மொழிப்பெயர்ப்புக் கவிதை

சமீபத்தில் மறைந்த இரு பெண் எழுத்தாளர்களான கிருத்திகாவிற்கும், சுகந்தி சுப்பிரமணியனுக்கும் நவீன விருட்சம் தன் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவர்கள் இருவர் நினைவாக ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தற்கொலை என்ற கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அளித்தவர் அஷ்டாவக்ரன். அவரும் இப்போது உயிரோடில்லை.

தற்கொலை

தனித்த ஒரு நட்சத்திரத்தைகூட விட்டுவைப்பதாயில்லை இரவில்
இந்தஇரவையும் விட்டு வைப்பதாயில்லை.
நான் மடிந்து விடுவேன், என்னுடன்
சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும்.
பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும்,
கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன்
நான் உண்டாக்குவேன் புழுதியை,வரலாற்றிலிருந்து, புழுதியிலிருந்து.
இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக்கடைசிப் பறவையை
நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது

(நவீன விருட்சம் 1989 / 3வது இதழ்)

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

7

பூனைகள்………

செல்வராஜ் ஜெகதீசன்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்

பூனைகள் கூட்டமாய் திரிதல்
பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

வசிக்கமிடம் பற்றியெதுவும்
வரையறைகள் பூனைகளுக்கில்லை.

தகிக்கும் சூழலில் தனித்து
தாழ்தள இடங்களில் நிற்கும்
கார்களுக்கிடையே வாழும்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை

நிலை குத்தும் பார்வை கொண்டு
நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

நேரெதிரே குதித்துக் கடக்கும்
நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

இருத்தல் இறத்தல் குறித்தெந்த
முகாந்திரமின்றி முடிந்து போகும்
பூனைகளின் எளிய வாழ்வு.

பூனைகள் பூனைகள் பூனைகள்

ஒரு பொருளை தயாரிப்பதுபோல, ஒரு தொழிலில் ஈடுபடுவதுபோல, கவிதையை உருவாக்க முடியுமா? கவிதை எழுதுவது தானாகவே வரவேண்டுமா? அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா? முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும்? எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா? அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா? ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா? கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா? அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா? இதுபோன்ற பல விஷயங்களை கவிதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டே இருக்கலாம்.

பின் எது நல்ல கவிதை? எது கவிதை இல்லை? இந்த ஆராய்ச்சிக்குப் போனால் கவிதை எழுதுபவர்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடும். கவிதை எழுதுபவதைவிட அதை ரசிக்க மனம் வேண்டும். சமீபத்தில் என் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு கவிதையை எடுத்துப் படித்துக் காட்டினேன். அடுத்த நிமிடம் அவர் என் பக்கத்திலேயே வந்து நிற்காமல் ஓடிவிட்டார். இது குறித்து யோசிக்கும்போது யார் கவிதையைக் கேட்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலோர் கவிதையை ரசிப்பதற்கு மனமில்லாமல் இருக்கிறார்கள். கவிதை எழுதுபவர்களுக்கு கவிதையை ரசித்துப் படிப்பதற்கு ஆளில்லாமல் போய்விட்டால் பெரிய துன்பமாக மாறிவிடும். பின் யாருக்காக எதற்கு எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஆனால் கவிதை ஒரு அற்புதமான விஷயம்.
முன்பெல்லாம் தினமும் மின்சார வண்டியில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து கடற்கரை ரயில்வே நிலையம் வரை செல்லும்போது எதாவது ஒரு கவிதையை எடுத்துப் படித்துக்கொண்டு போவேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குத் தோன்றும்.

ஒரு படைப்பாளியின் ஒரு கவிதைத் தொகுதியை நாம் எடுத்துப் படிக்கும்போது முழு புத்தகத்தை உடனே எடுத்துப் படிக்கக் கூடாது. கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும்தான் படிக்க வேண்டும். பின் படிப்பதற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டுப் படிக்க வேண்டும். ஒரு சிறுகதையை அப்படிப் படிக்கலாம். ஒரு நாவலை முழு மூச்சாகப் படிக்கலாம். ஆனால் கவிதை வாசிப்பதற்கு அவகாசம் தேவை. மேலும் ஒருவர் எழுதிய கவிதைகளையே முழுதாகப் படிக்காமல் வேறு வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் படிக்கலாம்.

ஆரம்ப நிலையில் கவிதை எழுத வேண்டுமென்று நினைப்பவர்கள். எல்லோருடைய கவிதைகளையும் ரசிக்கும் பயிற்சியை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். கவிதை எழுதுவதில் உள்ள நுணுக்கத்தையும், கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால், பூனையைப் பற்றி யாராவது கவிதை எழுத வேண்டுமென்று நினைத்தால் கவிதை உடனே எழுத வந்துவிடும். பூனை ஒரு ஆன்மிக மிருகம். எளிதில் பழகவும் பழகாது. அதனால்தான் பூனையைப் பற்றி யார் எழுதினாலும் எப்படியும் அது கவிதையாக மாறிவிடும். இந்த ஆச்சரியம் எனக்கு பல நாட்கள் உண்டு. அதனால்தான் பூனையைப் பற்றி ஒரு தொகுப்பு கொண்டு வரலாமென்றிருக்கிறேன்.

இதைப் படிப்பவர்கள் யாராவது பூனையைப் பற்றி கவிதை எழுதியிருந்தால் எனக்கு அனுப்புங்கள். அல்லது நீங்கள் பூனையைப் பற்றி கவிதை வாசித்தால் உடனே அனுப்புங்கள். நான் பூனையைப் பற்றி மொத்தமாக ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வரும் எண்ணத்தில் உள்ளேன். நீங்களும் உங்கள் பங்குக்கு உதவி செய்யுங்கள்.

6.
பூனைப் பெருமாட்டி

குவளைக்கண்ணன்

சிறுவயது முதலே
அவற்றுடன் விளையாட்டுத் தோழமை கொண்டிருந்தாலும்
இளமையின் இறுதியில்
மனச் சோர்வினால் ஏற்படுத்திக்கொண்ட
தனி ஒதுக்கத்தின்போது
அவரது வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தவை
துரத்தத் துரத்த மடியில் ஏறி அமரும்
அவரைக் கடக்கும் போதெல்லாம்
மென்மயிர் போர்த்திய உடலால் உரசிச் செல்லும்
உணவுண்ணும்போது அருகில் அமர்ந்திருக்கும்
துயர் மிகுந்து அழும்போது
முத்தமிட வருவதுபோலக் கிட்டே வரும்
காலையில் விழிக்கும்போது
கால்களின்மேல் மெத்தெனப் படுத்திருக்கும்
இவ்வாறெல்லாம் ஆரம்பித்தது
பூனைகளுடனான நெருக்கம்
அவற்றைக் கூர்ந்து கவனித்தவர்
தனி ஒதுக்கத்திலிருந்து மீண்டு
பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்
ஆக உயரங்களுக்குச் சென்றார்
அவரது திட்டமிடல் காத்திருப்பு பதுங்கல்
பாய்ச்சல் வேட்டை அலட்சியம்
இவை கண்ட மக்கள்
ஆயிரம் ஆண்களை அழித்து ஆண்டவன்
அவரைப் படைத்திருக்க வேண்டுமென்று பிரமித்தனர்
அடுத்து என்ன எனப் பயந்தனர் எதிரிகள்
அறிஞர்களுக்குப் புதிராக இருக்கும்
அவரது வெற்றியின் ரகசியம்
என்னவெனில்

(‘பிள்ளை விளையாட்டு’ என்ற தொகுப்பிலிருந்து எடுத்தது)

பூனைகள் பூனைகள் பூனைகள் – 5

பசுவய்யா

பூனைகள் பற்றி ஒரு குறிப்பு
பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை மூடிக்கொள்ளும்
மூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும்
மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போது
ம் ரகசியம் சுமந்து வளைய வரும் வெள்
ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்
கை கொண்டவை பெண் பூனைகள் குட்டி போ
டும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்
று அல்லது நான்கு அல்லது குட்டிகளுக்கு மி
யாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும்.
வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இ
ரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம்
வழியும் பூனைகள் குறுக்கே வராமலிருப்பது
அவற்றுக்கும் நமக்கும் நல்லது குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்
தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை போல் ஓட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள்
குறுக்கிட்டுத் தாண்டும் சிறிய
பூனைகள்தான்பெரிய பூனைகள் ஆகின்றன
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி
நாம்யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றனபிறப்பிறப்பிற்கிடையே..
(நன்றி : பசுவய்யா 107 கவிதைகள்)

பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனை 4

ஞானக்கூத்தன்

தடவிப் பார்த்து சார்லஸ் போதலேர்
அடடா என்றாராம் பூனையை.

பிரான்ஸ் நாட்டுப் பூனைகள்
இருக்கும் போலும் அப்படி என்பதற்குள்
எங்கும் பூனைகள் அப்படித் தானென்று
சொல்லக் கூடும் பூனை ரட்சகர்கள்.

நமது நாட்டுப் பூனைகள் குறித்து
போதலேருக்கோ ஹெயின்ரிஷ் ஹெயினுக்கோ
தெரிந்திருக்க நியாயமில்லை

நமது பூனைகள் தவம் செய்யும் என்றோ
முனிவன் இல்லாத நேரத்தில் இருளில்
குடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத்
தங்கள் வடிவை இரவில் தருமென்றோ.

முன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை
என்னிடம் தேடுவது போல் பார்க்கும்
பூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும்
புராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான்.

வெள்ளிக் கிரணங்களால்
புனைந்த தன் உடம்பை
இரும்புக் கம்பிகளின் ஊடே
நூல்போல் நுழைந்து
அடுக்களை போகும்
அவற்றை நான் வெறுக்கிறேன்.

அப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி
இப்போது எழுதுவானேன்?

சூரிய உதயம் ஆவதற்கு முன்
பசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன்
எனது வீட்டை விட்டுக் குதித்துத்
தெருவில் ஓடிய பூனையைக் குறவன்
இமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான்
இரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை
விடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன்
தமிழ் தெரியாதவன்போல்
அவன் போய்விட்டான்
எனது வீட்டு ஜன்னல் கம்பிகளின்
இடைவெளி இன்னமும் இருண்டே உள்ளது

பூனைகள் பூனைகள் பூனைகள் – 1

3.

கல்யாணராமன்

பூனையை முன் வைத்துக் காதலியுடன் ஒரு சம்பாஷணை

அன்புற்குரியவளே!
பூனையை விட்டு விடு

நீ விரித்த வலையில்
மனம் தப்பி தலைக்குப்புற
மீள முடியாமல் விழுந்துபோன
உன்னடிமை சொல்கிறேன்

தயவுசெய்து
பூனையை விட்டுவிடு

நீ வைத்து விளையாட
வாலிபப் பொம்மைகள் ஆயிரம் இருக்கின்றன
நீ வீசும் புன்னகைக் காற்றில்
வானுயரம் குளிர்ந்த பறக்க
வயசாளிப் பலூன்கள்
கோடிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன

வழக்கம்போல்
அவர்களோடு விளையாடிக்கொள் நீ
பாவம்
இந்தப் பூனையை விட்டுவிடு

பூனையோடு விளையாட உனக்குத் தெரியாது
சந்தோஷமானால்
ஆரத் தழுவிக் கொஞ்சுவாய்
கோபம் கொண்டாலோ
சோறே போடாமல் வதைப்பாய்

அன்பிற்குரியவளே!
பூனையோடு பழகும் திறனோ
சிரித்துச் சிரித்து விளையாடும் கலையோ
சுட்டுப் போட்டாலும் வராது உனக்கு

தயவுசெய்து
பூனையை விட்டு விடு

இருகரங்களாலும் அள்ளியெடுத்து
மூச்சுக் காற்று முட்ட முட்ட
மார்போடு அணைத்துக்கொள்ளத் துடிக்கும்
பயங்கரமான உனது அன்பை

ஒரு சிறு சீறலுமற்று
அப்படியே தாங்கிக்கொள்ள
உணர்ச்சி கெட்ட
வெறும் ஜடமல்ல அது

திறந்து கிடக்கும் சமையலறையில்
நீ உறை குத்தி வைத்த பாலை
குடித்துத் தீர்க்கும் பரபரப்பில்
தவறுதலாய்
உன் வீட்டுக் குவளையை
உருட்டி விட்ட குற்றத்திற்காக
நீ சினந்தால் அதற்கு வலிக்கும்

வலித்தால் அது கத்தும்
சிலவேளைகளில்
தன் கூரிய நகங்களால்
பட்டுப் போன்ற உன் மேனியைப்
பிராண்டியும் விடலாம் அது

ஆதலினால்
என் அன்பிற்குரியவளே!
பூனையை விட்டுவிடு

உன்பிடி நழுவித் தப்பியோடும் பூனையைப்
பாற்சோறு தின்ன வைப்பதற்காகக்கூட
இனித் துரத்தாதே

வேண்டாம்
நீ பின்னிய அன்பு வலையிலிருந்து
அதை விடுவித்து
கட்டுக்கடங்காத அதன் சுதந்திரத்தை
தயவுசெய்து
அதனிடமே விட்டுவிடு, நீ.

பூனைகள் பூனைகள் பூனைகள்

1.
இரா.நரசிம்மன்

பூனை
குறுக்கே
வரவே செய்யும்
வரும்போதும்
போகும்போதும்
அது சாலையைக்
கடந்தே ஆக வேண்டும்.

அவர் சொன்னார்
சாலையின் ஓரத்தில் நடக்க
பூனையைப் பழக்க வேண்டும்
சரிதான்
…………..
ஆனால்

2.

கேத்தம்பட்டி செல்வா

நள்ளிரவில் வரும் பூனை

உறங்கும் வேளை
சுவரேறி வரும்
ஒரு திருட்டுப் பூனை.
சத்தமின்றி
உரிதொங்கும் பரண் மீது
ஏறி நிற்கும்
வாய் பிளந்திருக்கும்
செம்பு பார்த்து கத்தும்
வெள்ளி மீசை சிணுங்க
பின், செம்பின் வாய்ப் பார்த்து
நாக்கு சுழற்றும்
திசைகள் பார்க்கும்
திரும்ப ஒரு முறை கத்தும்
கால் நகம் கொண்டு
மூக்கு பிராண்டும்
முன்னங்கால் செம்பை
கீறிப் பார்க்கும்
என்னென்னவோ செய்யும்
சலிப்பில்லாமல்
எதுவும் கிடைக்காமல்
தொப்பென்று எகிறிகுதித்து ஓடும்
அந்தத் திருட்டுப் பூனை

(பூனைகள் தொடரும்….)