Tag: சின்னப்பயல்
பதினேழாம் வயது
எனது ஐ.க்யூ’வை கணக்கிலெடுத்து,
என்னுயரத்திற்கு சரியானவன்
எனக்கணித்து ,
என் வாழ்நாள் முழுதும்
துணையாக உடன் வரத்தக்க
பொருத்தமான ஒருவனை
தேர்ந்தெடுத்தால்,
அவன் ஏற்கனவே
பல சலிப்பூட்டும் இளம்பெண்களின்
காதலனாகவே இருந்திருக்கிறான்
அவன் தனது நீண்ட காலக்கனவை
என்னுட்ன் விவாதிக்கிறான்
இவனும் மற்ற இளைஞர்கள்
போலவே நிகழ்காலத்தில்
வாழ மறுக்கின்றவனாகவே
இருக்கிறான்.
சலித்துத்தான் போகிறது
எனக்கும்.
இருத்தலியல்
ஹைடென்ஷன்
ஒயர்களில் கூடு கட்டும்
வீரமிகு குருவிகள்
கைதட்டலுக்குப்பயந்து
வீசிப்பறக்கின்றன
கட்டிட உச்சிகளின்
சிற்பப் பிதுக்கங்களிலும்,
மதில் மேல் நடந்து கொண்டும்
சிந்தனை செய்யும் பூனைகள்
சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன.
சூரியனின் எலும்புகளை
தன் குலைத்தல்களாலேயே
பிறாண்டி எடுக்கும் நாய்கள்
கல்லெறிக்குப்பயந்து
ஓடி ஒளிகின்றன.
காட்டையும் துவம்சம்
செய்யும்
மாமத ஆனைகள்
முழ நீள அங்குசத்திற்கு
அடங்கி நிற்கின்றன
அங்கு கில்லட்டின்களை
சாணை பிடிப்பவர்கள்
புறா இறகு வைத்து
காது குடைந்து
கொண்டிருக்கின்றனர்
மானுடத்தைப் புரட்டிப்போடும்
இலக்கியம்
ஒரு துளி பேனா மையைக்
கண்டு விக்கித்து நிற்கிறது.
குற்றமுள்ள குக்கீகள் (cookies)
உனது செல்பேசியைக்
கொந்த முயன்றதில்
எனது சில நழுவிய அழைப்புகளும்
கூந்தல் பராமரிப்பிற்கான
குறுஞ்செய்திகளும்
மட்டுமே கிடைத்தன
உனது மின்னஞ்சலை
புகுந்து படித்ததில்
சில எரிதமும்,
எண்ணவே இயலாத
அளவு பணப்பரிசு
அஞ்சல்களும்
மட்டுமே கிடைத்தன
உனது இணைய
அரட்டைகளை
இடைமறித்து
வாசித்துப்பார்த்ததில்
கட்டுப்பட்டித்தன யுவதியின்
சொல்லாடல்கள்
மட்டுமே கிடைத்தன
உனது சமூக
வலைத்தளங்களின்
பகிர்வுகளில்
எந்த சுவாரசியமுமற்ற
பொதுவான விஷயங்கள்
மட்டுமே கிடைத்தன
எனக்குள்
அழிக்க இயலாத
குற்றமுள்ள
குக்கீகளாய் (cookies)
இவையனைத்தும்
மண்டிக்கிடக்கின்றன
எப்போதும்.
தேவதையும் கோடரியும்
மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான்
அவன்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.
தாகம்
காக்கை பறந்து வந்து
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்
தாகம் எடுக்கிறது.
நனவிலி
என்னிலை நினைத்து
வருந்தவும்,
அதைப்பிறரிடம் கூறி
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு
திட்டமிடவும்,
பின் அவற்றைச் செயலாக்கவும்,
உதவிய எந்தன் மொழி
எனது நனவிலி மனதிலிருந்தும்
அகற்றப்பட்டுவிட்டது.
அதை ஒரு வன்முறையாகப்
பார்ப்பவனால்
விலங்கு மனம்
அவனிலிருந்து இடம்
மாறியது எனக்கு
இப்போது எனக்கு
சிந்திக்க மொழியின்றி
வெளிச்சொல்லத்தெரியாத
குழப்பத்தில் நான்
கட்டங்கள் சொற்கள் கோடுகள்
சொற்களை உள்ளே இட்டேன்
அவற்றுக்குள் தொடர்பு
ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்
கட்டங்கள் ஒன்றோடொன்று
இணைந்தன
சொற்கள் அடைபட்டுப்போய்
பேச மறுத்தன
கட்டங்களை நீக்கி விட்டு
சொற்களையும் கோடுகளையும்
இணைத்து விடலாம் என
எண்ணினேன்
கட்டி வைத்த சொற்களும்,
ஒட்ட மறுத்தன
மீண்டும் கட்டங்களை
வரைந்தபோது அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்
ஒரு சேரக்காணாமல் போயின
எஞ்சிய சொற்கள்
என்னைக்கேலி
செய்து கொண்டிருந்தன.