சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார்
“கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..”
“இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “ இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் நனைந்த ரோஜா இதழ்களின் செளந்தர்யத்தில் தொலைய ஆரம்பித்தபோது தர்ஷிணியின் ஞாபகம் வந்தது.
—–o0o——
ஆழ் மனதின் வெடிப்பில் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு ஏதேதோ கனவுகளில் வசித்துக்கொண்டு மிகத்தீவரமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த போது முதுகலை படிப்பதற்கு சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. கல்லூரி விடுதியில் கிடைத்த நேரம் முழுவதும் கவிதைக்குள் மூழ்கிக்கிடந்தான். கேலியும் கிண்டலும் கலந்திருக்கும் கல்லூரி வாழ்வை தவிர்த்துவிட்டு எப்போதும் கவிதை நூல்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே விருப்பமுற்று கிடந்ததால் சக மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனாக அறியப்பட்டான். பேண்ட் சட்டை போட்ட புலவன் வருகிறான் என்கிற பரிகாசத்தின் நடுவிலும் கவிதையும் அவளும் மட்டுமே வாழ்க்கை மீதான நம்பிக்கையை அர்த்தப்படுத்திபடி இருந்தார்கள். அவள் தர்ஷிணி. வகுப்புத்தோழி. ஒவ்வொரு கவிதையின் பிரசவத்தின் போதும் குழந்தையாக மாறி குதூகலத்துடன் கவிதைகளின் கரம் பிடித்து நடப்பவள்.
கவிதை என்றால் காததூரம் ஓடும் நண்பர்கள் கூட காதல்கடிதமெழுத இவன் அறைக்கு வரும்போதெல்லாம் மனதெங்கும் உற்சாகமும் பெருமையும் ஒன்றுசேர்ந்து ஆனந்த தாண்டவமாடும். யாரோ ஒருத்திக்கென எழுதப்படும் காதல்கடிதங்களாக இருப்பினும் எழுதும்போதே தனக்குள் இழுத்துக்கொள்ளும் கவிதைக்காதலியின் மடியில் முகம்புதைப்பது பேரானந்த அனுபவமாக தோன்றும்.
நண்பர்களுக்காக எழுதுகின்ற காதல்கடிதங்களையும் அதை எழுதுகின்றபோது அருகில் பயபக்தியுடன் காத்திருக்கும் நண்பர்களின் முகபாவங்களை பற்றியும் தர்ஷிணி ரசித்துக் கேட்பாள். தனக்கு வந்த காதல் கடிதங்கள் எதுவும் இதைப்போலில்லை என்றும் எழுத்துப்பிழைகள் தாங்கி வருகின்ற அபத்தக் கடிதங்களே அதிகம் என்றும் அவள் சொல்லும்போது சிரித்துக்கொள்வான். தர்ஷிணி போன்ற எட்டாவது அதிசயங்களுக்கெல்லாம் கடிதமெதற்கு? கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா? காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி காத்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா? இந்தக் கேள்விகளையெல்லாம் தர்ஷிணியிடம் இவன் சொன்னபோது “ உனக்கு முத்திப்போச்சு ரொம்ப அதிகமா யோசிக்கிறடா” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
—–o0o——
சில நூறு கவிதைகள் சேர்ந்தவுடன் தர்ஷிணிதான் முதலில் அந்த யோசனையை இவனிடம் பகிர்ந்தாள். வகுப்புக்கு வெளியே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி “நீ ஏன் ஒரு கவிதை புத்தகம் வெளியிடக்கூடாது?” அவள் கேட்டபோது மனதெங்கும் பரவசநிலை படர்வது போலிருந்தது. அந்தக் கேள்வியே இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. சட்டென்று மலர்ந்த மொட்டுபோல் உடன் மலர்ந்து புன்னகைத்தான்.
“என் கவிதைகளை யாரு வெளியிடுவா?”
“நீ ட்ரை பண்ணி பாரேன் டா. கண்டிப்பா வெளியிடுவாங்க” அவள் நம்பிக்கையை கலைக்க விரும்பாமல் சரியென்று தலையாட்டிவிட்டு விடுதிக்கு வந்து மொட்டை மாடியில் வானம் பார்த்து கிடந்தான். நட்சத்திரங்களின் காதுகளில் கவிதை நூலை தான் வெளியிடப்போகும் செய்தியை சொன்னபோது இவனுடல் சிலிர்த்தடங்கியது. சத்தமிட்டு கத்தவேண்டும் போலிருந்தது.பொங்கி வழிகின்ற சந்தோஷத்துடன் அறைக்கு திரும்பியவன் எழுதியதில் சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினான். பின்னிரவில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்த நிம்மதியில் கவிதை நோட்டை நெஞ்சில் கவிழ்த்தபடி உறங்கிப் போனான்.
—–o0o——
தொலைபேசி அழைப்பிலிருந்து மீண்டவர் இவனது கவிதை நோட்டை புரட்டினார்.நான்கு நிமிட இடைவெளியில் கவிதை நோட்டிலிருந்து நிமிர்ந்தவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்தவனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் அறுந்து விழுந்தது. உதடு பிதுக்கலுடன் கவிதை நோட்டை திருப்பித் தந்தவர் கேட்டு கேட்டுப் புளித்துப்போன அதே வார்த்தைகளை உச்சரித்தார்
“யாரு தம்பி கவிதை புக் வாங்குறா.. ஐம்பது பிரதி வித்தாலே பெரிய விசயம்..ஏதாவது நாவல் கீவல் இருந்தா கொண்டாப்பா” இவனது பதிலை எதிர்பாராமல் மீண்டும் தொலைபேச ஆரம்பித்துவிட்டார்.
வலித்தது.சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது.முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நியோன் விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த அத்தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். நான்கு நிமிடத்தில் எப்படி நாற்பது பக்க கவிதைகளை இவர் வாசித்திருக்க முடியும்? கொடும் இரவுகளில் கசிகின்ற மெளனத்தின் துணையுடன் தானெழுதிய உயிர்க்கவிதைகள் நான்கு நிமிடத்தில் மறுதலிக்கப்பட்டது தீயென சுட்டது. பச்சை நிற குப்பைத்தொட்டியொன்றின் அருகில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேகமாக வீடு திரும்பினான்.
—–o0o——
தர்ஷிணி எம்.எஸ் படிப்பதற்கு அமெரிக்கா போய் விட்டிருந்தாள். வேலை தேடுதல் ஒன்றே இலக்காக இவன் திரிந்தபோதும் எந்தவொரு வேலையும் கிடைத்துவிடவில்லை. வேலையின்மையின் வலியிலும் நண்பர்களற்ற தனிமையிலும் கவிதை மட்டுமே வலிமிகுந்த பொழுதுகளில் உடனிருந்தது.
துயரத்தின் கரங்கள் இவனை இறுக்கிய ஓர் இரவில் உக்கிரத்துடன் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. அறைக்குள் நுழைந்த அப்பா இவன் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார் “எப்ப பாரு கவிதை கிறுக்கிட்டு கிடக்கானே உம் பையன் இத வெச்சு நாக்கு வழிக்க கூட முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லுடி. ஒரு வேலை வாங்க துப்பில்ல இவனெல்லாம் கவிதை எழுதி என்னத்த கிழிக்க போறான்?” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம்? ஏனிந்த அவலம்? கோபத்தில் எங்கு போவதென்று தெரியவில்லை. வீட்டிற்கு அருகிலிருந்த தியேட்டருக்குள் நுழைய எத்தனித்தபோது அலைபேசி சிணுங்கியது. அமெரிக்காவிலிருந்து தர்ஷிணி அழைத்திருந்தாள். கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாய் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் விரைவில் வேலை கிடைத்துவிடுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். பேசிமுடிந்தவுடன் மனம் லேசாக ஆனது போலிருந்தது.என் நிரந்தர தோழிகள் கவிதையும்,தர்ஷிணியும் மட்டும்தானென்று முணுமுணுத்தன உதடுகள். வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். காலை அம்மா கதவை திறந்தபோது மேசை மீது தலைகவிழ்ந்த நிலையில் படுத்திருந்தான். மேசையில் கிடந்த கவிதைநோட்டின் தாள்கள் ஜன்னல் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. அருகில் சென்ற அம்மா கவிதை நோட்டில் சிகப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்தாள். தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள் என்றிருந்தது. இரத்தம் தோய்ந்த அவனது விரல்களை கண்டு அலற ஆரம்பித்தாள் அம்மா.-
Tag: நிலாரசிகன்.
வேறோர் உலகம்
1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன் நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.
2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.
பிரிதலின் நிறங்கள் – மூன்று கவிதை
1.
யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன் நெருங்குகிறானவன்.
2.
புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்ன்ல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.
3.
சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன் நான்.
இரண்டு கவிதைகள்
1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்கவிதைகளை துறந்துவிட்டுசில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.கற்பனைகள் தூர்ந்து,கனவுகள் தகர்ந்து,பாதாளத்தின் வாய்பிளந்துஎன்னை உள்ளிழுத்துக்கொண்டது.இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்தொலைந்த பேனாக்களைதேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல்மிகுந்த வெம்மையாயிருந்ததுஒரு சொல்.வெம்மையின் கதிர்கள் முதலில்நுழைந்தது செவியில்.செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்ததுவலியின் நீட்சியில்.இதயம் கருகி கண்ணீராய்வெளியேறுகையில்மறுசொல்லுக்காய் காத்திருக்கஆரம்பித்தது சுயம்
உயிரோவியம்..
ஓவியம் வரைந்துகொண்டிருந்த
அந்தக் கிழவனின்
கைகளில் சிறிதேனும்
நடுக்கத்திற்கான அறிகுறி
தென்படவில்லை.
புகை கக்கி இரைச்சலுடன்
செல்கின்ற வாகனத்தினாலும்
தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற
காக்கையினாலும் கலைத்துவிட
முடியவில்லை
ஓவியத்துள் கரைந்துவிட்ட
கிழமனதை.
பசித்தழும் குழந்தையின்
கண்ணீர்த்துளியில்
தெரிந்தது ஓவியத்தின்
நேர்த்தியும் கிழவனின்
ரசனையும்…
ஓவியத்தின் மீது
ஒற்றை ரூபாய் எறிகையில்
கரம் நடுங்கியதைக் கண்டு
அழுகை நிறுத்தி
ஏளனப் புன்னகை சிந்தியது
அக்குழந்தை.
தனலட்சுமி டாக்கீஸ்
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?
துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் “தனலட்சுமி டாக்கீஸ்” இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.
தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.
நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.
கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும்”எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்”
“ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு”
எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.
ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.
“என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல” டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.
“வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்” என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.
இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.
தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.
“எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்”
அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.
தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.
திருமண நாளும் வந்தது.
பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.
நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
பின் கதைக்குறிப்பு:
ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் “தனலட்சுமி டாக்கீஸ்”க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
(நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை navina.virutcham@gmail.com என்ற இணையத் தளத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கும் படைப்புகள் முதலில் நவீன விருட்சம் blog லும் பின் நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் ஆகும்)