்தின் புத்தகமும் பேப்பர் கடையில் இருப்பதுதான்.
கநாசு அப்படித்தான் அவர் வெளியிட்ட ஒரு நாவல் புத்தகம் விற்பனை ஆகாமல் இருந்ததாம். மாமனார் வீட்டு பரண் மீது இருந்ததாம். அந்தப் புத்தகக் கட்டுகளை பழைய பேப்பர் கடையில் போட்டுவிட்டாராம் க நா சு. இது உண்மையான தகவலா? எழுத்து பழைய இதழ்களை சி சு செல்லப்பாவும், அவர் புதல்வர் மணியும் பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார்களாம்.
இதைப் படிப்பவருக்கு நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பேப்பர் கடையில் கிலோ எட்டு ரூபாய் என்று நூற்றுக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் புத்தகங்கûள் போட்டு விடாதீர்கள். தயவுசெய்து உங்கள் ஏரியாவில் இருக்கும் லைப்ரரிக்குப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்.
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 56
அழகியசிங்கர்
அவதார ஆசை
திலகபாமா
மலராய் இருந்திருந்தேன்
மகரந்தத்துள் உனைத் திணிக்கப் பார்க்கின்றாய்
தென்றலாய் இருந்திருந்தேன்
என்னில் சுகம் கண்டு
உனதென்று எனை உன்
சுவாசமாய் உள்ளிழுக்கப் பார்க்கின்றாய்
தீங்கனியாய் இருந்திருந்தேன்
தோலுரித்து விதையெடுத்து
மண்ணில் புதைக்க நினைக்கின்றாய்
சங்கீதமென்றிருந்தேன்
தாளங்களுக்குள் சிக்கவென்று
தொடைதட்டிப் பார்க்கின்றாய்
நெருஞ்சிமுள்ளாய்
அவதார மெடுக்க ஆசை
எனை நானாய் இருக்க
விட்டு விடுவாயென்பதாலும்
மிதிப்பவர்கள் சதை மீறி
குத்திவிடலாமென்பதாலும்
நன்றி : சூரியாள் – கவிதைகள் – திலகபாமா – வெளியீடு : மதி நிலையம் – விலை : ரூ.35 – வெளிவந்த ஆண்டு : 2002
கதா மஞ்சரி கதை -2
உனக்காக ஒளித்து வைத்தேன்
ஒரு செல்வன், தன் தந்தைக்கு ஓட்டிலே கஞ்சி வார்த்துக்கொண்டு வந்தான். அவன் மகன் அதைப் பார்த்தான். ஒருநாள் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான். பிறகு அந்தச் செல்வன் தன் தந்தையைப் பார்த்து, ‘ஓடு எங்கே,’ என்று கேட்டு தந்தையை அடித்தான். அந்தப் பையன் அதைக் கண்டான்: “அப்பா என் பாட்டனை அடிக்காதே.. நானே அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்தேன். ஏன் என்றால், நான் பெரியவன் ஆன பிறகு உனக்கு வேற ஓடு சம்பாதிக்க மாட்டேன்,” என்றான். அதைக் கேட்டு அச் செல்வன், வெட்கப்பட்டான். மனம் திருந்தினான். அன்று முதல் தன் தந்தையை மிக அன்புடன் பேணி நலத்துடன் போற்றி வந்தான்.
பெண்கள் தினம்
அழகியசிங்கர்
இன்றைய தினம் பெண்கள் தினம். இந்தத் தினத்தை ஞாபகப்படுத்தும் விதமாக என் பாட்டியின் ஞாபகம் வந்தது. பாட்டியை வைத்து நான் எழுதிய ஜாடி என்ற கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
ஜாடி
பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
நிறத்தில் நீண்ட ஜாடியின் இடுப்பு
பொருத்தமாய் மாநிறத்தில் மூடி
உண்டு உண்டு கல்லூரி நாட்களில்
இரசாயனக்கூடத்தில்
குடுவைகளும் அமில ஜாடிகளும்
கண்டிப்பைக் காட்டும் பேராசிரியர் வழியில்
கிலியைத் தோற்றுவிக்கும்
உபயோகம் அவற்றுக்கு
மணமும் சுவையும் நிரம்பிய ஜாடி
பாட்டி பாதுகாத்த ஜாடி
காலம் காலமாய்
ஊறும் மாவடு வைத்திருக்கும் ஜாடி
சுருங்கியத் தோற்றத்தில் சுவைதரும் ஜாடி
நீண்ட சாதாரண ஜாடி
மலர்ச்செடி வைக்க முடியாத
பாட்டி வைத்திருக்கும் ஜாடி
மாவடு வைத்திருக்கும் தருணத்தில்
நிரம்பி வழியும் ஜாடி
பார்க்கும்போதே
சுவை ஊறும் விதம்விதமான தேர்ந்த மாவடுகள்
பழகிய மாவடுவின்
சுருங்கியத்தோற்றம்
பாட்டியின் ஊறுதியை ஞாபகமூட்டும்
கையில் தெரியும் மாவடுவின் கறை
பாட்டியின் கவனத்திற்குச் செல்லும்
கண்டிப்பு நிறைந்த அவள் குரலை
அலட்சியப்படுத்தி
ஊறும் முன்னே சுவைத்து மகிழ்வோம்
மாவடுவை ஜாடியில் எப்போதும் நிரப்ப
üபென்சன்ý பணம் பயன்படும்
ஆயிற்று
பாட்டிபோய் நான்கு ஆண்டுகள்
ஜாடியுமா?
எங்கள் கவனத்திலிருந்து தப்பி
பரண்மீது கிடக்கிறது
இடம் மாற்றம் செய்தபோது
காலி செய்தோம் பரணை
நினைவுச் சுவடுகளைப் பதித்த
எத்தனையோ பொருட்களில்
தூசிகளுடன் காட்சி தந்த ஜாடியுமொன்று
எடுத்தவுடன்
பழக்க தோஷத்துடன் கை ஜாடியுள் நுழைய
பழைய ஞாபகம்
மாவடு வாசனையில்
பாட்டியும் தென்பட்டாள்
மாவடு கலைந்ததுபோல்
நாட்களும் கரைந்து போயிற்று
எடுத்தவுடன்
எதைக் கேட்கிறது?
மாவடுவையா
பாட்டியையா
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 55
அழகியசிங்கர்
தவிர்த்த கவிதை
பா வெங்கடேசன்
மன்னிக்கவும் நண்பரே நான்
தவறுதலாக எதையும்
பேசிவிடவில்லை.
அந்த அறையின் உத்திரங்களுடன்
உரையாட முடியுமானால்
உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
நீங்கள் கவிதை எழுதுபவரா,
எனக்குத் தெரியாது.
அங்கே உலவ விட்டிருந்த கவிதை
உங்களுடையதுதானா,
அதுவும் எனக்குத் தெரியாது.
அங்கே ஒரு கவிதை இருந்தது.
அதைச் சுற்றிச் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
நானும் அவர்களுடனிருந்தேன்.
எல்லோருக்கும் அது
செல்லமாய் இருந்தது.
எல்லோரும் அதைத் தன்னிடமே
வருமாறு அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
யாரிடம் செல்வதெனத் தெரியாமல்
அது விழித்துக்கொண்டிருந்தபோது
குழப்பத்தைக் குறைக்குமென்று
நம்பி மட்டுமே நான் அதனிடம்
என்னை வேண்டுமானால்
கழித்துக்கொள்ளேனென்று சொல்லிவைத்தேன்.
ஆனால் நண்பரே
நிச்சயமாக எனக்குத் தெரியும்
அங்கே ஒரு கவிதை
இருந்ததென்று.
மேலும் நண்பரே
அதை நான் தவிர்த்த கணத்தில்
அங்கே இருந்திராத உங்களை
நிச்சயம் அது
நானாக உணர்ந்திருக்கும்.
(நரனுக்கு)
நன்றி : நீளா – கவிதைகள் – பா வெங்கடேசன் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 – வெளியீடு : காலச்சுவடு பப்பளிகேஷன்ஸ் (பி) லிட் – 669 கே பி சாலை, நாகர்கோவில் – 629001 – விலை : 70 – 04652 – 278525
பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து
சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும். அட்டைப் போயிருக்கும். விபரம் போயிருக்கும். எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது. உடனே வாங்கிக்கொண்டேன். முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன. இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது. வாழ்க இவ்வையகம்.
1) கழுதையின் குரல்
ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான். அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன். அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல். மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான். அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள். இவன் பாட்டை நிறுத்தினான். அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள். இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது. அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: “நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்,” என்று வினவினான். அதற்கு அவள்,”ஐயா…தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள் செத்துப்போன என்னிடம் இருந்த ஒரேஒரு கழுதையினுடைய நினைப்பு வருகின்றது. அதனால் அழுகின்றேன்,” என்று சொல்லி அழுதாள். இசைப்புலவன் வெட்கமுற்றான். அரசனைப் பார்க்காமலேயே தன் ஊருக்குப் போய்விட்டான்.
அதனால் தன் குற்றம் தெரியாமல் நடக்கிற அறிவற்றோன் எவனும், உலகில் நன்மதிப்பு இழப்பான்.
திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை…
திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை…
அழகியசிங்கர்
துருபத மன்னனின் பெண் கிருஷ்ணயை என்கிற திரௌபதி. எந்தத் தகப்பனும் தன் பெண்ணை ஐந்து பேர்களுக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டான்.
முதலில் யுதிஷ்டிரர், “அரசே..எனக்கு இன்னும் திருமனம் நடைபெறவில்லை. எனவே நான்தான் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு நிங்கள் அனுமதி தர வேண்டும்,” என்று கூறுகிறார்.
துருபதன் அர்ச்சுனனுக்குத்தான் தன்பெண்ணை மணம் முடிக்க நினைக்கிறார். யுதிஷ்டிரர் சொன்னதைக் கேட்டு, துருபதன் சொல்கிறான் : “வீரரே என் பெண்ணை நீர் மணந்து கொண்டாலும் எனக்குச் சம்மதமே அல்லது யாருக்குச் செய்து கொடுக்க விருப்பமோ அவருக்குத் திருமணம் செய்து கொடும்,”என்கிறான்.
இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் சொல்கிறார் : “அரசே.. நாங்கள் ஐவரும் திரௌபதியை மணந்துகொள்ள விரும்புகின்றோம்; இதனை என் தாய் முன்னமேயே கூறியுள்ளாள். கிடைத்ததை ஒன்று சேர்ந்து அனுபவிப்பதென்பது எங்கள் உடன்பாடு; எனவே அர்ச்சுனனால் பந்தயத்தில் வெற்றி கொள்ளப்பட்ட உம் புதல்வியைத் தர்மப்படியே ஐவரும் மணந்து கொள்கிறோம். நீங்கள் அனுமதி ககாடுங்கள்,” என்றார்.
இந்த வார்த்தையைக் கேட்டு துருபத மன்னன் திடுக்கிட்டான்யுதிஷ்டிரரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் : “அரசே ஒருவனுக்கு பல மனைவிகள் இருப்பது சாஸ்திரத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் ஒருத்திக்குப் பல புருஷர்கள் இருப்பது உலக வழக்கில் இல்லை. வேத சாஸ்திரங்களும் இதனை அங்கீகரிக்கவில்லை. யுதிஷ்டிரரே. நீர் தர்மம் தெரிந்தவர்; பரிசுத்தமானவர், நீரே தருமத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்; இப்படிப்பட்ட எண்ணம் உமக்கு எப்படி உண்டானது?” என்ற கோபத்துடனும், வருத்தத்துடனும் கேட்டார்.
இந்த இடத்தில் வியாசர் வந்திருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக மகாபாரதம் சொல்கிறது. என்னுடைய கேள்வி. திரௌபதி இதற்கு என்ன கருத்து வைத்திருந்தாள். ஐவரையும் திருமணம் செய்துகொள்ள ஏன் உடன்பட்டாள். அவளுக்கு இதற்கு உடன்பாடு உண்டா? அவளுக்கு வேறு வழி இல்லையா? மகாபாரத்தத்தில் இந்தப் பகுதி மௌனமாக போய்விடுகிறது. ஏன்?
எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?
அழகியசிங்கர்
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்கள். இதைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். என்னை யார் திட்டுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்பீர்கள். உண்மைதான். என்னை யார் திட்டப் போகிறார்கள்? திட்டுவதற்குக் காரணம்தான் என்ன இருக்கிறது. ஆனால் நீங்கள் திட்டுதல் என்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? என் முகத்துக்கு நேரே கண்டபடி பேசி திட்டுவதாக நினைக்காதீர்கள். யாருக்கும் என்டமிருந்து எந்தப் புகாரும் இல்லை. பின் திட்டு என்றால் என்ன?
திட்டு என்பது ஒரு பாவனை. அதை எல்லாரிடமும் எல்லா நேரத்திலும் நமக்குக் கிடைக்காமல் போகாது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது. உண்மையில் திட்டுபவர்களுக்கு நாம் பிறரைத் திட்டுகிறோம் என்பது தெரிவதே இல்லை. ஏன் நான் கூட என்னை அறியாமல் யாரையாவது திட்டியிருப்பேன்.
காலையில் எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்னால் அமருகிறேன் என்று வைத்தக்கொள்ளுங்கள். என் திட்டு உடனே ஆரம்பமாகிவிடும். ‘காலையிலே எழுந்தவுடனே கம்ப்யூட்டரா?’ என்று மனைவி ஆரம்பிப்பாள் முதல் திட்டை.. ‘படுக்கையை மடித்து வைக்கவில்லையா’ என்று இரண்டாவது திட்டுக்கும் போய்விடுவாள். நான் பதில் சொல்ல மாட்டேன்.
என் வீட்டு பால்கனியில் எப்போதும் காலை வேளையில் காக்கைகள் அமர்ந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கும். தாங்க முடியாது சத்தம். நான் கிட்டே போய், ‘யே காக்கையே கத்தாதே,’ என்பேன். உண்மையில் அது என்னை, என் குடும்பத்தைத் திட்டுகிறது என்றுதான் நினைத்துக்கொள்வேன். இதெல்லாம் திட்டா என்று நீங்கள் கேலியாகப் பார்ப்பது எனக்குத் தெரிகிறது. அப்படிப் பார்ப்பதுகூட திட்டுதான். இன்னும் உதாரணம் சொல்கிறேன். போன மாதம் 28ஆம்தேதி டாக் சென்டரில் ஒரு கூட்டம் நடந்தது. உங்களுக்குத் தெரியுமா? ஒன்றுமில்லை அந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை நடக்கும். இந்த முறையும் அதுமாதிரி நடந்தது. தமிழ்மகன் என்ற எழுத்தாளரின் நாவல் பற்றிய கூட்டம் அது. தமிழ்மகன் அதிகமாக நாவல்கள் எழுதி உள்ளார். ‘மானுடப் பண்ணை’ என்ற நாவலைப் பற்றி அன்று பேச்சு.
சரியாக 6 மணிக்கு டாக் சென்டருக்குச் சென்றேன். வழக்கம்போல் தட்டில் சுடச்சுட கிச்சடி, ஒரு போன்டா வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன். என் தட்டில் ஒரு போன்டாதான் போட்டார்கள். என் அருகில் எனக்குத் தெரிந்த நண்பர் இருந்தார். அவர் தட்டில் 2 போன்டாக்கள் இருந்தன. அவர் கேட்டார். அதாவது திட்டினார். “என்ன சரியான நேரத்திற்கு வந்திருக்கீங்க போலிருக்கு,” என்றார். உங்களுக்கு இந்தத் திட்டு என்னவென்று புரியுதா? கூட்டத்திற்கு வருவதுபோல் கிச்சடி சாப்பிட வந்திருக்கிறேன் என்ற அர்த்தம். இப்படித்தான் நம்மிடம் சிலரும், நாமும் சிலரிடமும் பேசிவிடுகிறோம்.
டாக் சென்டருக்குப் போகும் முன் வழக்கம் போல் அன்றைய திட்டுக்கள் ஆரம்பமாகாமல் இல்லை. முன்னதாக நான் கார் எடுத்துக்கொண்டு என் பெண் வீட்டிற்குச் சென்றேன். என் கூட காரில் என் மனைவியும் வந்தாள். அவளுக்கு நான் காரை எடுத்துக்கொண்டு போவது அவ்வளவாய் விருப்பம் இருப்பதில்லை. வண்டியில் உட்கார்ந்தவுடன், பெல்ட் போடுங்கள் என்று திட்ட ஆரம்பித்தாள். உண்மையில் என்னுடன் காரும் திட்டு வாங்குவதாகத்தான் நான் நினைத்துக்கொண்டேன்.
பெண் வீட்டிலிருந்து கிளம்பி திரும்பி வீடு வந்தேன். பெண் கேட்டாள். “ஏன் சீக்கிரம் போக வேண்டுமென்று நினைக்கிறே?” இதுவும் திட்டு. காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது மனைவி இன்டிக்கேட்டர் போடும்படி அடிக்கடி திட்டு. காருக்கும் சேர்த்து.
இதெல்லாம் பரவாயில்லை. வண்டியின் பின்னாலும் முன்னாலும் வருகிற டூ வீலர்கள் எல்லாம், ஆட்டோக்காரர்கள் எல்லாம், காரில் செல்பவர்கள் எல்லாம், ‘வண்டியை ஒழுங்காய் ஓட்டுய்யா’ என்று திட்டாமல் இருப்பதில்லை. என் முன்னாலும் பின்னாலும் வருபவர்கள்தான் ஒழுங்காக வண்டிகளை ஓட்டுவதில்லை. ஆனால் நான் வண்டியை ஒழுங்காகத்தான் ஓட்டுகிறேன். ஆனால் திட்டு எனக்குத்தான். ஆர்யகவுடர் ரோடு வழியாக நீங்கள் மாலை நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ஏன் நடந்துகூட சென்றால் போதும், யாரிடமும் திட்டு வாங்காமல் தப்ப முடியாது. அதேபோல் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் நீங்கள் மிளகாய் பஜ்ஜி வாங்க நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பஜ்ஜியைக் கட்டிக் கொடுப்பவர், உங்களையே பார்க்க மாட்டார். உங்களை மௌன மொழியில் திட்டுகிறார் என்று அர்த்தம். இப்படி தினமும் ஒரு பத்து திட்டாவது வாங்காமல் இருப்பதில்லை.

