மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சார்லஸ் போதலேர்

கேரளக் கன்னிக்கு
உன் பாதங்கள் உன் கைகளைப்போல்
மென்மையானவை.உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை.
நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும்போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்
மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடைபெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள்
பிரான்ஸை, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்கட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய். மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று
எங்கள் ஒழுக்கக் கேடுகளில்
உன் வயிறைக் கழுவ நேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்தோற்றங்களை
எப்படித் தேடுவாய்?

மூலம் : பிரேஞ்சு

ஆங்கில வழி தமிழில் : அமுதன்

(சார்லஸ் போதலேர் (1821/1867) ஃபிரெஞ்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக்கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. ஆனால், அவரைக் குற்றமற்றவர் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்).

நவீன விருட்சம் இதழ் – 4
1989 ஆண்டு

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஆற்றங்கரை வணிகனின் மனைவி

ஒரு கடிதம்

என் தலையிற் வகுடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே
வாசல் முற்றத்தில் பூ பறித்து நான் விளையாடியிருக்க
நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர்.
நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக்
கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர்.
நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம்.
இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி

பதிநாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன்
நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால்
தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன்
ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பி பார்க்கவில்லை
பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன்
என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன்
என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக
ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்?

பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள்
குமளி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக
தொலைவிலுள்ள கோடு யென்னுக்குச் சென்றீர்கள்
நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன
மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன.

நீங்கள் போகும்போது
மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள்
வாசலில் பாசி படர்ந்திருக்கிறது
பலவிதமான பாசிகள் அகற்ற முடியாத அடர்த்தியுடன்
இந்த இளவேனிலில் காற்றில் இலைகள் உதிர்கின்றன
இந்த ஆகஸ்டிலேயே வண்ணத்தி ஜோடிகள் மஞ்சளித்து விட்டன

மேற்கு தோட்டத்து புல் தரைகளில்
அவை எனக்கு வேதனை தருகின்றன
எனக்கு வயது ஆகிறது.
சியாங் நதியின் இடுக்கன் வழியாக நீங்கள் வருகிறீர்கள் என்றால்
முன்னமே தெரிவியுங்கள்
நான் பார்க்க வருகிறேன்

வி போ வின் சீனக் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : காசியபன்

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நார்மன் மேக்கே

கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமூகம், நோய் –

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மெளனமாக்க முடியவில்லை.

கல்லெறிபட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன்மீது படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீர் என

அவன்

தடுமாறுகிறான்.

தடைப்பட்டு நிற்கிறான்.

பக்கவாட்டில் சுழல்கிறான்

இதில் என்ன ஆச்சரியம்!….

மூலம் : ஆங்கிலம்
தமிழில் : கன்னி


(நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசின் தஙகப் பதக்கம் அளிக்கப்பட்டது. ராபர்ட்கிரேவ்ஸ், டபூள்யூ.எச். ஆடன், ஸீக்ஃபிரட ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பு பெற்றுள்ளார்கள்.)