எதையாவது சொல்லட்டுமா 35

சிறிது நேரத்திற்குமுன் லட்சுமிபதி போன் செய்தார். 31.1.2011லிருந்து இந்த ஆண்டு முடியும்வரை க.நா.சு நூற்றாண்டு. நாம் அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் சீகாழியில் இருப்பது ஒரு குறையாகப் பட்டாலும், க.நா.சு விஷயமாக எதாவது செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் போடலாம் என்று அவரிடம் குறிப்பிட்டேன். பின் அவருடைய புத்தகங்கள் எதாவது கொண்டு வரலாம். அதற்கு இப்போது எந்தத் தடையும் கிடையாது. நான் ஏற்கனவே மையம் வெளியீடாக வந்திருந்த க.நா.சு கவிதைகள் சிலவற்றை திரும்பவும் அச்சடிக்க வைத்திருக்கிறேன். உண்மையில் புத்தகக் காட்சியின்போது அதை இலவசமாக அளிக்க தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

க.நா.சுவை அவருடைய கடைசிக் கால கட்டத்தில்தான் சந்தித்தேன். புத்தகம் படிப்பது எழுதுவது இதைத் தவிர வேறு எதையாவது சிந்தித்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஒருமுறை நான், நகுலன், வைத்தியநாதன், ராஜகோபாலன், ஞானக்கூத்தன், ஸ்ரீனிவாஸன் என்று அத்தனைப் பேர்களும் க.நா.சுவை அவருடைய மைலாப்பூர் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் மைலாப்பூரில் உள்ள ராயர் கபேக்குச் சென்றோம். க.நா.சுவுடன் என்ன பேசினோம் என்பது ஞாபகத்தில் இல்லை. ராயர் கபேயில் டிபன் நன்றாக இருக்கும். க.நா.சுவிற்கு எங்கே டிபன் நன்றாக இருக்கும் என்பது தெரியும். அவர்தாதன் எங்களை அங்கு அழைத்துக்கொண்டு போனார். ராயர் கபேயைப் பற்றி அவர் ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையின் தலைப்பு கி.வா.ஜ. இதோ அவர் எழுதிய கவிதை.

கி.வா.ஜ வை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்
ஆனால் அவருக்கு நான்
கடன் பட்டவன். 1938ல்
எனக்கு ராயர் கபேயை –
கச்சேரித் தெரு மைலாப்பூரில்
காட்டித் தந்தார். இப்போதும்
பல சமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிட
போய் வருகிறேன்.

க.நா.சு தன் கவிதைகளைக் குறித்துத் தெளிவான முடிவுகளை வைத்திருந்தார். இன்னும் கேட்டால், ந.பிச்சமூர்த்தியை விட க.நா.சுவைத்தான் புதுக்கவிதையின் தந்தை என்று குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. ஏனெனில் கவிதையின் தன்மையை உடைத்துப் புதுமை செய்தவர் க.நா.சு.

இரண்டு வார்த்தைகள் என்று க.நா.சு எழுதியதை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

கவிதைக்கு முன்னுரையோ பின்னுரையோ அல்லது வியாக்கியான விரிவுரைகளோ அநாவசியம் என்கிற நினைப்பும் எனக்குண்டு.

1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் காமெண்டுகளாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒரு விதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கவிதை எழுதுவதற்கு உள்ளூர இருக்கிற உந்துதல் அடிப்படையான மனுஷ்யத்வம் நிறைந்த உந்துதல் . அவரவர் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் கவிதை எழுதிப் பார்ப்பதும் வெளியிட முடியுமானால் வெளியிடுவதும் உலகில் தவிர்க்க முடியாத காரியம்.

எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார நம்பிக்கை. அது நிஜமாகவே கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால் தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன் நான்.

இந்த ஆண்டு முழுவதும் க.நாசுவை நினைவுப்படுத்தி எதையாவது செய்ய முடியுமா?

எதையாவது சொல்லட்டுமா – 34

இந்த ஆண்டில் பரிசுப் பெற்ற மூன்று படைப்பாளிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். சாரல் பரிசு பெற்ற அசோகமித்திரனுக்கு, விளக்கு பரிசு பெற்ற திலீப்குமாருக்கு, சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாஞ்சில் நாடனுக்கு. வாழ்த்துகிறேன்.

கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து ஒரு வித பரபரப்பு. அந்தப் பரபரப்பில் நான் வழக்கமாகச் செயல்படுவதிலிருந்து பெரிதும் விலகிவிட்டேன். என் பெண்ணின் இரண்டாவது பிரசவத்தின் போது நான் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருந்தேன். மதியம் ஒன்றரையிலிருந்து 2 மணிவரை பயம். பையன் பிறந்துவிட்டான் என்று வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.

இந்த முறை நான் புத்தகக் காட்சியில் பங்கேற்பதை வீட்டிலுள்ளவர்கள் விரும்பவில்லை. சரியாக புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதுதான் பெண் பிரசவிப்பாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் இதை விடக்கூடாது என்று தோன்றியது. நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரமுடியவில்லை. புத்தகங்கள் கொண்டு வரமுடியவில்லை. இந்த இரண்டுமே இல்லாமல் புத்தகக் காட்சியா என்று தோன்றியது. ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள 2 பேர்கள் தேவை. மற்றபடி விடுமுறை தினங்களில் நான் வந்துவிடுவேன். அதே போல் தேவராஜ் என்ற நண்பரையும், என் உறவினர் பையன் ஏற்பாடு செய்த அசோக் என்பவரையும் ஏற்பாடு செய்துவிட்டு, புத்தகக் காட்சியைத் தொடங்கி விட்டேன்.

மிகக்குறைவாகக் கொண்டுவந்துள்ள விருட்சம் புத்தகங்களைப் பரப்பியபின் இடம் அதிகமாக இருந்தது. அந்த இடத்தை மற்றப் புத்தகங்கள் எடுத்துக்கொண்டன. குறிப்பாக கிழக்கு, ஆனந்தவிகடன், காலச்சுவடு பதிப்பகங்கள்.

30ஆம் தேதியே பெண்ணும் குழந்தையைப் பெற்றுவிட்டாள். சீர்காழியில் நான் அலுவலகம்போய் ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தேன். முதலில் புத்தகங்களை ஸ்டாலுக்கு எடுத்துக்கொண்டு போக ஒருநாள் லீவு எடுத்திருந்தேன். அலுவலகத்தில் எனக்குப் புத்தக ஞாபகமே. கூடவே புதியாதாகப் பிறந்த பேரன் ஞாபகம்.

நான் எதிர்பார்க்காமலே இந்த முறை நன்றாகவே புத்தகங்கள் விற்றன. எல்லாம் இரவல் புத்தகங்கள். ”என்ன தேவராஜ், விருட்சம் புத்தகங்கள் விற்றனவா?” என்று போனில் கேட்பேன். ”இல்லை…இல்லை,” என்பார் தேவராஜ். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும்.

வழக்கம்போல் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்தேன். எல்லோர் போட்டோ க்களையும் எடுத்துக்கொண்டேன். எதிர் ஸ்டாலில் எனக்குப் பிடித்த ஜே கிருஷ்ணமூர்த்தி ஸ்டால். நான் முதல் வரிசையில் என் ஸ்டால் இருந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் போகவில்லை.

ஸ்டாலில் நான் சந்தித்த படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். எல்லாம் dropouts. இலக்கிய உலகில் dropouts அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் புத்தகங்கள் வெளிவந்து அவர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்தன. இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. அவர்களும் எழுதுவதிலிருந்து பெரிதும் விலகி dropout ஆக மாறிவிட்டார்கள். dropout ஆக ஏன் காலம் அவர்களை மாற்றியது. எழுதுவதெல்லாம் புத்தகமாக வர வழி கிடைக்காமல் இருக்கும். அப்படியே புத்தகமாக வந்தாலும் யாரும் யாரும் சீண்டுவார்கள் இல்லாமல் போயிருக்கும். அவர்கள் dropouts. ஆக மாற எல்லாவித நியாயமும் இருக்கிறது.

நானும் dropout ஆக மாறாமலிருக்க விருட்சம் பத்திரிகையும், புத்தகங்களையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். புத்தகக் காட்சியில் dropouts புத்தகங்களை விற்பனைக்கு வைத்துக்கொண்டிருக்கிறேன்.

சொல்லில் முடிவதில்லை என்ற ஒரு ஆதங்கம்

என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது.

ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து ‘இதுதான் ‘ என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகிறது.
ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்கத் தொனியை இந்தக் கவிதைகள் வெளியிடுகின்றன.

இன்னொன்று : இவை ஜெகதீசனின் வாழ்க்கையின் சில சிதறல்களை நமக்கு அளிக்கின்றன.

இத்துடன் ஒட்டியே ஜெகதீசனின் வாழ்க்கையில் கடந்து போகும் நபர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் நடைச் சித்திரமாய் வந்து போகின்றன. கவிதையின் மூலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கவிதைக்கான நம் அனுபவம் இன்னமும் விரிவடைந்து ரசனை பெருக்கம் கொள்கிறது. எல்லாக் கவிதைகளுக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படிச் செய்வது சாத்தியம் தானா என்று கேள்வி எழலாம். கவிதை தன்னுள் நிறைவு கொண்டிருப்பதெனில் விளக்கங்களும், கவி மூலங்களும் தேவையா என்று ஒரு கேள்வி எழலாம். இப்படியும் கவிதையை அணுக வழியுண்டு என்பது தான் என் பதில்.

இதுவும் கடந்து போகும்
சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை

ஜெகதீசனின் கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமாய் எழும் அவருடைய கவிதைகள். ஆனால் பல நேரங்களில் சட்டென்று நின்று விடுவதான முழுமையின்மையைக் கொண்டதாய்த் தோன்றுவதுண்டு. இட்டு நிரப்பிக் கொள்ள அவருடைய மற்ற கவிதைகளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு

கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை.
ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுறுத்தும் உணர்த்தும் திறன் பெற்றவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை தூண்டுபவை. ஆற்றல் கொள்ள வைப்பவை. ‘ பாரதியின் சாதி மதங்களை ப் பாரோம் போல….

இன்னொரு வகை கவிதைகள் மண்ணிலிருந்து விண் நோக்கி பாய்பவை. அழுத்தம் பெற்று இறுகிப் போன சுய அனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், மேல் நோக்கி பீறிட்டு பாயும் போது இவ்வகைக் கவிதைகள் பிறக்கும். முன்னது பொது உணர்வைச் சமூகத்தினர் மீது பெய்து, தனிமனிதர்களின் உணர்வுகளைத் தழைக்கச் செய்யுமானால், பின்னது தனி மனித உணர்வு நிலையிலிருந்து பீறிட்டு சமூகத்தின் பொது உணர்வை தூண்டிக் கனியச் செய்யவை.
தனிவுணர்வும் பொது உணர்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவுபடாதவை. பிரிக்கவும் முடியாதவை.

இன்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் கவிதைப் போக்குப் பெருவழக்காகியுள்ளது. மண் பிளவு பட்டுள்ளது. வர்க்கம், சாதி, சமயம், இனம், மொழி, பால் என பிளவுபட்டுக் கிடக்கும் பூமியில் , எங்கோ ஒரு புள்ளியில் வேர் விட்டு மாட்டிக் கிடக்கிறது மனிதம். இந்த மாட்டுதலில் மூச்சு முட்டிப் போகும் மனிதத்தின் உணர்வுகள். விரிவு தேடி, எல்லைகள் அற்ற சுதந்திரம் தேடித் தாவும் இடம் வானமாகத் தான் இருக்க முடியும்.
வானத்துக்குத் தாவத் திராணியற்றுக் கீழ் நோக்கி மண்ணுக்குள் புதைந்து இருண்டு சுருண்டு போவோரும் உண்டு.

வானம் எல்லையற்றது. சுதந்திரமானது. இறக்கைகள் இழக்கும் வரை பறந்து திரிய இடம் தருவது. இந்த மண்ணுக்கும் விண்ணுக்குமான உணர்வின் தொப்புள் கொடியாக உயிர்ப் பாலமாக அமைவது தான் உயிர் உள்ள கவிதை.

தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
உறக்கம் கலையும் முன்

ஜெகதீசன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது . அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது .

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ்வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது . அதைப்போன்றதே ஜெகதீசனின் முக்கியப் படிமங்கள் நடைபாதை, இடங்கள், பொருட்கள் என விரிகிறது.

“பிரிந்து கூடும்
கூடிப்பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்தது அந்த இடம்”

“சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
………………………….”

“அப்பா பொம்மைக்கு மத்தியில்
வரைந்த ஒரு வட்டத்தை
அப்பாவின் வயிரென்றான்”
கவிதைகள் வளமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கவிதைக்கு வளம் எப்படிச் சேர்கிறது?

கருத்துக்களாலா, வார்த்தை ஜாலங்களாலா, உருவ வடிவங்களாலா, புரியாதபடி எழுதுவதாலா, நிகழ்கால நிகழ்வுகளைப் பிரதிபதிப்பதாலா, எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கனவாகக் காண்பதாலா, இறந்த காலச் சீர்கேடுகளைச் சீறுவதாலா, புதிர்களைப் போடுவதலா அல்லது விடுவிப்பதாலா, யதார்த்தங்களைப் பேசுவதாலா, யதார்த்தங்கள் என்ற பெயரில் மன அழுக்குகளைப் பகிரங்கப்படுத்திக்கொள்வதாலா ? கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் தான். எப்படி ? சில கவிதைகளைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

ஆத்மாநாம் ஒரு கவிதை இப்படி வருகிறது:

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆனாலும் மனதிலே ஒரு நிம்மதி

இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுதான் பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன் உடல்மாறி மனம் மாறியபின்

உலகமகா யுத்தம்

ஒரு கூரைமேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில் அணில் பறந்தது காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

பொதுவாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால், கவிஞன் எழுதுவதும் வாசகன் படிப்பதும் ஒன்றல்ல. ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும் அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்பு மட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.

புரிகின்ற கவிதைகளைக்காட்டிலும் புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துகூட நிலவுகிறது. பொருள் விளங்காமையின் காரணம் என்ன? ஞானக்கூத்தன் கூறுவார்: கவிதையில் பொருளைக் கவிதையிடம்தான் கேட்கவேண்டும். ஆசிரியனுக்குத் தெரிந்த பொருள் வாசகனுக்கு எட்டாமல் கவிதையிலேயே உறைந்துவிடுகிறது. இத்தகைய கவிதைகள் முதலில் புதிர் விடுவிக்கும் அறிவார்த்தமான முயற்சிகளையே அவாவுகின்றன. கவிதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே பரிச்சயமான முகத்தைக் காட்டிப் பேசுவது என்ற நிலைமையை இவை காலம் தாழ்ந்தே பெறக்கூடும்.

இன்றைய கவிதை தன் வளர்ச்சியில் புது உருவங்களைப் பெற்று வருகிறது. நீண்ட புதுக்கவிதைகள் இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கர் தற்காலத் தமிழ்க் கவிதைகள் ஆட்டான் புழுக்கைகளைப்போல சின்னச் சின்னதாக இருக்கின்றன என்றபோது கவிஞர் ஷண்முகசுப்பையா மலையாளக் கவிதைகள் காளைமூத்திரம்போல நீண்டிருக்கின்றன என்றாராம். இன்றோ தமிழ்க் கவிதைகள் ஒருவரியிலிருந்து தொடர் காவியங்கள் வரை எழுதப்பட்டு வருகின்றன.

கார்லோஸ் காஸரெங் கூறுவார்:

கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்றை வையுங்கள்
வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்
பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்
அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்
அந்த இடிபாடுகளிலிருந்தே.
நம் கவிகள் இதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

முகங்கள் அவற்றின் பார்வைகள். பார்வைகள் வெளிப்படுத்தும் பயங்கள். முகங்கள் பார்வைகளில் மட்டுமல்ல, அவற்றின் பின்புலக் காட்சியின் நிர்மலமான வெற்றிடத்திலும் அச்சம் படிந்திருப்பதை உணரமுடிகின்றது. இருட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சி. பல நேரங்களில்:

‘கருத்தை மருட்டியது கவலை
கிட்டாத கசப்பும்
நெஞ்சைக் குமட்டிவர
முகத்தின் முக்கால் பரப்பும்
இருள்மண்டி விளிம்புகட்ட
விழியை வெறுவெளியில்
குத்தி நின்றேன்…. (பொன் வேட்டை)
எனச் சொல்கின்ற கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைமுகம்.

அம்முகப்பிம்பங்கள் வெளிப்படுத்தும் அமைதியும் அபயக்குரலும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டுத் தான் ஓய்கின்றன. அம்முகங்களில் ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கத்துடன் விலக முயற்சிக்கும் விட்டில் பூச்சியின் இயல்பு. அச்சத்திற்கும் அமைதிக்குமிடையில் ஊசலாடும் தன்மை முகத்திரையிட்ட அனைத்து முகங்களிலும் வெளிப்படுகிறது. நடைமுறையோடு ஒட்டாத முகங்கள் அவை. உலகவாழ்விலிருந்து தப்பிக்க விழையும் சன்னியாசப் பார்வை அக்கண்களில். அம்மாதிரியான முகங்களில்தான் இவ்வுலகத்தின் இயக்கமும் முடக்கப்படுகிறது என்பதனை உணர்த்தும் புகைப்படங்கள். அனைத்துமே பதுங்கும் தன்மை கொண்ட, தப்பிக்க விழையும் முகங்கள். ஒளிவதற்கு உபகரணங்களாக முகத்திரைகள், துவாலைகள், கண்களை மறைத்த கண்ணாடிகள். அம்முகங்களுக்குள் வேற்றுமையின்றி வெளிப்படும் அபூர்வ அன்னியப் பார்வை. அப்பார்வைகளில் நிறைந்திருப்பது வெற்றிடம்- இருட்டு – சூன்யம். அப்பார்வையை பொருள் கொள்ள நமக்கு இயலாமை அல்லது விருப்பமில்லாமை. அப்பார்வைகளில் ‘ஒரு தொலைநோக்கு ‘ இருந்திருக்கலாம். ‘குறுகிய பார்வை

தவிர்த்திருக்கலாமென்பதான ‘திடீர் ‘ அபிப்பிராயங்கள் பார்வையாளர்களுக்குத் தோன்றக்கூடும். நம் முகங்களை பற்றிய பிரக்ஞையற்று, அடுத்தவர் முகங்களில் மட்டுமே காணவிழைகின்ற எதிர்பார்ப்புகள். சூன்யத்தில், இருட்டைச் சுமந்து எதிர்காலத்தின் அவநம்பிக்கையற்றிருக்கும் பார்வை. இந்த அவ நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. இந்த அவநம்பிக்கையில் நமக்கும் பங்கிருக்கிறது. நம்மைப்போலவே அவைகளும் காத்திருக்கின்றன. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கின்றன. வெளிச்சத்திடமிருந்து திரையிட்டு மறைந்துகொள்ளும் இக்குணத்தின் மூலமென்ன ? நெடுநாளாக கருப்பை இருட்டிற்குப் பழகிப்பழகி, திடுமென்று யோனியளித்த வெளிச்ச மிரட்சி நமது ஒளிசேர்ந்த வாழ்விற்குத் தடையாக வந்து சேர்ந்திருக்குமோ?

நமது பகுத்தறியும் வல்லமையை எப்போதேனும் இம்மாதிரியான முகங்களில், அவற்றின் பார்வைகளில் பிரயோகிப்பதுண்டா ? அம்மாதிரியான பார்வைகளில் வட்டமிடும் பயம் எவரிடம்? ‘விளிம்பைத் தொட்டால் சூழலில் சிக்கிப் புதைந்து விடுவோம் ‘ என்கின்ற சமூக அச்சமா? எதற்காக அம்முகங்களுள் எட்டிப்பார்த்து ஒதுங்கும் பயம்?. எதற்காக இந்த விளிம்பு வாழ்க்கை? இவ்வச்சச் சூழலில் விடுபடும் எண்ணமேதும் அக்கண்களுக்கும் அவை சார்ந்த முகங்களுக்கும் இல்லையா? இவைகளுக்கான பதில் நம்மிடத்திலில்லை.

மாறாக ‘முடிந்தபோதெல்லாம அகழ்ந்தெடுத்து படுகுழியின் விளிம்பில் அவர்களை நிற்கவைத்து பயம் வேண்டாம் என்றால் எப்படி ? ‘ என்ற கேள்வியே பதிலாக நமக்குள்.

மீட்டாத வீணை

இங்கிருந்து போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள் வந்தார்கள்
அவரவர் இடங்களைக் குறித்தே
அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்
அயர்ந்து திரும்பும் வரை
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில் அந்த இடம்.

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைத் தொகுப்பு)
செல்வராஜ் ஜெகதீசன் – அகநாழிகை வெளியீடு
பக்கம் 64, விலை:ரூ.50.00
o

தாத்தாவும் பேரனும்

தாத்தாவின் பிள்ளைக்கு

குழந்தை பிறந்திருக்கிறது.

கொஞ்ச நாளாய்

தாத்தாவிற்கு பேச

எந்த தோழர்களும்

தேவையில்லை…

தாத்தாவும் பேரனும்

ஏதேதோ பேசிக்

கொள்கிறார்கள்..

யாருக்கும் புரியவில்லை

அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்

தாத்தாய் அழகழகாய்

ஏதோ சொல்லிக்

கொடுக்கிறார்…

குழந்தை கையை

அசைக்கிற போதும்

கால்களை ஆட்டி

இசைக்கிற போதும்

சாடையாய் கூடி நிற்கிற

முகத்தின் ஓசையில்

தாத்தா இப்போது

அவரது தாத்தாவின்

மடியினில்

கைகளையும் கால்களையும்

அசைத்து அசைத்து

ஏதோச் சொல்லிக்

கொண்டிருக்கிறார்.

உலகம் திரும்பி

சுற்றிக் கொண்டிருக்கிறது.

எதையாவது சொல்லட்டுமா……../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் ‘தலைகீழ் விகிதங்கள்’ போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அவனைப் பற்றியக் கதையல்ல

வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல்
குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள்
இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல்
இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக்
கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து
கிடந்த தறுவாயில்..

அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த
விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான்
அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு
அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி
அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை.

இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு
தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு
விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு
புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான
முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

அவனைப் பற்றி நினைத்தாலே அவனின் பல பெயர்களும் நினைவுக்கு வருவதை
தவிர்க்க இயலாது, மொன்னை பிளேடு, ரம்பம், செடி, அறுவை, தோல்வாயன், தொன
தொன கிழவி இத்யாதி, இத்யாதி. இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் அவன் அதனை
பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை, அதை பற்றி கவலையுற்று தன்னை மாற்றிக்
கொள்ளவும் எண்ணியதில்லை. பெரும்பாலும் அவன் பேச்சுக்கள் ஒரு
நிலைப்பட்டதாய் இருக்காது, அது சம்பந்தம் சம்பந்தமில்லாத களங்களுக்கு
மாறிக் கொண்டே இருக்கும், சம்பந்தமே இல்லாத சில விடயங்களையும் சம்பந்தம்
செய்யும், அப்பேர்ப்பட்ட தருணங்களில் அவனைக் கண்டு நான் வியக்காமல்
இருந்ததில்லை, என்றாலும் அவன் பேச்சுக்கள் உண்டாக்குகிற அயர்ச்சி
எரிச்சலோடு முகம் சுழிக்கவும் வைக்கும், நானே அவனிடம் அப்படி நடந்து
கொண்டும் இருக்கிறேன்.

பேருந்து இன்னும் புறப்படவில்லை, மனதை இழுத்து செல்கிற அழகிய பெண்களைப்
போல, எதிர்பாராமல் சந்திக்கிற இனிமையான மனிதர்களைப் போல, சுவையான
சம்பவங்களைப் போல, மகிழ்ச்சியான தருணங்களைப் போல, மேகங்கள் வானத்தில்
கூடி கூடி கலைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இந்த மேகங்களை நான்
பார்த்திருக்கிறேனா ? இவை புதிய மேகங்களா ? அல்லது பழயவைகள் தானா ? என்
அருகிருக்கையில் அமர்ந்திருப்பவனை போலத் தான் இந்த மேகங்களுமா,
இங்கிருந்து புறப்பட்ட உடன் இதனுடனான என் தொடர்பு அறுந்துவிடுமா ?

ஓவியங்களில் அவனுக்கு மிகைந்த ஈடுபாடு உண்டு, அதுமட்டுமல்ல கைவினைப்
பொருட்களும் மிக அழகழகாக செய்வான். வீட்டில் அவன் அறையின் நான்கு
சுவர்களிலும் நான்குவித வண்ணப்பூச்சுக்கள் அடித்து வைத்திருக்கிறான்,
வித்யாச வித்யாசமான வண்ண விளக்குகள், மணி போன்ற சின்ன சின்ன விளக்குகள்,
இயற்கை காட்சி போன்ற நவீன ஓவியங்கள் என்று அந்த சுவர்களை மெருகேற்றியும்
வைத்திருக்கிறான். அவன் வீட்டுக்கு சென்று வருகிறவர்கள், அதுவரை
பழக்கமாகாத அவனைப் பார்ப்பார்கள், ஒரு கண்காட்சிக்கு வந்திருப்பதைப்
போன்று உணர்வார்கள். அவனை காண அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தேன்,
வெளியே எங்கோ போயிருப்பதாய் சொன்னார் அவன் அப்பா..

அவனுக்காக அவன் வீட்டில் காத்திருந்தேன், சற்றைக்கு மிகைந்த நேரம்
கழித்தே வந்தான், என்னை கண்டும், எதுவும் பேசுமால் வீட்டின் பின்புறமாய்
சென்றான்

“அந்த தம்பி ரொம்ப நேரமா உனக்காக காத்திட்டு இருக்கு, நீ எங்க போய்
சுத்திட்டு வர” என்ற அவன் அம்மாவின் குரலையும் பொருட்படுத்தவே இல்லை..

என்ன மனுசன் டா இவன் ? இவன பார்க்கத்தானே வந்திருக்கோம், கண்டுக்காம கூட
போறான் என்று அவமானமாக இருந்தது. அதற்கு மேல் அவன் வீட்டில்
அமர்ந்திருக்க தன்மானம் தடுத்தது, கடுப்பாக இருந்தது, அப்படியே சொல்லாமல்
கிளம்பி விடலாம் என்று தோன்றியது.

“சொல்லாமல் கிளம்பினால் அவன் வீட்டார் என்னைப் பற்றித்தான் என்ன
நினைப்பார்கள் ?”

அவன் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவன் வீட்டார்கள் நல்லவிதமாய் தானே
என்னிடம் நடுந்து கொண்டார்கள், உபசரித்தார்கள், அப்படி இருக்க அவர்களிடம்
கூறாமல் செல்வது சரியாக இருக்குமா ?

அவன் அம்மாவை அழைத்து “ நான் கிளம்புறேன் மா” என்றேன்

அவர்களுக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும்

“ஒரு நிமிஷம் இருப்பா, அவன போய் கூட்டியாறேன்” என்று சங்கடமான முகத்தோடு
சொன்னார்கள்

“நீங்க இருங்க மா, நானே போய் அவன பார்த்து சொல்லிட்டு கிளம்புறேன்”

அவர்கள் பதில் சொல்லும் முன் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தேன்

வீட்டுக்கு வரும் பொழுது கொண்டு வந்திருந்த கான்கிரிட் கட்டும் கம்பியை,
கொல்லையில் இருந்த மாமரத்தில் வயிறு தட்டையான “S” போன்ற வடிவத்தில்
வளைத்துக் கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன் டா”

“இரு டா, உனக்கொன்னு செய்து காட்டலாம் தான் இந்த கம்பியை வளச்சிட்டு
இருக்கேன்” என விழிகளில் பெருமை பொங்க சிரித்தான்

வீட்டுக்கு வந்தவனை வா னு கூட கூப்பிடாம வந்துட்டு, எனக்கு செய்து
காட்டுறேன் னு சொல்றியே “ லூசா டா நீ” என்று கேட்க தோன்றியது

ஆனால் கேட்கவில்லை.

திரும்பி பார்த்த போது என் இடது புற வரிசையில் ஜன்னலுக்கடுத்த இருக்கயில்
அமர்ந்திருந்த பெண் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அலைபேசியில் யாரிடமோ
பேசிக் கொண்டிருந்தாள். பொத்தல் விழுந்த ஓடாக அவள் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. ஒரு விடை பெறுதலுக்கான பேச்சாகத்தான்
அது இருக்க வேண்டும், பிரிவுத் துயரில் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்
என்று மனது பேசியது. தலை நிறைய அவள் சூடியிருக்கும் பூக்களில் இப்போது
எந்த நறுமணம் வீசும் ? ஆற்றாமையின் நறுமணமா ? அழுகையின் நறுமணமா ? அவளின்
நறுமணமா ? இல்லை பூவின் நறுமணமா ?

வேரோடு அறுந்துவிடுகிற பிரிவோ ? அல்லது தற்காலிகமான பிரிவோ ? அதை
சொல்லுதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல, வார்த்தைகள் நனைய வழிகிற
கண்ணீரில் அந்த பிரிவின் கனம் குறைந்துவிடுவதில்லை. ஒரு அழுத்தத்தை
என்றுமே அது நம்முள் இருத்துகிறது, அதன் அடர்த்தி அதிகமாகும் போதெல்லம்
யானையின் கால்களை கொண்டு அது நம்மை நசுக்குகிறது. அடர்த்தி குறையும் போது
எறும்பின் கால்களை போல சுருங்கி மனசின் பரப்பெங்கும் ஊர்ந்து கொண்டே
இருக்கிறது.

வளைத்த கம்பியை வைத்து அவன் ஒரு டைனோஸர் செய்தான், மிகத்துல்லியமாக இல்லை
என்றாலும் அது டைனோஸர் போலவே இருந்தது.

“இந்த ஓவியங்களை எதை பார்த்து வரைஞ்ச டா” என்று அவன் சுவரில் இருக்கும்
ஓவியங்கள் குறித்து கேட்டேன்

“இதுவா வான்காவுடையது, இணையத்தில் பார்த்தேன், பிரிண்ட் எடுத்துட்டு
வந்து வரைஞ்சேன், உனக்கு வான்கா பற்றி தெரியுமா ? “

உதட்டைப் பிதுக்கினேன்

“அவரு ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட், அவரோட ஓவியங்கள் எல்லாம் வயல் வெளி
காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும், வாழும் போது அவரை யாரும் கண்டுக்க கூட
இல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைஞ்சுருக்கார், ஆனால்
அதில் இரண்டே இரண்டுதான் அவர் வாழும் போது விற்ற, அதுவும் சொற்ப
விலைக்கு, இப்ப அவர் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் 2 கோடி வரை
விற்கப்படுது, கடைசி வரை அவர் கல்யாணமே பண்ணிக்கல” என்று ஒரு
குறுஞ்சரித்திரத்தையே சொன்னான்

“எங்க இருந்து டா இவ்வளவு விஷயங்கள சேகரிக்கிற”

“இணையத்தில் இருந்துதான்” என்று பெருமையோடு என் வியப்பை கண்டு
புன்னகைத்தான்

“டா வின் சியோட, மோனோலிஸா ஓவியம் பற்றிய ரகசியம் என்ன னு தெரியுமா டா”

நான் கேட்டதும் அவனின் கருத்த முகம் மேலும் இருண்டது, அவனுக்கு அபிராமி
குறித்த நினைவுகள் வந்திருக்க வேண்டும், அபிராமியும் இவனை உண்மையாகவே
காதலித்தாள், ஆனால் இவனின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அவளுக்கு இவன்
மீதாக பயத்தை உண்டு பண்ணிவிட்டது. அவள் இவனைப் பிரிந்ததின் சரியான விவரம்
எனக்கு தெரியாதென்றாலும், அவள் இவனை விட்டு முற்றுமாக விலகி
சென்றுவிட்டாள் என்பது எனக்கு நிச்சயமாய் தெரியும்.

அவனை அப்படிப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது, அவன் கவனத்தை திசை
திருப்ப..

“ஜிம்மி எங்க டா காணோம்” என்றேன்

“ஜிம்மியா இரு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, டைனோஸரின்
முன்னங்கால்களிலும், பின்னங்கால்களிலும் நுண்மையாய் வெட்டிய கம்பிகளை
நகங்களாக செருகிக் கொண்டிருந்தான்.

பிறகென்னை கொல்லைப்புறம் அழைத்து சென்றான், “ இந்த கொய்யா செடியை
பார்த்தியா, பெரிசா வந்திருக்கு இல்ல”

“ம்” இதை எதற்கு என்னிடம் காட்டுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த
போதே

“இந்த செடி ரொம்ப நாளா வளராமலே இருந்துச்சு, ஏதாவது உரம் வச்சா வளரும்னு,
ஜிம்மிய கொன்னு இதுக்கு உரமா புதைச்சுட்டேன்”

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போன்னேன் நான், அவனைப் பார்க்கவே எனக்கு பயமாக
இருந்தது, அவன் எந்த சலனமும் இல்லாமல் சாதாரணமாய் நின்றிருந்தான். அவன்
முகத்தில் பெருமை பொங்கும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது..

பசங்க சொல்வது போல் இவனுக்கு மனப்பிறழ்வு தான் ஏற்பட்டிருக்கிறது..

எனக்கு அதற்கு மேல் அவன் வீட்டில் இருக்க தைரியமில்லை, அவன் பதிலைக் கூட
கேட்காமல் “கிளம்புறேன் டா” என்று சொல்லி வெளியேறிவிட்டேன்

குழந்தை போல் வளர்த்த பிராணியை கொல்ல மனம் வருமா ? எப்போதாவது இவன்
வீட்டுக்கு வரும் என்னையே வாலாட்டி, துள்ளி இப்பக்கமும், அப்பக்கமும் ஒரு
குழந்தை போல ஓடி சந்தோஷமாய் வரவேற்குமே அந்த அன்பான ஜீவனையா இவன்
கொன்றுவிட்டான். அபிராமி இவனைப் பார்த்து மிரட்சியுற்றத்தின் அர்த்தம்
கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது.

அவனை ஒரு சரியான மனநல மருத்துவருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று
தோன்றியது, ஆனாலும் அவன் மீது உண்டான வெறுப்பும், பயமும் என்னை அவனை
விட்டு விலகவே செய்தது. அதற்கப்புறம் அவனிடம் இருந்து வரும்
மின்னஞ்சல்களைக் கூட படிக்காமல் டெலிட் செய்ய ஆரம்பித்தேன்

அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன், அவள் தற்போது மகிழ்ச்சி பொங்கும்
குரலில் பேசிக் கொண்டிருந்தாள், தன் துயரத்தில் இருந்து வெளி வந்து
சமாதானமாகி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவளுக்கடுத்து ஜன்னலுக்கு அருகே
அமர்ந்திருந்த பெண்ணும் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

சாலையில் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன, இதில்
பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்,
கனரகவாகனங்களின் விளக்கு வெளிச்சங்கள் கண்களைக் கூச வைத்தன, என் அருகே
அமர்ந்திருந்தவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கான கதையை ஏந்தி வந்தவன் மனதில் நடமாடிக் கொண்டிருந்தான்.

களங்கம்

நிலாவிலிருந்து
வெகு தூரத்திலிருப்பதாக
அறிவியல் புத்தகங்கள்
விவரித்த நட்சத்திரங்கள்
நிலவின் அருகில்
சூழ்ந்திருந்தன நேற்று
பின்னிரவில் எழுந்தவள்
நிலவில் களங்கம் என்றாள்
சில தினங்களில்
வளர்ந்தது நிலா
களங்கத்துடன்
தொலைந்திருந்த நட்சத்திரங்களுடன்
அறிவியலில் வாசித்திராத
வேறு நிலவுகளும்

மனமுகிலில் தவழ்ந்தன

உணர்தல் நிமித்தம்

ஒரு தாளில் தீட்டப் பெற்ற
ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல்
வளை கோடுகள் கடலாதல் போல்
இரு ‘V’ பறவைகளாதல் போல்
பசிய நீள் கோடுகள்
செழும் புற்களாதல் போல்
பக்கவாட்டு முகமொன்றில்
நம்பப் பெறும் உயிர்ப்புள்ள
இன்னொரு விழி போல்
மனம் அசைவுறுகையில்
மௌனம் இசையாதல் போல்
பார்வை மொழியாதல் போல்
புன்னகை உறவாதல் போல்
வார்த்தைகள் ஒலியாதல் போல்
சொல்லாமல் செல்லும் –
சொல்லும் பொருள் அடர்
உணர் கவிதை.

இரண்டு கவிதைகள்

தாகத்தோடு நிற்கும் காகம்

தண்ணீர் முழுவதையும் குடித்துவிடவேண்டும்
தாகம் என்பது ஒரு புறமிருக்க
தண்ணீர் முழுவதையும் நானே குடித்துவிடவேண்டும்

தாகமெடுக்கவேண்டுமே
இதயமும் இருட்டிக்கொண்டுவரவேண்டும்

குடம் குடமாக கொண்டுவந்து கொடுக்கிறது காகம்

மேகத்தின் வயிற்றுக்குள் கடல், நீர்த்தேக்கங்கள்
எல்லாம் கறுத்து இரத்தம் கட்டினாற்போல்
நிறத்தில் காகத்தை ஒத்தது
எவ்வளவு பெரிய காகம்

பெரிய காகம் கரையும்
சிறிய காகம் நனையும்
தென்னை மரங்களில், மா மரங்களில் பறந்துபோய் தங்கி தலை உணத்தும்

கோதுமை மாவு ரொட்டி சுடுகிற மணம் வருது
கிடுகு கூரை கொதிச்சு ஆவிபோகுது

02 முட்டையிடும் நாய்கள்

மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய்.
பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன
நாயும் இறைச்சி சாப்பிடும்தானே.
ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை
தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன.
அப்படித்தான்.

நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன.

வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா
நாய் சாப்பிடுகின்றதுபோல் நிழலைச் சாப்பிடுவதா?

சில நேரம் நிழல் மிக சுவையாகயிருக்கும் என எண்ணின

சாவின் அறிகுறி தெரியுமா?

அதன் இசை காதுகளுக்குள் இறங்குமா?

இது பற்றி நாயிடமும், பன்றிகளிடமும் கேட்போம்

கடைசியாக என் கண்களால் ஒரு காட்சி கண்டேன்
நாய்கள் முட்டையிடுகின்றன
நாய்கள் முட்டையிடுகின்றன

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…..2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும்

நகுலன்

க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை – நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம்.

”எதற்காக எழுதுகிறேன்?” என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ”உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று நம்பி விடக்கூடாது என்பது அதன் நோக்கு. இந்த லட்சியம் கலை பற்றி, முக்கியமாக எழுத்துக் கலை பற்றி, எத்தனை தூரம் உண்மை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியவரும். மேலும் அவர் சொல்கிறார்:”என் ஆன்மீகமான ஆனந்தத்தின் விளைவாக எழுதப்பட்ட என் கதைகளையோ, கவிதைகளையோ, நாடகங்களையோ, நாவல்களையோ யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அதனால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ ஒரு லாபமும் இல்லை என்று யார் ஒதுக்கி விட்டாலும் எனக்கு இதைவிடச் சிறந்த அனுபவம் வேறில்லை – வேறு அவசியம் என்றும் நான் நினைக்கவில்லை.”

நான் தெரிந்து பழகின தமிழ் எழுத்தாளர்களில் அவரைப்போல பரவலாகவும் ஆழமாக, ஆம், ஆழமாகவும் ரஸனை அடிப்படையில் உலக இலக்கியத்தில் ஒரு பரிச்சயம் உடையவரை நான் காணவில்லை. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதைப் படித்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துத் தனக்கு என்று ஒரு தனிப் பார்வையை வகுத்துக் கொள்கிறார்.

”இலக்கிய வட்டம்” 17.01.1964 இதழில் ”உலக இலக்கியம் – 2” என்ற தலையங்கக் கட்டுரையில் அவர் வருமாறு எழுதுகிறார் : ”நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது பற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். ஆனால் கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை…படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காக வேணும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கிய ஆசிரியனுக்கும் நல்லது – மற்றவருக்கும் நல்லது.”

நான் பழகிய பல தமிழ் எழுத்தாளர்கள் – உலக இலக்கியத்தை விட்டுத் தள்ளுங்கள் – தங்கள் படைப்புகளைப் பற்றி ஒரு பரவச நிலையில் பேசுபவர்கள். தமிழிலேயே பிற எழுத்தாளர்களை அநேகமாகப் படிப்பதில்லை. தங்களைத் தாண்டி என்ன இருக்கிறது, இருக்கலாம் என்ற ஒரு போதை. இந்த வகையில் இயங்கும் எழுத்தாளர்களில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டுத் தான் தமிழ் இலக்கியத்தின் சிகரத்தை தொட்டு விட்டதாகத் தான் நினைக்கிறான். க.நா.சு இதற்கு விதிவிலக்கு.

அவருடன் நான் பேசிய தருணங்களில் நான் ஏதாவது மாறான அபிப்பிராயத்தைச் சொன்னால் அதை கவனமாகக் கேட்பார், அதில் சாரம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். நான் ஏதாவது அசம்பாவிதமாகச் சொன்னால், ”இருக்கலாம். துரைஸ்வாமி. எனக்குச் சரியாகப்படவில்லை,” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவருடைய அபிப்பிராயத்தில் இலக்கியப் படைப்பதும் ஒரு தொழில். மற்ற தொழில்களில்போல், இதற்கும் சுயமாக உள்ள ஒரு ஆற்றலைத் தவிரப் படிப்பு, கடினமான உழைப்பு இவை அவசியமென்று நினைக்கிறார். மேலும், அவர் ”இலக்கிய வட்டம்” 24/4/1964 இதழில் ”இலக்கிய ரஸனை” என்ற தலையங்கத்தில் வருமாறு எழுதிகிறார். ”இலக்கியத்தில் இன்று உள்ளதை மட்டும் வைத்து ரஸனையோ விமர்சனமோ கிடையாது. பாரம்பரியம், மரபு பூராவையும் வைத்துத்தான் விமர்சனமும், ரஸனையும் தோன்ற முடியும்.”

(இன்னும் வரும்….)