கவிதையும் ரசனையும் – 17 –1


தேவதச்சனின் முழுத் தொகுப்பு


அழகியசிங்கர்


நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு.
இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார்.
கவிதைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு கவிதைகள் எழுதுபவர் தேவதச்சன்.
பெரும்பாலும் கவிதைகள் படிக்கும்போது எத்தனைக் கவிதைகளை ஒரு புத்தகத்தில் என்னால் ரசிக்க முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன்.
பலருடைய கவிதைப்புத்தகங்களில் என்னால் பெரும்பாலான கவிதைகளை ரசிக்க முடியவில்லை.
கவிதைகள் எழுதும் பலருக்கும் எதற்குக் கவிதை எழுத வேண்டுமென்று தெரிவதில்லை. கவிதை மாத்திரம் அவர்களுக்குத் தானாகவே வந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
அதாவது கவிதை அவருடைய பழக்கத்திற்கு ஆளாகாமல் கவிதை செயல்படுவதாக நினைக்கிறேன்.
ஆனால் தேவதச்சன் உணர்ந்து கவிதை எழுதுகிறார். இத்தனை வரிகள்தான் கவிதைக்கு என்று முன்னதாகவே நினைக்கிறார். அல்லது அவருடைய கவிதைகள் குறிப்பிட்ட வரிகளுக்குப் பின்னால் போகவிடுவதில்லை.
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒரு கவிதையைப் படித்துவிட்டுக் கடக்கும்போது திரும்பவும் கடந்து போன கவிதைக்கே மனம் திரும்பப் போய் விடுகிறது ஏன் படிக்கிறோம் என்ற அலுப்பே ஏற்படுவதில்லை.
அவர் கவிதைகள் உள்முகத் தேடல்கவிதைகள். இன்று பல வகைமைகளில் கவிதைகள் எடுத்துக்கொண்டு வரலாம். எல்லா வகைமைகளிலும் கவிதைகளைப் படிக்கப் படிக்க அலுத்துப் போக நேரிடும்.
ஆனால் தேவதச்சன் கவிதைகள் அலுப்பதில்லை. ஏனென்றால் அவருடைய கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகள்.
கவிதைகள் எழுதுபவர்கள் எல்லோரும் அவர்களை அறியாமலேயே உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பார்கள். சில கவிதைகள் தவிர சாதாரணமாகப் பல கவிதைகள் எழுதியிருப்பார்கள்.
ஒரு கவிதைப் புத்தகம் முழுவதும் பெரும்பாலும் உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பவர் தேவதச்சன்.
பெரும்பாலோர் கவிதைகள் என்ற பெயரில் கருத்துக்களைக் கொட்டியிருப்பார்கள். சிலர் காதல் வசப்பட்டு காதல் கவிதைகளாக எழுதி இருப்பார்கள்.
அப்படி எழுதுபவர்கள் கூட உள்முகத் தேடல் கவிதைகளை அவர்களை அறியாமல் எழுதியிருப்பார்கள்.
பிரமிளின் ஒரு கவிதையை எடுத்துக்கொள்ளுங்கள்.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நள்ளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது


பிரமிளின் இந்தப் பிரபலமான கவிதை ஒரு உள்முகத் தேடல் கவிதை. 1980ஆண்டு எழுதி உள்ளார். எந்தத் தருணத்திலும் எப்போதும் இந்தக் கவிதையை ஒருவர் படித்துக்கொண்டிருக்கலாம். கொஞ்சங்கூட அலுக்காது.


இதில் கவிதை கூறும் ரகசியம் என்ன என்பதைக் குறித்து ஒருவர் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. தேர்ந்த வாசகர் இந்தக் கவிதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதோடல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டாடவும் செய்வார்.
‘ஆலிலையும் நெற்கதிரும்‘ என்ற சச்சிதானந்தன் என்பவரின் கவிதைத் தொகுப்பை சிற்பி மொழிபெயர்த்துள்ளார்.


அந்தத் தொகுப்பைப் பார்த்துக்கொண்டு வரும்போது ஒரு உள்முகத் தேடல் கவிதைத் தென்பட்டது. பொதுவாக எல்லாக் கவிதைகளும் சிறப்பாக எழுதப் பட்டிருந்தன. ஒரு கவிதை மட்டும் விசேஷக் கவனமாக என் மனதில் பட்டது. மறக்கப்பட்ட குடை என்ற தலைப்பில் அக் கவிதை எழுதப்பட்டிருந்தது.
மறக்கப்பட்ட குடை


மறக்கப்பட்ட குடை

மழையை நினைத்துப் பார்த்தது

இடியோசை கேட்டுத் தோகை விரித்தது

மலைக் காக்கைபோல

குன்றுகளின் மேல் பறந்து வந்து இறங்கியது

எருமைபோல வயல்

வரப்பில் ஆடி நடந்தது “

இப்போது சிறகு விரிக்க முடியாமல்

மூலையில் இருக்கையில்

எட்டுக்கால் பூச்சி

நரைத்த உடலில்

வலை நெய்ய, மரத்துப் போகிறது


மேகங்கள் மூடிய ஒரு நாளில்

ஒரு கை அதை விரிக்கும்.

மழையின் நடனத்தில்

கருத்த இளமை திரும்பிவரும்,

குடைகளின் திருவிழாவில்

நெற்றிப் பட்டம் கட்டிக் கொண்டு.


இக் கவிதையைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? இது ஒரு உள்முகத் தேடல் கவிதையாகத் தோன்றவில்லையா? மறக்கப்பட்ட குடை என்னன்வோ யோசனைப் பண்ண வைக்கிறது.


ஒரு உள்முகத் தேடல் கவிதை வாசகனைக் கவர்ந்தால் போதும். முழு அர்த்தமும் தெரிய வேண்டும் என்பதில்லை.


கவிஞன் தன்னை அறியாமல் எழுதுகிற கவிதைதான் அது.


இன்னொரு கவிதை. ஞானக்கூத்தன் எழுதியது.

பட்டாம்பூச்சி என்ற கவிதை

மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சி

தோட்டத்தில் நுழைந்தது

சமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போல

வெண்டை பூத்திருந்தது

கத்திரி பூத்திருந்தது

அவரை பூத்திருந்தது

கட்டிவிடப்பட்ட கயிறுடன்

புடலை தொங்கிக் கொண்டிருந்தது

பட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்

பறந்தது, உட்கார்ந்தது.

அடுத்த பூவை நாடிற்று

உதவி செய்யவா என்றேன்

சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று


உள்முகத் தேடல் கவிதைக்கு மேலே குறிப்பிடப்பட்ட ஞானக்கூத்தனின் கவிதையும் உதாரணம். இப்படிப் பலருடைய கவிதைகளை உற்று நோக்கினால் உள்முகத் தேடல் தென்படாமல் இருக்காது. இந்த உள்முகத் தேடல் கவிதை அபூர்வமாகத்தான் பெரும்பாலான கவிஞர்களிடம் தென்படும்.


இதில் தேவ தச்சன் விதிவிலக்கு.

அவருடைய ஒவ்வொரு கவிதையும் அபூர்வமான தன்மை உடையதாக இருக்கிறது.


முழு மரம்

குழந்தை நெளிந்துகொண்டிருக்கிறான். அம்மா

இன்னொரு கையில் தொலைபேசியில்

பேசியபடி இருக்கிறாள்.

தொலைபேசியையும் கீழே

வைக்க முடியவில்ல்லை

குழந்தை நெளிந்தபடி

வழுக்கத் தொடங்குகிறான்.

ஒரு இலை“

நெளிந்து

உதிரும்போது

முழு மரமும்

சாய்ந்து விழுகிறது.


எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் ஒரு உஉள்முகத் தேடல் கவிதையை எழுதியிருக்கிறார் தேவதச்சன். வாசகரை ஊகிக்க வைக்கிறார். அல்லது திகைக்க வைக்கிறார். நான் படித்த மர்ம நபர் என்ற புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போது ஒருவித பரவச உணர்ச்சி .ஏற்படுகிறது இன்னும் அவருடைய கவிதைகளைப் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

(திண்ணை இணைய வார இதழில் (23.05.2021) வெளி வந்துள்ளது)

சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் இன்று

துளி 198

அழகியசிங்கர்

ஆண்டு ஞாபகமில்லை. சுந்தர ராமசாமி சென்னையில் அவர் மனைவியுடன் ஏதோ விழாவிற்கு வந்திருந்தார். அவரை நானும், சிபியும் போய்ப் பார்த்தோம். விருட்சம் இலக்கியக் கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். வீட்டிற்குக் கூப்பிட்டேன். வருகிறேன் என்றார். அவரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டிலிருந்த என் அப்பா, மாமியாரிடம் அறிமுகப் படுத்தினேன். இப்போதைய காலமாக இருந்தால் செல்பி எடுத்துக்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அதெல்லாம் தோணக் கூட இல்லை. மாலைதான் விருட்சம் கூட்டம். வழக்கம்போல் கூட்டம் ஆரம்பிக்கும் முன் பதற்றமடைவேன். அன்றும் அப்படித்தான். சுந்தரராமசாமி காரில் வந்தார். கூடவே சிபிச்செல்வன். நான் பைக்கில் கிளம்பினேன். கொஞ்ச தூரத்தில் என் பைக் பள்ளத்தில் இறங்கி நான் கீழே விழுந்தேன். காரில் இருந்தபடி சுந்தர ராமசாமி இதைக் கவனித்து விட்டார். சிபியை உடனே போய்ப் பார்க்கச் சொன்னார். உடனே சுதாரித்துக்கொண்டேன். அன்று கூட்டம் சிறப்பாக நடந்தது. அவர் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்திருந்தேன். இப்போது அளிக்கிறேன்.….

1Pachaiyappan Ge

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 29.05.2021 அன்று நடந்தது. காணொளி காட்சி.

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி29.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு

. . அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. நாளை (சனிக்கிழமை) மாலை 6.30மணிக்கு 29.05.2021ல் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முறை கவிதையைப் பற்றி உரையாடல் நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறேன். சில கேள்விகளை எழுப்பி அதற்குத் தகுந்த பதில்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

29.05.2021 Zoom MeetingTime: May 29, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89463130247…

Meeting ID: 894 6313 0247Passcode: 432697

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 28.05.2021 அன்று மாலை 6.30 மணிக்கு.

27.05.2021

அழகியசிங்கர்

ஜெயகாந்தன், ஆதவன்  என்ற இரு கதைஞர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து 8 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள். 
எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளவும்.

நூற்றாண்டில் 3 புத்தகங்கள்


அழகியசிங்கர்


சமீபத்தில் என் நண்பர் கு.மா.பா. திருநாவுக்கரசு, புகழ்பெற்ற அவருடைய தந்தையாரின் 3 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்த 3 புத்தகங்களில் நான் அதிகமாக விரும்பியது கு.மா.பா வின் திரைப்படப் பாடல்கள். 1960 ஆண்டில் குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்தில் குமாபாவின் பாடலான


சிட்டு சிட்டு சிட்


என்ற பாடலை எப்படிப் பாடியிருப்பார்கள் என்பதை அறிய ஆசை. மேலும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்குமென்று தோன்றுகிறது. அவருடைய அம்பிகாபதி என்ற படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடலான ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே…கண்ணே’ என்ற பாடல் எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும்.1957ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை அவர் இயற்றிய 256 பாடல்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் சில பாடல்கள் பதிவு செய்யக் கிடைக்கவில்லை.
அவருடைய மூன்று புத்தகங்களையும் வழக்கம்போல் நடைபெற்ற கவிதை வாசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். எல்லோரும் புத்தகங்களை வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.


பாடல்களைத் தவிர அவருடைய சிறுகதைகள், அவருடைய வாழ்க்கை வரலாறும் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்புக்கு : திருநாவுக்கரசு – 9840634279

கொரோனாவின் கொடூர முகம்..

 துளி 196

அழகியசிங்கர்

கொரானாவால் ஏற்படும் மரணத்தை விட, அது குறித்து ஏற்படும் அச்ச உணர்வு காரணமாகப் பலர் இறந்து விடுகிறார்கள்.


சில தினங்களுக்கு முன் கி.ரா இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி திருப்பூர் கிருஷ்ணனை அழைத்தேன். அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரியப்படுத்தினார்.

அவர் வீட்டில் மூவருக்கும் கொரானா என்று. அவர் புதல்வனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். அவரும் அவர் மனைவியும் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அப்போது கூறியதால் நான் யாரிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை.


அவருடைய பையன் இளவயது என்பதால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன்.
இன்று அவர் புதல்வன் இறந்து விட்டானென்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி. அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? குறிப்பாகத் திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி எப்படித் தாங்கிக் கொள்வார்?


உண்மையில் கொரானா என்ற கொடிய நோயைவிட, அதன் பயம் ஒருவரை கொன்று விடும் என்று தோன்றுகிறது.


அதனால் தயவு செய்து கொரானா செய்திகளைப் படிக்காதீர்கள், தினசரிகளைப் பார்க்காதீர்கள், குறிப்பாக முகநூலைத் தவறுங்கள்.

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

அழகியசிங்கர்

லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை. அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.

எல்லாவற்றுக்கும் மொட்டை மாடிதான். அதிகம் குடி இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இதெல்லாம் கதையில் நேரிடையாக சொல்லப்படவில்லை.

கதையை இப்படி ஆரம்பிக்கிறார். ‘அந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கொடுப்பனை இருக்காது. நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பி கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது.’

வயதானவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். இவர் கனவு காண்பதற்குத்தான் மொட்டை மாடிக்கே போகிறார்.

அவர் வீட்டில் உள்ளிருந்து மொட்டை மாடிக்கு ஏணி மூலமாகத்தான் போக முடியும். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார் தினமும்.

தூக்கக் கலகத்திலிருந்தவரை அவள் பெண் சாந்தா எழுப்புகிறாள். சாந்தாவைப் பற்றி விவரிக்கும்போது பரந்த முகத்தில் பேரழகு என்று விவரிக்கிறார்.

அவர் புதல்வன் சேகர் வெட்டி வீழ்த்திய முள்ளை வென்னீரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான்

இங்கே ஒரு வர்ணனை வருகிறது. கிணற்றடியில் வாழை இலைகள் நர்த்தனமாடி வரவேற்கின்றன. கவித்துவமான வரிகள். லாசரா எப்போதும் தன் கதையில் கவித்துவமான வரிகளைக் கொண்டு வந்து விடுவார்.

க.நா.சு எப்போதும் கவிதையை உரைநடையாக மாற்றி எழுதிவிடுவார். ஆனால் லாசாராவோ உரைநடையில் கவித்துவ நடையைக் கொண்டு வருகிறார். அதுதான் அவருடைய சிறப்பு.

நடுப்பிள்ளையும்ல அடுத்தவனும் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இந்த வீட்டில் ஒரு பேஸ்ட்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசச் கடைசிதானா?’

என்று கேட்கிறார்கள்.

‘ஏன் மண்ணு இருக்கே’ என்று பெரியவர் நக்கலடிக்கிறார்.

டாமி என்ற நாய் வாலை ஆட்டிக்கொண்டு வருகிறது. இங்கே எழுதுகிறார்: ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை.

எட்டி உதைக்கிறார். உதையை வாங்கிக்கொண்டு குரைக்கக்கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக் கொள்கிறது.

நடுப்பையன் பெரியவரைக் கேட்கிறான்.

‘என்ன அப்பா வாரம் ஒருநாள் மௌன விரதம் என்று வாயை அடைச்சுட்டு கண்ணால் பேசிக்கொண்டிருக்கிறாய், பேசுகிறாயா சுட்டெரிக்கிறாய். ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு கதவைத் திறந்து விடுகிறாய். இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங்களைத் திட்டிவிடலாம் என்கிறான்.’

‘நான் பதில் பேசவில்லை. பேசும் நியாயம் எப்பவோ தாண்டியாச்சு’ என்கிறார் பெரியவர்.

இந்தக் கதையில் எல்லோரும் பெரியவர் செய்கையை அங்கீகரிப்பதில்லை. அவர் சொல் கேட்பதில்லை. இதை விவரித்துக்கொண்டே போகிறார்.

நட்ட பயிர் அம்புகளாய்க் காய்கிறது. சரப்படுக்கையில் படுத்து. உன் உத்தராயணத்துக்குக் காத்திரு என்ற ஒரு வரி வருகிறது நடுவில்.

அவர் இருப்பிடத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம்பாளமாக வெடித்திருக்கிறது.

இங்கே ஒரு வரி அற்புதமாக எழுதியிருக்கிறார் லா.ச.ரா. தூரத் தூரக் கட்டடங்கள் கானலில் நடுங்குகின்றன.

இங்கு மனைவி ஹரிணி பற்றி விவரிக்கிறாள்

‘மண்டை இடிக்கிறது, பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றி விட்டுப் போய் விட்டான். ஹரிணி தயவு பண்ணனும். ஆனால் அவள் அயர்ந்து தூங்குகிறாள்.’

அவருக்கும் ஹரிணிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் அவள் கொல்கிறாள்.

‘அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுடடு, ஒரு நாளை பார்த்தாப்போல் நான் வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டு …ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ..எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்க.’.என்கிறாள்.

அடுத்தது மனைவி முழங்குவது. ‘மொட்டை மாடியில் காத்து வாங்கலாம்னா படி கிடையாது. என்ன வீட்டில் வாழறோமோ?’

‘மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படியும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம.’

ஹரிணிக்கு ஏற முடியாத எரிச்சல் என்கிறார் பெரியவர்.

இப்போது எல்லோரும் அவரை விட்டுவிட்டு வெளியில் போய்விடுகிறார்கள். அவர்கள் புதல்வர்கள் மாம்பலத்திஙூருகும் பாட்டி வீட்டிற்குப் போய் விடுகிறார்கள்.

மனைவியும், பெண்ணும் கட்டை தொட்டி நாடார் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்குப் போய் விடுகிறார்கள்.

இந்த இடத்தில் சொல்கிறார் : நான் இப்போது உணர்வது என் தனிமையையா வெறுமையையா..

எல்லோரும் போனபின் இவருடைய பொழுது போக்கு மொட்டை மாடிதான்.

மாடிக்குப் போய் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அப்படி என்ன யோசிக்கிறார் என்பதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

‘சரி, என்ன செய்யப் போகிறாய். அத்தனை நட்சத்திரங்களையும் வாரிச்கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பீச்சில் சுண்டலா விற்கப்போகிறாயா. அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப் போகிறாயா.’

இப்படியெல்லாம் மொட்டை மாடியில் யோசிக்கிறார். பின் கீழே இறங்கி வருகிறார்.

‘இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் நான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ?’

அப்படியே சாய்ந்து முள் படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து விழுந்து விடுகிறார்.

‘சாந்தாவும், ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?’ என்று கேட்கிறார்.

அவருடைய நாய் ஓடிவந்து அவர் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்த பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து, மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை….

இதுவேதான் அவர் உத்தராயணமா? என்பதுடன் கதை முடிகிறது.

நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. நிறையா கதைகள் நினைவோடை உத்தியில் கதைகள் எழுதியிருக்கிறார் லா.ச.ரா. இன்னொரு எழுத்தாளரைப் பற்றியும் நான் இங்குக் குறிப்பிட வேண்டும். அவர் நகுலன். நினைவோடை உத்திக்குப் பெயர் போனவர்.

((திண்ணை முதல் இணைய வார இதழில் 16.05.2021 இல் வெளி வந்தது ) See Less

52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

. 22.05.2021 அன்று சனிக்கிழமைமை மாலை 6.30 மணிக்கு. அதன் காணொளி. 


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நேற்று (22.05.2021) நடந்தது.  மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்புக் கூட்டம்.  அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

சூம் மூலமாக விருட்சம் – குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டத்தின் ஒளிப்பதிவு.

17.05.2021 அன்று காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக 21.05.2021 அன்று வெள்ளிக்கிழமைûஅ மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தின் ஒளிப்பதிவு. கீழ்க்கண்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு பேசினார்கள். உயர் திரு 1. பா.செயபிரகாசம் 2. சிட்டி வேணுகோபாலன் 3. பாரதிமணி 4. இந்திரன் 5. அம்ஷன்குமார் 6. தமிழ்ச்செல்வன் 7. நாறும்பூநாதன் 8. டாக்டர் பாஸ்கரன் 9. உதயசங்கர் 10. ரவீந்திரன் 11. எஸ்.வி வேணுகோபாலன்