எதையாவது சொல்லட்டுமா……….60

1988 ல் நவீன விருட்சம் ஆரம்பித்தபோது, இலக்கியச் சந்திப்புகளை நடத்த வேண்டுமென்று என்ற எண்ணத்தைத் தூண்டியவர் க.நா.சு.  அதைச் செயல்படுத்தத் தூண்டியவர் லைன் சீனிவாசன்.  அவர் Pnb யில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஷபினா என்ற க்ளீனிங் பவுடருக்கு இணையாக Coin என்ற பவுடரை ஆரம்பித்தார்.  அந்தப் பவுடருக்கு விளம்பரம் வேண்டியிருந்தது.  அதை Hindu பேப்பரில் Engagement ல் விளம்பரம் கொடுக்க ஒரு காரணம் வேண்டியிருந்தது.  அதுதான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வித்திட்டது.  கூட்டம் நடத்த வேண்டிய இடத்திற்கு வாடகை, பின் விளம்பரம் என்று கொடுத்துவிடுவார்.  நான்தான் கூட்டம் ஏற்பாடு பண்ண வேண்டும்.  விருட்சம் இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டுமென்று நினைத்தபோது, க.நா.சு இல்லை.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் க.நா.சுவைப் பார்த்தபோது, எனக்கு அவரை மட்டும் வைத்துக்கொண்டு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.  ஆனால் கூட்டம் எப்படி நடத்த வேண்டுமென்பது தெரியாது.  க.நா.சு எந்தத் தலைப்பிலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் பேசக் கூடிய வல்லவர்.  அவர் இலக்கியத்தைப் பற்றி பேசுவதும், எழுதுவதும்தான் அவருடைய வாழ்க்கை.  எந்தப் புத்தகத்தையும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லி விடுவார். 
நான் கூட்டம் நடத்தியபோது, க.நா.சு இல்லை.  காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு முதல் கூட்டம் நடத்தினேன்.  கூட்டம் நடத்தும்போது பரபரப்பாக இருப்பேன்.  முதலில் கூட்டத்தை ஆரம்பித்து எப்படிப் பேச வேண்டுமென்பதே எனக்குத் தெரியாது.  என் மூத்த இலக்கிய நண்பர்களைப் பார்த்தால் அவர்களை வைத்து கூட்டத்தை நடத்தி விடுவேன்.  பெரும்பாலும் ஞானக்கூத்தனை கேட்டுக்கொள்வேன்.  அவரும் கூட்டத்தை ஆரம்பித்து விடுவார்.  பின் கூட்டம் முடிக்கும்போது எல்லோருக்கும் நன்றி என்று ஒத்தை வரியில் சொல்லி முடித்துவிடுவேன். 
பின் நானே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கிறேன்.  ‘நம் முன்னால் யாரும் உட்கார்ந்து இருக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பேசவேண்டும்,’ என்பார் நண்பர். ஒவ்வொரு கூட்டம் நடக்கும்போது எனக்குள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டு போகும்.  இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.  கூட்டத்தில் பங்குகொண்டு பேச வருபவர்களுக்கு நான் வண்டிச் செலவெல்லாம் கொடுப்பதே இல்லை.  பேச வருபவர்கள் அவர்களே செலவு செய்துகொண்டு வருவார்கள்.  விருட்சம் என்ற பத்திரிகைக்குக் கொடுக்கும் மரியாதையாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஒருமுறை நான் கூட்டத்தை ஆரம்பித்து விடுவேன்.  பின் நான் மாம்பலத்திலிருந்து டூ வீலரில் வருவதற்குள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு விடும்.
இந்துவில் சில கூட்டங்கள் நடத்துவதற்குத்தான் நண்பர் உதவி செய்தார்.  பின் அவர் கண்டுகொள்ளவில்லை.  எனக்கோ கூட்டத்தை ஆரம்பித்து விட்டோ மே ஒவ்வொரு மாதமும் நடத்தித் தீர வேண்டுமென்ற வைராக்கியம்.  திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பெண்கள் விடுதி மாடியில் கூட்டம் ஆரம்பிக்கும். அதற்கு வாடகை அப்போது ரூ.50.  போஸ்ட் கார்டில் கூட்டம் பற்றி எல்லோருக்கும் கடிதம் அனுப்புவேன்.  அதற்கு ரூ25.  மொத்த இலக்கியக் கூட்டத்தையும் ரூ100க்குள் முடித்துவிடுவேன்.
இப்படி பல ஆண்டுகள் நான் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  சிலசமயம் சில கூட்டங்களால் ஏற்படும் பரபரப்பு அடுத்தநாள் வரைக்கும் என்னை விட்டுப் போகாது.  அப்போது பிரமிள் இருந்தார்.  அவர் ஒரு கடிதம் எழுதினார்.  It is dangerous.  Don’t do it என்று.  ஏன் அப்படி சொன்னார் என்பதை இப்போது கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆனால் க.நா.சு கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார். இந்த இலக்கியக் கூட்டங்கள் மூலம் பல நண்பர்களைப் பார்க்க முடிந்தது.  என்னதான் இதுமாதிரி இலக்கியக் கூட்டம் நடத்தினாலும், அதெல்லாம் தனிப்பட்ட ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுடன்தான் நடத்த முடியும். 
மேலும் இதுமாதிரி இலக்கியக் கூட்டங்களுக்கு பெண்கள் வரவே மாட்டார்கள்.  வருபவர்கள் எல்லோரும் 45வயதிற்கு மேல்.  பெரும்பாலும் எழுத்தாளர்களே இருப்பார்கள்.  பார்வையாளர்களும் எழுத வேண்டுமென்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.  இந்து நாளிதழைப் பார்த்துவிட்டு இதுமாதிரி கூட்டத்திற்கு வரும் சிலர் அடுத்தக் கூட்ட அழைப்பிதழைப் பார்த்துவிட்டு ஓட்டமாய் ஓடி விடுவார்கள். மேலும் இலக்கியக் கூட்டங்களில் பல பிரிவுகள் உண்டு.  நா முத்துசாமி கூட்டம் நடத்துகிறேன் என்றால், கூத்துப் பட்டறையைச் சேர்ந்த பலர் கூட்டத்திற்கு வந்திருந்து கூட்டம் அதிகமாகக் காட்டும்.  வேறுசிலர் கூட்டத்தற்கு பத்து பதினைந்து பேர்கள் கூட வரமாட்டார்கள்.  எனக்குக் கூட்டம் அதிகமாக இருந்தாலும் பதட்டமாக இருக்கும்.  கூட்டமே இல்லை என்றாலும் பதட்டமாக இருக்கும்.
கூட்டத்திற்கு பார்வையாளர்கள்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருப்பார்கள்.  ஒரு கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொன்னவர்கள் யாரும் வராமல் போய்விட்டார்கள்.  அன்று முழுவதும் எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை.  ‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதிக்குத்தான் அப்படி யாரும் வராமல் போய்விட்டார்கள்.  நான் இலக்கியக் கூட்டம்தான் நடத்த வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் இலக்கியக் கூட்டத்திற்குள்ளும் அரசியல் நடக்கிறது என்பது எனக்கு மெதுவாகத்தான் புரிந்தது.  ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. நான் பெண்கள் விடுதியில் கூட்டம் போடுவதை நிறுத்திவிட்டு, பொது நூலகக் சின்ன கட்டிடத்தில் கூட்டம் நடத்தினேன். அங்கேயும் சில பிரச்சினைகள்.  முன்னதாக பதிவு செய்ய ஒரு முறை போகவேண்டும்.  பின் போலீஸ் ஸ்டேஷன் போய் அனுமதி கேட்க வேண்டும்.  போலீஸ் ஸ்டேஷனில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டும். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. பின் கூட்டம் நடத்த சரியான இடம் ரயில்வே ஸ்டேஷன் என்று அங்கும் கூட்டம் நடத்திப் பார்த்தேன். 
சமீபத்தில் என் நண்பர் விஜய் மகேந்திரன் என்பவர் கூட்டம் நடத்துங்கள் என்றார்.  நான் சொன்னேன் கூட்டம் நடத்த இடம் வேண்டும் என்றேன்.  இலக்கியக் கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய நான் விரும்புவதில்லை.  இப்போதெல்லாம் ஒரு கூட்டத்திற்கு யாரும் வருவதுகூட சிரமமாக உள்ளது.  டிராபிக்.  இதற்குப் பயந்துகொண்டு நான் கூட யாரையும் சந்திக்க முடியாமல் இருக்கிறேன்.  ஆனால் கூட்டம் நடத்தத்தான் வேண்டும்.  அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும்.  கூட்டம் நடத்த கூட்டம் நடத்துபவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவர் இருந்தாலும் போதும்.  கூட்டம் ஆரம்பமாகிவிடும்.

“எதையாவது சொல்லட்டுமா……….60” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. எதிலும் இழப்பில்லை… அடைந்தது நிறைய இலக்கிய அனுபவங்கள்தான்…உங்களின் உள்ளார்ந்த இலக்கிய ஆர்வம் உன்னதமாய் புரிந்து கொள்ள இயல்கிறது.

sakthi உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன