தாய்மை

தாய்மை

அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான். குழந்தையின் சத்தமே இல்லையே என்று தேடிப் பார்த்தால் அது வாசலுக்கருகில் படுத்திருந்த பூனையினருகில் உட்கார்ந்து அதன் வாலை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டிருந்தது. ஜோதி சத்தம் போட்டு ஓடி வந்து பூனையைத் துரத்திவிட்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பயந்துபோனது சத்தமாக அழத் துவங்கியது. பூனையின் மென்மையான மயிர்களெல்லாம் அதன் வாய்க்குள் இருந்தது. அவள் பூனையைத் திட்டித் திட்டி, அவளது சுட்டுவிரலை அதன் வாய்க்குள் போட்டுத் தோண்டித் தோண்டி பூனையின் முடிகளை எடுத்துப் போட்டாள். அது இன்னும் கத்திக் கத்தி அழத் தொடங்கியது. முருகேசு இருந்திருந்தால் அவள்தான் நன்றாக ஏச்சு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பாள்.

குழந்தை சிணுங்கினாலே அவனுக்குப் பிடிக்காது. அவளிடம் வள்ளென்று எரிந்துவிழுவான். அவள் அவனுடன் ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டோ, சண்டைக்கோ போக மாட்டாள். பொறுத்துக் கொண்டு போய்விடுவாள். என்ன இருந்தாலும் குழந்தைகள் மேலுள்ள பாசத்தால்தானே இந்த மாதிரி நடந்துகொள்கிறான். அந்த மீனாளுடைய கணவன் போல குடித்துவிட்டு வந்து சண்டை பிடிக்கிறவனென்றால் கூடப் பரவாயில்லை. பதிலுக்குச் சண்டை போடலாம். இவன் தன் பாட்டில் காலையில் எழும்பி, சாயம் குடித்துவிட்டு, அவள் அவித்துக் கொடுப்பதைச் சுற்றி எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் பொழுது சாயும்போது வந்துவிடுவான். அதன்பிறகு குழந்தைகளோடு வயல் கிணற்றுக்குப் போய் குளித்துக் கொண்டு வந்தானானால், அவள் இரவைக்குச் சமைத்து முடிக்கும் வரை, விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருப்பான். மகன் பாலன் அப்பாவிடம் ஏதாவது கதை சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனையும் அடுத்தவருடம் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். மூத்தவளையும், இளையவளையும் போல இல்லை அவன். சரியான சாதுவான பையன். ஒரு தொந்தரவில்லை. வேலைகளும் சுத்தபத்தமாக இருக்கும். ஜோதியும் எப்பொழுதாவது பகல்வேளைகளில் அரிசி, பருப்பு, வெங்காயமென்று வாங்க சந்திக் கடைக்குப் போவதென்றால் தொட்டிலில் சின்னவளைக் கிடத்திவிட்டு மூத்தவளிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனைத்தான் கூட்டிப் போவாள். அவனும் ஒரு தொந்தரவும் தராமல் அவளோடு கடைக்கு வந்து அவள் சாமான்கள் வாங்கிமுடியும்வரை பார்த்திருப்பான். அங்கு கண்ணாடிப் போத்தல்களில் விதவிதமாக இனிப்புப் பொருட்கள் நிறைந்திருக்கும். அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குப் பாவமாக இருக்கும். அவனுக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் சேர்த்து அதில் வாங்கிக் கொள்வாள். அவனது பங்கை அவனிடம் உடனே கொடுத்துவிடுவாள். எனினும் அவன் உடனே சாப்பிட்டு விடுவானா என்ன? அப்படியே எடுத்துக் கொண்டு வந்து அக்கா, தங்கையுடன் உட்கார்ந்து யார் கூட நேரம் சாப்பிடுகிறார்களெனப் போட்டிபோட்டுக் கொண்டு ஒன்றாய்ச் சாப்பிடுவதில்தான் அவனுக்குத் திருப்தி.

வர வர பல்வலி கூடிக் கொண்டே வருவது போல இருந்தது. ‘பெரியாஸ்பத்திரியில் மருந்தெல்லாம் சும்மா கொடுக்கிறார்கள்… போய் மருந்து வாங்கு…ஒரே மருந்தில் வலி போய்விடும்’ என்று பீலியில் தண்ணீர் எடுக்கப் போனபோது சுமனாதான் சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். அவள் பொய் சொல்லமாட்டாளென்று ஜோதிக்குத் தெரியும். அடுத்தது இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொல்லி அவளுக்கென்ன இலாபமா கிடைக்கப் போகிறது? அவள்தானே அயலில் இருக்கிறவள். அவசரத்துக்கு உடம்புக்கு முடியாமல் போனால், சின்னவளைத் தூக்கிக் கொண்டு பீலியடிக்குப் போயிருந்தால் அவள்தானே தண்ணீர் நிரம்பிய குடத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து தருகிறவள். பீலித் தண்ணீர் எப்பொழுதும் குளிர்ந்திருக்கும். அதனால் வாய் கொப்பளித்தபோதுதான் முதன்முதலாகக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பல் வலிக்கிறதென்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அப்படியே குந்திவிட்டாள். அயலில் முளைத்திருந்த வல்லாரை இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்த சுமனாதான் அருகில் வந்துபார்த்தாள். வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தாள். கடைவாய்ப்பல்லில் ஒரு ஓட்டை. ‘அடியே ஜோதி..எவ்ளோ பெரிய ஓட்டை..வலிக்காம என்ன செய்யும்? இப்பவே போய் மருந்தெடடி’ என்றாள். உடனே போய் மருந்தெடுக்க காசா, பணமா சேர்த்துவைத்திருக்கிறாள் ஜோதி? அடுத்து இந்தக் காட்டு ஊருக்குள் இருக்கும் நாட்டுவைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. அதற்கும் வெற்றிலையில் சுற்றி எவ்வளவாவது வைக்கவேண்டும். கோயிலிலென்றால் ஒரு சாமியார் இருக்கிறார். ஏதாவது தீன்பண்டம் செய்து எடுத்துக் கொண்டு, ஒரு கொத்துவேப்பிலையும் கொண்டுபோனால் தீன்பண்டத்தை வாங்கிக் கொண்டு அந்த வேப்பிலைக் கொத்தால் வலிக்கிற இடத்தில் தடவிக் கொடுப்பார். வலி குறைந்தது மாதிரி இருக்கும்.

சுமனா நகரத்துக்குப் போகச் சொல்கிறாள். எம்மாம் பெரிய தூரம். அந்தக் கிராமத்திலிருந்து யாரும் முக்கிய தேவையில்லாமல் நகரத்துக்குப் போக மாட்டார்கள். நகரத்துக்குப் போவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது? போகும்போதென்றால் பரவாயில்லை. பள்ளமிறங்கும் வீதி. பத்துக் கிலோமீற்றரென்றாலும் நடந்துகொண்டே போகலாம். வரும்போதுதான் மேடு ஏறவேண்டும். அதுவும் தேயிலைத்தோட்டத்து வீதியில் நடக்கும்போது நிழலெங்கே இருக்கிறது? வெயிலில் காய்ந்து காய்ந்து மேலே ஏறி வீட்டுக்கு வந்துசேரும்போது உயிரே போய்விடுகிறது. நகரத்தில் காசு நிறையக் கொடுத்தால், குணமாக்கியனுப்பும் ஆஸ்பத்திரி கூட இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒரு முறை கங்காணியையா வீட்டு ஆச்சி, தோட்டத்தில் செருப்பில்லாமல் நடக்கும்போது கண்ணாடியோட்டுத் துண்டொன்றுக்கு காலைக் கிழித்துக் கொண்டு, இரத்தம் கொஞ்சம்நஞ்சமா போனது? தோட்டமே பதறிப் போனது கிழவி மயக்கம் போட்டதும். துரைதான் தனது காரில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பிவைத்தார். உயிரில்லாமல்தான் வீட்டுக்கு வரும் என்று தானே தோட்டமே பேசிக் கொண்டது? காயத்தில் பால் போல வெள்ளைப் பிடவையைச் சுற்றிக் கொண்டு ஆச்சி வந்து சேர்ந்தது. கங்காணி வீடு வரை கார் வந்து நின்றதும் ஆச்சி எதுவும் நடக்காத மாதிரி தானாகவே நொண்டி நொண்டி நடந்து வீட்டுக்குள் போனதுதானே அதிசயம். அதற்குப் பிறகும் ஆச்சி செருப்புப் போட்டுக் கொள்ளவில்லை எப்பொழுதும். அவர் மட்டுமல்ல தோட்டத்தில் யாருமே செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால்தானே. அடுத்தது இந்தக் காடு மேடு பள்ளமெல்லாம் இந்தச் செருப்புப் போட்டுக் கொண்டு இலகுவாக நடக்க இயலுமா என்ன?

இரவெல்லாம் பல்வலியில் முனகினாள். கராம்பு, பெருங்காயம் எதையெதையோ எடுத்து வலிக்கும் இடத்தில் வைத்து கடித்துக் கொண்டு தூங்க முயற்சித்தாள். நித்திரை வந்தால்தானே? காலை எழும்பிப் பார்க்கும்போது கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கியுமிருந்தது. சுமனா சொன்ன மாதிரி உடனேயே ஆஸ்பத்திரிக்குப் போய்விட முடியுமா என்ன? எவ்வளவு வேலை இருக்கிறது? குழந்தைகள் பிறக்கும் முன்பென்றால் அவளும் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்கப் போய்க் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்த பிறகு பிள்ளையைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லையென்று அவளை வேலைக்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டான் முருகேசு. தோட்டத்துக்குப் போகாவிட்டால் என்ன? வீட்டில் எவ்வளவு வேலையிருக்கிறது? அவளது வீடு இருப்பது வீதியோடு காட்டுக்குப் போகும் மலையுச்சியில். கடைச் சந்திக்கு, கிணற்றுக்கு, பீலிக்கென்று கீழே இறங்கினால் திரும்ப வீட்டுக்கு வர ஒரு பாட்டம் மூச்சிழுத்து இழுத்து மேலே ஏறிவர வேண்டும். தினமும் தண்ணீருக்காக மட்டும் எத்தனை முறை இறங்கி ஏற வேண்டியிருக்கிறது? குடிசை வீடென்றாலும், சாணி பூசிய தரையென்றாலும் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொண்டால்தானே மனிதன் சீவிக்கலாம்? அத்தோடு தினமும் குழந்தை அடிக்கடி நனைத்துக் கொள்ளும் துணிகளையெல்லாம் துவைத்துக் காய்த்து எடுக்கவேண்டும். அந்தக் குளிரில் வெந்நீர் காயவைத்து குழந்தையைக் குளிப்பாட்டும் நாளைக்கு இன்னும் வேலை கூடிப் போகும். உடம்பில் தண்ணீர் பட்டதும் விளையாடும் குழந்தை, தண்ணீரிலிருந்து எடுத்ததும் ஒரு பாட்டம் அழும். மூத்தவள் இருக்கும் போதெனில், தங்கையைத் தூக்கிவைத்துக் கொள்வாள்தான். ஆனாலும் ஏழுவயதுப் பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரு திருப்தியோடு வேலை செய்யமுடியாது.

முருகேசு காலையில் கொல்லைக்குப் போய் கை, கால் கழுவிக் கொண்டு வந்ததுமே சுடச் சுடச் சாயமும், உள்ளங் கையில் சீனியும் கொடுத்துவிட வேண்டும். அவன் குடித்து முடிப்பதற்கிடையில் அடுப்பில் வெந்திருப்பதை அது கிழங்கோ, ரொட்டியோ எடுத்து, ஒரு சம்பல் அரைத்துச் சுற்றிக் கொடுத்துவிடுவாள். ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் வேலைக்குப் போகும் கணவனுக்கு ஒன்றும் சமைத்துச் சுற்றிக் கொடுக்காமல் அனுப்புவது எப்படி? பட்டினியோடு வேலை செய்யமுடியுமா? வீட்டில் சமைக்க ஒன்றுமில்லாவிட்டால் பரவாயில்லை. அவன்தான் வாரக் கூலி கிடைத்ததுமே ஒரு பை நிறைய சமையலுக்குத் தேவையான எல்லாமும் வாங்கிவந்து விடுகிறானே. குறை சொல்ல முடியாது. கொஞ்சம் கூடப் பணம் கிடைத்தால், பிள்ளைகளுக்கு பிஸ்கட்டுக்களும் கொண்டுவந்து கொடுப்பான். காலையில் அவன் கிளம்பிப் போனதற்குப் பிறகுதான் அவள் சாயம் குடிப்பாள். அதையும் முழுதாகக் குடித்து முடிப்பதற்கிடையில் குழந்தை அழத் தொடங்கும். ஓடிப் போய் அதைத் தூக்கிக்கொண்டு பாயில் படுத்திருக்கும் மூத்தவளைத் தட்டித் தட்டி எழுப்புவாள். பிறகு அவளை கிணற்றடிக்கு அனுப்பிவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுப்பாள். ஒரு வழியாக அதைத் தூங்க வைத்துவிட்டு, மூத்தவளுக்கு உணவைக் கட்டிக் கொடுப்பாள். இரவில் தண்ணீரூற்றி வைத்த எஞ்சிய சோற்றை, வெங்காயம், மிளகாய், ஊறுகாய் சேர்த்துப் பிசைந்து அவளுக்கு ஊட்டிவிடுவாள். பிள்ளையைப் பசியில் அனுப்ப முடியுமா? எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்? அவள் நன்றாகப் படிப்பதாக ஒரு முறை அவளது ஆசிரியையும் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க தூரத்தைக் காரணம் காட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருக்கமுடியுமா? பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வைத்து உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றுதான் முருகேசுவும் அடிக்கடி சொல்வான். படிக்காவிட்டாலும் இந்தத் தோட்டத்தில் வேலை கிடைப்பது பிரச்சினையில்லைத்தான். ஆனாலும் படிப்பால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஆயுள் முழுதும் தோட்டத்தில் கூலி வேலை செய்தாலும், கொழுந்து பறித்தாலும் கிடைத்துவிடுமா? அருள்ஜோதியின் சிறிய வயதில் இந்தத் தோட்டத்திலெங்கே பள்ளிக்கூடமொன்று இருந்தது? அதனால் ஒரு எழுத்துக் கூட அவளுக்குத் தெரியாது. முருகேசு பிறந்த தோட்டத்திலென்றால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிக்கக் கூடிய வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருந்தது. அதில் அவன் மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பிறகு அவனது அப்பா பாம்பு கொத்திச் செத்துப் போனதால், மாடு மேய்க்கவும், பால் கறந்து விற்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை.

அருள்ஜோதி தினமும் இரவைக்குத்தான் சோறு சமைப்பாள். இரவில் எஞ்சியதையோ, காலையில் அவித்ததையோ அவளும் பிள்ளைகளும் பகலைக்கும் வைத்துச் சாப்பிடுவார்கள். அவளென்றால் பசியிலும் இருந்துவிடுவாள். பிள்ளைகளைப் பட்டினி போடுவதெப்படி? அவள் வளர்ந்த காலத்தில்தான் உண்ண இல்லாமல், உடுக்க இல்லாமல் கஷ்டத்தோடு வளர்ந்தாள். பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பது எவ்வாறு? ஆனாலும் பகலைக்குச் சோறு சமைப்பதைக் காட்டிலும் இரவில் சமைத்தால்தானே கணவன் சூட்டோடு சூட்டாக ருசித்துச் சாப்பிடுவான்? உழைத்துக் களைத்து வரும் கணவனுக்கு ஆறிய சோற்றைக் கொடுப்பது எப்படி? ஆசையோடு அவன் வாங்கிவரும் கருவாடோ, நெத்தலியோ, ஆற்றுமீனோ உடனே சமைத்துக் கொடுத்தால்தானே அவளுக்கும் திருப்தி? இரவைக்குப் பாரமாக ஏதாவது வயிற்றில் விழுந்தால்தான் நன்றாக நித்திரை வரும்..உடலும் ஆரோக்கியமாக வளருமென்று அவளது அம்மா இருக்கும்வரை சொல்வாள். மூத்தவள் இவள் வயிற்றிலிருக்கும் போதல்லவா அம்மா கிணற்றுக்குப் போகக் கீழே இறங்கும்போது வழுக்கிவிழுந்து மண்டையை உடைத்துக் கொண்டாள்? உரல் மாதிரி இருந்த மனுஷி. குடம் உருண்டு போய் வீதியில் விழுந்து, ஆட்கள் கண்டு அவளை வீட்டுக்குத் தூக்கிவரும்போதே உயிர் போய்விட்டிருந்தது. இப்படி நடக்குமென்று யார் கண்டது? விஷயம் கேள்விப்பட்டு தோட்டத்தில் வேலையிலிருந்த இவளும், முருகேசுவும் குழந்தை வயிற்றிலிருக்கிறதென்றும் பாராமல் ஓட்டமாய் ஓடி வந்தார்கள். குழந்தை பிறந்ததுமே அம்மாவின் பெயரைத்தான் அவர்கள் அதற்கு வைத்தார்கள். ஆனாலும் அப் பிள்ளையின் மீது கோபம் வரும்போதெல்லாம் அம்மாவின் பெயரைச் சொல்லித் திட்டுவது எவ்வாறு? அதனால் அதை ராணி என்று செல்லப் பெயர் வைத்தும் கூப்பிடத் தொடங்கினார்கள். அருள்ஜோதிக்கு அடிக்கடி அம்மாவின் நினைவு வரும். உடலில் ஏதாவது வருத்தம் வரும்போது, சுவையாக ஏதாவது சாப்பிடும்போது, அம்மா நட்டு வளர்த்த முற்றத்துத் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, அம்மா விழுந்த இடத்தைக் காணும்போது என்றெல்லாம் ஒரு நாளைக்குப் பல தடவைகள் அம்மாவை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வாள். கொல்லைப் புறத் தோட்டத்தில் கத்தரி, வெண்டி ,பாகலென்று அவள் நட்டிருக்கும் மரக்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும், களை பிடுங்குவதிலும், உரம் போடுவதிலுமே பின்னேரம் கழிந்துவிடும். இரண்டு மூன்று கிழமைக்கொரு முறை காய்களை ஆய்ந்து சந்திக் கடைக்குக் கொடுத்து செலவுப் புத்தகத்திலிருக்கும் கணக்கைக் குறைத்துக் கொள்வாள். வீட்டிலிருப்பதென்று சொல்லி சும்மா இருப்பதெப்படி?

சுமனா சொன்னபடியே அருள்ஜோதி பெரியாஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். தனியாகத்தான் வந்தாள். சுமனாவையும் கூட்டி வந்திருக்கலாம். கூப்பிட்டால் வந்திருப்பாள்தான். ஆனால், அவளும் வந்தால் இளையவை இரண்டையும் யாரிடம் விட்டு வருவது? கீழ் வீட்டு சுமனாவிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கூடம் செல்லும் மூத்தவளோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு பாதைக்கு வரும்போதே நன்றாக விடிந்திருந்தது. அவள் இதற்குமுன்பும் ஓரிரு முறை பெரியாஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள்தான். ஆனால் அது நோயாளி பார்க்கத்தான். இப்படி மருந்தெடுத்து வரப் போனதில்லை. அதிலும் ஒருமுறை முருகேசுவின் சித்தி மலேரியாக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதுமே, சுவையாக சோறு சமைத்து, பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு அவள்தான் முருகேசுவுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள். நோயாளிக்குச் சோறு கொடுக்கவேண்டாமென்று தாதி சொன்னதும் அங்கிருந்த வேறொரு நோயாளிக்கு அப் பார்சலைக் கொடுத்துவிட்டாள் ஜோதி. ஆஸ்பத்திரியென்றால் நோயாளியை அங்கேயே தங்க வைத்துக் கொள்வார்களென்றே அவள் எண்ணியிருந்தாள். அப்படியில்லையென்றும் மருந்து கொடுத்து உடனே அனுப்பிவிடுவார்களென்றும் சந்திக் கடை லலிதா சொன்னபிறகு தானே இன்று இங்கு வரவே அவளுக்கு தைரியம் வந்தது? அதன் நாற்றம்தான் அவளால் தாங்கிக் கொள்ளமுடியாதது. ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தால் சேலையெல்லாம் கூட அந்த வாசனைதான். அதற்காக பழையதைக் கட்டிக் கொண்டு போகமுடியுமா? இருப்பதிலேயே நல்லதைத்தான் உடுத்திக் கொண்டு போக வேண்டும். நகரத்துக்குப் போவதென்றால் சும்மாவா? சின்னவள்தான் கையை நீட்டி நீட்டி அழுதாள். சுமனா அவளைத் தூக்கிக் கொண்டு கொல்லையில் கூண்டுக்குள் இருந்த கிளியைக் காட்டப் போனதும்தான் அருள்ஜோதியால் வீதிக்கு வரமுடிந்தது.

பல் வலி தாங்கமுடியவில்லை. கைக்குட்டையைச் சுருட்டி கன்னத்தில் வைத்து அழுத்தியவாறுதான் ஆஸ்பத்திரிக்கு நடந்துவந்தாள். வந்து பார்த்தால் மருந்தெடுக்க கிட்ட நெருங்க முடியாதளவு சனம். விடிகாலையிலேயே வந்து நம்பர் எடுத்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? அவளுக்குப் போன உடனேயே வைத்தியரை அணுக முடியுமா என்ன? வந்த உடனே அவளுக்கு நம்பர் எடுக்கவேண்டுமென்பது கூடத் தெரியாது. அருகிலிருந்த ஒரு பெண்தான் அவளை நம்பர் எடுக்கும்படி சொன்னாள். அவள் இரவே வந்து காத்திருந்து ஒருவாறு நம்பர் எடுத்துவிட்டாளாம். காலையில் ஒரு மணித்தியாலம் மட்டும்தான் நம்பர் வினியோகிப்பார்கள். யாருக்குத் தெரியும் இது? அருள்ஜோதி அந்த நேரத்தைத் தாண்டி வந்திருந்தாள். இப்பொழுது என்ன செய்வது? எல்லா நோயாளிகளுக்கும் மருந்து கொடுத்த பிறகு நேரமிருந்தால் வைத்தியர் நம்பர் இல்லாதவர்களையும் பார்ப்பாரென அதே பெண்தான் சொன்னாள். அவ்வளவு பாடுபட்டு வந்ததற்குக் கொஞ்சம் காத்திருந்தாவது பார்ப்போமென ஒரு மூலையில் நிலத்தில் குந்தினாள் அருள்ஜோதி. எத்தனை விதமான நோயாளிகள்? காயத்துக்கு மருந்து கட்டும் அறையிலிருந்து வரும் ஓலம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதது. அவளுக்கு அதையெல்லாம் கவனிக்க எங்கு நேரமிருக்கிறது. பல்லுக்குள் யாரோ ஊசியால் குத்திக் குத்தி எடுப்பது போல வலியெடுக்கும்போது, பக்கத்திலிருப்பவளுக்கு உயிரே போனாலும் தன்னால் திரும்பிப் பார்க்கமுடியாதென அவள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு முன்னிருந்த வாங்கில் அமர்ந்திருந்த ஒருத்தியின் ஏழெட்டு மாதக் குழந்தை அருள்ஜோதியைப் பார்த்துச் சிரித்தது. அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து அக் குழந்தையை நோக்கி அசைத்தாள். அது இன்னும் சிரித்தது. அருள்ஜோதியால் சிரிக்க முடியவில்லை. திரும்ப கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள்.

ஆஸ்பத்திரியின் வாடை இப்பொழுது பழகி விட்டிருந்தது. ஒவ்வொருவராக உள்ளே போய் வந்து கொண்டிருந்தாலும் சனம் குறைவதுபோல் தெரியவில்லை. ஒரு நாளைக்கு நூறு பேரைத்தான் வைத்தியர் பார்ப்பாரென அங்கு கதைத்துக் கொண்டார்கள். அவளைப் போல நம்பரில்லாமல் எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிலும் பக்கத்தில் நிலத்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கைப்பிள்ளைக்காரியை முதலில் உள்ளே அனுப்பாமல் அவள் உள்ளே போவதெப்படி? நூற்றியோராவது ஆளாக அவள் போனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர அந்தியாகிவிடுமென அவளுக்குத் தோன்றியது. ஆனால் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு இருந்து மருந்தெடுத்துக் கொண்டே போக வேண்டுமென்ற வைராக்கியமும் உள்ளுக்குள் எழாமலில்லை. பல் வலிக்கு மருந்தெடுக்கப் போகவேண்டுமென்று முருகேசிடம் சொன்னதுமே, குறை சொல்லக் கூடாது, சட்டையை எடுத்து அதன் பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினான். பெரியாஸ்பத்திரியில் போய் வரிசையில் காக்க வேண்டாம் என்றும் காசு கொடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொண்டு வரும்படியும் சொன்னான்தான். ஆனாலும் இலவசமாகக் கிடைக்கும் மருந்துக்கு எதற்குக் காசு கொடுக்கவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காசை எடுத்துக் கொண்டு வந்ததும் நல்லதாகப் போயிற்று. இங்கு மருந்தெடுக்க முடியாமல் போனால் அந்தத் தனியார் க்ளினிக்குக்குப் போய் மருந்தெடுத்துக் கொண்டு போகலாம். அவள் கன்னத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தி வேதனையில் முனகுவதைக் கண்ட ஒரு தாதி அருகில் வந்தாள். இவள் பல்வலியென்றதும் பல் டாக்டர் புதன்கிழமை மட்டும்தான் வருவாரெனவும் புதன்கிழமை வந்து நம்பரெடுத்து அவரைப் பார்க்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றாள். அதற்குப் பிறகும் அங்கு காத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது? அதிலும் கையில் காசிருக்கும்போது எதற்காக இங்கே காத்துக் கிடந்து நேரத்தை வீணாக்கவேண்டும்? அவள் எழும்பி வெளியே வந்தாள்.

வெயில் சுட்டது. பசித்தது. காலையில் எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவந்தது. அருகிலிருந்த குழாயருகில் போய் வயிறு நிறையத் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் பட்டதும் வலி சற்றுக் குறைந்தது போலவும் இருந்தது. தனியார் கிளினிக் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கே நடக்கத் தொடங்கினாள். கடுமையான வெயிலல்லவா இது? மயக்கம் வருவதுபோலவும் உணர்ந்தாள். அந்தக் கிளினிக் அதிக தூரமில்லை. பணம் கட்டி மருந்து எடுப்பதற்கும் சனம் நிறைந்திருப்பதைக் கண்டுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த வாங்கில் போய் உட்கார்ந்துகொண்டாள். வரிசைப்படி இந்தச் சனம் மருந்து எடுத்து முடித்து, அதன் பிறகு தனது முறை வருவதற்கு வெகுநேரமெடுக்குமெனத் தோன்றியது. பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிடும். பசியிலிருப்பாள். ஏதோ தீர்மானித்தவள் எழுந்து வெளியேயிறங்கி வீதிக்கு வந்தாள். கையிலிருந்த காசுக்கு பிள்ளைகளுக்கு பிஸ்கட்டும், மூத்தவளுக்கு பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போக ப்ளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலொன்றும் வாங்கினாள். இங்கு வெறுமனே உட்கார்ந்திருந்தால் அங்கு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது? சுமனாவும் வீட்டில் சும்மாவா இருக்கிறாள்? அவளுக்குத் தையல் வேலைகள் ஆயிரமிருக்கும். சின்னவள் அவளைப் போட்டுப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பாள். இந்தப் பல்வலிக்கு கசாயம் குடித்தாலோ, கோயிலுக்குப் போய் வேப்பிலை அடித்தாலோ சரியாகப் போய்விடும். ஒன்றுமில்லாவிட்டால் பெருங்காயம், கராம்புத் துண்டு வைத்துப் பார்க்கலாம்.

கானல்

காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.
ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது.
“நானா உங்களுக்கு போன்” தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள்.
” யாரு ? “
” வஜீஹா மாமி ஊட்டுலீந்து “
ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். இந்த முறை அவன் வீட்டுக்கும் போய் வரவேண்டுமென்ற திட்டமிருந்தது எனக்குள். போன மாதம் கொழும்பில் விபத்தொன்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறான்.
தொலைபேசி அழைப்பினை எடுத்தேன். மதீனா ராத்தா எடுத்திருந்தார். ஹாரிஸின் மூத்த ராத்தா. அவர்களது உம்மா என்னை அவசரமாகப் பார்க்கவேண்டும் எனச் சொன்னதாகச் சொன்னார். மழை விட்டவுடன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி வைத்தேன்.மனதுக்குள் நிறையக் கேள்விகள் எழும்பி மறைந்தது. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் வருவது எனக்கு இதுதான் முதல் தடவை. அதுவும் வஜீஹா மாமியிடமிருந்து. ஏதும் அவசரமில்லாமல், காரணமில்லாமல் கூப்பிட்டிருக்க மாட்டார்.
மதியச்சாப்பாட்டினை மேசையில் பரத்திவிட்டு உம்மா சாப்பிட அழைத்தார். சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தும் மழை விடுவது போலத் தெரியவில்லை. ஹாரிஸின் வாப்பா அவனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவனுக்கு மூத்ததாக இரண்டு ராத்தாமார். வாப்பாவின் பென்ஷனில்தான் அவர்களை அவன் உம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார். இப்பொழுது ஹாரிஸும் வேலைக்குப் போவதால் குடும்பக் கஷ்டம் சிறிதளவாவது குறைந்திருக்கவேண்டும்.
அவன் வீடு ஊருக்குள் இருந்தது. நடந்து போவதென்றால் பத்து நிமிடங்களாவது எடுக்கும். சமீனாவிடம் குடையை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். மண் வீதியெங்கும் சேற்று நீர் தேங்கி அழுக்காகியிருந்தது. நடக்க நடக்க பின் கால்களில் தெறித்தது. பேசாமல் சைக்கிளில் வந்திருக்கலாம்.
சிவப்பு ரோசாவுக்கென ஹாரிஸ் வீட்டு முன் வாயிலில், பதியம் போடப்பட்டிருந்தது. வீதியோடு ஒட்டிய வேலிக்கென வளர்க்கப்பட்ட மரங்களுக்குள்ளிருந்து மல்லிகைக் கொடியொன்று எட்டிப் பார்த்தது. வீட்டு வாயிலில் கூரையிலிருந்து வடிந்த பீலித்தண்ணீரில் சேறு தெறித்திருந்த கால்களைக் கழுவிக்கொண்டு செருப்பைக்கழற்றி வைத்து விட்டுக் கதவைத் தட்டி “ஹாரிஸ் ” என்றபடியே உள் நுழைந்தேன்.
” வாங்கோ தம்பி. ஹாரிஸ் போஸ்ட் ஒபிஸுக்குப் போறனெண்டு சொல்லிட்டு இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தான் போன..வருவான்.. நீங்க இரிங்கோ.” சொன்னபடி உள்ளிருந்து வந்த மதீனா ராத்தாவின் பின்னால் வஜீஹா மாமியும் வந்தார்.
“ஓஹ்..சரி..மெதுவா வரட்டும்..ஹாரிஸுக்கு இப்ப எப்படியென்? கால்ல பலத்த அடியெண்டு கேள்விப்பட்டேன். பார்க்க வர எனக்கு லீவு கிடைக்கல்ல. இப்ப நடக்கேலுமா? “..முன் விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன்.
அருகிலிருந்த கதிரையில் வஜீஹா மாமியும் அமர்ந்து கொண்டே..
” ஓஹ்…நடக்க ஏலும். இப்ப சைக்கிள் மிதிச்சுக் கொண்டுதான் போஸ்ட் ஒபிஸ் போயிருக்கான். ஒரு மாசமா கொழும்பு ஹொஸ்பிடல்ல இருந்தான். நாங்க மூணு நாளைக்கொருக்காப் போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தம்…பெண்டேஜ் வெட்டினாப் பெறகு கூட்டிக்கொண்டு போகச் சொன்ன..போன கிழமைதான் கூட்டிக் கொண்டு வந்தம். கால்ல வீக்கம் இன்னும் இரிக்கு. வாற கெழமயிலிரிந்து வேலைக்குப் போப்போறான். சொல்றதொண்டும் கேக்குறானில்ல. அதுபத்திப் பேசுறதுக்குத்தான் உங்களக் கொஞ்சம் வரச் சொன்னன் மகன். மதீனா..தம்பிக்கு குடிக்க எதாச்சும் ஊத்திக்கொண்டு வாங்கோ” என்றார்.
” ஐயோ..வாணம் மாமி..இப்பத்தான் நல்லாச் சாப்டுட்டு வந்தன்…ஹாரிஸால என்ன பிரச்சினை மாமி ? அஞ்சு நேரம் தொழுதுகொண்டு உங்கட பேச்சைக் கேட்டு வளர்ற பொடியன் தானே”
” அதெல்லாம் முந்தி மகன். அவனுக்கு மூத்ததா ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..கல்யாண வயசாகி மிச்சநாள். இவன் என்னடாண்டால் இருவத்தஞ்சு வயசிலேயே ஒரு பிள்ளையப் பழக்கமாக்கிக் கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கச் சொல்றான். “
வஜீஹா மாமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதீனா ராத்தா வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளிப் பழமொன்றை துண்டுகளாக வெட்டியெடுத்து ஒரு தட்டில் கொண்டுவந்து என் முன்னால் இருந்த சிறு மேசையில் வைத்து “எடுங்கோ தம்பி ” என்றார்.
” அதுவுமொரு சிங்களப்பிள்ள. ஹொஸ்பிடல்ல வச்சுப் பழக்கமாகியிரிக்கு. வீட்டுக்கு வந்த நாள்ல இரிந்து இவன் அடிக்கடி ஒரு நம்பருக்கு கோல் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறதப் பார்த்துட்டுக் கேட்டா இப்படிச் சொல்றான். ஏன்ட உசிர் இரிக்கிறவரைக்கும் இது போல ஒண்ட ஏன்ட ஊட்டுல செய்ய அனுமதிக்க மாட்டன். எங்கட பரம்பரயிலயே இப்படியொரு காரியத்த யாரும் செஞ்சில்ல இண்டைக்கு வரைக்கும். இவன் இப்படி ஏதாவது செஞ்சுக்கொண்டு வந்து நிண்டானெண்டால் இந்த ரெண்டு கொமர்களையும் நான் எப்படிக் கரை சேத்துறது மகன்? ” சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமிக்கு அழுகை வந்துவிட்டது. உடுத்திருந்த சாரி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கேட்டுக்கொண்டிருந்த மதீனா ராத்தாவின் முகமும் வாடிச் சோர்ந்திருந்தது. நான் பேச்சை மாற்ற விரும்பினேன்.
” சின்ன ராத்தா எங்க? காணல்ல? ” என்றேன்.
” அவ தையல் கிளாஸுக்குப் போயிருக்கா. உம்மா சேர்ந்திருந்த சீட்டுக்காசு கிடைச்சு ஊட்டுக்கு ஒரு தையல் மெஷினும் வாங்கிட்டம்.. நானும் தைக்கிறன். அவள் பூப்போடவெல்லாம் பழகோணுமெண்டு சொல்லிக் கிளாஸுக்குப் போறாள். நல்லா சொல்லித் தாராங்களாம். நீங்க பழம் சாப்பிடுங்கோ தம்பி. “
“மகன் ..அண்ட அசலுல யாருக்கும் தெரியாது. இவன்ட மாமாவுக்குக் கூடச் சொல்லல்ல. நீங்கதான் அவன்கிட்ட இது சம்பந்தமா பேசோணும்..நீங்க சொன்னாக் கேப்பான். நல்ல புத்தி சொல்லுங்கோ அவனுக்கு. அவன நம்பித்தான் நாங்க எல்லோரும் இரிக்கிறம் மகன். ”
” நீங்க கவலைப்பட வாணம் மாமி..நான் அவன்கிட்ட பேசுறேன். எல்லாம் சரியாகிடும்..நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வாணம்.” என்று சொல்லியவாறே எழுந்தேன்.
“ஹாரிஸ் வந்தானெண்டால் எங்கட ஊட்டுக்கு வரச்சொல்லுங்கோ..நான் இன்னும் ரெண்டு நாளைக்கு ஊட்டுலதான் இரிப்பன்..அவன் வராட்டி ராவாகி நானே வாறேன். போய்ட்டு வாறேன் மாமி “
செருப்பை அணியும் போது மதீனா ராத்தா ஒரு கறுப்புப் பொலிதீன் பையைக் கொண்டு வந்து நீட்டினார்.
“என்ன ராத்தா இது ? “
” உம்மாக்கிட்டக் கொடுங்கோ..மிச்சம் நாளாச்சி அவங்களப் பார்த்து..நாங்க சலாம் சொன்ன எண்டு சொல்லுங்கோ “
நான் சரியெனச் சொல்லி, கொடுத்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கொண்டு குடையுடன் நகர்ந்தேன். மழை லேசான தூறலாகப் பின் தொடர்ந்தது.
மஃரிபுக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வருகையில் என்னைத் தேடி வந்த ஹாரிஸ் என் வீட்டில் இருந்தான். அவன் குடித்து விட்டு வைத்திருந்த தேனீர்க் கோப்பையையும் எடுக்காமல் உம்மா அவனது விபத்து பற்றிய கதைகளைப் பரிதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். வாப்பா அவனது காலைக் காட்டச் சொல்லிப் பார்த்தார். நான் அவனை எனது அறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன். லேசாக நொண்டியபடியே நடந்துவந்தான். கட்டிலில் அமரச் சொல்லி விபத்து எப்படியானதென விசாரித்தேன்.
“வேலைக்குப் போயிட்டு வரச்சதான்.. பஸ்ஸை நான் இறங்கும் முன்னமே இழுத்துட்டான்..கீழ விழுந்துட்டன்..சின்ன எலும்பு முறிவு..பெருசாக் கட்டுப்போட்டு உட்டுட்டாங்க..இன்னம் குளிசை தந்திரிக்கு..குடிக்கச் சொல்லி…”
பிறகு அவனது வேலை பற்றியும், கொழும்பில் தங்குமிடம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு விஷயத்துக்கு வந்தேன்.
” யாரோ ஒரு சிங்களப்புள்ளயொண்டோட பழக்கமாம் ? எப்போலிரிந்து டா? “
” அது மச்சான்…யாரு உனக்குச் சொன்ன ?”
” அத விடு..நீ சொல்லு…என்ன பழக்கம்? என்ன விஷயம்..? மறைக்காமச் சொல்லுடா “
” அது தான் நான் எக்ஸிடண்ட் பட்டு ஹொஸ்பிடல்ல இருக்குறப்ப நல்ல அன்பாப் பார்த்துக் கொண்டது..நான் படுத்திருந்த வார்டுல வேல செய்ற நர்ஸொண்டு..”
” நீ அவள லவ் பண்றியாம்..கல்யாணம் செய்யப்போறியாம் ? “
” என் மேல ரொம்ப அன்பு அவளுக்கு..அவ மேல எனக்கும் விருப்பமொண்டிரிக்கு..நானின்னும் அவக்கிட்ட அதச் சொல்லல்ல..ஆனா நான் சொன்னா மறுக்க மாட்டாளெண்டு எனக்கு நல்லாத் தெரியும் “
” உனக்குப் பைத்தியமாடா மச்சான் ? உனக்கு ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..உன்ன நம்பி உன்னோட குடும்பம் இரிக்கு..நீ இப்படிச் செஞ்சா ஊருல யாரு உன் குடும்பத்த மனுஷனா மதிப்பாங்க ? “
” ம்ம்..எக்ஸிடண்ட் பட்டுத் தன்னந்தனியா ஹொஸ்பிடல்ல இரிக்கிறப்போ ஊருலிரிந்து எவன் வந்தான் என்னப் பார்க்க? அந்தப் புள்ளதான் பார்த்துக் கொண்டது. கல்யாணமெண்டொண்டு கட்டினா அவளைத்தான் கட்டுவேன்..நீதான் மச்சான் ஹெல்ப் பண்ணனும் ” என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவனிடம் இதற்கு மேல் இது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தால் என்ன ?
” அவளுக்கு விருப்பமா இந்த லவ்வுல ? “
” நான் இன்னும் வெளிப்படையா அவக்கிட்டச் சொல்லல..நேத்தும் கோல் எடுத்தேன்..ஒரு ஜாதிக் குளிசையை மறந்து வச்சிட்டுப் போயிட்டனெண்டு மறக்காம பார்மஸில வாங்கிக் குடிக்கச் சொன்னா..”
” அவக்கிட்டக் கேட்காம நீ கல்யாணம் வரைக்கும் கற்பன பண்ணி வச்சிரிக்க “
” இல்ல மச்சான்..அவள் கட்டாயம் ஏத்துக் கொள்வாளென்ற நம்பிக்கை எனக்கிரிக்கு. நீதான் மச்சான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். எங்கட ஊட்டுல விருப்பப்பட மாட்டாங்க..நீதான் எடுத்துச் சொல்லணும் “
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்காளானேன்..வஜீஹா மாமிக்கு சார்பாக இவனிடம் பேச வந்தால் இவன் சார்பாக அவரிடம் பேசப் போகவேண்டும் போலிருக்கிறது.
“சரி..அப்ப நாளைக்கே கேட்டுப்பாரு…நான் வேலைக்குப் போறதுக்கு முந்தி ஏதாச்சும் ஒண்டு செஞ்சு வச்சிட்டுப் போறேன் “
இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் திரும்பவும் மழை பிடித்துக்கொண்டது. சேற்றுப்பாதையில் சைக்கிள் மிதித்து விழுந்து தொலைத்தால் திரும்பவும் விபரீதமென சைக்கிளை எனது வீட்டில் வைத்து விட்டுக் குடையைக் கொடுத்து நடந்து போகச் சொல்லியனுப்பினேன். அவன் போய் வெகுநேரமாகியும் எனக்குத் தூக்கம் வரவில்லை.
மழை விட்டிருந்த மறுநாட் காலை பத்து மணிக்கெல்லாம் வந்த அவனது தொலைபேசி அழைப்பு எங்கிருக்கிறேனெனக் கேட்டு உடனே என்னைச் சந்திக்கவேண்டுமெனவும் வீட்டிலேயே இருக்கும்படியும் உடனே வருவதாகவும் சொன்னது. நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
குடையைத் தந்தவனின் முகம் சோர்ந்துபோயிருந்தது.. வீட்டில் ஏதாவது பிரச்சினை பண்ணி விட்டு வந்திருப்பானோ ? மேலும் என்னை யோசிக்கவிடாமல்
” போன்ல அவக்கிட்டப் பேசினேன் ” என்றான்.
” ஓஹ்..என்ன சொன்னா? “
” ஒரு நோயாளிய அன்பாப் பார்த்துக்கொள்றது நர்ஸ்மாரோட கடமையாம்..அவளுக்கு என்னை மாதிரியே ஒரு நானா ஆர்மில இருக்கானாம்..அதனாலயும்தான் அன்பாப் பார்த்துக்கொண்டாளாம் “
” ம்ம்..நல்ல விஷயம். நீதான் தப்பாப் புரிஞ்சுக்கொண்டிரிக்கிறாய்..நீ கேட்டதுக்கு அவ கோபப்படாமயா இரிந்தா ? “
” இல்லடா..நான் கேட்ட உடனே சிரிக்கத் தொடங்கிட்டாடா மச்சான்..அவளுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு வயசுல ஒரு புள்ளயும் இரிக்காம் ” என்றான்.

சொற்குறிப்புக்கள்
# ஊடு – வீடு
# ராத்தா – அக்கா
# உம்மா – அம்மா
# வாப்பா – அப்பா
# அண்ட அசலுல – அயலில்
# குளிசை – மாத்திரை
# நானா – அண்ணன்

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்
சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று
இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது
சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி மிகக்கடின பணியொன்று வனச்சிறுவனுக்கிடப்பட்டது
எந்தக் கொம்பிலும் ஏறித் தேனெடுப்பவன் கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன் வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும் அமாவாசை நிசியிலும் அச்சமின்றிப் போய்வருபவன் முதன்முதலில் அயர்ந்து நின்றான் கட்டளையை மறுக்க வழியற்றும் மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும் விதிர்த்து நின்றான்
செய்வதறியாச் சிறுவன் நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான் அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன் கரங்களை நுழையச் செய்திவன் ‘தண்ணீர்’ என்றான் காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன் சிறுவனின் பார்வைக்கு மட்டுமென நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின வண்ண வண்ண மீன்கள்
கற்றுக் கொடுக்கவேண்டிய கால எல்லை முடிந்ததெனச் சொல்லி அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில் விடியலின் கீற்றுக்கள் மலைகளின் கீழால் புதையுண்டு போக விருட்ச இலைகள் நீரைச் சிதறிட மழை தூவிற்று
வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி செவிட்டூமைக் குருடனை மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள் மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி எல்லாக் கேள்விகளுக்கும் மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

சேகுவேராவின் சேற்று தேவதை

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை – 2010)

யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.
வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.
அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.
இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.
கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன. தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.
யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.
பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.
இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.
இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.
இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.
அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.
அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.
அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.
பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.
இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.

திண்ணை

மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார். தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெற்றிலை, பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் இலேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா, கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன். இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று. மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று. மழையின் எந்தப் பிரக்ஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது. மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக, நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது. ஊருக்கே பழம்வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு, கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும். அந்தக் குளிர்மை, மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும். வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும். அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை, கதையாகச் சொல்லியிருக்கிறார். முன்னர் பாய் பின்னுவதற்கும், அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும், மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது. முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது. திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த, எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும். நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும், அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்துபோக வேண்டும். ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க, வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த, வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு. வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி. அழகழகான ரோஜாக்களும், ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும். தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும், அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக், பிஸ்கட், இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன். டீச்சருக்கு நேர்மாறு அவர். டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை. எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும். அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது. எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

“ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா? மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?”

பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும். நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

“பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர.”

மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். மழையும், திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும். அவரது பொக்கை வாய், வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும், திண்ணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப்பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்? இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்? அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார். பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக்கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது. புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள். மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது. சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று, சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும், என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம். பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார். மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர். நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும். மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

“மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல”

“அப்படியில்ல மாமி. சரியான வேலை. சனி, ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா, பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு”.

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை. இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி, இறக்கி விட்டிருந்தார். பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது. ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ? யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ? டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி, இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும், சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார். மடக்கக் கூடியதான சிறு குடையும், கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும். காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன. இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான். மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார். ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார். அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க, அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி, வாயெல்லாம் வெந்துவிட்டது. டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம். நாங்களெல்லோரும் பதறிவிட்டோம். அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் ‘எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே’ எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

“மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?”

“என்ன மகன்?”

“இல்ல! டீச்சர்…?”

“ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது. எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது? அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே…?”

“இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே? சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு…”

“அப்டியில்ல மகன். நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு, இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க. இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க. இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல. பென்ஷன் காசு வருது. புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது. பின்னக் காலத்துக்கு அது போதும்தானே “

மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது. டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது. மாமா, மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன். திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு, பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார். மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து, நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை


வளைதலும்வளைந்து கொடுத்தலுமானநாணல்களின் துயர்களைநதிகள் ஒருபோதும்கண்டுகொள்வதில்லை
கூடு திரும்பும் ஆவல்தன் காலூன்றிப் பறந்தமலையளவு மிகைத்திருக்கிறதுநாடோடிப் பறவைக்கு
அது நதி நீரை நோக்கும் கணம்காண நேரிடலாம்நாணல்களின் துயரையும்
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்துதான் கண்டுவந்தஇரயில்பாதையோர நாணல்களின் துயர்இதைவிட அதிகமெனஅது சொல்லும் ஆறுதல்களைநாணல்களோடு நதியும் கேட்கும்பின் வழமைபோலவேசலசலத்தோடும்
எல்லாத்துயர்களையும்சேகரித்த பறவைதன் துயரிறக்கிவரதொலைவானம் ஏகும்அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்கண்டுவரக் கூடும்

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்
வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்
தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை
அக்கழுகு அழகிய பெண்களின் மாமிசப்பட்சி அவர்தம் வாழ்வினைக் கொழுவி உயிர் எஞ்சத் துண்டுகளாய் வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும் கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்
அவள் செந்தாமரை மலரொத்தவொரு தேவதைக்குப் பிறந்தவள் ஏழ்மையெனும் சேற்றுக்குள் வனப்பு நிறைக்க மலர்ந்தவள் அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா அப்பாவிப்பெண்ணக் கழுகின் கூர்விழிகளுக்குள் விழுந்தவள்
சுவனக் கன்னியையொத்த தூய்மையைக் கொண்டவளின் கவனம் பிசகிய கணமொன்றிலவன் கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள் மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று என்றுமே உணர்ந்திராதவொரு விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று
நேசத்தினைச் சொல்லிச் சொல்லி அவளது சதைகளை அவ்விஷப்பட்சி தின்றரித்து முடிந்தவேளையில் வாழ்வில் காணாவொரு துயரத்தை அவள் கண்கள் விடாதுசொரிந்திட எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன் வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான் இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின
ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும் மீளப்பெறமுடியா இழப்புக்குமாக வசந்தகாலத்து வனங்களின் வண்ணத்துப்பூச்சிகளைத் தன் அரணாக அவள் சூடிக் கொண்டாள் இன்று மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத் தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள் இடையறாது படகை வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

முக்காட்டு தேவதைகள்

தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்